கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தித் திரையில் தாயைப் போற்றும் வசனமென்றால் இந்தித் திரை ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது சலீம் – ஜாவீத் இரட்டையர் எழுதிய தீவார் திரைப்படத்தின் வசனம்தான்.
அமிதாப் பச்சன் (மூத்த மகன்):
இன்று என்னிடம் பங்களா இருக்கிறது, கார் இருக்கிறது, பணம் இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது?
ஷஷி கபூர் (இளைய மகன்):
என்னுடன் அம்மா இருக்கிறார்?
இந்தப் படத்திற்குக் கதை வசனம் எழுதும்போது சலீம் – ஜாவீத் இருவருக்கும் இது வழக்கமாக இந்தித் திரையில் இடம்பெறும் கதைதான் என்னும் நினைப்பு இருந்திருக்கிறது. ஒரு அம்மா, இரண்டு மகன்கள், ஒருவன் பொறுமைசாலி + நல்லவன், இன்னொருவன் கோபக்காரன் + கெட்டவன். இருவருக்கும் இடையில் அம்மாவின் பாசப்பிணைப்பு.
மதர் இண்டியா (1957) முதலாக இப்படியான அம்மா பாசத்தின் மனச்சாய்வுக் கதைகள் இந்தியில் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்கையில், எதைப் புதிதாகச் சொல்லப்போகிறோம் என்னும் கேள்வியில் கவனமாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தீவார் திரைப்படத்தின் அம்மா கதாபாத்திரம்.
அப்படிப் பார்த்துப் பார்த்து அம்மா பாத்திரத்தை உருவாக்கி நிலைக்கவைத்த சலீம், ஜாவீத் இருவரும் நிஜவாழ்க்கையில் மற்ற குழந்தைகளைப்போல் அம்மா பாசத்தை அனுபவித்தவர்களில்லை.
ஜாவீத் சிறுவயதில் அம்மாவை இழந்தவர், சலீமின் தாய் தீராத காசநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனியாக இருந்தவர். அந்நாள்களில் காசநோயாளியைத் தனியாக வைத்திருக்கும் வழக்கத்தால் தனக்குக் கிடைக்கவேண்டிய தாய்ப்பாசம் கிடைக்கவில்லை என சலீம் குறிப்பிடுகிறார்.
சலீம் – ஜாவீத் கதைகளில் வரும் கோபக்கார இளைஞன் ‘விஜய்’ (அமிதாப் பச்சன்) கதாபாத்திரத்தின் வெற்றிக்கு அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல், சமூகம், பொருளாதாரச் சூழல்களும் காரணமாக இருந்தன.
ஐம்பதுகளில் இந்திய விடுதலையை ஆதரிக்கும் இந்திப் படங்களும், அறுபதுகளில் காதல் குடும்பம், பாசம் இவற்றைக் கதைக்களனாகக் கொண்டு வெளிவந்த இந்திப் படங்களுமாகத் திரையை நிறைத்தன. அறுபதுகளின் இறுதியும் எழுபதுகளின் தொடக்கமும் நாட்டில் வேலைவாய்ப்பின்மையையும் விலைவாசி உயர்வையும் கண்டன. சராசரிக் குடிமகனுக்குத் தன் அரசின் மீது கோபம் உண்டானது. அந்தக் கோபத்தின் வடிகாலாக இந்தித் திரையுலகம் சலீம் – ஜாவீதின் ஆங்க்ரி யங் மேன் விஜய் என்னும் அமிதாப் பச்சனைப் பார்த்தது என்னும் பார்வையைத் திரையுலகினர் முன்வைக்கின்றனர்.
கூடுதலாக, இன்னொரு பார்வையையும் முன்வைக்கலாம்.
தீவார் – திரைப்படம் வெளியான காலகட்டத்தில் மும்பை நகரம் தாதாக்களின் ஆதிக்கத்தில் இருந்தது. கள்ளக்கடத்தல் அதன் உச்சத்தில் இருந்தது. துறைமுகத் தொழிலாளிகளின் கூலியில் ஒரு பங்கு ரௌடிகளின் பண வசூலுக்குச் சென்றது. தீவாரின் விஜய் கதாபாத்திரம் இவை அனைத்தையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதாக அமைந்தது.
சலீம் – ஜாவீதின் விஜய், துறைமுக ரௌடிகளை எதிர்த்துப்போராடினான், கள்ளக்கடத்தலில் ஈடுபட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அதன் தலைவனானான், தன் தாய்க்காக எதையும் செய்யத் தயாராக இருந்தான். எந்தக் கட்டிடப் பணியில் தன் அம்மா செங்கல் சுமந்தாரோ அதே கட்டடத்தை அதிக விலை கொடுத்து வாங்கி அதில் அம்மாவைக் குடியேற்றினான். இறைநம்பிக்கை இல்லாதவனாக வாழ்ந்து கடைசியில் அம்மாவுக்காகக் கோயிலுக்குச் சென்று கடவுளுடன் உரையாடினான். இப்படியாக, வணங்காமுடியாகவும், ஏழ்மையை வென்றும், கள்ளக்கடத்தல்காரனாகவும், அம்மாவென்றால் உருகும் பாத்திரமாகவும் அமைக்கப்பட்ட ‘விஜய்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றான்.
1971 இல் இரட்டையர் கதாசிரியர்களாக அறிமுகமாகி 1975இல் தீவாரில் சலீம் – ஜாவீத் தொட்ட உச்சம் பல திரைக்கதாசிரியர்களின் கனவு. அமிதாப் பச்சனின் சம்பளத்தைவிடவும் ஒரு லட்சம் அதிகமாக, ஒரு படத்துக்கு 21 லட்சம் சம்பளம் வாங்கியவர்கள் அந்த இரட்டையர்.
இந்தோரிலிருந்து சலீமும் குவாலியரிலிருந்து ஜாவீதும் மும்பைக்கு வந்து, சலீம் திரைப்படத்தில் நடிக்கவும் ஜாவீத் திரைப்படங்களுக்கு எழுதவும் தொடங்கிய தொடக்க நாள்களில், அங்கும் இங்குமாகச் சில வாய்ப்புகளுக்குப் பின் சிப்பி தயாரிப்பு அலுவலகத்தில் வெலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். சிப்பி தயாரிப்பு அலுவலகத்தில் அவர்கள் இருவருக்கும் மாதச்சம்பளம் ஆளுக்கு 750 ரூபாய். மும்பைக்கு வந்து இந்தித் திரையில் வாய்ப்பு தேடும் எல்லா இளைஞர்களும் சந்திக்கும் பிரச்சனைகளையும் சந்தித்துப் போராடித்தான் புகழ் வெளிச்சத்துக்கு வந்தனர்.
இன்றைக்கு சலீமின் ஜாவீதின் கதைசொல்லும் திறனைப் புகழும் முன்னணி நடிகர்கள், அந்தக் காலத்தில் வசனம் சொல்லித் தர வந்த அந்த இளைஞர்களைக் கடிந்துகொண்டதைப் புன்னகையுடன் நினைவுகூர்கின்றனர்.
சலீம் – ஜாவீத் கூட்டணிக்கும் தமிழ்த் திரையுலகுக்கும் உள்ள தொடர்புகளை இந்த ஆவணப்படம் பதிவு செய்யவில்லை. ஆனாலும், தமிழ்த் திரைக்கு வந்த அவர்களுடைய கதைகளைத் திரும்பிப் பார்க்க நினைக்கிறோம்.
1. நல்ல நேரம் (ஹாத்தி மேரே சாத்தி). இந்தியில் ராஜேஷ் கன்னா – தனுஜா, தமிழில் எம்.ஜி.ஆர். – கே. ஆர். விஜயா.
2. வாணி ராணி (சீதா அவுர் கீதா). இந்தியில் தர்மேந்திரா – ஹேமமாலினி, தமிழில் சிவாஜி கணேசன் – வாணிஸ்ரீ.
3. சிரித்து வாழவேண்டும் (ஜன்ஜீர்). இந்தியில் அமிதாப் பச்சன் – ஜெயா பாதுரி, தமிழில் எம்.ஜி.ஆர். – லதா.
4. நாளை நமதே (யாதோன் கி பாராத்). இந்தியில் தர்மேந்திரா, தமிழில் எம்.ஜி.ஆர்.
5. சவால் (ஹாத் கி சஃபாய்). இந்தியில் வினோத் கன்னா, ரந்திர் கபூர். தமிழில் ஜெய்சங்கர், கமலஹாசன்.
6. நான் வாழ வைப்பேன் (மஜ்பூர்). இந்தியில் அமிதாப் பச்சன், பிரான். தமிழில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த்.
7. தீ (தீவார்). இந்தியில் அமிதாப் பச்சன், தமிழில் ரஜினிகாந்த்.
8. மிஸ்டர் பாரத் (த்ரிஷூல்). இந்தியில் அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார். தமிழில் ரஜினிகாந்த், சத்யராஜ்.
9. சட்டம் (தோஸ்த்தானா). இந்தியில் அமிதாப் பச்சன், சத்ருக்கன் சின்ஹா. தமிழில் கமலஹாசன், சரத்பாபு.
10. பில்லா (டான்). இந்தியில் அமிதாப் பச்சன், தமிழில் ரஜினிகாந்த்.
ஹாத்தி மேரே சாத்தியில் வாய்ப்புக் கொடுத்து தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஜாவீதைத் தூக்கிவிட்டதும், எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி எனத் தமிழின் நான்கு முன்னணிக் கதாநாயகர்கள் சலீம் – ஜாவீத் இரட்டையரின் கதைகளில் நடித்திருப்பதும் நமக்குச் செய்திகள். ஆனால், இவை தொடர்பாக அந்தத் தொடரில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தங்களுடைய வெற்றிகளைப் பகிர்ந்துகொண்ட இரட்டையர்கள், தங்கள் தோல்விகளையும் தயக்கமின்றி பேட்டியில் சொல்லியிருக்கின்றனர். தொட்டதெல்லாம் துலங்கியதால் ஏற்பட்ட தலைக்கனத்தால் ‘இமான் தரம்’ திரைப்படத்தின் கதையமைப்பில் சரியான கவனம் செலுத்தாததால் அது தோல்வியடைந்தது என்பதை இருவரும் குறிப்பிடுகின்றனர். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ‘இண்ட்டர்வெல் ப்ளாக்’ எவ்வளவு முக்கியம் என்பதை ‘இமான் தரம்’ தங்களுக்கு உணர்த்தியதாகச் சொல்கின்றனர். கோபக்கார இளைஞனாக அடித்துவைப்பதைத் தொழிலாகக் கொண்டவன் திடீரென இமான் தரமின் ‘இண்ட்டர்வெல் பிளாக்’கில் இனி நல்லவனாக வாழ்வேன் எனச் சத்தியம் செய்வதை ரசிகர்கள் ஏற்கவில்லை என்பதைப் பதிவு செய்கின்றனர்.
ஜாவீத் அக்தர் – ஹனி இரானி இருவரிடையே நடந்த பிரிவு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பேசப்பட்டிருக்கிறது. ஜாவீத் அக்தர் முதிர்ந்த அணுகுமுறையில்,’அந்தச் சம்பவத்தை மறக்க நினைக்கிறேன்’ என்று பொருள்படும்படியாகவும், ஹனி இரானி பெருந்தன்மையாக ‘அந்தப் பிரிவு நடந்துவிட்டது’ என்னும் அளவிலும் தங்கள் நிலையைத் தெளிவாக்கியுள்ளனர். ஷபானா ஆஸ்மி – ஜாவீத் அக்தர் உறவும் எந்தச் சிக்கலும் இன்றி முன்வைக்கப்படுகின்றது. ஜாவீத் அக்தர் – ஹனி இரானி பிரிவுக்குப் பின் ஜாவீதின் குழந்தைகளுடைய மனநலத்துக்கு ஷபானா ஆஸ்மியின் வருகை மிகவும் உதவியது எனப் பெருந்தன்மையாக ஒரு உறவைப் பாராடுவதும் பேட்டியில் காணக்கிடைக்கின்றது.
சிக்கலான தனிப்பட்டப் பிரச்சனை தொடர்பாகப் பொது ஊடகத்தில் உரையாடுகையில் கடைப்பிடிக்கவேண்டிய முதிர்ச்சிக்கு ஜாவீத் அக்தர், ஹனி இரானி, ஷபானா ஆஸ்மி மூவரின் உரையாடலையும் மேற்கோளாகக் காட்டலாம்.
மும்பையில் இருவர் பங்கிட்டுக்கொள்ளும் அறையைத் தான் மட்டும் வாடகைக்கு எடுத்துத் தங்கவேண்டும் என்பது வெற்றிக்கு முந்தைய சலீம் கானின் கனவு. கதாநாயக நடிகனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, அதன் வழியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற இயலாமல் கிடைக்கின்ற பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி, விளம்பரப் படங்களையும் விட்டுவைக்காமல் நடித்த சலீமுக்குப் பணம் சொன்ன நேரத்தில் தரப்படவில்லை. சில தயாரிப்பாளர்கள், ‘நாளைக்குத் தருகிறேன்’ என்னும் வசனத்தை நிரந்தரமாக்கிப் பணத்துக்கு அலைய விட்டிருக்கிறார்கள்.
“உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலறும் முன்பே கொடுத்துவிடுங்கள்” – நபிமொழி.
தன்னுடைய இளமைக்காலத்தில் பணத்துக்கு அலைந்ததனால், தான் வெற்றியடைந்த பின்னர் தன்னிடம் பணிபுரிபவர்களுக்குப் பணத்தைத் தரவேண்டிய நேரத்தில் சரியாகத் தருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை, நபிகள் நாயகத்தின் அறிவுரையைச் சொல்லி சலீம் கான் பதிவு செய்கிறார்.

இந்த இரட்டையரின் கதையமைப்புகள் ஆணாதிக்கம் கொண்டவை என்பது பரவலான கருத்தாக இருந்தாலும், அவர்களிடமிருந்துதான் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ‘சீதா ஔர் கீதா’ (வாணி ராணி) திரைப்படம் வெளிவந்தது. மேலும், மதர் இண்டியாவுக்கு இணையான ‘அம்மா’ கதாபாத்திரத்தை தீவாரிலும், துடுக்குத்தனமான பெண் பசந்தியை (ஹேமமாலினி) ஹோலேயிலும், அதே ஷோலேயில் அமைதியான கைம்பெண் ராதாவையும் (ஜெயா பாதுரி) படைத்தவர்களும் அவர்கள்தான். மிஸ்டர் இண்டியாவிலும் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் கதையில் கதாநாயகனுக்கு இணையான பாத்திரம்.
சலீம் – ஜாவீதின் ரசிகர்கள் வசனங்களை வசனங்களாகப் பார்க்கவில்லையெனக் குறிப்பிடுகிறார்கள். ஷோலே, தீவார், ஜன்ஜீர், மஜ்பூர், டான், த்ரிஷூல் போன்ற திரைப்பட வசனங்கள் வசனங்களல்ல; உணர்வுகள்.
“நீ எந்த ஸ்கூல்ல படிச்சியோ அந்த ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்” – இந்த வசனத்தைப் பல இடங்களில் நண்பர்களுக்குள் விளையாட்டாகப் பேசுவதைக் கேட்டிருப்போம். சமூக ஊடகங்களில், மீம்ஸ்களில் இந்த வசனம் பகிரப்படுவதையும் பார்த்திருக்கலாம். அதன் தொடக்கம் 1974இல் வெளியான ‘ஹாத் கி சஃபாய்’ (தமிழில்: சவால்) திரைப்படத்திலிருந்து என்பது செய்தி. வசனம்: ஜாவீத் – அக்தர்.
இன்றைக்கும் வில்லனின் கொடூரத்தைப் பேசவேண்டுமென்றால் ஷோலேயின் கப்பர் சிங்கின் (அம்ஜத் கான்) வசனங்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன.
முடியாத காரியத்தைச் சுட்டும் வசனமாக இன்றைக்கும் டான் திரைப்படத்தின், “டானைப் பிடிப்பது சிரமம் அல்ல; முடியாதது.” வசனம் ரசிகர்களிடம் உயிர்ப்புடன் இருக்கிறது.
தீவாரின் புகழ்பெற்ற ‘குடோன் ஃபைட்’ சண்டைக்காட்சிக்கு முன்பாக ‘ஆங்க்ரி யங் மேன் விஜய்’ பேசும், “பீட்டர், நீ என்னைத் தேடுகிறாய்; நான் உனக்காகக் காத்திருக்கிறேன்.” வசனம் அன்றைய மும்பை இளைஞர்கள் தங்கள் உரையாடலில் அடித்துத் துவைத்துக் காயப்போட்டனர்.
ஜன்ஜீரில், “இது போலீஸ் ஸ்டேஷன், உங்க அப்பன் வீடில்லை. உட்காருன்னு சொல்றவரைக்கும் மரியாதையா நிக்கணும்.” என அமிதப் பச்சன் (இன்ஸ்பெக்டர் விஜய்) பேசிக்கொண்டே நாற்காலியை எட்டி உதைத்து பிரானை எதிர்க்கும் காட்சி காவல் துறையின் கண்டிப்பை அந்நாள்களில் திரையில் காட்டிப் பரபரப்பாகப் பேசப்பட்ட காட்சி எனலாம்.
இந்த மூன்று பகுதித் தொடரில் பேட்டியளித்தவர்களில் சிலர் அன்றைய காலகட்டத்தவர், சிலர் இன்றைய காலகட்டத்தவர்.
ஷோலே திரைப்படக்கதை ஆணாதிக்கம் உள்ளது என்பதால் முதலில் நடிக்க மறுத்ததும், பிறகு ஏற்றதும், ஏற்றதன் காரணங்களுள் அதில் நடித்த அமிதாபும் ஒருவர் என்பதை மெல்லிய புன்னகையுடன் சொல்லும் ஜெயா பாதுரி பச்சன், வசனங்கள் எழுதியிருக்கும் தாள்காளைச் சரியாக அடுக்கிவைத்திருக்காததால் அவர்களைக் கடிந்துகொண்ட தர்மேந்திரா, எப்படி அவர்கள் பிசிறில்லாத திரைக்கதைகளை எழுதினார்கள் என வியக்கும் ஷ்யாம் பெனகல், 1978 டானில் கவர்ச்சி நடனம் ஆடிய ஹெலன் (ஹெலன் இப்போது வசிப்பது சலீம் கானுடன்), 2006 டானில் அதே கவர்ச்சி நடனத்தை மறுபதிப்புச் செய்த கரீனா கபூர் கான், அமிதாப் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், சல்மான் கான், ஃபரான் அக்தர், ஸோயா அக்தர், ஆமீர் கான், ஃபரா கான் (ஃபரா கானின் அம்மாவும் சலீம் கானும் அந்தக்காலத்தில் ஒரு திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்), கரன் ஜோஹர், யாஷ், ராஜ்குமார் ஹிரானி என நட்சத்திரக் குவியலின் சின்னச் சின்ன உரையாடல்களால் தொடரில் சுவாரசியம் குறைவில்லாமல் இருக்கிறது.
பத்து ஆண்டுகள் இந்தித் திரை உலகின் கதை – திரைக்கதை – வசனத்தின் முடி சூடா மன்னர்களாக இருந்த இரட்டையரின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க நினைத்து இந்த ஆவணத் தொடரை எடுத்த வாரிசுகள் சல்மான் கான் (சல்மான் கான் ஃபிலிம்ஸ்) + ஃபர்ஹான் அக்தர் (ஏக்செல் மீடியா அன் எண்ட்டர்டெய்ன்மெண்ட்) இருவருக்கும் பாராட்டு.
திரையுலக எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த சலீம் – ஜாவீத் வரலாற்றைப் பார்க்கவேண்டுமென்றால் + இந்தித் திரையுலக வரலாற்றில் ஆர்வம் இருந்தால் பிரைமில் ‘ஆங்க்ரி யங்க் மென்’ பார்க்கலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
