ஒளி! பேரொளி!!

ஒளி பற்றி எழுதலாம் எனத் தொடங்கினேன். ஆனால்  ‘Light’ எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு அல்லவா? 

Light – ஒளி, வெளிச்சம், படரொளி, ஒளிபரப்பு, திறந்த அகல்வெளி, விளக்கு, விளக்கொளி, அழல்நா, விளக்கொளிப் பிழம்பு, ஒளிதரும் பொருள், நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள், வானொளிக்கோலம், ஒளிபட்டு மின்னும் பொருள், மினுக்கம், மின்னொளி, பகலொளி, பகல், ஒளித்தோற்றம், பார்வை.

மற்றொரு வகையான பொருள்: Light – மெல்லிய, இலேசான, நயநுட்பம்வாய்ந்த, மெல்இயக்கம் வாய்ந்த, மென்மையான, எடைகுறைவான, பாரமற்ற, அடர்த்தி எண் குறைவாகக்கொண்ட, பளுக்குறைவாகக் கட்டப்பட்ட, சிறிது பளுவுக்காகவே இயன்ற, விரைந்து செல்வதற்காகக் கட்டப்பெற்ற, விரைவியக்கமுடைய, எளிதில் இயங்குகிற, எளிய,) 

எதைப் பற்றி எழுதுவது? பொதுவாக நாம் ‘Light’ எனும் இந்தச் சொல்லுக்குக் கொள்ளும் பொருளான ஒளியைப் பற்றியே எழுதுகிறேன்.

தமிழிலும் ஒளி என்பது பலவற்றைக் குறிக்கும். தமிழ் லெக்சிகான் பதினான்கு பொருள்களைக் கூறுகிறது; அவற்றுள் சில: காந்தி, சூரியன், நெருப்பு, மின்னல், வெயில், விளக்கு, கட்புலன், ஞானம், புகழ், இன்னபிற.

இவற்றை எல்லாம் விரிவாக ஆராய்ச்சி செய்ய இறங்கினால் ஒரு ஆயுள் போதாது. சிலவற்றைப் பார்த்து வியக்கலாம், மகிழலாம், பரவசப்படலாம். வாருங்கள், என்னுடனான இச்சிறு பயணத்திற்கு ……

____________________

ரிக் வேதம், மனிதன் முதலாக, படைக்கப்பட்ட அத்தனை ஜீவராசிகளின் உண்மையை, அவை அனைத்தின் இருப்பையும் விளக்கும் ஒரு உயர்வான ஒளியுடனும் ஆயிரமாயிரம் குரல்கள் இசைக்கும் ஒரு ஸ்தோத்திரத்துடனும் சேர்ந்து மிகப் பழமையானவொரு புலர்காலையில் உதித்தெழுகிறது; 

ஆஹா! வேதத்தின் தோற்றம் ஒளியிலா? மெய்சிலிர்க்கிறது. உண்மையும் ஒளியும் ஞானமும் வேதத்தை ஓதி உணர்பவர்களுக்கு ஒன்றுதான், பொய்ம்மையையும், இருளையும், அஞ்ஞானமும் போல. எப்போதுமே பகலும் இரவும் போல, இவை இரண்டும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன; போர் புரிகின்றன. அழிவையும் அழிவின்மையையும் உணர்த்துகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் அழிவற்றதொரு நிரந்தரமான போரில் ஈடுபட்டுள்ளன.

ரிக்வேதம், சூரியனையே ஒளியெனவும், ஞானியெனவும் போற்றுகிறது.

ஒளியை உண்டாக்க நெருப்பு வேண்டும். யார் முதன்முதலாக நெருப்பை உண்டு பண்ணியது?

இந்திரன் – அவனே மின்சக்தி. மின்னலின் சக்தி; உற்பத்தியாளன்.

‘இரு கற்களிடையே நெருப்பை உண்டுபண்ணினான்; வீரர்களின் யுத்தத்தில் நாசத்தை உண்டுபண்ணுபவன், அவன், இந்திரன், ஓ மனிதர்களே!’ – ரிக்வேதம். 

ஆனால் இந்திரன் உண்டாக்கியது சாதாரண நெருப்பா அல்லது வேறெதாவதா?

அது அக்னி. அதாவது ஒளி அணு (ஃபோடான் – photon) எனப்படுவது. அவ்விரு கற்களும் சாதாரணமான சிறு கற்களல்ல. அவை ராட்சஸ வடிவிலுள்ள இரு காந்த சக்தி வாய்ந்த புலங்கள். ஒன்றுக்கொன்று கிண்ணவடிவில் எதிரெதிராகக் கவிழ்த்து வைக்கப்பட்ட புலங்கள்.  ஆகாயத்திலுள்ள நட்சத்திரக் கூட்டங்களின் பால்வெளியின் மத்தியில் அவை கருந்துளைகளாக உள்ளவை.

அஸ்வினி சகோதரர்கள் எனப்படும் அவ்விரு காந்தப் புலங்களும் தம்முள் உள்ள பொருளை அழுத்தும்போது அந்த அதீதமான அழுத்தம் அப்பொருளின் துகள்களை உஷ்ணப்படுத்தி அவற்றை பிளாஸ்மா (சோமன்) எனப்படும் பொருளாக்குகிறது. இந்தச் செயல், கதிர்வீச்சை வெளியிடுகிறது; அதுவே ஒளி, ஒளி அணு அல்லது அக்னி ஆகும்!

ரிக்வேதம் இன்னும் விளக்கங்களை பிரமிக்கத்தக்க வகையில் கூறிக்கொண்டே செல்கிறது. நமக்கு இப்போதைக்கு இது போதும்.

இப்படிப்பட்ட ஒளியைப் பற்றி, அது உண்டாக்கப்பட்ட விதம் பற்றி ரிக்வேதம்,  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அருமையாக விளக்கிவிட்டது. பின்பு, நமது விஞ்ஞானிகள் அதைப்பற்றிக் கண்டுபிடித்துக் கூறுவது என்ன?

பிரபஞ்சம் 0.00001 செகண்டுகள் வயதாக இருந்தபோது, அடிப்படைத் துகள்களாக இருக்கும் க்வார்க்ஸ் (quarks) என்பவை தம்முள் எதிரெதிர் காந்த சக்தியுடன் இணைந்து புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் உருவாக்கின. பிரபஞ்சம் 0.01 செகண்டுகள் வயதாக இருந்தபோது, இவ்விரண்டும் இணைந்து அணுக்களாக உருக்கொண்டன. பின், பிரபஞ்சம் 380,000 ஆண்டுகள் வயதாக இருந்தபோது, ஒளி அணுக்கள் தம்மை விடுவித்துக்கொண்டு வெளியேற, வெற்றிடத்தின் கரிய பிளவுகளூடே ஒளி பாய்ந்து சென்றது எனப்படுகிறது!

——————————–

கிரேக்க புராணக் கதைகளின்படி, புரோமீதியஸ் (Prometheus) எனும் கடவுளே ஒளியை உலகுக்குக் கொண்டுவந்தவராகக் கருதப்படுகிறார். அவர் ஒளியைக் கடவுள்களிடமிருந்து திருடிவந்து மனிதகுலத்துக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது. இது அறிவையும் அதன்பயனாக விளையும் ஞானத்தையும் அவர் மனிதகுலத்திற்குப் பரிசாக அளித்ததாகக் கொள்ளப்படுகிறது.

இதுபோல ஒவ்வொரு நாட்டிற்கும் ஒளியின் பிறப்பு தொடர்பான கதைகள் உண்டு.

——————————–

இந்த ஒளி என்பது, அறிவு, வெளிச்சம், உண்மை இவற்றின் கலவையான தத்துவங்களைப் பல இடங்களில், பல செய்திகளில், பலப்பல பரிமாணங்களில், தத்துவ வேதாந்த விசாரங்களில் எல்லாம் நமக்குக் காட்டுவதை உணரலாம். நம்மோடு, நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்த  சொற்களும் அவற்றின் பொருளும் இவையே என்பது மிகையேயல்ல.

தாகூர் படைத்த கீதாஞ்சலி பரம்பொருளோடு ஒன்றுவதனைக் காதலனுடன் சேரும் தாபம் துளும்பும் பரிமாணத்தில் வைத்துக் காட்டுகிறது. அதில் ஒளியும் ஒரு பெரிய பரிமாணத்தில் விளங்குகிறது.

ஒளி, ஓ ஒளி எங்கே?அதனை எரியும் நெருப்பெனும் தாபத்தினால் தூண்டிவிடு!
விளக்கு இருக்கிறது, ஆனால் ஒரு ‘மினுக்’கான ஒளி இல்லை – எனது இதயமே, இதுதான் உனது விதியா? ஆ, இறப்பொன்றே உனக்கு இதைவிடப் பெரிதானது!
துயரம் உனது கதவைத் தட்டுகிறது; உன் தலைவன் விழித்திருக்கிறான், உன்னை இரவின் இருளினூடே ஒரு அன்பின் சங்கமத்திற்காக அழைக்கிறான் என்பதே அவளுடைய செய்தி.
ஆகாயம் அடர்ந்த மேகங்களால் சூழப்பட்டுள்ளது; மழை நிற்கவேயில்லை. என்னுள் குடையும் இது என்னவென எனக்குப் புரியவில்லை – அதன் பொருளை நான் அறியேன்.
ஒரு மின்னல் கீற்று என் பார்வையில் ஆழமான ஒரு துயரத்தைத் தருகிறது, என் இதயம் என்னை அழைக்கும் இரவின் இசை எழுமிடத்தை நோக்கித் தேடித் தவிக்கிறது.
ஒளி, ஓ ஒளி எங்கே! அதனை எரியும் நெருப்பெனும் தாபத்தினால் தூண்டிவிடு! இடி முழங்குகிறது; காற்று வெற்றிடத்தினூடே அலறிக்கொண்டு, விரைகிறது. கருங்கல்லைப்போல இரவு கருமையாக உள்ளது. இருட்டில் நேரம் கழிந்து செல்லட்டும். அன்பின் விளக்கினை உனது உயிரால் உயிர்க்கச் செய்வாய்.’

அருமையான சங்கேதங்கள் நிறைந்த கவிதை இது. ஒளி அல்லது உயிர்மை அற்ற இடத்தில் துயரமும் தாபமுமே மனிதனை வாட்டும் எனப் புரிகிறது. அதனை மாற்ற நம்மால்தான் இயலும். நமது இருப்பினால், உயிரினால், விளக்கினை ஏற்றவேண்டும். இங்கு திருமந்திரத்தின் ஒரு மந்திரம் நினைவைத் தொடுகிறது.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கினை விளக்கிடும் விளக்கு டையார்கள்
விளக்கிடின் விளங்கும் விளக்கவர் தாமே.

இதற்கு விளக்கம் தேவையில்லை அல்லவா?!

பூதத்தாழ்வாரும் வெகு அழகான ஒரு பாடலைப் பாடி வைத்துள்ளார்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

அன்பை அகல்விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, மனதின் எண்ணங்களைத் திரியாக்கி, அதனால் உருவாகும் ஞானத்தை ஒளியாகக் கொண்டு நாராயணனுக்கு விளக்கு ஏற்றினேன் என்கிறார்.

இதனால் நாம் அறிவது என்ன? இவ்வாறு விளக்கு என்பதன் அறிவு, உணர்வு தொடர்பான விளக்கங்களை நமக்கு விளக்கும் பெரியோர்களே அந்த விளக்கு தரும் ஒளியாவர் எனும் விளக்கம்தான்! அறிவு என்பதே விளக்குதான்! ஒளி வடிவம்தான்!!

ஸ்ரீ அரவிந்தர் sonnet (14 வரிகள் கொண்ட ஆங்கிலக் கவிதை வடிவம்) எனும் அமைப்பைக் கொண்ட தனது கவிதை ஒன்றில் ஒளியின் விந்தைகளைக் கூறுகிறார்.

ஒளி, எல்லையற்ற ஒளி, இருளுக்கு இங்கு இனி இடமில்லை,
வாழ்க்கையின் அறியாமையெனும் ஆழ்ந்த பிளவுகள் தமது ரகசியங்களைக்
கைவிடுகின்றன:
முன்னர் தோண்டப்படாத பொறுப்பற்ற பெரும் ஆழங்கள்
அகன்ற எதிர்பார்ப்பில் இருந்துகொண்டு பளபளக்கின்றன.
ஒளி, காலவரையறையற்ற ஒளி, மாற்றமுடியாததும்,விரிவானதும்!
அந்தப் புனிதமான மூடப்பட்ட இரகசியமான கதவுகள் திறக்கின்றன.
ஒளி, எல்லையற்றதின் வைர இதயத்தின் எரியும் ஒளிவெள்ளம்
இறப்பற்ற ரோஜா மலரும் என் இதயத்தில் நடுக்குறுகிறது.
ஒளி அதன் பேருவகையில் நரம்புகளூடே குதித்தோடுகிறது!
ஒளி, தீவிரமான ஒளி! ஒவ்வொரு வசீகரிக்கப்பட்ட உணர்ச்சி ததும்பும்
உயிரணுவும்
ஒரு ஊமை ஜ்வாலையின் பரவசத்தில் பாதுகாக்கும்
வாழ்வின் ஒரு அழிவற்ற உணர்வு
நான் ஒரு கடலெனும் பிரம்மாண்டமான ஒளியில் நகர்கிறேன்
எனது ஆழங்களை அவனுடைய அழிவற்ற உயரத்தில் இணைத்தபடி.

பிரமிக்க வைக்கும் கவிதை இது. ஒவ்வொரு சொல்லாகப் பொருள் தேடினால் அவை காட்டுவதெல்லாம் அழிவற்ற, எல்லையற்ற பேரொளியை! இறைமையை! அதனை ஒரு ஞானி உணரும் வகையை! பின் உலகிற்கு அறிவுறுத்தும் விதத்தை! பலமுறைகள் உள்வாங்கிப் படித்தால், இதன் பொருளை ஒருவாறு அறியலாம்.

ஒளிவீச்சு கொண்ட நுண்ணுயிர்க் கொல்லிகள்!

ஒளியின் தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல எனப்புரிந்து கொள்ள அறிவியல் சிந்தனைகளுக்கு இத்தனை நாட்களாயிற்று!  ஆன்டிபயாடிக்குகளை எதிர்த்து உயிர்வாழும் பலவிதமான நுண்ணுயிரிகளுக்கு எதிராக இந்த ஒளிவீச்சு கொண்ட நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்தும் முயற்சி நீண்ட நாட்கள் (பல ஆண்டுகள்) முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வகையில் இன்னும் சூடுபிடிக்கவில்லை. என்னவாகிறதெனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


இசை எனும் ஒளிவெள்ளம்:

இதனை நான் உணர்ந்து கொண்ட விதத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ஒப்பற்ற உள்ளத்தை வருடும் இசையைக் கேட்கும்போது  எல்லையற்ற ஒளிவெள்ளத்தில் மிதக்கும் அனுபவம் ஏற்பட்டதுண்டு. பிரபஞ்சத்தின் ஒளிவீச்சில் நாமும் ஒரு துகள் எனும் உண்மை உதித்து நம்மைச் சிந்திக்க வைக்கும்.

புதியதாக ஒன்றைப் பற்றிக் கற்றுக் கொள்ளும்போது உற்சாகம் ஊற்றெடுக்கும் அல்லவா? மாணவப் பருவத்தில்  அருமையான ஒரு கருத்தை, அது டார்வினின் கோட்பாடாகவோ, ஒரு செய்யுளை பதம் பிரித்துப் பொருள் காண முடிந்ததாகவோ இருந்தாலும், அந்தக் கருத்து அறிவிற்குப் பிடிபட்டதும் ஒரு வெப்பமான அலை உடலில் எழுந்து தலையில் பாயும், தலையில் ஒரு ஒளிவட்டம் சில நொடிகளுக்கு இருக்கும்; பின் நாளெல்லாம் உள்ளம் களிப்பில் துள்ளும். இதுதான் உடலில் ஒளி செய்யும் விந்தை; மாயம். எல்லா அறிதலும், எல்லாப் புரிதலும் இதற்குட்பட்டதுதான். ஒளிமயமானதுதான்.

அதனால்தான் ப்ருஹதாரண்யக உபநிஷதம்,

பொய்ம்மையிலிருந்து உண்மைக்குச் செல்லவும்,
இருளிலிருந்து ஒளிக்குச் செல்லவும்,
இறப்பிலிருந்து அமரத்துவத்தை அடையவும் வேண்டின!

ॐ असतो मा सद्गमय ।      ஓம் அஸதோ மா ஸத்கமய I
तमसो मा ज्योतिर्गमय ।       தமஸோ மா ஜ்யோதிர்கமய I
मृत्योर्मा अमृतं गमय ।      ம்ருத்யுர்மா அம்ருதம் கமய I
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥     ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: II

மற்றபடி ஒளி தொடர்பான உண்மைகள் பிரமிப்பாக இருந்தாலும், அவை காட்டும் புதிய பரிமாணங்கள் சிந்திக்கவும் வைக்கின்றன.

————————–

மூதறிஞர் ராஜாஜியின் கைவிளக்கு என்னும் புத்தகம் பகவத்கீதையின் விளக்கமாகும். அதற்கு அவர் எழுதிய முன்னுரையும் எவ்வாறு விளக்கு மனிதனுக்கு வழிகாட்டுகிறதோ அவ்வாறே உயரிய நூல்களும் அவனை வழிநடத்துகின்றன என்கிறது.

‘கிருஷ்ண பகவான் நேரில் உபதேசித்ததாக வியாசர் தந்திருக்கும் சாஸ்திரம் பகவத் கீதை. இது சாஸ்திரம் மட்டுமல்ல; உலக வாழ்க்கைக்கு உதவும் புத்திமதிகளடங்கிய உயர்ந்த நூலுமாகும். சில குறிப்புகளும் எழுதித் தந்திருக்கிறேன். இது என் பாக்கியம்.

இதற்குக் ‘கை விளக்கு’ என்கிற பெயரைத் தந்திருக்கிறேன். கஷ்டமும், இருட்டும் மலிந்து நிற்கும், உலக வாழ்க்கையில், இது ஒரு கை விளக்காக, காற்றில் அணையாத விளக்காக, உதவும் என்கிற நம்பிக்கையுடன்.’

வாழ்க்கைக்கு, அதில் துன்பங்கள் வரும்போது எதிர்கொள்ளும் மன உறுதியைத் தரும் சொற்களே, அறிவுரைகளே ஒளிவிளக்காகும். துன்பத்தில் உதவும் மனிதர்களே உற்ற துணையான ஒளிவிளக்காவர். நாம் அனைவருமே சில பொழுதுகளில் இதனை உணர்ந்திருப்போம். ஆனால் மனதார ஒப்புக் கொண்டிருக்க மாட்டோம்.


அறிவின் ஒளி – அறிவொளி
ஞானத்தின் ஒளி – ஞான ஒளி
கண்ணின் பார்வை ஒளி – கண்ணொளி
சூரியனின் ஒளி – சூரிய ஒளி
சந்திரன் ஒளி – நிலவொளி
நட்சத்திரங்களின் ஒளி – நட்சத்திர ஒளி
இறைவனின் அருள் ஒளி – அருளொளி
விளக்கின் ஒளி – சுடரொளி
குளிர்ச்சியான ஒளி – தண்ணொளி
பட்டின் ஒளி – பட்டொளி

இப்படி ஒளியைப் பலவற்றுடனும், ஒளிரும் பொருட்கள், ஒளிராத பொருட்கள் அனைத்துடனும் பொருத்திக் கூறுகிறோம். ஒளி என்றாலே உற்சாகம், நம்பிக்கை, அருண்மை, தெய்வீகம், இறைமை, கல்வி ஆகியவற்றை நினைவுகூர முடிகிறது. உயிரினங்களுக்கு நம்பிக்கை பயப்பதே ஒளி எனலாம்.

வாசகர்களும் தங்கள் கருத்துகளைப் பகிரலாமே!


Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.