மூலம்: “Father Returning Home” by Dilip Chitre
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

என் அப்பா பின்மாலைப் புகைவண்டியில் பயணிப்பார்
மஞ்சள் ஒளியில் அமைதியான பயணிகளுக்கு நடுவே நின்றபடி
கவனிக்காத அவரது கண்களை புறநகர்கள் நழுவிக் கடந்து செல்லும்
அவரது சட்டையும் கால்சட்டையும் நனைந்திருக்க
அவரது கருப்பு மழை மேல்அங்கி சேறினால் கறை படிந்திருக்க
புத்தகங்கள் திணிக்கப்பட்ட அவரது பை
சரிந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
வயதினால் மங்கிய அவரது கண்கள்
வீடு இருக்கும் திசையை நோக்குகின்றன
ஈரப்பதமான மழைக்கால இரவின் ஊடாக.
நீண்ட வாக்கியத்திலிருந்து கைவிடப்படும் ஒரு வார்த்தையை போன்று
புகைவண்டியிலிருந்து இறங்கும் அவரை
இப்போது என்னால் பார்க்க முடிகிறது.
அவர் துரிதமாக கடக்கிறார் நீண்ட சாம்பல் நிற நடைமேடையை,
அவரது செருப்புகள் சேறினால் பிசுபிசுப்பாக இருக்க
இருப்புப் பாதையைக் கடந்து, சந்தில் நுழைந்து, விரைகிறார்.
மீண்டும் வீடு, நான் பார்க்கிறேன் அவர் நலிந்த தேநீரைப் பருகுவதை,
பழைய சப்பாத்தியை உண்பதை, புத்தகம் வாசிப்பதை.
கழிவறைக்குள் செல்கிறார்
மனிதரால் உருவாக்கப்பட்ட உலகிலிருந்து
மனிதர் விலகுவதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க.
வெளியில் வந்தவர் நடுங்குகிறார் பீங்கான் தொட்டி அருகில்,
குளிர்ந்த நீர் ஓடுகிறது அவரது பழுப்புநிறக் கைகளின் மேல்,
சில நீர்த்துளிகள் அவரது மணிக்கட்டுகளின்
நரைத்த ரோமங்களில் ஒட்டிக் கொள்கின்றன.
அவரது பாராமுகப் பிள்ளைகள் எப்போதுமே
அவருடன் பகிர்ந்திட மறுத்து விடுகிறார்கள்
வேடிக்கைப் பேச்சுகளையோ இரகசியங்களையோ.
இப்போது அவர் தூங்கப் போகிறார்
கரகரக்கும் வானொலியைக் கேட்டபடி,
தன் முன்னோர்களையும், பேரக் குழந்தைகளையும் பற்றிக் கனவு கண்டபடி,
குறுகலான கணவாய்களின் வழியாக
துணைக் கண்டங்களுள் நுழையும் நாடோடிகளை நினைத்தபடி.
திலீப் புருஷோத்தம் சித்ரே (1938 – 2009) இந்தியா விடுதலை பெற்ற பின் தோன்றிய மிக முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களுள் ஒருவராவார். கவனிப்புக்குரிய இருமொழி எழுத்தாளர். மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதி வந்தவர். ஆசிரியர், சிறந்த ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளர்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

நீண்ட வாக்கியத்திலிருந்து கைவிடப்படும் ஒரு வார்த்தையை போன்று
புகைவண்டியிலிருந்து இறங்கும் அவரை
இப்போது என்னால் பார்க்க முடிகிறது.
//
அற்புதமான வரிகள்.
தனித்திருந்து துயரம் வளர்க்கும் அந்த அப்பா திலீப் சித்ரேயாகவும் இருக்கக் கூடும்.
போபால் யூனியன் கார்பைட் விஷவாயு விபத்தில் அவருடைய மகன் பாதிக்கப்பட்டு மெல்ல இறந்த தீராத துக்கம் அது.
திலீப்புக்கும் அருண் கொலட்கருக்கும் நல்ல நட்பு இருந்ததாகத் தெரிகிறது. அருண் பற்றி biopic ஆவணப் படம் தயாரிக்க யார்யாரோ முயன்றாலும் திலீப் நட்பின் அடிப்படையில் அதை உருவாக்கினார். தன் ஜெஜூரி கவிதைகளை அருண் திரையில் வாசித்த அபூர்வமான நிகழ்வு அந்தப் படப்பிடிப்பு. உழைப்பு, பண விரயம் என்று திலீப் அந்தப் படத்துக்காகப் பாடுபட்டார்.வீட்டுக்குப் போய் ‘படத்தை வெளியிட வேண்டாம்’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் அருண் கொலட்கர்.
ராமலட்சுமி, நல்ல மொழிபெயர்ப்பு. வாழ்த்துகள்.
தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.