அடையாளத் தேர்வு

“பொதுவாக நாங்கள் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களைப் பிரதி எடுக்க (cloning) உதவுவதில்லை. ஆனாலும், உங்களுக்கு உதவ வழிகளே இல்லை என்று அர்த்தமல்ல” என்றார் மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர் மணிவேந்தன். 

“அப்படி என்ன வழி?” என்றான் வெழிலன்.

அவன் முன்னால் மேஜையில் அவனது பள்ளிக்கூட சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், நோய்த் தடுப்புச் சான்றிதழ்கள் (Immunization certificates) வைக்கப்பட்டிருந்தன. பிறப்புச் சான்றிதழில் அவனது வயது பதினான்கு என்றும், பெற்றோர்களின் குறிப்புகள் பகுதியில் தந்தை பெயர் பாலச்சந்தர் என்றும் தாய் பெயர் பார்வதி என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது. பெற்றோர்களின் சான்றிதழ்கள் பகுதியில் அவர்களின் பிறப்புச்சான்றிதழ்கள் மட்டுமே இருந்தன.

“உங்கள் பெற்றோர்களிடமிருந்து ‘ஆட்சேபனை இல்லை’ என்று சொல்லுமோர் கடிதம் வேண்டும். அதில் அவர்களின் கையொப்பம் இருக்க வேண்டும். அது, கையொப்ப குறுக்குச் சோதனையில் தேர வேண்டும். இவ்வளவே” என்றார் மணிவேந்தன்.

“நான் கடிதத்துடன் நாளை வருகிறேன்” என்றுவிட்டு எழுந்தான் வெழிலன். அவனது கைகள் அணிச்சையாக மேஜை மேலிருந்த அனைத்து சான்றிதழ்களையும் லாவகமாகச் சேர்த்தன.

“உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்” என்ற மணிவேந்தனின் இன்முகம் ஏனோ வெழிலன் மனதில் அழுத்தமாய் விழுந்தது.

* ~ *

“அடுத்த வாரம் ஒலிம்பியாட் தேர்வு வருகிறது. அதற்குத் தயார் செய்யலாம் இல்லையா?” என்று பாலச்சந்தர் அமைதியாகத்தான் கேட்டார். வெழிலனுக்குத்தான் உள்ளுக்குள் சுருக்கென்றிருந்தது.

“அவன் படிப்பான். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.” என்று சமாளித்தபடியே அவனை அரவணைத்துச் சமையலறைக்கு நடத்திப்போனாள் தாய் பார்வதி.

“அம்மா, என்னால் அவர் போல் மாநிலத்திலேயே முதலாவதாகவெல்லாம் வரமுடியாது. அப்போதிருந்த போட்டி என்ன? இப்போதிருக்கும் போட்டி என்ன என்று இருக்கிறதல்லவா? அதுவுமில்லாமல், எனக்குத்தான் படிப்பு வரவில்லையே. பிறகு ஏன் அவர் என்னையே…” என்று இழுத்தேன் நான்.

“அவர் காலத்தில் அவர் தான் படிப்பில் சூரப்புலியாக இருந்தார். நீ அவரது மரபணுவைக் கொண்டவன் தானே. அதனால் தன் உரமும், உத்வேகமும் உன்னிடம் இருக்கும் என்று நினைக்கிறார். தவிரவும், உனக்கு என்ன வரும், வராது என்பதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? யாருமே பிறக்கையிலேயே அதிபுத்திசாலிகளாகப் பிறப்பதில்லை.. தெரியுமா?” என்று சொல்லி நிறுத்தினாள்.  அடுப்பில் முட்டை வெந்துகொண்டிருக்க, அருகாமையில் ரொட்டி (Bread) தன் பங்கிற்கு தீய்ந்துகொண்டிருந்தது. 

ஜன்னல் வழியே பறக்கும் மகிழுந்துகள் (car) தங்களுக்கென வகுக்கப்பட்ட பாதையில் சீராகப் பறந்துகொண்டிருந்தன. தொலைவில் ஆங்காங்கே சிகப்பு நிறத்தில் விளக்குகளை ஒளிரவிட்டபடி ரோந்துப் பணியில் சில பறக்கும் மகிழுந்துகள் அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தன. 

“க்கும்.. இது குறித்து என் ஆசிரியரிடம் கூடக் கேட்டாகிவிட்டது. அவர், அதை மரபணுக்குளம் (Gene pool) என்கிறார். வைத்தியன் பிள்ளை வைத்தியனாகவும், சீக்காகவும் இருக்க முடியுமென்பதைப்போலவே சீக்காளியின் பிள்ளை, சீக்காகவும், வைத்தியனாகவும் இருக்க முடியுமாம். நான் இரண்டாவது என்றால் அது மரபணுச்சாத்தியத்தின் தவறல்லவா?” என்றான் வெழிலன்.

நுட்பமாகக் கேள்வி கேட்கும் பிள்ளையிடம் என்ன சொல்வதென்று எதுவும் தோன்றாமல் ஸ்தம்பித்து அமைதியாக நின்றாள் பார்வதி. தாயிடமிருந்து வெளிப்பட்ட அமைதியின் தற்காலிகமாக சமாதானம் அடைந்தவனாய் மெல்ல தன்னறைக்கு வந்தான் வெழிலன்.

அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பது தீர்மானமாகத் தெரிந்தது.

* ~ *

“இந்தாருங்கள் நீங்கள் கேட்ட கடிதம்” என்று சொல்லி கையில் மடித்து வைத்திருந்த காகிதத்தை நீட்டினான் வெழிலன். வெழிலனைப் பிரதி (clone) எடுக்க ஆட்சேபணை இல்லை என்று சொல்லும் கடிதம் அது. அதில், பாலச்சந்தரின் கையெழுத்தையும், பார்வதியின் கையெழுத்தையும் மிக மிக லாவகமாகவும் துல்லியமாகவும் இட்டிருந்தான் வெழிலன்.

“அவ்வளவுதான் நாங்கள் வேண்டுவது. இந்தக் கடிதம் துப்புரவாகச் சரிபார்க்கப்படும். அதற்கு தனி நிறுவனங்கள் உண்டு. அவர்கள் செய்து தருவார்கள். ஏதேனும் பிரச்சனை என்றால் உங்கள் அப்பாவிற்குத்தான் முதலில் தகவல் போகும். எங்கள் பணியாள் உங்கள் மரபணுவை மாதிரி எடுத்துக்கொள்வாள்.  நாளையே உங்கள் வீட்டிற்கு உங்கள் பிரதி வந்த சேர்வான். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் நினைவுகளை சேகரித்துத் தரவேண்டும்.அவ்வளவுதான்.” என்ற மணிச்சந்தர் கடிதத்தை வாங்கி, ஒரு இயந்திரத்தினுள் செலுத்த, அது சீட்டை உள்வாங்கிவிட்டு பச்சை விளக்கை ஒளிரச்செய்தது. 

“பச்சை விளக்கு எரிந்துவிட்டது. இதன் பொருள் என்னவென்றால், சரிபார்த்தல் உங்களுக்குச் சாதகமாக முடிந்திருந்திருக்கிறது என்பதுதான்” என்றார் மணிச்சந்தர்.

“அது இருக்கட்டும். என் இடத்தில் என் பிரதி இருக்க வேண்டும். இரண்டே விதிகள் தாம். என் பிரதி என்னை விட அதி சிறந்த படிப்பாளியாக இருக்க வேண்டும். என் பெற்றோரின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அவன் என் இடத்தில் இருப்பதால் நான் என் வீட்டில் இருக்க முடியாது. எனக்கு ஒரு தங்குமிடம் வேண்டும். என் பிரதியைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவேண்டும்” என்றான் வெழிலன் ஏதோ மனனம் செய்த வாய்ப்பாட்டை ஒப்பிப்பது போல.

“அதற்கென்ன? செய்து விடலாம். படிப்புக்கான மரபணுக்களை உறக்கத்திலிருந்து எழுப்பிவிடுவோம். மரபணுக்களே இல்லையென்றாலும் புதியதாகப் புகுத்திவிடலாம்.”

“ஆனால், படிப்புக்கென்று தனியாக மரபணுக்கள் இல்லைதானே?” என்று இடைமறித்தான் வெழிலன்.

“நீங்கள் என்னை முழுமையாகப் பேசி முடிக்க அனுமதிக்க வேண்டும். நீங்கள் சொல்வது சரிதான்.  ஒரு மனிதனுக்கு ஐந்து நிமிடம் வரை நினைவிருக்கும் ஒன்று, பதினைந்து நிமிடம் வரை நினைவில் இருந்தாலே அவனால் சராசரியையும் விட அதிகமான அறிவுப்பூர்வமாக இயங்க முடியும். இது போன்ற சிற்சில மாற்றங்களை மரபணுக்கள் மூலமாகச் செய்வோம்”

“அப்படிப் புகுத்திய மரபணுக்களை வைத்து உங்கள் பிரதியை உருவாக்கிவிடுவோம். அந்தப் பிரதிக்கும் உங்களுக்கும் மரபணு ரீதியில் ஆயிரத்தில் அரை சதவிகிதம் மாற்றங்கள் இருக்கும். நீங்கள் எந்தக் கவலையும் இல்லாமல் எங்கள் தங்குமிடங்களிலேயே(Dorm) தங்கிக்கொள்ளலாம். இதற்கென தங்கும் வசதிகள் எங்களிடம் உள்ளன. நீங்கள் அங்கு தங்கிக்கொள்ளலாம். உங்கள் பிரதியின் உடலில் கருவிகள் பொறுத்தியிருக்கிறோம். அவன் பார்ப்பதை எல்லாம் நீங்களும் பார்ப்பீர்கள். கேட்பதை எல்லாம் நீங்களும் கேட்பீர்கள்” என்றார் மணிச்சந்தர்.

பிற்பாடு, வெழிலன் ஒரு அறைக்குள் நுழைந்து அங்கிருந்த சோதனை இருக்கையில் படுக்க, அவனை ஆழ்ந்த உறக்கம் கொள்ள வைத்துவிட்டு ஒரு இயந்திரம் அவனது நினைவுகளை முழுக்க எடுத்துக்கொண்டது.ஒரு பணிப்பெண் வந்து அவனது மரபணுக்களை ஒரு குப்பியில் சேகரித்துச் சென்றாள்.

* ~ *

மறு நாளிலிருந்து தன் வீட்டில் தனது பிரதியாக வெழிலன்-2 என்னவெல்லாம் செய்தான், செய்துகொண்டிருக்கிறான் என்பதையெல்லாம் ஒரு அறைக்குள் அமர்ந்தபடி நூற்றுக்கணக்கான திரைகளில் கவனித்துக்கொண்டிருந்தான் வெழிலன். 

வெழிலன்-2 எந்தப் பரீட்சையையும் மிச்சம் வைக்கவில்லை; எல்லாவற்றிலும்  நூற்றுக்கு நூறு வாங்கினான். பல சான்றிதழ்கள், கோப்பைகளைக் கபளீகரம் செய்தான். பாலச்சந்தர், பார்வதி இருவரும் அடிக்கடி அழைக்கும் எண்களை மனப்பாடமாகச் சொன்னான்; அப்பா பாலச்சந்தருக்கு வேலை விடயமாக வரும் அட்சரேகை-தீர்க்கரேகை (latitude-longitude) தகவல்களைக் கேட்ட மாத்திரத்தில் கடலில் அது எந்தப் புள்ளி என்று துல்லியமாக கணித்துக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த வேலைக்கு எத்தனை காலமாகும், என்னென்ன உபகரணங்கள் தேவைப்படும் என்பதையெல்லாம் கண  நேரத்தில் குறித்துக்கொடுத்தான். அதிலிருந்த வேகத்தையும், விவேகத்தையும், துல்லியத்தையும் தாயும் தந்தையும் பாராட்டி வாழ்த்துவதைக் காண்கையில், மனக்கிலேசம் கொண்டான். அவர்கள் வேறு யாரையோ வாழ்த்துவதைப் போல் உணர்ந்து மனதளவில் வீழ்ச்சியை உணர்ந்தான். முதல் முறையாகப் பெற்றவர்களையே ஏமாற்றுகிறோம் என்ற குற்ற உணர்வு அவனின் ஆழ்மனதை ஒரு கரையான் போல அரிக்கத்துவங்கியது. அவர்களின் சந்தோஷமும், பூரிப்பும் அவனைச் சோகத்தில் ஆழ்த்தின. ஆயினும் அவர்களின் இன்முகத்திற்காக அவற்றைப் பொறுப்பது என்று தீர்மானித்துக்கொண்டான்.

ஒலிம்பியாடில் வெழிலன்-2 பங்குபெற்றபோது தான் முதல் பிரச்சனை துவங்கியது. சுமார் ஏழு பேர் முதலிடத்திற்கான மதிப்பெண் வாங்கித் தேர்வாகியபோதுதான், பள்ளிக்கு எங்கோ எதிலோ தவறு நடக்கிறதென்பது உரைத்தது. அப்படியும் இப்படியுமாக யோசித்து, விவாதித்து இறுதியாக ஏழ்வரில் யாரெல்லாம் பிரதிகள் என்ற கேள்வியில் வந்து நின்றது பள்ளி.

யார் பிரதி என்பதைக் கண்டுபிடிக்க, ஏழ்வருக்கும் தனித்தனியாகத் அடையாளத்தேர்வை அரை மணி நேரம் நேர்காணல் மூலமாக கண் பார்த்துப் பேசும் வகைக்கு நடத்துவது – அதில் தோல்வியடைபவர்கள் எல்லோரும் பிரதிகள் என்று தீர்மானிப்பது, அப்படி தீர்மானிக்கப்படுபவர்களைப் பள்ளியை விட்டு நீக்குவது என்று முடிவாகியிருந்தது. பள்ளி நிர்வாகம் தன் முடிவை எல்லோருக்கும் அறிவிக்க, அதிர்ச்சியில் உறைந்தான் வெழிலன்.

தன்னைப்போலவே பிரதி எடுத்து ஏமாற்றத் துணிந்த மற்ற அறுவர் யார் என்பது வெளியிடப்படவில்லை. எல்லோருக்கும் தனித்தனியான நேர்காணல். இன்னார் தான் என்பதைத் தீர்மானிக்க மரபணுச் சோதனை என்று இந்தத் தேர்வில் ஏமாற்ற எந்த வழியுமிருக்கவில்லை. சிக்கினால், பள்ளியிலிருந்து நீக்கம். பிற எந்தப் பள்ளியிலும் சேரத் தடை. இந்தத் தேர்வை எதிர்கொள்ள பிரதியான வெழிலன்-2வை அனுப்ப இயலாது. வெழிலன்-2வின் மரபணு மேம்படுத்தப்பட்ட ஒன்று. அறிவுக்கூர்மையைத் தீர்மானிக்கும் பொருட்டு வலிந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு மாற்றங்கள் மரபணுச்சோதனையில் தெரியவரலாம். பள்ளியில் சேரும்போது மேற்கொண்ட ரத்தப் பரிசோதனையின் போதே மரபணு மாதிரி (sample) தந்தாகிவிட்டது என்பது வேறு நினைவுக்கு வந்து படுத்தியது.

ஆதலால், அடையாளத்தேர்வை தானே எதிர்கொள்வது தான் உசிதமாக இருக்குமென்று தோன்றியது வெழிலனுக்கு. 

ஆனால், பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டால் என்ன செய்வது? என்ன பதில் தருவது? தெரிந்தால் தானே பதில் சொல்ல. படித்திருந்தால் தானே இன்னதுதான் பதில் என்று சொல்வதற்கு. தவறாகப் பதில் தந்தால், அப்படியும் தான் முரண்பாடு (inconsistency) தோன்றும். இதை எவ்விதம் எதிர்கொள்வது?

வெழிலன் எப்படி எப்படியெல்லாமோ யோசித்துப் பார்த்துவிட்டான். பல நூற்றாண்டுகளாக மனித குலம் இழைத்த மாபாதகக் குற்றங்களையெல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து தடயவியல் துறை (Foresics) ஏமாற்றவே முடியாத அரணாக மாறிவிட்டிருந்தது. போதாதகுறைக்கு, தடயவியல் துறைக்கு உதவ எண்ணற்ற செயற்கை நுண்ணறிவுக் களன்களும், தகவல் களஞ்சியங்களும் தயாராக இருந்தன. அவை எல்லாவற்றையும் மீதி பள்ளியின் கண்ணில் மீண்டும் மண்ணைத் தூவுவது என்பது இயலாத காரியம் என்றே தோன்றியது.

அப்படியும் இப்படியுமாக யோசித்ததில் வெழிலனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அடையாளத் தேர்வு வெறும் அரை மணி நேரம் தான். அரை மணி நேரத்தில் எத்தனைக் கேள்விகள் கேட்டுவிடமுடியும்? ஒரு பத்தோ, பதினைந்தோ. அதிகம் போனால், இருபது. கேள்வி கேட்கப்போவது யார்? ஆசிரியர்களாகிய மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு.

மனிதர்கள் தான் கேள்வி கேட்பார்கள் என்றால், மிக அதிகம் முறை கேட்கப்பட்ட கேள்விகள் பட்டியலிலோ, மிக அதிகமாக மதிப்பிடப்பட்ட கேள்விகள் பட்டியலிலோ அல்லது பிரிதேதோவோர் பட்டியலிலோ அக்கேள்விகளைக் கண்டடைந்து விட முடியும். அவற்றை மட்டும் தயார் செய்தால் கூடப் போதுமானது. ஒருக்கால், அடையாளத் தேர்வு செய்யப்போவது செயற்கை நுண்ணறிவு தான் என்றால், அதே செயற்கை நுண்ணறிவின் மேம்பட்ட வழிமுறைகளை (algorithms) வைத்து அத்திட்டத்தை சிதறடிப்பது. இவ்வளவு தான் திட்டம்.

முதற் காரியமாக, வெழிலன்-2வை தன் தங்குமிடத்திற்கு வரவழைத்துவிட்டு தன் வீட்டுக்குத் திரும்பினான் வெழிலன். செயற்கை நுண்ணறிவின் மேம்பட்ட வழிமுறைகளை (advanced algorithms) வைத்து ஐம்பது கேள்விகளைத் தெரிவு செய்தான். அந்த ஐம்பது கேள்விகளுக்குள் தான் அடையாளத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் வர சுமார் 92.87 சதம் சாத்தியமிருப்பதாக செயற்கை நுண்ணறிவு சொன்னது. பார்க்கப்போனால் அதுதான் மிக அதிகபட்ச சாத்தியம். அந்த ஐம்பது கேள்விகளை மட்டும் தயார் செய்துவிட்டால், அடையாளத் தேர்வில் தேர்வாகிவிடுவது உறுதி என்று சாத்தியக்கூறுகள் சொன்னதால் கடுமையாகத் தயார் செய்தான் வெழிலன்.

பாலச்சந்தரும், பார்வதியும் ஒருவர் மாற்றி ஒருவர் இரவெல்லாம் விழுத்திருந்து, வெழிலனுக்கு தேனீர் தந்து அவன் தேர்வுக்கு தயார் செய்ய உதவினார்கள். பாலச்சந்தர் தன் பங்கிற்கு மிக வினோதமான வழிமுறைகளைப் (algorithm) பயன்படுத்தி கேள்வித்தாள் தயார் செய்து தந்தார். அதிலிருந்து புதியதாக பன்னிரண்டு கேள்விகள் கிடைத்தது. அதற்கும் பதில்கள் தயார் செய்தான் வெழிலன். 

இறுதியாக, அடையாளத்தேர்வு நாளும் வந்தது. வெழிலன் என்கிற பெயர், மொத்தமாக இருந்த ஏழ்வரில் கடைசியான பெயர் என்பதால் முதலில் மீதமிருந்த அறுவருக்குமான அடையாளத்தேர்வு நடந்தது. அதில் ஆறு பேருமே பிரதிகளை வைத்துத் தேர்வுகளை எதிர்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருந்தது. வெழிலனின் முறை வந்தபோது, வெழிலன் கேள்விகளை எதிர்கொண்டான். அவனிடம் கேட்கப்பட்ட பதினைந்து கேள்விகளில் பன்னிரண்டு அவனது அப்பா, பாலச்சந்தர் செயற்கை நுண்ணறிவைக்கொண்டு தயார் செய்தது. அவற்றை ஏற்கனவே தயார் செய்திருந்தபடியால், அடையாளத் தேர்வை வென்றுவிட்டிருந்தான் வெழிலன். 

‘அப்பாடா’ வென்றிருந்தது வெழிலனுக்கு. 

“தயார் செய்வது கடினமாக இருந்ததாப்பா?” என்றார் பாலச்சந்தர் ஆகாய மார்க்கமாகப் பறக்கும் வாடகை மகிழுந்தில் வீடு திரும்புகையில்.

“முதல் இருபது கேள்விகள் கடினமாகத்தான் அப்பா இருந்தது. அடுத்தடுத்த கேள்விகளில் மனம் பக்குவப்பட்டுவிட்டது அப்பா. அதுமட்டுமல்லாமல், முதல் இருபது கேள்விகள் தான் அடுத்தடுத்த இருபது-முப்பது கேள்விகளுக்கு அடிப்படையாக இருந்தது. இக்கேள்விகளுக்கான பதில்களுக்கிடையேயான தொடர்பு, ஒற்றுமை, வேற்றுமை எல்லாமும் பிடிபட்ட போது, தயார் செய்வது இன்னமும் எளிதாகிவிட்டது அப்பா” என்றான் வெழிலன்.

“அப்படியானால், நீயே படித்திருக்கலாம் தானே வெழிலா. எதற்காக பிரதிகள் (clones)?” என்ற அப்பாவின் கேள்வியில் அதிர்ந்தான் வெழிலன்.

“அப்பா… உங்களுக்கு எப்படி….” என்று அதிர்ச்சியில் இழுத்தான்.

“உன் இந்தத் திறமையை என் கையெழுத்தைப் பிரதி எடுப்பதில் காட்டுவானேன்” என்றார் பாலச்சந்தர்.

“அப்பா.. உங்களுக்கு எப்படி….? உங்கள் கையெழுத்தைத் தவறாகப் போட்டுவிட்டேனா? தவறாகப் போட்டால் அப்பாவுக்குத் தகவல் போகும் என்றார்கள்” என்றான் வெழிலன் அபலனாக.

“இல்லையில்லை. அதிலும் உன் திறமை துல்லியம் வெழிலா. நீ என் கையெழுத்தை மிக மிகத் துல்லியமாகத்தான் இட்டிருந்தாய்”

“பிறகெப்படி?”

மெல்லியதாய்ச் சிரித்த பாலச்சந்தர்,

“என் கையெழுத்தை நானே சரியாகப்போடுவதில்லை. தொடர்ச்சியாகத் தவறாகப் போட்டு,  என் கையெழுத்தை நானே சரிபார்க்க நிர்வாகத்திடம் பலமுறை ஏறி இறங்கியிருக்கிறேன் . இதனால் நிர்வாகத்தில் தொடர்ந்து தவறாகக் கையெழுத்திடுபவர்களை மேற்பார்வை செய்ய செயற்கை நுண்ணறிவைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். நீ என் கடைசிக் கையெழுத்தை மிக மிகத் துல்லியமாக இட்டதை செயற்கை நுண்ணறிவு கவனித்திருக்கிறது. பல தவறுகளுக்கு மத்தியில் ஒரே ஒரு துல்லியமான சரி, அதற்கு, சரியாகப் பட்டிருக்கவில்லை போலும்” என்றுவிட்டு பாலச்சந்தர் சிரிக்க, வெழிலனால் அசடு வழிய மட்டும் தான் முடிந்தது.

“அப்போதே செயற்கை நுண்ணறிவு என்னிடம் நீ பிரதி எடுக்கும் விடயத்தைத் தெரிவித்துவிட்டது. நீ என்ன செய்கிறாய், உன் சாமார்த்தியம் என்ன என்று பார்க்கத்தான் இத்தனை நாளும் அமைதியாகக் காத்திருந்தேன்” என்றார் பாலச்சந்தர்.

என்ன சொல்வது என்று எதிவும் தோன்றாமல், “மன்னியுங்கள் அப்பா” என்றான் வெழிலன். இதற்குள் வீடு வந்து விட, ஆகாயத்திலிருந்து, மகிழுந்து மெல்லத் தரையிறங்கியது. வாடகை மகிழுந்துக்கு கடன் (Credit) தந்துவிட்டு வீட்டிற்குள் நுழைய,  அப்போது உள் அறையிலிருந்து வெழிலன்-2 வருவதைப் பார்த்து, மேலும் அதிர்ந்தான் வெழிலன்.

“நான் இவனை உனது தங்குமிடத்திலிருந்து (Dorm) அழைத்து வந்தேன். மணிவேந்தனுக்கு நீ இவனை அங்கு அமரவைத்துவிட்டுச் சென்றது தெரிந்திருக்கவில்லை.  நான் பெற்ற மகனைத்தான் காண வந்திருக்கிறேன் என்றெண்ணி அனுப்பிவிட்டார்கள்” என்று சொல்லிச் சிரித்தார் பாலச்சந்தர்.

பிறகு ஒரு குப்பியை ஒரு கருவியிலிருந்து உருவினார். ‘மரபணுச் சோதனைக் களன்’ என்று அந்தக் கருவியில் எழுதப்பட்டிருந்தது. அதில் ‘கால அவகாசம்’ என்ற இடத்தில் ‘பத்து ஆண்டுகள்’ என்று குறிப்பிட்டார்.

“இதைக் கவனி” என்று சொல்லிவிட்டு, குப்பியின் ஒரு முனையை வெழிலனின் ஆள்காட்டிவிரல் முனையில் குத்தி ஒரு துளி ரத்தம் எடுத்துவிட்டு மறுமுனையில் வெழிலன்-2வின் ஆள்காட்டி விரல் முனையில் குத்தி அவனிடமிருந்தும் ஒரு துளி ரத்தம் எடுத்தார். கருவி இரு துளிகளையும் ஆராய்ந்துவிட்டு, அதனைப் பத்து ஆண்டுகளுக்கான பாவனை நிரல்(simulation) செய்துமுடித்து, மரபணு தொகுதியின் வித்தியாசம் ஆயிரத்தில் கால் பங்கு என்றது.

“அப்பா!! இது எப்படிச் சாத்தியம்? அரை பங்காவது இருக்கவேண்டுமே? கால் பங்கு தான் எனில் எனக்கும் என் பிரதிக்குமான இடைவெளி குறைந்திருக்கிறதா?” என்று பதறினான் வெழிலன்.

“மணிவேந்தனின் மருத்துவனை தான் மரபணு மாற்றங்களை (gene editing) செய்யக்கூடிய சோதனைக்கூடம் என்று நினைக்கிறாயா? இல்லை. உன் உடலே அதைச் செய்யக்கூடிய தொழிற்சாலை அல்லது சோதனைக்கூடம் தான் வெழிலா. இந்த அடையாளத்தேர்வுக்காக நீ தயார் செய்தது உன் மரபணுவை மாற்றியிருக்கிறது. அதுதான் உண்மை, வெழிலா. இப்படி யோசித்துப் பார். நாற்பது வயதுகளில் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள், இருபதுகளில் பிறக்கும் பிள்ளைகளைவிடவும் ஏன் முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்? விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குகள் விதியாகா என்பதை கவனிக்கவேண்டும். இதன் பொருள் என்ன? உடலே ஒரு சோதனைக்கூடம் தான் வெழிலா. உன் உடலே உன் மரபணுக்களை மாற்றக்கூடியது. தொடர்ந்த பயிற்சியாலும், தொடர்ந்த தயாரிப்புகளாலும், உனக்கு வேண்டும் மரபணு மாற்றங்களை நீயே உருவாக்க முடியும் என்னும் போது பிரதியெல்லாம் தேவைதானா?” என்றார் பாலச்சந்தர்.

“நீ பிரதியை ஏன் நாடவேண்டும் வெழிலா. அடையாளத்தேர்வை நீ படித்து தானே எதிர்கொண்டாய். அதில் காட்டிய புத்திசாலித்தனத்தை படிப்பில் காட்டினாலே போதுமே வெழிலா. பாரேன். படிப்பு என்பது பெரிய சிக்கல் எதுவும் இல்லை. சில பாடங்கள் அடிப்படையாக இருக்கும். மற்ற பாடங்கள் அந்த அடிப்படைகளின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும். அடிப்படைகளைச் சரியாகக் கற்றுக்கொள்ளும் பட்சத்தில் எல்லா பாடங்களுக்கிடையேயும் இருக்கும் தொடர்பு, ஒற்றுமை, வேற்றுமை இவைகளைக் கண்டறிந்தாலே போதும் வெழிலா. கற்றுச்சிறந்தவர்கள் எல்லோரும் இந்த சூட்சுமத்தைக் கற்றவர்களே. இந்த அடையாளத்தேவை உன் பிரதியால் கூட நிச்சயம் வென்றிருக்க முடியாது. ஏனெனில் மரபணுக்கள். ஆனால் நீ வென்றிருக்கிறாய் வெழிலா. எனக்கு என் மகனின் இந்த வெற்றியே போதும் வெழிலா. எத்தனை வெற்றிகளைக் குவித்தாலும், பிரதி பிரதி தான் வெழிலா – ஒரு பிரதி என் அசல் மகனாகிவிட முடியாது.என் மகன் நீ தான். உன் வெற்றி தான் என் வெற்றி. நீ நீயாக இரு, வெழிலா. உன் இடத்தை எந்தப் பிரதியாலும் நிரப்ப இயலாது. உன்னாலேயே முடியும் என்னும் போது பிரதிகள் எதற்கு என்பதுதான் கேள்வி?” என்ற பாலச்சந்தரின் கண்கள் பனித்தன.

“மன்னியுங்கள் அப்பா. தவறான வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். என் மரபணுக்களை நான் மாற்ற வேண்டுமானால், நானே தான் படிக்க வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும். என்னை நான் தயார் செய்ய வேண்டும். அவ்விதம் நடந்தால், எல்லாமும் மாறும். எனக்குப் புரிகிறது.” வெழிலன் தன் அப்பாவைக் கட்டியணைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

“மகன் தந்தைக்காற்றும் உதவி…. என்று என் எள்ளுத்தாத்தா காலத்தில் ஒரு சொலவடை உண்டு. அதை, இந்த நவீன காலத்திற்கேற்ப மாற்றிச் சொல்ல வேண்டுமானால், ஓரு தகப்பனுக்கு கிடைக்கக்கூடிய மாபெறும் வரம் என்ன தெரியுமா வெழிலா? சாதகமான மரபணு மாற்றங்களுக்குட்பட்ட மகனும், பெற்ற மகனும் இருவேறு நபர்களாக இல்லாமல் ஒருவராகவே இருப்பதுதான் வெழிலா. உன் அடையாளத்தை நீயே தேர்வு செய்யலாம் வெழிலா.  அது உனக்குப் புரிய வேண்டும் என்று தான் நீ பிரதி எடுக்க அனுமதித்தேன்” என்றார் பாலச்சந்தர் வெழிலனைக் கட்டியணைத்தபடி.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.