முட்டானி எலும்புக்களுக்கு தேங்காய் புண்ணாக்கு பொட்டுக்கல்ல
சப்பை பாட்டிலுக்கு சேமியா ஐஸ்
பீர் பாட்டிலுக்கு பால் ஐஸ்
உடைந்த இரப்பர் வாளிகளுக்கு சோமாபுடி
பழைய காகிதங்களுக்கு பஞ்சு மிட்டாய் அச்சு வெல்லம்
பச்சரிசிக்கு சக்கரவள்ளிக்கிழங்கு
பழைய துணிகளுக்கு
அலுமினியப்பாத்திரம்
துருவேறிய இரும்புகளுக்கு சின்ன வெங்காயம்
பழுதுபோன டேப்ரெக்கார்டர்களுக்கு பளபளக்கும் பீங்கான் தட்டு
பள்ளிக்கூடத்து முட்டைக்கு இலந்தைப்பழம் என
அள்ளிப்போட்டு அனுபவித்த
பணமற்ற பண்டமாற்றுகளில்
சஞ்சரித்துக்கொண்டிக்கிறது
என் பால்ய குறிப்புகள்

ஆடிப்பட்டத்துல போட்ட
மக்காச்சோளம் கட்டவள்ளி
வெள்ளசோளம் தட்டப்பயிறு
மொச்சக்கா பைத்தங்கா
தொவரங்கா கொடிகல்ல
அத்தனையும் மார்கழில வெளஞ்சிறும்
பாவாட கைலில மடிகோலி
வந்து கொட்டுனா
ஊமையன் ஊட்டு மண்சட்டி
அத்திமரத்தோப்புல அடுப்பு மூட்டி
பாலூத்து தண்ணி வச்சி கொதிக்கும்
வடக்க திருடி தெக்க தின்னா யாருக்கு தெரியும்
நாம் சந்திக்கும் நேரத்தை வனாந்திரத்திற்கு சொல்லிவிட்டேன்
விளக்குகளற்ற வெளியில்
ஈச்சம்பழ செங்காயைப்போல்
சிவந்து மிளிரும்
நெயில் பாலீஷ் ஒளியையும்
உடலுக்கு நகர்ந்து செல்லும் நச்சுப்பாம்பைப்போல்
மெல்லிய உன் நடை சப்தத்தையும் நன்கறிவேன்
காட்டுக்கள்ளிகள் கூட மஞ்சள் துளிர்விட்டு விட்டது
சீக்கிரம் வந்துவிடு தூங்குமூஞ்சி மரத்தின் தூக்கத்தை கலைப்போம்
காரிருள் பொழுதில்
ஆணிகள் அறைந்த
ஒற்றைப்புளியமரத்தை நடந்துவரும் உனக்கும்
கூச்சல்கள் நிரம்பிய
உன் தெருமுனை சாராயக்கடையை கடந்துவரும் எனக்கும்
அச்சத்தில் ஆடை நனைந்து உலராமல் ஊமைவாடையடித்தால்
களைந்து நிர்வாணமாகிவிடுவோம் மரங்களோடு மரங்களாக
ஈச்சம் முட்களைப்போல்
உன் ரோமங்கள்
நீட்டிக்கொள்ளும் அளவிற்கு
என் உதடுகளை உன் கழுத்தில் பதிக்கிறேன்
அன்னம் பூவின் அடிக்கிழங்கைப்போல்
வெளுத்த உன் தேகம்
வள்ளிக்கிழங்கைப்போல் சிவக்க அணைத்துக்கொள்கிறேன்
சிறு பிள்ளையில் சீமெண்ணை விளக்கை சாய்த்துக்கொண்டதால் மார்பில் வெளிறிய தளும்பை போனமுறை கூச்சப்பட்டு மறைத்துக் கொண்டாய்
இந்தமுறை கூச்சத்தை களைந்துவிட்டு வா
அதைவிட சூடாக ஒரு முத்தம் தருகிறேன்
அந்த வெளிறிய தீத்தளும்பில்
அத்தனைக்கும் பிறகு
தாழம்பூ வாசனையில் கிறுகிறுத்து மயங்கிய மோகினி போல்
அரப்பு தேய்த்த உன் சுருட்டை மயிர்களில்
முகம் பதித்து மூச்சு வாங்கிக் கொள்கிறேன்
வடுக்கள் மறையும் வரை தோழிகளுடன் குளிக்கச்செல்லாதே
பேசிவிட்டு தான் வருவேன் என்று நீ சொல்லும் பெரும் பொய் அவிழ்ந்துவிடும்
நண்பன் பொறுக்கிக்கொடுத்த
உடைந்த வண்ணப்பென்சில்கள் முனை வைத்து ஓவியம் தீட்டியது
கருவையில் சிக்கி இறந்த மயிலை
கற்கண்டு புத்தக நடுப்பக்கத்தில் வைத்து குட்டி போட வைத்தது
திருக்குளத்து தொரப்பாட்டில் துணிகளில் தவறிவிழுந்த நாணயங்களை காந்தக்கயிறு கட்டி மீட்டு வந்தது
அவள் மேசையில் சிந்திய மையை
ஹீரோ பேனாவில் உறிஞ்சி ஹார்ட்டீன் கிறுக்கியது
யார் யாராலோ கிழித்துவீசப்பட்ட குப்பைத்தொட்டி காகிதங்களைச் சுருட்டி
பந்து கட்டி பரீட்சட்டையில் அடித்து விளையாடியது
கொளஞ்சி மாமா கல்யாணத்தில் வெட்டிப்போட்ட வாழை மரங்களை தெப்பம் கட்டி ஊத்து குட்டையில் நீந்தியது
ஏரி மேட்டில் நோண்டித் தின்ற நொங்கு கூட்டில் வண்டி செய்து விளையாடியது
அடமழையில் உடைந்து விழுந்த முருங்கைப்போத்தை
நட்டு வைத்து மரம் ஆக்கியது
முடிந்து போன காதலை ஒரு கவிதை எழுதி உயிர்ப்புடன் வைத்திருப்பது
கொள்ளுத்தின்று இறந்துபோன மாட்டுத் தோலில் பறைகட்டி
கருப்பங்காட்டு நரிகளை விரட்டியடித்தது
கோக்காலியோரம் அப்பா குடித்து போட்ட மதுபாட்டில்களின் துளிகளைச்சேர்த்து கட்டிங் அளவு தேற்றியது
இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு
தாத்தா தூக்கு இறந்த
வேப்ப மரத்தின் கீழ்
செங்கல் நட்டு வைத்து
அவரைச் சாமியாக்கியது என எப்பொழுதும் அப்படித்தான்
இருத்தல் என்பது இல்லாமல் போனவற்றிலிருந்து தான் நீள்கிறது எனக்கு
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
