அமானுஷ்யம்

அலுவலகம் நிமித்தம் தினமும் மேற்கொள்ளும் மூன்று மணி நேர புறநகர் ரயில் பயணத்தில் தான் அவரை அவனுக்கு பழக்கமாகியிருந்தது. இந்த அவன் கேசவன். அந்த அவர் கோபாலன்.

பரிச்சயமில்லாத மனிதரிடம் பேசுவது கேசவனுக்கு மிகவும் பிடிக்கும். தெரிந்த மனிதர்களை விட தெரியாத மனிதர்களின் அணுக்கம் இவனுக்கு அலாதியானது. காரணம் இவர்கள் இவ்வளவுதான் என்ற முன் முடிவில் கேசவன் கெட்டிக்காரன். இதற்கு மேலும் இவர்களிடம் தெரிந்துகொள்ள சுவாரஸ்யம் ஏதும் இல்லை என்பதால் புது மனிதர்களின் சகவாசத்தை நாடுவான்.

தினமும் மூன்று மணி நேர ரயில் பயணம் என்பதை இவனுடன் பயணிக்கும் பலர் நொந்து கொள்வதுண்டு. ஆரம்பத்தில் அவர்களுடன் சேர்ந்து இவனுக்கும் நொந்து கொள்ளத்தான் பிடித்திருந்தது. இரண்டரை ஜான் வயிற்று பிழைப்புக்கு எல்லாவகையான குட்டிகரணமும் போட்டுத்தான் ஆகவேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் ஏற்று ஓடிக் கொண்டிருந்தான். இவனுக்கு ஒன்றரை, மனைவிக்கும் மகனுக்கும் சேர்த்து அரை அரை ஆக இரண்டரை ஜான் வயிறு என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள விழைகிறேன்.

ஆரம்பத்தில் அன்றைய செய்தித்தாள்களை வாங்கி மோந்து மேய்ந்து பார்த்தான். அவை செய்திகளாக இல்லாமல் கருத்துக்களை திணிப்பவையாக இருந்தன. “நீ இப்படி யோசிக்காதே, மாறாக இது போல் அவதானி” என்று ஒவ்வொரு செய்தித்தாளும் இவனை இடது வலம் நடுப்புறம் என்று பாடாய்படுத்தி குழப்பின.

பொதுவாகவே யாருடைய கருத்துக்களிலும் உடன்படாதவன் கேசவன் என்பதால் இரண்டு மூன்று வாரங்களில் அவனுக்கு இந்த செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் மிகவும் அயர்ச்சியை கொடுத்து பயணத்தை மேலும் களைப்பாக்கியது. அலுவலகம் முடிந்து வந்த ஒரு நன்நாளில் ஆரியகௌடா சாலையில் இருக்கும் முருகன் வாடகை புத்தக நிலையத்தில் தன்னுடைய தகவல்களை பதிந்து கொண்டு புத்தகங்களை வாடகைக்கு எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தான். மாவட்ட கிளை நூலக நூல்களை விட இந்த வாடகை புத்தகத்தின் புதுப் புது வரவுகள் இவனுக்கு கிளர்ச்சியை கொடுத்திருந்தன. அதை விட நாற்பது ஐம்பது ஆண்டு கால் பழைய சிற்றிதழ்களின் பைண்டிங் தொகுப்பு இவனை புது உலகிற்கே இட்டுச்சென்றது.

அந்த புராதன புத்தகங்களின் பக்கத்தின் கீழ் மற்றும் மேல் விளிம்பில் இருக்கும் துணுக்குச்செய்திகள் ஏனைய விளம்பரங்கள் அந்த காலத்திற்கு இவனை லகுவாக கடத்தின. ஆனால் இந்த அரத பழசான பைண்டிங் செய்யப்பட புத்தகம் தான் இவனது தலையெழுத்தை மாற்றிப்போடும் என்று அப்போது அவன் அறிந்திருக்கவில்லை. 

இவன் படித்துக்கொண்டிருந்த “பொம்மை” என்ற ஒரு பழைய நாளிதழின் தொகுப்பை பார்த்துதான் முதல் பத்தியில் நமக்கு அறிமுகமாகிய கோபாலன் இவனுக்கும் அறிமுகமானார்.

“இப் யூ டோன்ட் மைண்ட், என்ன புக் சார் இது?” என்றார்.

ஏறிட்டு பார்த்தவன் அருகில் அவர் ஆர்வமாக அந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்து அதன் விவரங்களை கூறினான்.

“பொக்கிஷம் சார். முந்தின பக்கத்துல ஒரு தொடர்கதையோட பேரு வந்தது பாத்தீங்களா? “வானம்பாடிக்கு ஒரு விலங்கு”னு ஒரு நாவல். அது லக்ஷ்மி எழுதினது. அப்போல்லாம் அத விடாம வாராவாரம் எதிர்பார்த்து உக்காந்து படிச்சிருக்கேன். இந்த புத்தகத்த பாத்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்துச்சு”.

கேசவன் அவர் கேட்காமலேயே அந்த புத்தகத்தை அவரிடம் கொடுத்தான்.

“தொட்டாலே உடஞ்சிடும் போல இருக்குல்ல” என்றவர் உடனடியாக அந்த புத்தகத்தை கையில் ஏந்தி முகர்ந்து பார்த்தார். இந்த வாசனைலாம் அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது சார். அம்பது அறுபது வருஷம் இருக்கும்ல?”

புத்தகத்தை வாங்கி படித்தவர் பிறகு சிறிது நாளில் கொஞ்சம் கொஞ்சமாக இவனுடன் ஐக்கியமாகி விட்டார். பரஸ்பர புத்தக தகவல்களை பரிமாறிக்கொண்டனர். 1950ஆம் வருடத்திய சூப்பர் ஹிட் தொடரான பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த வரலாற்று தேடல் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி இழுத்தது. நீலகண்ட சாஸ்திரியின் ஆய்வுக்கட்டுரைகள், மொகலாயர்களின் படையெடுப்பு, பாண்டியர்கள், களப்பிரர்கள், ஓலை சுவடிகளின் பெயர்ப்புகள் அதன் முன் வந்த கிறிஸ்துவின் பிறப்பு அதற்கு முந்தைய சங்ககால பாடல்கள், இராமாயணம் மற்றும் ஆதியை விளக்கும் மகாபராதம் என பேரு வெடிப்பு காலம் வரைக்கும் அலசினார்கள். ரயில் பயணம் அவனுக்கு போதிமரம் போல் ஆகியது.

ஒருமுறை கடவுளின் இருப்பை பற்றிய சம்பாஷணை மிக நீண்டு ஓடியது.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது”

உரையாடல்களின் அதுவும் தர்க்கம் நடக்கு இடங்களில் போடப்படும் இந்த பீடிகை பெரும்பான்மையான நேரங்கள் தவறாகத்தான் எடுத்துக்கொள்ளத்தூண்டும். ஆனால் கேசவனுக்கு இந்த முறை அப்படி அமையவில்லை.

“இன்னும் உங்களுக்கு முதிர்ச்சி வரலைன்னு சொல்லுவேன்”

அவரது பேச்சு அன்று வெடுக்கென்றிருந்தாலும் கேசவன் பொறுமையாக இருந்தான்.

“ஒரு பொருளை அல்லது கொள்கையை பார்த்த பின் நம்புவதை விட, நம்பிக்கையுடன் பார்க்கத்தொடங்க வேண்டும். See and Believe கிடையாது. Believe and See” என்றார்.

கேசவனுக்கு அந்த சித்தாந்தம் எதனுடனும் ஒத்துப்போவது போலத்தான் தெரிந்தது.

“நீங்க புட்டபர்த்தி சாய் பாபாவை பத்தி என்ன நினைக்கிறீங்க”

“எனக்கு அவரை போட்டோல பாத்துதான் தெரியும். வேறு ஒன்னும் அவரைப்பத்தி தெரியாது” என்றான்.

“எனக்கு முப்பத்தஞ்சு வயசு இருக்கும். குடும்பத்துல சொல்லொண்ணா கஷ்டம். எங்கயாவது கருப்பு துளைக்குள்ள போய் தொலைஞ்சி போயிடலாமானு யோசிக்கிறேன். ஒரு ஆறுதல் வார்த்தை சொல்றதுக்கு கூட யாரும் இல்லை. இருந்தாலும் தோணலை. ஏதோ ஒரு சக்தி என்னை புட்டபர்த்தி நோக்கி இழுத்தது. அங்க போனேன். கூட்டத்துல உக்காந்துருக்கேன். அப்போ பாபா என்னை நோக்கி கைய காமிச்சு பக்கத்துல வா அப்டின்னு சைகைல கூப்புடுறார். என்னைய எதுக்கு கூப்புடுறார்னு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. பக்கத்துல போன உடனே என்ன அவருக்கு பக்கத்துல உக்கார வச்சிக்கிட்டு தோள்ல தட்டிக்கொடுத்து நான் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறேன்னு அவரே சொல்லறார். அவருக்கு எப்பிடி தெரிய வந்துச்சுன்னு எனக்கு ஒன்னும் புரியல. எல்லாம் சரியாயிடும்னு ஒரு தீர்வையும் சொல்றார். எனக்கு மனசு அமைதியாயிடுச்சு. அப்படியே கொடில போட்ருக்க துணி போல ரொம்ப லேசா உணர ஆரம்பிச்சேன். ஒரு பரிபூரணம் கிடைச்ச மாதிரி பீலிங். அவரு சொன்னது போல கஷ்டம் எல்லாம் விலகிடுச்சு. அன்னைலேந்து இணைய வரைக்கும் நான் தீவிர சாய் பக்தனா இருக்குறேன்.”

“ஓகே புரியுது சார். இதேமாதிரி எல்லாருக்கும் நடந்துரும்னு சொல்ல முடியாதுல”

“அதைத்தான் கேசவன் சொல்றேன். நீங்க ஆரம்பத்திலேயே சந்தேகப்படறீங்க. அப்புறம் மிராக்கிள் நடந்தாலும் எதேச்சையா நடந்துதான்னு சப்பைக்கட்டு கட்டுவீங்க”

“யதேச்சை தான். சப்பைக்கட்டு தான். அதுல ஒன்னும் சந்தேகம் இல்லையே”

“பாத்தீங்களா. நம்பிக்கை இருந்தான் உணர முடியும்”

“இப்டியே எவ்ளோ நாள் தான் சொல்லுவீங்க. நான் நம்புறேன். எப்படி உணரணும் அத சொல்லுங்க பாக்கலாம்”.

“உங்களுக்கு நம்பிக்கை வரலை. நம்பினா உணர முடியுமான்னு டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்க. அது அது உணர்வுபூர்வமா நடக்கணும். உங்களுக்கு இடது பக்க மூளை ரொம்ப வேலை செய்யுது. அதான் அதிகப்படியா தர்க்கம் பண்றீங்க”.

“தர்க்கம் பண்ணாம விட்டுட்டா உண்மை எப்பிடி வெளில தெரியும்”

“சரி. விடுங்க. நான் என்னமோ சாமி பூதத்துக்கு ப்ராண்ட் அம்பாசிடர் மாதிரி உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். அப்புறம் நமக்குள்ள மனஸ்தாபம் வந்துடும்”.

கேசவனுக்கு பொறி தட்டியது 

“கோபாலன் சார். நீங்க தான் சாமி பத்தி சொல்லிட்டீங்க. பேய் பூதம் பத்தி ஏதும் உணர்ந்திருக்கீங்களா?”

“என்ன கேசவன். ஏன் வாய் பிடுங்கிறீங்களே”

“அப்போ ஏதோ அனுபவம் இருக்கு. சொல்லுங்க சார். இன்னைக்கு புக்க மூடி வச்சிடறேன்”.

“விடமாட்டிக்கிறீங்க”

“இல்ல. இதுக்கும் என்ன நம்பிக்கையோட தான் பாக்கணுமா? இல்ல. வேற ஏதும் இருக்கா?”

“நீங்க கடைசி வர சந்தேகத்தோடதான் பாப்பீங்க போல?”

“இல்லை இல்லை சார். நான் நம்புறேன். நீங்க சொல்லுங்க”

“சொல்றேன். என்னோட அனுபவமும் இருக்கு. என்னோட நண்பனோட அனுபவமும் இருக்கு. ஒன்னொன்னா சொல்றேன். கல்லூரி படிப்பை முடிச்சிட்டு இளந்தாரியா சுத்திக்கிட்ருந்த வயசு அது. எதுக்கும் பயம் கிடையாது. வந்து பாருன்னு நிக்கிற கோஷ்டி. ஒரு நாள் நைட்டு இரண்டாவது ஆட்டம் சினிமா பாத்திட்டு வரலாம்னு கிளம்பி போறோம். அப்போல்லாம் எங்க ஊர்லேந்து யாரும் ரெண்டாவது ஆட்டத்துக்கு போகமாட்டாங்க. ஏன்னா சுடுகாட தாண்டி தான் தியேட்டருக்கு போகணும். சில நாள் எரிஞ்சிட்டு  இருக்கும். வெடப்பா எந்திச்சி நிக்கிறத பாத்தே நிறைய பேருக்கு ஜன்னி வந்திருக்கு. அன்னைக்கு ரெண்டாவது ஆட்டம் படம் பாக்க போனதே ஒரு வீம்புக்கு தான். என்ன ஆகுதுன்னு பாக்கலாமேன்னுட்டுதான். திரும்பி வந்திட்டு இருக்கோம். சுடுகாட தாண்டுற சமயம் தான் அந்த குரல் கேட்டுச்சு. என் கூட வந்த கண்ணன் தான் எவ்ளோ சொல்லியும் கேக்காம திரும்பி பாத்தான்.  ஒரு சமாதி மேல ஒரு உருவம் ஒன்னு உக்காந்திருக்கு. அலை அலையா தெரியுது. தலை நிறைய பூவு. முகத்துல மஞ்சள் தடவி அந்த நேரத்துல எப்பிடின்னு எங்களுக்கு லேசா உதர ஆரம்பிக்குது. எங்களுக்கு அதுக்கும் ஒரு பத்தடி நீளம் இருக்கும். அது அங்க நின்னுட்டே அதோட கைய்ய பத்தடிக்கு மேல நீட்டி கண்ணனோட கழுத்த பிடிச்சது. கண்ணன் கத்துறான். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரில. கண்ணனை பிடிச்சி நாங்க இந்த பக்கம் இழுக்குறோம். ஒரு ரெண்டு நிமிஷம் இந்த போராட்டம் நடந்துருக்கும். அந்த உருவம் தன்னோட இன்னொரு கைய்யால எங்க எல்லாரையும் வேகமா அறைஞ்சிது. அவ்ளோ தான் தெரியும். அடுத்த நாள் பெரியவங்க வந்து எழுப்பின பின்னாடி தான் எந்திரிச்சோம்.  சொல்லி வச்ச மாதிரி எல்லோரோட கன்னத்திலேயும் அஞ்சு விரல் பதிஞ்சிருந்தது. எங்களுக்கு மந்திரிச்ச தாயத்தை கட்டி விட்டாங்க.

“இது உண்மையா நடந்துச்சா என்ன?”

“பாத்தீங்களா இதனால்தான் நான் யார்கிட்டையும் சொல்றது இல்ல. ஏன்னா சொன்னா நம்ப மாட்டாங்க. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் அப்படிங்கிறது எனக்கு ரொம்ப பொருந்திப்போகுது”

“சரி சார். நன் சந்தேகப்படல. வேற எதுனாச்சும் இதே மாதிரி அனுபவம் இருக்கா?”

“எதுக்கு. திரும்பவும் என்ன கிண்டல் பண்றதுக்கா?”

“சும்மா சொல்லுங்க சார்”.

“சொல்றேன். வேலை கிடைச்சு நான் புதுசா ஜாயின் பண்ண டைம் அது. நான் ஜூனியர் அப்டிங்கிறதுனால என்ன ஆந்திரால ஒரு அத்துவான காட்டுல இருக்குற சுகர் பாக்ட்ரிக்கு அனுப்பி விட்டுட்டாங்க. கஸ்டமர் கிட்ட பில்ல காமிச்சு காசு கலெக்ட் பண்றதுக்கு. ஆனா அதுல வேறோ ஒரு பிரச்சினை இருக்குங்கிறது எனக்கு அப்போ தெரியாது.”

“என்ன பிரச்சினை சார்?” 

“நான் அங்க போய் சேந்தோடனே எனக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்தாங்க. சுத்தி கரும்பு காடு தான். ரெண்டாளு உயரத்துக்கு இருக்கும். பகல்ல ஒன்னும் தெரில. நைட் ஆச்சுன்னா வெளில பாத்தா கும்மிருட்டு. அந்த கரும்போட தோகை அசைறது காதுல ஒரு மாதிரி சத்தத்தை உண்டு பண்ணும். போதாக்குறைக்கு சோளக்கொல்ல பொம்மை வேற. நைட் கதவ சாத்தினா அடுத்த நாள் தான் திறப்பேன். ரெண்டு நாள் ஒன்னும் தெரில. நார்மலா தான் போச்சு. மூணாவது நாள் ஆபிஸ்லேந்து வரதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. என்ன ஜீப்ல வந்து விட்டுட்டு போறாங்க. வாசல்ல ஒரு குண்டு பல்ப் மட்டும் தான். வேற வெளிச்சம் ஏதும் இல்ல. உள்ள வந்து கதவ சாத்திட்டு கட்டில்ல படுத்திருக்கேன். புக் படிச்சிகிட்டே தூங்கி விழப்போறேன். அந்த சமயத்துல கட்டிலோட தலைப்பக்கத்தை பிடிச்சி அப்பிடியே மேல யாரோ தூக்குற மாதிரி ஒரு உணர்வு. முழிச்சி பாத்தா கட்டிலோட ஒரு பகுதி மேல தூக்கி நிக்குது. எனக்கு எப்படி இருக்கும் பாருங்க. கட்டில்ல இருந்து எறங்குனேன்னு சொல்ல முடியாது. அப்பிடியே கீழ விழறேன். கட்டிலும்  யாரோ பிடிச்சி இறக்கி வச்ச மாதிரி கீழ இறங்குது. எனக்கு உடம்பல்லாம் உதர ஆரம்பிச்சிடுச்சு. கத்த முயற்சி பண்றேன். சத்தம் வரல. என் சூட்கேசுலேந்து சாமி படத்தை எடுத்து நெஞ்சுப்பக்கமா கையில பிடிச்சி அப்பிடியே குத்த வச்சிட்டு உக்காந்துட்டேன். சரியா அந்த நேரம் பாத்து கரண்ட் போய்டுச்சு. அழுதுட்டே உக்காந்திருக்கேன். கரும்பு தோகையோட சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு. அப்பிடியே உக்காந்த மாதிரியே எப்போ தூங்கினேன்னு தெரியல. முழிச்சி பாக்கும்போது விடிச்சிருச்சு. கோணல் மாணலா இருந்த கட்டில்ல சரி பண்ணிட்டு குளிக்க போய்டேன். தலைக்கு தண்ணி ஊத்திட்டு வெளில வந்து பாக்குறேன். நான் நேர போட்ட கட்டில் திரும்பவும் கோணலா கிடக்குது. எனக்கு என்ன பண்றதுன்னே. தெரியல. கட்டின துண்டோட சூட்கேசை தூக்கிட்டு வெளில ஓடி வந்துட்டேன். சுத்தியும் கரும்பு. தெரிஞ்ச பாதைல ரோட்டை நோக்கி ஓடுறேன். “ஊ ஊ னு பின்னாடியே துரத்துர சத்தம். தலை தெறிக்க ஓடுறேன். என்ன பிக்கப் பண்ற வண்டி எனக்கு எதுத்தாப்புல தெரிஞ்சப்புறம்தான் நிம்மதி வந்துச்சு. அதை நோக்கி வேகமா ஓடுறேன். நான் ஓடி வந்ததுல துண்டு அந்த நேரமா பாத்து அவுத்து விழுந்து ஒரே அவமானமா போயிடுச்சு. உயிர் பிழைச்சது புண்ணியம்னுட்டு அன்னைக்கே பொட்டிய எடுத்துட்டு கிளம்பிட்டேன். ஆபிஸ்க்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சது ஏற்கனவே அவங்களுக்கு அதுபோல அனுபவம் இருந்துருக்குன்னு. ஆனா நான் ஜூனியர்ங்கிறதுனால என்ன ஏமாத்தி அனுப்பிச்சிருக்காங்க”.

“கேக்கவே பயங்கரமா இருக்கே சார்”.

“இதுலாம் என்ன பிரமாதம். எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் லக்ஷ்மி உபாசனம் பன்றவன். தேவையில்லாம யச்சினி உபாசனை பண்றேனுட்டு ஆரம்பிச்சு இப்போ வாழ்க்கையே தொலைச்சிட்டு நிக்குறான்”.

“அது என்ன சார். லக்ஷ்மி உபாசனை, யச்சினி உபாசனைனு சொல்றீங்க. ஒண்ணும் புரியலேயே”.

“லக்ஷ்மி உபாசனைங்கறது நல்ல தேவதைய ப்ரீத்தி பண்றது. அதாவது அதுங்களுக்கு பூஜை பண்ணி அவங்ககிட்ட நமக்கு என்ன வேணுங்கறத கேக்குறது. இதுல உபாசனைக்கான நேரம் அதிகமா இருக்கும். பலனும் லேட்டாத்தான் கிடைக்கும். ஆனா தொந்தரவு கிடையாது. ஆனா யச்சினி உபாசனைங்கறது இந்த மாதிரி இல்லை. சடங்குக்கான நேரம் கம்மியாத்தான் இருக்கும். சீக்கிரமா ப்ரீத்தி பண்ணிடலாம். ஆனா அதுங்க என்ன கேக்கும்னு தெரியாது. கேக்குரத குடுக்கலனா என்ன நடக்கும்னும் சொல்ல முடியாது. ஒரு விதமான ஷார்ட் கட். ரொம்ப டேஞ்சர். லைஃபே காலியாய்டும். அதுல ஒரு வகையான கர்ண பிசாசினி மந்திரத்த சொல்லித்தான் என் பிரெண்டு பைத்தியமாய்ட்டான்”.

“ஓ. கேக்குறதுக்கே பயமா இருக்கு சார்” என்று சொன்ன கேசவன் மண்டையில் விபரீதம் ஓடியது.

அன்று இரவே அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் இணையத்தில் கர்ண பிசாசினி மந்திரம் என்றால் என்ன என்பதை தேடினான். விவரங்களை இவன் அதிகம் தேடாமலேயே அள்ளிக்கொடுத்தது. சொல்ல வேண்டிய முறைகளை தெரிந்துகொண்டு நான்கு வரி இருந்த மந்திரத்தை ஒரு துண்டு சீட்டில் எழுதிக்கொண்டான். பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைத்து தூங்கினான். மனைவியும் மகனும் நன்றாக உறங்கி கொண்டிருந்த நடுச்சாமத்தில் எழுந்தான். மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்தான். நிலவொளி மட்டுமே இருந்தது. கைகளை கூப்பி அந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தான். பத்து பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அந்த மந்திரம் அவனுக்கு மனனம் ஆகியிருந்தது. கண்களை மூடிக்கொண்டு உச்சாடனம் செய்தான். கோபாலன் கூறியிருந்தது போல அவன் அந்த செய்கையில் முழுதாக நம்பி இறங்கியிருந்தான். ஒரு அரை மணி நேரம் சென்றிருக்கும். இவனது காதுக்கருகில் குரல் கேட்டது. 

“கேசவா”

இவனுக்கு உலுக்கிவிட்டது. பயத்தை வெளிக்காட்டாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டான். 

“கேசவா”

“என்ன?”

“என்ன எதுக்கு இங்க வரவச்ச? உனக்கு என்ன வேணும்னு சொல்லு?”

கேசவனுக்கு என்ன கேட்பதென்று தெரியவில்லை. கண்ணை திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்தான். தைரியத்தை வரவழைத்து கண்களைத் திறந்து பார்த்தான். எதிரில் எதுவும் இல்லை. இவனுக்கு பக்கவாட்டில் ஒரு உருவம் தெரிந்தது. அப்சரஸ் போல இருந்தது. கண்களை மீண்டும் மூடிக்கொண்டான்.

“கேசவா. பயப்படாத. நான் உன்கிட்ட கேக்குறத நீ கொடுத்தீன்னா உனக்கு எல்லாமே கிடைக்கும்”

“நான் என்ன பண்ணனும்?”

“நீ என்ன பண்ணணும்னு நான் சொல்றேன். நான் உனக்கு என்ன செய்வேன்னு சொல்லவா?”

கேசவன் சகஜமாக “சொல்லு” என்றான்.

“உன்னோட காதுல என்னோட குரல் எப்போதுமே கேட்டுட்டே இருக்கும். உனக்கு எதிர்ல யாரு இருந்தாலும் அவங்கள பத்தி முழு விவரத்தையும் உன்கிட்ட சொல்லுவேன். அவங்க யாரு? அவங்க எங்கேந்து வந்திருக்காங்க? என்ன பண்ணப்போறாங்க? அவங்க கிட்ட என்ன சொன்ன நீ நினைக்கிறது நடக்கும்னு எல்லாத்தையும் சொல்லுவேன். அதனால உனக்கு எங்க போனாலும் வெற்றி தான். நீ சொல்றது நடக்கும். நினைக்கிறது கிடைக்கும். பதிலுக்கு நீ என்ன பண்ணனும் தெரியுமா?”.

“நான் என்ன பணணும்னு சொல்லு?”

“உன்னோட மனைவியோட உயிர்” என்றது

கேசவன் திடுக்கிட்டு கண்ணைத்திறந்து பக்கவாட்டில் திரும்பி பார்த்தான். அங்கே பார்க்கவே சகிக்க முடியாத அளவுக்கு ஒரு கோரமான உருவம் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. 

தவிரவும் மிக மோசமான ஒரு துர்நாற்றம் அங்கே பரவியது. விக்கித்துநின்ற கேசவனக்கு நா எழவில்லை. விளையாட்டாக ஆரம்பித்தது வினையாக முடிந்துவிட்டதே என்ற பதைபதைப்பில் மொட்டைமாடியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் தலை தெறிக்க ஓடினான். உள்ளே படுக்கை அறையில் அவன் மனைவி  வாயில் ரத்தம் வழிய இறந்து கிடந்தாள். “ஓ” வென்று கதறவும், காதுக்கருகில் “இனி நான் உன் அடிமை” என்ற குரல் கேட்டது. பித்து பிடித்தவன் போல வெளியே ஓடிவந்தவன் மொட்டைமாடிக்கு சென்றான். மீண்டும் “கேசவா, நான் உன் அடிமை” என்றொரு குரல் கேட்டது. காதை பொத்திக்கொண்டே மாடியின் கைபிடிச்சுவரில் ஏறி நின்று அருகில்  கம்பியின் மேலே குதித்தான். க்ஷண நேரத்தில் உடல் பொசுங்கவும் அவன் காதில் கேட்ட குரல் அடங்கவும் சரியாக இருந்தது. 

இவ்வாறு கேசவன் இறந்தது வரை எழுதியபின் லேப்ட்டாப்பை அணைத்து வைத்தான் கார்த்திக். இளம் எழுத்தாளன். இணைய மாத இதழில் அமானுஷ்ய பகுதிக்காக வாராவாரம் கதை எழுதுபவன். மணி இரவு இரண்டைத்  தாண்டியிருந்தது. எழுதுவதில் உள்ள சுவாரஸ்யத்தில் பசி, தாகம் தெரியவில்லை என்பதை உணர்ந்தவன் பிரிட்ஜிலிருந்து தண்ணீரை எடுத்து குடித்தான். மந்திரம் என்று மட்டும் தான் எழுதினோமே, என்ன மந்திரம் என்ற பார்க்கவில்லையே என்ற கூகிளை சொடுக்கியவன் ஒரே நொடியில் பல தகவல்களை கண்டான். கர்ண பிசாசினி மந்திரம் என்று தெளிவாக  எழுதியிருந்த ஒன்றை படித்து பார்த்தான்.  அந்த ஹ்ரீம் க்லீம் போன்ற சொற்களுக்கு அர்த்தம் புரியவில்லை. மற்ற சொற்களும் பரிச்சயமாக இல்லை. மீண்டும் ஒருமுறை சொல்லிப்பார்த்தான். 

அசதியால் டேபிளில் தலைசாய்த்து கண்ணயர்ந்து உறங்க சென்ற நேரத்தில் அவன் காதுக்கருகில் “கார்த்திக்” என்றொரு குரல் கேட்டது.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.