- நான் ஆணையிட்டால்…
- நான் ஆணையிட்டால்…-2
- நான் ஆணையிட்டால் – 3
மூன்று
நாம் உடனே செய்தாக ஏதாவது வேண்டும் – என்கிற அவசரத்துடன் சரவணப்ரியாவுக்கு பொம்மியிடம் இருந்து மின்னஞ்சல்.
மார்க்ரெட் கும்பல் புத்தகங்களுக்குத் தடை செய்வது, பிடிக்காத ஆசிரியர்களை இடம் மாற்றுவது இல்லை, வேலையில் இருந்து தள்ளுவது போன்ற சில்லறை விஷயங்களில் திருப்தி அடைந்தது. இப்போது கல்வியை அடியோடு மாற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்புகளில் இறங்கி இருக்கிறது.
நிர்வாகக்குழுவின் இரண்டு புதிய திட்டங்களை ‘நாஷ்வில் ஸீன்’ நிருபர் கைப்பற்றி இருக்கிறார்.
1. மாவட்டம் முழுவதற்குமான ஆலோசகர். எவ்விதப் போட்டியும் இல்லாமல் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடம் கார்ல்டன் கல்வித்துறையில் பட்டம் வாங்கவில்லை, ஆசிரியராக அனுபவம் சேர்த்ததும் இல்லை. ஐந்து ஆண்டுகள் ஒரு அடிப்படை கிறித்துவக் கல்வி நிறுவனத்தில் பெயர் குறிப்பிடாத பதவி. அது மட்டுமல்ல அவனுக்கு தெரியக்கூடிய விஷயங்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில்…
பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள்
நூலகங்கள் வாங்கிய புத்தகங்கள்
வகுப்புத் தேர்வுகள்,
ஆசிரியர்கள் பங்கெடுத்த பயிற்சிகளின் விவரங்கள்
பணியாளர்களின் கூட்டு ஒப்பந்தங்களின் டாலர் எண்கள்
மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கைகள்
இத்தனை தனிப்பட்ட விவரங்களும் சேகரித்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பது பற்றி ஒரு வார்த்தை இல்லை. அதாவது, அவன் விருப்பம் ஆசிரியர்களுக்கு ஆணை. எங்கோ மிஷிகனில் இருக்கும் ஒருவனுக்கு இத்தனை அதிகாரமா?
2. க்ளாஸிகல் கர்ரிகுலம். இது பாடத்திட்டம் இல்லை, ஒரு மதபிரசாரம். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் மாணவர்கள் கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்துகள். அதைப் பின்பற்றும் பள்ளிக்கூடங்களின் கல்வியை மதிப்பான எந்தக் கல்லூரியும் மதிக்காது. வரலாற்றை மாற்றி எழுதியவர்கள் மற்ற பாடங்களிலும் நிச்சயம் கைவைப்பார்கள். முக்கியமாக, உயிரியலில் கடவுள் ஆதாம் வழியாக மனிதனுக்கு மற்ற உயிரினங்களில் இல்லாத ஆவியைப் புகுத்தினார் என்பதை விரைவில் எதிர்பார்க்கலாம்.
கடவுள் பெயரில் அதிகாரத்தை சுய லாபத்துக்குப் பயன்படுத்தும் இவர்களுக்கு நாம் அடிபணியக்கூடாது. டெபராவை நம்புவதற்கு இல்லை. பொதுக் கூட்டத்தில் அவள் என்னை எடுத்தெறிந்து பேசிவிட்டாள். அதனால், நீ டாமினிக்குடன் பேசிப்பார். எதாவது பலன் கிடைக்கலாம்.
டாமினிக்கிடம் எப்படி உரையாடலை ஆரம்பிக்கலாம்?
பூமத்தியரேகையை சூரியன் தாண்டிவிட்டாலும் அவன் சூடு இன்னும் உறைக்காத காலம். நிர்வாகக் குழுவின் இறுதி கூட்டத்திற்கான ஏற்பாடுகள். வரும் கல்வி ஆண்டின் வரவுசெலவுகள், பதவி உயர்வுகள், மாவட்ட ஆணையரின் எதிர்காலம் போன்ற பல முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கு ஒரு வாரம் முன்னதாக,
அடுத்த ஆண்டின் வரைவுத்திட்டத்தை குழுவின் தலைவர் மார்க்ரெட் அவளுக்கு ஆதரவான ஆறு பேரின் பார்வைக்கு மட்டும் முதலில் அனுப்பினாள். அவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டால் தீர்மானங்கள் நிறைவேறின மாதிரி தான். மின்னஞ்சலில் வந்த அத்திட்டத்தில் புதிதாகப் புகுத்திய மாற்றங்களை மஞ்சள் பிரகாசப்படுத்தியது. நூலக அறையில் டெபரா அதைப் பார்த்து முடிப்பதற்குள் மார்க்ரெட் அழைத்தாள்.
“எப்படி? எல்லாம் சரிதானே? டெபரா!”
உடன்பாட்டு பதிலை எதிர்பார்த்த கேள்வியின் தொனி.
“வரைவுத் திட்டத்தை இன்னும் விவரமாகப் படிக்கவில்லை.”
மார்க்ரெட்டின் மௌனத்தில் ஏமாற்றம் வெளிப்பட்டது.
“மாவட்ட ஆணையர் நம் வார்த்தைக்கு எதிராக எதையும் செய்யாததால் தற்போதைக்கு விட்டுவைப்போம்” என்று அவளே தொடர்ந்தாள்.
“என் தயக்கத்துக்குக் காரணம் அரசாங்கக் கல்வியில் அனுபவம் இல்லாத ஆடம் கார்ல்டனுக்கு கல்வி ஆலோசகர் வேலை. அப்படியயொரு பதவியே அவசியமா?”
“நிச்சயமாக. ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பில் என்ன பாடம் நடத்துகிறார் என்று நம்மால் கண்காணிக்க முடியாது. அதை முழுநேர வேலையாகச் செய்ய ஒருவர். மாணவர்கள் மனதில் விரும்பத்தகாத விதைகள் ஊன்றாமல் அவர் பார்த்துக்கொள்வார். தைரியமாகச் செயல்படும் ஆடம் கார்ல்டன் தான் அதற்குப் பொருத்தம்.”
மார்க்ரெட்டின் ‘விரும்பத்தகாத’ வார்த்தையில் சமுதாயப் பொறுப்பு, பொது நலம், மாறுபட்டவர்களை ஏற்கும் பரந்த நோக்கு போன்ற நியதிகள் அடக்கம் என்பதை டெபரா உணர ஆரம்பித்திருந்தாள்.
“அடுத்தது… வரலாறு மற்றும் குடிமையியலுக்கு ஒரு புதிய பாடத்திட்டம் .”
“பழையதில் கிறித்துவத்திற்கு முக்கியத்துவம் கிடையாது, யூ.எஸ்.ஸின் சாதனைகள் பற்றிய விவரங்களும் மிகக்குறைவு. அதை ஐரோப்பிய கலாசார நோக்கில் மாற்றி அமைப்பது அவசியம்.”
“அதற்காக இந்த க்ளாஸிகல் கர்ரிகுலம்.”
“கரெக்ட். நமக்கு எந்த செலவும் இல்லாமல் ட்ரூ மௌன்ட் கல்லூரி அதைத் தயாரித்து இருக்கிறது. இனி எல்லா மாவட்டப் பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்பது நம் தீர்மானம்.”
“அதை எனக்கு அனுப்ப முடியுமா?”
“எதற்கு?”
“மொழியியல் மற்றும் வரலாறு இரண்டும் கல்லூரியில் என் மேஜர். புதுப்பாடத்திட்டத்தில் புரட்சிகரமாக அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறேன்.”
“இங்கே பார்! டெபரா! குழுவின் மற்ற ஐந்து பேர் ஆசிரியர்களின் சுதந்திரத்துக்கு ஆபத்து என்று புரளி கிளப்பி இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிச்சயம் எதிர்ப்பார்கள். நாம் ஏழு பேரும் ஒற்றுமையாக இருந்தால் தான் மாற்றங்களைச் சாதிக்கலாம். விவரங்களை மூடிமறைத்து இப்போதே காரியத்தை முடிப்பது நல்லது. அடுத்த ஆண்டிற்குள் செய்தி பரவி என்ன நடக்கும் என்று தெரியாது.”
“யோசிக்கிறேன்” என்று டெபரா விட்டுக்கொடுப்பது போலச் சொன்னாள்.
“யோசிக்க இதில் எதுவும் இல்லை.”
அந்தரத்தில் நின்றுவிட்ட உரையாடல்.
மார்க்ரெட்டிடம் இருந்து புதிய பாடத்திட்டத்தின் வரிவடிவத்திற்கு டெபரா காத்திருந்த போது, சமையலறையின் சாப்பாட்டு மேஜையில் அப்பாவுக்கும் பெண்ணுக்கும் நடந்த உரையாடல்.

“ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் வேதாந்த் எவ்வளவு சிறந்த ஆசிரியர் என்று நாங்கள் முனக ஆரம்பித்துவிட்டோம்.”
“புதிய ஆசிரியர் அவ்ளவு மோசமா?”
“அவள் இன்டர்நெட்டில் பட்டம் வாங்கி இருக்க வேண்டும். அன்றைக்கான பாடத்துக்குத் தயார் செய்துகொண்டு வகுப்புக்கு வருவதில்லை. ஒரு மாதமாக திரும்பத் திரும்ப உயிரினங்களின் பிரிவுகள். அடிக்கடி அக்வினாஸ் பெயரை இழுக்கிறாள். எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை.”
“எனக்கும் அதற்கான காரணம் தெரியாது.”
உரையாடலில் இடைவெளி. ப்ரெட் டோஸ்ட்டுக்குக் காத்திருக்கலாம்.
“டாட்! நீ ஸுயி ஸெஃபிர் படத்தைப் பார்த்தாயா?”
“எது?”
(மான்டேனா மாநில சட்டசபையில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைக்கு வாதாடிய ஸுயி ஸெஃபிரை – அவளும் அந்த இனத்தைச் சேர்ந்தவள் – அவைக்குள் வராதபடி மற்ற அங்கத்தினர்கள் தள்ளிவிட்டனர். அதனால் அவள் வெளி நடைவெளியில் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்து தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தாள். அதுகூடப் பொறுக்காமல்) “நாலைந்து பெண்கள் அவளுக்கு முன்பே வந்து பெஞ்ச்சில் இடம் பிடித்துக்கொண்டதால் அவள் நின்று கொண்டே வேலை செய்யும் படத்தை.”
“நான் பார்த்தேன். அதில் அந்த வெள்ளைப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து அவளைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிறார்கள்.”
“நீ என்ன நினைக்கிறாய்?”
“இப்படிப்பட்ட அற்பமான காரியத்துக்கு ஒரு நாளை வீணடிக்கும் அந்தப் பெண்களுக்கு வேறு உருப்படியான தொழில் இல்லை என்று தெரிகிறது.”
“ம்ம். ஒரு விதத்தில் அது சரி.”
“உன் குரலில் இருந்து… நீ நினைப்பது வேறொன்று.”
“என்னுடன் படிக்கும் பவுலாவை நீ பார்த்திருக்கிறாய்.”
“ம்ம்.. உயரம் குறைவான ஹிஸ்பானியப் பெண். ஆனால் மிக அழகான முகம்.”
“அவள் தாய்க்கு கௌன்ட்டி ‘ஜிம்’மில் சுத்தம் செய்யும் வேலை.”
“அப்படியா?”
“எங்கள் வகுப்பில் இருக்கும் மூன்று பெண்களுக்கு அவளைத் தினம் கேலி செய்வதில் ஒரு சந்தோஷம். வேண்டுமென்றே குனிந்து நடப்பார்கள். ஆங்கிலத்தைக் கொச்சையாகப் பேசுவார்கள். முகத்தில் பழுப்பு சாயம் பூசிக்கொண்டு வருவார்கள். அந்த மூன்று பேரின் வீட்டில் அவர்களை அலட்சியமாக நடத்துகிறார்கள் என்பது என் ஊகம். அதனால் தங்களுக்குக் கீழே இருக்கும் ஒருத்தியின் மேல் அந்த எரிச்சலைக் காட்டுகிறார்கள்.”
“அதுபோல…”
“மான்டேனா பெண்களுக்கும் வீட்டில் எந்த சுதந்திரமும் இருக்காது. அவர்கள் கோபத்தை வெளிப்படுத்த ஸுயி ஸெஃபிர். அவர் தங்களை எதிர்க்க முடியாது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.”
“தெரஸா! நீ என்னைவிட ஒரு படி அதிகமாக யோசிக்கிறாய்.”
புதிய பாடத்திட்டத்தை மார்க்ரெட் அனுப்பவில்லை. டெபராவே வலையில் தேடி இறக்கினாள். மேலோட்டமாகப் பார் த்தபோது வலதுசாரி கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்பது தவிர அதிர்ச்சி தரும்படி எதுவும் கண்ணில்படவில்லை. மார்க்ரெட்டைக் காத்திருக்க வைக்காமல் அரை மன சம்மதம் தெரிவிக்க மின்னஞ்சலைத் திறந்தாள்.
புதிய தொடர்பில் இருந்து வந்த ஒரு கடிதம்.
மக்களிடம் ஒத்துப்போகும் குணம் குறைந்து, குற்றம் சாட்டும் மின்-கடிதங்கள் அதிகரித்து விட்டதால், அக்கடிதத்தைக் குப்பையில் தள்ள கை நீண்டது.
நீண்ட கை நின்றது.
இது யார்?
அட்டோன் வாஸ்க்விஸ்
அவள் கைவிட்ட ஆண்-தோழன்?
வலையில் ஒரு அவசரத் தேடல்.
அப்பெயரில் அவன் ஒருவன் தான். இப்போது ‘மன்ரோவியா ஹெரிடேஜ் சொஸைடி’க்கு களப்பணி செய்கிறான்.
வெளிப்படக் கூடாத ரகசியம் என்று எதுவும் அவனுக்குத் தெரியாது. அவனிடம் அவளுக்கு என்ன பயம்? கடிதத்தைத் திறந்தாள்.
– டெபரா!
எதிர்பாராத இத்தொடர்பு உனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் உன் பழைய நண்பன் அட்டோன். உன் சொந்த வாழ்க்கையில் குறுக்கிட்டுக் குழப்பம் உண்டாக்க நான் இதை எழுதவில்லை. சென்ற ஆண்டு நீ மாவட்டப் பள்ளிக்கூட நிர்வாகக் குழுத் தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். பதவிக்கான உன் மின் முகவரியை வலைத்தளத்தில் தேடி நான் இக்கடிதத்தை எழுதக் காரணம்?
சொத்து வைத்திருந்த வெள்ளை ஆண்களின் ஆதிக்கத்தை மூடிமறைத்து, ஐரோப்பியர் அல்லாத பிற இனத்தவர்களை மட்டம் தட்டி, அடிப்படைத் தேவைகளுக்காகப் போரிட்ட தொழிலாளர்களை அடக்க அரசு கையாண்ட வன்முறைகளை மறைத்து, சிந்தனையைத் தூண்டாத பாடத்திட்டம் – க்ளாஸிகல் கர்ரிகுலம். இதுவரை பள்ளிக்கூடங்களில் அதை நுழைக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. உன் நிர்வாகக் குழு அதைச் செய்தால் பிற மாவட்டங்களுக்கும் உங்களைப் பின்பற்ற தைரியம் வரும். பிறகு அதன் முற்றுகையை நிறுத்த முடியாமல் போய்விடும். தயவுசெய்து… யூ.எஸ். பள்ளிக்கூடங்களில் எல்லாருக்கும் பொதுவான பாடத்திட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உன் கையில்.
நீ நல்லபடியான தீர்மானம் செய்ய…
கலிஃபோர்னியாவின் மிஷன்ஸ் பற்றிய ஆதாரபூர்வமான வரலாறையும் க்ளாஸிகல் கர்ரிகுலத்தின் பூசிமெழுகிய கதையையும் அனுப்பி இருக்கிறேன்.
இனி நான் உன் பாதையில் குறுக்கிட மாட்டேன்.
– அட்டோன்.
அட்டோன் அனுப்பிய இரண்டு இணைப்புகள்.
கலிஃபோர்னியா மிஷன்.. மதத்தை முன்வைத்து அங்கே வாழ்ந்த இயற்கைக் குடிமக்களைக் கடுமையான உழைப்புக்குப் பயன்படுத்திய அநியாயம். ச்சூமாஷ் மற்றும் பிற இனத்தவரில் இறந்துபோன பல ஆயிரக்கணக்கானவர்களைத் தவிர மற்றவர்கள் பாரம்பரிய பண்பாட்டை இழந்து கிட்டத்தட்ட அடிமைகளாக நடத்தப்பட்டனர். மிஷன் கட்டடங்களை அமைத்து அங்கே பயிர் விளைத்தாலும் அவை சர்ச்சின் உரிமை. தப்பி யோடியவர்களுக்கு பெண்கள் இளையவர்கள் என்றாலும் கடும் கசையடி…
ஆதி அமெரிக்கர்களை விசுவாசமான கிறித்தவர்களாகவும் ஸ்பெய்ன் அரசின் பிரஜைகளாகவும் மாற்றுவது மிஷனின் குறிக்கோள். அதை நிறைவேற்ற அவர்களுக்கு கோதுமை, பார்லி, சோளம் பயிரிடவும் ஆப்பிள், பீச். பேரிக்காய் மரங்களை வளர்க்கவும் கற்றுக்கொடுத்தனர். அவர்களின் மூடநம்பிக்கைகளைப் போக்க பைபிளையும் ஐரோப்பிய பண்பாட்டையும் போதித்தனர். கலிஃபோர்னியாவில் மொத்தம் இருபத்தியோரு மிஷன்கள்..
முதலாவது சான் டியாகோவில் (1769) கடைசியாக சான்ஃப்ரான்சிஸ்கோ (1823). இவை இன்றும் வரலாற்றுச் சின்னங்களாக நிலைத்து நிற்கின்றன. அவை காட்டும் நிர்மாணக்கலையில் பல நவீன கட்டடங்கள்.
‘கோகோ’ படம் பற்றிய கருத்து வேற்றுமையில் ஆரம்பித்து, மதம் பெரிதா கலாசாரம் பெரிதா என்கிற சொற்போராக மாறி, பிரிவில் முடிந்த உரையாடலைத் திரும்பிப் பார்த்தாள். அவசரத்தில் அவர்கள் எடுத்த தீர்மானம் சரியோ தவறோ இருவருக்குமே நல்ல வாழ்வு அமைந்துவிட்டது. அவளுக்கு இனிய குடும்பம். அட்டோனுக்கு ஆத்மதிருப்தி தரும் சேவை. அவன் அறிவுரைக்கு மதிப்புக் கொடுத்து, இரண்டு மரபுவழிகளில் வந்த ஒருவனின் நோக்கில் பாடத்திட்டத்தை இன்னொரு தடவை ஊன்றிப்படித்தாள்.
ட்ரூ மௌன்ட் கல்லூரி நிர்வாகத்துக்குப் பிடித்தமான கொள்கைகளுக்கு மறுக்கமுடியாத உண்மைகள் வேஷம்போடுவது பாடத்திட்டத்தின் நோக்கம். அதற்காகப் பொறுக்கியெடுத்த வரலாற்றுத் தலைவர்கள், அவர்கள் சாதனைகள். காலப்போக்கில் சமுதாயத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், குடிமை உரிமைகளுக்கான போராட்டம் போன்ற மக்கள் இயக்கங்கள், போர்களையும் புரட்சிகளையும் தவிர்த்த ஒப்பந்தங்கள் பற்றி ஒரு வார்த்தையும் கிடையாது.
அட்டோன் சொல்வது சரி. இதைப் பள்ளிக்கூடங்களில் நுழைப்பதைத் தீவிரமாக யோசிக்க வேண்டும். அத்துடன், கார்ல்டனின் ஒப்பந்தம் பற்றி டாமினிக்கிடம் கேட்பதும் அவசியம்.
டாமினிக்கிடம் விஷயத்தை உடைக்க அவசியம் இல்லாமல் அவனே சரவணப்ரியாவை அழைத்தான்.
“இரண்டு நாட்களாக டெபராவுக்கு மனக்குழப்பம்.”
“தெளிவின் ஆரம்பக்கட்டமாக இருக்கட்டும்.”
“தாங்க்ஸ்! நிர்வாகக்குழுவின் இரண்டு புதிய திட்டங்கள்…”
“கேள்விப்பட்டேன்.”
“முதலில் கல்வி ஆலோசகருக்கான ஒப்பொந்தம். அதன் விவரங்களை டெபரா எனக்குக் காட்டினாள். இப்படிப்பட்ட ஒப்பந்தம் என் நிர்வாகத்துக்கு வந்தால் நான் அதில் கையெழுத்திட மாட்டேன்.”
“ஏன்?”
“ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், ஒன்றைச் செய்து முடிக்க இத்தனை டாலர் சன்மானம் என்று எனக்குக் கணக்காகத் தெரிய வேண்டும். ஒரு மணிக்கு நூற்றி இருபது டாலர். ம்ம்… ஆடம் கார்ல்டன் தினம் பத்து மணி வேலை செய்ததாகக் கணக்குக் காட்டலாம். மிஷிகனில் இருந்து வாராவாரம் அவன் வந்து போக, இங்கே விடுதியில் தங்க, தினப்படி சாப்பாடு எல்லாம் சேர்த்து ஆண்டுக்கு அரை மில்லியன் டாலருக்கு மேல் ஓடும். முதல் போட்டு வணிக நிறுவனம் நடத்தும் எனக்கே ஆண்டு முடிவில் இருநூறு ஆயிரம் டாலர் தேறினால் சந்தோஷம். ஒரு மூலதனமும் இல்லாமல் இவன் நடத்தும் ‘வெரிடாஸ் கன்சல்டிங்கி’ற்கு ஏன் இத்தனை சன்மானம்?”
“மாவட்டத்துக்கு ஒரு ஆலோசகர் தேவை என்றால் ஒரு சராசரி ஆசிரியர் சம்பளம், எண்பதாயிரத்தில் இங்கேயே வசிக்கும் ஒருவர். அவர் தினம் ஒவ்வொரு பள்ளிக்கூடமாகப் போய் மேற்பார்வை இடலாம்.”
“டெபராவும் அதைத்தான் சொன்னாள். டாக்டர் கெம்பீரனையும் சேர்த்து யாரும் துளிக்கூட நகரவில்லை. கார்ல்டன் தான் அப்பதவிக்கு, அவன் வருமானத்திலும் கைவைக்கக் கூடாது.”
“அவன் ஃபீலரின் கையாளாக இருப்பான்.”
“சந்தேகம் இல்லாமல். ஃபீலர் கேட்டதை இப்போது செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் அவன் பணம் கிடைக்காது.”
“அடுத்தது?”
“க்ளாஸிகல் கர்ரிகுலம். கவனமாகப் படித்த டெபராவுக்கு அதை உருவாக்கியவர்களின் திட்டம் புரிந்தது.”
“அது?”
“அனைவருக்கும் பொதுவான கல்வியை அழிப்பது.”
“அதைச் சாதிக்க சார்ட்டர் பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.”
“அதனால், இப்போது க்ளாஸிகல் கர்ரிகுலத்தைப் புகுத்துவதில் மார்க்ரெட்டும் மற்றவர்களும் தீவிரமாக இருக்கிறார்கள். என்ன செய்வது?”
டெபராவின் வாக்கு நிச்சயம் இல்லை என்றால் மார்க்ரெட் தீர்மானங்களுக்கான வாக்கெடுப்பை ஒத்திவைக்க நேரிடும். அது அவளுக்கு மட்டுமல்ல அவர்களைத் தாங்கும் ஷான் ஃபீலருக்கும் பெரிய தோல்வி. டெபராவைப் பணியவைக்க ஃபீலரிடம் இருந்து ஒரு எச்சரிக்கை கட்டாயம் வரும். அவள் ஏதோவொரு உந்துதலில் தேர்தலுக்குப் போட்டியிட்டாள். மற்ற தொழில் அரசியல்வாதிகள் போல அடுத்த தேர்தலை மனதில் வைத்து செயல்பட மாட்டாள் என்பதை அறிந்து அவளை அச்சுறுத்த பணத்துக்குப் பதிலாக வேறொரு ஆயுதம். அது?
‘ஒரு சில குறைகள் தென்பட்டாலும் மொத்தத்தில் புதிய பாடத்திட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. நீங்கள் எல்லாரும் ஆடம் கார்ல்டனுக்கு ஆலோசகர் பதவி கொடுக்க விரும்பினால் நான் குறுக்கே நிற்கப்போவது இல்லை’ என்கிற சம்மதம் டெபராவிடம் இருந்து ஒன்றிரண்டு நாட்களில் வரும் என மார்க்ரெட் எதிர்பார்த்தாள். ஒலி அல்லது வரி வடிவத்தில் தகவல் வராததால் அவள் யோசிக்கிறாள் என்பது வெளிப்படை. அது அவளுக்குப் பிடித்தமானதாக இல்லை. வரைவுத்திட்டத்துக்கான வாக்கு பாதி பாதியாகப் பிரிந்தால் மாவட்டக் கல்வியில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தீர்மானங்கள் அடுத்த ஆண்டிற்குத் தள்ளிப்போகும். அடுத்த முறை அவற்றை விவாதிப்பதற்குள் செய்தி மக்களிடையே பரவி அவற்றுக்கு எதிர்ப்பு புறப்படும்.
கோர்ட்னியை அழைத்து, “டெபரா தகராறு கொடுக்கிறாள்” என்றாள்.
“ஆச்சரியமாக இருக்கிறதே.”
“ஒரு வேளை, இவள் தெரஸாவைத் திருத்துவதற்கு பதில் அவள் இவளை மாற்றிவிட்டாளோ?”
“இருக்கலாம்.”
“இந்த இரண்டு தீர்மானங்களையும் நாம் தான் நாட்டிலேயே முதன்முதலில் நிறைவேற்றப் போகிறோம். ஃப்ளாரிடாவில் கூட அப்படிப்பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. அந்தப் பெருமையில் ஒன்று என்ன இரண்டு மூன்று அரசியல் படிகளில் நாம் ஏறிவிடலாம்.”
“கவலையை விடு! அவளை வழிக்குக் கொண்டு வரும் வழி எனக்குத் தெரியும். திரும்பிப் பார்த்து வெட்கப்படும் காரியங்களைக் கல்லூரிக் காலத்தில் செய்யாதவர் யார்?”
சுமுகமாக விஷயத்தை முடிக்க கோர்ட்னி டெபராவை அழைத்தாள்.
” டெபரா! க்ளாசிகல் கர்ரிகுலத்தில் உனக்குப் பிடிக்காத ஒன்றிரண்டு விஷயங்கள் இருப்பதாக மார்க்ரெட் சொன்னாள்.”
‘முழுவதையும் மறுபடி திருத்தி எழுதினால் நான் ஒரு வேளை சம்மதிப்பேன்’ என்கிற அதிர்ச்சியைக் கொடுக்காமல் டெபரா,
“தற்போது பல பள்ளிக்கூடங்களில் மாநிலக் கல்வித்திட்டத்துக்கு மாற்றாக ‘இன்டர்நேஷனல் பக்லாரியட்’ தேர்ந்தெடுக்கலாம். அது போல புதிய பாடத்திட்டத்தை மாணவர்களின் விருப்பத்துக்கு விடலாம் என நினைக்கிறேன்.”
“ஒத்துவராது.”
“ஏன்?”
“நீ என்னைவிட பதினைந்து வயது சின்னவள். அதனால் தெரிந்திருக்காது. அரசாங்கக் கல்விக்கூடங்கள் கிறித்துவம், தேசப்பற்று, ஒழுக்கம், (பைபிள்) கடவுளின் மேல் நம்பிக்கை, ஐரோப்பிய பண்பாடு இவற்றில் இருந்து விலகிப்போனதால் குழந்தைகளை வீட்டிலேயே கற்பிக்கும் பழக்கம் அரை நூற்றாண்டுக்கு முன் தொடங்கி வேகமாக வளர்ந்தது. அதற்கான நேரமும் பொறுமையும் இல்லாத பெற்றோர்கள் குழந்தைகளைத் தனியார் கிறித்துவப் பள்ளிக்கூடங்களில் சேர்த்தார்கள். அதற்கு சொந்தப்பணத்தைக் கைவிட்டுக் கொடுக்க வேண்டும். அதனால் அரசினர் நடத்தும் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையும் பலமும் குறைந்துவிடும் என நம்பினோம். அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.”
“உண்மை தான்…”
“ஒரே பள்ளிக்கூடத்தில் இரண்டும் இருந்தால் புதிய திட்டத்தில் நம் குழந்தைகள் மட்டும் தான். ஆசிய இனத்து மாணவர்களும் மதத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாத பெற்றோர்களின் குழந்தைகளும் ஸ்கூல் போர்ட் வகுப்புகளில் அல்லது ‘இன்டர்நேஷனல் பக்லாரியட்டில்’ நன்றாகச் செய்து உயர்மட்ட கல்லூரிகளில் இடம் பிடிப்பார்கள். க்ளாசிகல் கர்ரிகுல மாணவர்கள் பின்தங்கி மூன்றாம் தரக் கல்லூரிகளைத் தேடிப்போக வேண்டும். சரித்திரம் மட்டுமில்லை மற்ற எல்லாப் பாடங்களிலும் எல்லாருக்கும் ஒரே திட்டம் என்றால் தான் நமக்குச் சாதகம்.”
“புரிகிறது.”
“சரி. கார்ல்டன்?”
“அவன் சன்மானத்தைக்கு உச்ச வரம்பு இருக்க வேண்டும் என்பது டாமினிக்கின் அறிவுரை. அவள் செய்யப்போகும் வேலைக்கு அரை மில்லியன் டாலர் மிக மிக அதிகம். பட்ஜெட்டில் உதைக்கிறது.”
“பிறகு அழைக்கிறேன்” என்று கோர்ட்னி உரையாடலை முடித்தாலும் அவளிடம் இருந்து அழைப்பு வரவில்லை.
வந்தது பல மணி நேரத்துக்குப் பிறகு, ஷான் ஃபீலரின் உதவியாளனிடம் இருந்து ஒரு படம். அது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமானம்.
‘கேம்ப்ரிட்ஜ் விமென்’ஸ் ஹெல்த் அல்லயன்ஸ்’ கட்டடம். அதற்கு முன்னால் அவர்கள் சேவையை எதிர்க்கும் ஒரு கும்பல்.
அதில் அவள் ஒரு தடவை நுழைந்தது அவர்களுக்கு எப்படி எட்டி இருக்கும்? அட்டோனுக்கு நிச்சயம் தெரியாது. டாமினிக்கிடம் அவள் சொன்னதில்லை. அவள் அறைத்தோழிகள் வழியாக…? அரசியலில் சம்பந்தப்பட்டவர்களின் மறைக்கப்பட வேண்டிய ரகசியங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு என்றே ஒரு சிலர்.
எப்படிச் செய்தார்கள் என்பது முக்கியம் இல்லை. படத்தில் ஒளிந்திருந்த எச்சரிக்கை தான் முக்கியம். மற்ற ஆறுபேருடன் இணைந்து மொத்த வரைவுத் திட்டத்துக்கும் டெபரா வாக்கு அளிக்காவிட்டால்? அரசியல் எதிர்காலத்தை அவள் மறந்துவிடலாம்..
அதிகாரம் கையில் கிடைத்த மயக்கத்தில் அதை சுய விருப்பத்திற்குப் பயன்படுத்தியது டெபராவின் மனதை உறுத்தியது, அவளைவிட அதிக அதிகாரம் படைத்தவர்கள் அவர்களுக்குப் பிடித்தமான இரண்டு தீர்மானங்களையும் ஆதரிக்க அவளை ஆணை இடுகிறார்கள். எதிர்பார்த்தது தான் என்றாலும், நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தவர்கள் ஒன்றாக அவளை நெருக்கும் போது அவள் மனதில் ஒரு எதிர்ப்பு அலை.
அவள் அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டுமா? அவளைத் தேர்ந்தெடுத்தது டாக்டர் கெம்பீரனும் இல்லை, ஷான் ஃபீலரும் இல்லை, மாவட்டத்தின் ஆறாம் தொகுதி மக்கள். அவர்கள் வார்த்தைப்படி தான் அவள் நடக்க வேண்டும்.
கெம்பீரன் வேதாந்த்தை வேலையில் இருந்து தள்ள கட்டளை இட்டபோது, அவள் ஏன் தெரஸா மற்றும் அவனுடைய வகுப்பு மாணவர்களுடன் அதைக் கலந்து ஆலோசிக்கவில்லை?
கட்சியில், சர்ச்சில், பணபலத்தில் உயர்ந்தவர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்கு டெபரா பழகி இருந்தாள். இப்போது… கல்வியின் தரத்தைக் குறைக்கும் பாடத்திட்டத்திற்கும் கார்ல்டனின் ஆலோசகர் பதவிக்கும் அவள் எதிர்ப்புக் காட்டினால்? அந்த எண்ணமே அவளுக்கு சுதந்திர உணர்ச்சியைக் கொடுத்தது. மற்றவர்களை ஆட்டிவைப்பதற்கு மட்டுமல்ல சுயநலவாதிகளின் கைப்பாவையாக ஆடாமல் இருப்பதற்கும் அதிகார மனப்பான்மை வேண்டும்.
டாமினிக்கின் ஆதரவு இருக்கும்போது அவளை யார் என்ன செய்ய முடியும்?
“இன்று டாக்டர் கெம்பீரனின் பிரசங்கத்தைக் கேட்க நாம் சர்ச் போகப்போவது இல்லை” என்று டெபரா அறிவித்தாள்.
“ஹுர்ரே!” என்று கத்திவிட்டு, “சாரி மாம்!” என்றாள் தெரஸா.
டாமினிக்கும் அதையே செய்து, “தெரஸா! அந்நேரத்தில் அம்மா நமக்குப் பிடிக்காத வேலை ஒன்று வைத்திருப்பாள்” என்றான்.
அவள் சோக முகம் காட்டினாள்.
“ஆறாம் வட்டத்தில் வசிக்கும் பெற்றோர்கள் மற்றும் ரேவன்வுட் மேனிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர்கள். எல்லாருக்கும் ஒரு மின்னஞ்சல் – இரண்டு இணைப்புகளுடன், அவை பற்றி அவர்களின் ஆலோசனை கேட்டு – அனுப்ப வேண்டும்.”
“டாட்! அம்மா சொல்லும் காரியம் அவ்வளவு மோசம் இல்லை.”
“இருவரும் சேர்ந்து செய்தால் இரண்டு மணி” என்றான் டாமினிக்.
வேலை முடிந்ததும் மிசஸ் நேதனுக்கு ஒரு அழைப்பு.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
