பிழைப்பு

அவனுக்கு என்னவோ போலிருந்தது. பலமுறை கைவீசி விரட்டியும் போகாததால்,எப்படி விரட்டியடிப்பது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இதே வழியில்தான் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறான்.ஆனால் ஒரு முறையும் இவ்வாறு நிகழ்ந்ததில்லை. வைபவ் குடியிருப்பில் இருக்கும் தனது இல்லத்திலிருந்து தினமும் காலை ஆறரை மணிக்குத் நடக்கத் தொடங்கி, நாராயணன் கல்லூரி முக்கிலிருந்து வலது புறம் செல்லும் சாலையில் திரும்பி, எமரால்டு நகர் வரை சென்று, மீண்டும் இடது புறம் திரும்பி அன்னோஜி குடா மேம்பாலம் அருகில் ஹைதராபாத்- வாரங்கல் நெடுஞ்சாலையில் வந்து சேர்கையில் மணி ஏழேகால் ஆகியிருக்கும்.அங்கிருந்து அடுத்த பத்து நிமிடத்தில் வைபவ் குடியிருப்பு.

அன்னோஜி குடா மேம்பாலம் முடியும் இடத்தில் ஒரு சிறிய கார் டயர்களை வல்கனைசிங் செய்யும் சிறிய பணிமனை ஒன்று இருக்கிறது.அதனருகில்தான் அந்த நாயை முதன் முதலாக அவன் பார்த்தான்.பல நாட்கள் அங்கேயே படுத்திருக்கும். வெள்ளை நிற நாட்டு நாய்.புழுதி படர்ந்து நிறம் மங்கிப்போயிருக்கும்.இடது பின்னங்காலில் சிரங்கு போன்ற ஏதோ ஒன்றின் தாக்கம் இருக்கும்.அல்லது யாராவது அடித்தும் காயப்படுத்தியிருக்கலாம்.இவன் அப்பகுதியை கடக்கும் பொழுது சிலமுறை படுத்தவாறே தலையைத் தூக்கிப் பார்க்கும் அவ்வளவுதான். ஆனால் கடந்த மூன்று நாட்களாக அவன் பின்னால் பின் தொடர்ந்து வருகிறது.சந்திராஸ் தங்கும் விடுதி வரை பின் தொடர்ந்து வரும் நாய்,நேற்று வைபவ் குடியிருப்பின் முக்கு வரையும் வந்து விட்டது.பல முறை அவன் கை வீசி விரட்டிப்பார்த்தான்.கத்தி மிரட்டிப்பார்த்தான். அது சிறிது சுணங்கி நிற்கும்.சிறிது நேரம் சென்று திரும்பிப் பார்த்தால் அது மீண்டும் மிக அருகில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

அவனுக்கு நாய்கள் பூனைகள் என்றாலே ஒரு சிறிய பயம். அதிலும் நாய்கள் என்றால் அவனுக்கு வெறுப்பும் பயமும் ஒரு சேர வரும்.முதல் நாள் அது  தன்னைப் பின் தொடர்ந்து வருவதை மிகத் தாமதமாகவே அவன் உணர்ந்த பொழுது திடுக்கிட்டான். மனதில் மெலிதாக ஒரு நடுக்கம். அதனை வெளிகாட்டிக் கொள்ளாமல் குனிந்து ஒரு கல்லை எடுத்தான். அவ்வளவுதான். நாய் அப்படியே நின்று விட்டது. சிறிது தூரம் சென்றதும் திரும்பிப்பார்த்தான்.மீண்டும் நாய் பின்தொடர்வதை உணர்ந்ததும் கையிலிருந்த கல்லோடு கையை ஓங்கினான்.நாய் மீண்டும் நின்றது.வைபவ் குடியிருப்பின் முக்கு வரை இதே நிலை தொடர்ந்தது. அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் இதே நிலை தொடர்ந்தது.

இன்றைக்கு எழுந்த பொழுதே மிகக் குழப்பமான மனநிலையில்தான் அவன் இருந்தான்.இன்றைக்கு என்றில்லை.கடந்த ஒன்பது மாத காலமாக அவன் எதிர் கொண்ட நாட்கள் மிகக் கடுமையாகவே இருந்தன.கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அவன் ஒரே பெரு நிறுவனத்தின் பல கிளைகளில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனின் முகம் அனைவருக்கும் அறிமுகமானதுதான். ஆனால் கொரோனாவின் பொது அடைப்பிற்குப் பிறகு,வெகுவாகத் திட்டங்களுக்கான நிதியும் குறைந்து போனதால், அவனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தது .அதிலிருந்து தப்பியவன்,கடந்த மூன்று மாதங்களாக அவனது நிறுவனத்திற்குப் படியளக்கும் பெரு நிறுவனத்தின் அந்தக் கிளையின் உள்கட்டமைப்பு அதிகாரியிடம் மாட்டி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறான். இத்தனைக்கும் அவன் அதே அதிகாரியிடம் கடந்த ஐந்து வருடங்களாக வேலைப் பார்த்தவன்தான் .

அந்த அதிகாரிக்கு பூர்வீகம் வடதெலுங்கானாவின், மராட்டிய மாநிலத்தை ஒட்டிய, ஒரு கிராமம்.ஆனால் கடந்த சில வருடங்களாக ஹைதராபாத் வாசி.கொஞ்சம் இன்னமும் பிற்போக்குத் தனமான கிறுக்குத் தனங்கள் உண்டு.உதாரணமாக விடுமுறை என்பது அமாவாசை தினங்கள் மற்றும் பண்டிகைகள் மட்டுமே என முற்காலத்தில் இருந்தது எனவும், ஆங்கிலேயர்களின் வருகையால்தான்  வாரமொருமுறை விடுமுறை என்பது வந்தது என்பார்  . தனக்கு ஆங்கிலேய முறை வேண்டாம்.நம்முடைய பாரம்பரிய முறையான மாதமொருமுறை விடுப்பு முறையைத்தான் நான் பின்பற்றுவேன் என்பது ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலைக்காக அழைக்கையில் அவர் சொல்லும் விளக்கம். அதற்காக அமாவாசையன்றும்  விடுப்பு கொடுப்பவரில்லை .அதற்கும் நம்முடைய பொறுமையைச் சோதிக்குமளவு ஒரு நீண்ட விளக்கம் ஏதேனும் அவரிடமிருந்து வரும்.    

                யாரை எங்கே வைப்பது என்பது தனக்குத் தெரியும் என்பது அவனை வேண்டுமென்றே சீண்டுகையில் அவர் சொல்லும் விளக்கம். அதிலும் பெயர்களின் பின்னொட்டுகளை மட்டுமே கூர்ந்து நோக்கி செயல்படும் பிற்போக்குவாதி. அவரிடம் எப்படி அவனால் வேலைப் பார்க்க முடிந்தது என்பதற்கான பதில் அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளி. அவனின் முதலாளியும் அதே சமூகத்தில் பிறந்திருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்.நம்மவர்களின் சுயமரியாதையை உணர்ந்தவர்.முக்கியமாக அவருக்கு மனிதர்கள் வேண்டும். மனிதர்களின் முன்னொட்டுகளோ பின்னொட்டுகளோ அல்ல.

பதினெட்டு ஆண்டுகளாக வேலைப் பார்த்த பொழுதெல்லாம் வராத கஷ்டங்களை அந்த மூன்று மாத காலங்கள் அவனுக்குக் கொண்டுவந்து விட்டன. அதிலும் கொரோனாவின் பொது அடைப்பிற்குப்பிறகு, அப்பெருநிறுவனத்தின் உள்கட்டமைப்பு துறையின் மேலாண்மைக்குழு மாற்றியமைக்கப் பட்டவுடன்தான் அவன் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறான்.என்ன மாதிரியான தாக்குதல்கள் என்பதை பின்வரும் பட்டியல் கொண்டு அறியலாம்.

மேலாளரான அவனுக்கு தரவேண்டிய சுதந்திரங்களைத் தராமல் இருப்பது. 

எந்தவொரு மின்னஞ்சலிலும் அவனை வேண்டுமென்றே வைக்காமல் அவனுக்கு சேர வேண்டிய தகவல்கள் சேராமல் பார்த்துக்கொள்வது. 

அதேசமயம் அவனுக்குக் கீழ் வேலைப் பார்ப்பவர்களை மின்னஞ்சலில் வைத்து விட்டு,அவர்களுக்கு அனைத்துத் தகவல்களையும் கொடுத்துவிட்டு ,இவனை அழைத்து வைத்துக் கேள்விகள் கேட்டு அவமானப்படுத்துவது 

மாலை ஏழு மணிக்கு அலுவலகம் விட்டு கிளம்புகையில் அழைத்துப் புதிய வேலைகள் கொடுத்து விட்டு, அவற்றை அப்பொழுதே முடித்துவிட்டு கிளம்பு என்பது.

மேலாளரான அவனைத் தவிர்த்துவிட்டு ஆலோசனைக்கூட்டங்களை நடத்துவது.

எல்லாவற்றுக்கும் மேலாக தவறே நடக்காமல் இருந்தாலும் அல்லது மிகச்சிறிய தவறு நடந்தாலும் அவனால் தான் அனைத்துத் தவறுகளும் நடப்பதாக வாரம் ஒரு முறையேனும் அவனது நிறுவனத்திற்கு மின்னஞ்சல் செய்வது.

இத்தனைக்கும் அவர் பொறியியல் படித்தவர்.அதற்குமேல் சில சான்றிதழ் படிப்புகளையும்   படித்தவர். ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்தத் துறையில் அனுபவமும் வாய்ந்தவர் .ஆனால் குறைந்த பட்ச நியாய உணர்வுகள் கூட இல்லாமல், பட்டம் பெற்றும் பட்டறிவு பெற்றும் என்ன பயன்?! . 

அவனது நிறுவனம் பெரு நிறுவனங்களுக்கான கட்டுமானங்களை நிர்வகிக்கவும்,ஆலோசனைகளை வழங்கவும் செய்யும்.பெரு நிறுவனங்கள் ஓரிரு அலுவலர்களை மட்டும் தங்களது பக்கத்தில் அமர்த்தி,அவர்களுக்கு அடியாட்களாக செயல் பட வேண்டியவர்களை அவனது நிறுவனம் போன்றவற்றிலிருந்து எடுத்துக்கொள்ளும். அவர்களுக்கான சம்பளம் எண்ணிக்கையின் அடிப்படையிலோ அல்லது கட்டுமானத்திற்கான பரப்பின் அடிப்படையிலோ வழங்கப்படும்.அவனது நிறுவனத்திற்கு வழங்கப் பட்ட உத்தரவின் படி எண்ணிக்கையின் அடிப்படையில்.அதாவது அமைப்பியல் துறைப் பொறியிலாளர்கள் இத்தனைப் பேர் ,மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியிலாளர்கள் இத்தனைப் பேர் என. கொரோனாவிற்கு முன்பாக பதினோரு பேர்கள் அவனது நிறுவனத்தின் மூலமாக இருந்தார்கள்.அவன் தான் மேலாளர். அவன் மூலமாகவே எல்லாம் நடந்து கொண்டிருந்தது.ஆனால் பொது அடைப்பிற்குப் பின்பு அந்த எண்ணிக்கை பதினொன்றிலிருந்து மூன்றாக அப்பெருநிறுவனத்தினால் குறைக்கப்பட்டது.அதன் அந்த அலுவலரின் போக்கில் ஆகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.

எனக்கு மேலாளர் வேண்டாம்.இறங்கி வேலை செய்பவர்கள்தான் வேண்டும். அமர்ந்து கொண்டு மேலாண்மை செய்பவர்கள் வேண்டாம் என்றார். இவனது நிறுவனத்தில் ஒப்புக்கொண்டு அவர் சொல்வதை செய்யச் சொன்னார்கள்

 நான் அனைவருக்கும் ஒரே சம்பளம்தான் கொடுக்கிறேன் எனக்கு அனைவரும் சமம்தான் என்று அவனையும், அவனைவிட அனுபவத்திலும், வயதிலும், ஏன் படிப்பிலும் குறைவான, அவனின் கீழ் வேலை செய்பவர்களையும் ஒன்றாக வைத்துக்கொண்டு அவனை அவமானப்படுத்த ஆரம்பித்தார். அவனது நிறுவனம் அவனைக் கொஞ்சம் பொறுத்துப்போக சொன்னது.

அவனின் கீழ் வேலை செய்ய வேண்டியவர்களைக் கூப்பிட்டு அவனிடம் வேலை சார்ந்த பேச்சுவார்த்தைகள் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் ,அங்கே அவர் சொல்கிறபடி நடந்தால் மட்டுமே அவர்களின் வேலை நிலைக்கும் என்றும் சொல்லிப் பணிய வைத்தார்.அவர்களும் ஆரம்பத்தில் கொஞ்சம் மரியாதையாக நடந்து கொண்டவர்கள் அவன் கையில் எந்த அதிகாரமும் இல்லையென்பதறிந்ததும் இப்பொழுதெல்லாம் அவனை மதிப்பதும் இல்லை .

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அலுவலர் இவனுக்கான வேலைகளை இவனிடம் சொல்லாமல் அந்தச் சிறு பையன்கள் மூலமாக சொல்லி செய்ய வைத்ததுடன் அவர்களின் அடியில்தான் இவன் வேலை பார்பதைபோல் ஒரு பிம்பத்தை உருவாக்க பெரு முயற்சி மேற்கொண்டார்.ஆனால் ஒப்பந்த நிறுவனங்களைச் சார்ந்த அனைவருக்கும் இவனை நன்றாகத் தெரியும் என்பதாலும், இவனின் நிறுவன உரிமையாளரோடு ஏறத்தாழ பதினைந்து வருடங்கள் ஒன்றாகவே பயணித்திருக்கிறான் என்பதாலும் அவரின் முயற்சி முழுவதுமாக வெற்றிபெறவில்லை. ஒரு சில சில்லறை அரைவேக்காடுகள் அவனை எள்ளி நகையாடியதைத்தவிர.

சில நேரங்களில் இந்த வேலை வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு கிளம்பலாம் என்றபோதெல்லாம் அவனின் நிறுவன உரிமையாளர் அவனை சமாதானப்படுத்துவார்.அதே நேரத்தில் வங்கிக்கடனின் மாதாந்திர தவணைகளும் எந்த ஒரு பின்புலமுமற்ற அவனது பொருளாதார நிலையும் கண்ணில் தோன்றாமலில்லை.பொது அடைப்பிற்குப் பிறகு இன்னும் நிலைமை சீரடையாததால் வெளியில் வேறு நிறுவனங்களில் வேலைக் கிடைப்பதும் தற்சமயம் இயலாதுதான்.இவ்வாறே அவன் மேலும் ஒரு ஆறுமாதம் கடந்து விட்டான்.

தற்சமயம் மிகக் கொடூரமாக நடந்து கொள்ளவில்லையாயினும் அவர் கொஞ்சம் மரியாதையாகவே நடந்து கொள்கிறார். கடந்த ஒரு வார காலமாக அவனின் நிறுவன உரிமையாளர் அவர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்த அலுவலரிடம் பேசச் சொல்லி இவனைக் கோருகிறார். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான அவருக்கு அனைத்திலும் சில்லறையான அலுவலரிடம் கெஞ்சுவது அவரால் ஆகாது. என்ன செய்வது? சம்பளம் வாங்கும் வரை நிறுவனத்திற்கு வேலை செய்துதான் ஆக வேண்டும்.நிறுவனம் இடும் கட்டளைகளை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். கடந்த ஒருவாரமாக தினமும் சென்று அவன் அலுவலரைப் பார்க்கிறான்.ஆனால் முதல் மூன்று நாட்கள் அவர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நேற்றும் அதற்கு முந்தின நாளும் இவனது வேண்டுகோளை கேட்டவர், அதற்கு எந்த பதிலும் தராமல் வெறுமனே வேலை விசயங்களை மட்டும் பேசி அவனை அனுப்பிவைத்துவிட்டார். ஆனால் இன்றைக்கு எப்படியேனும் அவனது நிறுவன உரிமையாளர் அவனை அலைப்பேசியில் அழைப்பார். அதற்கு முன்பாக அவன் எப்படியேனும் ஒரு நல்ல பதிலை அவன் பெற்றாக வேண்டும். உதைக்கின்ற காலிலேயே விழவைக்கின்ற இந்தப் பெருநிறுவன கலாச்சாரத்திலிருந்து என்றைக்குத்தான் அவனுக்கு விடுதலையோ ?எப்படியேனும் அவரிடம் பேசி ஒப்பந்தத்தை நீட்டிக்கச் செய்ய வேண்டும் .இதில் அவனது நிறுவனத்தோடு அவனுக்கானத் தேவைகளும் அடங்கியே இருக்கின்றன .அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற எண்ணக்குழப்பத்துடன்தான்  அவன் இன்றைய காலைநேர நடைபயிற்சியைத் தொடங்கியிருந்தான்.வழக்கமான வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த பொழுது இன்றைக்கும் அந்த நாய் அவனைத் தொடர்ந்து வந்தது .இன்றைக்கு இருந்த மனநிலையில் அவன் அதனைப் பொருட்படுத்தவில்லை .கைவீசி விரட்டவில்லை.கல்லெடுத்து மிரட்ட வில்லை.அவன் பாட்டுக்கு விரைவாக நடந்தான்.நாய் இன்னும்.அவனது காலில் அதன் உடல் உரசுமளவிற்கு நெருங்கி வந்தது. அவனுக்கு கோபம் தலைக்கேறியது. அப்பொழுது நாய் சற்றே மேலெழும்பி நாக்கால் அவன் புறங்கையை நக்கியது .அவ்வளவுதான். கையை உதறியவன் குனிந்து கல்லெடுத்து பின்வாங்கத் தொடங்கிய  நாயைக்   குறிபார்த்து அடித்தான்.அது வள்ளென்று கத்தியவாறே எங்கும் ஓடாமல் அவனைச் சுற்றியே அலைக்கழிந்தது. இவன் பல கெட்ட வார்த்தைகளைச் சொல்லி,  மீண்டும் மீண்டும் கற்களால் நாயை அடித்து விரட்டுகையில், அவனுக்கான அன்றைய நாள் எவ்வாறு முடியும் என்பது அவனுக்குத் தெரிந்து விட்டிருந்தது


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “பிழைப்பு”

  1. பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ‘மிடில் லெவல் மேனேஜ்மென்ட்’ எனப்படும் இடைநிலை மேலாளர்களின் நிலைமையை மிக அருமையாக வர்ணித்து இருக்கிறார் ஆசிரியர். மேலிருப்பவர்களை எதிர்த்து பேச முடியாது, கீழ் இருப்பவர்களை அதட்டி வேலை வாங்க முடியாது. மேலும் கீழும் இருக்கும் இரண்டு பேரின் தவறுகளுக்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

    தாய் குழந்தையை அடித்தால் குழந்தை பொம்மையை அடிக்கும் என்பது போன்ற மனநிலை தான் இவர்களுக்கு வாய்க்கும். அதன் வெளிப்பாடு தான் நாயை நோக்கி வீசப்படும் கல்.

    இன்றைய அலுவலக எதார்த்த நிலையை பிரதிபலிக்கும் இது போன்ற கதைகளை இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்று இந்த ஆசிரியரை வாழ்த்துகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.