பிண்ட தானம்

” என்னங்க எந்திருங்க . நேரமாச்சு. சீக்கிரம் குளிச்சு ரெடி ஆகுங்க. கொஞ்ச நேரத்தில் கைடு வந்திடுவார் ” என என் மனைவி எழுப்பியதும் பதறி அடித்து எழுந்து கொண்டேன். அவள் சொன்னது உண்மை தான். மற்ற ஊர் கைடு போல இந்த கயா வில் உள்ள கைடு  இல்லை. ரொம்ப பங்க்சுவல் . ஆறு மணிக்கு இருப்பேன் என்று சொன்னால் ஐந்தே முக்காலுக்கே ஹோட்டல் வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பார். அவருக்கு முன்னால் ஊர் சுற்றிப்பார்க்க வந்த நாம் தாமதப்படுத்தி விடக்கூடாது என்ற உணர்வு தூக்கத்தை விரட்டிவிட்டு என்னை பாத் ரூமுக்குள் தள்ளி விட்டது. வேக வேகமாக நான் குளித்து ரெடி ஆகி ஏற்கனவே தயாராக இருந்த என் மனைவியுடன் கிளம்பி கீழ் தளத்தில் இருந்த வரவேற்பறைக்கு வந்தோம் . அங்கு நினைத்தது போலவே எங்கள் கைடு தயாராக இருந்தார். எங்கள் குரூப்பில் உள்ள வேறு சிலரும் ரெடியாக இருந்தனர். “பூஜைக்கு ஏதேனும் பொருட்களை வாங்கி செல்ல வேண்டுமா?” என ஒருவர் கேட்டார். “தேவையில்லை. பண்டிட் எல்லாம் கொண்டு வந்து விடுவார். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் பேசி அவரிடம் ஏற்கனவே கொடுத்து விட்டேன். நீங்கள் ஏதும் கொடுக்க தேவையில்லை  ” என்று கைடு பதிலளித்தார் . மற்ற எல்லோரும் வந்து சேர்ந்து நாங்கள் வேனில் ஏறி கிளம்பும்போது விடிந்து நல்ல வெளிச்சம் வந்து விட்டது. 

வேன் கயா நகரின் சாலைகளின் சென்று கொண்டிருந்த போது கண்ணில் பட்டது எல்லா இடங்களிலும் இருந்த பெரிய பெரிய புத்தர் சிலைகள், அந்த அதிகாலை வேளையிலும் பௌத்த விஹாரங்களுக்கு சென்று கொண்டிருந்த பௌத்த துறவிகள் , பெண்கள், கிழக்கு ஆசியாவை சேர்ந்த பல்வேறு முகங்கள், அந்த நகரத்தின் சிறப்பை பறை சாற்றி கொண்டிருந்தன. கடைசியாக நாங்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்து விட்டோம். நிறைய வேன்கள் கார்கள் மக்கள் நடுவே ஒரு  இடத்தில வேன் நின்றது.” இறங்கி வாருங்கள். ” என கைடு சொன்ன பின் அனைவரும் இறங்கினோம். அங்கிருந்து ஒரு மண் பாதையில் எங்களை அழைத்து சென்றான். எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள். போகும் வழியோ குறுகிக்கொண்டே வந்தது. பாதையின் ஒரு புறத்தில் அங்கங்கே குவிந்து கிடந்த குப்பைகளில் இருந்து துர் நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. அதைத்தாண்டியதும் ஒரு சின்ன படிக்கட்டு. மேலே போனதும் நிறைய மக்கள். . கொஞ்சம் பண்டிட்கள். கைடு அவர்களில் ஒருவரிடம் போய் ஏதோ பேசி விட்டு வந்தான். ” இவர் உங்களை அழைத்து செல்வார். பூஜையை முடித்து விட்டு இங்கு வந்து விடுங்கள்” என்று சொல்லி எங்களை அவனுடன் – சின்னபையன்தான். வயது இருபதுக்குள்தான் இருக்கும் -அனுப்பி வைத்தான். அவன் மீண்டும் எங்களை குறுகலான சந்துகளில் அழைத்து சென்றான். கடைசியில் காவி வர்ணம் பூசிய ஒரு கட்டடத்துக்குள் நுழைந்தோம். மூன்று புறமும் திண்ணை மாதிரி கட்டி விட்டிருந்தார்கள். அதில் ஏற்கனவே மூன்று நான்கு குரூப்புகள் பிண்ட தானம் கொடுத்து கொண்டு இருந்தார்கள். இடப் பற்றாக்குறையால் எங்களில் ஐந்து பேரை மட்டும் அமர வைத்தான். மீதிப்பேர் அடுத்த ரவுண்ட் என்றான். எங்கள் ஐந்து பேரின் முன்னால் ஒரு இலையை போட்டு அதை தண்ணீர் விட்டு கழுவிக்கொள்ள சொன்னான். ஒரு ஓரத்தில் இருந்த குழாயில் இருந்து இரண்டு செம்புகளில் தண்ணீர் பிடித்து வைத்தான். “இது பல்கு ஆற்று நீர். கங்கைக்கு இணையான புனித நீராக்கும்” . கழுவிய இலைகளில் அவன் வைத்திருந்த துணி பையில் இருந்து ஒவ்வொரு பிடி மாவு இலைகளில் வைத்தான். கொஞ்சம் எள் மற்றும் வேறு ஒன்றிரண்டு பொருட்களை போட்டு விட்டு ” எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு நன்றக பிசைந்து கொள்ளுங்கள் . நன்றாக பிசைந்தபின் முப்பத்து இரண்டு உருண்டைகள் உருட்டி கொள்ள வேண்டும். நீங்கள் ரெடி செய்யுங்கள். அதற்குள் பண்டிட் வந்து விடுவார்” என்று சொல்லி விட்டு அவன் போய் விட்டான். ” அப்படியானால் இவன் வாத்தியார் இல்லையா?” என ஒருவர் அப்பாவித்தனமாக கேட்டார். 

நாங்கள் முப்பத்து இரண்டு உருண்டைகள் உருட்டி கொஞ்ச நேரம் காத்திருந்த பின் பண்டிட் வந்தார். நல்ல நிறம். சற்று பருமனான உடல் வாகு . தன்னுடன் கொண்டு வந்திருந்த ஒரு சின்ன ஸ்டூலை எங்கள் முன்னால் போட்டு அதில் உட்கார்ந்து கொண்டார். ” மூட்டு மாற்று ஆபரேஷன் பண்ணியிருக்கேன். காலை மடக்கி கீழே உட்கார முடியாது” ” எந்த ஊர் நீங்களெல்லாம்? ” என்றார். பதிலை எதிர்பார்க்காமல் மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். சில இடங்களில் எங்களையும் அவருடன் சேர்ந்து சொல்ல சொன்னார் . ” உங்களுக்கு பிடித்தமான எதாவது ஒன்றை நினைத்து கொள்ளுங்கள். அதை நாளை முதல் விட்டுவிட வேண்டும் “என்று சொன்னவர் அது என்னவென்று நாங்கள் யோசிப்பதற்குள் அடுத்த மந்திரத்துக்கு தாவி விட்டார். பிறகு ஒரு சின்ன தட்டை நீட்டி ” இதில் இறந்து போன உங்கள் குடும்பத்தாருக்கு செய்யும் இந்த பிரார்த்தனையில் அவர்கள் ஆன்ம சாந்தி அடைய இந்த தட்டில் காணிக்கையை போடுங்கள் ” என்றார். எண்களில் ஒருவர் சட்டென்று ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து தட்டில் போட்டு விட்டார். மற்றவர்களுக்கும் வேறு வழியில்லை. எல்லோருமே ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களாக போட்டு விட்டோம். தட்டிலிருந்து கருப்பு மை எடுத்து எங்கள் ஒவ்வொருவர் நெற்றியிலும் இட்டுவிட்டு எங்களை பார்த்து கை கூப்பி ” பிண்ட தானம் சிறப்பாக முடிந்தது. இறைஅருள் உங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். போய் வாருங்கள்” என்று விடை கொடுத்தார்.வாய் பேசிக்கொண்டிருந்தாலும் அவரது கவனமெல்லாம் பணத்தை எடுத்து தன் சட்டைப்பையில் வைப்பதிலும்அடுத்து காத்திருக்கும் மனிதர்களை நோட்டமிடுவதிலும் மட்டுமே இருந்தது. எல்லாமே பதினைந்து நிமிட நேரத்தில் முடிந்து விட்டது.  

அவருடைய அசிஸ்டண்டாக முதலில்  வந்த பையன் இப்போது எங்களை அழைத்துக்கொண்டு பக்கத்திலிருந்த இன்னொரு கோயிலுக்குள் நுழைந்தான். ராமர் பாதம் கோயில் என்றார்கள். ராமர் பாதத்திற்கு எல்லோரும் மலர் தூவி வணங்கி கொண்டிருந்தார்கள். அருகில் ஒரு பண்டிட் எல்லோருக்கும் ஏதோ பிரசாதம் கொடுத்து கொண்டிருந்தார். அவர் அருகில் இருந்த தட்டில் ஐநூறு நூறு ரூபாய் நோட்டுக்கள் நிறைய கிடந்தன. அங்கிருந்த சின்ன பண்டிட் மயிலிறகு மாதிரி ஒன்றை எங்கள் ஒவ்வொருவர் தலையிலும் வைத்து ஏதோ முணு முணு என்று சொல்லி விட்டு தட்டை எடுத்து நீட்டினான். எல்லோரும் கைக்கு வந்ததை நூறோ ஐநூறோ தட்டில் போட்டு விட்டு நகர்ந்தோம். ஒரு சந்திற்குள் இருந்து நிறைய மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். ” அந்த பக்கம் தான் ஆறு இருக்கிறது. போய் பார்த்து விட்டு வாருங்கள் ” என்று சொல்லிவிட்டு அசிஸ்டன்ட் போய் விட்டான். 

கொஞ்ச தூரத்தில் பல்கு ஆறு தென்பட்டது. பெரிய ஆறுதான். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. ஆற்றின் படிக்கட்டுகளிலும் கரையினிலும் நிறைய பேர் தானம் கொடுத்து கொண்டிருந்தார்கள். காலை இள வெயில் வெப்பமில்லாமல் வீசிக்கொண்டிருந்தது. என் மனைவி ” ஏங்க பக்கத்திலே ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்காம். போய் வரலாம். வாரீங்களா? ” என்று கேட்டாள். ” இல்லை. நீ போய்விட்டு வா. நான் இங்கேயே இருக்கிறேன்” என்று சொல்லி படிக்கட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். அந்த தனிமை எனக்கு தேவைப்பட்டது. நிறைய மனிதர்கள் பிண்ட தானம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் நிறைய பேர் காத்து கொண்டிருந்தார்கள். பண்டிட்டுகள் மந்திரம் சொல்வதிலும் பணத்தை பைகளில் போட்டுக் கொள்வதிலும் முனைப்பாக இருந்தார்கள். இது எதுவுமே பதியாமல் என் மனமோ வெறுமையாக இருந்தது. 

இப்போது மட்டுமா?  கடந்த நான்கு மாதமாகவே அப்படித்தான். என்றைக்கு  என் அருமைப்பேத்தி ரீனு இந்த உலகை விட்டு போனாளோ அப்போதிலிருந்தே இப்படித்தான். ” தாத்தா தாத்தா ” என்று என்னிடமே ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு வயது செல்லம் விஷக்காச்சல் வந்து திடீரென்று ஒரு நாள் சலனமற்றுப் போனபோது நான் மனதளவில் இறந்து போனேன். எப்போதும் அவள் நினைவுதான். தனது  பிஞ்சுக் கரங்களை என் மீது போட்டு அவள் தூங்கும் நினைவுகள் லேசில் மறக்க கூடியதா?  அவள் பிறந்த பின் தான்  நான் என்னையே புதிதாக உணர்ந்தேன். அவள் இந்த உலகில் இருந்த இரண்டு வருடங்களும் எனது வாழ்க்கையின் உச்ச கட்ட சந்தோஷ நாட்கள். காரில் போனாலும் என் மடியில் தான்    உட்கார்ந்து கொண்டு என் விரலைப் பிடித்த படி  வருவாள். என்னுடன் இருக்கும் போதெல்லாம் என் விரல்களை பிடித்த படியே இருப்பாள்.அந்த ஸ்பரிசம் ஈடு இணையற்ற மகா ஆனந்தம். மிகச் சில நாட்களிலேயே அது நிரந்தரமாக மறைய போகிறது என்று தெரியாமல் போய் விட்டது. எல்லாம் விதியின் விளையாட்டு. திடீரென்று ஒரு நாள் காய்ச்சல் என்று படுத்தவள்தான். ஏதேதோ வைத்தியம் செய்தும் பலன் இல்லை. பத்தே நாட்களில் என் அருமை பேத்தி எங்களை விட்டு விட்டு போயே விட்டாள்.

 அவள் இறந்த பின்  என் வாழ்க்கையே வெறுமையாகிப் போனதாக உணர்ந்தேன். என் மனதிற்கு சாந்தி கிடைக்கவே இல்லை. அந்த சமயத்தில் தான் என் நண்பர்   ” இப்படியே இருந்தால் எப்படி? நீங்கள் தானே உங்கள் மனைவிக்கும் மகளுக்கும் ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டும். அதோடு உங்கள் கம்பெனி என்னாவது? மனதை தேற்றிக் கொண்டு நாம் இந்த உலகத்திற்கு வந்த கர்மாவை செய்து முடிக்கப் பாருங்கள் ” என்றார் . அவரே யோசனையும் சொன்னார். ” கயாவிற்குப் போய் பிண்ட தானம் கொடுத்து விட்டு வாருங்கள். புத்தருக்கு ஞானம் கிடைத்த அந்த புண்ணிய பூமியில் உங்களுக்கு மன சாந்தி கிடைக்காமலா போய்விடும்?’ என்று பேசி பேசி என் மனதை கரைத்தார். விளைவு? இன்று இங்கே பல்கு ஆற்றின் படிக்கட்டுகளில் உட்கார்ந்திருக்கிறேன்.

 பிண்ட தானம் கொடுத்த பின்னும் மனதின் சோகம் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறதே? வெறுமையாக சுற்றி பார்த்துக் கொண்டிருந்த கண்களில் தானம் கொடுத்து விட்டு வருபவர்களிடம் கையேந்திக் கொண்டிருந்த ஒரு பெண் தென் பட்டாள். அவள் அருகில் ஒரு சின்ன குழந்தை இரண்டு வயது பெண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. சாதாரணமான ஒரு கவுனை போட்டிருந்தது . தன் தாயை சுற்றியே மண்ணில் அளைந்து அளைந்து விளையாடிக்கொண்டிருந்தது. சற்றே பூசினாற்போன்ற உடம்பு. இந்த உலகத்தின் சோகம் எதுவும் உணராத பச்சை மண். அதிலிருந்து என் கண்களை எடுக்க முடியாமல் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது அந்த குழந்தையும் என்னைப் பார்த்தது. கொஞ்ச நேரம் நானும் அதுவும் பார்த்துக்கொண்டே இருந்தோம். சட்டென்று என் முகத்தில் தோன்றிய சிரிப்புடன் அந்த குழந்தையை “வா” என்று சைகையில் அழைத்தேன்.சற்று நேரம் என்னையே பார்த்த குழந்தை பக் என்று தன் பொக்கை வாய் சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு தன் தாயின் பின்னால் மறைந்து கொண்டு லேசாக என்னை எட்டிப் பார்த்தது. ஓ ! அந்த சிரிப்பு எனக்குள் ஏதோ ஒன்றை அசைத்து போட்டது. எனக்குள் ஏதோ ஒன்று உருவாகி அது அப்படியே பெரிதாகி என்னை முழுதும் வியாபித்து கொண்டது போல ஓர் உணர்வு. 

மீண்டும் அந்த குழந்தையை சைகையால் வா என்று அழைத்தேன். அது மீண்டும் என்னையே சற்று நேரம் பார்த்து இருந்து விட்டு பின் மெதுவாக என்னை நோக்கி வந்தது. என்னருகில் வந்து மீண்டும் என்னை பார்த்து பளிச் என்று சிரித்தது. என் மனம் ஒரு கணம் நின்று மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. இந்த வினாடி என் வாழ்வின் மிக முக்கியமான தருணமாக இருக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொன்னது. என்னை அறியாமலே எனது கை எனது கழுத்தில் இருந்த தங்க செயினை கழற்றியது. எனக்கு திருமணம் ஆன புதிதில் என் தாய் மாமன் எனக்கு போட்டது. இதனை வருடங்களாக அதிர்ஷ்டமான செயின் என்று எப்போதும் கழற்றாமல் அணிந்து கொண்டிருந்த செயின். கழற்றிய அந்த செயினை அந்த குழந்தைக்கு போட்டு விட்டேன். போட்டு விட்ட செயினை தொட்டு பார்த்துவிட்டு மீண்டும் அந்த குழந்தை சிரித்தது, நீட்டிக்கொண்டிருந்த எனது கையை தன் பிஞ்சு விரல்களால் பிடித்தது. ஓ அந்த ஸ்பரிசம் ! அந்த ஸ்பரிசம் விவரிக்க இயலாத அமைதியை எனக்கு கொடுத்தது. அந்த காலை நேரம், வீசிக்கொண்டிருந்த மெல்லிய காற்று ,ஆற்றங்கரை படித்துறை எல்லாமே ஒரு பரவச நிலையுடன் என் மனதில் பதிந்து போயின. எனக்கான போதி மரம் இங்கே இந்த தெய்விக குழந்தை உருவிலே. தன் தாயிடம் சென்ற குழந்தை அவளிடம் என்னை கை நீட்டி காண்பித்தது. அவள் அந்த செயினை பார்த்து விட்டு என்னை குழப்பமாக பார்த்தாள். ” நான்தான் போட்டேன். இருக்கட்டும் ” என்று சைகையில் சொன்னேன். அவள் இரு கரங்களையும் கூப்பி நன்றி சொன்னாள். நானும் கை அசைத்து விட்டு  அங்கிருந்து நகர்ந்தேன்.    

ஊருக்கு போன பின் என் நண்பர் கேட்பார் . “என்ன பிண்ட தானம் கொடுத்தீரா? அமைதி கிடைத்ததா? ” என்று. என் உறவினர் கேட்பார் ” ஏதாவது பிடித்த ஒன்றை விட்டு விட  சொல்லி இருப்பார்களே . எதை விட்டீர்கள் ?” நிச்சயம் இந்த கேள்விகளை அவர்கள் கேட்பார்கள். “எதை விட்டேன் என்று தெரியவில்லை. எதை பெற்றேன் என்பது மட்டும் எனக்கு தெரியும்” என்பது மட்டும் தான் எனது பதிலாக இருக்கும். 

உணர்வுகள் உடைந்து கரைந்த பின் ஏற்படும் பரவசத்தை அவர்களுக்கு நான் எப்படி புரிய வைக்க முடியும்? என்னிடம் வார்த்தைகள் இல்லை.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “பிண்ட தானம்”

  1. மனதைத்தொடும் கதை. பக்தி என்ற பெயரால் செய்யப்படும் தானங்களை விட, உணர்ச்சி பரவசத்தில் செய்யப்படும் கொடையே மன அமைதி தருகிறது. கயாவில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளைச் சிறப்பாக எழுத்தில் வடித்திருக்கிறார் ஆசிரியர். வாழ்த்துகள்!

  2. நெடிய ஆன்மீக தேடலில் கிடைக்காத மனச்சஞ்சலத்திற்கான தீர்வு, ஒரு நொடிப்பொழுதில் வெளிப்பட்ட மனித நேயத்தில் கிட்டியதே! நெகிழ்ச்சியான சிறுகதை. வாழ்த்துகள்!

Leave a Reply to Chellappa YagyaswamyCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.