தொவள மறி

மதியக் கொடை முடிந்து சாமக் கொடைக்குத் தயாராக எல்லா வேலைகளும் கோவிலில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. எச்சில் இலைகளாலும் தண்ணீர் கப்புகளாலும் சூழப்பட்டிருந்தது கோவிலின் சுற்றுப்புறம். கோவிலின் உள்ளே மதியம் நடந்த பூப்படையில் தீபாராதனையால் வேப்பிலைகளாலும் அரளிப்பூக்களாலும் சூழப்பட்டிருந்தது. உள்ளும் புறமும் சுத்தப்படுத்தும் பணி நடந்துகொண்டு இருந்தது .

         கோவில் கருவறையில் பூசாரி சண்முகம் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார் அவருக்கு சில சிறுவர்கள் உதவி செய்தார்கள். கோவிலைச் சுற்றிப் பலவித வாசனைகள் சேர்ந்து வந்து கொண்டிருந்தது. பலாப்பழம், ரோஜாப்பூ, சந்ததனனம், சாம்பிராணி, ஊதுபத்தி என வாசம் கமழ்ந்து கொண்டிருந்தது. சிறுவர்கள் சிலர் கோவிலின் உள்ளேயும் வெளியேயும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

        ஆனால் முருகனால் மட்டும் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அவன் எண்ணம் முழுவதும் இரவு இசக்கியம்மனுக்காக பலி கொடுக்கப் போகும் அந்த தொவள மறியின் மீதே இருந்தது.கோவில் வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்தது அந்த செம்மறி ஆட்டுக்குட்டியின் சத்தம் அவன் இதயத்தை உலுக்கிவிட்டது. பிறந்து ஐந்து நாட்கள் கூட தாண்டாத அந்த பிஞ்சுக் குட்டியின் பார்வை அவனிடம் ஏதோ வேண்டுவதாகவே அவனுக்குத் தோன்றியது. அதன் “ம்ம்மே” என்னும் சத்தம் என்னை என் அம்மாவிடம் கொண்டு விட்டுவிடு என்று கேட்பது போல் இருந்தது . 

அந்த ஆட்டுக்குட்டியின் முகம் மட்டும் அத்தனை பொலிவாக இருந்தது. அதன் பார்வையில் ஒரு மிரட்சி. இத்தனை  நாள் இவ்வளவு மனிதர்களை அது பார்த்ததில்லை  என்பது  அதன் உடல் நடுக்கத்தில் தெரிந்தது. தன்னை கட்டிய கோச்சங் கயிற்றை இழுத்துக்கொண்டே அதன் அம்மாவை கூப்பிட்டுக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு சிறு ஆறுதல் அதன் அருகில் கட்டப்பட்டிருந்த முதிய செம்மறி கிடாய் மட்டுமே. தன் இனம் ஒன்று அருகில் இருப்பதைப் பார்த்துக்  கொண்டே சத்தமிட்டது அந்த ஆட்டுக்குட்டி .

         முருகன் அதன் அருகில் சென்று அதன் தலையைத் தடவினான். அது பயந்துகொண்டே ஓட முயற்சித்தது ஆனால் அதன் கழுத்தில் கட்டியுள்ள கயிறு அதை ஓடவிடாமல் அதன் கழுத்தை இறுக்கியது. முருகன் குட்டியை சற்று தன் பக்கம் இழுத்து இறுக்கத்தைத் தளர்த்தினான். அதன் நெஞ்சில் கைவைத்துத் தடவினான். அதன் மெல்லிய உடலில் பதற்றத்தை  உணர்ந்தான். அது அங்கும் இங்கும் பார்த்தது . தனது சிறு வாலை பதட்டத்தோடு ஆட்டியது.

          முருகனால் அதற்கு மேல் அதனருகில் இருக்கமுடியவில்லை, எழுந்து அங்கிருந்து நகர்ந்துவிட்டான். அதன் “ம்ம்மே ம்ம்மே ” சத்தம் தன் காதை விட்டு அகலும் தூரம் வரை நடந்து சென்றான். கோவிலின் மைக் செட்டில் ஓடிய “ராமன் எத்தனை ராமனடி” பாடல் ஆட்டுக்குட்டியின் சத்தத்தை கேட்க விடாமல் செய்யும் தூரம் வரை சென்றான்.

          அவனின் இயலாமை அவனை வாட்டியது. எப்படியாவது அந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிவிட வேண்டும் என்று அவனது கற்பனையில் மூழ்கினான்.ஆனால் அது சாத்தியமில்லை என்பதும் அவன் அறிந்து வைத்திருந்தான்.அவனது இயலாமையே அவனுக்குக் கோபத்தையும் தந்தது. ஒன்றும் அறியாத இந்த ஆட்டுக்குட்டியின் இரத்தம் தான் அம்மனின் விருப்பமான உணவா. பெயரில் மட்டும் அம்மா என்று வைத்துக் கொண்டு இப்படி ஒரு கொடூரத்தை நிகழ்த்தினால் எப்படி? இதெல்லாம் சாமியா இல்லை பேயா என்று தன்னுள்ளேயே  சிந்தித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

           யாரிடமும் இதைப்பற்றி பேசும் துணிவு அவனுக்கில்லை. கண்ணில் நீர் திரள படுத்துக்கொண்டான் . அவனது வாட்டத்தைக் கண்டு அவனது அம்மா வேலம்மா அவனிடம் வந்தாள்,

            ” எல முருகா என்னாச்சு? யான் ஒரு மாறியா இருக்க ?

            “ஒண்ணுமில்லம்மா”

            ” ஏய் சொல்லு யார்ட்டயாவது சண்ட போட்டியா? எவனாவது ஏசிட்டானா? சொல்லுல”

            ” ஒன்னும் இல்லம்மா நீ கொஞ்சம் போறியா “

           ” பேயி கீயி புடிச்சிருக்கா. எந்திரில. எல்லாரும் பொங்க வைக்க போயிட்டு இருக்காவ, மத்த பயலுவல்லாம்  அவெ அவெ அம்மைக்கு எண்ணலாம் வேல செஞ்சி கொடுக்கானுவோ. நீயும் இருக்கிய எந்திரில.”

         அதற்கு  மேல் அவனால் நெஞ்சினுள் அடக்கி வைக்க முடியாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டான்.

     “ம்மா அந்த செம்மறி குட்டிய பாத்தேன் அதான்மா எனக்கு ஒரு மாறி ஆயிட்டு. பாவம்மா அது”

      ” எது, தொவள குட்டியவா சொல்லுத “

      ” ஆமம்மா ” என்று தேமிப்பினான்.

     ” உனக்கு புடிக்கல்லன்னா அங்க போவாத வெளிய நின்னுக்கோ”

  ” உனக்கு பாவமாவே இல்லயாம்மா. அது பால் குடியவே மறக்காத பச்ச குட்டிமா. அதபோயி கத்தியல குத்தி கொல்லணுமா”

  “பாவமாதாம்ல இருக்கும். இருந்தாலும் சாமி கேக்குதுல்லா. மனச கல்லாக்கிட்டு குடுக்கவேண்டியதான்”

      “சாமி மயிறு கேட்டுச்சு. இந்த கிழட்டுப் பய எசக்கி தாத்தா தான் கேட்டாரு. சாமியாம் சாமி. இரக்கம் இல்லாத சாமி .”

  “எலேய் வாயக்கோற அவ யசக்கியாக்கும், பொல்லாதவா. அவ சாப்பாடப்பத்தி தப்பா பேசாத “

    “நான் போயி அத அவுத்து உடப்போறன்” உணர்ச்சி பொங்க பேசினான். அவன் பேசுவது எதுவும் நடக்காது என்று அவனுக்குத் தெரியும் . இருந்தும் யாரிடமும் காட்டமுடியாத கொந்தளிப்பை தன் அம்மாவிடம் வாய்வார்த்தையால் காட்டினான்.

    “செருப்பால அடி .செரிக்கியுள்ள. போ போயி  அவுத்துவுட்டு ஊருக்காரனுவட்ட அடி  வாங்கு. இவ்வளவு பேருக்கு வராத எரக்கம் மயிறு இவருக்கு மட்டும் வந்துருச்சு . வந்தா வா இல்லன்னா இங்கேயே கெட . அவுத்து வுடுவானாம் அவுத்து, பெரிய புண்டையரு  இவரு” என்று அவனை திட்டிக்கொண்டே வெண்கலப்பானையை எடுத்துக்கொண்டு பொங்கல் வைக்க கிளம்பினாள் வேலம்மா.

        கொஞ்ச நேரம் அழுதுகொண்டே இருந்த முருகன் சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு முகம் கழுவி கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கோவிலுக்கு வந்தான், குட்டியின் அருகில் செல்ல வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே வந்தான்.

      கோவிலின் வாசலில் பெண்கள் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள். மின்னலங்காரத்தில் பொங்கல் வைக்கும் புகை சூழ அந்த இடமே கோலாகலம் நிரம்பி வழிந்தது. சிரிப்பு சத்தங்களும், பேச்சுக்களும், பொங்கல் பொங்கும் பொது  பெண்கள் விடும் குலவை சத்தமும் அந்த இடத்தை நிறைத்திருந்தது.  கோவிலின்  உள்ளே மலரலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. அம்மனுக்கு அலங்காரம் செய்ய அலங்காரக்காரர்கள் கருவறையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு புறம் வில்லுப்பாட்டுக்காரர்கள் அவர்களின் வாத்தியங்களை தயார் செய்து கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம்  இரவு படையல் போடுவதற்கு சமையல் நடந்து கொண்டிருந்தது. மின் விளக்குகளால் கோவில் வெளிச்சம் பெற்று அந்த இடமே அமர்க்களமாக இருந்தது.

       அவனும் சென்று மலரலங்காரத்தில் உதவுவதற்கு சென்றான். ஆனால் மனம் முழுவதும் குட்டியைப்பற்றியே எண்ணிடஅதை நோக்கித் திரும்பினான். குட்டி கால்களை மடக்கி படுத்திருந்தது. அதன் முகத்தில் ஒரு பெரிய சோர்வை கவனித்தான் முருகன். முதிய  கிடாய் வேப்பங்குழைகளை கடித்துக்கொண்டிருந்தது. குட்டி ஆடு இன்னும் குழை கடிக்கத் தொடங்கவில்லை என்று தெரியாத முருகன் அதனிடம் வேப்பங்குழையை நீட்டினான். அது முகர்ந்து பார்த்துவிட்டு தலையைத் திருப்பிக் கொண்டது. அது கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு எப்படியும் ஆறு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கும். அதற்குப் பசித்துக் கொண்டிருக்கும் என்று  உணர்ந்த முருகனுக்கு மேலும் வருத்தம் நெஞ்சை அடைத்தது.அது தன் பசியை எப்படி வெளிப் படுத்துவது என்று தெரியாமல் முதிய கிடாவைப் பார்த்து அவ்வப்போது சத்தமிட்டது. அதன் மொழி புரிந்த கிடா என்னால் ஒன்றும் இயலாது என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு தின்பதைத் தொடர்தந்து. 

முருகன் அதன் அருகில் சென்று மீண்டும் தலையில் கைவைத்தான். இம்முறை அது பயந்து ஓடவில்லை . அவன் விரலை தன் தாயின் மடியில் பால் குடிப்பது போல் நினைத்து வாயில் வைத்து மெல்லத் துவங்கியது.அதன் வளராத பற்களையும் மென்மையான நாவையும் முருகன் உணர்ந்தான். இருமுறை முட்டியும் பால் வராததால் ஏமாற்றம் அடைத்தது குட்டி. அதன் பசியை இப்போது முழுமையாக அறிந்துகொண்ட முருகனுக்கு மீண்டும் கண்ணீர் கட்டிக்கொண்டது . என்ன செய்வது என்று தெரியாமல் நேராக இசக்கி அம்மன் கருவறை முன் போய் நின்று கை கூப்பி  வேண்டத் தொடங்கினான்.

       ” நா உன்ன தப்பா  நினைச்சிட்டேன், தெரியாம பேசிட்டேன். நீ பெரிய சாமிதான், தயவு செஞ்சி இந்த ஆட்டுக்குட்டிய மட்டும் வுட்ரு. உனக்குத்தான் நெறய சாப்பாடு இருக்கே.நா கூட உனக்கு விரதம் இருக்கேன். தயவு செஞ்சி எதாவது செய் அது பாவம். அதோட அம்மாட்ட சேர்த்துடு” என்று வேண்டினான்.

      அங்கு நிற்க மனமில்லாமல் வெளியே வந்துவிட்டான். அவனது நண்பர்கள் குழுவில் சேர்த்துக்கொண்டு தன்னை அமைதி படுத்த முயன்றான். ஆனால்  அவர்களிடம் இதைப்பற்றி பேச தைரியம் இல்லை. அவர்கள் நக்கல் நையாண்டி பேசி சிரிக்க இவன் மட்டும் உம்மென்று இருந்தான். அதைப் பார்த்த விஷ்னு 

       ” ஏன் முருகா ஒரு மாறி இருக்க?” என்றான்.

     ” இல்ல அந்த ஆட்டுக்குட்டிய பாத்தா பாவமா இருக்கு அதான்” என்றான் முருகன்.

       அவர்களிடம் அவன் எதிர்பார்த்த கருணை வரவில்லை அதற்கு  பதிலாக அதை பலி கொடுப்பதில் கிடைக்கும் நன்மை பேசு பொருளாக ஆனது. அவர்களின் பேச்சின் சாரம் இதுதான்.

     இரவு அலங்கார பூசைக்குப் பிறகு படையல் போடுவார்கள். அது முடிந்ததும் சாமிகளுக்கு ஆடு வெட்டும் சடங்கு நடக்கும். அப்போது இசக்கி அம்மனுக்கு தொவள மறி பலி கொடுக்கப்படும். அதாவது மற்ற தெய்வங்களுக்கு பலி முடிந்த பின் இசக்கி அம்மன் முன் தொவளை கொண்டு வரப்படும், அதன் தலையில் பூந்தண்ணீர் ஊற்றி அது உனை கொடுத்ததும்(தலையை ஆட்டியதும்)  அதற்குப்  போட்டு வைத்து கழுத்தில் பூ சுற்றுவார் பூசாரி.  ஒரு ஓலைப் பாயை விரிப்பார்கள். அதன் மேல் தொவாளையை மல்லாக்காக படுக்க வைத்து இருவர் எதிர் எதிராக  அதன் கால்களை விரித்து நெஞ்சு மேல் நோக்கி  இருக்குமாறு பிடித்துக் கொள்வர். ஆடு வெட்டுபவர் தன் கத்தியை கொண்டு குட்டியின் நெஞ்சில் குத்திக்  கீறுவார் குதித்து வரும் குருதியை அம்மனுக்கு சாமியாடும் இசக்கி தாத்தா அதன் மேல் பாய்ந்து வெறி கொண்டு உறிஞ்சி குடிப்பார். அதன் ஈரலையும் சிலசமயம் கடித்து வெளிய எடுத்துவிடுவார். இது நடக்கும் போது கோவிலே மயான அமைதியாக இருக்கும். குட்டி சத்தம் போடாமல் இருப்பதற்காக கீறும் போதே ஒருவர் அதன் வாயை அழுத்தி பிடித்துக் கொள்வார். தாத்தா இரத்தம் குடிக்கும் போது அவர் மேல் ஒரு துணியைப் போட்டு மறைத்து விடுவார்கள். குடித்து முடித்து அவர் எழுந்ததும் மேளம் முழங்க குட்டியை தன் தொடைகளுக்கு கீழே வைத்தபடி உட்கார்ந்து இருந்தே ஆக்ரோஷமாக சாமியாடுவார் தாத்தா. அப்போது  குழந்தை வரம் வேண்டி பெண்கள் அவர் முன் சம்மணம் இட்டு உட்காருவார்கள், அவர் அவர்களுள் ஒருவருக்கு மாப்பிள்ளை மஞ்சபிள்ளை(அரிசி மாவு மற்றும் மஞ்சளில் செய்த குழந்தை பொம்மைகள்) வைத்த வாழையிலையைக்  கொடுப்பார். அதைப் பெற்றவர்களுக்கு குழந்தை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

                 இதுதான் வருடா வருடம் நடக்கும் முறை என்று தெரிந்தும் முருகனுக்கு இம்முறை அது மிகக் கொடூரமாகத் தோன்றியது.

       இந்த பேச்சு  அவனுக்கு தலைசுற்ற வைத்து விட்டது. அங்கிருந்து நகன்றுவிட்டான் முருகன் . கோவிலின் பின்னே உட்கார்ந்து தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் அழுதான். தன்னால்  ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் அவனை வாய் விட்டுக் கதறி அழ வைத்தது. மைக் செட் சத்தம் அவனது அழுகை சத்தத்தை வெளியே கேட்க விடவில்லை. ஏன் அழுகிறோம் என்று அறியாமல் அழுவதுபோல் சில சமயம் தோன்றியது. வெகுநேரத்திற்கு பின் அழுகை வற்றி  அவன் மனம் ஏதோ ஒரு அமைதியை  அடைந்திருந்தது. காற்றாக மாறிய மனதுடன் குட்டியின் அருகில் சென்று அமர்ந்துகொண்டான்.

        எவ்வளவு நேரம் அழுதான் என்று அவனுக்குத் தெரியவில்லை. நேரம் இரவு பன்னிரெண்டைத் தாண்ட அலங்கார பூசை நடந்தது. அனைவரும் கோவிலில் சாமியாட்டம் பார்க்க குவிந்தனர். மேளம் டம டம டம என்று முழங்க நாதஸ்வரம் ஆங்கார ஒலியெழுப்ப பக்தி வெள்ளம் பெருகியது. குலவை ஒலி காதை பிய்த்தது. கூட்டத்தின் மேல் சாம்பிராணி புகை  எழும்பி வந்தது. இசக்கி தாத்தாவின் “ஆஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்ற சத்தம் அவர் சாமி ஆட தொடங்கிவிட்டார் என்பதை உணர்த்தியது. இது முடியவே கோவிலே அமைதியானது.

    படையல் போடும் நிகழ்வு ஆரம்பமானது. யாரும் பேசாது அமைதியானார்கள். இத்தனை அமைதி இவ்வளவு நேரம் எங்கு இருந்தது என்று கேட்க்கும் அளவு அமைதி.அவ்வப்போது பாத்திரங்களில் கரண்டி படும் சத்தம் மட்டும் கேட்டது.முருகன் மனம் லேசாக பரபரப்பானது. படையல் முடிந்து முதிய கிடாவை அவிழ்த்து சென்றார்கள். 

   குட்டி தன நண்பன் செல்வதைப் பார்த்து கதறத் தொடங்கியது. ஒரு பாவப்பட்ட பிறவியின் ஓலம். தனிமையின் ஓலம். அபயத்தின் ஓலம். யாருக்கோ ஒரு அழைப்பு. ஏமாற்றத்தின் குரல் அது. பசியின் குரல் அது. இன்னும் எத்தனையோ ஆண்டுகள் தொடரப்போகும் கொடூரத்தின் பறைசாற்றல் அது. 

             சடக் என்ற சத்தம் வந்தது. முதிய ஆடு வெட்டப்பட்டதாக உணர்ந்தான் முருகன். கொடுத்துவைத்த ஆடு ஒரு வீட்டில் உயிரைக் கொடுத்துவிட்டது ஆனால் குட்டியின்  நிலைமை என்று நினைத்துக் கலங்கினான் அவன். அது முடிய அனைவரது கவனமும் குட்டியின் மீது திரும்பியது. ஒருவர் வந்து குட்டியை அவிழ்த்து ஒற்றை கையில் தூக்கிச் சென்றார். அது செல்லும் போது முருகன் மனதால் வெறுமையானான். போய் வா நண்பனே உன் மரணம் சில நிமிட போராட்டங்களோடு முடியப்போகிறது. ஆனால் எங்கள் நிலைமை மிகவும் கவலைக்கிடம் என்று குட்டிக்கு மனத்தால் விடைகொடுத்தான்.

       குட்டி செல்லும் போதே இதுவரை அதைப் பார்த்து சென்றவர்கள் கூட பரிதாபப்படுவது போல் “ச்சு ச்சு ” “பாவம் பாங்குட்டில்ல” “அய்யோ பாவம்” என்று தங்கள் இரக்கத்தை காண்பித்தார்கள். ஆடு வெட்டுபவர் தன் நீண்ட அரிவாளை வைத்து விட்டு சிறு கத்தியை எடுத்தார். “இதுதான் என் நண்பனின் நெஞ்சை கீறப்போகும் கத்தியா” என்று வெம்பினான் முருகன். கூட்டத்தின் அமைதியை கிழித்து குட்டியின் சத்தம் மட்டும் வந்தது. அது தன்னை அழைப்பது போல் உணர்த்த முருகன் நிற்காமல் வீட்டுக்கு ஓடி விட்டான். மைக் செட்டில் மணி சத்தமும் மேளம் முழங்குவதும் கேட்டு முருகன் புரிந்து கொண்டான். கண்களை மூடிக் கொண்டான். எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிபோனான்.

           கண்விழித்து நேரம் பார்த்தால் காலை ஆறு மணி, வேகமாக கோவிலுக்குச் சென்றான். ஆட்கள் இல்லாத கோவிலில் வெட்டப் பட்ட முதிய ஆட்டின் தலை ஒரு புறம் அருகில் உடலும் கிடந்தது. குப்பை கோலமாக கிடந்த கோவிலை சுற்றி சுற்றி பார்த்தான். ஒரு ஓரத்தில் ஓலைப்பாயில் கால்களைப் பரப்பி பக்கத்துவாட்டில் தலையை வளைத்து விழித்த கண்களோடு கிடந்தது குட்டி. கண்களை சுற்றி ஈ மொய்க்க நெஞ்சில் விழுந்த கீறலோடு செத்துக்கிடந்தது. அதைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி அலங்காரமாக நின்ற இசக்கி அம்மனை பார்த்தான். திரும்பி கோவிலை விட்டு வெளியே செல்கேயி ” அண்ணே பிஞ்சுக்  கறிண்ணே ரொம்ப கசக்கும் ஐநூறுவா போதும்” என்ற உரையாடலைக் கேட்டபடியே சென்றான் அவன்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “தொவள மறி”

  1. இறைவனின் பெயரால் செய்யப்படும் பலிகள் எவ்வளவு தூரம் நெஞ்சைப் பிழிகிறது என்பதை முருகனைப் போலவே நாமும் உணர்ந்து பதைக்கிறோம். பலியிடும் பழக்கம் எல்லா மதங்களிலும் இருப்பது தான் விந்தை. மாமிச உணவை ரசிப்பவர்கள் முயற்சித்தால் மட்டுமே மாற்றம் வரலாம்.

    சிறப்பான இயற்கையான கதை ஓட்டம். ஆசிரியருக்கு வாழ்த்துகள்!

Leave a Reply to Prabhu RamamoorthyCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.