சாய்ந்தாடி

சாந்தோம், 15th March 1815 

க்ளாரா  தூங்கிக் கொண்டிருந்தாள். இப்பொழுதெல்லாம் பின்னிரவில் தான் தூங்கச் செல்கிறாள். ஆந்தை போல வலியும் இரவில் விழித்து அவளது இடுப்பை கூரிய நகங்களால் கிழிக்கிறது. டாக்டர் பேட்ரிக் கொடுக்கும் மருந்து சற்று தாமதமாகத் தான் அதன் வேலையைத் தொடங்குகிறது. பல நேரம் மறு நாள் முற்பகல் வரை கூட அவள் உறக்கம் நீடிக்கிறது. அது மேலும் நீளாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று  லண்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஜார்ஜ் III கடிகாரம். அவள்  அறையின் மூலையில்  நின்று கொண்டு தவறாமல் ஒவ்வொரு மணி நேரத்தையும் தன் வெண்கலச் சிணுங்கல்களால் உணர்த்தி அவள் உறக்கத்தைச் சுரண்டும். இரண்டாவது இப்பொழுது கட்டிலில் அவள் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த வில்பர்.

‘அம்மா’. பஞ்சு பொதிந்த அவளின் பிரக்ஞயை குடைந்தது வில்பரின் குரல். 

க்ளாராவின் மெலிந்த கைகள் போர்வைக்கு வெளியே துவண்டு கிடந்தன. அவள் உள்ளங்கையின் பின்புறத்தில் நீல நிற நரம்புகள் நெகிழ்ந்து, சுருங்கியிருந்த தோலில் இருந்து புடைத்திருந்தன. வில்பரின் கை கட்டை விரல் அவற்றை நீவும் பொழுது அமிழ்ந்து, மறைந்து மீண்டும் துடித்தெழுந்தன. வறண்ட தோல் இழுபடும் பொழுது சுருக்கங்களில் மறைந்திருந்த சிவப்பு நிற மச்சங்கள் பாறை இடுக்கில் இருந்து வெளிவரும் சிறு மீன்கள் போல மேலே வந்து மீண்டும் ஒளிந்து கொண்டன. அவளுடைய உள்ளங்கையை தன் இரு கைகளால் ஏந்திக் கொண்டான் வில்பர். க்ளாராவின் உள்ளங்கை வேர்வை நசநசப்பும், மிதமான வெம்மையும் அளித்த பாதுகாப்பு உணர்வைப் பல  வருடங்கள் கழிந்தும் அவன் மறக்கவில்லை. 

ஆறு வயதில் குளிரும், கதகதப்பான ஆடையும், சூடான இறைச்சியும், உருளைக்கிழங்கும், பெரிய அறைகளில் கண்ணாடிக் குடுவைகளின் வழியே கசியும் மெழுகுவத்திகளின் தங்க நிற வெளிச்சத்திற்கும், உறையிட்ட வெள்ளை கரங்களுக்கும் பழகிப் போயிருந்தவனுக்கு  வந்து சேர்ந்த புது உலகத்தின் எல்லா காட்சிகளும் அச்சுறுத்தின. அப்பொழுதெல்லாம் க்ளாராவின் உள்ளங்கை தான் அவன் வாசம் செய்த இரண்டாவது கருவறை.  

இங்கிலாந்திலிருந்து கப்பலில் பயணப்பட்ட போது பிசாசுகள் போல சத்தமிட்ட  சூறாவளியில்; கப்பலின் மேல்தட்டை ஆக்ரோஷமாக அறைந்த பேரலைகளின் இரைச்சலில்; கீழ் தளத்தில் அவன் படுத்திருக்கும் பலகையிலிருந்து அவனை உருட்டித் தள்ள முயற்சிக்கும் கப்பலின் ஊஞ்சல் போன்ற ஆட்டத்தில் க்ளாராவின் கைகளே நங்கூரம் போல அவனை நிலைக் கொள்ளச் செய்தன. ஐந்து மாதக் கடல் பயணத்திற்குப் பின் சூனியக்காரிகள் அமர்ந்து கொண்டு வானத்தில் பறக்கும் துடைப்பத்தை நிலத்தில் சொருகியது போல நீண்ட மரங்களும், அதன் தலையில் சிறு குழந்தைகளின் தலைகள் போல தொங்கிய காய்களும் நிறைந்திருந்த வெண்மணல் நிலப்பரப்பை கண்ட போதும் கூட அவள் கைகளே இவனது அடைக்கலம் ஆகியது. இடுப்பில் சிறு வெள்ளாடை மட்டும் கட்டி, வெண் பற்கள் வெளியில் தெரிய, வேர்வை பளபளக்கும் ஒரு கருப்பு மனிதன் இவனைத் தூக்கி, ஒரு சிறிய படகில் அமரவைத்த போது கூட வில்பரின் கரம் க்ளாராவின் கரத்தைத் தான் தேடியது. நனைந்த மணலில் நடந்தபடியே, சுட்டெரிக்கும் வெயிலில் கண் கூசும் வெள்ளைச் சுவர்களும், பல வாயில் வளைவுகளும் கொண்ட கட்டிடங்களைக் காண்பித்து ‘மெட்ராஸ்’ என்று புரியாத ஒரு வார்த்தையை க்ளாரா  சொன்ன பொழுது அவள் விரல்களை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டான். 

‘அம்மா’. விழிகள் ரப்பைகளுக்கு பின்னே இங்குமங்கும் நகர்ந்தன. மெதுவாக அவற்றைத் திறந்தாள் க்ளாரா. வெளிர்ந்த நீல விழிகள் அவன் யாரென்று தெரியாதது போல சில நொடிகளுக்கு இங்குமங்கும் அலைந்தன. பின்னர் தெளிவு, ஓடையில் உறைந்த பனிக் கட்டிகள் அடியே நெளியும் நீர் போல, மெல்லத் தோன்றி கண்களை நிறைத்தது.

‘வில்? விடிஞ்சிருச்சா?

‘எப்பவோ’ என்றான். 

கைகளை முட்டுக் கொடுத்து மெதுவாக எழுந்து நகர்ந்து கட்டிலின் தலைப் பலகையில் சாய்ந்துக் கொண்டாள்.  அவள் தலையின் பின்னே பலகையில் அழுந்திய வைக்கோல் நிற முடிக் கற்றைகள்  அவள் முகத்தை சுற்றி ஒரு பறவையின் கூட்டைப் போல விரிந்தன. அன்னிச்சையாக அவளின் கைகள் கலைந்திருந்த முடியை சமன் செய்தன. சிறு வயதிலிருந்தே அவன் கண்டு, பழகிப் போயிருந்த செய்கை. 

‘இப்பொழுதெல்லாம் காலைகளில் என் முகத்தை பார்ப்பதில் எனக்கே விருப்பம் இல்லை’ என்று சொல்லி விட்டு அருகே இருந்த சிறிய மேஜையின் மேல் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஈரத் துவாலையை எடுத்து முகம் துடைத்தாள். 

‘இன்றைக்கு கூட  நீ புனித தாமஸ் தெருவில் நடந்து சென்றால் தலைகள் திரும்பி சீட்டி அடிக்கும்’ என்றான் வில்பர்.

‘போடா…வாயை மூடு’ க்ளாரா வின் அதட்டலில் சிறிது வெட்கமும், பெருமிதமும் கலந்திருந்தன. 

வில்பரின் பதின் வயதில் க்ளாரா  தன் கணவனை இழந்தாள். வியாபார விஷயமாக கப்பலில் ஏறியவன் திரும்பவில்லை. இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் எங்கோ தொலைந்து போனான். மறுமணம் தான் க்ளாரா  போன்றவர்களுக்கு உகந்த வழி என்பதை வியாபாரத்திற்காக மெட்ராசிற்கு வந்த பல ஆங்கிலேயக் கனவான்களின் பார்வைகள் அவளுக்கு உணர்த்தின. கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயலத்தில் பிரார்த்தனை செய்யச் செல்லும் போது ஓரக்கண்ணாலும், கவர்னர் மாளிகை விருந்துகளில் பட்டவர்த்தனமாகவும் கண்கள் இவளை மொய்த்தன. விரல்களிலும், கழுத்திலும் நகைகள் மின்னும் சில இந்திய வியாபாரிகள் கூட இவள் அருகில் வந்து இரண்டொரு ஆங்கில வார்த்தைகளைக் கனமாக உதறிச் சென்றனர். இந்தப் பொருள் என்ன விலை என்ற கணக்கு அவர்களின் கண்களில் மின்னிச் செல்வதை பல முறை கண்டிருக்கிறாள் க்ளாரா. ஆனால், வில்பரின் பொருட்டு இவை அத்தனையையும் ஒதுக்கினாள். செவிலி, ஆசிரியை போன்ற அச்சுகளில் தன்னை அடைத்துக் கொள்ளாமல் கணவன் நடத்திய வியாபாரத்தையே துணிந்து நடத்தினாள். மிளகு, ஏலம், பருத்தி ஆடைகள் என்று வியாபாரம் விரிந்தது. ஆனால், இந்தியப் பெருநிலத்தின் வியாதிகளும், மிருகங்களும் அவளை முடக்கின. மலேரியா அவளின் உடலைத் தளர்த்தியது, நன்கு பழகிய குதிரை அவளை கீழே சரித்து அவளைப் படுக்கையில் முடக்கியது.      

‘டீ?’

‘கொடு’ 

கெண்டியிலிருந்து பீங்கான் கோப்பையில் தேநீரை ஊற்றினான். சீனாவின் போஹியா கருப்பு தேநீரின் புகையோடிய மணம் அவள் நாசியில் நுழைந்து முகத்திற்கு சற்று நிறம் கூட்டியது.   

வில்பர் எழுந்து சென்று ஜன்னலை அடைத்திருந்த திரைசீலைகளை விலக்கினான். காலை வெயில் பாளங்களாக அறைக்குள் சரிந்தது. ஜன்னலுக்கு வெளியே விரிந்திருந்தத் தோட்டத்தில் செம்பருத்தி பூக்களும், மஞ்சள் அரளியும், அடுக்கு மல்லியும் கூர்மையாக ஒளிர்ந்தன. சற்று தூரத்தில் தரையைக் கொத்திக்கொண்டிருந்த தோட்டக்காரன் வில்பரை பார்த்தவுடன் சட்டென்று எழுந்து கையைப் புருவங்கள் மேல் உயர்த்தி வணங்கினான்.

‘அம்மா, என் நண்பன் கிப்பனை ஞாபகம் இருக்கிறதா? …ஆர்தர் கிப்பன்?’

க்ளாரா  மெதுவாகத் தேநீரை உறிஞ்சினாள். கைகள் சற்று நடுங்குவதை பீங்கான் கோப்பை ஏந்து தட்டை உரசும் சத்தம் காட்டிக் கொடுத்தது. 

‘போன மாதம் தான் சீனாவிலிருந்து திரும்பி வந்திருக்கிறான். நாளை அவனை சென்று சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.’ 

க்ளாராவின் பார்வை எதிர் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பறவைகளின் படங்கள் மேல் படிந்திருந்தன. எப்பொழுது வேண்டுமானாலும் மரச் சட்டகங்கங்களிலிருந்து சிறகு விரித்து வானில் பறப்பேன் பார்க்கிறாயா என்ற தோற்றத்துடன் நாரை, வெள்ளைப்பருந்து, நீர்காகம் என்று மெட்ராஸை சுற்றி தென்படும் பல பறவைகளின் படங்கள். க்ளாராவின் சிநேகிதி எலிசபெத் க்வில்லிம் வரைந்து அவளுக்கு அன்பளிப்பாய் கொடுத்தது.    

‘நம் வியாபாரத்தை சீனாவிலும் தொடங்கினால் என்ன என்று தோன்றுகிறது. பட்டு, பீங்கான் போன்றவைகளுக்கு ஐரோப்பாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எவ்வளவு நாள்…’

‘இப்பொழுதெல்லாம் என் கனவுகளில் ஹெர்போர்ட்ஷயர் அடிக்கடி வருகிறது’ என்றாள் க்ளாரா. வில்பர் இதுவரை சொன்ன  எதுவுமே அவள் காதில் விழாததுப் போல.

‘என்ன…?

‘பல மாதங்களுக்கு பனிப்போர்வைக்கு அடியே சுகமாக உறங்கும் ஹெர்போர்ட்ஷயர்.’ வில்பர் அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.

‘நானும் எலிசபெத்தும் பல மணி நேரம் பனியிலேயே உருளுவோம். சில்லிட்டத் தரையில் மல்லாக்க படுத்து கைகளையும் கால்களையும் மேலும் கீழும் அசைத்து சிறகடித்து பறக்கும் தேவதைப் போன்ற உருவங்களை பனி படர்ந்த நிலத்தில் உருவாக்கி…ஒ…நனைந்த உடைகளுடன் வீடு திரும்பி, சிறு பெண்கள் செய்யும் செயல்களா இவை என்று சீறும் எங்கள் அம்மாக்களின் ஏச்சுகளை பொருட்படுத்தாமல், மறு நாள் மீண்டும்…’

க்ளாராவின் கன்னங்களில் வண்ணம் ஏறி இருந்தது. தேநீர் கோப்பையின் நடுக்கம் நின்றிருந்தது. 

‘மூக்கின் மேல் அமர்ந்த பனிச் செதில் மெதுவாக உருகி என் உதடுகளைத் தொட்டு…வில்பர்? பனிப்பொழிவை இனிமேல் நான் பார்ப்பேனா?’. 

கட்டிலில் அமர்ந்திருந்த வில்பரின் கரங்களைப் பற்றிக் கொண்டாள் க்ளாரா. ஜன்னலின் வழியே வந்த வெளிச்சத்தில் அவள் கண்கள் சிறு கண்ணாடிப் பேழைக்குள் இட்ட நீல மணிகள் போல ஒளிர்ந்தன. மனதில் நிறைந்திருந்த ஆவலும், ஏக்கமும் அவள் பிடியின் இறுக்கம் உணர்த்தியது. அவள் ஆயுளின் முக்கால் பகுதி இந்தியாவிலேயே கழித்திருந்தாலும், மனதின் அடியில் அவள் பிறந்த மண்ணின் வாசனை அவளை விட்டு விலகவே இல்லை. வந்து சேர்ந்த புது நிலத்தில் அவளை அலைக்கழித்த பல வெப்பமானப் புழுதிப் புயல்களில் முறிந்து போகாமல் இருக்க அவள் பிறந்த மண்ணின் எண்ணங்களில் தான் தன்னை ஆழ்ந்து ஊன்றிக் கொண்டாளோ? இப்பொழுது அவள் இருப்பையே பெயர்த்து எடுக்க வரும் சுழல் காற்றில் இருந்து சின்னாபின்னம் ஆகாமல், கண்ணியத்தோடு, முடிக் கற்றைகள் காற்றில் கலையாமல், வெளியேற ஒரு ஆதாரத்தைத் தேடுகிறாளோ?  

‘கண்டிப்பாக…நீ பனி மழையைப் பார்க்கத் தான் போகிறாய். சிறு பெண்ணைப் போல வானத்தை நோக்கி வாயைத் திறந்து மேலிருந்து விழும் பனிச் செதிலை சுவைக்கத் தான் போகிறாய். உன்னை திட்டுவதற்கு உன் அம்மா கூட கிடையாது. அப்புறம் என்ன?’ பற்றிக் கொண்டிருந்த வில்பரின் கைகளை விட்டு, உதடு சுழித்தாள் க்ளாரா.

‘இன்னும் சில மாதங்களில் உன் உடம்பு தேறியவுடன் இங்கிலாந்திற்கு பயணப்பட வேண்டியது தான்’. 

அது இயலாது என்பதை இருவரும் அறிந்திருந்தார்கள். ஆனாலும்  சில நேரங்களில் பொய்களும் ஆறுதலாகத் தான் இருக்கின்றன.  

தேனாம்பேட், 16th March 1815

புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து தொடங்கிய அந்த அகலமான மண் பாதையில் அலுங்காமல் சென்றது கோச் வண்டி. சூரியன் சரியத் துவங்கியிருந்ததால் சாலையின் இரு பக்கங்களில் அடர்ந்திருந்த மரங்களின் நீண்ட நிழல்கள் சாலையில் கவிழ்ந்திருந்தன. இங்குள்ள பெண்கள் கட்டும் சிவப்பு நிற சேலைக்கு மஞ்சள் கரையிட்டது போல் செம்மண் சாலையின் இரு புறங்களிலும் வேப்பம்பூக்கள் சிதறிக் கிடந்தன. தூரத்தில் புனித தாமஸ் மலையின் மேல் கட்டப்பட்டிருந்த தேவாலயத்தின் வெள்ளைச் சுவர்கள் அடர்ந்த கிளைகள் வழியே மின்னல் வெட்டு போல அவ்வப்போது தோன்றி மறைந்தது. முக்கால் மணி நேர பயணத்திற்கு பின் வண்டி சற்றே இடப்புறம் திரும்பி உள்ளடங்கிய ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது. வண்டியில் இருந்து இறங்கிய வில்பரை அழைத்தது ஒரு கனமான குரல்.

‘என்னை பார்க்க வர உனக்கு ஒரு மாதம் ஆயிற்றா?’

ஆர்தர் வீட்டின் முகப்பில் நின்றிருந்தான். பார்த்தவுடன் எவரையும் கவரும் உருவம். பல நாடுகளின் சூரியன்கள் அவன் தோலை லண்டனில் காபி விடுதிகளில் பரிமாறப்படும் சாக்லேட் பானத்தின் நிறத்திற்கு மாற்ற முயற்சித்து அதில் சிறிது வெற்றியும் பெற்றிருந்தன.

‘ஆர்தர், உலகில் நீ சென்று வராத நாடுகள் ஏதேனும் பாக்கி உள்ளனவா?’

‘ம்ம்ம்…யோசித்து தான் சொல்ல வேண்டும்’ என்று சிரித்தபடியே வில்பரின் கரங்களைப் பற்றி குலுக்கினான் ஆர்தர்.

‘வா…இங்கே வராந்தாவில் அமரலாம், காற்று நன்கு வரும்’. வீட்டின் மூன்று பக்கங்களையும் அணைத்திருந்த நீண்ட தாழ்வாரத்தில் தரைகள் குளிர்ந்திருந்தன. வெயில் புகாமல் இருக்க தூண்கள் இடையே  கட்டப்பட்டிருந்த வெட்டி வேர் தட்டிகள் மேலேற்றப்பட்டு சுருண்டு கிடந்தன. 

‘உட்கார்’ என்றான் ஆர்தர். சிறு மேஜையருகே இரண்டு தேக்கு நாற்காலிகள் கிடந்தன.

‘கடல் பயணங்களில் ரம் எனக்கு நன்கு பழகி விட்டது, உனக்கு என்ன வேண்டும்’ 

எதுவும் பரவாயில்லை என்பது போல தோளை உயர்த்தி உதட்டைச் சுழித்தான் வில்பர். 

இக்கணத்திற்குக் காத்திருந்தது போல வெள்ளித் தட்டில் கண்ணாடி கோப்பைகளும், கருஞ்சிவப்பு திரவம் நிறைந்த குப்பியையும் கொண்டு வந்து வைத்தான் வெள்ளைத் தலைப்பாகை அணிந்த ஆர்தரின் வேலையாள். ரம்மின் சர்க்கரை வாசம் தோட்டத்தில் மலர்ந்திருந்த சிவப்பு மல்லியின் வாசத்தை விழுங்கியது.

‘ராணி சார்லோட் மற்றும்  நான் இதுவரை காணாதத் தேசங்களின் பெண்களுக்கு’ ஆர்தர் கோப்பையை உயர்த்தினான். 

‘அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்’ என்று ஆர்தரின் கோப்பையைத் தொட்டுச் சிரித்தான் வில்பர்.

‘சீனா…எப்படி இருந்தது?’ 

‘நம்மிடமிருந்து சீனர்கள் வெள்ளியைத் தவிர வேறு எதையுமே விரும்புவதில்லை. பெரிய ஈஸ்ட் இந்தியாமென் கப்பல்களில் நாம் கொண்டு போகும் கம்பளி ஆடைகளை அவர்கள் சீண்டுவது கூட இல்லை. கேன்டன் துறைமுகத்தில் வந்து குழுமும் அத்தனை சீன வியாபாரிகளுக்கும் வெள்ளியின் மீது தான் கண். இதே போல எவ்வளவு நாள் நம்மால் தாக்கு பிடிக்க  முடியும் என்று தெரியவில்லை…வெள்ளி வானத்திலிருந்தா கொட்டுகிறது?’ என்று கேட்டு விட்டு ஆர்தர் ஒரே மடக்கில் ரம்மை விழுங்கினான்.

‘நாம் கொண்டு செல்லும் எதுவுமேவா அவர்களுக்கு பிடிப்பதில்லை’ என்றான் வில்பர். ஆர்தர் தன் கோப்பையின் ஆழத்தில் தங்கி விட்டிருந்த சிறிது ரம்மை சற்று நேரம் உற்று நோக்கினான். 

‘வெள்ளியை தவிர்த்து அவர்கள் விரும்புவது அபின்…’ அவன் குரல் சற்று தாழ்ந்திருந்தது. 

‘அதை நாம் பெங்காலில் இருந்து கேன்டன்  கொண்டு சேர்க்கத் தொடங்கி விட்டோம்’. நாம் என்ற வார்த்தை ஆர்தரை குறிக்கிறதா அல்லது கம்பெனியை குறிக்கிறதா என்று வில்பரால் அனுமானிக்க இயலவில்லை.

‘ஆனால், அது சீனாவில் தடை செய்யப்பட்டதல்லவா?’

‘தடை செய்யப்பட்டது தான்.. ஆனால்…’

‘சார்…மன்னிக்கவும். உங்க ரெண்டு பேருக்கும் டின்னர் தயார் பண்ணிடட்டுமா’ உள்ளிருந்து வந்த வேலையாள் பணிவாகக் கேட்டான்.      

‘வில்பர், என் கூட சாப்பிடு’

‘இல்லை ஆர்தர், நான் வீடு செல்ல வேண்டும், அம்மா கொஞ்சம் சீக்காக இருக்கிறாள்’

‘ஆ…நான் கேட்க மறந்து விட்டேன். எப்படி இருக்கிறாள் திருமதி க்ளாரா பார்க்கர்’. வேலையாளை கையசைத்து உள்ளே அனுப்பி வைத்தான் ஆர்தர்.

வில்பர் தன் தோள்களை சற்று உயர்த்தி, மீண்டும் தாழ்த்தி விட்டு தலையைத் திருப்பித் தோட்டத்தை நோக்கினான். ரோஜா செடிகளின் அடியில் ஒரு தவிட்டு குருவி நொடிக்கொரு தரம் அதன் உடம்பை சிலிர்த்து தன் குழுவை அழைத்துக் கொண்டிருந்தது.    

‘டாக்டர் பேட்ரிக்கின் மருந்து அவளுடைய வலியை சில மணிகளுக்கு சற்று மழுங்கடிக்கறது’ ஒரு பெருமூச்சிற்கு பின் தொடர்ந்தான் வில்பர்.

‘ஆனால், இன்னும் எவ்வளவு நாட்கள் அவளால் தாங்க முடியும் என்று தெரியவில்லை’. 

ஆர்தர் சற்று முன் நகர்ந்து வில்பரின் கரங்களை சற்று ஆதரவாகத் தட்டி

‘கவலைப்படாதே நண்பா…அவள் இரும்பு மனுஷி. இந்தியா என்னும் உலைக்களத்தில்  புடம் போடப்பட்டவள். மீண்டெழுவது அவளுக்கு சுலபம்’.

‘அப்படித் தான் நினைத்திருந்தேன். ஆனால்…’ வில்பர் எழுந்து சென்று தாழ்வாரத்தின் கைபிடிச் சுவரில் கைகள் ஊன்றி நின்று கொண்டான். 

‘நேற்று என்னிடம் அவள் சிறு வயதில் கண்ட பனிப்பொழிவை இனிமேல் பார்பேனா என்று கேட்டாள்…ஏதோ அது தான் அவளின் கடைசி ஆசைப் போல. இரண்டாண்டுகள் முன்பு கூட அவளால் இங்கிலாந்திற்கு பயணம் செய்திருக்க முடியும். ஆனால், இப்பொழுது அவள் கட்டிலில் இருந்து கழிவறை செல்வதே ஒரு சாகசப் பயணம் தான்…இதில் பனிப்பொழிவு?’ 

ஆர்தர் தன்  பையிலிருந்து பைப் ஒன்றை எடுத்து அதன் முனையில்  புகையிலையை மெதுவாக அடைக்கத் துவங்கினான். அவன் விரல்கள் சிறிது சிறிதாக சுங்கானிற்குள் புகையிலையை திணித்தாலும் மனம் வேறேதோ அசை போடுவது போல அவன் கண்கள் தோட்டத்தில் பதிந்திருந்தது.

‘நான் கூறப் போவது உனக்கு சற்று விசித்திரமாக இருக்கலாம். என்னைக்  கேலி செய்வதற்கு உனக்கு நான் அளிக்கும் இன்னொரு சந்தர்பமாகக் கூட இருக்கலாம்’. ஆர்தர் சிரித்து கொண்டே சொன்னான்.

‘அந்த சந்தர்ப்பத்தை நான் விடத் தயாராக இல்லை, சொல்லு’  என்றான் வில்பர் ஆர்தரை நோக்கியபடி.

‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவிற்கு மெட்ராஸிலிருந்து பயணப்பட்ட பல கப்பல்கள் அசாதாரணமான புயல்களில் சிக்கி காணாமல் போனது உனக்கு ஞாபகம் இருக்கும்’

‘கண்டிப்பாக…எனக்கு கூட அதில் சிறிது நஷ்டம் ஏற்பட்டது’ என்றான் வில்பர்.

‘அந்தக் கப்பல்களில் ஒன்றில் நான் பயணப்பட்டிருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை’

‘அப்பொழுது உனக்கு ஏதோ காய்ச்சல் என்று என்னிடம் சொன்னதாக ஞாபகம்’

‘அதுவும் தான். ஆனால் அது மட்டும் அல்ல’. தக்கத் தருணங்களுக்காக எப்பொழுதும் காத்திருப்பவன் போல கையில் ஏற்றிய மெழுகுவத்தியுடன் உள்ளிருந்து வந்தான் வேலையாள். நன்கு உலர்ந்த சிறு குச்சியை மெழுகின் சுடரில் காட்டி அதை சுங்கானில் அடைத்த புகையிலையின் தலையில் தடவி பற்ற வைத்தான் ஆர்தர்.

‘நான் அந்த பயணம் போகாததற்கு இவன் சொன்ன செய்தியும் ஒரு காரணம்’ என்று உள்ளே செல்லும் வேலையாளை தன் கட்டை விரலால் சுட்டினான் ஆர்தர்.

‘அந்த முறை பயணத்தை ஒத்தி வைக்க முடியுமா என்று கேட்டான். என்னிடம் நிறைய நாள் இருந்து விட்டவன், அவ்வப்பொழுது இது போல சிறு சுதந்திரங்களை எடுத்துக் கொள்வான்’. ஒரு சிறு புன்னகையுடன் சொன்னான் ஆர்தர்.

‘ஏன் என்று கேட்டதற்கு, அந்த ஆண்டு காற்றின் சுழற்சி சரியில்லை என்றும் காலம் தவறிய புயல்கள் பலவும் உருவாகலாம் என்று அவன் தெய்வம் போல மதிக்கும் ஒருவர் சொன்னதாகக் கூறினான்’. ஆர்தர் சுங்கானை உதடுகளால் இழுத்து புகை விட்டான். காரமான புகையிலையின் மணம் தாழ்வாரத்தில் பரவியது.

‘அப்படி சொன்ன அறிஞர் யார் என்று நான் சற்று இளக்காரமாகக் கேட்டதற்கு அவர் ஒரு…ஏதோ ஒரு பெயர் சொன்னானே…ஆ…கடாரத்தார், கடாரத்தார்’ ஏதோ அந்த வார்த்தை இனம் புரியாதக் கனம் கொண்டது போல அதை இரு முறை உச்சரித்தான் ஆர்தர். 

‘அவர் சொன்னால் மழை பெய்யுமாம், காற்றின் திசை மாறுமாம்…முட்டாள் என்று தான் அன்று அவனை எண்ணினேன். ஆனால், அகால புயல்களுக்குப் பிறகு…’ சற்று நேரம் மெளனமாகத் தோட்டத்தை நோக்கினான் ஆர்தர். பின்பு வில்பரை பார்த்து ‘ம்..இப்பொழுது நீ பரிகசிக்கலாம்’ என்பது போல புன்னகைத்தான்.

‘அவர் எங்கே இருக்கிறார்?’ ஆர்தர் அவனை சிறு வினாடிகள் உற்று நோக்கி விட்டு, ‘இங்கே தான் கருப்பர் நகரத்தில்’ என்றான்.

‘அவரை பார்க்க முடியுமா?’

‘ஏற்பாடு செய்ய சொல்கிறேன்’ என்றான் ஆர்தர். அவன் கண்களில் வியப்பையும் மீறி ஏதோ ஒன்று ஒளிர்ந்தது. புரிதல் என்று அதை அர்த்தப்படுத்திக் கொண்டான் வில்பர்.

கருப்பர் நகரம், April 10, 1815

கடாரத்தாரை சந்திக்க காலையிலேயே கிளம்பி விட்டான் வில்பர். ஏழு கிணறை அடைவதற்கு முன்னரே அதில் ஏத்தம் கட்டி நீர் இறைப்பவர்கள் பாடும் பாடல் அவனை வந்து சேர்ந்தது.  வார்த்தைகள் ஒன்றொன்றும் தொண்டையிலிருந்து வராமல் திணவெடுத்தத் திசுக்களின் பெருமூச்சு போல ஒலித்தது. 

பல்லக்கின் பக்கக் கதவுகளை திறந்தான் வில்பர்.  காலை சூரியன் மேகத் திட்டுகளை சிவப்பாக்கியிருந்தது. கிணற்றின் மேலே இடையில் ஒரு சிறு துணியும், தலைப்பாகையும் கட்டி இருந்த ஒரு நிழல் உருவம் கிடைமட்டமாக ஆடிய ஒரு ஏணியில்  முன்னும் பின்னும் அந்தரத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஏணியின்  ஒரு முனையில் தொங்கிய தோல் பைகள் கிண்ற்றில் முங்கி, நீரோடு மேலெழும்பி, தரை வந்து, தலை சாய்த்து, நீரைத் தொட்டிகளில் சரித்தன. பெரும் இரும்பு குழாய்கள் மூலம் அந்நீர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்றது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஜார்ஜ் பேக்கர் இந்தக் கிணறுகளை வெட்டாமல் போயிருந்தால் மெட்ராஸில் குடிக்கத் தண்ணீர் இருந்திருக்காது என்று க்ளாரா சொல்லுவாள். 

சாலையில் போர்த்துகீசிய வியாபாரிகளும், ஆர்மேனியாவிலிருந்து வந்த வணிகர்களும் கழுத்தில் மணி கட்டிய மட்டக்குதிரைகள் மேல் உட்கார்ந்து தெருவில் சென்று கொண்டிருந்தனர். ஓலைப் பாய்களால் கூடாரம் அமைக்கப்பட்ட வண்டிகளிலிருந்து நெல் மூட்டைகளும், பஞ்சுப் பொதிகளும் பிதுங்கித் துருத்திக் கொண்டு நின்றன. இழுத்து வந்த மாடுகளின் வாயிலிருந்து நுரை நூல் போல நீண்டு மண் சாலையில் கோலமிட்டது. தெருவின் இரு பக்கங்களிலும் சிறு பொந்து போன்ற அறைகளில் காதில் கடுக்கன் அணிந்த வியாபாரிகளின் ஆரவாரம் சரளைக் கற்கள் வண்டியில் இருந்து சரிவது போல ஒலித்தது. நாசியைச் சீண்டித் தொண்டையை எரிய வைக்கும் மிளகு, மஞ்சள் வாடையுடன் மெலிதான மூத்திர வாடையும் காற்றில் கலந்திருந்தது.

இந்தச் சந்தடியெல்லாம் கடந்து கிருஷ்ணப்ப நாயகன் அக்ரஹாரம் நுழைந்த போது அது வேறேதோ தேசத்தில் இருக்கும் இடம் போல  அமைதியாக இருந்தது. புதிதாகக் கட்டப்பட்டிருந்த கோவில் ஒன்றின் கோபுரத்தில் அடுக்கடுக்காக சிற்பங்கள் நெருக்கி நின்றிருந்தன. அது மூன்று கண்கள் உடைய கடவுளின் கோவிலாகத் தான் இருக்க முடியும் என்பதை பல்லாக்குத் தூக்கிகள் ‘நமசிவாய’ என்று உரக்கக் கூவியதை வைத்து அனுமானித்தான் வில்பர். கோவிலின் அருகே உள்ள குளக்கரையில் கைகளிலும், நெற்றியிலும் வெண்மையானக் கோடுகள் அணிந்து, மார்பில் நூலோடு சிலர் வில்பரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.  

கடாரத்தார் இருக்கும் வீடு குளத்திலிருந்து தள்ளி சற்று ஒதுக்குபுறமாக இருந்தது. வீட்டின் வாசலில் சாணி மொழுகப்பட்டு அதன் மேல் தன் வாலையே விழுங்கத் துடிக்கும் நாகங்களின் பின்னல் போல அமைந்த வெள்ளை நிறக் கோடுகள்  வரையப்பட்டிருந்தன. கோபுரத்தின் சிற்பங்கள் போலவே நெளிவும், அடர்த்தியும், ஏதோ ஒன்றை பூடகமாகச் சொல்ல வரும் பாங்கும்…

‘வணக்கம் மிஸ்டர் வில்பர், என் பெயர் நாராயண பிள்ளை.’ வில்பரின் கவனம் கோலத்திலிருந்து அவன் அருகில் நின்ற இளைஞனிடம் திரும்பியது. 

‘நீங்கள் வரப் போவதை ஆர்தர் முன்கூட்டியே சொல்லி இருந்தார். வாருங்கள்’. என்றான் சரளமான ஆங்கிலத்தில். சீரான, வெள்ளைப் பற்கள், எண்ணைத் தடவி முறுக்கி விடப்பட்ட கருமையான மீசையின் கீழ் நட்புடன் சிரித்தன. 

‘மன்னிக்க வேண்டும் சார், உங்கள் பூட்சுகளை இங்கே கழற்றி வைத்து விடுங்கள்’ என்று திண்ணைக்குக் கீழே ஒரு இடத்தை காட்டினான் நாராயண பிள்ளை. முற்றத்தில் உலவிக் கொண்டிருந்த புறாக்களைத் தாண்டி வீட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. முற்றத்தைச் சுற்றி இருந்த தாழ்வாரம் இருண்டுக் கிடந்தது. தாழ்வாரத்தின் ஒரு பக்கத்தில் கூரையிலிருந்து இரு சிறு கயிறுகளில் தொங்கிய மூங்கில் கழியில் பழுப்பேறிய இடையில் அணியும் வெள்ளை ஆடை ஒன்று மெலிதான காற்றில், இருண்ட கடலில் பயணிக்கும் ஒரு படகின் பாய் போல, அசைந்து கொண்டிருந்தது.

‘இந்த பக்கம் சார்’ என்று நாராயண பிள்ளை முற்றத்தைத் தாண்டி கொல்லைப்புறத்திற்கு சென்றான். வைக்கோலை மென்றபடி இருந்த பசு ஒன்று வாலைச் சுழற்றி ஈக்களை விரட்டியபடியே வில்பரை பார்த்துவிட்டு மீண்டும் அசை  போடத் தொடங்கியது. சாணத்தின் பச்சை வாடை வில்பரின் நாசியைத் துளைத்தது.

‘அதோ, அங்கே இருக்கிறார்’ என்றான் நாராயண பிள்ளை தாழ்ந்த குரலில். அவன் சுட்டி காட்டியத் திசையில் ஒரு நூறு அடிகள் தொலைவில் ஒரு மாமரம்  குடை போல விரிந்திருந்தது. நன்கு பழுத்த மாம்பழங்கள் மஞ்சள் தோரணம் போல அதிலிருந்து தொங்கின. அந்த மரத்தின் நிழலையேத் திரட்டி உருவானது போல ஒரு உருவம் அடிமரத்தருகே தென்பட்டது. 

‘ப்ளீஸ்…’ என்று கையை மரம் இருக்கும் திசை பக்கம் காட்டி விட்டு சற்றே பின் நகர்ந்து நின்று கொண்டான் நாராயண பிள்ளை.

வில்பர் மரத்தை நெருங்கினான். சிறு கற்கள் காலுறையைத் தாண்டி அவன் பாதங்களைத் தீண்டின. நிழல்களால் செய்யப்பட்ட உருவம் கோட்டோவியமாக தெளிந்து, நிறம் கூடி, அங்கங்கள் முளைத்து, ஒரு மனித உருவாக வடிவெடுத்தது.

கால்களை மடக்கி, முதுகை அடிமரத்தில் சாய்த்து உட்கார்ந்திருந்தார் கடாரத்தார். சிறு பறவை கூட்டின்  வெளியே அலகை நீட்டி கொண்டிருப்பது போல நரைத்த மீசை மேலே அவரது நாசி துருத்திக் கொண்டிருந்தது. கண்கள் பாதி மூடியிருக்க மேல் ரப்பைகளின் வளைவு சீனர்களைப் போல இருந்தது. அவர் நெற்றியிலோ, உடலிலோ எந்த சமயச் சின்னங்களும் இல்லை. இடையில் அவர் கட்டியிருந்த வெள்ளைத் துணி அவரின் முட்டிகளுக்கு மேலே ஏறி இருந்தது. அவர் முன்பு சுள்ளிகளும், காய்ந்த  சருகுகளும், பறவைகள் கொத்திப் போட்ட மாம்பழங்களும் கொண்ட ஒரு சிறு குவியல் இருந்தது. அதில் மேலும் சிறு சுள்ளிகளை அடுக்கிக் கொண்டிருந்தார் அவர். 

அவன் வருகையை கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. தயங்கி நின்ற வில்பர் திரும்பி நாராயண பிள்ளையை பார்த்தான். ஆனால், வில்பர் அங்கு இருப்பதை முழுவதும் மறந்தவன் போல்  அவன் மாட்டிற்கு வைக்கோல் பிரித்து வைத்துக் கொண்டிருந்தான். மீண்டும் கடாரத்தாரை நோக்கிய வில்பர் 

‘ஐ ஹவ் ஹெர்ட் எ….’ என்று துவங்க சித்தர் இடைமறித்தார். அவர் பல தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார், ஆங்கிலம் அறிந்தவர் என்றெல்லாம் ஆர்தர் அவனிடம் சொல்லி இருந்தாலும் அவர் வாயிலிருந்து வந்த ஆங்கில வார்த்தைகளில் கேட்ட இழுவையும், பூச்சும் இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளை அவனுக்கு நினைவுபடுத்தின. 

‘கேள்விக்கான பதில் அது கேட்கப்படும் நேரத்தை பொறுத்து தான் அமையும்’ என்றார் சருகுகளை அடுக்கியபடியே. அவர் கவனம் முழுவதும் தன் முன்னே கூம்பு வடிவாக வளர்ந்து வரும் சிறு கூளத்தின் மேலேயே இருந்தது.

‘ஆகவே, கேட்க வேண்டியதை நன்கு ஆலோசித்து, உன் மனம் உணர்த்தும் நேரத்தில் கேள்’ என்றார்.

குப்பையைத் துழாவிக் கொண்டு, அரை நிர்வாணமாக இருக்கும் இவர் முன்னே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? ஆர்தரின் வார்த்தைகளை மட்டும் நம்பி இங்கு வந்தது சுத்தப் பைத்தியக்காரத்தனமோ? என்ற கேள்விகள் வில்பரின் மனதில் அலையாடினாலும், க்ளாராவின் கண்களில் அவன் கண்ட ஏக்கம் அவனை அங்கேயேக் கட்டிப் போட்டது. 

‘நான் வியாபாரி. கொடுக்கல் வாங்கல் நான் நன்கு அறிந்ததே.  பல கடன்களை எளிதில் திருப்பிக் கொடுத்து விட முடியும். ஒரு பண்டத்தை, இன்னொன்றாக மாற்றி, பின்பு அதை வெள்ளியாக்கி, அது சுலபம்…’ ஏதோ கருப்பர் நகரத்தின் ஒரு மூலையில், சாணத்தின் வாடை வீசும் இந்தத் தோட்டத்தில் பித்தன் போல குப்பைகளை துழாவும் ஒருவனின் முன் நின்றிருப்பதற்கான காரணத்தை அவனுக்குள்ளேயே விளக்கிக் கொள்ளுவது போல இருந்தது வில்பரின் தொனி. 

‘ஆனால், சில கடன்களின் வலு அதிகம். அதைத் திருப்புவதற்கு பொன் உதவாது. என் அன்னை க்ளாரா எனக்கு அளித்த கடன் அப்படி. அவள் வாழ்க்கையின் பெரும் பகுதியை எனக்கு அளித்திருக்கிறாள். துணை கூடத் தேடாமல் என்னை தூக்கி நிறுத்தியவள். இப்பொழுது அவள் கடந்து வந்த அந்த வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை பெற முடியுமா என்று கோருகிறாள். அப்படி கூட இல்லை  …விண்ணப்பிக்கிறாள்…அதுவும் கண்களால்’. ஒரு அன்னியன் முன் இதைச் சொல்கிறோம் என்பதை விட அவன் இனி கேட்கப் போவது எத்தனை அபத்தமானது என்ற எண்ணம் அவன் குரலை பிசிறடித்தது.

‘அவள் ஒரே ஒரு முறை…’ கிழக்கு பக்கத்தில் இருந்து காற்று குவித்து வைக்கப்பட்டிருந்த கூளத்தின் சருகுகளை உரசிச் சென்றது. வில்பர்  தொண்டையைச் செருமினான்.

‘எங்கும் பயணிக்க முடியாத அவள் கடைசியாக ஒரு முறை பனிப்பொழிவை காண ஆசைப்படுகிறாள்’. மரத்தில் இருந்து பறவை ஒன்று கூவியது. சிவந்த கண்களோடு செம்போத்து ஒன்று வலப்பக்கமாக சுழித்து பறந்து சென்று மறைந்தது. முரசின் அதிர்வு போல அதன் குரல் மட்டும் எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்தது.

இரு தீக்கற்களை உரசி தன் முன்னே இருந்த கூளத்தை பற்ற வைத்தார் கடாரத்தார். ஆரஞ்சு பழத் தோல் நிறத்தில் கங்குகள் உயிர் கொண்டன. ஒரு சிறு குன்று போல அமைந்த அந்தக் குவியலின் முகட்டிலிருந்து வெண் புகை எழுந்தது. புதைந்திருந்த சிதைந்த மாம்பழங்களின் சாறு கொப்பளித்து, சிவந்த நீரோடைப் போல  சரிவில் வழிந்து ஆவியாகியது. பொசுங்கும் மாம்பழத்தின் திகட்டும் வாசம். மரணத்தின் வாசம் என்று வில்பரின் மனதோரம் ஓர் எண்ணம் உதித்து, உரு பெறுவதற்கு முன் புகைப் போல மறைந்தது. 

‘காணத் தான் போகிறாள்’ என்றார் கடாரத்தார். அவர் முன் இருந்த குவியலில் இருந்து ஒரு சுள்ளி வெடித்து, எரி கல் போல பறந்து அருகில் வீழ்ந்தது. 

‘இங்கு வரும் பொழுது ஏழு கிணறுகளில் ஏத்தம் பார்த்தாயா?’ கேள்வியின் திசை புரிபடாத வில்பர் ஆமாம் என்று தலை அசைத்தான்.

‘சரிந்து எழுந்து, சரிந்து எழுந்து, மேலும் கீழும், மேலும் கீழும்’. புகையால் சூழப்பட்ட முகத்திலிருந்து வெளி வந்த அந்தத் தொடர் வார்த்தைகளின் அழுத்தமும், கூளத்தில் எழுந்த இளந் சுடர்களில் பதிந்த கவனமும், கடாரத்தார் வேறேதோ கண்ணுக்குப் புலப்படாத பெரும் ஏத்தத்தை வர்ணிப்பது போல பட்டது வில்பருக்கு.

‘நீ கேள்வி கேட்ட தருணத்திலேயே சரியத் தொடங்கி விட்டது. எழும்ப வைப்பது உன் பொறுப்பு’

என்ன, ஏது என்று வில்பரிடம் இருந்து கேள்விகள் எழும் முன்னரே ‘நாளை நாராயண பிள்ளை உன்னை வந்து சந்திப்பான்’ என்று சொல்லிவிட்டு கடாரத்தார் மரத்தடியிலேயே சுருண்டு படுத்து விட்டார்.

ராயபுரம், 11th April 1815

வாயில் எச்சில் ஒழுக, இடுப்பில் கந்தலுடன் ‘துரை, துரை’ என்று காலை இழுத்தபடி வில்பர் அருகில் வந்தான் ஒரு இளைஞன். ‘டேய் கிட்டக்கப் போவாத’ என்று அதட்டி அவனை இழுத்துச் சென்றாள் ஒரு நோஞ்சான் பெண். புடைத்த விலா எலும்புகளும், ஒட்டிய வயிறும், உலர்ந்த கருந் திராட்சை போல சுருங்கிய தோலுடன் பல முதியவர்கள் மரங்களுக்கு அடியில் ஒடுங்கி இருந்தனர். சற்று தூரத்தில் பூசப்படாத செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டத்திலிருந்து புகை எழுந்து கொண்டிருந்தது. அத்துடன் புளியும், மிளகாயும், மஞ்சளும் இணைந்து கொதிக்கும் வாசம்.

‘தினம் சில நூறு பேர்களுக்கு இங்கே சோறு போடப்படுகிறது. சுமார் முப்பது வருஷத்துக்கு முன்னால மணியக்காரர் ஒருத்தர் ஆரம்பித்த சத்திரம் இது. மோனிகர் சத்திரம் என்று இதை இப்பொழுது அழைக்கிறார்கள்.’ என்றான் நாராயண பிள்ளை. ராயபுரத்தில் இப்படி ஒரு இடம் இருப்பதை வில்பர் அறிந்திருக்கவில்லை.

சமையல் செய்யும் இடத்திற்கு சற்று தள்ளி வெண் சுண்ணம் அடிக்கப்பட்ட சிறு கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள் இருவரும்.

‘வெல்கம் சார், ஐ அம் பெல்லி’ என்று ஒரு மனிதர் அறையில் உள்ள பெரிய மேஜையின் அந்தப் பக்கத்தில் எழுந்து நின்று வில்பரை நோக்கி கை  நீட்டினார். மேஜையை முட்டிய பெருந் தொந்தி இடுப்பு வரை அவர் அணிந்திருந்த மேல் அங்கியின் பொத்தான்களைத் தள்ளியது. மேஜையில் இருந்த சில காகிதங்கள் கூரையில் அசைந்து கொண்டிருந்த பங்காவின் காற்றிற்கு தலையாட்டிக் கொண்டிருந்தன. வில்பர் அவர் கையை குலுக்கினான்.

‘உட்காருங்கள், டீ சாப்பிடுகிறீர்களா’ என்றார் பெல்லி. வேண்டாம் என்று கை அசைத்தான் வில்பர். நாராயண பிள்ளையை ஏற, இறங்க பார்த்த பெல்லி வில்பரை நோக்கி, புன்னகைத்து விட்டு

‘இங்கே வந்த காரணத்தை அறிந்து கொள்ளலாமா?’ என்றார்.

‘ஒரு சிறு நன்கொடை அளிக்க விரும்புகிறேன்’

‘நல்லது, மிக நல்லது. அரசாங்க உதவியும், உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் அளிக்கும் நன்கொடையிலும் தான் இந்தச் சத்திரம் இயங்குகிறது.’ பெல்லி நாற்காலியில் சாய்ந்து திறந்திருந்த ஜன்னல் வழியே மரங்களுக்கு அடியில் சுருண்டிருந்த மனிதர்களை கண்களால் துழாவினார்.

‘கடும் பஞ்சத்திலும், மைசூர் போரின் அவதிகளிலும் சிக்குண்ட இந்த மக்களை பிரித்தானிய அரசாங்கம் ஒரு போதும் கை விடாது’ என்றார் பெல்லி. நாராயண பிள்ளையின் உதட்டோரம் பூத்த புன்னகையின் அர்த்தத்தை வில்பர் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. சிறு தோல் பையிலிருந்து ஒரு சிறு தாளை வெளியே எடுத்தான் வில்பர். ஏதோ பேங்க் ஆப் பெங்கால் அச்சடித்து விநியோகிக்கும் ஐநூறு சிக்கா ருபாய் தாளை முதன் முதலாகப் பார்ப்பது போல பெல்லியின் கண்கள் விரிந்தது.

‘இந்தத் தொகை ஏறக்குறைய பத்தாயிரம் உயிர்களை உய்விக்கும்’ என்றார் பெல்லி ஆச்சர்யம் கலந்த குரலில்.

‘நன்கொடை யார் பேரில்?’ என்று கேட்டு விட்டு ஒற்றைக் கண்ணில் வட்டக் கண்ணாடி பொருத்திக் கொண்டார் பெல்லி.

‘க்ளாரா பார்க்கர்’ என்றான் வில்பர். 

சாந்தோம், 28th April, 1815

கடிகாரம் காலை ஒன்பது மணி என்று காட்டினாலும், வானம் இருண்டிருந்தது. கிழக்கில் மட்டும் கீழ் வானம் பற்றி எறிவது போல ஒரு செந்நிறப் பட்டை படர்ந்திருந்தது. மெலிதான ஒரு அழுகல் வாடை சீக்காளியின் போர்வை போல நிலத்தை மூடியிருந்தது. தடியான கோட்டிற்கு மேலே அணிந்திருந்த இரண்டு கம்பளிகளையும் ஊடுருவி குளிர் அவனைத் தீண்டியது. 

‘சார், உலகம் அழியப் போவுதுன்னு பேசிக்கிறாங்க, உண்மையா’ என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டான் வேலையாள். கலவரம் தோய்ந்த வேலையாளின் முகமும், உணவு மேஜையில் சூடான தேநீர் எடுத்து வைக்கும் போது அவனுடைய கரங்களின் நடுக்கமும் இதைப் போன்ற வானிலையை வெயில் காயும் மெட்ராஸ் பட்டினத்தில் அவன் எந்நாளும் கண்டதில்லை என்று சொன்னது.

‘பைத்தியக்காரத்தனமான பேச்சு. என் வீட்ல இந்த மாதிரி பேசறவங்களை வேலைய விட்டு எடுத்துடுவேன்னு சொல்லு’ என்றான் வில்பர். வார்த்தைகள் கடுமையாக இருந்தாலும் அது அவனுக்குள்ளேயே கனன்றுக் கொண்டிருந்த அச்சத்தை மறைக்க முயற்சிப்பது போல ஒலித்தது. மன்னிப்பு கோரி விட்டு வேலையாள் வேகமாக நகர்ந்தான். கண்ணாடி ஜன்னல் வெளியே பறவைகளின் ஒலியற்ற வெளியில் மரங்கள் அசைவற்று கிடந்தன.  சட்டென்று வில்பர் எழுந்து சென்று ஜன்னல் அருகில் நின்றான். வானிலிருந்து…

‘அம்மா’ என்று உரக்க அழைத்தபடி க்ளாராவின் அறைக்குள் நுழைந்தான் வில்பர். கனமானப் போர்வைகள் சுற்றிய பொம்மைப் போல க்ளாரா கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். பரிசை எதிர்பார்க்கும் சிறுமியைப் போல அவள் கண்கள் விரிந்திருந்தன. வில்பர் அவளைத் தூக்கி கட்டிலிற்கு அருகில் இருக்கும் சக்கர நாற்காலியில் உட்கார வைத்து உருட்டிச் சென்றான். தாழ்வாரத்தில் உறைந்திருந்த குளிரை அவர்கள் பொருட்படுத்தவில்லை. சிவந்து இருந்த தாழ்வாரத்தின் தரையின் ஈரப் பிசுபிசுப்பில் சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடி விளக்குகளின் தழல் நெளிந்தது. தாழ்வாரத்தின் விளிம்பில் சக்கர நாற்காலியை நிறுத்தினான் வில்பர். க்ளாரா உலர்ந்த குச்சியைப் போல இருந்த அவள் கரத்தை மெதுவாக வெளியே நீட்டினாள்.  

பழுப்பு நிறப் பனிச் செதில்கள் அவள் புறங்கையில் வீழ்ந்தன. சில வினாடிகளில் அவை உருகி நீர் கோடுகளாக அவள் கைகளில் இறங்கின. வானை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த க்ளாராவின் கண்களின் ஓரத்திலிருந்து கண்ணீர் திரண்டு கன்னம் வழியே புன்னகைத்திருந்த அவள் உதடுகளைத் தொட்டு நின்றது. 

மெட்ராஸ் புனித ஜார்ஜ் கோட்டை அருகில், 18th February, 1816

அன்புள்ள வில்பர், தடித்த காகிதத்தில் ஆர்தரின் எழுத்துக்களின் ஓரத்தில் மை சிறு புள்ளிகளாகத் தோய்ந்திருந்தது. உன்னை என் வீட்டில் சந்தித்த பத்து நாட்களுக்குளாகவே சிலோன், கல்கத்தா என்று கிளம்பி விட்டேன்அவசரமாக பயணிக்க வேண்டிய நிர்பந்தம். இப்பொழுது மக்காவ்வில் நங்கூரமிட்டுருக்கிறேன். எல்லாம் வியாபார நிமித்தம் தான். என்ன செய்ய, சீனர்களை திருப்தி படுத்துவது அவ்வளவு எளிது இல்லை. இங்கு வியாபரம் சற்று மந்தம் தான். இங்கே நான் சந்தித்த மாலுமிகள் அனைவரும் பெண்களுக்கு அடுத்தபடியாக வானிலையைத் தான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வானிலை பரவாயில்லை சீராகி  விட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன் வானிலையின் அச்சு முறிந்து விட்டது போல ஆசியா எங்கும் அமளி தான். 

தூரத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப் பட்டிருந்த கொடி வங்காள விரிகுடாவிலிருந்து எழும்பிய மிதமான காற்றை வருடி, தன்னைத் தானே உதறிக்கொள்ளும் ஓசை துல்லியமாகக் கேட்டது. வில்பர் உட்கார்ந்திருந்த கற் பலகையில், மேலே படர்ந்திருந்த இலவம் பஞ்சு கிளைகளின் நிழல், வில்பரின் வெள்ளை மேலங்கியில் கருங்கோடுகள் இட்டது. கிளைகள் இடையே தெரிந்த வானம் சில மாதங்களுக்கு முன் மூடியிருந்த அழுக்குகள் எல்லாம் துடைக்கப்பட்டு நீலப் படிகம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.

இந்த இயற்கையின் பிறழ்வுகளுக்கெல்லாம் காரணம் எரிமலை வெடிப்பு என்கிறார் நான் சந்தித்த கிழ மாலுமி ஒருவர். சில மாதங்களுக்கு முன் பட்டாவியா தீவுகளுக்கு சில நூறு மைல்கள் தொலைவில் இவரின் கப்பல் சென்று கொண்டிருக்கும் பொழுது தொடர் பீரங்கி சத்தம் போல ஓசை எழும்பியதாம். 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி காலை என்று நேரம் மற்றும் தேதியை துல்லியமாக நினைவில் வைத்திருந்தார் கிழவர். ஏனென்றால் அன்று அவர் பிறந்த நாளாம். சத்தத்தைக் கேட்ட பிற மாலுமிகள் பட்டாவியாவில் டச்சுக்காரர்கள் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள் என்று இவரைக் கிண்டல் செய்தார்களாம். ஆனால், சில நிமிடங்களில் எல்லோரும் அமைதியாகி விட்டனர். அவர்கள் கண்ட காட்சி அப்படி. தூரத்தில் சும்பாவா தீவின் மேல் பெரும் சாம்பல் மேகம் ஒன்று தோன்றி வானெங்கும் விரிந்ததாக இவர் கூறுகிறார். அவர் சொல்வதை வைத்து பார்த்தால் வெடித்தது எரிமலை தம்போராவாகத் தான் இருக்கக் கூடும் என்று நான் அனுமானிக்கிறேன். பகல் இரவானதாகவும், காற்று திசை மாறியதாகவும், பல மைல்களுக்கு கடல் பரப்பு எங்கும் மரங்களும், நுரை கற்களும் மிதந்ததாகக் கூறினார் இந்தக் கிழவர். சில நாட்களுக்கு பின் அந்தத் தீவுகள் பக்கம் சென்ற இவர் நிலத்தின் வடிவமே மாறி விட்டதாகவும், ஏறக்குறைய பத்தாயிரம் பேர் அங்கே இந்த எரிமலையின் சீற்றத்திற்கு பலியாகி இருக்கக்கூடும் என்று என்னிடம் கூறினார்

வில்பர் படிப்பதை சட்டென்று நிறுத்தி கண்களை உயர்த்தினான். மோனிகர் சத்திரத்திற்கு அவன் அளித்த நன்கொடை பத்தாயிரம் பேர்களின் உயிரை காப்பாற்றும் என்று பெல்லி சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது.  

அந்தக் கிழ மாலுமி இன்னொன்றும் சொன்னார். அது எங்கள் முன்னே இருந்த முழு ரம் போத்தலை அவர் மட்டுமே குடித்திருந்ததாலா அல்லது உண்மையைத் தான் சொல்கிறாரா என்று தெரியவில்லை. எரிமலை வெடித்து இரு வாரத்திற்கு பின் சும்பாவா தீவுகளில் இருந்து பல நூறு மைல்கள் தள்ளி இந்திய பெருங்கடலில் அவர்கள் பயணித்து கொண்டிருந்த போது நடுக்கடலில் பனி பெய்ததாம்! அபத்தம் என்று என் மனதில் ஒரு பாகம் கூவினாலும் ஏன் நடந்திருக்கக் கூடாது என்று பல விந்தைகளை கண்ட என் மனதின் மற்றொரு பக்கம் குரல் கொடுக்கிறது. இந்த உலகத்தை நாம் முற்றிலும் புரிந்து கொள்ள இயலாது என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு இது போதும். தத்துவச் சிந்தனைகளை நாம் நேரில் காணும் போது பகிர்ந்து கொள்வோம். கேட்க மறந்து விட்டேன், கடரத்தாரை சந்தித்தாயா? என்ன சொன்னார்? இப்பொழுது திருமதி க்ளாரா பார்க்கர் எப்படி இருக்கிறார்? என் மக்காவ் விலாசத்தை எழுதி இருக்கிறேன், கடிதம் போடு. இப்படிக்கு ஆர்தர்.

வில்பர் மடலை மடித்து மேலங்கியின் பைக்குள் திணித்துக் கொண்டான். குயில் ஒன்று இலவம் பஞ்சு மரத்தின் ஒரு சிறிய கிளையில் இருந்து விருட்டென்று பறந்து சென்றது. அக்கிளையில் இருந்த சிவப்பு மலர் ஒன்று விடுபட்டு  மரத்தடியில் இருந்த க்ளாராவின் கல்லறை மீது விழுந்தது. குயில் அமர்ந்திருந்த கிளை ஆடிக் கொண்டிருந்தது…மேலும், கீழும். 

(ஆசிரியர் குறிப்பு: இந்தோனேசியத் தீவுகளில் இருக்கும் எரிமலை தம்போரா 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெடித்தது. இதன் தாக்கம் உலகெங்கும் இருந்தது என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அந்த ஆண்டில், ஏப்ரல் மாதத்து கடைசி வாரத்தில், மெட்ராஸின் வெப்ப அளவு  3 டிகிரி செல்ஸியஸ் இருந்ததாகவும் சில இடங்களில் பனி பெய்தது என்றும் சில ஆண்டுகளுக்கு முன் நாளிதழ்களில் கட்டுரைகள் வெளியானது.   (உதாரணத்திற்கு, தி ஹிந்து, ஏப்ரல் 17, 2015). அப்படி எதுவும் ஆகவில்லை என்கிறார்கள் சிலர். உண்மை என்ன என்பதை வருங் காலத்தில் ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தும் என்று நம்புவோமாக. ஆனால், புனைவிற்கு சாத்தியக்கூறுகள் போதுமே!) 


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “சாய்ந்தாடி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.