மூர்க்கரோடு இணங்கேல்

டச்சே…..டிரெயின் அரைமணி நேரம் லேட்டாம்.

கார்த்தி அலுத்துக் கொண்டான்.

அரைமணி நேரத்துல வந்துட்டா சரி.

சொல்லி ரோஷிணி ரித்விகாவிடம் கேட்டாள்.

காலேஜ்ல வார்டன் கேட்டா என்ன சொல்றது.

எதையாவது சொல்லி சமாளிச்சுக்க வேண்டியதுதான். வாரம் ஒரு தடவை அதுவும் ஞாயித்துக் கிழமை வெளில போக ரெண்டு மணி நேரம் பர்மிஷன் கொடுத்தது தப்புன்னு சொல்லப் போறாங்க.

சொல்லட்டும் ரோஷி. அப்பத்தான் அவங்களுக்கு  புத்தி வரும். அவங்களுக்கு மட்டுமா நம்ம பேரண்ட்சுக்கும் தான். நீட் கோச்சிங்குன்னு இந்த ஜெயில்ல கொண்டாந்து நம்மளை அடச்சிருக்காங்கல்ல.

எனக்கு கொஞ்சம் பயமாத்தானிருக்குதுடி ரித்வி.

பயப்படாதே ரோஷி. நான் தாத்தா வீட்டுக்குத் தானே போறேன். 

அங்க போனா என்ன ஆகப் போகுது? அங்க வந்து உன்ன புடிச்சி இழுத்துட்டு வந்து திரும்ப கொண்டு வந்து இங்க தான் விடப் போறாங்க. 

நோவே மேன். அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல. தாத்தா அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டார்.

தாத்தாக்கிட்ட சொல்லிட்டியா?

இல்ல. போய் சொல்லிக்குவேன். என் அப்பாயி கொஞ்சம் பயந்த சுபாவம். அப்பாட்ட போட்டுக் கொடுத்துடுவாங்க,

கார்த்தி கேட்டான்.

சரி ரோஷிணி நீ  திரும்ப  போறப்ப உங்க ஆந்தைக்கு என்ன பதில் சொல்லப் போறே?

ஆந்தை. 

கேர்ள்ஸ் ஹாஸ்டல் வார்டன்.

அதான்டா எனக்கு பயமாருக்கு.

பயப்படாதே. நான் சொல்லிக் கொடுத்த மாதிரி சொல்லு.

அம்மா தாயே. நீ ஈஸியா சொல்லிட்டே. சொல்றதுக்கே பயமாருக்கு.

நாங்க பர்சேஸ் பண்ணிட்டு இருக்கறப்ப ரிதிவிகாவுக்கு  ஸ்டமக் பெயின் வந்துடுச்சு. தாங்க முடியலை. பீரியட்ஸ் டைம். அதுனால அவ முன்னாடி கிளம்பிட்டா. நான் அவ பர்செஸையும் சேர்த்து முடிச்சுட்டு வர்றேன். அவ இன்னும் வரலையான்னு கொஞ்சம் ஷாக்கான மாதிரி சொல்லிடு.

கார்த்தி சிரித்துக் கொண்டே சொன்னான்.

எனக்கு இவ மேல நம்பிக்கை இல்ல. சொதப்ப போறா?

சேச்சே.. நம்ம ரோசி குட்டி சமத்து சக்கர கட்டில்ல. ரோஷிணியின் கன்னம் கிள்ளி சொன்னாள்.

சரி.. சரி ஆளுக்கு ஒரு காபி சாப்டுவோமா?

எனக்கு கூல்.

காபி சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள்.

அந்த மரத்தைப் பாரேன். சர விளக்கு மாதிரி  பூ பூத்துருக்கு.

ரித்விகா கை நீட்டிய திசையில் மஞ்சள் சரக் கொன்றை மரம் தன் பூக்களை காற்றில் அசைத்துக் கொண்டிருந்தது.

Your kind attention please train number 22629 Dadar Ten Express from Mumbai to Tirunelveli will be arriving shortly 

in the Platform No. 1. 

வேகமாக ஓட ஆரம்பித்த கார்த்தியை கை தட்டி ரித்விகா கூப்பிட்டாள்.

டிரெயின் வரப் போகுது. இப்ப எங்க போறே?

இரு.. இரு.

திரும்பி வரும் போது இரண்டு கையிலும் இரண்டு தண்ணீர் பாட்டில்கள்.

அடப்பாவி. இதுக்காகவா அப்டி ஓடினே?

ஸ்டேஷன் உள்ற நுழையறப்பவே வாங்க நினைச்சேன். மறந்துட்டேன்.

ரோஷிணி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

ரித்விகான்னா உனக்கு ஸ்பெஷல்டா.

ரித்விகா அவள் கைப் பிடித்து முறுக்கினாள்.

ஏய்.. விடுடி.

கார்த்தி கவலையுடன் கேட்டான்.

மதுரைக்கு போறப்ப காலைல 6 மணியாய்டும். நைட் சமாளிச்சிடுவேல்ல ரித்வி.

கவலப் படாதீங்க பாஸ். ரித்வி ஸ்ட்ராங்க ஆள். அவளோட அப்பா அம்மாவையே சமாளிக்கப் போறா.

டிரெயின் சப்தம் கேட்டது.

இந்த ஸ்டேஷன்ல 3 நிமிஷம் தான் நிக்கும். சூட்கேஸை நான்உள்ற கொண்டு வந்து தரவா.

வேண்டாம் கார்த்தி. ஐ வில் கேரி.

பிளாட்ஃபாரம் அதிர தாதர் எக்ஸ்பிரஸ் வந்து நின்றது.

கார்த்தி டிரெயின் கூடவே கொஞ்ச தூரம் ஓடி வந்தான்.

பை. டேக் கேர்.

அவன் குரல் காற்றில் மறைந்தது.

எதிர் சீட்டிலிருந்த பெண் இவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவரின் காதுகளில் ஏதோ முணுமுணுத்தார்.

வித்தியாசமாக இருந்தது.

ஜீன்ஸ் பாக்கெட்டில் கை விட்டு மொபைல் எடுத்தாள்.

இன்ஸ்டாவைத் திறந்து இவளுக்குப் பிடித்த enola.bedard ஐ ஒப்பன் பண்ணினாள்.

எதேச்சையாக நிமிரும் போது எதிர்சீட் பெண் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தார்.

மெலிதாக எரிச்சல் வந்தது.

எனோலாவில் மூழ்கும் போது யாரோ கனைக்கும் குரல் கேட்டது.

நிமிர்ந்தாள்.

எதிர்சிட்டு பெண்ணின் அருகில் இருந்தவர் தான். இவளை பார்த்து சின்ன புன்னகையுடன் கேட்டார்.

எங்க போறீங்க பாப்பா?

பாப்பா.

அவர் கண்களை பார்த்தாள். லேசாக கலங்கியிருந்தன.

மதுரை போறேன் அங்கிள்.

மதுரைல எங்க?

இல்ல. அங்கேருந்து  பூம்பாறை.

கொடைக்கானலுக்கும் மூணாறுக்கும் நடுப்பற இருக்குமே அதா?

தலையசைத்தாள்.

அவர் ஏதோ யோசனையில் தலையசைத்துக் கொண்டிருந்தார்.

திரும்ப ஃபோனை பார்க்க ஆரம்பித்தாள்.

கால்களில் ஏதோ தட்டுப்பட சடக்கென நிமிர்ந்தாள்.

எதிர் சீட் பெண் இவள் கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்.

பதறிப் போய் எழுந்து நின்றாள்.

எழுந்திரி.. எழுந்திரி. அந்தப் பெண்ணிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

அங்கிள்.. என்ன இது?

உட்காரும்மா.. முதல்ல உட்காரு.

சொல்லுங்க இவங்க ஏன் என் காலைப் பிடிச்சாங்க?

மெளனமாக அவர் பர்ஸைப் பிரித்து ஒரு ஃபோட்டோவை எடுத்து நீட்டினார்.

வாங்கிப் பார்த்தாள்.

ஃபோட்டோவில் அச்சு அசலாக இவள்.

ஓ.. மை காட்.

யார்.. யார் இது?

எங்க பொண்ணு தாரா.

எப்டி இவங்க என்னை மாதிரியே இருக்காங்க.

தெரில.

அந்தப் பெண் சட்டென எழுந்து வந்து குனிந்து ரிதிவிகாவின் நெற்றியில் முத்தமிட்டாள்.

ரித்விகாவிற்கு மெலிதாக கைகள் நடுங்கின.

என்ன? என்னம்மா?

அந்த பெண் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

அவர் கை நீட்டி அந்தப் பெண்ணை அணைத்துக் கொண்டார்.

அழாதே.. அழாதேம்மா.

கண்களைத் துடைத்து விட்டார்.

தண்ணீர் பாட்டிலைத் திறந்து அந்தப் பெண்ணிடம் நீட்டினார்.

சிறிது நீர் அருந்திய பின்னும் அவர் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

ரித்விகா தயக்கமாய் கேட்டாள்.

உங்க பெண்?

முகத்தில் அடித்துக்கொண்டு அந்த பெண் கதற ஆரம்பித்தார்.

அவ இப்ப இல்ல.. எங்கள விட்டு போய்ட்டா.

அதிர்ந்து பார்த்தாள்.

இன்னையோட நாற்பத்தியெட்டு நாட்கள். டாக்டராகணும் டாக்டராகணும்னு சொல்லிட்டே இருப்பா. ஆனா அவளால ரெண்டு தடவையும் பாஸ் பண்ணமுடில.  அந்தப் பயத்துலேயே இந்த எக்ஸாமுக்கு முன்னாலேயே போய்ட்டா.

வெரி ஸாரி அங்கிள்.

கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அவ அஸ்தியைக் கரைக்காத்தான் ராமேஸ்வரம் போய்ட்டு இருக்கோம்.

அவளுக்கும் அழுகை வந்தது.

எங்கிருந்து வர்றீங்க?

மும்பையிலிருந்து.

அங்க?

எஸ்பிஐ ல வேலை பாக்குறேன். இவ இங்க்லீஷ் புரஃபொசர். ஒரே பொண்ணு.

துரை ரயில்வே ஸ்டேஷன் கசகசவென்றிருந்தது.

எதிர்சீட்டுக்காரர் இவள் சூட்கேஸைத் தூக்கிகொண்டார்.

வேண்டாம் அங்கிள். நான் எடுத்துக்குவேன்.

இரு பாப்பா. இவர் தூக்கட்டும். அந்தப் பெண் சொன்னார்.

உங்க டிரெயின்?

அதுக்கு இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கு. நீங்க?

நீன்னே சொல்லுங்க. எனக்கு டிரெயின் கிடையாது. பஸ்லதான் போகணும். கொடைக்கானல் போய் அங்கிருந்து மூணாறு பஸ்ல ஏறினா நடுப்பற பூம்பாறை.

அவ்ளோ தூரம் எப்படிம்மா தனியா போவே? வீட்லேர்ந்து யாரும் வரலையா?

சிரித்துக் கொண்டாள்.

அதெல்லாம் ஒண்ணும் பயமில்லே அங்கிள். நான் எப்பவுமே  தனியாத்தான் போவேன்.

ஏம்மா அப்பா, அம்மா?

இருக்காங்க. அவங்க ரொம்ப பிஸி. இதுக்கெல்லாம் அவங்களுக்கு நேரமில்லை. 

புருவம் நெரித்து யோசித்தார்.

நாங்க கட்டாயம் போகணும். இல்லேன்னா நாங்க உன் துணைக்கு வருவோம்.

ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். நான் பாத்துக்கறேன். உங்க அட்ரசும், ஃபோன் நம்பரும் தான் எங்கிட்ட இருக்கே. ரீச் ஆனதும் கால் பண்ணறேன்.

தலையசைத்தார்.

எங்களுக்காக ஒரு தடவை எங்க வீட்டுக்கு வாம்மா.

நிச்சயமாக .

தலையசைத்தாள்.

அந்தப் பெண் அருகில் வந்து இவளை நெருக்கி அணைத்துக் கொண்டு கன்னம் தடவினார்.

கதவைத் திறந்த தாத்தா ஆச்சர்யத்தில் கத்தினார்.

ஏய்.. குட்டி. இங்க என்ன பண்றே?

அவரின் கூச்சல் கேட்டு அப்பாயி ரூமிலிருந்து வந்தார்.

வா.. வா.. பாப்பா. சந்துரு வந்துருக்கானா?

என்ன பார் அப்பாயி. உம் புள்ளயப்பத்தியே யோசிச்சுட்டு இருக்காதே. அவரெல்லாம் வர மாட்டாரு.

என்னாடி அப்படி சொல்லிட்டே என் புள்ளய.

சரி சரி.. வாசல்ல நின்னே உங்க பஞ்சாயத்த ஆரம்பிச்சுடாதீங்க.

தாத்தா சிரித்துக் கொண்டே சூட்கேஸை எடுத்துக் கொண்டார்.

என்ன சாப்புடறே பாப்பா.

அப்பாயி.. முதல்ல ஒரு டீ குடு. அப்றம் சாப்படலாம்.

கண்ணடிக் கோப்பையை சுழற்றி சுழற்றி உறிஞ்சினாள்.

சூப்பர் டீ அப்பாயி. சென்னைல இதெல்லாம் கிடைக்க மாட்டேங்குது.

தாத்தா சிரித்தார்.

என்ன பாப்பா திடீர்னு?

ஏன் வரக்கூடாதா?

இது உன் வீடுடா செல்லம். எப்ப வேணும்னாலும் வரலாம்.

அது இருக்கட்டும். ராத்திரி இந்த நேரத்துக்கு வர்றே.

காலைலயே கிளம்பிட்டேன் அப்பாயி. டிரெய்ன் லேட். உன் ஊருக்கு பஸ் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தானே இருக்கு. அதான் லேட்டாய்டுச்சு. ஏன் ரெண்டு பேரும் மாறி மாறி கேக்குறிங்க? நான் வேணும்னா கிளம்பட்டா?

தாத்தா பதறினார்.

இல்ல பாப்பா. எக்ஸாம்க்கு இன்னும் பத்து நாள் தானே இருக்கு. அதான். உன் அப்பா நேத்து ஃபோன் பண்ணினான். உன்ன நெனச்சு தான் ரொம்ப கவலப் படறான்.

அடடா. உங்ககிட்ட பேச அவருக்கு நேரமெல்லாம் இருக்கா தாத்தா?

என்னாடி இப்படி சொல்றே? எம்புள்ல சென்னைல பெரிய டாக்டர்ல. அவனுக்கு நேரம் கிடைக்கறப்ப தானே பேச முடியும்.

கன்சல்டிங் ஃபீஸ் எழுநூறு ரூவா கட்டினா உன்கிட்ட டெய்லி பேசுவாரு.

அப்பாயிக்கு கோபம் வந்தது.

என்ன பாப்பா.. சின்ன புள்ளையாட்டம் பேசற.

சரி விடு. உன் அப்பா பேசலை. நான் தான் ஃபோன் போட்டு பேசினேன்.

அதானே பாத்தேன். என்ன விஷயம் தாத்தா?

உன் அப்பாயிக்கு கொஞ்ச நாளா நெஞ்சு வலி வருது. அதான் கேட்டேன்.

அப்பாயியின் கை பிடித்துக் கொண்டாள்.

என்ன அப்பாயி? அடிக்கடி வருதா? உடனே செக் பண்ணனும்.

ஏண்டி தாத்தனும்,பேத்தியும் இப்டி ஆடறிங்க. அதெல்லாம் வாயுக் கோளாறு. ரெண்டு பூண்டு பல்லைத் தட்டிபால்ல போட்டுக் குடிச்சா சரியாய்டும்.

சரியாகும்.. பூண்டு தான் சரியாப் போகும். அப்பா என்ன சொன்னார்? வந்து அழச்சிட்டுப் போறேன்னு சொன்னாரா?

தாத்தா மெளனமாக இருந்தார்.

என்ன தாத்தா? அவருக்கு இங்க வர நேரம் இருக்காது.

இல்ல.. சங்கர் மாமாவை அழச்சிட்டு மதுரைலப் போய் காட்டச் சொல்றான். வாடக காரை எடுத்துட்டு போகச் சொல்றான். பணம் அனுப்பி விடறேன்னு சொல்லிருக்கான்.

தாத்தாவின் கண்கள் சற்று இளகியிருந்தன.

ப்பாத்தியின் வெம்மை குளிருக்கு இதமாக இருந்தது.

காய் கூட்டு நிறைய போட்டுக்க பாப்பா.

தாத்தா சொன்னார்.

என்ன தாத்தா எப்பேலேருந்து சப்பாத்திக்கு மாறினீங்க. எப்போதும் கிழங்கு அடை வைப்பீங்க.

அப்பாயி சிரித்துக் கொண்டே சொன்னார்.

எனக்கு சுகர்.. சுகர்னு சொல்லி டாக்டர் இவரை பயமுறுத்தி உட்டானுங்க. அதனால ஒரு வேள சப்பாத்தி தான்.

சுகரா?

ஆமா. பாப்பா நிறைய இருக்கு. மாத்திரைல கண்ட்ரோல் ஆக மாட்டேங்குது. இப்படியே போனா இன்சுலின் ஊசிதான் போடணுமாம். அதனால தாம் நெஞ்சு வலின்னதும் பயமாருக்கு.

ரித்விகா தலை குனிந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.,

ருப்பட்டிப் பால் சுவையாக இருந்தது.

நாக்கால் உதடுகளைத் தடவிக் கொண்டாள்.

தாத்தா அப்பாயி உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்.

சொல்டா பாப்பா.

நான் கோச்சிங் காலேஜ்லேருந்து ஓடி வந்துட்டேன்.

என்ன ஓடி வந்துட்டியா? சந்துருக்கு தெரியுமா?

தெரியாது. அவருக்கு தெரியக் கூடாதுன்னுதான் ஓடி வந்தேன்.

ஏண்டா கண்ணு?

எனக்கு டாக்டராக பிடிக்கலை தாத்தா

ஏன்?

எனக்கு ஓவியராகனும் தாத்தா.

படிச்சுக்கிட்டே வரையலாமே.

இதெல்லாம் உங்களுக்கு ஓவராத் தெரில.

தலையசைத்தார்.

உங்க பையனை எதுக்கு டாக்டருக்கு படிக்க வச்சீங்க சொல்லுங்க?

உனக்கு தான் நிறைய தடவை சொல்லிருக்கேன்ல.

இப்ப இன்னொரு தடவை சொல்லுங்களேன்.

அம்பது வருஷத்துக்கு முந்தி இது ஒரே காடா இருந்தது. இங்க ஒரு ஆஸ்பத்திரியும் இல்ல. அவசர ஆபத்துக்கு கீழ இறங்கி போகணும்.

உங்க அப்பா எப்டி செத்தார்.

தாத்தா பெருமூச்செறிந்தார்.

கடும் விஷப்பாம்பு  கடிச்சு செத்தார். உடனே மருந்து கொடுத்திருந்தா காப்பாத்திருக்கலாம்.

அதனால தானே உங்க பையன டாக்டருக்கு படிக்க வச்சீங்க.

மெளனமாயிருந்தார்.

சொல்லுங்க தாத்தா?

தலையசைத்தார்.

எனக்காக மட்டுமில்லே. இந்த ஊர் மக்களுக்குக்காகவும்தான். ஆனா..?

என்ன ஆனா? படிச்சு முடிச்சதும் என்னா பண்ணினார்?

அதெல்லாம் எதுக்குடி நீ இப்ப கேக்குற?

அப்பாயி குறுக்கே வந்தார்.

படிச்சு முடிஞ்சதும் இங்க வந்து கிளினிக் ஆரம்பிச்சாரா?

இல்ல. உன் அம்மாவக் கல்யாணம் பண்ணிட்டு மேலே படிக்க போய்ட்டான். அப்றம்?

உன் அம்மாவோட அப்பா கிளினிக்னல சேந்துட்டான்.

நீங்க சொன்னீங்களா?

சொன்னேன். கேக்கலை. உங்க தாத்தாவுக்கு ஒத்தாசையா அங்கேயே இருந்துட்டான்.

கை தட்டினாள்.

சபாஷ். நல்ல புள்ளை. நல்ல அப்பா. என்னையும் அப்படி நெனச்சுட்டார் உங்க புள்ளை.

ஏய். இவளே உனக்கு அப்பன்டி.

அதுக்காக எனக்கு புடிக்காத படிப்ப படிக்கச் சொல்லணுமா?

நீயும் டாக்டராயிட்டா நம்ம குடும்பத்துக்குதானே பெருமை.

பெருமை இல்ல தாத்தா. காசு, பணம், சொத்து, பங்களா, கார், எஸ்டேட்.

அதுவும் இருக்கட்டுமே. டாக்டர் கடவுள் மாதிரிடா.

டாக்டர்னா காசு இல்லே தாத்தா. சேவை. கடவுள் மாதிரி..எந்த கடவுளாவது காசு சேக்க ஆசைப்படுமா தாத்தா.

ஏய்.. என்னாடி உட்டா பேசிட்டேப் போறே பெரிய மனுஷி மாதிரி.

நான் பெரிய மனுஷியானாப்ப என்ன நடந்ததுன்னு தெரியுமா ?

தலையசைத்தார்கள்.

அப்ப ஆறாம் வகுப்பு படிச்சேன். ஸ்கூல்ல வந்துடுச்சு. ரொம்ப பயந்துட்டேன். அழுதுட்டே இருந்தேன்.

 டீச்சர் தான் வீடு வரைக்கும் கொண்டாந்து விட்டாங்க. எவ்ளோ நேரம் அவங்களல இருக்க முடியும். எத்தனை தடவை ஃபோன் பண்ணி சொன்னாங்க தெரியுமா? அம்மாவும் அப்பாவும் எப்ப வந்தாங்க தெரியுமா?

…….

ராத்திரி பன்னெண்டு மணிக்கு.

ஆபரேஷன் இருந்துருக்கும்.

இருக்கட்டும். ஒருத்தர் வந்துருக்கலாம்ல. ஒரு நாளைக்கு நூறு டோக்கன் தாத்தா. நானூறு ரூவா பீஸ். காசு இல்லாதவங்களுக்கு பாக்க மாட்டாங்க. இவங்க தான் கடவுளா தாத்தா?

இல்லம்மா. நீ டாக்டராகி ஏழைங்களுக்கு வைத்தியம் பாரு.

முடியாது தாத்தா. விட மாட்டாங்க. எனக்கும் நூறு டோக்கன் போட்டுடுவாங்க. அதான் போன தடவை நீட் பரிச்சை தப்பு தப்பா பண்ணினேன். இப்ப கேரளாவுல கொண்டு விட்டுட்டாங்க. அதான் ஓடி வந்துட்டேன்.

என்ன ஓடி வந்துட்டியா?

தலையசைத்தாள்.

அடிப்பாவி. என்னங்க சந்துருக்கு முதல்ல ஃபோனைப் போடுங்க

இரு.. இரு  பாப்பா என்ன சொல்லுது கேப்போம்.

ஆமாம். தாத்தா. ஓடிதான் வந்துட்டேன். நீங்க ஃபோன் பண்ணி சொல்றது சொல்லாததும் உங்க விருப்பம். ஆனா ஒண்ணு சொல்றேன்.

என்ன?

டிரெயினல் வர்றப்ப ஒரு குடும்பத்தை பார்த்தேன். என்ன மாதிரி தான் அவங்க பொண்ணு. டாக்டர் பரிட்சைல பெயிலாய்டுவோம்னு பயந்துட்டு ஏழாவது மாடிலேர்ந்து குதிச்சிடுச்சு.

தாத்தா காது பொத்திக் கொண்டார்.

வேண்டாம். சொல்லாதே.. சொல்லாதே.

அப்பாயி அருகில் வந்து இவளை அணைத்துக் கொண்டார்.

இப்ப சொல்லுங்க தாத்தா என்ன பண்றதா உத்தேசம்.

மெளனமாயிருந்தார்.

உள்ளே டெலிஃபோன் மணியடித்தது.

வா.

கை பிடித்து அழைத்துப் போனார்.

அப்பாதான்.

சொல்லு சந்துரு என்ன இந்த நேரத்துக்கு ஃபோன் பண்ணறே?

………

அய்யயோ.. அப்படியா? எங்க போனா?

………

என்னது தெரியலையா?

…………

போலிசுக்கெல்லம் போகாதே. பொம்பள புள்ள பேரு கெட்டு போய்டும்.

……….

இங்க வரலையேப்பா. வந்தா நானே ஃபோன் போட்டு சொல்லிருக்க மாட்டேன். பாத்து நடந்துக்கோப்பா.

தாத்தா ரிசீவரைக் கீழே வைத்தார்.

ரித்விகா ஓடிப் போய் தாத்தாவைத் தழுவிக் கொண்டாள்.

அப்பாயியும் அருகில் வந்து இவர்களை அணைத்துக் கொண்டார்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “மூர்க்கரோடு இணங்கேல்”

Leave a Reply to Raja Raja cholanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.