(1)
மாடு
பூட்டாத கலப்ப
புட்டியில அரிசி கம்பு
நாட்டு சக்கர போட்ட வருத்த எள்ளு
செட்டியாரு கட வாழப்பழம்
செவப்பு திருநீறு
ரெண்டு ரூவா வெத்தலை பாக்கு
இருவத்தியஞ்சி காசு பத்தி
அம்பது காசு சூடம்
தேய்த்தாங்கொட்ட தீத்துன புதேரி தண்ணி
அத்தனையும் படையல் போட்டுருப்போம்
ஆண்ட ஊட்டு கொல்லைல வைக்கப்போற வாரப்பயிருக்கு
ஆனாலும் செறப்பா போகும் ஆடிமாச “நல்லேறு”
ஐப்பசிக்காக காய்ந்துகொண்டிருக்கும் எருவு முட்டுகள்
அதில் முளைத்த சிறு புளியஞ்செடிதான்
என் நிலத்தின் எஞ்சிய புன்னகை
(2)
முந்தி பிறந்தவள்
முதுநூல் தரித்தவள்
முள் மரத்தில் கூர் பிடுங்கி
மூக்கு குத்திக் கொண்டவள்
காய்ந்த களிமண் வெடிப்புகளை அள்ளி
முகத்தில் பூசிய கரிசல் நிலத்தின் சொந்தக்காரி
கற்களால் பாதம் தைத்து
பூண்டுச் செடிகளால்
பாவாடை புனைந்தவள்
உடும்புத்தோல் ஆகுளியில்
உச்சி வெயில் வார்பிடித்து
ஊமச்சி ஓட்டில் துளையிட்டு
அதிர அதிர அடவுகட்டி
உதிர உதிர ஆடிக்கொண்டிருக்கிறாள்
எம் நிலத்தின் ஆதி தாண்டவம்
(3)

ஈத்து வடிந்த பசு இப்போதுதான்
வெளியே தள்ளியிருக்கிறது கன்றுக்குட்டியை
குனிந்து குறியைப் பார்க்கிறாள் மொட்டைக் கிழவி
நாவால் நக்கி நக்கி
கறைந்து கொண்டிருக்கிறது தாய்மை
குளம்புகளை கிள்ளிய பின்
நின்று நின்று விழுகிறது கன்று
அதிகாலையிலே கிணற்றில் ஊற்றி மீந்த சீம்பால்
கிண்ணத்தில் சுண்டி மணக்கிறது
வைக்கோல் சோளத்தட்டையுடன்
ஊரையே வளைத்து வீசுகிறது
ஆலமர விழுதில் ஊஞ்சலாடும் இளங்கொடி
அதைச்சுற்றி பிறப்புப் பாடலை பாடுகின்றன ஈக்கள்
(4)
கோடை வெயில் உறிஞ்சி
நிலத்திற்குள் நுழைந்த செம்மண் நீரில்
மூக்கை நுழைக்கிறது செம்மரிக்கூட்டம்
ஈச்சம் பொந்தில்
அடைகாக்கும் மயில்
நாட்டு உடும்பைப் பார்த்து
வெறித்து அகவுகிறது
மூளக்கொல்லையில்
வேலியடைக்கும் முனுசாமி
ஆடு மேய்க்கும் அஞ்சாயிடம் வெற்றிலையை வாங்கி
கதைகளை மென்று கொண்டிருக்கிறார்
வெயிலில் தகிக்கும் நிலத்தில்
புணர்ந்து பழகுகிறது
வாலிபமான சாரைகள்
ஆடுகள் முள்ளாங்கொத்தை
சன்னமாய் மேய்ந்து முடிப்பதற்குள்
இலுப்பையிலிருந்து இடத்தை மாற்றியது
கதண்டுக் கொளவிகள்
பட்டுபோன மரத்தில் என்ன இருந்துவிடப்போகிறது
கைவிடப்பட்ட கதண்டுகளையும் கொஞ்சம் கிளிகளையும் தவிர
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

தமிழ் மொழி உயிர்ப்பிக்க நீயும் ஒரு விதையாய்………..🌅