பிரமோபதேசம்

சாமி ஒரு கட்டடத்தைச் சுற்றி வருகிறான். பல பேர் குடியிருக்கிறார்கள். எங்கே போவது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறான். ஒரு ஜன்னல் வழியே நான்கு பையன்கள் எட்டிப் பார்க்கிறார்கள்.  

திடீரென்று எங்கிருந்தோ அப்பா வருகிறார். “எங்கே போறே?” என்று ரேபான் ஏவியேட்டர் கண்ணாடி வழியாகக் கேட்கிறார்.

“தெரியலியே.”    

“சரி, என் பின்னாடியே வா!”  

மரங்கள் அடர்ந்து நிலம் சரிவாக இறங்குகிறது. கால் வைக்குமுன் ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறான். அழகு காட்டுவதை அந்த நான்கு பையன்களும் அப்போதுதான் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து சிரிக்கிறார்கள்.  

“வேலை யெல்லம் எப்படி போறது?”  

“இது வரைக்கும் நன்னா போயிண்டிருந்தது. இனிமே தான்…” 

“என்ன பண்ணறதுன்னு தெரியலயா?” 

பதிலை எதிர்பார்க்காமல் அப்பா கிடுகிடு என்று கீழே இறங்கிப் போகிறார். சாமியால் அப்பாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. மெதுவாகக் காலை ஊன்றி இறங்குகிறான். கீழே தார் போடாத ஒரு சாலை. நடப்பவர்களும் சைக்கிளில் போவோருமாக கும்பல். அந்தக் கூட்டத்தில் அப்பா எங்கே போனார்? இரண்டு பக்கமும் பார்க்கிறான். வலப்புறத்தில் பார்க்கும் போது சற்று தூரத்தில் அப்பாவின் கழுத்தும், பின் தலையின் இராணுவக் கிறாப்பும் தெரிகின்றன. ஓடிப்போய் சாமி அவரைப் பிடித்து விடுகிறான். ஆனால் பக்கத்தில் சென்று பார்க்கும் போது… அது அப்பா இல்லை, முதுகில் பையைச் சுமந்தபடி செல்லும் ஒரு பள்ளிக்கூடப் பையன். பஸ் வரும் சத்தம் கேட்டு அதன் வழியிலிருந்து விலகி அவன் ஓரமாக ஒதுங்க… 

முழு விழிப்புக்கு முன் வரும் எண்ண அலைகள். 

அப்பா கனவில் ஏன் வரவேண்டும்? அவருடைய பிறந்தநாளும் இறந்த தினமும் மே நடுவில் இல்லையே. வேறு காரணங்களுக்காகவும் வரலாம். அவரை ஞாபகப்படுத்தும் தகவல், உரையாடல்… ஊகும். அவர் அவனுக்குச் செய்ததை நினைத்துக்கொண்டானா? அப்படியும் இல்லை. கடந்த வாரத்தில் அவன் மனதை ஆக்கிரமித்த எதிர்காலம் பற்றிய ஒரு தீவிரமான கேள்வி அவர் நினைவு நுழையாமல் தடுத்திருக்கும். 

கனவுக்கு என்ன அர்த்தம்? அப்படியொன்று இருப்பதாக அவன் நினைத்தது இல்லை. மனதின் ஆழத்தில் புதைந்த ஆசைகளின் பிரதிபலிப்பு அது, எதிர்காலத்தை உணர்த்தும் திசைகாட்டி இல்லை. ஆனாலும், கனவு மிகத்தெளிவாக நிஜம்போல் அவன் மனத்திரையில் இன்னொரு முறை நகர்ந்தது.  

முழு விழிப்பு வந்து கண்களைத் திறந்தான். ஜன்னல் திரை வடிகட்டிய நகர விளக்குகளின் ஒளியில் ஒரு சிறு அறை. கனமான தொலைக்காட்சி, வட்டமேஜை, நாற்காலிகள். நேரம் 4:25 பழக்கப்படாத கடிகாரத்தில், அத்துடன் பக்கத்தில் சரவணப்ரியா இல்லை. அப்படியென்றால்… இது விடுதி அறை. இன்னொரு படுக்கையில் சூரன். சோர்ந்து தூங்குகிறான். அவனாகவே எழுந்திருக்கட்டும். 

முந்தைய தினம் டென்னஸியின் நான்கு உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான இறுதி டென்னிஸ் போட்டிக்காக இருள் பிரியுமுன்பே கிளம்பி மெம்ஃபிஸ் வந்தார்கள். முன்-மதியத்து சூரியன் வேடிக்கை பார்க்க, முதல் சுற்றில் சூரனின் ப்ரென்ட்வுட் பள்ளிக்கூட அணி எளிதில் வென்றது. மாலையில் ஒளிவிளக்குகளின் செயற்கை வெளிச்சத்தில், கிழக்கு டென்னஸியைச் சேர்ந்த சயன்ஸ் ஹில் பள்ளிக்கூட அணியுடன் இறுதிப்போட்டி. முதலில் ஐந்து ஒற்றையர் ஆட்டங்கள். மிகவும் சிரமப்பட்டு 6-3, 6-4 என்ற கணக்கில் சூரன் அடைந்த வெற்றி மற்ற நால்வரின் தோல்வியில் கரைந்துபோனது. இரண்டு இரட்டையர் ஆட்டங்களுக்கு அவசியம் இல்லாமலே சயன்ஸ் ஹில் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றது. ப்ரென்ட்வுட் பள்ளியின் கோச்சுடன் சேர்ந்து, சாமி வெற்றிபெற்ற அணியினரைக் கைகுலுக்கிப் பாராட்டினான். பிறகு, தன் அணிக்கு ஆறுதல் உரை வழங்கினார் கோச். அது முடிந்ததும் அவருக்கு சாமியும் சூரனும் நன்றி தெரிவித்தார்கள். மற்ற இளைய ஆட்டக்காரர்களிடம், “அடுத்த ஆண்டு நீங்கள் சாம்பியன்ஷிப் வெல்வதற்கு வாய்ப்புகள் நிறைய. குட் லக்!” என்று வாழ்த்து சொல்லி விடைபெற்றார்கள்.   

விடுதி அறையில் நுழைந்தபிறகு தான் சூரன் கவனித்தான். 

“டாட்! நான் என் தண்ணீர் ஜாடியை எடுத்துவர மறந்துவிட்டேன்.”  

பொதுவாக ஆட்டம் முடிந்ததும் ராக்கெட்களின் பையையும் ஜாடியையும் இரண்டு கைகளில் எடுத்துவருவான். களத்தில் இருந்து வெளியே வந்ததும் சில சமயங்களில் சாமி ஜாடியை அவனிடம் இருந்து வாங்கிக்கொண்டதும் உண்டு. 

“ரெண்டுபேருமே மறந்துபோயிட்டோம். திரும்பப் போலாமா?”  

“வேண்டாம். இனி அது அவசியம் இல்லை.” குரலில் ஏமாற்றமும் வருத்தமும். 

உயர்நிலைப்பள்ளியில் படித்த நான்கு ஆண்டுகளிலும் இறுதி வெற்றி எட்டும் தூரத்தில் இருந்தாலும் கையில் அகப்படவில்லை. அதனால் ஏமாற்றமா? 

களைப்பில் உடை மாற்றாமல் வட்டமேஜையைச் சுற்றிய நாற்காலிகளில் அமர்ந்தார்கள். கற்பனைக்கும் சிந்தனைக்கும் இடம் தராத சாதாரண விடுதி அறையில், வஸ்திரத்தைப் போர்த்தாமல் தன் மகனுக்கு பிரமோபதேசம் செய்யப்போவதை சாமி அறியவில்லை.  

“முடிவு எதிர்பார்த்தது தான். சயன்ஸ் ஹில்லுக்கு ஆடிய ஐந்து பேரையும் எனக்குத் தெரியும். அவர்கள் மிகச்சிறந்த ஆட்டக்காரர்கள். ஐவரும் ஒரே பள்ளியில் படித்தது எங்கள் தூரதிருஷ்டம்.” 

வருத்தத்திற்குக் காரணம்?  

“சிறுவன் என்று நான் கடைசியாக ஆடிய ஆட்டம். அதனால் தான் தண்ணீர் ஜாடி என்னுடன் வரவில்லையோ?” என்ற போது கண்ணீர் இல்லாத அழுகை. 

சாமியின் எண்ணங்களும் காலத்தில் பின்னோக்கிச் சென்றன. 

“சாபல் ஹில்லில் நீ விளையாடிய முதல் டென்னிஸ் டோர்னமென்ட். பத்துவயதுக்குக் குறைவான பையன்கள் போட்டியில் நான்கு மாட்ச்களும் ஜெயித்தாய். அதைத் தொடர்ந்து எட்டு ஆண்டுகளில் அந்தந்த வயதுக்கு வெவ்வேறு தகுதிகளில் விளையாடி நீ வென்ற கோப்பைகள், வெற்றியில் இருந்து நழுவிய தோல்விகள். என்னைப் பொறுத்தவரை, பன்னிரண்டு வயதிலும் பதினாறு வயதிலும் மாநிலப்போட்டியின் இரட்டையர் சாம்ப்பியன்ஷிப் வென்றது உன்னுடைய பெரிய சாதனை. பள்ளிக்கூடத்தின் சார்பில் ஆடிய ஆட்டங்களால் மற்ற மாணவர்கள் இடையே உனக்கு மதிப்பு.” 

டென்னிஸைத் தொடர்ந்து வளரும் பருவத்தின் அடையாளமான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நினைவுக்கு வந்தன.   

“சில மாதங்களுக்கு முன் வந்த என் பதினெட்டாவது பிறந்தநாள்.” நான்காவது பிறந்தநாள் சூரனுக்கு ஞாபகம் இருக்கிறது. அதிலிருந்து பிறந்தநாள் வருவதற்கு முன் எதிர்பார்ப்புகள், வந்துபோனதும் ஒரு நிறைவு. இனிமேல் அவை ஒரு ஆண்டு முடிந்ததைக் காட்டும் எண்ணிக்கைகள். அவ்வளவு தான். 

இளமைக்கு இன்னொரு அடையாளம், பள்ளிக்கூட க் கல்வி.   

“இன்னும் இரண்டு வாரங்களில் பன்னிரண்டாம் வகுப்பை முடித்த நிறைவுநாள் விழா ” என்பதை சாமி நினைவூட்டினான். 

கின்டர்கார்ட்டனின் முதல்நாள் காலை. அவனும் அவன் தோழி கேரனும் முந்தைய ஆண்டுகளில் பள்ளிக்கூடம் போகத்தொடங்கிய குழந்தைகளுடன் பஸ்ஸுக்காகக் காத்திருந்தது படம் பிடித்ததுபோல சூரன் மனதில் தோன்றியது. அது ஆச்சரியம் இல்லை. அப்போது எடுத்த படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறான். பதின்மூன்று ஆண்டுகள். கணக்கற்ற நண்பர்கள். எத்தனையோ ஆசிரியர்கள். தேர்வுகள். போட்டிகள். படிப்புக்காக வாங்கிய பரிசுகள். 

வாழ்க்கைக் கட்டங்களில் ஒன்றின் முடிவு. அதை நினைத்து வருந்துவது இயற்கை. ஆனால், அதில் இன்னொரு அத்தியாயத்தின் ஆரம்பம்.  

“இப்போது நீ வயதுவந்த ஆண். ‘பாடம் படித்தாயா? தேர்வுக்குத் தயார் செய்தாயா?’ என்று இனி நான் கேட்கமாட்டேன். நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது உன் பொறுப்பு. உன் கணக்கில் இருக்கும் பணத்தை நீ விருப்பப்படி செலவு செய்யலாம். ஒரு பெண்ணுக்கு பூச்செண்டு வாங்கி அனுப்ப என்னிடம் அனுமதி வாங்க வேண்டாம். இதுவரை உன் க்ரேட் ஷீட் என் பார்வைக்கு வந்தது. இனிமேல் நீ என்னிடம் காட்டினால் தான் நான் அதைப் பார்க்க முடியும். யாரை நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பது, அவர்களுடன் எப்படிப் பழகுவது என்பதெல்லாம் உன் தீர்மானம். நான் குறுக்கிட மாட்டேன்.”  

பாதுகாப்பான கூட்டில் இருந்து சிறகு முறைத்த பறவைக்குஞ்சு பரந்த வானத்தில் பறந்து போக வேண்டும்.

“நீ சொல்லச்சொல்ல எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.” 

“கொஞ்சம் பயமாக இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. நான் விரும்பிப்படித்த ‘மில் ஆன் த ஃப்ளாஸ்’ கதையில் ஒரு உருக்கமான காட்சி. மேகி தன் அண்ணன் டாமை பள்ளியில் இருந்து அழைத்துவரப் போகிறாள். அவர்கள் தந்தை ஒரு வழக்கில் தோற்று, குதிரையில் இருந்து கீழேவிழுந்து படுத்தபடுக்கையாக இருக்கிறார். இருவரும் சேர்ந்து சாலையில் நடக்கிறார்கள். ஜியார்ஜ் எலியட்டின் அற்புதமான வார்த்தைகள்…” என்று நிறுத்தினான். பிறகு நிதானமாக உணர்ச்சிகளை உள்ளடக்கி வார்த்தை வார்த்தையாகச் சொன்னான். “குழந்தைப்பருவம் என்கிற பொன் வாசற்கதவுகள் உனக்குப் பின்னால் நிரந்தரமாக சாத்தப்பட்டுவிட்டன.” 

“நான் ஆசைப்பட்டாலும் திரும்ப அதில் நுழையமுடியாது.” 

“ஊகும்.” சாமி தலையசைத்தான். 

உரையாடல் தொடரமுடியாமல் நின்றது. சூரியோதயத்துக்கு முன்பே தொடங்கிய நாள் முடிவுக்கு வர, இருவருக்கும் உடனே வந்த தூக்கம்.  

ஐந்து மணிக்கு மெல்ல எழுந்து சாமி குளியலறைக்குப் போனான். வெளியே வந்தபோது சூரன் நாற்காலியில். 

“எழுப்பிவிட்டேனா? சாரி!”  

“வீட்டுக்குப் போகும் ஆசையில் எழுந்துவிட்டேன்.”  

காலை உணவுக்கு ஆறுமணி வரை காத்திராமல் அறையிலேயே சாமி தயாரித்த காப்பி மட்டும் அருந்திவிட்டுக் கிளம்பினார்கள். 

“மூணு மணிதானே. அம்மாவின் உப்புமாவை நினைத்துக்கொண்டே…” 

விடுதிக்கு விடைகொடுத்து ஊரைத் தாண்டியதும், முந்தைய இரவின் உரையாடலை மறக்காமல் சூரன்,

“வளர்ந்துவிட்ட ஆள் என்ற எண்ணம் உனக்கு எப்போது வந்தது?”    

“அம்மாவும் நானும் முதன்முதலில் சந்தித்தபோது எங்களுக்கு பதினாறு வயது. புன்சிரிப்புகளும், எப்போதாவது பேசிய ஒருசில வாக்கியங்களும் சிறுவர்கள் விளையாட்டு. இருபத்தி நான்கு வயதில் சம்மதம் கேட்டு அம்மாவுக்கு நான் கடிதம் எழுதியது நான் வயதுக்குவந்த தருணம். வீட்டுக்கு பக்கத்தில் ஒரு முக்கோணப் பூங்கா. கடிதத்தின் பதிலை எதிர்பார்த்து அதைச் சுற்றி நடந்தபோது தீவிர யோசனை. மாணவ வாழ்க்கையில் திருமணம் என்கிற பொறுப்பை என்னால் ஏற்கமுடியுமா? இருவரும் எப்படி எங்கே வாழப்போகிறோம்?” 

“நான் அறிந்தவரையில் உங்கள் வாழ்க்கை நல்லபடியாகப் போனது.” 

“அம்மாவின் பொறுமை முக்கிய காரணம்.” 

இதே நெடுஞ்சாலையில் இதே நேரத்தில் நேற்று வந்தபோது இருந்த மகிழ்ச்சி இன்று போகும்போது அப்பாவுக்கு இல்லையென்பதை சூரன் கவனித்தான். 

“உனக்குக்கூட வருத்தம் போலத் தெரிகிறது.” 

சாமி உடன்பாடாகத் தலையசைத்தான். 

“ஏன்?”  

“எப்படி விளக்குவது என்று தெரிய வில்லை. நீயும் ஒரு நாள் தந்தையாகும் போது உனக்குப் புரியும்.”   

தந்தை தொடரட்டும் என சூரன் காத்திருந்தான்.  

“டென்னிஸ் கோர்ட்டில் உனக்கு நான் எவ்வளவோ அறிவுரை கொடுத்திருக்கிறேன். ஐந்து வயதில், ராக்கெட்டை எப்படி பிடித்துக் கொண்டு பந்தை வீசி அடிப்பது என்பதில் இருந்து… சென்ற வாரம், ட்யுஸ் இல்லாத ஆட்டத்தின் ஏழாவது பாய்ன்ட்டை எப்படி விளையாடுவது என்பது வரை. இனி அப்படிச் செய்வதில் அர்த்தம் இல்லை என்று உணரும் போது வாழ்க்கையில் ஒரு பகுதி முடிந்து விட்டது போல் இருக்கிறது.”   

சூரனுடைய வாழ்க்கையில் ஒரு பெருமாற்றம். அது தந்தையும் பாதித்து இருக்கிறது. நேற்று அவர் அவனுக்கு அறிவுரை கொடுத்தார். இப்போது அவன் அவருக்கு ஆறுதல் தர வேண்டும்.  

“என் இரண்டு,மூன்று வயதில் தினம் தூங்குவதற்கு முன் படுக்கையில் படுத்தபடி எனக்கு நீ புத்தகம் படித்தாய்.”   

கோ டாக் கோ!. டென் ஆப்பில்ஸ் அப் ஆன் டாப். ஹாப் ஆன் பாப். இன்னும் எத்தனையோ.”  

“அந்த புத்தகங்களின் பெயர்களை நான் மறந்தாலும் உனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான்கு வயதானபோது எனக்கே படிக்கத் தெரிந்த பிறகு அந்த வழக்கத்தை நாம் விட்டு விட்டோம். அப்போது நீ வருத்தப் பட்டாயா?”   

“இல்லை. உனக்கு சைக்கிள் ஓட்டவும், ஃப்ரிஸ்பி எறியவும் சொல்லிக் கொடுத்தேன்.” 

“பன்னிரண்டு வயதில் கணக்கு.” 

“கரெக்ட்.”  

“பதினைந்து வயதான போது கற்றுக்குட்டி லைசன்ஸ் வாங்கிக் கொண்டேன். அடுத்த ஓராண்டில் எப்போது நான் காரோட்டினாலும் நீ பக்கத்தில் உட்கார்ந்து – திருப்பத்தில் மெதுவாகப் போ, ஸ்டாப் என்றால் கார் நகராமல் நிற்க வேண்டும், இரண்டு கைகளாலும் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொள், லேன் மாறும் போது கழுத்தை நன்றாகத் திருப்பிப் பார் – இப்படி சொல்லிக் கொண்டே வந்தாய். பதினாறாம் பிறந்த நாளின் போது டிரைவிங் டெஸ்ட்டிற்குப் போனோம். அது முடிந்து எனக்கு முழு லைசன்ஸ் கிடைத்த பிறகு, ‘இனி நான் இல்லாமலே நீ தனியாக ஓட்டலாம்’ என்று சொன்னாய். அப்போது நீ வருத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை.” 

“அப்போது கெமிஸ்ட்ரி ஒலிம்பியாட் போட்டிக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன்.” 

“அத்துடன் உன் மேற்பார்வையில் (அமினோ ஆசிட்) சிஸ்டினை அளவிடும் ஆராய்ச்சி.” 

“ஒன்று போனால் இன்னொன்று இருந்திருக்கிறது, இது வரையில்…”   

எந்தத் தொடரும் காலமெல்லாம் தொடரும் என்கிற நியதி இல்லை.  

“இப்போது உன் வாழ்க்கையிலும் ஒரு அத்தியாயத்தின் முடிவு. உன்னைச் சார்ந்து ஒரு உயிர் இல்லை யென்பதால் வரும் நிம்மதி. மற்ற பெற்றோர்கள் மாதிரி இல்லை. நான் பிறப்பதற்கு முன் பன்னிரண்டு ஆண்டுகள் அம்மாவும் நீயும் மட்டும் தான். குழந்தைக்கு நூற்றியிரண்டு டிகிரி என்கிற பதற்றம், கீழேவிழுந்து எலும்பு முறிந்ததால் அவசர சிகிச்சைக்கு அழைத்துப் போகும் கலவரம், எந்தப்பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம், கல்லூரிப்படிப்புக்கு பணம் சேமிக்க வேண்டுமோ என்கிற யோசனை, மாலையில் வெளியே போன பையன் இரவு ஒருமணி வரையிலும் வீடு திரும்பவில்லையே என்ற தூக்கத்தை விரட்டும் கவலை – இவை எதுவும் இல்லாமல் மறுபடியும் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்…” 

சாமியின் பார்வை நெடுஞ்சாலையும் தாண்டி தொலைவில் நின்றது. 

“ஒருவிதத்தில் நீ சொல்வது ரொம்ப சரி. நீ பிறந்து சில வாரங்கள் இருக்கும். அப்போது ட்யுக் பக்கத்தில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்தோம். ஒருநாள் மாலை அம்மாவுக்கு ஓய்வு தருவதற்காக, உன்னைப் போர்வையில் சுற்றி பக்கத்தில் இருந்த பார்க்குக்கு எடுத்துப் போனேன். உன்னை மடியில்வைத்து நான் உட்கார்ந்தபோது, இன்னும் பதினெட்டு ஆண்டுகள் இந்தக்குழந்தையைப் பாதுகாத்து பொறுப்போடு வளர்க்க வேண்டுமே என்ற திகைப்பு. கடந்துபோன நாட்களோடு ஒப்பிட்டால் வரப்போகும் ஆண்டுகள் அப்போது யுகம் போல நீண்டன.” 

“இப்போது திரும்பிப்பார்த்தால்…”  

“சந்தோஷமாக ஓடிப்போன பதினெட்டு ஆண்டுகள்.”  

“அந்த நீண்ட காலம் முடிவுக்கு வரப்போகிறது, இல்லை வந்துவிட்டது. அம்மாவும் நீயும் என்னை  நினைக்காமல் உங்களைப்பற்றி யோசிக்கலாம்.” 

“ஆகஸ்ட் கடைசியில் உன்னைக் கல்லூரியில் விட்டுவிட்டு வந்தபிறகு.” 

அதில் தந்தைக்கு முழுதிருப்தி இல்லையெனப் பட்டது. அதனால், 

“நீ விரும்பினால் அதற்குப்பிறகும் எனக்கு அறிவுரை கொடுக்கலாம்.” 

“எங்கள் நண்பரின் பெண் ப்ரீதா உன்னைப்போல நன்றாக டென்னிஸ் ஆடுகிறாள். ஷிகாகோ பல்கலைக்கழகத்தில்…”  

“நீ அறிவுரை தரலாம். ஆனால் அதை ஏற்றுக்கொள்வேன் என்பது நிச்சயம் இல்லை” என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.  

இருவருக்குமே மனம் இலேசானது. ஜாக்ஸன் நகரத்தைக் கடக்கும் வரையில் மௌனம். தொலைவில் காற்றாடி சுழல ஒரு சிறிய விமானம் மேலே எழும்பிப்பறந்தது. அதைப் பார்த்தும் மெம்ஃபிஸ் வருவதற்கு முன், தந்தை வீட்டுக் கணினியில் சியாட்டிலுக்குப் போய்வர டிக்கெட் தேடியது ஞாபகம் வர.. 

“சியாட்டிலில் அறிவியல் கூட்டமா?”   

“அதைவிட வேறொரு முக்கியமான விஷயம்.” 

அதனால் தான் சில தினங்களாக அவர் முகத்தில் ஆழ்ந்த யோசனையோ? 

“எங்கள் குழுவில் இருக்கும் டாம் மெக்ஹில்லை உனக்குத் தெரிந்திருக்கும்.”   

“ம்ம்.. அவனுக்கு நான்கு பையன்கள்.” 

“சென்ற ஆண்டு அவன் இங்கிருந்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கு நகர்ந்தான்.” 

“பதவி உயர்வுடன்.” 

“கரெக்ட். அங்கே ஆல்ஸைமர் பற்றிய அவன் ஆராய்ச்சியின் விரிவிலும் வளர்ச்சியிலும் நிர்வாகத்துக்கு ரொம்ப சந்தோஷம். பரிசோதனை மருந்துகளைத் தயாரிக்க ஒரு கெமிஸ்ட்டை உதவிக்கு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்களாம். அதனால் சியாட்டிலுக்கு வந்து பார்க்கும்படி என்னை அழைத்திருக்கிறான்.”  

“சரி, உங்கள் குழுவைச் சேர்ந்த ஜேசன்?”  

“இங்கே தான் இருக்கிறான். என்னுடன் சேர்ந்து அவன் அனுப்பிய மானியத்துக்கு நிதி கிடைத்தால் என் சம்பளத்தைப் பற்றிய கவலை இராது.”  

“கிடைக்க வாய்ப்பு.”  

“நிறைய. ஆனால் டாமின் உதவியாளன் அளவுக்கு நிச்சயம் இல்லை. அங்கே என் சம்பளம் பல்கலைக்கழகத்தின் கணக்கில். சுதந்திரம் அதிகம்.” 

தந்தையின் தர்மசங்கடம் புரிந்தது.    

“உனக்கு நான் அறிவுரை தரலாமா?”  

“தாராளமாகத் தரலாம். நீதான் இப்போது பெரிய மனுஷன் ஆகிவிட்டாயே.”  

“டாமை நம்பி எந்த முயற்சியிலும் இறங்காதே! சியாட்டில் போவதில் நேரம் தான் வீண்.” 

சூரனின் ஆணித்தரமான அறிவுரையை சாமி எதிர்பார்க்கவில்லை.  

“ஏன்?”  

“டாம் ஊரைவிட்டுப் போகுமுன் அவன் வீட்டில் ஒரு விருந்து. உன் ஆராய்ச்சிக்குழுவில் சம்பந்தப்பட்ட பலர் வந்திருந்தார்கள். வீட்டுக்குப் பின்வெளியில் பெரும்பாலும் ஆண் குழந்தைகள். அவர்களை வேடிக்கை பார்த்த நான். அடுத்த வீட்டின் பின்னால் ஊஞ்சலும் சறுக்குமரமும். அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு பெண் அவற்றில் விளையாடினாள். ஒன்பது பத்து வயது இருக்கலாம். பார்த்தவுடனே எனக்கு (குழந்தைப்பருவ நண்பன்) ஏரன் ஞாபகம் வந்தது.” 

“அவளுக்கும் டௌன் சின்ட்ரோம்.”  

“அப்படித்தான் தோன்றியது. டாமின் பெரிய பையன்கள் பீட்டரும் பாட்ரிக்கும் பேஸ்பால் விளையாடுவதை நிறுத்தவிட்டு இரண்டு கொல்லைகளுக்கும் நடுவில் நின்றுகொண்டு அவளைக் கேலி செய்தார்கள். ‘இரண்டும் இரண்டும் எவ்வளவு?’ என்ற கேள்விக்கு ஐந்து விரல்களையும் பிரித்தாள். ‘இன்று என்ன கிழமை?’ என்று கேட்டதற்கு, ‘ஃப்ரைடே’ என்று சொல்லிவிட்டு எண்ணெயில் பொரிப்பதுபோல கைகளை ஆட்டி எடுத்தாள். இப்படியே இன்னும்… பீட்டரும் மற்ற பையன்களும் அவளுடைய அசட்டு பதில்களால் சிரிப்பதை அவள் உணரவில்லை. அவர்களுடன் போன ஜேசனின் பையன் ஆன்ட்ரூ உடனே திரும்பிவந்தான். ‘ஏன்?’ என்று கேட்டேன். ‘நான் யாரையாவது கேலி செய்தால் என் அம்மாவுக்குப் பிடிக்காது’ என்றான். பையன்கள் கேலி செய்ததை ஜன்னல் வழியாகப் பார்த்து, அந்தப் பெண்ணின் அப்பா டாமைக் கூப்பிட்டு இருக்க வேண்டும். அவர்களைக் கண்டிக்க அவன் வந்தபோது பீட்டரும் பாட்ரிக்கும் ஒன்றும் நடக்காததுபோல முகத்தை வைத்துக்கொண்டு பேஸ்பால் ஆடுகிற மாதிரி பாசாங்கு செய்தார்கள்.”   

அவன் என்ன சொல்லவருகிறான் என்று தெரிந்தாலும் சாமி குறுக்கிடவில்லை. 

“பொய் வேஷத்தை பீட்டரும் பாட்ரிக்கும் அப்பாவிடம் இருந்து கற்று இருக்க வேண்டும். அம்மா பக்கத்தில் இல்லை என்றாலும் அவளுக்கு ஒப்புதல் இல்லாத ஒரு காரியத்தை ஆன்ட்ரூ செய்யவில்லை. அது அப்பாவிடம் இருந்து வந்த குணம். எந்த சூழ்நிலையிலும் நான் ஜேசனை நம்புவேன். டாம் வழிக்கே போகமாட்டேன்.”  

“நீ சொல்கிறபடியே டிக்கெட்டை ரத்து செய்து விடுகிறேன். இதில் இன்னொரு ஆச்சரியம்” என்று அவன் பக்கம் திரும்பிச்சொன்னான்.   

“என்ன?”  

“இன்று காலை விழிப்பதற்குமுன் ஒரு விசித்திரக் கனவு.”  

அதன் விவரங்களைக் கேட்ட சூரன், 

“உன் அப்பாவும் கனவில் இந்த அறிவுரைதான் கொடுத்தாரோ?”    


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.