
கொளுத்தும் வெய்யிலில்
வியர்வை நீரை
வழித்தெடுத்து
பூமியில் சிந்தி
கிளறும் தாத்தாவிற்கு
இந்த பூமிதான்
தாய்
களைப்பைப் போக்க
அதன் மடியிலேயே
படுத்துறங்குவார்
அசந்துறங்கும் தாத்தாவிற்கு
குழந்தைகள் போல்
தென்றலை வீசும்
தென்னங்கீற்றுகள்
தாய்ப்பால் போல
நீரைச் சுரந்து
தாகம் தணித்து
நெஞ்சை நனைக்கும்
கிணற்றில்
சூரியனும் படுத்துக் கிடக்கும்
தாத்தாவைப் போல
தினம் தினம்
வளரும் கன்றுகளை
அண்ணாந்துப் பார்த்து
அக மகிழ்வார்
தாயைப் போல
தாத்தா!
வளர்ந்தாலும்
எப்போதும்
தனது குழந்தையென
தாத்தாவின் காலடிகளை
நெஞ்சில் சுமக்கிறாள்
பூமித்தாய்
திடீரென
மாண்டு போனார்
தாத்தா!
வளர்ந்து
காய்க்கத் தொடங்கிய
மரத்தில்
சில கனிகள்
உதிர்ந்து விழுகின்றன
தாத்தாவிற்கு
கனிகள் தருவதாக
அசைந்து நெகிழ்கிறது
மரம்
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

தாத்தா –
காற்றில் கலந்த சுவாசம்.