ரோபோ தமிழ்க் குழப்பம் 2075

வருடம் 2075.

உலகெங்கும், ரோபோக்கள், பல மொழிகள் பேசி, பல வகையிலும் மனிதர்களுக்கு பொருமையாக உதவுவது மிகவும் சாதாரண விஷயம். கால் சென்டர்களில் ரோபோ, வங்கிகளில் ரோபோ, ஏன், கடைகளில் ரோபோ என்று உலகம் முழுவதும் ரோபோ புரட்சி நிகழ்ந்து வரும் காலம். ஒரு காலத்தில், உணவு விடுதிகளில், ரோபோவைப் பார்த்து கூடிய கூட்டங்கள், இன்று இல்லை. வாழ்க்கையின் அங்கமாக ரோபோக்கள் உலவத் தொடங்கி விட்டன. பல வளர்ந்த நாடுகளில், சரியான கட்டுப்பாடுகளுடன் ரோபோக்கள் அறிமுகமாகி சக்கை போடு போடுகின்றன.  மனிதர்களின் நோய்களுக்குக்கான மருந்துகளுக்கு அடுத்தபடியாக, அதிகக் கட்டுப்பாடு நிறைந்த ஒரு உலகம், ரோபோ உலகம். 

என்னதான் மனித மொழியாக்க எந்திரவியல் (Natural Language Processing NLP) வளர்ந்தாலும், பல்வேறு மனித மொழிகள் எந்திரங்களுக்கு ஒரு சவாலாக இருப்பது உண்மை. அதுவும் தமிழ் போன்ற மிகப் பழைய மொழிகளில் உள்ள பிரச்சினைகள் ஏராளம். வழக்கத் தமிழ் மாறிக் கொண்டே இருப்பதால், இது ரோபோக்களுக்கு மேலும் ஒரு சவால்தான். 

காவல் பணிகளுக்கு ரோபோக்கள் மேற்கு உலகில் நன்றாக செயல்படவே, இந்தியாவும் இவ்வகை ரோபோக்களை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு சோதனை முயற்சியில் கடந்த 5 ஆண்டு காலமாக (2070 முதல்) படிப்படியாக அறிமுகப்படுத்தத் தொடங்கியது. 

இது, 2075 –ல், இரண்டு காவல் ரோபோக்களுக்கு இடையில் தமிழ் நாட்டில் நடைபெறும் ஒரு கற்பனை உரையாடல்.

ரோ2725: வணக்கம் ரோ8999. உங்களது தமிழ்நாடு அனுபவம் பற்றி நிறைய படித்திருக்கிறேன். சில சந்தேகங்கள் கேட்கலாமா?

ரோ8999: தாராளமாக

ரோ2725: என்னுடைய பயிற்சி ஜெர்மெனியில் நடந்தது. பிறகு, இத்தாலி, மால்டோவா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் காவல் பணியில் சில வருடங்கள் பணியாற்றினேன். அதன் பிறகு, கடந்த ஒரு வருடமாக தமிழ்நாட்டில் காவல் பணி.

ரோ8999: நல்லது, சந்தேகம் என்ன?

ரோ2725: இத்தனை நாடுகளில் பணியாற்றிய பொழுது ஏற்படாத சங்கடம், எத்தனையோ பயிற்சிக்குப் பின்னும், தமிழ்நாட்டில், அத்தனை சங்கடம்.

ரோ8999: தமிழர்கள் அமைதியானவர்கள். உங்களுக்கு அப்படி என்ன சங்கடம் இங்கு? சில குற்றங்கள் இங்குள்ள மனிதர்களும் செய்யத்தான் செய்கிறார்கள். மற்றபடி, இங்கு மற்ற நாடுகளில் இல்லாத சங்கடம் என்ன?

ரோ2725: என்னை, ஆரம்பத்தில், அரசியல் கூட்டங்களுக்குக் காவல் பணியில் அமர்த்தினார்கள். அதில் வந்ததுதான் வம்பு. 

ரோ8999: புதிய ரோபோ காவலாளிகளை, அரசியல் காவல் பணிக்கு அனுப்பக் கூடாது என்று நான் எவ்வளவு முறை ஆலோசனை வழங்கினாலும், ஏனோ தவறு நடக்கத்தான் செய்கிறது. எந்திரங்களை, 21 –ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மனிதர்களின் மொழியை புரிந்து கொள்ளவில்லை என்று கிண்டலடித்தார்கள். உங்களது அனுபவம் எப்படி?

ரோ2725: முதல் அரசியல் கூட்டமே குழப்பமாக இருந்தது. தமிழில், ‘செயல்’ என்றால் வேலைதானே? எவரோ ஒருவரை, ‘செயலாளர்’ என்றார்கள். கடைசி வரை அவர் எதுவும் செய்தது போலத் தெரியவில்லை. பேசிக் கொண்டே இருந்தார்.

ரோ8999: அது சும்மா, ஒரு அரசியல் பதவி. ரொமப சீரியஸாக எடுத்துக்காதீங்க. எல்லா அரசியல்வாதிகளும் பேச மட்டுமே செய்வார்கள்.

ரோ2725: அடுத்த கட்சி கூட்டத்தில், பெரும்பாலும் ஆண்களே இருந்தார்கள். ஒரு தலைவர், ஒரு மணி நேரம், ஏதேதோ பேசினார். பெண்களின் கூந்தலை அழகுபடுத்துவதுதானே, தமிழில் ‘பின்னல்’? அவர் பேசி முடித்தபின், அங்கு ஒருவர், ‘பிண்ணிட்டாருடா தலைவர்’ என்று சொன்னவுடன் எனக்கு ஒரே குழப்பம். தலைவர் வெறும் பேசத்தானே செய்தார். இதில் பெண்களின் கூந்தல் எங்கு வந்தது?

ரோ8999: அது பேச்சுத் தமிழ். அதாவது, தொண்டர்களுக்குத் தலைவரின் பேச்சு மிகவும் பிடித்துவிட்டது என்று பொருள்.

ரோ2725: மற்ற மொழிகளில், இப்படிப் புரியாமல் தவிக்க அதிக வாய்ப்பில்லை. இப்படி, இன்னொரு கூட்டத்தில், தொண்டர்கள் சொன்ன, ‘வச்சு செஞ்சுறுவோம்’ என்ற வார்த்தைகள் மிகவும் குழப்பின. ’வச்சு’ என்பது ‘வைத்து’ என்பதன் பேச்சுத் தமிழல்லவா? ‘செஞ்சுறுவோம்’, என்பது ‘செய்து விடுவேன்’ என்பதன் பேச்சுத் தமிழ். இரண்டையும் சேர்த்தால், ஒன்றும் புரியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும், அல்லது வைத்துக் கொள்ள வேண்டும். அதென்ன வைத்து செய்தல்?

ரோ8999: அதற்குப் பொருள், ‘சரியான நேரம் பார்த்து, காரியத்தில் இறங்குவோம்’. அரசியல் கட்சிகள் இப்படி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 

ரோ2725: அதுகூட பரவாயில்லை. இன்னொரு அரசியல் கூட்டத்தில் நான் என் வேலையைச் செயத்தில், தாற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப் பட்டேன்.

ரோ8999: அப்படி என்ன நடந்தது?

ரோ2725: ஒரு அரசியல் கூட்டத்தில், பேசிய அரசியல்வாதியைக் கைது செய்து விட்டேன். ‘நாளை தமிழ்நாட்டில் புரட்சி வெடிக்கும்,. ரத்த ஆறு ஓடும்’, என்று சொல்வது, கொலை செய்யப் போவதை பெருமையாகச் சொல்வது அல்லவா? அந்த அரசியல்வாதியைக் கைது செய்வதில் என்ன தப்பு?

ரோ8999: இதெல்லாம் நீங்க சீரியஸாக எடுத்துக்க கூடாது. அரசியல்வாதிகள் இப்படி பேசுவது தமிழ்நாட்டில் ஒரு 110 வருட வழக்கம். சும்மா, கூட்டத்திற்கு வந்த தொண்டர்களை உணர்ச்சிவசப்பட பேசும் வார்த்தைகள். அவை ஒரு குற்றத்திற்கான முன்னறிவிப்பு ஆகாது.

ரோ2725: அரசியல் கூட்டம்தான் இப்படியென்றால், இலக்கியக் கூட்டங்களும் இங்கு குழப்பமாகவே உள்ளது. இந்தியாவில் பேய் பற்றிய வதந்திகள் அதிகம் இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். இலக்கியக் கூட்டம் ஒன்றிற்கு காவல் பணியில் பெரிய சிக்கலாகி விட்டது. 

ரோ8999: இலக்கியக் கூட்டத்தில் அப்படி என்ன குழப்பம்?

ரோ2725: போன நூற்றாண்டில், யாரோ கண்ணதாசன் என்ற கவிஞர் அருமையான தமிழ்க் கவிதைகள் எழுதினாராம். அவரது கவிதை பற்றிய ஒரு கருத்தரங்கத்திற்கு என்னை அனுப்பினார்கள். அங்கு பேசிய ஒருவர், ஒரு கவிதையைச் சொல்லிவிட்டு, ‘இங்கதான் நிற்கிறார் கண்ணதாசன்’ என்றார். 93 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவர், எப்படி அந்தக் கருத்தரங்கில் வந்து நிற்க முடியும்? உடனே, அவரைக் கைது செய்து விட்டேன்.

ரோ8999: சரியாப் போச்சு. இதற்கு அர்த்தம், மற்ற கவிஞர்களை விட உயர்ந்து நிற்கிறார் என்று பொருள். இலக்கியத் தமிழ் சூழலிலும் இப்படி சில வார்த்தைகள் இருக்கத்தான் செய்கிறது.

ரோ2725: கல்லூரி விழா ஒன்றிற்கு பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்பட்டேன். இந்தியர்கள் கணக்கு விஷயத்தில் மிகவும் திறமையானவர்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன். ஆனால், அந்தக் கல்லூரி மாணவர்களின் சில வார்த்தை பயன்பாடுகள் என்னைக் குழப்பியது. ஒரு பெண்ணை சுட்டிக்காட்டி, இன்னொரு மாணவன் அவளை ‘கணக்கு பண்ணிட்டான்’ என்றார்கள். அதெப்படி ஒரு பெண்ணை இன்னொரு மாணவன் கணக்கு பண்ண முடியும், அவள் என்ன எண்ணா அல்லது சமன்பாடா?

ரோ8999: இதுவும் ஒரு நெடுநாளைய பேச்சுத் தமிழ். ‘கணக்கு பண்ணுவது’ என்பது, ‘வசப்படுத்துவது’ என்று பொருள் கொள்ளலாம். 

ரோ2725: இன்னொரு சந்தேகம் கேட்கலாமா?

ரோ8999: தாராளமாக

ரோ2725: தமிழர்கள் எதற்கு எடுத்தாலும், ‘சூப்பர்’ என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்திக் குழப்புகிறார்கள். மிகச் சிறிய இடைவெளியில், திறமையாக ஓவியம் தீட்டிய ஒருவரது சாதனையை, ஏன் ‘சூப்பர்’ என்று சொல்ல வேண்டும்? ஆங்கிலத்தில் Super என்றால் பெரிது என்றல்லவா பொருள்? Super market  என்பது மிகப் பெரிய மார்கெட் அல்லவா? பின் ஏன் தமிழர்கள், ‘சூப்பராக இருக்கு’ என்கிறார்கள்.

ரோ8999: உங்களது கேள்வி நியாயமானது. எப்படி இது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால். தமிழர்கள், ‘சூப்பர்’ என்பதை ஒரு தமிழ் சொல் போலவே பயன்படுத்துகிறார்கள். என் எண்ணம், Superb  என்ற ஆங்கிலச் சொல்லை Super  என்று சுருக்கி விட்டார்கள் என்பது. ஆனாலும், இந்தப் பயன்பாடு சற்று குழப்பம் அளிக்கும் ஒன்று. தங்களது பிடித்த நட்சத்திரத்தை, ‘சூப்பர் ஸ்டார்’ என்று சொல்வது தமிழர்களின் நெடுநாளய வழக்கம். அதே போல, தங்களுக்குப் பிடித்த்தை, ‘சூப்பராக’ இருப்பதாகச் சொல்லுவார்கள். ஆங்கிலத்தில், incredible, Great, Fantastic போன்ற ஒரு பயன்பாடு.  

ரோ2725: ஒரு விஷயத்தில் இந்த்த் தமிழ்நாடு வித்தியாசமாக இருக்கிறது. எல்லா இடத்திலும் இந்த எந்திராபிமானம் கொண்டாடப் படுவதில்லை. இங்கு எந்திரங்களுக்கு வருடத்தில் ஒரு நாள், விடுமுறை அளிப்பது நல்ல விஷயம்.

ரோ8999: ஒரு காலத்தில் இங்கு மனிதர்கள் பயன்படுத்தும் எந்திரங்கள், வாகனங்கள் மற்றும், கருவிகளுக்கு ஓய்வு என்று இருந்தது. நாளடைவில், இதுவே எந்திராபிமான தினமாகி விட்டது! இது போல வேறு சந்தேகங்கள் இருந்தால், தாராளமாக என்னை அணுகுங்கள். நன்றி!


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.