
“40-வது துணைவேந்தராக, பேரா.கோ.சுகு- பெருவுடையார்ப் பல்கலைக்கழகத்திற்கு நியமனம் – ஆளுநர் உத்தரவு” – தகவல்கள், பேப்பர் கட்டிங்ளில் காட்சி தந்தன. வாட்ஸ் அப்பில் பரவின.
“அன்புத் தமிழனே, வருக, வருக” என்று கறுப்பு வெள்ளைக்கலரிலும், “அறிவொளியை தந்த மாண்பமை, மேதமை கவர்னருக்கு நன்றி” என்பது தாமரைமலர் கலரிலும், “புது ரத்தம் பாய்ச்சி, எங்களுக்கு வாழ்வு தந்த கல்வி அமைச்சருக்கு நன்றி” என்பது இரு வெவ்வேறு வண்ணங்களில் – கறுப்பும், சிவப்புமாயும் – இருந்தன.
“30 ஆய்வுக்கட்டுரைகள், 10 ஆராய்ச்சிமாணவர்களை உருவாக்கியவர், 10 பன்னாட்டு கருத்தரங்குகளை நடத்தியவர், 30 ஆண்டு பல்கலைக்கழக அனுபவம் கொண்டவர், நிர்வாகத்தில் பல பதவிகளை வகுத்தவர்” என்பதோடு, அவரும் கவர்னரும் இருந்த படங்கள் மூன்றாம் பக்கத்தில் செய்திகளாக இருந்தன. காலை பத்து மணிக்கு இன்னமும் அரைமணி நேரமிருந்தது.
பதிவாளர் பரபரத்துக்கொண்டிருந்தார். அய்யா, “இப்ப வந்துருவாரு”. அவர் நம்ம மாவட்ட மினிஸ்டர்கிட்ட ரொம்ப வருசமா பழகினவரு”. போங்கப்பா. நான் தானே, பரிந்துரைக்கமிட்டி மெம்பர்ஸ்-க்கு பயணப்படியும், இருக்கைப்படியும் தந்தவன். எனக்கு தெரியாதா? போனல்யே பேசி காரியத்தை பக்காவா முடிச்சுருவாரு. பயங்கர கனெக்சன்ஸ். நாமதான் பார்த்து ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்” சொல்லிக்கொண்டே, எல்லோருக்கும், புதிய நியமனம் பற்றிய ஒரு சுற்றறிக்கையை தயார் செய்ய உத்தரவிட்டார்.
எல்லா ஹெட்களுக்கும், மறந்திராமா, மொத்தம் 72 பேர் இருக்காங்க, காலையில டைம்முக்கு கரெக்டா வெள்ளை மாளிகைக்கு வரணும் சொல்லுங்க – போனில், என்று சொல்லிவிட்டு துனைவேந்தர் ரூம்க்குள் சென்று நறுமணம் வீசுகிறதா என்று காற்றில் மோந்து பார்த்தார்.
எல்லாம் சரி. பழங்களை இடம் மாற்றி வைக்க சொன்னார். “ஆப்பிளை இந்தப் பக்கம் எவன் வைச்சுது” சொல்லிவிட்டு, அவரே பழங்களை மாற்றினார். வைத்தார். அலைபேசி அழைப்பு வந்தது.
“சப்தம் போடாதிர்கள்” என்று யாருமேயில்லாத அறையில் மெல்லமாக சொல்லிவிட்டு, “அய்யா, எல்லாம் ரெடிங்க அய்யா”. முதல்ல, புலத்தலைவர்கள், அய்யா. அப்புறம், துறைத்தலைவர்கள், அய்யா. அப்புறமா, மற்றவர்கள், அய்யா. அப்புறமா, நிரந்தர பணி ஊழியர்கள் அய்யா. அப்புறமா, மாணவர்கள், அய்யா. கடைசியா, தொகுப்பு ஊதிய ஊழியர்கள், அய்யா. எல்லாம் ஒரு மணிக்குள்ள முடிஞ்சுருங்க அய்யா. “எல்லாம் ரெடிங்க, அய்யா” மறுபடியும் சொன்னார் – சொன்னபோது உடலும், தலையும் குனிந்திருந்தது. அவருடைய பதிலில் அய்யாத்தனம் தெரிந்தது.
சரியாக, ராகுகாலம் முடிந்த போது, ஒரு கார் “துணைவேந்தர்” என்ற பெயருடன் அலுவலகம் உள்ளே நுழைந்தது. டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு, ஒடிச்சென்று, காரின் கதவை திறந்துவிட்டு, “அய்யா, வாங்க,” என்றான்.
திறந்த கதவின் மிக அருகில் பவ்யமாக நின்றுகொண்டு, பதிவாளர் ஒரு சிவப்புக்கலர் பொக்கேயை கையில் கொடுத்து “வாங்க, அய்யா”, “வணக்கம், அய்யா” சொல்லிவிட்டு, ஒரு ரோபோவுக்கு சொல்லிக் கொடுப்பதைப் போல, ஒவ்வொரு படியிலும், “அய்யா, படிங்க, அய்யா, படிங்க” சொல்லிச்சொல்லி அழைத்துச்சென்றார். பின்னால், ஒரு கூட்டமே சென்றது.
அறைக்குள் நுழைந்ததுமே, இரண்டு கைகளால், கன்னத்தில் போட்டுக்கொண்டு, மெல்ல நடந்து, அவருடைய நாற்காலியில் அமர்ந்தார். யாரையும் பக்கத்தில் விடவில்லை.
டேபிளுக்கு முன் நின்று, எல்லா புலத்தலைவர்களும், துறைத்தலைவர்களும் – ஒரு அணியாக வந்து, ஆப்பிள்களையும், மாலைகளையும், எலுமிச்சைப்பழங்களையும் தந்து “வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தலைவா” என்பதைப் போல சென்றார்கள்.
பெரும்பான்மையான தொகுப்புப் பணியாளர்கள், கையில் கலர் பட்டையை அணிந்த ஒரு சில மாணவர்கள் வந்து வரவேற்பு வாழ்த்து தெரிவித்தார்கள். சரியாக, 12.30 க்கு எல்லாம் முடிந்தது. ஏராளமான தொலைபேசி வாழ்த்துக்கள். அன்று மட்டும், “நன்றி” என்பதே அவர் வாழ்நாளிலேயே அதிகமாக உச்சரித்த நாளாகாயிருக்கும்.
கிளம்பும் முன், “என்னோட சப்பாத்தி நேரத்தை மிஸ் பண்ணிட்டேன். சரி. முதல் நாள் தானே” – அங்கிருந்தவர்களிடம் பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பினார். நாள் 22-12-2024. அன்றைய நாள் முழுவதும், “சப்பாத்தி நேரம்” என்றால் என்ன என்பது பற்றி பேசிக்கொண்டார்கள்.
ஒரு சிலர், அது ‘ஒரு குறியீடு’, இன்னும் சிலர், ‘ஒரு ரகசியச் சொல்’, இன்னும் சிலர், ‘அவர் மினிஸ்டர்கிட்ட வழக்கமா பேசற நேரத்தை சிலேடையா சொன்னாரு’ என்றும், ‘இல்ல, நம்ம எல்லாரையும் சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்திடுவேன்னு சொல்றாரு’ – சிலேகித்தார்கள். சப்பாத்தி என்பது ஒரு வாரபேச்சுப்பொருளாக இருந்தது. இரண்டு மூன்று மாதத்திற்குள், “சப்பாத்தி நேரம்” என்ன என்பதைக் கண்டுபிடித்து சொல்லி சிரித்தார்கள்.
“பாருப்பா. இங்கே எல்லாருக்கும் சுகர் இருக்கு. ஆனா, அவருக்கு மட்டும் சுகருங்கற மாதிரி, ஓவர் சீன். கரெக்டா, பதினோரு மணிக்கு சப்பாத்தியை விண்டுகிட்டு சாப்பிடுவார். யார் இருந்தாலும் கவலைப்படமாட்டாரு, வேறு எதுவும் சாப்பிடக்கூடாதாம். பிஸ்கெட் கூட ஆகாதாம்.
வெறும் சப்பாத்தி மட்டும் தானாம். டாக்டர் சொல்லியிருக்காராம். அதுவும் அந்த சேர்ல அப்படி உட்கார்ந்துகிட்டு, ‘உனக்கு வேணுமான்னு ஒரு மரியாதைக்குக்கூட எதிர்ல இருக்கற ஆள்கிட்ட கேட்காமா’, அவர் பாட்டுக்கு தின்னுட்டிருப்பாரு. நல்லா கேட்டுக்குங்க, புரிஞ்சுக்குங்க” சொல்லி சிரிக்க ஆரம்பித்தார்கள்.
அவருக்கு ‘சப்பாத்திப்புலவர்’- பட்டப்பெயரும் வழங்கப்பட்டது. இந்த பெயர் நண்பர்களுக்குள் கிசுகிசுத்து, மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது.
நேரம் தவறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக, வெளி கேட்டில் நிற்க ஆரம்பித்தார். எல்லோரும் நேரம் தவறமால் வரவேண்டும்- வருகைப்பதிவேட்டை பத்தரை மணிக்குள் தன் பார்வைக்கு, தன் டேபிளில் வைக்க உத்தரவிட்டார். ஒழுங்கு, ஒழுக்கம் -அவருடைய தாரக மந்திரம் – மற்றவர்களுக்கானது, அவருக்கல்ல என்பதையும் கண்டுபிடித்தவிட்டார்கள்.
ஒரு கூட்டத்திற்கும் அவர் மட்டும் நேரத்திற்கு வரமாட்டார். பல்கலைக்கழகம் நடத்தும் எல்லா கூட்டங்களிலும் அவர் மிக நீண்ட நேரம் பேசுவார் என்பதையும் கவனித்துக்கொண்டார்கள். கூட்டம் கூட்டுவது அந்தந்தத் துறைத்தலைவரின் கடமை.
“மாணவர்களின் படிக்கும் நேரம் அய்யா, கொஞ்சம் நேரம் கழிச்சு அனுப்புறங்கய்யா” என்ற தத்துவப்பேராசிரியருக்கு ‘அடிபணிவு-பாடம்’ எடுக்கப்பட்டது.
அவர், எல்லா தலைப்புகளிலும். எந்த நேரமும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார். சமூகவியல் கருத்தரங்கமா? அவருடைய உயர்ந்த சமூகப் பார்வை இருக்கும். உளவியல் கருத்தரங்கமா? உங்கள் மனதை புட்டு புட்டு வைப்பார். இயற்பியல் கருத்தரங்கமா? அவருக்கு தெரியாத குவாண்டம் பிஸிக்ஸா? எல்லாம் கூகுள் அப்பாவின் உதவிகள். சரியா தவறா – கிடையாது. சும்மா, அடித்து விளையாடுவார். கேப்பே கிடைக்காது. சொருகு சொருகு என்று சொருகுவார்.
“சான்ஸே இல்ல, சூப்பர் டாபிக் சார், யாரும் இதுவரைக்கும் இந்த டாபிக்கை தொட்டதில்லை, நாம சாப்பிடற ‘கலக்கி’ மாதிரி கலக்கீட்டிங்க, சார்” சொன்ன உளவியல் துறை உதவி பேராசிரியரை துறைத்தலைவராக அமர்த்தி அழகு பார்த்தார். பாவம். உளவியல் பேராசிரியர். தன்னிடம் பி.எச்.டி படித்த மாணவன் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.
இதாவது பராவியில்லை, சிறப்புச் சொற்பொழிவாளர்களுக்கு, சொல்பமாக, அய்ந்து நிமிடம் மட்டுமே கிடைக்கும். “சரக்கு இருந்தால் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கும் பேசலாம், அதற்கு நானே ஒரு மிகச்சிறந்த உதாரணம்” – துணைவேந்தர் பேசியதைக் கேட்டபிறகு, பெரும்பான்மையான பேராசிரியர்கள் “அவரு பேசி முடிக்கட்டும். நாங்க அப்புறமா வர்றோம்” கேலி நிராகரிப்பு செய்யும் அளவுக்கு புகழ்பெற்றார்.
இதனால், அவருக்கு ‘சரக்கு மன்னன்’ என்ற பட்டப்பெயரும் தந்தார்கள். அவருடைய பேச்சுக்கு “மன்னர் சரக்கு” என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, “பட்டாசு கிளப்புவேன், பயப்படமாட்டேன், ஓடி ஒளியமாட்டேன், தலை வணங்கமாட்டேன்” – அவருடைய பேச்சால், அவருக்கு ‘பட்டாசு-பாபா’ பெயரும் ஒரு வருடத்திற்குள் தேடிவந்தது.
இதெல்லாம், அந்த ஒரு துறையின் கருத்தரங்கம் நடக்கும் வரைக்கும். அந்த துறை, “சிவப்பதிகாரத்துறை”. அதன் தலைவர், பேரா. உ.சுகு. ஒடிந்த உடல். தாடி. கலைந்த, தேய்க்காத சட்டை. பாரகன் செப்பல். ஒரு தெத்துப்பல் சிரிப்பு. அவரைப்பற்றி கேட்டால், ‘கன்பைட்டர்’, சொசு, (சொல்லால் அடிக்கும் சுந்தரன்), போராளி. தப்புகளைத் தட்டி கேட்பதற்கு தயங்கமாட்டார் சொல்லி மாள்வார்கள்.
“அகக்கண்” பற்றிய உசுகுவின் ஒரு நாள் தேசிய கருத்தரங்கில், மாண்பமை துணை வேந்தர், அலுவல் பளு காரணமாக, வருகை தருவதற்கு மூன்று மணி நேரம் தாமதமானதால், சிறப்புச் சொற்பொழிவாளர் பேசிவிட்டதால் ஒரு பேராசிரியர் தனது கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்த போது, போன் காலுக்கு மேல் போன் செய்தபின், வந்த துணைவேந்தர், கடைசி பெஞ்ச்சில் உட்கார்ந்தார்.
துறைத்தலைவர் அழைத்தும், மேலே செல்லவில்லை. புலத்தலைவர் கொஞ்சிக் கெஞ்சினார். அவரில்லாமலே துவக்கவிழா அரங்கேறியது மட்டுமல்ல, உணவு இடைவெளியும் வந்தது. அவர் செம காண்டில் இருக்கிறார் என்பதை பிடிகொடுக்காமல் பேசுகிறார், இருக்கிறார், செய்கிறார், உட்காருகிறார், என்பதன் மூலமாக எல்லோருக்கும் புரிந்தது.
வந்தவர்களை ஒரு பார்வையால் அளந்தார். மொத்தம் அழைக்கப்பட்ட இருபது பேர்களில் பத்து பேர் இருந்தனர். ஒரு பத்து மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். பதிவாளரை கையால் அழைத்தார். “எல்லாம் உள்ளூர் காரங்க மாதிரி தெரியறாங்க” – கோபத்தில் கேட்டார்.
இல்லீங்க, அய்யா. எல்லாம் வெளி மாநிலங்கய்யா. கேரளா, ஆந்திரா, கர்நாடகா-விலிருந்து வந்திருக்காங்க. அய்யா. நடத்தனும்.
இதைக்கேட்டவுடன், “நான் என்ன ஆம்னி வேன் வைச்சு பிஸினஸா பண்றேன். ஆந்திரா, கர்நாடாகான்னு கூவறதுக்கு. போய்யா. வேலையைப்பாரு. ஆமா, “எவ்வளவு பணம் கேட்டார். நாம எவ்வளவு தந்தோம்? ஒப்புதல் எவ்வளவுக்கு கொடுத்தோம்” -மெல்ல கேள்விகளால், வரப்போவதைக் காட்டினார்.
“அய்யா, அவர் கேட்டது 1,20,000 அய்யா. நாம, வெறும் 12,000/- மட்டும் கொடுக்கிறோம். 12,000/ரூபாயில ஒரு தேசிய கருத்தரங்கம் நடத்தறது ரொம்ப கஸ்டம். இவரு கூப்பிட்ட அத்தனை பேரும் வந்துட்டாங்கய்யா. சொந்தச் செலவுங்க அய்யா. யூ.ஜி.சி. செமினார் பணத்தை எல்லாம் தொகுப்பு ஊழியர்கள் சம்பளமா மாத்திட்டோம். நீங்க தான் அனுமதி தந்தீங்க”.
“எதுக்கு 12,000? அதை, 10,000/-மா மாத்துங்க. எல்லாரும் 12,000-த்தில தானே பண்ணாங்க. இவங்க மட்டும், நான் வர்ரதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு மரியாதை இல்லான்னா பரவாயில்ல, என் போஸ்ட்க்கு மரியாதை தரனும்யா. மரியாதை-ன்னா என்னனு உளவியல்துறை பார்த்து கேளுங்க” சொல்லிவிட்டு வேகமாக நடந்தார். அவருடன் அவரின் துண்டை ஏந்திக்கொண்டு, அவருடைய பி.ஏ. ஓடி காரில் ஏறினார்.
காரின் கதவுக்கு பக்கத்தில் வந்து, கார் ஜன்னலின் கண்ணாடி பாதி திறந்த நிலையில், வெளியில்,
“அய்யா, இன்னமும் பணம் கூட கைக்குத் தரவில்லை, அவர் சொந்த காசிலேதான், பண்றாரு. நாம கஸ்டம் கொடுக்கக்கூடாது. அதுமில்லாமல், ஒரு நூறு பேராவது மத்தியானம சாப்பிட வருவாங்க. சோறு இல்லன்னு சொல்ல முடியாது. கட்டுப்படுத்த முடியாது. அய்யா. கோவிக்காதிங்க. அய்யா. ஏதோ அவரால முடிஞ்ச அளவுக்கு பண்றாரு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும், அய்யா.
“என்னய்யா. ரொம்ப பேசறே. நான் வர்ற வரைக்கும் காத்திருக்க முடியாதா? “
அய்யா, கோவிக்காதிங்க. இப்ப, மத்தியானம் ஒரு மணிங்க. அய்யா.
“அதுக்கு”?
அய்யா. ஒரு நாள் செமினார்ங்க, அய்யா. ரொம்ப நேரம் காத்திருந்தாரு. உங்களுக்கு போன் கூட பண்ணாரு. வந்தும் பாத்தாரு. நீங்க தான் அனுமதி கொடுக்கலை.
எனக்கு வேற வேலையில்லாயா? என்பேரை ரொம்ப சின்னதா போட்டிருக்கு? இதை எல்லாம் பார்க்கமாட்டிங்களா? போஸ்ட்-க்கு மரியாதை குடுங்க.
துணை வேந்தரின் நெற்றிக்கண் திறந்தது. அந்த கருத்தரங்கப்பற்றிய ஒரு கோப்பும், நான்கு மாதமாக, நகரவில்லை. நூறுமுறை நடந்தும், வந்த பேராசிரியர்களுக்கு பயணப்படியும் வரவில்லை. தரவில்லை. சலித்துப்போனார்கள் – நடந்தவர்களும், வந்தவர்களும்.
ஒரு அய்ந்து மாதம் கழித்து ஒரு நாள், துணைவேந்தரிடம் தகவல் தெரியும் சட்டத்தின் கீழ், “ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அரசுப் பணத்தில் குடிக்கிறார், அது பற்றிய செலவு ஆணைகளை தருமாறு” ஒரு தாக்கீது கோரியது.
பதிவாளர் மெல்லச் சிரித்து விட்டு, “அய்யா, உங்களைத்தான், நீங்க, அன்னைக்கு ஹெட்ஸ் மீட்டிங்கல, தண்ணீர் கூட என் வீட்லிருந்து தான் கொண்டு வர்ரேன்னு சொன்னீங்க இல்லையா? நான் ரொம்ப நேர்மையானவன், என்னுடைய குருவே உவேசான்னு சொல்லி அவரும் நீங்களும் பழகனுது பற்றி பேசினீங்க இல்லையா, அதுக்குத் தான் அவன் அந்தமாதிரி அப்படி போட்டிருக்கான்” என்றார்.
“அவனைக் கூப்பிடுங்கள்”, என்றார் ஒருமையில்.
“வணக்கம், அய்யா”.
உட்காரச்சொல்லாமல், “என்ன கண்டபடி தகவல் கேட்கிறீங்க. தூக்கியிருவேன். கவனம். நான் யார் தெரியுமா” – கத்தினார். கையும் காலும் ஆடியது. உங்களுக்கு என்ன பிரச்சனை?
“ஹெட்ஸ்மீட்டிங்லே, உவேசா உங்களோட குருவுன்னு சொன்னீங்க. எனக்கு அதல ஒரு பிரச்சனையில்ல. ஆனா, அவரோட நாங்க பேசிப்பழகினோம், என் தோள்மீது கை வைத்துப்பேசுவார் என்றெல்லாம் சொல்லியது துணைவேந்தருக்கு பண்பல்ல. அழகல்ல. உண்மையை மட்டுமே பேச வேண்டும். சிவனே இருந்தாலும், நாங்க எதிர் கேள்வி கேட்போம். தப்பு தப்புதான்.” என்றவனிடம்,
என்னோட வயசு என்ன?
“சுயவிவரத்தகவல் படி, 61 வயசு”
என்ன மரியாதை இல்லாயா?
சரிங்க அய்யா. 61 வயசுன்னா, நீங்க பிறந்தது, 1963ன்னா. உவேசா இறந்த ஆண்டு 1942. எப்படிங்க அய்யா?
“விளம்பர பேச்சுஉரிமை” பற்றி கேட்டிருக்கியா? அட அதப்பற்றி உனக்கு என்னவென்று தெரியுமா? சட்டத்தில, துணைவேந்தருக்கு” இடைமறித்து படி,
“உண்மை. உரிமை இருக்கு, ஆனா, துறைத்தலைவர்கள் மீட்டிங்ல இல்லை. உண்மையை மட்டும் பேசனும். காரம், மசாலா, அலங்காரம் எதுவுமிருக்கக்கூடாது.”
“எனக்கா, புத்திமதி சொல்றே. ரொம்ப ஆடாதே. நான் ரொம்ப மோசமானவன்”, ஆமா, உன் பேரைச் சொல்லு? தொண்டையின் அடியிலிருந்து சப்தம் வந்தது.
நான் “பேரா. உ. சுகு”
“அவனுக்கும், உனக்கும் ‘உ’வும், ‘கோ’-வும் மட்டும் தான் வித்தியாசம்”, நண்பர்கள் போனவாரம் சொன்னதை நினைத்துக் கொண்டு மெல்ல சிரித்தான்.
“நீ என்ன போஸ்ட்ல இருக்கே”?
பேராசிரியர். துறைத்தலைவர்.
“எவ்வளவு பெரிய போஸ்ட். நீ இப்படி கேட்கலாமா”?
துணைவேந்தர் எவ்வளவு பெரிய போஸ்ட்? நீங்க அப்படி பண்ணலாமா?
“எப்ப ஜாயின் பண்னே”?
ராவ் பகதூர் திவான் பாஸ்கரச்செட்டி டைம்மில்ல.
“அந்த திமிர்தான். அந்த ஆளு ஒரு பிராடு. அவனும், அவனோட ஆளுங்களும். அவரோட அத்தனை அப்பாய்ண்டமென்டையும் ரிவியூ பன்றதுக்கு உத்தரவு போடறேன். கோப்பை ரெடிபண்ணுங்க. யார்கிட்டே மோதற தெரியுமா” – கத்தினார்.
பதிவாளர் ஒன்றும் பேசவில்லை. தானும் அந்த நேரத்தில் சேர்ந்தவர் என்பதால், “அய்யா, அய்யா, விடுங்க அய்யா, ஒரு மெமோ மட்டும் குடுங்க, அதுவே போதும்” என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
பேரா. உசுகு அவருடைய அறைக்குள் திரும்பவதற்குள், தலைமை மாற்றம் உத்தரவு வந்தது. ஒரு மாதம் கழித்து அவர் மீது, அடையாளம் தெரியாத ஒரு ஆண் தந்த, பாலியியல் புகார் பாய்ந்தது. கமிட்டியும் அமைக்கப்பட்டது. விசாரணையில் ஆதாரமில்லாததால் விடுதலையும் செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் ஒருவர் பெயர் மட்டுமே கெடுக்கப்பட்டது.
கரைந்த மாதங்களோடு, இருவரின் கனத்த மெளனமும் சென்றது.துணைவேந்தரின் நிர்வாகத் திறனை பாராட்டினார்கள். “மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை”, “எல்லாரும் எல்லாம் பேசமுடியாது, பேசக்கூடாது”, “அகராதி புடித்த, புடித்த அவனுக்கு அது தேவை, போராளியும் போராளியும் சண்டை, கெட்ட காலம்” என்றனர்.
பேரா.உ.சுகுவின் பேரைச் சொன்னாலே துணை வேந்தரின் முகம் மாறுவதாக கவலைப்பட்டனர். அவர் மீது ஒரு இருபது மெமோக்கள் அடுத்தடுத்து பாய்ச்சப்பட்டன. ஒவ்வொன்றிற்கும், பதில் வந்தது. முதல் வருடம் ஒருவருக்கு அபிமான வருடமாகமும், மற்றொருவருக்கு அவமான வருடமாகவும், கழிந்தது.
மாண்பமையின் ஒராண்டு வணக்க வருட நிறைவு விழாவுக்கும், அவருடைய மகளின் இரண்டாம் திருமணத்திற்கும், உசுகுவைத் தவிர எல்லோரும் அழைக்கப்பட்டனர். இவருக்கு அவர் பேரைக் கேட்டாலே, சொன்னாலே, வெறுப்பு – வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு தெரிய வந்தது. இவரை அவர்கள் ஒரங்கட்டினர்.
இரண்டாம் வருட ஆரம்பத்தில், உசுகுவின்கல்வி-உற்பத்தித்திறனை காட்டும்படி, சிண்டிகேட் ஒப்புதலுடன் ஓலை அனுப்பப்பட்டது.
அதற்கு, உசுகு கோர்ட் படியேறினார். அவருடைய மனுவில், பாரபட்சமில்லாமல், துணைவேந்தர் தனக்கு பிடிக்காதவர்கள் எல்லோர் மீதும், வெறுப்பைக் காட்டுவதாகவும், உமிழ்வதாகவும், அது அவருடைய சனிக்குணம் என்றும், ஆகவே, அவர் துணைவேந்தர் பதவிக்கு பொறுத்தமானவர் அல்ல என்றும் மனுவில் தெரிவித்து,
தன்மீது மட்டும் சிறப்புக்கவனம் செலுத்துவதாகவும், மற்றவர்களுக்கு இது போன்ற உற்பத்தி ஓலை அனுப்பப்படவில்லை என்பதால், அது வெறுப்பிற்கு கீழ் வருவதாகவும் பதில் அளிக்கப்பட்டது. அவருக்கும் கோர்ட்டிலிருந்து முதல் பிரதிவாதி – அடிப்படையில், ஒரு தாக்கீது வந்தது.
அதைப் படித்தவுடன் துணைவேந்தரின் முகம் வெளிறி மாறியது. வியர்த்தது. பத்து பன்னாட்டு கருத்தரங்குகள் நடத்தாமல் பொய் சொல்லி பதவிக்கு வந்தவர், அதற்கான ஆதாரங்களைத் தரும் படியும், காட்டும்படியும் – சொல்லப்பட்டு இருந்தது.
“அவரைக் கூப்பிடுங்க” என்றார் மரியாதையுடன்.
“அய்யா, .இருங்க. நான் கேட்டு சொல்றேன். ஏய், யாருப்பா? துறைத்தலைவர். போனைப் போடுங்க. போனை கையில் வைத்துக்கொண்டே, “அய்யா, அவன் இன்னைக்கு விடுப்பு, லீவுலே இருக்கான். சல்லிப்பையன், அவன் கிட்ட போயீ நீங்க ..”
பதிலைக்கேட்டுக்கொண்டே, அவரோட நெம்பர் என்ன என்று கேட்டு, போனில் அழைத்தார், அது அணைந்திருந்தது. அன்று முழுவதும் பல்கலைக்கழகமே ஆச்சரியத்தில் மூழ்கியது.
“சப்பாத்திப்புலவர்” திடீர்ன்னு ஏன் மாத்திச்சுடுறாரு?. மாறிட்டாரா? இருக்க முடியாது. அவர், சாவு வீட்டில அவர் தானே பொணம், கல்யாண வீட்லே அவர் தானே மாப்பிள்ளை”, சொன்னவர்கள், கேட்டவர்கள் ஆச்சரியப்படும்படி, அவருடைய அறைக்கே துணைவேந்தர் வந்தும் விட்டார்.
வந்தவருக்கு “வாங்க, வணக்கம் அய்யா”, சம்பிராதயமாக சொல்லிவிட்டு, கட்டிடமே ஒட்டுமொத்த மொளனமாக இருக்க வைத்தார்கள். மிக மெல்ல பேசினார்கள். மிக மிக மெதுவாக கேள்விக்கேட்டார்கள். அவருடைய அறைக்குள் சென்ற போது, எல்லோரையும் வெளியே நிற்கும்படி சொன்னார் -பதிவாளர் உள்பட.
பதிவாளர் பதறிவிட்டார். “அய்யா, உங்க பாதுகாப்புக்கு” ..இழுத்தவரை கையால் அடக்கினார். இதைப்பார்த்துவிட்டு, பதிவாளர் பதவி அம்போ என்றும் சிலர் நினைத்தனர். அப்படி, நினைத்தவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும் தெரிந்தது. ஆறு ஆண்டுகள் – பதிவாளர், அல்லவா?
உள்ளே சென்றவர், கொஞ்ச நேரத்தில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வெளியே வந்தார். வேகமாக சென்றார். பதிவாளர் பதறிப்போய், “அய்யா, அய்யா” குழுந்தையைப் போல கூப்பிட்டுக்கொண்டு பின் தொடர்ந்தார். அதற்குபிறகு, துணை வேந்தர் முகத்தில் நிரந்தரமாக கோபரசம் குடிகொண்டது. குடியிருந்த கோவில் போல, வக்கீல்களை பின் தொடர்ந்தார்.
இரு சுகுக்களுக்கும் ‘யார் வெல்வார்கள்’ என்ற அனுமான வருடமாக இரண்டாம் வருடம் முடிந்தது. இரண்டாம் ஆண்டு விழா எந்தவிதமான சுரத்தில்லாமல் முடிந்தது. ஒரு சிலபேரே வந்தார்கள் – நூறாவது கோரிக்கை மனுவுடன்.
“சுட்ட சப்பாத்திக்கு என்ன மரியாதை” என்றும், ‘சுடாத சப்பாத்தி”-க்கு மரியாதை வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டனர்.
இருவரும் நெற்றிக்கண்ணை திறந்து திறந்து மூடிக்கொண்டார்கள் – வக்கீல்கள் மூலமாக. வணக்க வருடத்திலிருந்து, வறுக்க வருடத்திற்கு மாறினார்கள்.
மூன்றாம் வருடத்தின், மூன்றாம் மாதத்தில், ஒரு நாள், துணை வேந்தரின் நியமனம் செல்லாது, பதவிக்கு தகுதியற்றவர். ஆனால், அவர் அனுப்பிய ‘உற்பத்தி-ஓலை’ செல்லும் என்ற தீர்ப்புக்குப் பிறகு, ஒரு மீட்டிங்கும் கருத்தரங்கமும், கூட்டமும், பேச்சும், சிறப்புச் சொற் பொழிவுகளும், நடக்கவில்லை. நடத்தவில்லை.
எல்லாவற்றையும் எல்லோரும் தள்ளிவைத்தார்கள். சிறை வைக்கப்பட்ட பைத்தியக்கார அரசன் போல நடந்து கொண்டார்கள். மெளனம், மெளனம். மெளனம்.
இருவரும் மறுபடியும் கோர்ட்டுக்கு போனார்கள். அங்கே, உசுகோவின் பிரமாணப்பத்திரத்தில், இதுவரை, அய்ந்து கட்டுரைகள் மட்டுமே வெளியானது என்றும், அவர் உடல்நிலை காரணமாக, மூன்று ஆண்டுகளில், ஒரு கட்டுரை கூட வெளிக்கொண்டு வர இயலவில்லை என்றும் சொல்லப்பட்டதை கோர்ட் ஏற்க மறுத்து, அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உடனே அவரை ஆராய்ச்சிக்கட்டுரை எழுதிக் காட்டும்படி உத்தரவும் இட்டது.
ஆனால், துணை வேந்தரின் கோரிக்கை மனு ஏற்பு என்றும், அவர் எந்தவிதமான, கொள்கை முடிவுகளும் எடுக்கக்கூடாது, ஆட்சிக்குழு, நிதிக்குழு கூட்டங்களை கூட்ட அதிகாரமில்லை என்றும், அரசின் கூட்டங்களிலும், விழாக்களிலும், கலந்து கொள்ளக்கூடாது என்றும், அவருக்கு, மிக குறிப்பாக, நிதி பற்றிய எந்தவித அனுமதியும் கிடையாது என்றும் சொல்லிவிட்டது.
நாடில்லாத ராஜாவாக மாறியதால், கடைசி நாள் பின்புற வழியாக போலீஸ் பாதுகாப்புடன் கோசுகு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ‘புஸ்வாணப்போராளி’ -உசுகோ பெயர் மாற்றம் செய்யப்பட்டார். மாற்றப்பட்டார். மூன்றாம் வருடம் இருவருக்கும் அவமான வருடமாக மாறியது. வறுக்க வருடத்திலிருந்து வதக்க வருடத்திற்கு கிரகங்கள் மாறின.
புது துணைவேந்தர் வாசுகியின் கணவராக இருக்கலாம். காத்திருந்தார்கள்.கொஞ்ச மாதங்கள் கழித்து, “சப்தம் போடாதிர்கள்” யாருமேயில்லாத அறையில் மெல்லமாக சொல்லிவிட்டு, “அய்யா, எல்லாம் ரெடிங்க அய்யா”. முதல்ல, புலத்தலைவர்கள், அய்யா. அப்புறம், துறைத்தலைவர்கள், அய்யா. அப்புறமா, மற்றவர்கள், அய்யா. அப்புறமா, நிரந்தர பணி ஊழியர்கள் அய்யா. அப்புறமா, மாணவர்கள், அய்யா. கடைசியா, தொகுப்பு ஊதிய ஊழியர்கள், அய்யா. எல்லாம் ஒரு மணிக்குள்ள முடிஞ்சுருங்க அய்யா. “எல்லாம் ரெடிங்க, அய்யா” மறுபடியும் சொன்னார் – சொன்னபோது உடலும், தலையும் குனிந்திருந்தது.
இதையெல்லாம் காட்டி, பொது நிர்வாக அறிஞர்கள், இரு நெற்றிக்கண்களுக்கு இடையேயான மூன்று ஆண்டுகளில், போட்டியில் வென்றது நன்மை செய்யும் தீமை என்பார்கள்.
இன்னும் சிலர் இரு உண்மைகளுக்குள் மோதல் வந்தால், பொய்மை உள்ளே வரும் என்பார்கள். இன்னும் சிலர், இரு தீமைகளுக்குள் மோதல் வந்தால், எது உண்மை என்பது தெரியும், புரியும் – என்பார்கள். “தீமை” வெற்றி பெறவில்லை, நீதி வென்றது” என்பார்கள் -இன்னும் ஒரு சிலர்- எல்லா கிரகங்களும் ஒரு நேர்கோட்டில் பயணிக்கவிடமாட்டார்கள், பயணிக்காது’ என்பார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
