முளைக்கா  விடைகள்

உடல் முழுவதும் வேர்கள்.  சென்ற இடமெல்லாம் படரும், முளைக்கும். சப்பி தூக்கி எறிந்த மாங்கொட்டை, கூந்தலில் இருந்து உதிர்ந்த பூவின் மகரந்தம், புறாவுக்கு வீசிய தானியம் என எல்லாமே முளைக்கும். பறவைகள் ,வண்டினங்கள், பட்டாம்பூச்சிகள், அணில், தேனீக்கள் என மேற்கூறிய அனைத்திற்கும் இணையாக விதை விதைப்பவள்.  “ தொட்டதெல்லாம் துலங்கும் ” என்பர் தொட்டதெல்லாம் முளைக்கும் முல்லைக்கு. அதைப்பற்றிய பிரக்ஞை சற்றும் இல்லை இவளுக்கு. கால் தடம் பட்ட இடம் கூட ஒரு முறை  முளைத்ததாக ஊரில் பேச்சுண்டு . 

முதலில் பெற்றோருக்கு ஆச்சர்யம் பின்பு தொல்லையாகிப் போனது. வீட்டில் இண்டு இடுக்கில் எல்லாம் செடிகள் முளைக்க , “இது என்ன உபத்திரவம்” என்ற நிலைக்கு போனது . இது சாபமா ஆசிர்வாதமா என புரியாத அளவிற்கு விசித்திரமானது நிலைமை. “தங்கள் குலதெய்வத்தின் பிம்பம் ” என தாய் வழி  பாட்டி சொன்னாள்.  ” பச்சை இலை அம்மன் இறங்கி விட்டாள்” என அப்பா வழி பாட்டி சொன்னாள். “அப்படியே என் அம்மாவைப்போல கைராசி ” என தாத்தா சொன்னார், இது ஏதோ யட்சியின் வேலை என கிராமத்தில் பரவியது. யாரின் சாயலும் இல்லை, யாரின் வேலையும் இல்லை, “இது எம் பொண்ணு ” என அப்பா மட்டுமே சொன்னார் .

இந்த  விசித்திரத்தால் ஆண்கள் சற்று தள்ளியே இருப்பர் முல்லையிடம் இருந்து, செல்வத்தை தவிர. பள்ளியில் சம வயது பெண்களை தவிர முல்லையிடம் பேச்சு கொடுக்கும் பழக்கம்  அவனுக்கு  மட்டுமே உண்டு. “அதனால் என்ன? முளைச்சா  முளைச்சிக்கிட்டு போகுது ” என்பான். பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் தன்  தாத்தா வயலில் சற்று நடக்குமாறு கேட்பான். தன் தாத்தா வயலில் தான் நடந்தால் நடக்காத அதிசயம் இவள் நடந்தால் ஏற்படுகிறதே என்று சற்று பொறாமை கொண்டிருந்தான். பின்பு அதிசயம் சாமான்யமாகி பிறகு இயல்பாகி விட்டது செல்வத்திற்கு. எந்த விசித்திரத்தையும் எடை போடாமல் ஏற்றுக்கொள்ளும்  ரசவாதம் குழந்தைகளுக்கு  மட்டுமே உண்டு . அவர்களுக்கு எல்லாமே இயல்பு பெரியவர்கள் குழப்பும் வரை . அறியாமல் விழுங்கிய பழ கொட்டைகள் முல்லையின் வயிற்றில் முளைக்குமா?  கிளைகள் வாய்வழியே படருமா?  என சிறுவயதில் பல நாள் அவளின் வாயையே பார்த்து  காத்திருப்பான் . “எதுக்கும் வீட்டுக்கு கீழ எதாவது வேர் ஓடுதான்னு பாருங்க  இல்லன்னா குடியிருக்கும் வீடு ஆட்டம் கண்டிடும்” என்று சிலர் கலவரப்படுத்தினர். இப்படியே விளையாட்டும் விநோதமுமாய் பள்ளி பருவம் கடந்துவிட்டது.

பதினெட்டு வயதை முல்லை கடந்த பொழுதுதான் சற்று கலவரமானார் முல்லையின் தந்தை  சுயம்பு . பதினெட்டு வயதுக்கு மேல் பெண்களுக்கு திருமணம் தவிர வேறு வாசல்களே திறக்காத காலகட்டம் அது. உறவுகள் காரணம் இல்லாமல் விலக ஆரம்பித்தார்கள். அவர்கள் வீட்டில் திருமண வயதில் ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று பின்பு தான் புரிந்தது . 

 ஒரு நாள் முல்லையுடன் திண்ணையில் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்த செல்வத்தை கூர்ந்து கவனித்தார் சுயம்பு. “பேசாம இவனுக்கே  முல்லைய  கட்டி வைத்துவிட்டால் என்ன? ” என்று தோன்றியது அவருக்கு. அவர்களை பார்த்தால் அப்படி பழகுவது மாதிரியும் தெரியவில்லை. பருவ வயதில் இருவரும் இன்னும் பல்லாங்குழி விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். மன சஞ்சலம் அதிகரித்தது. வழி இல்லாதவனுக்கு குலதெய்வமே கதி என ஒரு முடிவுக்கு வந்தார் . ஒரு முறை குலதெய்வத்திடம் கதறிவிட்டு வந்தால் வழி பிறக்கும் என முடிவு செய்தார். பயிர் செழிக்க பச்சை இலை அம்மனை வழிபடும் சமூகம்  அவருடையது. தன் பெண்ணை மட்டும் விசித்திரமாக பார்ப்பது வேதனையாக இருந்தது. நம்பிக்கை வேறு யதார்த்தம் வேறு என்பதில் மக்கள்  தெளிவாக இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. 

மகளிடமே இதைப்பற்றி வெளிப்படையாக பேசிப்பார்த்தால் விடை கிடைக்கும்  என முயற்சி செய்தார். “ஏன் கண்ணு எப்படி நீ தொட்டதெல்லாம் முளைக்குது ? எதாவது மந்திரம் பண்றியா?” என்று கேட்டார் சுயம்பு.  முல்லை தாயக்கட்டை உருட்டுவதை நிறுத்திவிட்டு தந்தையை உற்று நோக்கினாள். பார்வையை நீண்ட நேரம் அவள் விலக்காதது சற்று புதிதாக இருந்தது. பதில் தராமல் மீண்டும் தாயக்கட்டை  உருட்ட ஆரம்பித்தாள். 

 செல்வத்திடம் விசாரித்தார், “அவ அடிக்கடி அந்த பழைய  கோவில் மண்டபத்துக்கிட்ட போவா  ஆனா எதுக்குன்னு தெரியல” என்று தலை சொறிந்தான். இந்த வெகுளியிடம் பேசி  ஒரு பிரயோஜனமும் இல்லை. ஊர் சொல்வது போல ஏதாவது யட்சியின் வேலையாக இருக்குமோ என்று யோசிக்க அராம்பித்தார். அன்று இரவில் மகளை கண்காணித்து வந்து சொல்லும்படி பூசாரி சொன்னார். சுயம்பு எல்லோரும் உறங்கும் வரை காத்திருந்தார் .மெல்ல முல்லை உறங்கும் இடம்  நோக்கி சென்றார். இன்று விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன்.

முல்லைக்கு எப்பொழுதும் அறைகளில் அடைந்து உறங்குவது பிடிக்காது. வராந்தாவில், முற்றத்தில், மாடியில் இப்படி.  இடி மின்னல் நாட்களில் உள்ளே இழுத்து வரவேண்டி இருக்கும். அன்றும் அப்படித்தான் வராந்தாவில் படுத்திருந்தாள். உடல் உள்ளே இருக்க இடதுகை பரப்பி வாசலில் உள்ளங்கையில் நிலா வெளிச்சம் வாங்கிக்கொண்டு படுத்திருந்தாள். உறங்கும் மகளை இப்படி உற்று பார்ப்பதே குற்ற உணர்ச்சியாக இருந்தது . வேறு வழி இல்லை. ஆனால் எதை கண்காணிப்பது என்று புரியவில்லை. அருகே இருந்த தூணில் சாய்ந்து நெடுநேரம் நிலா வெளிச்சம் உறிஞ்சும் மகளின் உள்ளங்கையை வெரித்திருந்தார் .

 நாழிகைகள்  நகர  நிலவுடன் வெளிச்சமும் நகர்ந்தது . தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட மனோநிலையில்  ஓர் காட்சி. வெளிச்சம் தொலைத்த விரல் நுனிகள் மெல்ல முளைக்க ஆரம்பித்தன. வேர்கள் தோன்றி படரத் துவங்கின. பதற்றத்தில் யாரையாவது கூப்பிட முயன்றார்.  உடல் மூச்சிரைக்கும் ஓர் மரப்பலகை  ஆனது.  ஊமையின் கனவு போல படரும் வேர்களை பார்க்க மட்டுமே முடிந்தது. கனவுகளில் குழப்பம் இல்லை, விடியும் வரை. விடிந்தது. மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டதை போல ஒரு விரக்தி.

ஒவ்வொரு பருவத்திலும் தன் கிளைகளை ஏக்கத்தோடு பார்க்கும் காய்க்காத மரத்தினை போல விடை தெரியாத  நாட்கள் மீண்டும் நகரத்  துவங்கின. அந்த நாளும் வந்தது. ஊரே உறங்கும் ஒரு கிராமத்து மதியவேளையில் முல்லை தனியே செல்வதை தற்செயலாக கவனித்தார் சுயம்பு . அன்று ஒரு நாள் செல்வம்  தன் மகளை பற்றி  சொன்னது நினைவுக்கு வந்தது. பின்தொடர்ந்தால் விடை கிடைக்குமென தோன்றியது .பின்தொடர்ந்தார் சற்று இடைவெளி விட்டு .  ஊர்க்கேணியையும் அய்யனார் சிலையையும் தாண்டி சென்று கொண்டே இருந்தாள் . திடீரென முல்லை தன்னை ஏமாற்ற தடம் மாறுகிறாள் என்று புரிந்த போது ஆத்திரம் பொங்கியது. “நான் சின்னதுல  ஓட்டன நடைவண்டியாலதான்  இந்த ஊர்ல  பல ஒத்தையடி  பாதையே வந்துச்சு.  இவ எனக்கே போக்கு காட்ராலா ?”.  சற்று அலைந்து ஓய்ந்த பின்  ஓர் இடத்தில் முல்லையை கண்டு திடுக்கிட்டார். ஓர் மரத்தின் கீழே கல்லின் மீது அமர்ந்து  பீடி குடிக்கும் கிழவனை போல ஒரு விருட்சை  பூவை வாயில் வைத்து தேனை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். நான் வருவேன் என காத்திருந்தவள்  போல. செம்மயில்கொன்றை மரத்தின் பூக்கள் காலடியில்  சிகப்பு கம்பளம் விரிந்திருந்தது. ஓர் சிகப்பு வெளிச்ச குடையின் கீழ் அமர்ந்து ஆட்சி செய்பவள் போன்ற தோரணை. எங்கோ  செல்வது போல இப்பொழுது சுயம்பு  போக்கு  காட்டுகிறார். விட்ட இடத்தில்  இருந்து  தந்தையும் மகளும் மீண்டும் ஆரம்பித்தனர் . சற்று நேரம்விட்டு எப்படியும் அங்கே தான்  செல்வாள் என யூகித்து  கோவில் மண்டபத்தை நோக்கி விரைந்தார்  சுயம்பு .

         மாறிய தடம் மாறி சுயம்பு மகளை நெருங்கிக்கொண்டிருந்தார் . அந்த பழைய மண்டபத்தையும் தாண்டி யாருக்கும்  சொந்தமில்லாத சற்று அடர்ந்த மரங்கள் மட்டுமே இருந்த பகுதிக்குள் சென்றாள் . 

முதுமை அடைந்து தோலுரித்துக்கொண்டிருந்த அந்த வேப்பமரம் ஆழ்ந்து மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. முல்லை மரத்தை நெருங்கினாள். மரம் மேலும் ஆழ்நிலைக்கு சென்றது . மரத்துக்குள்ளும் மங்கைக்குள்ளும் சலனமே இல்லை. மரத்தின் மீது ஏறி உச்சியிலமர்ந்து கொண்டாள் . அந்த உயரத்தில் அமர்ந்து ஊரையே கண்காணிப்பது போல இருந்தது. இரண்டு பழைய கிளைகளுக்கு நடுவில் சம்மணமிட்டு லாவகமாக ஆடும் கிளைகளுடன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள்.

வீசும் காற்று உடுக்கை அடித்துக்கொண்டிருந்தது . இப்படியே எவ்வளவு  நேரம் போனது என்று  தெரியவில்லை. உடுக்கையும் நிற்கவில்லை ஊஞ்சலும் அடங்கவில்லை. இவள் இறங்குவது போலவும் தெரியவில்லை. மகளை உலுக்கி விசாரிக்க வேண்டுமா அல்லது ஓட்டம் பிடிக்க வேண்டுமா  என்று முடிவெடுப்பதற்குள் முல்லை வந்த வழியே திரும்பி விட்டாள் . ” நீ இன்னுமா கிளம்பல? ” என்பது போல சுயம்புவை நோக்கி விட்டு ஏதும் கூறாமல்  வீட்டை நோக்கி  நகர்ந்தாள் .வேர்வை குளிரும்வரை அங்கேயே நின்றிருந்தார் . வேறு வழி இன்றி தானும் வீட்டை நோக்கி நகர்ந்தார் . விடை கிடைத்தது விளக்கம் தான் கிடைக்கவில்லை . மனித மனதின் எல்லைகளை  தொடும்  அளவிற்க்கு மொழி இன்னும் வளரவில்லை. மேலே எழும்பும் நீர்குமிழிகளை வைத்து  வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்கிறோம் . வழியில் பெரிய  வீட்டு அம்மா சுயம்புவை  பார்த்து உற்சாகமாக சொன்னார், ” உங்க மக வந்து பேசிட்டு போனதுக்கு அப்புறம்  தான் ரொம்ப வருஷமா காய்க்காத  எங்க வீட்டு சாத்துக்குடி மரம் காய்க்க ஆரம்பிச்சிருக்கு”. யார் சாயலும் இல்லை யாரின் வேலையும்  இல்லை  “இது எம் பொண்ணு “என அப்பா மட்டுமே  சொன்னார்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.