
”பார்த்து, பார்த்து மெல்ல இறக்கு” என்று தலைமாட்டுக்கு பக்கத்தில் இருந்து மூத்த மகன் கத்தினான். ”டேய், காலை நல்லா புடிடா, இழுக்காதடா” என்றான். இந்தப் பேச்சின் ஊடாக காமாட்சியின் உடல் குறுகலான படிகட்டுகளின் வழியே, அவள் ஆசைப் பட்டபடியே ரங்கசாமியின் இல்லத்திற்கு வந்தது. இந்த ரங்கசாமி வீட்டுக்கும், எதிர் வீட்டிலுள்ள பாயிக்கும் உள்ள இடைவெளி ஒரு அடி சந்து தான். இந்த குறுகலான சந்தின் வழியாகத்தான் காமாட்சியின் உடல் அவள் வீட்டுக்கு வந்தடைய வேண்டும். வந்தது.
காளப்பன் வீதி – ஒரு நேர்கோடு போட்டது போல நீண்டு, எந்த வளைவுமில்லாமல், இருந்தது. அடுக்கிவைக்கப்பட்ட வைக்கோல் கட்டு போல மிக நெருக்கமாக வீடுகள். பெரும்பான்மையான வீடுகளில் சன் டைரக்டு குடைகள் – மத்தியதரவர்க்க வீடுகள் என்பதைக் காட்டின.
ஒரு சில வீடுகளில் ஓடும், அதன் வெளிறிய சிவப்பு வண்ணங்களும், உடைந்திருந்த நுனிகளும், தாங்கியிருந்த வலுவற்ற பலகைகளும், கட்டப்பட்டிருந்த கயிறுகளும், மிகச்சின்ன அறைகளும், நூறு வருட பழைய வீதியின், பின்னிப்பிணைந்திருந்த சொத்து தகராறுகள் என்பதைக்காட்டின. முதல் டார்ச்வீடு காமாட்சியுடையது. மேல் மாடியில். கீழே, பால்காரரும், புதிதாக குடிவந்த தம்பதியினரும் இருந்தனர். அவர்களும் தகவல் கேட்டதும், ஓடோடி வந்தனர்.
‘அம்மா போயிட்டியே’, ‘பாட்டி போயிட்டியே’ என்ற குரல்கள் அழுகையையும் விசும்பலையும் தாண்டி எதிரொளித்தன.
”டேய், அம்மா உடம்ப, இந்த கட்டுல்ல வைடா” என்றார் பெரியவன்.
”கிழக்க பார்த்தா, மேற்க பார்த்தா” என்றான் இளையவன். இதற்கு ஒரு முறைப்பே பதிலாக வந்தது.
எங்கிருந்தோ வந்த கங்காதரன், ”ஆமா, அவனுக்கு தகவல் எப்படி வந்திருக்கும்? என்று சின்னவன் யோசிப்பதற்குள், முதல் மாலையைச் சாத்தினான். அந்த மாலையில் கருப்பும், சிவப்பு ரோஜாக்கள் கொத்துக்கொத்தாக பல அடுக்குகளாக இருந்தன. மாலை சாத்தியதும் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.
மெல்ல அங்கிருந்து நகர்ந்து சென்று, மூத்தவனின் கையைப் பற்றி மெல்லியக் குரலில் ஏதோ சொன்னான். அதற்குப் பதிலேதும் கூறாமல் ‘சரி, சரி, ஆக வேண்டிய சடங்குக் காரியங்களைப் பாருங்கள்’ என்று சொல்வதைப் போல, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான் சின்னவன்
‘முதல்ல தேங்காயை உடைங்கப்பா. கற்பூரத்த காட்டுங்கப்பா. கால் பெருவிரல் ரெண்டையும் கட்டுங்கப்பா. மூக்குல, காதுல பஞ்சு வைங்கப்பா. பஞ்சு வைக்க மறந்துடாதடா’ என்று காமாட்சியின் தங்கை உரத்த குரலில் உத்தரவிட்டாள். அவள் குரலில், ”இதைவிட்டால் இவர்கள் வீட்டில் அதிகாரம் செலுத்த சமயம் கிடைக்காது” என்ற நினைப்பும், ”இவர்கள் சடங்கை ரொம்பவும் விரும்புவர்கள்” என்ற சடங்கு அறிவு சூச்சமும் தெரிந்தது.
‘சின்னம்மா, காலோட ரெண்டு பெருவிரலையும் பஞ்சால கட்டவா, நூலால் கட்டவா’ என்று பெரியவன் கேட்டான்.
‘நூலோ, பஞ்சோ, ஏதாவது ஒன்றில் மெல்லமாக கட்டு’ என்றாள் சின்னம்மா. அதைச் சொல்லுகின்ற போது அவள் குரல் விம்மியது. அதே விம்மலுடன், எழுந்து, அவள் அக்காவின் முகத்தை எட்டிப் பார்த்தாள். தன் தாய் வீட்டில், மூத்த மகளாக பிறந்து, தன்னுடன் சேர்ந்து, மூன்று தங்கைகளுக்கும் திருமணம் செய்துவிட்டு, தன்னைப் போல, அவளும் இளவயதில் விதவையாகி, தன் நான்கு குழந்தைகளுடன், காமாட்சியின் நான்கு குழந்தைகளுடன், வளர்ந்து, வளர்த்தியவள் தன் அக்கா என்ற நன்றிப் பார்வையும் தெரிந்தது.
‘டேய், பெரியவனே, நெத்திக்கு மேல விபூதிய நல்லா வைடா’, என்றாள். மாலையை ஒழுங்குப்படுத்தினாள். ஆஸ்பத்திரியிலிருந்தே உடல் நன்றாக வாகுப்பட்டு வந்ததால் தன் அக்காவிற்கு புது சேலை வேண்டுமா, அவளுக்கு பிடித்தமான சேலை எதுவும் வேண்டாமா என்று நினைத்துக் கொண்டு, ’ஏண்டா சின்னவனே, ஆஸ்பத்திரியில எல்லாம் கட்டி தான குடுத்தாங்க’ என்றாள்.
பெரியவனும், இளையவனும் தலையாட்டினார்கள். அதற்குள் காமாட்சி இறந்து விட்டாள் என்று செய்தி பரவ ஆரம்பித்ததும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். பெரியவனும், சிறியவனும் குளிர்சாதன பேழையனுக்கு போன் செய்து ஒருநாள் வாடகை எவ்வளவு என்று பெரியவன் கேட்க, சிறியவன் மௌனமாக இருந்தான். ”9,500 ரூபாய்ங்க” என்று எதிர்முனையில் பதில் வந்தது. ”அதுவும், காமாட்சியம்மாவிற்காக. வேறு கிராக்கியாக இருந்தால், 20,000 கீழ் ஒரு நயா பைசா, கம்மிகிடையாது” என்றவனிடம், சுழ்நிலை தெரியாமல் சாவை காசு ஆக்குகிறார்கள் என்பது போல இருவரும் பார்த்துக் கொண்டார்கள். சரி என்றான் சின்னவன்.
பத்தாவது நிமிடத்தில் பெட்டியும், காமாட்சியும் ஓர் நேர்கோட்டில் வைக்கப்பட்டார்கள். சின்னவன் சட்டென்று போய் ஏசி சுவிட்சை ஆன் செய்தான். ஏற்கனவே, ஆஸ்பத்திரியில் ஏசியில் இருந்ததாலோ என்னவோ உடல் இன்னமும் விரைப்பாக காட்சியளித்தது.
”தூங்கற மாதிரியே இருக்கு’ என்று யாரோ கூட்டத்தில், பேசினார்கள். ‘களுக்’ என்ற ஒரு சில சிரிப்பொலியால் இது ஒரு கல்யாணச் சாவுதான் என்றும் தோன்றியது.
‘வாங்க, வந்து எங்கம்மாவ பாருங்க’ என்று கைஜாடையால், வந்த ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, வந்தவர்கள் வேகமாக மரியாதைமாலை சாத்தி காலைத் தொட்டு கும்பிட்டுச் சென்றார்கள்.
குளிர்சாதனப் பெட்டியில் தண்ணீர் இங்கும் அங்குமாக வியாபித்திருந்தது. ஊதுபத்தி மணத்துடன் அந்த அறையில் மெல்லிய விசும்பல்களும், சன்னமான பேச்சுக்குரல்களும், காமாட்சியைப் பற்றியும், காமாட்சியின் உயிர் வாழ்க்கைப் பற்றியும் பறை சாற்றின. பறைச் சத்தமும், குழவிச் சத்தமும் போடுவதற்கு இது என்ன 1,823ஆ என்று காமாட்சி உயிரோடு இருந்திருந்தால் கேட்டிருப்பாள். இது 2023 டிசம்பர் 07.
”சரிப்பா. போய்ட்டு வருகிறேன்” என்று சொல்லாமல், மறுபடியும் கையைத் தொட்டுக் கும்பிட்டு வந்தவர்களில் ஒரு சிலர் சென்றார்கள். ஒரு சிலர் புதிதாக வந்தார்கள். எல்லோருக்கும் அதே சம்பிராதயங்கள்.
‘சரிப்பா, என்ன பன்னப் போறீங்க’ என்று காமாட்சியின் தங்கை எல்லோரையும் நிஜத்துக்கு கொண்டு வந்தாள். உசுரு இருக்குற வரைக்கும் தான் மரியாதை என்பதைப் போல காமாட்சியின் உடல் சவப்பெட்டிக்குள் பெட்டிச் சவமாய் கிடந்தது.
கொஞ்ச நேரம் கழித்து, புதைக்கிறதா, எரிக்கிறதான்னு முடிவு பண்ணுங்க என்ற சின்னம்மாவின் கம்மியகுரல் கேட்டு திடுக்கிட்டான்,
‘டேய், போய் டெத் சர்ட்டிபிகெட்டும், ஆதார் கார்டு எல்லாம் ஆஸ்பத்திரியில இருக்குது. அங்க போய் எடுத்துட்டு வந்துடு. அது இல்லென்னா, உள்ள விடமாட்டாங்க என்றான் பெரியவன். ‘இல்ல, நானே எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்’ என்றாள் தங்கை லட்சுமி. ”சரி, சரி” என்றான், தன் மனைவியைப் பார்த்துக்கொண்டே. அவள் ஏதோ சமிக்ஜை செய்ய, பக்கத்தில் சென்றான்.
“சிவானந்தா காலனி மின்மயானத்திற்கு நேரம் குறித்துக் கொண்டு வாருங்கள்” என்றான். சின்னவன் தன்னுடைய கவாசக்கி வண்டிய எடுத்துக் கொண்டு, பெட்ரோலுக்கு 500 ரூபாய் கொடு என்றான்.
‘ச்சீ. போ’ என்பதைப் போல லட்சுமி, அவனுடைய இடது கையில் வேகமாக திணித்தாள். மாலையின் எண்ணிக்கை கூடியது போல, நேரத்தின் எண்ணிக்கையும் கூடியது.விடியற்காலையில் தகவல் கேள்விப்பட்டு இன்னமும் சிலர் வந்தார்கள்.
‘ஐயோ, தங்கமானவங்க. போன வாரம் தான் பேசிட்டு இருந்தேன். புருஷன் நாப்பது வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போயும், தன் நாலு குழந்தைகளுக்கும் கல்யாணம் பன்னி வச்சாங்கடா.’
‘ஏண்டா சேகரா! பெரியவன் அடுத்த தெருவுலதான இருக்குறானாம். நான் அவன் வீட்டுக்கு போனதில்லை. வந்துகிந்து பார்த்தானா, அவன் பொண்டாட்டி, மாமியார்கிட்ட பேசியே நாலு வருசம் ஆச்சாம்மா? எங்களுக்கு யாரும் தகவல் சொல்லல, நாங்களே கேள்விப்பட்டு வந்தோம். சீக்கிரமா உடம்ப எடுப்பாங்களா’ போன்ற பேச்சுக்கள் குசுகுசுவென்று உட்கார்ந்திருந்த கூட்டத்தில் கேட்டன.
”ஏன், மாமா. சின்ன மக, காசுக்கு காவிடி எடுப்பாளாம்” என்ற பதிலுக்கு, ”டேய், சாவு வீடு அடக்கிவாசி” என்று வாயில் கையை வைத்துக்காட்டினார், ஒருவர்.
”இல்லை, மச்சான். எதுக்கு இந்த அம்மா, தனியா, ஒத்த பொம்பளையா, இவ்வளவு பெரிய ஊரிலெ இருக்கணும். என்ன பிடிவாதம்.” என்பவைகளும் காதில் விழுந்தன. சேரில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு எதிரே அணைந்த தீயும், பாதி எரிந்து அணைந்த விறகுகளும், சாம்பலும் பரவிக்கிடந்தன. பக்கத்தில் ஏராளமான செருப்புக்களும், மனக்குமட்டல்களும் கிடந்தன. ’பன்னெண்டு மணிக்கு நேரம் குடுத்து இருக்காங்க, என்ன பண்ணிடலாமா’ என்ற குரல் மேலிருந்து கீழே வந்த பெரியவனிடம் கேட்டது. பெரியவன் வீட்டின் முன்னால் உட்கார்ந்துக் கொண்டான். அவன் முன்னால் சாம்பலும், விறகு கட்டைகளும், பழைய சாமான்களும், அம்மாவின் நினைவுகளும் சிதறிக்கிடந்தன.
‘அம்மா, அய்யோ, உன் வீட்டை விட்டு போறியாம்மா, எப்பம்மா உன்ன பாப்பேன்’ என்ற கூப்பாடுகளூக்கு இடையே காமாட்சியின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. கடைசியாக காமாட்சியின் கால்கள் வீட்டை நோக்கி பார்த்த வண்ணம் இருந்தன.
’இப்பெல்லாம் ******தீ கிடைக்கிறது இல்ல. எல்லாம் படிச்சிட்டாங்க. சடங்கு பன்றதுக்கு கூட ஆள் இல்ல’ என்ற போது பெரியவன் தன் பக்கத்தில் இருந்தவனிடம், ‘போயி சின்னம்மாவை கூட்டிட்டு வாடா’ என்றான். சின்னம்மா தன் ஒடிந்த தேகத்தில் சேலையையும், மாராப்பையும் சரிசெய்துக் கொண்டு ‘நங் நங்’ என்று வேகமாக வந்தாள்.
‘நீ போயி அங்க நில்லு, ஒத்தப்படையில அஞ்சு ஆம்பளைங்க வேண்டும்’ என்றாள். அய்ந்து பேர் வந்தார்கள். பெரியவனும், சின்னவனும், பெரியமகளின் மகனும்., சின்ன மகளின் இரு மகன்களும் வந்தார்கள். அவர்கள் தலையில் சும்மாடும், தண்ணீரும், எண்ணெயும், மஞ்சளும் இருந்தன. மெல்ல நடந்து வந்து சுமையை இறக்கி வைத்தார்கள்.
’யாரெல்லாம் தலைக்கு எண்ணெய், அரப்பு, வைக்க விரும்புறீங்களோ, கோடி செய்ய விரும்புறீங்களோ, வாங்க’ என்றாள் சின்னம்மா.
முதலில், வெள்ளை வேட்டியுடனும், கிழிந்த சட்டையுடனும் ஒரு பெரியவர் பிறந்த கோடி என்று சாத்தினார். அவரிடம் யாரும் பேசவில்லை. அவர்கள் பேசாததை அவரும் கவனத்தில் கொள்ளாததைப் போல காலைத்தொட்டுக் கும்பிட்டுவிட்டு விறுக்கென்று தொட்டு தொங்கிக்கொண்டிருந்த ஒரு தொடுவானப்புள்ளியாய் அறுந்து மறைந்தார்.
காமாட்சியின் கணவன் இல்லாததால், கணவனின் அண்ணன் மகன் ரவி புகுந்த வீட்டுக்கோடியை சாத்தினான். அந்தப் புகுந்த வீட்டுக்கோடி எங்களிடம் பணம் புரள்கிறது என்று காட்டியது.
‘சம்மந்தி கோடி இருக்கிறதா’ என்று கேட்டாள், மறுபடியும் சின்னம்மா. பெரியவனின் நான்கு மச்சான்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து ஒரே சேலையை நான்கு பக்கமாக பிடித்துக்கொண்டு காமாட்சி மீது போர்த்தினார்கள். அவர்கள் போர்த்திய சாங்கியச் சேலையில் ஒரு சடங்கு தெரிந்தது. காமாட்சியை அவர்கள் கடைசியாக பார்த்தது ஒரு இருபது வருடத்திற்கு முன்னாலிருக்கும் என்பது போல, யார் இவர்கள் என்ற பார்வையும் எழுந்தது.
சின்னம்மா மீண்டும், ‘பெண் பக்க சம்மந்திகள் வாங்க’ என்றாள். காமாட்சியின் இரு மருமகன்களூம், இரு வெவ்வேறு சேலைகளை, இரு வெவ்வேறு வண்ணங்களில் போர்த்தி ஆளுக்கொரு பக்கமாக தனித்தனியாக சுற்றிவந்து, சூடம் ஏற்றினார்கள். விபூதி அப்பிக்கொண்டார்கள். முடிந்ததும் இருவரும் தங்களின் மனைவியைப் பார்த்துக் கொண்டார்கள். எட்டு கண்களுக்குள் ஏதோ ஒரு சமிக்ஞை.
”டேய், சின்னவனே, விளக்கு எங்கடா? என்றாள் ஒரு கோபச்சலிப்புடன். பெரியவனும், சின்னவனும், ”எங்கம்மா, சடங்கிலே ஏதாவது ஒரு குறை வைச்சாலும், செய்பவர்கள் காலி” என்பதைப்போல தலையை திருப்பினான். திருப்பிக்கொண்டார்கள். லட்சுமி ஓடிப்போய், மோட்ச விளக்கை எடுத்து வந்தாள்.
”ஏன் சின்னம்மா, அப்பவே சொல்லியிருக்கலாமில்லையா? ” என்றாள் காதில். பதிலுக்கு ஒரு பெரிய விசும்பலை சின்னம்மா தந்தாள்.
மருமகள்களில் பெரியவள், தன் சீலை முந்தானையில், மோட்சவிளக்கை வாங்கிக்கொண்டாள். முகத்தில், அடுத்து நானா, என்பதைப் போல, ஒரு மனக்கலவரம் தெரிந்தது. சடங்குகளெல்லாம் கனக்கச்சிதமாக முடிந்ததும் உடல் கெளம்பியது.
”யாரெல்லாம் போறீங்க?”
”ஏய், சின்னம்மா, நீ வீட்டுல இரு, வீட்டை தண்ணீர் ஊத்தி சுத்தமா கழுவி வை. விளக்குல எல்லாம் எண்ணேய் ஊத்தி வை. அம்மா படத்த தொடச்சி சுத்தமா வை’ என்றுச் சொல்லிய சின்னவன், லட்சுமியிடம்,
”சுடுகாட்டுல எல்லாத்துக்கும் பணம் குடுக்கணும், ஒரு மூவாயிரம் கொடு” என்றான்.
தன் ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு ஆறு ஐநூறு ரூபாய்களை தம்பியின் கைகளில் திணித்தாள். பணத்தைக் கொடுத்துவிட்டு அந்தப் பர்சை அமுத்தினாள். அளவு குறைந்து கொண்டு வந்தது போன்ற எண்ணம் தோன்றியது. எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு, வண்டியில் ஏறினாள்.
வண்டி, காளப்பன் வீதியைத் தாண்டி, அலங்கார் ஓட்டல் பக்கத்தில் சென்றுக் கொண்டிருந்தது. யாரோ ஒருவர் ஓடிவந்து, காமாட்சியின் சாவுவண்டியை நிறுத்துமாறு சமிக்ஜை செய்தான்.
அவன் சதிஸ். காமாட்சி உயிரோடு இருந்திருந்தால், ’டேய், சதிஸ், பெரியவன் வீட்டுக்கு போனியா, எப்படிறான் இருக்கான்?, அவனுக்கு உடம்பும், கட்டினவளும் சரியில்லப்பா என்று சொல்லி அவனுக்கு காபிபோட்டு பெரியவன் வீட்டு சங்கதிகளைக் கேட்டிருப்பாள். சதிஸும், காபியோடு கலங்கியிருந்த பால் போல, சுவைத்துச் சொல்லியிருப்பான். சதிஸைப் பார்த்ததும், இங்கேயும் கோள் வைக்க வந்துவிட்டான் என்பதைப் போல், வண்டிக்கு ஒரு வெள்ளிக்கோள் வேகம் எடுக்கவைக்கப்பட்டது.
சவவண்டிக்கு முன்னால் இருகார்களில் காமாட்சியின் இரு மருமகன்களும் வந்தார்கள். சவப்பெட்டிக்குப் பின்னால் ஒரு வேனும், காமாட்சியின் நான்கு தங்கைகளில் ஒருவரும், அவருடைய பேரப்பிள்ளைகளும், மகள்களும், பக்கத்துவீட்டுக்காரர்கள் சூழ வேன் காந்திபுரம் சிக்னலை அடைந்தது.
‘டேய் ரோஜாப்பூவை கிள்ளிப் போட்றா’ என்றுக் கேட்டவுடன் ரோஜாப்பூக்களை மகேஸ் வீச ஆரம்பித்தான்.
‘நல்ல சகுனம் பா, சாவ பாத்துட்டுப் போறேன்’ என்று யாரோ காரில் இருந்து சொல்ல சொல்ல சிக்னலும் விழுந்தது. முன்பின் தெரியாதவர்கள், சாவு வண்டியைப் பார்த்ததும், மெல்லமாக வண்டியை இயக்கினார்கள். ஒருத்தரை வழிஅனுப்புவதற்கு எவ்வளவு உதவி செய்கிறார்கள். சிக்னலில், கடவுள் இல்லை என்ற வாசகம் பொருந்தி இருந்த விநாயகர் கோவிலுக்கு எதிரில் வண்டியும், நினைவுகளும் நின்றன. இறந்தும் என் அம்மா மற்றவர்க்கு உருவத்தில் வாழ்கிறாள் என்று நினைத்து லட்சுமி மறுபடியும் அழுதாள். காமாட்சியின் கடைசி வழி காந்திபுரம் சிக்னலைக் கடந்து சித்தாப்புதூர் காலனிக்குள் சென்றது.
’டேய், டேய், தாண்டி போறடா, அந்த வண்டிக்கு பின்னால் போடா’ என்று இளைய மருமகன், தன் மகனுக்கு சொன்னது காதில் விழுந்தது.
இதோ பத்தடி தூரம் தான். காமாட்சி சாம்பலாட்சியாக மாறி விடுவாள். உடலை மெல்ல மயானத்திலிறக்கினார்கள். இறக்கியவர்க்கு ஐம்பது வயது இருக்கும். காக்கிச்சட்டையும் பேண்ட்டையும் அணிந்திருந்தார்.
‘ஓ இது என்ன நம்ம சுடுகாடா?. படுசுத்தமாக இருக்கிறதே!’ என்று எண்ணிக்கொள்ளலாம். மூத்த மகளின் கணவன். உடலை எரிப்பதற்கு மின்மயானம் 25 சென்ட்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அவருக்கும் தோன்றியது. இடதுபுறம் ஜெயின் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட குடிநீருக்கான அறை இருந்தது. அதிலிருந்து இரண்டு சில்வர் டம்ளர்கள் தொங்கி கொண்டிருந்தன. அதன் பின்னால் தலைகீழ் ‘V’ வடிவத்தில் நான்கு சடங்கு அறைகள் படுசுத்தமாக இருந்தன. வலதுபுறமாக மேடையும், எரிமின் அறையும் இருந்தன.
அதிலிருந்த மேடையில்தான் காமாட்சியின் உடல் வைக்கப்பட்டது. அது எந்த திசையை நோக்கி இருக்கிறது என்று யாரும் கவலைப்படவில்லை. இதையெல்லாம் பார்த்து முடிப்பதற்குள், தோளில் சட்டையில்லாமால், வெறும் துண்டு மட்டுமே போட்டுக்கொண்டு, வெள்ளைச்சட்டையுடன், மொட்டைஅடித்துக்கொண்டு பெரியவன் மெல்ல நடந்து வந்தான். அவன் பார்வை கீழ்நோக்கியே இருந்தது.
‘கடைசியா மூஞ்ச பாக்குறவங்க எல்லாம் பாத்துக்கோங்க’ என்றும், ‘வாய்க்கரிசி போட்றவங்க எல்லாம் வாங்க’ என்றும் சிம்பந்தி உரக்க குரல் ஏழுப்பினான். அந்தக் குரலுக்கு பின்னால், குழுக்களாக சுற்றி நின்றவர்கள், பெரியவனை நோக்கி நடந்தார்கள்.
பெரியவனின் கையில் தண்ணீர் நிரப்பப்பட்ட சட்டியும், ஊதுபத்தியும் தரப்பட்டது. தனது இடது தோளில் சட்டியை வைத்துக் கொண்டு காமாட்சியின் உடலை ஒரு சுற்று வந்த போது, அரிவாளால் சிம்பந்தி சட்டியில் ஒரு வெட்டு வெட்டினான். ‘குபுக்’ என்று தண்ணீர் வழிந்தோடியது. இரண்டாவது சுற்றுக்கு இன்னொரு வெட்டு, மூன்றாவது வெட்டும் நடந்தபின், சட்டியை தூரமாக வீசியபின், காமாட்சியின் காலுக்கு முன்னால் வந்த பெரியவன், காலைத் தொட்டு வணங்கி, வாய்க்கு அருகில் சென்று, மஞ்சள் பூசிய அரிசியைப் போட்டான். மறுபடியும் காலைத் தொட்டு வணங்கினான். அவனுக்கு பின்னால் காமாட்சியின் கடைசி ஊர்வலத்திற்கு வந்திருந்த பதினெட்டு பேரும், பதினெட்டு படிக்கட்டுகளைப் போல எந்திரகதியில் வாய்க்கு அரிசி போட்டார்கள்.
’சீக்கிரம், சீக்கிரம் அடுத்த உடம்பு வர்றதுக்கு அரைமணி நேரம் தான் இருக்குது’ என்று சிம்பந்தியின் குரல் கேட்டது. எரியலைக்கு அருகில் காமாட்சியின் உடல் தள்ளப்பட்டது.
’கடைசியாக முகத்தைப் பாக்குறவங்க பாத்துக்கோங்க’ என்று மறுபடியும் குரல் கேட்டது. கழுத்தில் இருந்த நகைகளையும், கம்மலையும், காமாட்சியின் வீட்டை எழுதி பிடிங்கிக் கொண்டதுபோலவே கைகளில் இருந்து கழட்டினாள் சின்ன மகன். சலனமற்ற உடல். இது என்ன புதுசா, நான் பார்க்காததா என்பதைப் போல ஜடமாக காத்திருந்தது.
அய்ந்து அடி தூரத்தில் 1500 டிகிரி தீஜூவாலை காமாட்சியின் உடலை விழுங்க காத்துக் கொண்டிருந்தது. காமாட்சிக்கும் தீயிக்கும் வெகுதூரம் என்பதைப் போல ‘ஐயோ என் அக்கா உடம்புல தீப்புண் படுதே’ என்றாள் தங்கை. முகம் மூடப்பட்டது.
பெரியவன் கற்பூரத்தை எடுத்து அம்மாவின் வயிற்று சேலையின் மீது வைத்து பற்ற வைத்தான். தீயும் காமாட்சியின் உடலும் மெல்ல மின்னாலைக்குள் சென்றன. மின்கதவு மூடப்பட்டது. எல்லோரும் மௌனமாக வெளியேறி புகை போக்கையைப் பார்த்தார்கள். காமாட்சியின் உடலை எரித்த புகை மெல்ல வானத்தில் பரவியது.
‘அம்மா ஆவிக்குள் சாமியாகி விட்டாள்’ என்றான் பெரியவன். அம்மா சாமியாகி விட்டாள் என்றார்கள். ”கஷ்டப்பட்டவளுக்கு நேர்ந்த கதி” என்றார்கள். ”அதற்குள் என்ன அவசரம்” என்றார்கள்.
புகையில் பரவிய காமாட்சி, கீழே சென்று கொண்டிருந்த தன் மகன்களையும், மகள்களையும் பார்த்து, ‘டேய் எலும்புச் சடங்கன்களா!’ என்று கத்தியது யார் காதிலும் நிச்சயமாக விழவில்லை.
அடுத்த தெருவில் இருந்துக் கொண்டே தன்னைப்பார்க்காத பெரிய மகன், ஒரு பைசா கூட தராமல், தன்னிடமிருந்து, பணத்தில் பங்கு போடும் சிறிய மகன், வாக்கை மீறி வீட்டை பறித்துக் கொண்ட இளைய மகள், ”தண்டசெலவு – இந்த கிழவி, தனியாத்தான் வாழனுமா, இதுக்கு போய் மாசா மாசம் பணம் கொடுக்கிறது” என்ற தன் காதுபட பேசிய மூத்தமகளின் மகன்” என்று யார் காதிலும் காமாட்சியின் ஒலக்கூப்பாடு விழவில்லை. விழாது.
எந்த செத்தவன் பேசியிருக்கிறான் என்ற உண்மை காமாட்சியின் எலும்புச்சடங்கு வாரிசுகளுக்கும், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த மரணவலி வாழ்க்கையின் சடங்குகள், வந்துகொண்டேயிருக்கும் – சம்பிரதாயமாக, மொளனமாக. ரகசியமாக – உயிர்வாழும்போது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
