அறிந்திடாத பெருநகர விதைகள்

ஒன்றாகிடாத இரண்டுகள்

உங்களுக்கு விடிந்தது போலத்தான்
எனக்கும்
விடிந்தது.
உங்களுக்கு கேட்ட
அதே பறவையொலிகள்
எனக்கும் கேட்டது.
நீங்கள்
நினைத்தது போலவே
இப்பனிப்பொழுதின் கதகதப்பிற்கு
சூடாகவொரு
தேநீர்
எனக்கும்
தேவையாகவே
இருந்தது.
நடந்து சென்ற
நம் பாதையும்
என்னவோ ஒன்றாகவேதான்
அமைந்தது.
அஃதொரு
ஆச்சரியமாக
நம்
கடையும் ஒன்றெனவே
வாய்த்தது.
பிறகெப்படி
பருகிய தேநீரும்
படித்த செய்தியும்
வேறாகவே
ருசியினில்
மட்டும்
தனித்தது..?


அசௌகரியமெனவொரு அந்திம வெளிச்சம்

தேவையே இல்லை
இத்தனை சண்டை
சச்சரவுகளென
முடிவெடுக்கும் பொழுது
இறுதி
வாழ்க்கை
வந்துவிடுகிறது.
இன்னலான தருணங்களாக.
உடலை மட்டும்
சிந்திக்கும்படியாக.


அறிந்திடாத பெருநகர விதைகள்

விடியலுக்கான காலையில்
வெளியூர் பேருந்துகள்
தூக்கி வருகிறது
கனவுகள் சுமந்தவர்களை
பெருநகருக்கு

எல்லோருக்குமே
தெரிந்தவர்கள்
அழைக்க வந்திருந்தால்
எத்தனை இனிமையானதாக மாறியிருக்கும்
யாவும்.

நான் வந்த இடத்திற்கு
இரண்டு மடங்கிற்குமேலாக
பணம் பெற்றுவிடும்
ஆட்டோகார்கள்
நினைக்கிறார்கள்
சாதித்ததாக.

நம்பி வாழ்ந்தவர்கள்
நம்பிக்கை
துரோகியாக மாற
பெருநகரம் விதைக்கும்
முதல்
விதையென அறியாமல்.


கடந்துவிட நினைக்கும் மனம்

இருபுறமும்
விரைந்து
வண்டியில் செல்கிறவர்களுக்கு
காரணங்கள் அதிகமிருக்கலாம்.
இங்குமங்கும்
தவிக்கும்
சிறுவன்
காரணமற்றே கடந்தாலும்
ஏற்படுத்திவிடுகிறான்
ஒரு
சிறு பதட்டம்
வெகு தொலைவிலிருந்து
பார்க்கும்
என்னிடம்.

.


சொல்லி  இருக்கலாம், என்றாலும்.

கடையில்
காய்கறி எடைபோடும்
பெண்ணின்
மாராப்பு ஊக்கை
சரி
செய்யச் சொல்லியிருக்கலாம்.

வங்கியின்
காசாளர் பெண்ணை
துப்பட்டா போடுங்கள்
இல்லை
கழுத்து இறக்கமான
சுடிதார் போடாதீர்கள் என்றிருக்கலாம்.

பைக்கில்
வேலை அவசரத்தில் போகும்
பெண்ணை
சேலை மடிப்பும்
முந்தானையும்
சொருகுவதை
சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

பஸ் ஸ்டாப்பில்
நிற்கும்
பள்ளி செல்லும்
பிள்ளையின்
பெற்றவர்களை தெரிந்திருந்தால்
படிக்கும்
பிள்ளைகளுக்கு
சீருடைகளை
கொஞ்சம் தொளதொளப்பாக
தைக்கவேண்டுமெனவும்
நினைவூட்டி இருக்கலாம்‌.

என்னைப்
போன்றவன்
இவைகளை எல்லாம்
பார்க்காமல்
இருந்து
தொலைத்திருக்கலாம்
இல்லை
மனைவியோ
மகளோ
கூட வந்திருக்கலாம்.



Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.