சித்சக்தி சேதனா ரூபா ஜடசக்தி ஜடாத்மிகா

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் பல இரகசியக் குறிப்புகளை உள்ளடக்கியது என்று பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் அசையும் பொருளும் அசையாப் பொருளும், குணங்களும், நிறங்களும், குணங்களற்றும், நிறங்களற்றும், உருவமாய், அருவமாய், இரண்டும் அற்ற நிலையாய், எங்கெங்கு காணினும் தென்படும் சக்தி அவள். ‘பெரு வெடிப்பு’ (Big Bang) நிகழ்வதற்கு முன் இந்த அகிலம் நிலையற்ற சக்தியால் நிரம்பியிருந்தது என்றும் அதன் தன்மை இன்று வரை தெளிவாக அறியப்படவில்லை என்றும் அறிவியல் சொல்கிறது. தோராயமாக  இப்போது 68% இருட் சக்தி அல்லது புரிபடா ஆற்றல் (Dark Energy) பிரபஞ்சத்தில் உள்ளது என்றும், 27% ஆழ் பொருட்களாலும் (Dark Matter) மீதமுள்ள 5%  பற்றி மட்டுமே தற்போதுள்ள அறிவியல் கருவிகளால் அறிய முடிந்துள்ளது என்பதும் அறிவியல் சொல்லும் தகவல். 

சக்தியை எப்படி உணர்வது? புலன்களாலா, வடிவத்தாலா, எண்ணத்தினாலா, வெற்றிடத்தாலா, எதால் அறிவது? இன்று வரை அடர் பொருளையும், அடர் சக்தியையும் அறிவியல் தன் கணித மாதிரிகளில் கொண்டு வர முடியவில்லை. அவ்வாறிருக்கையில், ஐந்தொழில் புரியும் அந்த விந்தையை சொல்வது கடினமே. 

மனிதன் பிறப்பைப் பற்றி புரிந்து கொண்டுள்ள வகையில் இறப்பை பற்றிப் புரிந்து கொள்ள முடிவதில்லை. மருத்துவ அறிவியலாளர்களிடையே இறப்பு என்பதன் வரையறைகள் மாறுபடுகின்றன; இதயச் செயலிழப்பு, மூளைச் சாவு, என்ற கோட்பாடுகளில், உடல், செயல்பாட்டை இழந்து விடுவதை மரணம் என்று சொல்கிறார்கள். இந்த மரணத்திற்கும் பிறகும், தான் மரணித்துவிட்டேன் என்ற உணர்வு இருப்பதாக சாம் பார்னியா(Sam Parnia-https://youtu.be/WhoIf2NwaRY) சொல்கிறார். செயலற்ற நிலையில் ஒரு உணர்வா? அதன் கால அவகாசம் குறைந்த அளவில் இருந்தாலும், தான் மரணித்து விட்டதை மனிதன் எப்படி உணர்கிறான்? மூளை இயக்கத்தை நிறுத்திய பின்னரும், சில திசுக்கள் செயல்படும் விந்தை தானென்ன? இந்தத் திசுக்களும் சிறு கால அளவில் தான் துடிப்புடன் இருக்கின்றன. அத்தகைய உணர்விற்கும், துடிப்பிற்கும்  ‘ நான்’  (I- Consiciousness)என்ற உணர்வு காரணமா? அந்த நான் எது? உடலா, உயிரா, புலன்களா, அறிவாற்றலா? சுயம் என்பது உலகக் கட்டமைப்பின் அடிப்படை என சொல்லும் மெய்யிலாளர்கள் இருக்கிறார்கள். ‘தன்னுணர்வு’ என்பது, மாயமே, அது மூளையின் செயல்பாட்டினைத் தவிர வேறில்லை எனச் சொல்லும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள் 

“இருவினை நேரொப்பில் இன்னருள் சக்தி குருவென வந்து குணம்பல நீக்கித் தரும் எனும் ஞானத்தால் தன்செயல் அற்றால் திரிமலம் திரிந்து சிவன் அவன் ஆமே.”  திருமூலர் திருமந்திரம் 

அர்த்தம்:- நன்னெறிகளில் உள்ளம் ஒன்றியிருக்கும்போது, நல்வினைப் பயனும், தீவினைப் பயனும் ஒருவரை அணுகினால், உடல்தான் அந்த வினைகளை எதிர்கொள்ளும். அவற்றை உள்ளம் அனுபவிக்காது. அப்போது சக்தியின் அருள், குருவாக வந்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கும். அந்த நிலையில் நம் ஜீவனானது, சிவன் என்று மாறிப்போகும். 

இந்தக் கட்டமைப்பைப் புரிந்து கொள்வதற்கு முன்னால், நாம் இந்த சுவை மிக்க சவால் நிகழ்ச்சியைப் பார்க்கலாம். 25 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நட்பான சவால். நரம்பியல் அறிவியலாளரான க்ரிஸ்டாஃப் கோச், (Christof Koch) மெய்யியலாளரான டேவிட் சால்மர்சிடம் (David Chalmers) 1998-ல் ஒரு சிக்கலான மற்றும் தன்னம்பிக்கையுள்ள விதத்தில் ஒரு பந்தயம் வைத்தார். 25 ஆண்டுகளில், அதாவது 2023ல், மூளையின்  ந்யூரான்களின் ஆய்வில் ஏற்பட்டு வரும் மாபெரும் பாய்ச்சல், தன்னுணர்வு என்ற சுயத்தினை அடையாளப் படுத்தி விடும், அப்போது சுயம் என்பது என்ன என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். ஆனால் சால்மர்ஸ் இதை ஏற்கவில்லை. பந்தயப் பொருள் அருமையான போர்த்துக்கல் விஸ்கி. 

(L) David Chalmers ® Christof Koch)

தன்னுணர்வின் அறிவியல் ஆய்வு அமைப்பின் (Association for Scientific Study of Consciousness, New York-ASSC) ஜூன், 23, 2023  கூட்டத்தில் இரு விஞ்ஞானிகளுமே, இறுதி வரையறையை வந்தடையவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால், முதல் சுற்றில் வெற்றி பெற்றவர் மெய்யியலாளரே. இந்தச் சவாலில் சொல்லப்பட்ட இரு கருதுகோள்களும் நரம்பின் அடைப்படை கொண்டு தன்னுணர்வு அமைகிறது என்பது குறித்து ஆய்வு நடத்திய  அறிஞர்கள் தந்த தரவுகளைக் கொண்டு முடிவெடுக்கப்பட்டன. 

“எனக்கு இது ஒரு நல்ல சவாலாக இருந்தது; க்ரிஸ்டாஃபிற்கு துணிகரமான ஒன்று.” என்று சொல்லும் சாம்லர்ஸ் தற்சமயம், ந்யூயார்க் பல்கலையில், மனம், மூளை, உணர்வு  (Center for Mind, Brain and Consciousness) இணை இயக்குனராக இருக்கிறார்.  “இந்தத் துறையில் நிறைய முன்னேற்றம் தென்படுகிறது; ஆனாலும், செல்ல வேண்டிய தூரம் அதிகம்” என்று சொல்கிறார். 

உணர்வு என்பதுதான் என்ன? நாம் கண்டு, கேட்டு, முகர்ந்து, சுவை அறிந்து, தொடு உணர்ச்சியுடன் இருப்பது தன்னுணர்வினால் என்று அவர் சொல்கிறார். ஆனால், நம் மூளை அதை எப்படி உற்பத்தி செய்கிறது என்பதற்கான விடை கிடைக்கவில்லை. தத்துவ விசாரமாகத் துவங்கிய இந்தக் கேள்வி இப்போது ‘அறிவியல் சிந்தனை’யாக மாற்றம் அடைந்துள்ளது. 

வாஷிங்டன், சியாடில் அமைந்துள்ள ஆலென் மூளை அறிவியல் துறையில் (Allen Institute for Brain Science) புகழ் பெற்ற ஆய்வாளராக இருக்கும் கோச், நரம்புகளில், உணர்வின் காலடிச் சுவடுகள் என்பதைப் பற்றி 1980லிருந்தே கவனம் செலுத்தி வந்தார். ‘மூளையின் எந்தெந்தப் பகுதிகள், துணுக்குகள் ‘உணர்விற்காகத்’ தேவைப்படுகின்றன என்பதை ஆய்வு செய்கிறார். 

தொழில் நுட்பங்களில் காணப்பட்ட அதி வேகங்கள், 25 வருடங்களில் ‘உணர்வு’ என்பதை தெளிவாக்க உதவும் என்று அவர் திடமாக  நம்பி சவால் விட்டார். அப்போதைய ஆய்வகங்களில், செயல்பாட்டு காந்த அதிர்வுப் படக் கருவிகள் (functional Magnetic Resonance Imaging )பெரும் பரபரப்பையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்தின. இக்கருவிகளின் மூலம், மூளை செயல்படும்போது ஏற்படும் குருதி ஓட்டம் கணிக்கப்பட்டது. ‘ஆப்டோ ஜெனிடிக்ஸ்’ (Optogenetics) துறையின் செயல்பாடுகள்- விலங்குகளின் மூளையில் ஒளிக்கதிர் பாய்ச்சி, சில ந்யூரான்களைத் தூண்டி, அதன் மறுவினையாக மற்ற ந்யூரான்கள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதைக் கணக்கிட்டது, மருத்துவ அறிவியல் துறைக்கு உதவிகரமாக இருந்தது. அந்த நேரம் கலிபோர்னியாவில் தொழில் நுட்பத்துறையில் உதவிப் பேராசிரியராக இருந்த இளைஞரான கோச்சிற்கு தொழில் நுட்பம் எதையும் சாதிக்க உதவும் என்ற நம்பிக்கை இருந்தததால் பந்தயம் வைத்தார். 

நினைவில் மீண்டது 

பல வருடங்களில் மறக்கப்பட்ட இந்த சவால், அறிவியல் பத்திரிக்கையாளரான பெர் ஸ்னேப் ரூட்,(Per Snaprud) 1998ல், தான் சால்மர்சை பேட்டி கண்டதை ஒரு சிறு அரட்டையில் சொல்ல,  உயிர் பெற்றது. 

பஹாமாஸ், நாசாவ் (Bahamas Nassau) டெம்பிள்டன் தொண்டு நிறுவனத்தின்(Templeton Charity) பெரும் செயல் திட்டமான உணர்வு ஆராய்ச்சியில் இந்த இருவருமே இப்போது ஈடுபட்டிருக்கின்றனர். உணர்வு என்பதைப் பற்றிய வெவ்வேறு கருதுகோள்கள் கொண்டுள்ள பல ஆய்வாளர்களை இணைத்து, அவரவர் கருதுகோள்களை மோதவிட்டு, அவர்களின் ஆய்வுகளின் இணக்கத்திற்கான ‘வடிவம்’ தரும் செயற்பாடு இது. “அவர்களின் கோட்பாடுகள் உண்மையென நிரூபணமாகாவிட்டால், அது அவர்களின் கருத்துகளுக்கு மிகப் பெரும் சவாலாகிவிடும்” என்று சால்மர்ஸ் சொல்கிறார். 

இந்தப் பரிசோதனைகளில், பல ஆய்வாளர்கள் உள்ளனர். நம் பந்தய ஹீரோக்களும் இருந்தார்கள். முக்கியமாக இரு கருதுகோள்கள் விவாதிக்கப்பட்டன; ஐஐடி (Integrated Information Theory) எனப்படும் ஒன்றிணைந்த தகவல் தேற்றம்; மற்றொன்று உலக வலைப்பின்னல் பணியிடத் தேற்றம்.(Global Network Workspace Theory-GNWT) 

உணர்வு என்பது, ஒரு குறிப்பிட்ட அனுபவத்தின் போது (உதாரணமாக ஒன்றைப் பார்க்கையில்) குறிப்பிட்ட ந்யூரான்கள் இணைந்து மூளையில் கட்டும் அமைப்பு (Structure) என்றும், அந்தக் காட்சி நீடிக்கும் வரை இந்த உணர்வு இருக்கும் என்றும் ஐஐடி சொல்கிறது. பின்புற மூளையின் பின்புறப் புறணியில் (Posterior Cortex) இந்த அமைப்பு காணப்படுவதாக கருதப்படுகிறது. 

ஜிஎன்டபிள்யூடி இதனுடன் மாறுபடுகிறது. அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று தொடர்புடைய வலைப்பின்னல்களின் மூலம் மூளையின் பகுதிகளுக்குச் செய்திகள் அனுப்பப்படுகின்றன. இந்தச் செய்திகள் பயணிப்பது அனுபவத் தொடக்கம் மற்றும் அதன் முடிவில் என்றும், இது முன்மூளையின் முன்புறணிப்பகுதியில் (prefrontal cortex) நடைபெறுகிறது என்றும் இவர்கள் சொல்கிறார்கள். 

முன்னரே வகுத்தளிக்கப்பட்ட நெறிமுறைகளையும், அவற்றுடன் ஒத்த வழிமுறைகளையும் கொண்டு மூளைச் செயல்பாடுகளை ஆராயும் ஆறு தனிப்பட்ட ஆய்வகங்கள், ஒன்றையொன்று பகைக்கும் இந்தக் கருதுகோள்களை மதிப்பீடு செய்தன. இந்த இரு கோட்பாடுகளையுமே ஏற்க முடியவில்லை என்பது அவை சொன்ன முடிவு. இது இன்னமும் துறைவல்லுனர்களால் மறுமதிப்பீடு செய்யப்படவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Max Planck Institute for Empirical Aesthetics, Frankfurt, Germany யில் பணியாற்றும் நரம்பியல் விஞ்ஞானியும், இந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான  லூசியா மெலோனி, இந்த இரு கருதுகோள்களும் மீள்பார்வை செய்யப்பட வேண்டியவை, ஆனால், சற்றே மாறுபட்ட விதங்களில் என்று சொல்கிறார்.

ஐஐடி சொல்வது போல பின்புறணிப் பகுதிகளில் தகவல்கள் நீடித்த வகையில் இருக்கின்றன. இந்தக் கோட்பாடு சொல்லும் ‘அமைப்பு’ கணக்கில் கொள்ளப்பட்டு மேலும் ஆய்வுகள் செய்யப்படும். ஆனால்,அவர்கள் கணித்ததைப் போல நீடித்த ஒத்திசைவிற்குத் தக்க சான்றுகள் கிட்டவில்லை.

ஜிஎன்டபிள்டியினர் சொல்வதைப் போல உணர்வின் சில தன்மைகள் முன் புறணியில் தென்பட்டாலும், அனைத்தையும் அப்பகுதியில் காணமுடியவில்லை. பரிசோதனைகளில், செய்தி/தகவல் தெரிவிக்கப்படுவது நிரூபணம் ஆகியிருக்கிறது; ஆனால், அனுபவத்தின் தொடக்கத்தில் மட்டுமே, அவ்வாறு இருப்பது தெரிய வந்திருக்கிறது;  முடிவிலும் கூட அப்படி இருக்கும்  அவர்கள் என்று கணித்ததற்கு சரியான சான்றுகள் இல்லை.

எனவே ஐஐடி மற்றதை விட சற்று முன்னே இருக்கிறது. இதற்கு ஐஐடி  உண்மை என்றும் மற்றது அப்படியல்ல என்று பொருள் கொள்ளக்கூடாது. புது சான்றுகளைக் கொண்டு, செயல்முறைகளைச்  சிந்தித்து கருதுகோளை மேம்படுத்த வேண்டும்.

சில பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. டெம்பிள்டன் அமைப்பின் முன்னெடுப்பில், சில விலங்குகளின் மூளை மாதிரிகளில், ஐஐடி மற்றும் ஜிஎன்டபிள்டியின் கோட்பாடுகளைக் கொண்டு கோச் ஆராய்ச்சி செய்து வருகிறார். மற்றொரு திட்டத்தின் கீழ் இரண்டு  கருதுகோள்களை சால்மர்ஸ் ஆராய்கிறார்.  அறிஞர்களின் இத்தகைய போட்டிகள், அறிவியலுக்குத் தேவை. ‘நான் மீண்டும் பந்தயம் கட்டுவேன்; மேலும் 25 வருடங்கள் – இன்றைய தொழில்  நுட்பத்தில் சாத்தியமே.’ என்ற கோச், பந்தயத்தின் படி ஒயினை சாம்லர்சிற்குக் கொடுத்தார். 

உபனிஷத்துக்களும், சுயமும்

இந்தியா இந்தக் கேள்விகளை பல வகைகளில் பல உபனிடதங்களில் சொல்கிறது. கதோபனிஷத்தில் நசிகேதஸ் என்ற சிறுவனுக்கும், யமதர்மராஜனுக்கும் இடையே கேள்வி-பதில்களாக பரிணமிக்கும் அற்புத உரையாடல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

உத்தாலகர் அல்லது வாஜஸ்ரவஸ் என்ற இருவரில் ஒருவர்  நசிகேதசின் தந்தையெனச் சொல்லப்படுகிறார். அவர் தனக்கு தானமாக வந்த ‘வத்தல்- தொத்தல்’ பசுக்களை, யாகம் வளர்த்து மற்றவர்களுக்குத் தானமாகத் தருவதை பார்த்துக் கொண்டிருந்த நசிகேதஸ், தன்னை அவர் யாருக்கு தானமாகத் தரப் போகிறார் என்று தொணதொணவென்று கேட்டதில், தன்னிலை மறந்து சினத்துடன் யமனுக்கு  என்று அவர் அக்கினி சாட்சியாகச் சொல்ல, அந்தச் சிறுவன் யமபுரி வாயிலை அடைந்து அங்கே மூன்று நாட்களாக யமனைச் சந்திக்கக் காத்திருக்கிறான்.

விருந்தாளியாக, பிறப்புக் கணக்கு முடியாத நேரத்தில், தன் ஊருக்கு வந்த ஒரு சிறுவனிடத்தில் அவனை மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்கும் யமன், அவனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் இரண்டு கேள்விகளால், உலகில்  சினம் குறைந்து அன்பு பெருக வேண்டும் என்றும், யாக  அக்னியின் புனிதம் எது, அதன் முன் சொல்லப்படும் வார்த்தைகள் சத்தியமாகிவிடும் விந்தை என்ன என்பது பற்றியும் கேட்கும் சிறுவன் மூன்றாவதாகக் கேட்கும் கேள்வி யமனையே அசைத்து விடுகிறது

येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तीत्येके नायमस्तीति चैके । एतद्विद्यामनुशिष्टस्त्वयाऽहं वराणामेष वरस्तृतीयः ॥ २०॥ (Kath. Upan. 1.1.20)

Yeyam prete vicikitise manushye astiyeke nayamastiti caike etadvidhya manusista vayahan varamesa varastriyah

சிலர் ‘நான்’ இருக்கிறது எனவும், சிலர் அது இறந்ததும் அழிந்து விடுகிறது என்றும் சொல்கிறார்களே, அப்படிப்பட்ட நான் எனும் உணர்வு இறந்த பின்னரும் இருக்கிறதா என்பது சிறுவனின் கேள்வி. பல விதங்களில் ஆசை காட்டியும், பலவிதங்களில் மறுத்தும் பார்த்த யமன் முடிவில் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார். (கேள்வியும், பதிலும் ஆழ்ந்த சிந்தனையைக் கோருபவை; எனவே, எனக்குப் புரிந்துள்ள வகையில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்) ‘சைதன்யம்’, ‘சுயம்’, ‘நான், ‘தன்னுணர்வு’, ப்ரக்ஞை என்பது உடல் சார்ந்த ஒன்றல்ல. உணர்வினால், புலன்களின் மூலமும் உணரப்படுதல் ஏற்படுகிறது. அது மனம், புத்தி, இந்திரிய செயல் கூட்டின் விளவு. நான் எனும் சைதன்யம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது பங்கேற்பாளன் இல்லை; அது முழுதான, சுத்தமான பரம்பொருளின் ஒரு பிரதிபலிப்பாக அனைவரிடத்திலும் உறைகிறது. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற இந்த சுழற்சியின் இயங்கு தளம் கர்ம வினைகளாகும். அவை சஞ்சித கர்மா, (சேமித்த நல்வினை, தீவினை), பிராரப்த கர்மா (இப்போது அவரவர் வாழ்வில்  காணப்படும் வினை), ஆகாமி கர்மா (எதிர்வரும் பிறப்பில் உருப்பெறும் வினைகள்)

இதையே  திருமூலரின் திருமந்திரத்தில் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லியிருக்கிறேன்.

வாடகை வீட்டில் தங்கிப் போவோருக்கு அந்த வீடு எப்படிச் சொந்தமாகாதோ, அதைப் போலவே இந்த நான்/சைதன்யம்/ஆத்மா குடியிருக்கும் உடல், அதன், தற்சமய வசிப்பிடம். இறப்பு உடலிற்கு நேருகிறது; அப்போது அது வெளியேறி கர்ம வினைகளுக்கு ஏற்ப மறு உடலில் குடியேறுகிறது. அப்படியென்றால்  நம் அவதாரங்கள் இந்தச் சுழற்சியால் தான் ஏற்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழலாம். பரம் பொருள் தானே விரும்பி அவதாரங்களைச் செய்கிறது; ஜீவனுக்கு, அந்தச் சுதந்திரம் இல்லை. (என்ன ஒரு ஓர வஞ்சனை!) மனிதனின் வினைகளே அவன் பிறப்பை, உடலை, வாழ்வை. மறுபிறப்பை, தீர்மானிக்கின்றன.

இக்கட்டுரைக்குப் பொருந்தும் வகையில் திரு கு அழகர்சாமி எழுதி  சொல்வனம் 297-ம் இதழில் வெளியாகியுள்ள இரு குறுங்கவிதைகளை (அவரது அனுமதி பெறாமலேயே- அவர் மன்னிப்பாராக) முடிவுரையாக இணைத்துள்ளேன்.

நீ-
இவனா?
அவனா?
உவனா?
நீ
எவன்?
என்
’நானி’ன்
உன்
’நான்’

ஜனனமும்
மரணமும்
சதா சுழற்றும்
குடை ராட்டின
ஜாலமா
ஜகம்?

பானுமதி ந

உசாவிகள்:

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம், திருமந்திரம், கதோபனிஷத்,மற்றும்

https://www.nature.com/articles/d41586-023-02120-8 July 23,2023 by Mariana Lanharo

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.