தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3

வைஷ்ணவத்தில் தந்த்ரா

 இந்து மதத்தில் கடவுள் உருவங்களுடனும், அவர்கள் சம்மந்தப்பட்ட புராணக் கதைகளிலும் பாம்பு இடம் பெறுவது குண்டலினியின் உருவகமாகவே. மேலும், அதோடு யோகா மற்றும் தந்த்ரா தொடர்புள்ள மற்ற உருவகங்கள், குறியீடுகள் ஆகியனவும் இடம் பெற்றிருக்கக் காணலாம். இக் கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருந்தபடியே, வைஷ்ணவத்திலும் இது இருக்கிறது.

    சிவன் மற்றும் காளியுடையதைப் போலவே விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்களான க்ருஷ்ணன், ராமன் ஆகியோரின் நீல நிறம் யோக, த்யான தன்மைகளைக் குறிப்பதாகும். இந்துக்களின் மறை நூலும், க்ருஷ்ணனால் கூறப்பட்டதாக சொல்லப்படுவதுமான பகவத் கீதை, யோக நெறிகளின் விளக்கங்களோடு கூடிய ஆன்மிக, தத்துவ விசாரமே! சுக்ல யஜுர்வேதத்தில் அமைந்த முக்திகோபனிஷத், ஆஞ்சனேயன் கேள்வி கேட்க ராமன் பதில் சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கும் யோக விசாரமேயாகும். இவை யாவற்றுக்கும் மேலாக, விஷ்ணுவின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன் என்னும் பாம்பு, குண்டலினியின் உருவகமே. அதன் ஆயிரம் தலைகள் என்பது, சஹஸ்ராரைக் குறிக்கக் கூடியது. 

     பொதுவாக இந்துக் கடவுள்கள், ஞானிகள், மஹான்கள் ஆகியோரின் தலைக்குப் பின்னால் ஒளி வட்டம் வரையப்படுவது சஹஸ்ராரைக் குறிப்பதே. சஹஸ்ரார் என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ஆயிரம் இதழ் கொண்ட தாமரை என்று பொருள். இந்து மதத்தில் ஞானத்தின் குறியீடாகவே தாமரை பயன்படுத்தப் படுகிறது. குண்டலினி சக்கரங்களைத் தாமரையாக உருவகிப்பதும் இந்த அர்த்தத்திலேயே. வாஸ்த்தவத்தில் சஹஸ்ராரை தலைக்கு ஓரங்குலம் மேலே படுக்கை வசமாக வரைய வேண்டும். அது பார்வைக்கு அவ்வளவு சிறப்பாக இராது என்பதாலேயெ தலைக்குப் பின்னால் வரையப்படுகிறது. இந்து மதத்தில் மட்டுமன்றி, பௌத்தம், க்றிஸ்துவம் போன்ற மதங்களிலும் இப்படி ஒளி வட்டங்கள் வரையப்படுவது சஹஸ்ரார் குறியீடே. 

     குண்டலினி உருவகமாக ஆதிசேஷன் பாம்பு விஷ்ணுவின் படுக்கையாக அமைக்கப்பட்டிருப்பதோடு, அவரது வாகனமாக பருந்து அமைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கவும். முருகனின் வாகனமாக மயில் அமைக்கப்பட்டிருப்பது போலவேதான் இதுவும். பருந்தும் பாம்பின் எதிரி. அதைக் கொத்திக் கொல்லக் கூடிய வலிமையும் இயல்பும் கொண்டது. யோக சக்தியில் வல்லவர், அதை அடக்கி ஆளக் கூடியவர் என்பதைச் சுட்டிக்காட்டும் குறியீடாகவே விஷ்ணுவின் வாகனமாக பருந்து அமைக்கப்பட்டிருக்கிறது.

     விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது, யோக நித்ரை என்று கூறப்படுகிறது. அது உறக்கத்தைக் குறிப்பதல்ல. யோகத்தில், யோக நித்ரை என்று ஒரு ஆசனம் உண்டு. அதைக் குறிப்பதுதான். விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து ப்ரம்மா தோன்றினார் என்று புராணங்கள் கூறுவதன் உட்பொருள், மணிப்பூரக சக்கரத்தைக் குறிப்பதே. விஷ்ணுவின் மார்பில் லக்ஷ்மி குடிகொண்டிருக்கிறாள் என்பது அனாஹத சக்கரத்தைக் குறிப்பதாகும். இவ்விரு சக்கரங்களும் விஷ்ணுக்ரந்தி எனப்படும்.

     விஷ்ணு பள்ளிகொண்டிருக்கிற பாற்கடல் (milk ocean) என்பதே குண்டலினி யோகத்தின் நிறை உருவகம்தான். அமரத்துவம் தரும் அமிர்தத்தைப் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து மேற்கொள்ளும் பாற்கடல் கடையும் புராணக் கதைச் சம்பவத்தில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு விஷயங்களும் குண்டலினி யோகத்தின் உட்கூறுகளை விளக்குபவையே!

     விஷ்ணுவின் முதன்மை அவதாரங்களில் ஒன்றான க்ருஷ்ணாவதாரத்தின் புராணமான பாகவதத்தில் இடம்பெறும் அனேக விஷயங்களும் தந்த்ரா தொடர்பானவையே! அவை அனைத்தையும் விவரிப்பது இங்கு இயலாத காரியம். அது தேவையற்றதும் கூட. மேலும், முக்கியமானவற்றை மட்டும் சொல்வதின் மூலமே தேடலுள்ள வாசகர்கள் மற்றவற்றை அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும்.

     ஆதிசேஷனைப் போலவே காளிங்கனும் குண்டலினிக் குறியீடு. காளிங்கனின் தலையில் பாலக்ருஷ்ணன் நர்த்தனமாடி, அதைக் கொல்வது என்பது தந்த்ரா யோகத்தில் வல்லவன் என்பதைக் காட்டக் கூடியது. குழந்தைக் காலத்திலும், சிறுவப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும், இளமையிலும், முதிர்ந்த பிறகுமாக க்ருஷ்ணன் நிகழ்த்தும் எண்ணற்ற லீலைகளும் மாயைகளும் யோக ஆற்றலினால் பெறப்படும் அஷ்டமா சித்திகள் உள்ளிட்ட பல்வேறு சித்திகளை விளக்கும் கதைகளே! அதைப் போலவே கோபிகைகளுடன் க்ருஷ்ணன் மேற்கொள்ளும் ப்ரசித்தி பெற்ற ராஸலீலைகள் யாவும் தந்த்ரா பாலியல் சடங்குகளைக் குறிப்புணர்த்துபவையே! தந்த்ரா மரபு சார் ஓவியங்களிலும், சிற்சில சைவ, வைஷ்ணவ ஆலய சிற்பங்கள் மற்றும் சுதைகளிலும் கோபிகைகளுடன்   க்ருஷ்ணன் கொள்ளும் இந்தக் காமக் களியாட்டக் கலவிச் சித்தரிப்புகளைக் காணலாம்.

     விஷ்ணு – லஷ்மி மற்றும் க்ருஷ்ணன் – ராதா தம்பதியர் தந்த்ராவின் அடிப்படைத் தத்துவமான ஆண் – பெண் சக்திகளின் உருக்கொடுப்புகளே. க்ருஷ்ணனின் முதன்மை மனைவியர்களான பாமா, ருக்மணி இருவரும் (கணபதி மற்றும் முருகனின் இரு மனைவியர் போலவே) இடகலை, பிங்கலை நாடிகளின் உருக் கொடுப்புகளாவர். இவ்விருவரையும் உள்ளிட்டு அவரது ராணிகள் எட்டு பேர் எனும்போது அது அஷ்டமா சித்திகளுக்கான குறியீடாகவும், ராஜயோகத்தின் எட்டு படிநிலை*களைக் குறிப்பதாகவும் ஆகிறது.

நாக வழிபாடு: பாம்பு வெறும் புழுவாக ஆன அவலக் கதை

 இதுவரை கூறப்பட்ட விளக்கங்களிலிருந்தே இந்து மத விஷயங்களில் பாம்பு உருவத்தை எங்கு பார்த்தாலும் அது குண்டலினிதான் என்பது எளிதாகப் புரிந்திருக்கும். ஆனால், இந்து மதத்தின் மாபெரும் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்; இதுவரை இவ்வுண்மை மக்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. இக் கட்டுரையின் முதல் அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருந்தபடி தந்த்ர சாஸ்த்திரங்கள் துறைசார் ரகசியமாகவே (esoteric) இதுகாறும் காக்கப்பட்டு வந்ததும், சாமான்ய பக்தர்களுக்கு ஆன்மிக, யோக, மெய்ஞான விஷயங்களில் நாட்டமோ, அக்கறையோ இல்லாதிருப்பதும், மேம்போக்கான வாசிப்பு மட்டுமே கொண்ட மத போதகர்களான துறவிகள், உபன்யாசகர்கள், பண்டிதர்கள் ஆகியோர் சாமான்யர்கள் போலவே உட்பொருள் காணாமல் வெறும் நேர்ப் பொருள் மட்டுமே கொண்டு அர்த்தங்களை அனர்த்தப்படுத்திவிடுவதுமே இதற்குக் காரணம். பாம்பு என உருவகமாக சொல்லப்பட்டது குண்டலினி சக்தியையே என்பதைப் புரிந்துகொள்ளாமல், அசல் பாம்பு என்பதாகவே தவறாகப் புரிந்துகொண்டு, பல ஆயிரத்தாண்டுகளாக நாக பாம்புகளையும், அவற்றின் சிலைகளையும் வழிபட்டுக்கொண்டிருக்கிறது இந்து மதத்தின் பாமர மற்றும் பண்டித பக்த கூட்டம். இதற்கென கோவில்களில் நாக சிலைகள் ப்ரதிஷ்டை செய்யப்படுவதோடு, தானாகத் தோன்றும் புற்றுகளும் மஞ்சள் பூசப்பட்டு தெய்வீகமாக்கப்படுகின்றன. அதில் குடியிருக்கும் பாம்புகளுக்கு பாலும், முட்டையும் படையலாக்கப்படுகிறது. இதையொட்டி பாம்பு தொடர்பான கட்டுக் கதைகளும், நாக தோஷம் போன்ற மூட நம்பிக்கைகளும் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. பக்திப் படம் என்ற பெயரில் உருவாக்கப்படும் மூன்றாம் தரமான இந்தியத் திரைப்படங்களிலும் இது சம்மந்தமான அபத்தக் காட்சிகள் பல வகைகளிலும் இடம் பெறும். 

     கேரளத்தில் நாக வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும். இங்கு கோவில்களில் நாக சிற்பங்கள் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது மட்டுமன்றி, நாக வழிபாட்டிற்கெனவே ஸர்ப்பக்காவு*களும் அமைக்கப்பட்டிருக்கும்.  தாந்த்ரீகச் சடங்கான களமெழுத்தில்* நாக களம் வரையப்பட்டும், நாகம்பாடிப் பாணர்*களால் நாகப்பாட்டு பாடப்பட்டும், வழிபாடு மற்றும் தோஷம் தீர்க்கும் சடங்குகள் மேற்கொள்ளவும் படும்.

     அண்டை மாநிலமான கர்னாடகாவிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இதே போன்ற நாக வழிபாடுகள் மற்றும் சடங்குகளைக் காணலாம். குண்டலினி உருவகத்தின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் நேர்ப்பொருள் மட்டுமே கொள்ளப்பட்டதினாலான இந்து மத ஆன்மீகத் தாழ்ச்சியின் துவக்கம் என இதைக் கூறலாம். ப்ரபஞ்ச சக்தியான குண்டலினி சக்தியைக் கையகப்படுத்தி சாமான்ய மனிதர்களும் மேல் நிலையை அடையும் யோக வாய்ப்பு இவ் வகையிலேயே பல்லாயிரத்தாண்டுகளாக இழக்கப்பட்டு வந்திருக்கிறது.

அன்றாட வாழ்வில் தந்த்ரா: அறியப்படாமல் தொடரும் உட்பொருள்கள்

 தந்த்ரா வழமைகளை இல்லற / லோகாயத வாழ்வில் உள்ள சாமான்யர்களாலும் கைக்கொள்ள இயலும். அதன் வாயிலாக அவர்கள் யோக, ஆன்மிகப் பயன்கள் பலதைப் பெறவும் வாய்க்கும். ஆனால் படிக்காத மற்றும் கல்வியறிவு குறைந்த பாமரர்கள் மட்டுமன்றி உயர் கல்வியறிவு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுமே கூட இத்தகைய மேல் நிலைகளை விரும்புவதில்லை. அவர்களின் இயல்பு மேலோட்டமான அல்லது தீவிரமான பக்தியோடேயே நின்றுவிடுகிறது. இத்தகையவர்களும் தந்த்ரா யோகத்தின் குறைந்தபட்சப் பலன்களையேனும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்துக்களின் அன்றாட வாழ்வுப் பழக்க வழக்கங்களிலும், பண்பாடுகளிலும், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களிலும் மறைமுகமாக தந்த்ரா குறியீடுகளைப் புகுத்தி நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் முன்னோர்கள்.

     உதாரணத்துக்கு சிலவற்றைக் குறிப்பிடலாம்.

     புருவ மத்தியில் திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவற்றைத் திலகமாக இட்டுக் கொள்வது பக்தியின் அடையாளமாகப் பின்பற்றப்படும் வழக்கமாக இருந்துவருகிறது. உள்ளர்த்தத்தில் இது ஆக்ஞா சக்கரத்தைக் குறிப்பதாகும். திலகமிடுவதற்காக தினமும் அதை விரல் நுனியால் தொட்டு அழுத்துவதன் மூலம் அச் சக்கரத்தில் யோக ரீதியிலான தூண்டுதலுக்கு வாய்ப்பும் ஏற்படுகிறது. திலகமிடுவதன் முதன்மை நோக்கம் அதுவே. வசிய மாந்தரீகர்கள் எதிராளியின் ஆக்ஞா மையத்தை இமைக்காமல் உற்று நோக்குவதன் மூலமே அவர்களைத் தன்வயப்படுத்துவார்கள். புருவ மத்தியில் வைக்கப்படும் திலகம் – குறிப்பாக குங்குமம் – தடுப்பாக அமைந்து அத் தீமையிலிருந்து காக்கவும் செய்யும். திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவற்றுக்கு மருத்துவ குணங்களும் உள்ளன; அவற்றை அணிவதற்கு தத்துவ விளக்கங்களும் உண்டு. 

     பெண்கள் குங்குமத்தைப் பொட்டாக வைத்துக்கொள்வதும் இக் காரணங்கள் பற்றியதே. ஆனால், பிற்பாடு ஆணாதிக்க சமூகம் அதை சுமங்கலத்தோடு தொடர்புபடுத்தி, விதவைகளுக்கு குங்குமத் திலகமிடும் உரிமையைப் பறித்துவிட்டது.

     திருநீறாகப் பயன்படுத்தப்படும் சாம்பலும், திலகமிடப் பயன்படுத்தப்படும் குங்குமமும் மிகுந்த தாந்த்ரீக முக்கியத்துவமுடையவை. சாம்பல் அல்லது அஸ்தி, வாழ்வின் நிலையாமையைச் சுட்டிக் காட்டும் தத்துவம் கொண்டது என்பது மட்டுமின்றி அதன் வெண்ணிறம் சிவம் எனப்படும் ஆண் சக்தியை – அதாவது விந்துவை – குறிப்பதுமாகும். அவ்வாறே குங்குமத்தின் சிவப்பு நிறம் ஷக்தி எனப்படும் பெண் சக்தியை – அதாவது பூப்பெய்தல் மற்றும் மாதவிலக்கு ரத்தத்தை – குறிப்பதாகும். சாக்த மற்றும் தாந்த்ரீக வழிபாட்டின் செவ்வாடைகள் குறிப்பதும் இதையே. தெய்யம் எனும் கேரளத் தாந்த்ரீகச் சடங்கு நடனத்தின் அலங்காரங்களில் இவ்வாறே சிவப்பு நிறமும் வெண்ணிறமும் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். தெய்யம் சாக்த வழிபாட்டிலானது என்பதால் அதில் சிவப்பின் ஆதிக்கமே மேலோங்கியுமிருக்கும். 

     தந்த்ராவில் சிவப்பு நிறம் பெண் சக்தியைக் குறிப்பது மட்டுமின்றி, சிற்றின்பகரமான நிறம் (erotic colour) என்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. பெண்கள், குறிப்பாக மணப்பெண்கள், மெஹந்தி எனப்படும் மருதாணி அலங்காரம் செய்துகொள்வது இதன் பொருட்டே. மணமேடையில் மணமகனுக்கு இடப் புறமாக மணப்பெண் இருத்தப்படுவதும், பொதுவாக கணவனுக்கு இடது புறம் மனைவி இருத்தப்படுவதுமான சம்பிரதாயம், யோக முறைப்படி உடலின் இடப் புறம் பெண் சக்தியும், வலப் புறம் ஆண் சக்தியும் உள்ளதைக் குறிப்பதே. 

     சடங்குகளில் பயன்படுத்தப்படும் பூர்ண கும்பம் பெண்களின் கர்ப்ப வயிற்றைக் குறிக்கவும், தாய்மையைச் சிறப்பிக்கவும் செய்கிற குறியீட்டுப் பொருளாகும். கோவில்களில் கடவுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் மூலப் பகுதி கருவறை / கர்ப்பக்ரஹம் என்று கூறப்படுவதும் இங்கு குறிப்பிடத் தக்கது. 

     இவ்வாறு இந்துக்களின் அன்றாட வாழ்வில் அனேக விஷயங்களிலும் தந்த்ரா கூறுகள் மறைமுகமாக முன்னோர்களால் புகுத்தப்பட்டு, பின்னோர்களால் உட்பொருள் அறியப்படாமலேயே வழிவழியாகப் பின்பற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தாய்த் தெய்வங்களிடம் திரும்புவோம்

 தாய்த் தெய்வ வழிபாடு உலகெங்கிலுமுள்ள அனேக மதங்களிலும் உள்ளதுதான். எனினும் இந்து மதத்தில் அது மிக உயரிய இடத்தைப் பெற்றுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தக்கூடிய மரபு அதனுடையது. தாய்மையைப் போற்றுதல் என்னும் இத்தகைய பண்பு ஒருபுறமிருக்க, ப்ரபஞ்ச இயக்கத்தின் மூல காரணியான ப்ரபஞ்ச ஆற்றலையே ஷக்தி என்னும் தாய் / பெண் வடிவாகக் காண்பது அது. இந்த ஆற்றல் அல்லது ஷக்தியின் பல்வேறு வடிவங்களே இந்து மதத்தின் தாய் அல்லது பெண் தெய்வங்கள் யாவும். 

     தொல் த்ராவிட தாய்த் தெய்வமான ஷக்தியே ஆரியக் குடியேற்றத்துக்குப் பிறகு ஆரியமயமாக்கப்பட்டு மும்மைக் கடவுளிகளாக (trinity goddesses) உருக்கொடுப்பு (embodyment) செய்யப்பட்டாள். மேற்கொண்டு ‘சமஸ்க்ருத எழுத்துக்களின் எண்ணிக்கைப்படி’ 51 ஷக்தி பீடங்கள் அமைக்கப்பட்டது ப்ராமணியப் புராணீக வரலாறு. இதோடும் நில்லாமல் பின்பு ஷக்தி 108 அம்மன்கள் வடிவாகவும் பன்மடிப் பெருக்கம் செய்விக்கப்பட்டாள்.

மைல் கற்களையும், மரங்களையும், பனிக்கட்டியையும் கூட திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தி கடவுள்களாக்கிவிடுகிற சர்வ வல்லமை பெற்றவர்கள் இந்துக்கள். எனவே, அதிகாரபூர்வமான இந்த 108 அம்மன்கள் தவிர, உரிமம் பெறாத எத்தனை அம்மன்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாது. எப்படியாயினும், இந்தப் பெண் தெய்வங்கள் தாய்த் தெய்வ வழிபாட்டிலானவர்கள். இவர்களின் பெயர், வடிவம், நிறம், ஆசன நிலை, முத்திரைகள், ஆடை – அலங்காரங்கள், அவர்களுக்குரிய வழிபாடுகள், சடங்குகள், நைவேத்யங்கள் அனைத்திலும் தாந்த்ரீகப் பொருள்கள் இருக்கும். அவை சாக்தம் மற்றும் வாமாச்சாரக் கோட்பாடுகள் (theories), சமயக் கொள்கைகள் (doctrines) அடிப்படையிலானவையாகவும் இருக்கும்.  

     புருஷன் – ப்ரக்ருதி தத்துவத்தின் விளக்கங்களை இந்து மதத்தின் மும்மைக் கடவுள் தம்பதிகள் அனைவரிலுமே காணலாம் என்றாலும் சிவ – ஷக்தி வடிவங்களிலேயே அது உச்சமும் முழுமையும் பெறுகிறது.  இதன்படி சிவன் அக மெய்ம்மை(inner reality)யைக் குறிக்கும்படியாகவும், ஷக்தி புற மெய்ம்மை(outer reality)யைக் குறிக்கும்படியாகவும் தோற்றப்படுத்தப்பட்டிருப்பார்கள். அதாவது சிவன் த்யானம், தவம், யோகம் ஆகியவற்றின் அடையாளங்களையும், ஷக்தி இல்லறம் மற்றும் லோகாயதங்களின் அடையாளங்களையும் தாங்கியிருப்பார்கள்.

     கடவுள்களைக் காட்டிலும் கடவுளிகளுக்கே – குறிப்பாக ஷக்தியின் இல்லற வடிவங்களுக்கே இந்து மதப் பெண்களும், தாய்மார்களும் அதிக அளவில் பக்தைகளாக உள்ளனர். இது பெண்களின் இயல்பான இல்லற மற்றும் லோகாயதக் குணங்களின் காரணமாகவே. சாக்தம் இந்த அடிப்படையிலான இயங்கியல் கொண்டதுதான் என்பதாலேயே அவற்றுடன் அவர்களால் அந்த அளவுக்கு ஒன்றிவிட முடிகிறது. வாமாச்சாரம் இதை இன்னும் ஆழ்ந்தும் வீரியத்தோடும் செயல்படுத்துவதால் அவர்கள் அதை மேற்கொள்கிற பட்சத்தில் மேலான பலன்களை மெய்யாகவே அடைய முடியும்.

முடிவுரையாக

     இதுவரை கூறப்பட்ட தகவல்கள் பல்வேறு யோக, தாந்த்ரீக சாஸ்த்திரங்களிலிருந்தும், அவற்றின் விளக்க நூல்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பல்துறை நூல்கள் பலவற்றை ஆய்ந்தும், வாழ்வனுபவங்களிலிருந்து அனுமானித்தும் பெறப்பட்டவையே. இந்து மதத்தின் ஆதார ஸ்ருதியாக விளங்குவது தந்த்ராவே என்னும் தீர்மானத்துக்கு நான் வந்தது இப்படித்தான். எனது அறிதலை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ளும் இக் கட்டுரை, ஒரு கைகாட்டிப் பலகை மட்டுமே. இதன் வழி செல்லும் தேடலுள்ள வாசகர்கள் இன்னும் இன்னுமான பற்பல தந்த்ரா உட்பொருள்களை இந்து மதத்தில் எங்கெங்கும் காண இயலும்.

*******

அடிக் குறிப்புகள்:

* ராஜயோகத்தின் எட்டு படிநிலைகள்: 1.யமம், 2.நியமம், 3.ஆசனம், 4.ப்ராணாயாமம், 5.ப்ரத்யாஹாரம், 6.தாரணா, 7.த்யானம், 8.சமாதி. 

* களமெழுத்து: கேரளத்தின் பிரசித்தி பெற்ற தாந்த்ரீகச் சடங்குகளில் ஒன்று. தரையில் இயற்கை வண்ணப் பொடிகளால் கடவுள் – கடவுளிகளின் உருவங்கள் மற்றும் நாக மண்டலங்கள் வரையப்பட்டு உரிய பூஜைகளும் சடங்குகளும் மேற்கொள்ளப்படும். 

* ஸர்ப்பம் – பாம்பு; காவு – சோலை/குறுங்காடு

* பாணர்கள்: சடங்குப் பாடல்களைப் பாடும் குலத் தொழில் கொண்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினர். இவர்களின் பூர்வீகம் தமிழகம். பண்டைக் கால சங்கத் தமிழ் இலக்கியங்களில் பாடகர்களாக இக் குலத்தினர் அதிகளவில் இடம்பெறக் காணலாம். இவர்களின் சந்ததிகள் இன்னமும் தமிழகத்தில் உண்டெனினும் பூர்வ குலத் தொழில் அங்கு கைவிடப்பட்டுவிட்டது. முற்காலத்தில் தமிழகத்திலிருந்து கேரளத்துக்குக் குடியேறியவர்களின் வம்சாவளியினரான கேரளப் பாணர்கள் மட்டுமே இன்னமும் இக் கலையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். 

     கேரளப் பாணர்களில் திருவரங்கப் பாணர்கள், நாகம்பாடிப் புள்ளுவர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். இவர்களில் கடவுள் வழிபாட்டுப் பாடல்களை மட்டும் பாடும் திருவரங்கப் பாணர்கள் சற்று மேலானவர்களாகக் கருதப்படுபவர்கள். நாக தோஷம், மரண தோஷம் ஆகியவற்றை நிவர்த்திக்கப் பாடும் நாகம்பாடிகள் சற்று கீழானவர்களாகக் கருதப்படுபவர்கள். 

     நாக களமெழுத்து மற்றும் நாகப் பாட்டுச் சடங்குகள் கோவில்களில் வழிபாட்டுக்காகவும், வீடுகளில் தோஷம் தீர்க்கவும் நிகழ்த்தப்படும். திருவரங்கப் பாடல்கள் மற்றும் நாகப் பாடல்களில் தமிழ் சொற்களும் கலந்திருப்பது அவர்களின் பூர்வீகத்தை நினைவுபடுத்துவதாக இருக்கும்.

*******

ஷாராஜ் பற்றி:

நவீன தாந்த்ரீக ஓவியர் மற்றும் இலக்கியவாதி. 5 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, இரு நாவல்கள் ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். அமேஸான் கிண்டிலில் சில மின்நூல்களையும் வெளியிட்டுள்ளார்.  

Official website:

https://www.shahrajinmindscape.com/about.php?lang=ta

Series Navigation<< இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.