மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள்

சடங்குகள் என்பவை தான் என்ன?

ஆதி மனிதன் இயற்கையைப் பார்த்து கற்றுக்கொண்ட அழகியலில் இருந்து சடங்குகளும்  உருவாகி வந்திருக்கக் கூடும். ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயான ஆதவனை வரவேற்கும் புள்ளினங்களைப் பார்த்து, அவற்றின் கூவல்களைக் கேட்டு, அவன் சூர்யனை வணங்கத் தொடங்கியிருப்பான். அதைத் தொடந்து நீரை, காற்றை, நிலத்தை என அனைத்து இயற்கையையும் கொண்டாடும் மன நிலைக்கு வந்திருப்பான். அவை பழக்கமாகி, வழக்கமாகி, ஒவ்வொரு மனிதரிடத்திலும் படிந்து போய் சடங்காக உருவெடுத்திருக்கும். காலையிலும், இரவிலும் பல் துலக்கும் தன்மை நம்மிடம் எப்படி  வந்தது? நம் தாயார், தந்தை போன்றவர்கள் சொல்லித் தந்த நல் வழக்கம் பழக்கமாகி விட்டது.

இதையெல்லாமா  சடங்கு என்று சொல்கிறாய் என்றால், ஆம், பழக்க வழக்கங்கள் அனைத்துமே சடங்குகள் தான்.

‘காலை எழுந்தவுடன் படிப்பு; பின்பு கனிவு தரும் நல்ல பாட்டு; மாலை முழுதும் விளையாட்டு என்று பழக்கப்படுத்திக் கொள்ளு பாப்ப’’ என்று பாடுகிறார் நம் கவியரசர். நல்ல பழக்கங்கள் சடங்குகளாக மலர்கின்றன; தொட்டில் போடுவது, பேர் வைப்பது, அத்தையும், மாமனும் சீர் செய்வது என்பதெல்லாம் தலைமுறைகள் தோறும் தொடரும் சடங்குகள்.

இன்றும் நாம் பெருமை கொள்ளும் கிரிக்கெட் விளையாட்டு வீரர், அதிரடி தொடக்க ஆட்டக்காரர், கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் களத்தில் இருக்கையில் மேலே நிமிர்ந்து வானத்தை, குறிப்பாக சூர்யனைப் பார்த்து ஏதோ உபாசனை போலச் சொல்வார். நம் ‘செகுலர்’ ஊடகங்கள் அதைப் பற்றி பல கேலிகள் எழுதியிருக்கின்றன. அந்தச் செயலின் பின்னே அவர் தனக்குத்தானே ஒரு ஒழுங்கைக் கட்டமைத்துக் கொண்டு குவி கவனத்துடன் விளையாட முனைவது (என்னைப் போன்ற செகுலர்களுக்குப்) புரியும். இதுவும் ஒரு சடங்கு தான்; தனி நபர் மேற்கொள்ளும் சடங்கு.

ஒவ்வொரு பந்தய ஆட்டத்தின் போதும் ரஃபேயல் நடால் (Rafael Nadal) தொகுப்பான நடவடிக்கைகளைை மேற்கொள்வார். கையில் மட்டையுடன் அவர் மைதானத்தில் வரும் போது, ஒவ்வொரு கோட்டையும் மிதிக்காமல், தன் வலது காலை முன் வைத்துத் தாண்டுவார். தன் பையை பலகையில் வைத்த பின்னர், அந்தப் பந்தயதிற்கான அடையாள அட்டையை மேலே திருப்புவார். பக்கக் கோட்டிற்கு செங்குத்தாக அவரது நாற்காலி இருக்கும். தன் ஆடுசதையில் பொருந்தியுள்ள காலுறைகள் சமமாக இருக்கின்றனவா என்று பார்ப்பார். நாணயம் சுண்டப்படும் போது அவர் வலையைப் பார்த்து குதிக்கத் தொடங்குவார்; நாணயம் கீழே விழுந்தவுடன் தொடக்கக் கோட்டிற்குச் செல்வார்; அங்கே ஒரே இயக்கமாக முழுக் கோட்டிலும் தன் பாதங்களை இழுப்பார்; தனது ராக்கெட்டால் ஒவ்வொரு காலணியையும் அழுத்தமாகத் தொடுவார்.

கத்தோலிக்கர்கள் சிலுவைக் குறி இட்டுக் கொள்வதைப் போல, ஆட்டம் தொடங்கியவுடன், கைகளால் பல சைகைகள் செய்வார். தன் இடை உடையின் பின், முன் பகுதிகளை வலது கரத்தால் தொட்டு, பின் இடது தோளைத் தொட்டு, பிறகு வலது தோள், மூக்கு, இடது காது, மறுபடியும் மூக்கு, இறுதியாக தன் வலது தொடையைத் தொடுவார். ஒவ்வொரு இடைவேளையின் போதும், இரண்டு துவாலைகள் எடுத்துக் கொள்வார். தன் எதிராளி முதலில் செல்லட்டும் எனக் காத்திருந்து, தன் வலது காலை எடுத்து வைத்து தன் நாற்காலிக்கு வரும் அவர், ஒரு துவாலையைக் கவனமுடன் மடித்து தனக்குப் பின்னால் வைத்துக் கொள்வார்; அதை உபயோகிப்பதில்லை. இரண்டாவதை மடித்து தொடையில் வைத்துக் கொள்வார். ஒரு மிடறு தண்ணீர் ஒரு பாட்டிலிலிருந்தும், மற்றொரு மிடறு இன்னொரு குடுவையிலிருந்தும் பருகும் அவர், அந்த பாட்டில்கள் முன்பு இருந்த நிலையிலேயே அவற்றின் ‘லேபிள்கள்’ ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளும் விதத்தில் வைப்பார்.

தன் சுய சரிதையில் அவர் எழுதுகிறார் : நான் மூட நம்பிக்கையால் இதைச் செய்யவில்லை; அப்படியென்றால், நான் தோற்றுப் போகும் மைதானங்களிலும் இதைச் செய்கிறேன் அல்லவா? ஆட்டத்தில் ஈடுபட என் மூளையில் நான் விரும்பும் ஒழுங்கை, சூழலிலும் கொண்டு வரும் முயற்சி அது. அவருடைய இந்தப் பழக்கம், அவரது பதற்றத்தைத் தணித்து, அவர் விரும்பும் ஒழுங்கைக் கொடுக்கிறது என்பதை ஏன் ஏற்க மறுக்க வேண்டும்? மிகச் சிறந்த டென்னிஸ் வீரர் அல்லவா அவர்?

நான் உட்பட பல மானுடவியலாளர்கள் பல்லாண்டுகளாக செய்து வரும் ஆய்வுகள், பழக்கங்கள் நமக்கு இயல்பாக வருகின்றன என்பதையும், நாம் கலாச்சார வேறுபாடுகள் கொண்டவர்களாக இருந்தாலும், இந்தப் பழக்கங்கள் நல்ல விளைவைத் தரும் என்று நம்புகிறோம் என்பதையும் தெரிவிக்கின்றன (பல் துலக்குவதைப் போல்) சடங்குகள், உண்மையில் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகின்றனவா? இப்படி ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறதா, சடங்குகளில் செலவிடுவது வெட்டி நேரங்களா, நமது உண்மையான கஷ்டங்களை எதிர் கொள்ள மறுத்து இவற்றில் தஞ்சமடைகிறோமா?

கவலைகளை எதிர்கொள்ள சடங்குகள் உதவுகின்றன என்று கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2006 லெபனான் போரின் போது, ஆய்வாளர்கள், இஸ்ரேலில், உள்ளூர் பெண்களைப் பேட்டி எடுத்தனர்.  போர் பகுதிகளில் வாழும் பெண்களில், ‘சாம்ஸ்’ (psalms) சொன்னவர்களின் பதட்டம் குறைவாக இருந்தது தெரிய வந்தது. போர்சூழலில் இல்லாமல் தொலைவிலிருந்த பெண்களிடம், இந்தத் தொடர்பு தென்படவில்லை. அவரவர் பதட்ட நிலையை அந்தந்தப் பெண்களே அனுமானித்திருந்தாலும், உடலில் அவர்கள் அனுபவித்த பதற்றங்கள் தென்பட்டன.

கனெக்டிகட்டில், நானும், என்னுடன் பணி செய்பவர்களும், எங்கள் ஆய்வகத்தில், பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் மிகு சோதனைக் காலமான அரையாண்டுத் தேர்வுகளில் அவர்களை கவனித்தோம். கள ஆய்வுகளுடன், அந்த மாணவர்களின் முடி மற்றும் எச்சில் மாதிரிகளையும் பெற்றோம்; இது, மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசாலின் அளவைக் கணக்கிட உதவும். எச்சிலில் வரும் கார்டிசாலின் அளவு சில நிமிடங்களில் மாறிவிடும் என்பதால், குறிப்பிட்ட நடவடிக்கைகளின் போது அதை ஆய்வுப் பொருளாகக் கொண்டோம். இந்த சுரப்பு நம் முடிகளிலும் காணப்படும்; நீண்ட நேரமும் இருக்கும். எனவே நீண்ட கால மன அழுத்தத்தைக் கணக்கிட முடி மாதிரிகள் உதவும். பல சடங்குகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் மன அழுத்த நிலை இந்த இரண்டு சோதனைகளிலும் குறைந்து காணப்பட்டது.

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. தொடர்பைக் காட்டும் அதே நேரத்தில் காரணங்களை அவ்வளவு எளிதாக அறிய முடியாது. அதற்கான பரிசோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டும். சமீப காலங்களில் இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

மேத்யூ அனான்டாசி, மற்றும் ஆன்ட்ரூ ந்யூபெர்க் (Mathew Anantasi & Andrew Newberg) கதோலிக்க கல்லூரி மாணவர்களை இரு பிரிவாகப் பிரித்து ஒரு சோதனை மேற்கொண்டார்கள். ஒரு குழுவை ‘ரோசரி’ (Rosary) என்னும் ஜபத்தைச் சொல்லச் சொன்னார்கள்; மற்றொரு குழுவினருக்கு மதம் சார்ந்த திரைப்படம் காட்டப்பட்டது; இந்த இரு நிகழ்விற்கும் முன்னரும், பின்னரும் பங்கேற்ற மாணவர்களின் மன அழுத்த நிலைகள் அளவிடப்பட்டன. ரோசரி சொன்னவர்களுக்கு மன அழுத்தம் குறைந்திருப்பதை பதிவு செய்தார்கள்.

அலிசன் ப்ரூக்ஸ்  (Alison brooks) மற்றும் அவருடன் ஒரு பரிசோதனையில் ஈடுபட்டவர்கள், மந்திரத்தின் தாக்கம் போன்ற செயற்கைச் சடங்குகளைச் செய்யுமாறு பங்கேற்பாளர்களைக் கேட்டுக் கொண்டனர். இத்தகைய சடங்குகளைச் செய்தோர்க்கு, கணிதத் தேர்வு எழுதும் போது வரும் மன அழுத்தமோ, அல்லது பொது மேடையில் கிரியோக்கி (Karaoke- முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ள இசைக்குப் பாடுவது) போன்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது ஏற்படும் பதட்டமோ குறைந்து காணப்பட்டதாக அவர்களின் ஆய்வு முடிவுகள் காட்டின. மற்றோர் ஆய்வில் மைக்கேல் நார்டன் மற்றும் ஃப்ரேன்செஸ்கா ஜீனோ, (Michael Norton & Francesca Gino) பங்கேற்பாளர்களை அவர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த தோல்விகளை/ வருத்தங்களை நினைத்துப் பார்க்கச் சொன்னார்கள். அந்த நினைவுகளே அவர்களின் சோகத்தைத் தூண்டப் போதுமானதாக இருந்தது. அவர்களில் சிலரை சடங்குகள் செய்யச் சொன்ன போது அவர்களின் மன அழுத்தமும், வருத்தமும் குறைந்ததைக் கண்டார்கள்.

ஆய்வகத்திலிருந்து, நிஜ உலகில் பரிசோதிக்கும் எண்ணத்தில் இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவான மொரீஷியஸ் சென்றோம். தானியங்கி நரம்புச் செயல்பாடான  இதயத் துடிப்பு மாறுபடுதல்களின் மூலம், சடங்கு செய்வோரின் மன அழுத்தம் தணிகிறதா இல்லையா என்று அறிவியல் ரீதியில் காண விழைந்தோம். அங்கே பின்பற்றப்படும் உள்ளூர் சடங்குகள் தான் அடிப்படை.  நல்ல ஆரோக்கியமான  இதயம் ஒவ்வொரு வினாடியும் ஒன்று என்ற சீரான இடைவெளியில், கால அளவைக் குறிக்கும் கருவி (Metronome) போல துடிப்பதில்லை. இரு துடிப்புக்களுக்கிடையே சமமற்ற இடைவெளியின் சராசரி, ஒரு வினாடியாக இருக்கிறது. இந்த மாறுபாடுகளை இதயத் துடிப்பு மாறுபடும் கால அளவீடு, (60 வினாடி என்பது பொதுவானது) எனச் சொல்கிறோம். இது அதிகமாக இருக்கையில் நரம்புத் தொகுதிகள் நல்ல சம நிலையில் உள்ளன. நாம் பதட்டதிற்கு உள்ளாகும் போது, இந்தச் சம நிலை பாதிப்படைகிறது-இதயத் துடிப்பு கடினமாகிறது- இரு துடிப்புக்களின் இடையே மாறுபாடு குறைகிறது. இதனால், உடல் அதிக விழிப்புணர்வுடன் செயல் படுகிறது. அதைப் பதட்டம் என உணர்கிறோம்.

லெ குலே (La Gaulette) என்ற மீனவ கிராமத்தில் ஒரு ஆய்வு செய்தோம். கடற்கரை சாலையில் பொது மக்களின் நடவடிக்கைகள், பொதுவாக இத்தகைய கிராமங்களில் காணப்படுவதை ஒத்து இருந்தன- உணவகங்கள், கடைகள், வணிகச் செயல்பாடுகள், காவல் நிலையம், தெற்கு நுழை வாயிலில் கதோலிக தேவாலயம், வடக்கில் மராத்தி இந்துக் கோவில். ஒவ்வொரு காலையிலும்,தேநீரகத்தில் அமர்ந்து கொண்டு, வண்ணமிகு புடவைகள் அணிந்த பெண்கள் ஆலயத்திற்குச் செல்வதைப் பார்த்தோம்; அவர்கள் இந்துக் கடவுளர்க்கு பிரார்த்தனை வழிபாட்டுடன், காணிக்கைகளை செலுத்துவதையும், நறுமணக் கூம்புகளுடன் பிரகாரத்தை வலம் வருவதையும் பார்த்தோம். பரிசோதனைகளால் அல்லாது, கலாச்சாரம் சொல்லும் இத்தகைய செயல்பாடுகளில், திரும்பத் திரும்பத் தொடர்ந்து செய்யப்படும் இவற்றைப் பற்றித்தான் எங்களின் ஆர்வமும் இருந்தது.

“என் சிந்தையில் நான் எதிர் பார்க்கும் ஒழுங்கை, சூழலிலும் கொண்டு வருவது.”

ஒரு ஜோதிடரைப் போல நம் மூளையும் கணிக்கக்கூடிய ஒன்று. மூளை புள்ளியியல் ஒழுங்கு முறைகளையும், வடிவங்களையும் தான் பார்க்கும் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கிறது. ஏதாவது புரிபடாது போகையில், பதட்டமடைகிறது; இங்கேதான் பழக்க வழக்கங்களும், சடங்குகளும் தேவையாகின்றன, அவை சூழ்நிலையைக் கையாள நமக்கு உதவுகின்றன.

அந்தப் பெண்களிலிருந்து 75 பேரை தேர்வு செய்து இரு பிரிவுகளாகப் பிரித்தோம். முதல் குழுவினர் எங்கள் அங்கத்தினர்களை கோயிலில் சந்தித்தனர். அதே அளவிலான, ஆனால் மதம் சாராத, ஒரு கட்டிடக் கூடாரத்திற்கு மற்றொரு  பிரிவினரை அழைத்து வந்தோம். இவர்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தனர். மன அழுத்தம் தரக்கூடிய செயல்களைச் செய்வதற்கு முன், இதயத் துடிப்பை அளப்பதற்கான கருவியை அனைவருக்கும் பொருத்தினோம். வரவிருக்கும் புயல், வெள்ளம் போன்றவற்றிலிருந்து தப்பிப் பிழைக்க என்னனென்ன முன்னெச்சரிக்கை எடுத்துக் கொள்வார்கள் என்று கட்டுரை எழுதச் சொன்னோம். இந்த மாதிரியான இயற்கைப் பேரிடர்களை அவர்கள் அடிக்கடி எதிர்கொள்கிறார்கள்- அதை மட்டுமல்ல- அதன் பயங்கர பின் விளைவுகளையும். இந்த நிலை எப்போதுமே பதட்டம் தரும் ஒன்று. இந்தப் பெண்களின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் விதத்தில், அவர்களது கட்டுரைகளை பொது பாதுகாப்பு வல்லுனர்கள் மதிப்பிடுவார்கள் என்றும் சொன்னோம். இந்த சோதனை முடிந்த பிறகு, கோயிலில் இருக்கும் பெண்களின் குழுவை பிரார்த்தனைக் கூடத்திற்கு சென்று, அவர்கள் எப்போதும் செய்யும் சடங்குகளைச் செய்யச் சொன்னோம். அவர்கள் வழக்கம் போல தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து கடவுளை வணங்கினார்கள். எங்கள் கட்டுப்பாட்டில் இருந்த குழுவினரை, இதையே சடங்குகள் இல்லாமல் செய்யச் சொன்னோம்; அமர்ந்து ஓய்வெடுக்கச் சொன்னோம்.

நாங்கள் கணித்ததைப் போலவே, சடங்கு செய்த குழுவில் நல்ல விளைவு இருந்தது. இயற்கைப் பேரிடரை நினைத்த இரு குழுவினரிடமும் பதட்டம் இருந்தது; ஆனால், சடங்குகள் செய்தவர்கள் பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டார்கள். அவர்களது இதயத் துடிப்பு மாறுதல்கள் 30% அதிகரித்தது-அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விரைவில் வெளி வந்தார்கள். இது அவர்கள் உணர்ந்த விதத்துடன் சமச்சீராகவும், நிலையாகவும் காணப்பட்டது. சடங்கு செய்யாதக் குழுவின் மன அழுத்த நிலை, ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக இருந்தது. இது ஏதோ புறந்தள்ள வேண்டிய ஒன்றல்ல. மருத்துவ சோதனைகள், நலமான மனிதருக்கும், மன அழுத்தத்திற்கு உள்ளான மனிதருக்குமிடையே இருக்கும் வேறுபாடுகளைப் பதிவிட்டுள்ளன. மன அழுத்தத்திற்குத் தரப்படும் சிறந்த மருந்துகளைப் போலவே, சடங்குகளும் நல்ல விதங்களில் உதவுகின்றன.

கட்டுப்பாட்டு உணர்வு மாயையா என்பது முக்கியமில்லை.

நாங்கள் இதை எப்படி விளக்க முடியும்? சடங்குகள் கட்டமைப்புக் கொண்டவை. அவை திடமானவை, சரியாகச் செய்யப்பட வேண்டியவை, மீள மீளச் செய்யப்பட வேண்டியவை, அதிக நேரம் கோருபவை; சுருங்கச் சொல்வதென்றால், அவைகளை கணிக்க முடியும். நம் வாழ்வின் தினசரிக் குழப்பங்களில் ஒரு ஒழுங்கினைக் கொண்டு வருவதின் மூலம், கட்டுக்கடங்காத சூழல்களையும் நம் கட்டுக்குள் கொண்டு வர அவை உதவுகின்றன.

நிச்சயமில்லாததும், கட்டுப்பாடும் அற்றதான மன நிலையில் இருப்பவர்கள், இல்லாத வடிவங்களையும், ஒழுங்கினையும் பார்ப்பார்கள். இந்த வடிவங்கள் மாயக் காட்சிகளாக (மேகத்தில் தென்படும் முகம்), தற்செயல் நிகழ்வுகளுக்குக் காரணங்கள் கற்பித்தல்களாக, சதிக் கோட்பாடுகளாக..எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தமாதிரியான நிலையில் இருப்பவர்கள், சடங்குகளின் பால் கவனத்தைத் திருப்பும் சாத்தியங்கள் இருக்கிறது; இதற்கு, ‘ஈடு செய்யும் கட்டுப்பாட்டு மாதிரி ‘ என்று பெயர். ஒரிடத்தில் அவர்களிடம் இல்லாத கட்டுப்பாட்டை மற்றோர் இடத்தில் தேடுகிறார்கள். இத்தகைய கட்டுப்பாட்டு உணர்வு மாயத் தோற்றமா என்ற கேள்விக்கு அதிக முக்கியத்துவமில்லை. சடங்குகள், நம்மை  வாழ்வின் முக்கியத் தருணங்களில், என்ன நேரிடும் என்று கணிக்க இயலாத் தருணங்களில் பாதுகாக்கின்றன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

ப்ரூக்ஸ் செய்த பரிசோதனையின் மூலம் ஒன்று தெரிய வந்தது- சடங்குகள் செய்தவர்கள், கணிதப் போட்டியில் சிறப்பாகச் செய்தார்கள்; அது போலவே இசைப் பாடல்களில் பங்கேற்றவர்கள் நன்றாகச் செய்தனர். தங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொடர, மற்ற எந்த வழியினையும் பின்பற்றாமல் ஜபப் பாடல்கள் சொன்னவர்களால், இஸ்ரேலில், பதட்டம் குறைந்து வாழ முடிந்தது. மாறாக, எந்தச் சடங்கையும் செய்யாதவர்கள், மன அழுத்தத்தால் பாதிப்படைந்தனர். ஏவுகணைகள் தாக்கிய பிறகு இவர்கள், உணவகங்களுக்குப் போகவில்லை; பேருந்தில் பயணிக்கவில்லை; பொது மக்கள் புழங்கும் வெளிகளுக்கு வரவில்லை. இது சரியான ஒன்றுதானே என்று நினைக்கும் நண்பர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்- போர் உச்ச  கட்டத்திலிருந்த கால கட்டத்தில் அதனால் உயிரிழந்தவர்களை விட அதிக எண்ணிக்கையில் கார் விபத்துக்களில் இறப்போர் இஸ்ரேலில் அதிகம். பயத்துடன் வாழ்வதை விட, சடங்குகளின் மூலம், அதைக் கையாளக் கற்றுக் கொள்வது நல்லதல்லவா?

அதிர்ஷ்டம் தரும் என அவர்கள் நம்பும் பொருட்களை வைத்திருந்தவர்கள், தங்கள் விரல்களை, குறிச் சின்னத்தைப் போல வைத்திருந்தவர்கள், திறன் போட்டியிலும், புதிர்களை விடுவிப்பதிலும் மேம்பட்டிருந்தார்கள் என்று ஜெர்மானிய மனவியலாளர்கள் சொல்கிறார்கள். இங்கே நாம் ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்- ஒரு அறிவியலாளர்- பகுத்தறிவுவாதி-அவர் ஒரு வீடு கட்டினார். நிலைப் படி வைக்கும் போது, அந்த ஊரில், அதன் கீழே, குதிரரை லாடத்தைப் புதைத்து வைப்பார்கள்; கட்டிட வல்லுனர் அதை வைக்க வேண்டுமா, நீங்கள் இதையெல்லாம் நம்பாதவர் அன்றோ என்று கேட்ட போது, ‘எதற்கும் இருக்கட்டுமே; வையுங்கள்’ என்று சொன்னாராம்! சடங்குகள் செய்யும் தளகட விளையாட்டு வீரர்கள், ஒப்பு நோக்க சிறப்பாக விளையாடியதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோல் அடிப்பதற்கு முன்பாக சடங்குகள் செய்யும், ஹாக்கி விளையாடுவோர், கூடைப்பந்து அடிப்போர்  வெற்றி பெற்றனர் என்றும் சொல்லப்படுகிறது. தங்கள் பதட்டங்களைக் குறைத்துக் கொண்டு விளையாட்டில் கவனம் செலுத்த சடங்குகள் உதவுகின்றன.

மனித மனத்தின் மாதிரிகள், நரம்பியல் நிபுணர்களாலும், தத்துவவாதிகளாலும், மனவியல் அறிஞர்களாலும் சமீப காலங்களில் மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளது. அதை ஒரு தகவல் செயல் முறை அங்கமாக மரபு கருதி வந்தது. அதற்கான உள்ளீடுகளை சூழலில் இருந்து பெற்றுக் கொண்டு, தகுந்த வினைகளைச் செய்வது மூளை என்ற கருத்து நிலவியது. ஆனால், இதையும் விட மேம்பட்ட செயல்பாடுகளைச் செய்கிறது நம் மூளை என்பதற்கான ஆதாரங்கள் பெருகி வருகின்றன. அது கணிக்கும் திறன் உள்ள ஒரு அங்கம். தகவல்களை மட்டுமே அது திரட்டுவதில்லை; குறிப்பிட்ட சூழலில் எந்தத் தூண்டுதலைக் கொண்டு தக்க முறையில் செயலாற்றமுடியும் என்றும் அது கணிக்கிறது. நம் அறியும் திறன், நமது சமூகச் சூழல், நம்முடைய பட்டறிவு, படிப்பறிவு, இவைகள் இந்தச் செயல்பாட்டில் உதவுகின்றன.

கணிக்க முடியாதவற்றை நம் மூளை விரும்புவதில்லை.

நம் கண்களில் இருக்கும் குருட்டுப் பகுதியை நினைத்துக் கொள்ளுங்கள். விழித்திரையின் மூலமாகவே ஒளி நரம்பு  செயல்படுகிறது- அது மூளைக்குத் தகவலை அப்படித்தான் சொல்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்னொன்றையும் கவனிப்போம்- அந்த ஒளி நரம்பு கண் விழியில் நுழையும் இடத்தில் ஒளி ஏற்கும் திசுக்கள் (Photo Receptor Cells) இல்லை. அதனால் தான் அது குருட்டுப் பகுதி என அழைக்கப்படுகிறது. நாம் பார்ப்பவைகளில் எந்தப் பகுதி அதில் விழவில்லையோ, அதை நம் மூளை சூழலிலிருந்து இட்டு நிரப்பி விடுகிறது.

மற்றத் துறைகளிலும் மூளை இவ்வண்ணமே செயல்படுகிறது. உதாரணமாக, சென்னையில் சுனாமியைக் கண்ணுற்ற ஒருவர், அந்தப் பேரோசையுடன் காற்று அதீதமாக ஊளையிட்டுச் செல்லும் கடலற்ற மலைப்பகுதிக்கு முதலில் வரும்போது ‘இங்கும் சுனாமியா’ என்று திடுக்கிட்டு பின்னர் புரிந்து கொள்வார்.

இத்தகைய கணிப்புக்களில் நம் மூளை தொடர்ந்து இயங்குகிறது. எனவே வடிவங்களையும், புள்ளியியல் ஒழுங்கமைவையும் நாம், நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்திலும் பார்க்க விரும்புகிறோம். கணக்கிடும் எந்தக் கருவிக்கும், மூளையையும் சேர்த்துத்தான், முந்தைய அறிவு என்பது முக்கியமான ஒன்று. சேகரிக்கப்பட்ட முந்தைய அறிவு, நாம் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு முறையும் செயல் படும் தேவையை அழகாகத் தவிர்த்து விடுகிறது. எங்கே அதிக அளவில் தீர்மானிக்க முடியாத சூழல் நிலவுகிறதோ, அங்கே நாம் பதட்ட நிலையை அடைகிறோம். இந்தக் கணிக்கும் அமைப்பிற்கு கணிக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாகத்தான் உள்ளன. நமது மூளை கணிக்க முடியாமையை விரும்புவதில்லை

இங்கேதான் சடங்குகளின் மதிப்பு புரிகிறது. கணக்கிட உதவும் கருவியாக, மீளமீளச் செய்யப்படும் நியமங்களாக சடங்குகள் இருப்பதால், அவை நம்மை அமைதிப்படுத்துகின்றன.

 நம் வேத மந்திரங்களின் முடிவில் ‘ஓம் சாந்தி’ என்று மும்முறை சொல்வார்கள். உலகத்தில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகம். அதிலும், எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதைச் சமாளிக்க ஒரு பற்றுக் கோடு வேண்டும். சடங்குகள் வழி வழியே நம்மை நடத்திச் செல்கின்றன.

ஆபத்துக் காலங்களில் இரு எளிய ஸ்லோகங்களைச் சொல்வார்கள்.

அது நம்பிக்கை; அதுதான் பலம். மனிதன் வாழத்தானே பிறந்திருக்கிறான்?

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம்.
லோகாபி ராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யகம்.”

“சங்கு சக்ர கதா பாணே! த்வாரகா நிலயச்சுதா! கோவிந்தா!
புண்டரீகாக்ஷம் ரக்ஷமாம் சரணாகதம்.”

பழக்க வழக்கங்கள், சடங்குகளாகின்றன. ஆங்கிலத்தில் முடிப்போம்.

Take the word HABIT; drop H from it; a bit remains; Drop A from it, bit remains, drop B from it, it remains!

Ref:

Excerpted from Ritual: How Seemingly Senseless Acts Make Life Worth Living, by Dimitris Xygalatas. Copyright © 2022 by Dimitris Xygalatas. Used with permission of Little, Brown and Company, an imprint of Hachette Book Group. New York, NY. All rights reserved.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.