தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி

பாகம் – 1

 அறிவற்றவர்கள் எனது இணையற்றதும், அழிவற்றதும், மேலானதுமான தன்மையை அறிந்துகொள்ளாமல் மனம், புலன்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவாகிய என்னை, மனிதர்களைப் போல பிறப்புள்ளவனாகவும், கண்களால் காணக்கூடிய தோற்றத்தை உடையவனாகவும் கருதுகிறார்கள்.

                                   – பகவத் கீதை – 7:24

  ‘…… இந்தியத் தத்துவத்திற்கு விளக்கம் என்ற பெயரில் குவிந்துள்ள ப்ரம்மாண்டமான அறிவுலகக் குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலை இருந்தது. …………. ஏனென்றால் இவை சராசரி இந்தியப் படிப்பாளிகளின் சொத்தாக இருந்ததோடு மட்டுமல்லாமல், தத்துவம் பற்றிய ப்ரமிக்கத் தக்க அறிவு உள்ளவர்களுக்கும் உடைமையாக இருந்தன. இத்தகைய தவறான கருத்துகளைப் புறம் தள்ளாவிட்டால் இந்தியத் தத்துவம் பற்றிய எளிமையான விளக்கத்தைக் கூட வேண்டுமென்றே திரிக்கப்பட்டதொரு வடிவம் என்று மறுக்கும் அபாயம் உள்ளது.’

                         – தேவிப்ரஸாத் சட்டோபாத்யாயா,      

           உலகாயதம் நூலின் மூன்றாம் பதிப்பு முகவுரையில்.

இந்து மதக் கட்டமைப்புகள் 

இந்து மதம் வெறும் சமய நம்பிக்கை அடிப்படையிலானதோ, விசுவாசத்தின் அடிப்படையிலானதோ அல்ல. உலகின் பெரும்பாலான மற்ற மதங்களைப் போலவே கடவுள்களை ஆதாரமாகக் கொண்டு, இறை நம்பிக்கையின் அடித்தளத்தில் அது இயங்குகிறது என்றாலும், பக்தி என்னும் மேலோட்ட நிலையைக் கடந்து பன்முகப் பரிமாணம் வாய்ந்த ஆழ்ந்த மதத்தன்மையைக் கொண்டது அது. பல்வேறு புராதனப் பெருமைகளையும், சமகால சூழல் பொருத்தத்தை(contemporary relevance)யும் ஒருங்கே கொண்ட அது, எக் காலத்திற்கும், எல்லா நாட்டவர்க்கும், எந்த மதத்தினருக்கும் பொருந்தக் கூடிய வளம் கொழிக்கும் ஆன்மிகம், யோகம், தத்துவம், ப்ரம்ம ஞானம் (theosophy). இயல் கடந்த ஆய்வு (metaphysics) ஆகியவற்றால் வலுவாகக் கட்டமைக்கப்பட்டதாகும்.

     இவற்றில் மற்ற பிரிவுகள் அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது, யோகமும், அதன் தீவிர வழிமுறையான தந்த்ராவுமே!

தாய்த் தெய்வ வழிபாடும் தந்த்ராவும்

தாய்த் தெய்வ வழிபாடு உலகெங்கிலுமுள்ள பெரும்பாலான மதங்களிலும் நிலவும் வழமை. குறிப்பாக தொல் பழங்குடிப் பாரம்பரியம் கொண்ட இனங்கள் இதில் ஆழ்ந்து வேரூன்றியவையாகவே இருக்கும். இவை ஆதி கால மனிதர்களின் தாய் மையச் சமூக வாழ்வியலில் அமைந்த வேட்டைச் சமூக வாழ்வையும், அதைத் தொடர்ந்து வந்த வேளாண் சமூக வாழ்வையும் பிரதிபலிக்கக் கூடியவை. இந்தியத் தொல் பழங்குடியினர் மற்றும் அவர்கள் வழி வந்த த்ராவிடத் தொல்குடியினரின் மதவியலில் மட்டுமின்றி சீனா, ஆஃப்ரிக்கா, ஆஸ்த்ரேலியா, பாலினீஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொல் பழங்குடி மதவியலிலும் இந்தப் பண்பைக் காணலாம்.

இத் தொல்குடியினர்களின் மதவியல் அவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் அடிப்படையிலான, சடங்குகளும் மந்திரவாதங்களும் கொண்ட வழிபாடுகளைக் கொண்டதாகும். குறிப்பாக, வேளாண் சமூகத் தொல் பழங்குடியினரால் பல்வேறு வேளாண் பலன்களுக்காகவும் மேற்கொள்ளப்பட்ட பல்வகைச் சடங்குகள் தாய்த் தெய்வ வழிபாட்டையும், பெண்களின் பங்கேற்பையும் மையமாகக் கொண்டவை. நிர்வாணம், பெண்ணுறுப்பு, கலவி, மாதவிலக்கு ரத்தம் ஆகியவற்றுக்கும் மந்திரவாதத்துக்கும் அதில் மிக முக்கிய பங்கு இருந்தது. இந்தியத் தொல் த்ராவிடப் பழங்குடியின்மந்திரவாதத்தோடு கூடிய இத்தகைய வேளாண் சடங்குகளே பின்னர் தந்த்ராவாக வளர்ந்தது.

சிந்துச் சமவெளி அகழ்வாய்வுகளில் கிடைக்கப் பெற்ற யோகாசன ருத்ரன் (சிவனின் ஆதி வடிவம்) உருவம் பதிக்கப்பெற்ற முத்திரை(seal)கள், சிவலிங்கங்கள், தாய்த் தெய்வமான ஷக்தியின் விக்கிரகங்கள் ஆகியவை சைவம், சாக்தம் மற்றும் தந்த்ரா யோகத்தின் தொன்மைக்கு ஆதாரங்களாகும். எனவே, யோகம் மற்றும் தந்த்ரா த்ராவிடத் தொல்குடிக் கண்டுபிடிப்பே என்பதும், அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிரூபணமாகிறது. பின்னர் இது பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு யோகிகள், ரிஷிகள், சித்தர்கள் போன்றோராலும் வளர்த்தெடுக்கப்பட்டது.

தந்த்ரா: தவறான புரிதல்களும் உட்பொருள் புரிதலின்மையும்

தந்த்ரா என்பது பொதுவாக கருப்பு மாந்தரீகம் என்பதாகவும், விந்து வெளியேறாமல் நீண்ட நேரக் கலவியில் ஈடுபடுவதற்கான தொழில் நுட்பம் என்பதாகவுமே பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. குறிப்பாக, தந்த்ரா இன்று வெகுவாகப் பரவியுள்ள மேற்கத்திய நாடுகளில் இவ் விஷயங்களின் வணிகமயமாக்கல் காரணமாகவும், அவற்றில் உள்ள கவர்ச்சி காரணமாகவும் இத்தகைய மேலோட்டமான புரிதல்கள் நேர்ந்திருக்கின்றன. கருப்பு மாந்தரீகமும், கலவி நேர நீட்டிப்பும் தந்த்ராவின் இடது பிரிவான வாமாச்சார (vamachara)த்தின் அங்கங்களே எனினும் அவை மட்டுமே தந்த்ராவல்ல. தந்த்ராவின் பூர்வீகமான இந்தியாவிலுமே கூட, பெரும்பான்மையான மக்கள் அதே விதமான அரைகுறைப் புரிதல்களையே கொண்டிருக்கின்றனர். இங்கு, தேடலற்ற சராசரியர்களுக்கோ, தந்த்ரா என்றால் என்ன என்பதே தெரிவதில்லை. இவர்களை விட, அந்த வார்த்தையைக் கேள்விப்பட்டே இருக்காதவர்கள்தான் அதிகமும். இந்துக்களாகவும், சமய நம்பிக்கை (belief) மற்றும் கடவுள் வழிபாடுகள் கொண்டவர்களாகவும் உள்ளவர்களிலேயே இந்த நிலைமை.

இதற்கு முக்கிய காரணம், புராதன காலம் முதலாகவே தந்த்ரா வழமைகளும் (practice), அவை சம்மந்தப்பட்ட மற்ற அனைத்து விஷயங்களும் துறைசார் ரகசியங்களாகவே (esoteric) இருந்துவருவதுதான். அடுத்தது, வழிபாடுகள் சார்ந்ததும், அன்றாட வாழ்வியல் சார்ந்ததுமான பொதுப் புழக்கத்தில் உள்ள தந்த்ர விஷயங்களும் இன்னதென அறிந்துகொள்ளப்படாமல் குறியீடுகளாகவும் (symbol), உருவகங்களாகவும் (metaphor), உருக்கொடுப்புகளாகவும் (embodyment) இருப்பது. மறைபொருள்களாக உள்ள இவற்றின் உட்பொருள்களை சாமான்ய பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியாது என்பது வாஸ்த்தவமே. வேத – புராண – பக்தி இலக்கிய விற்பன்னர்கள் என்று பேரெடுத்த பெரும்பாலான துறவிகள், மத மற்றும் ஆன்மீக குருமார்கள், உபன்யாசகர்கள் உள்ளிட்டவர்களும் அவற்றைப் புரிந்துகொள்ளாமல், மேலோட்டமான பாமரப் புரிதல்களையே கொண்டிருப்பதுதான் வேடிக்கை. வெறும் வேடிக்கை மட்டுமின்றி, சாமான்யர்களின் புரிதலின்மைகளுக்கும், தவறான புரிதல்கள் மற்றும் வழி நடத்தல்களுக்கும் இவர்களே காரணம்.

இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி

தந்த்ராவே இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி. இந்து மதத்தின் முதன்மை உட்பிரிவுகளில் சைவம் மற்றும் அதன் இணைப் பிரிவான சாக்தம் ஆகியவை தந்த்ரா அடிப்படையிலானவை என்பது மட்டுமன்றி, தந்த்ராவின் தோற்றுவாயும் இவையே. இந்து தந்த்ரா சமய மரபுகளான தட்சிணாசாரம் (dhakshinachara) சைவத்தையும், வாமாசாரம் (vamachara) சாக்தத்தையும் அடியொற்றியவை. இந்து மதத்தின் இன்னொரு பெரும் பிரிவான வைஷ்ணவத்திலும் தந்த்ரா வழமைகள் உள்ளன. எனினும் அது தந்த்ரா சமய மரபுகள் எதையும் தோற்றுவிக்கவில்லை. ஆனால், வைஷ்ணவத்தின் மூலக் கடவுள் தம்பதியான விஷ்ணு – லக்ஷ்மி இணையிலும், இவ்விணை சம்பத்தப்பட்ட பல்வேறு புராண விஷயங்களிலும், விஷ்ணுவின் முக்கிய அவதாரமான க்ருஷ்ணன் சம்பத்தப்பட்ட சம்பவங்களிலும் அனேக தந்த்ரா கூறுகள் மறைபொருள்களாக உள்ளன. (அவை இக் கட்டுரையின் மூன்றாவது பாகத்தில் விளக்கப்படும்). சைவம், வைஷ்ணவம் இரண்டிலுமே குறியீடுகளாகவும், உருவகங்களாகவும், உருக்கொடுப்புகளாகவும் ஏராளமான தந்த்ரா விஷயங்கள் உள்ளன. இது மட்டுமன்றி வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றிலும் தந்த்ரா விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக உபநிஷத்துக்கள் பலவும் தந்த்ர சாரங்களே. முக்கியமாக யோக குண்டலி உபநிஷத், யோக தத்வ உபநிஷத், த்யான பிந்து உபநிஷத் போன்றவை.

துறைசார் ரகசியம்: நன்மைகளும் தீமைகளும்

தந்த்ரா சமய மரபுகளும், அதில் ஈடுபடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பது அது குறித்த பரவலான அறிதலின்மைக்கு முக்கிய காரணம். மேலும், மேலே கூறப்பட்ட காரணங்களோடு, தந்த்ரா வழமைகள் மற்றும் தந்த்ர சாஸ்த்ரங்கள் துறைசார் ரகசியங்களாகவே இருந்து வருவதும் மிக முக்கிய காரணமே.

அவ்வாறு அது துறைசார் ரகசியமாக கட்டிக் காக்கப்படுவதற்குத் தக்க காரணங்களும் உள்ளன. ஆழ்ந்த ஆன்மீக நாட்டமும், தேர்ந்த யோகப் பயிற்சிகளும், துறைசார் அறிவு மற்றும் அனுபவங்களும் உள்ள யோகிகள் மற்றும் யோகினிகளுக்கு மட்டுமே வெளிப்படுத்தக் கூடியதும், அவர்களால் மட்டுமே பின்பற்றப்படக் கூடியதுமான அனேக யோக விஷயங்கள் தந்த்ராவில் உள்ளன. முறையான தீட்சை (initiation) பெற்று, கடைபிடிக்கப்பட வேண்டியவை அவை. அரைகுறையான அறிதல்களும், பயிற்சிகளும் கொண்டவர்கள் அவற்றைப் பின்பற்றினால் உடலுக்கும் மனநிலைகளுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய ஆபத்தான எதிர் விளைவுகளுக்கு ஆளாக நேரிடும். தவறான எண்ணம் கொண்டவர்கள் எனில் தந்த்ர யோகத்தால் பெறும் சித்தி(siddhi)*களைத் தவறான வழிகளில் பயன்படுத்துவார்கள். திட சித்தமற்றவர்களும், புரிதல் திறனற்றவர்களுமான எளிய மக்களோ தந்த்ரா செயல்பாடுகளால் பலத்த அதிர்ச்சிக்கும், குழப்பம் மற்றும் மனக் கலக்கத்துக்கும் உள்ளாவார்கள். இதனாலேயே துறைசார் ரகசியமாக தந்த்ராவை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தந்த்ரா சாஸ்த்திரங்களும் கூட, இதே காரணத்தால் துறை சாரா வாசகர்களைக் குழப்பும்படியாகவும், தட்டையான மாற்றுப் பொருள் கொள்ளும்படியாகவுமே குறியீடுகள், படிமங்கள் மற்றும் உருவகங்களோடு படைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற முறையில் இவை சரியானதும் தேவையானதுமே என்றாலும், சாமான்ய மக்களும் தெரிந்து பயனுற வேண்டிய எளிய தாந்த்ரீக உண்மைகள் கூட வெளிப்படையாக சொல்லப்படாமல், மறைபொருள்களாக பல்வேறு பொதுப் பயன்பாட்டு விஷயங்களில் வைக்கப்பட்டுள்ளது ஏற்கத் தக்கதாக இல்லை. என்றாலும், எப்படியோ அந்தப் புராதன மூதாதைகள் மறைபொருள்களாகவாயினும் கடவுள் உருவங்கள், அவர்கள் சார்ந்த விஷயங்கள், வழிபாடுகள், சமய நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட அன்றாடப் பொது வாழ்வின் அனைத்து கூறுகளிலும் புராண, இதிகாச, பக்தி இலக்கியங்களிலும் தாந்த்ரீக நெறிகளைப் புகுத்தியிருப்பது மெச்சத் தக்கது.

ஒரு வகையில் சொல்லப்போனால் இதுவே சரியானதும் கூட. மனிதர்களில் நிலவும் குணாதிசியங்களையும், இயல்பையும் பொறுத்தே அவரவர்களுக்கு ஏற்றபடியான வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படியாக யோகம் நான்கு வகையாகப் பகுக்கப்பட்டுள்ளது. அதில் 1. ராஜ யோகம் என சிறப்பிக்கப்படும் க்ரியா யோகம், யோகிகளுக்கானது. 2. ஞான யோகம், தவத்தில் ஈடுபாடு மிக்க ஞானிகளுக்கானது. 3. பக்தி யோகம், பயபக்தி மிகுந்த சாமான்யர்களுக்கானது. 4. கர்ம யோகம், இவை எவற்றிலும் நாட்டமற்று, தமது கடமையிலேயே கருத்தாகவும் செயலாகவும் உள்ள மனிதர்களுக்கானது என்று ஸ்வாமி விவேகானந்தர் வரையறுப்பார். இதையே சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களும் முறையே 1.க்ரியா யோகம் – சக்தி நிலை, 2.ஞான யோகம் – அறிவு நிலை, 3.பக்தி யோகம் – உணர்ச்சி நிலை, 4.கர்ம யோகம் – உடல் நிலை சம்மந்தப்பட்டவர்களுக்கானது என விளக்குவார்.

ஞானிகளும் யோகிகளும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பார்கள். அவர்களைப் போன்ற யோக, ஞான துறைசார் அறிவுகளோ, மெய்யுணர் அனுபவங்களோ, வேத – தத்துவ – சித்தாந்த மெய் ஞானங்களோ இல்லாத, இறை நம்பிக்கையும் சமய நம்பிக்கையும் (மூட நம்பிக்கைகளும் கூட) மிக்க சாமான்ய மக்களே பெரும்பான்மையானவர்களும். ஆன்மிகம், யோகம், தந்த்ரா போன்ற தீவிர விஷயங்களில் அவர்களுக்கு நாட்டம் இருக்காது. அவற்றின் அறிவியல், உளவியல் மெய்ம்களையோ பயன்களையோ எவ்வளவு எடுத்துரைத்தாலும் சரிவரப் புரிந்துகொள்ளவோ, பின்பற்றவோ மாட்டார்கள். அதுவும், அறிவியல் வளர்ச்சியற்ற புராதன காலத்தில் எனும்போது சொல்லவா வேண்டும்? எனவேதான் அவர்களுக்குத் தக்கபடி அன்றைய ரிஷிகளும், யோகிகளும் தாங்கள் கண்டறிந்த யோக, தந்த்ர மெய்ம்மைகளையும், அவை சார்ந்த விஷயங்களையும் கடவுள்களாகவும், பக்தியாகவும், வழிபாடுகளாகவும், சமய நம்பிக்கைகளாகவும், சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும், உருமாற்றி, காலா காலங்களாக மக்கள் தொடர்ந்து பின்பற்றும்படி செய்திருக்கிறார்கள். இதே போல வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றிலும் மெய்ஞானத்தால் தாங்கள் கண்டறிந்த ப்ரபஞ்ச மெய்ம்மைகளையும், அது சார்ந்த யோக – தந்த்ர மெய்ம்மைகளையும் புராதன காலத்துக்கே உரித்தான விதத்தில் அற்புதக் (fantacy) கதைகளாக உருமாற்றி வைத்திருக்கிறார்கள். இதன் நன்மைகள் அளப்பரியன. உட் கருத்துக்களும், மறைபொருள்களும் இன்னதென அறியாவிட்டாலும் மேற்கூறிய விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் அதற்குண்டான பலன்களை மக்கள் அடைந்திருக்கிறார்கள்.

ஆனால், இதன் மூலம் மாபெரும் தவறுகளும் அனேக தீமைகளும் கூட ஆன்மிகம், பக்தி, மதம், அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நேர்ந்துவிட்டன.

வாஸ்த்தவத்தில் ஆன்மிகம், யோகா, தத்துவம் போன்ற நெறிகள் மதத்துக்கு அப்பாற்பட்டவை. அவை எந்த மதத்திலிருந்து தோன்றியிருந்தாலும், அந்த மதத்தினருக்கு மட்டும் உரித்தானவையாக இல்லாமல், உலகில் உள்ள அனைத்து மதத்தினருக்கும், மத நம்பிக்கைகள் இல்லாதவர்களுக்குமானவை. அதனாலேயே இந்து மதத்தின் யோகாவும், புத்த மதத்தின் ஸென்னும், இஸ்லாமியத்தின் சூஃபியிஸமும், இவை போன்ற பலதும் உலகப் பொதுவாக ஆகியிருக்கின்றன.

மத நம்பிக்கைகளும், பக்தியுமே மதம் சார்ந்தவை; மத அடிப்படைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் அடிகோலுபவை. மத அடிப்படைவாதத்தால் ஆயிரத்தாண்டுகளாக உலகெங்கும் பல்வேறு நாடுகளில், பல்வேறு மதங்களில் நிகழ்ந்த படுகொலைகள், வன்கொடுமைகள், பேரிழப்புகள் கொஞ்சமல்லவே! மனித வரலாற்றின் கருத்த பக்கங்களான அவற்றைப் பற்றி விவாதிப்பதற்கு இது இடமல்ல. என்றாலும் அதைச் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்து மதம் என்று நிலைநிறுத்தப்படுகிற இந்துத்துவத்தின் மத அடிப்படைவாதங்களுக்கு, மேலே குறிப்பிடப்பட்ட ஆரிய முன்னோடிகளின், மேலே குறிப்பிடப்பட்ட செயல்களே மூலாதாரமாக அமைந்திருக்கின்றன. கடவுள் உருக்கொடுப்புகள் மற்றும் புராணக் கதைகளின் மெய்ப் பொருள்களை விளங்கிக்கொள்ளாமல், அவை நிஜ சம்பவங்கள் என்று நம்பும் அவர்களால் கடந்த கால வரலாற்றில் எண்ணற்ற அக்கிரமங்களும், வன்கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன. இந்து மதத்தின் உட் பிரிவுகளான சைவம், வைஷ்ணவம் ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்கள் முதல் அன்னிய மதங்களுக்கு எதிரான கலகங்கள் வரை நீளும் அவற்றை இந்து மத ஆன்மிகத்தில் படிந்த கறை என்றே சொல்லலாம். கடவுள்களையும், அவதாரங்களையும் முன்னிறுத்தி மத அடிப்படைவாதங்களும் அரசியலும் கைகோர்த்து நடத்தும் சமீப பத்தாண்டுகளின் அராஜகங்கள் வெளிப்படையாகவே அறியப்படுபவை. இது தவிர ப்ராமண ஆதிக்கத்துக்கும், சூத்திரர்கள் என்று ஒரு சாராரைத் தாழ்த்தி அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கியது உள்ளிட்ட ஜாதிக் கொடுமைகளுக்கும், தாழ்த்தப்பட்டோரின் அவலங்களுக்கும் கூட வேத கால ரிஷிகளே மூல காரணம். வர்ணாஸ்ரமம் என்னும் ஜாதிப் பகுப்பு மனுவால் உருவாக்கப்பட்டிருந்த மனு ஸ்ம்ருதி என்னும் கொடிய விஷ சாஸ்த்திரம் மட்டுமின்றி, வேதங்கள் உள்ளிட்ட புனித நூல்களும் இந்தக் கொடுமைகளுக்குத் துணை போயிருக்கின்றன.

வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களின் உட்பொருள்களைப் புரிந்துகொள்வதன் மூலமும், யோக – தந்த்ர நெறிகளைப் பயில்வதன் மூலமும், துறைசார் ரகசியமாக உள்ள தந்த்ர சாஸ்த்ரங்களின் பேருண்மைகளை அறிந்துகொள்வதன் மூலமுமே மக்கள் இது போன்ற தவறுகளிலிருந்து விடுபட்டு, மெய்யான மதத் தன்மையையும் மெய்ஞானத்தையும் அடைய முடியும்.

தந்த்ரா என்றால் என்ன?

தந்த்ரா என்பது மனிதனிடம் பொதிந்துள்ள சக்தியைப் புறப் பொருள்களிலிருந்து விடுவித்து வீரியப்படுத்தும் யோக வழிமுறை. தந்த்ரா அல்லது தாந்த்ரிக் என்பது பல்பொருள் கொண்ட யோகச் சொல். அதற்கு நீட்சி (extention), விரிவாக்கம் (expansion), வீரிய சூட்சுமம் (potencial intricacy), புலன் கடந்த ஆற்றல் (occult power) வழமை, யோக மெய்யுணர்வு (mysticism) என்பவை உள்ளிட்ட, ஆழமும் விரிவும் கொண்ட பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. தந்த்ரா யோகம், க்ரியா யோகம் எனப்படுகிற குண்டலினி (kundalini) யோகப் பயிற்சியின் அடிப்படையிலானதாகும். இதன் வாயிலாக பேரின்பத்தையும் (ecstacy). மோட்சத்தையும் அடையலாம் என்பதோடு, மனிதர்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளையும், இறைநிலையையும் அடைய முடியும். இதனாலேயே அது மற்ற மூன்று யோகங்களைக் காட்டிலும் சிறப்பானதாக ஆகிறது; ராஜ யோகம் எனவும் போற்றப்படுகிறது.

மந்த்ரம் யந்த்ரம் தந்த்ரம்

சாதாரண மனித ஆற்றல்களையும், நம் புலன்களுக்குத் தென்படக் கூடிய இயற்கை ஆற்றல்களையும், ஒலி, ஒளி, கதிரியக்கம் போன்ற அறிவியல் ஆற்றல்களையும் மீறிய பல வித ஆற்றல்கள் நிறைந்ததே இப் ப்ரபஞ்சம். இன்னும் சொல்லப் போனால் ப்ரபஞ்சம் முற்றிலுமே இத்தகைய ஆற்றல்கள் நிறைந்ததுதான். ஆற்றல்கள் இன்றி இப் ப்ரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும், உயிரும், துகளும், அணுவும், மன இயக்கங்களும் இல்லை. சாதாரண மனித ஆற்றல்களுக்கும், இயற்கை ஆற்றல்களுக்கும், அறிவியல் ஆற்றல்களுக்கும் அப்பாற்பட்ட அத்தகைய ஆற்றலே அமானுஷ்ய ஆற்றல் (occult power) எனப்படுகிறது. இந்த அமானுஷ்ய ஆற்றலை ஒலி வடிவில் கையகப்படுத்துவதே மந்த்ரம் (mantra). வரி வடிவில் கையகப்படுத்தி, தக்கவைத்துக்கொள்வது யந்த்ரம் (yantra). இது சக்கரம் (chakra), மண்டலம் (mandala) என்ற பெயர்களிலும் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய அமானுஷ்ய ஆற்றல்கள், மற்றும் சித்திகள்* பலவற்றையும் அடைவதற்கான வழிமுறை (practice) மற்றும் சடங்கு (ritual) முறையே தந்த்ரம்.

இந்துக் கோவில்களின் இறை வழிபாடுகள், அன்றாட வாழ்வுச் சடங்குகள், மந்திரவாதங்கள் ஆகியவற்றில் மந்திரங்களின் பங்கு வெளிப்படையாக அறியப்படுவது. கோவில்களில் ப்ரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு சக்தியூட்டுவதற்கு, அதன் அடியில் உள்ள பீடத்தில் அந்தந்த தெய்வங்களுக்கு உரித்தான யந்த்ரங்கள் பதிக்கப்பெறும். இது க்ரியா பீடம் அல்லது சக்தி பீடம் எனப்படும். இவ்வாறே செல்வ வளமை, ஆரோக்யம், வியாபார விருத்தி, எதிரிகளின் துர்மந்திரவாதங்களிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் அததற்குத் தக்கபடியான யந்த்ரங்கள் செம்பு, வெள்ளி மற்றும் தங்கத் தகடுகளில் வரையப்பட்டு வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் மாட்டிவைக்கவோ, தாயத்து(talisman)களில் அடைத்து உடலில் அணியப்படவோ படுகின்றன. எனினும், யந்த்ர நிர்மாண சாஸ்த்ரங்கள் உடலே ஆகப் பெரிய யந்த்ரம் என்று கூறுவது இங்கு கவனிக்கத் தக்கது. அது மட்டுமல்ல; இந்துக் கோவில்களின் அமைப்பே மனித உடலின் உடற்கூறு அடிப்படையிலானதுதான். இவை யோகத்தின் சிறப்பை வலியுறுத்துவனவாகும்.

குண்டலினி என்னும் உள்மறை ஆற்றல்

குண்டலினி என்னும் உள்மறை ஆற்றலே (latent power) தந்த்ரா யோகத்தின் மூலகம் (element) அல்லது அடிப்படை ஆதாரம். ஜாதி – மத பேதமோ, ஆண் – பெண் பாகுபாடோ, வயது வரம்புகளோ அற்று ஒவ்வொரு மனிதரிலும் சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட, புலன் கடந்த ஆற்றல் மறைந்துள்ளது. தண்டுவடத்தின் அடிப் பகுதியில், மூலாதார் எனப்படும் சக்கரம் / மையத்தில் அது பாம்பு வடிவில், மூன்றரைச் சுருள் இட்டு, தனது வால் நுனியைக் கவ்வியபடி உறங்கிக்கொண்டிருப்பதாக உருவகிக்கப்படுகிறது. உறங்கிக்கொண்டிருக்கும் அந்தக் குண்டலினியை விழிக்கச் செய்து, அடுத்தடுத்த சக்கரங்கள் வழியாக மேலேற்றி, இறுதியாக சஹஸ்ரார் எனப்படும் ஆயிரம் இதழ் தாமரையை அடையச் செய்வதே குண்டலினி யோகம். குண்டல என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்கு சுருள் என்று பொருள்.

இந்தக் குண்டலினி சக்தியானது விந்து சக்தியே. அதாவது, பாலியல் ஆற்றலே. எனவே, யோக முறைப் பாலுறவின் மூலமும் குண்டலினி எழுப்பப்படலாம். அல்லது, பாலுணர்வைக் கட்டுப்படுத்தி, ப்ராணாயாமப் பயிற்சி மூலமும் அதை நிகழ்த்தலாம்.

சுருக்கமாகச் சொல்வதெனில், குண்டலினி யோகமானது உடல், மனம் மற்றும் சக்தி நிலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து வீரியப்படுத்தி ப்ரபஞ்சப் பேரிருப்புடன் ஐக்கியப்படுவதும், அதன் மூலம் சாமான்ய மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை சக்திகளைப் பெறுவதுமே எனலாம்.

வாயுக்கள், நாடிகள் மற்றும் குண்டலினி சக்கரங்கள்

நமது உடலில் உள்ள, உடல் மற்றும் உயிர் இயக்கத்துக்கு ஆதாரமாக உள்ள வாயுக்கள் பத்து வகைப்படும். அதில் முக்கியமானவை ஐந்து. அவை முறையே ப்ராணா (prana), அபாணா (apana), சமாணா (samana), உதாணா (uthana) மற்றும் வ்யாணா (vyana) ஆகியவை. இதில் இருதயத்தில் மையம் கொண்டுள்ள ப்ராணாவும், குதப் பகுதியில் மையம் கொண்டுள்ள அபாணாவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ப்ராணாயாமம் மற்றும் குண்டலினிப் பயிற்சிகள் மேற்கூறிய ஐந்து வாயுக்கள் அடிப்படையிலானவையாகும்.

நாடிகள் எனப்படும் ரத்தக்குழாய்களே (vessels) இவ் வாயுக்களின் இயக்கப் பாதை. நமது உடலில் 72 ஆயிரம் நாடிகள் உள்ளதாக பெரும்பாலான யோக மற்றும் சித்த வைத்திய நூல்கள் கூறுகின்றன. தலையாய தந்த்ர சாஸ்த்ரங்களில் ஒன்றான சிவசம்ஹிதையோ 3,500,000 நாடிகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இவற்றில் பதினேழு நாடிகள் முக்கியமானவை. அதில் யோக முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை நாடிகள் மூன்று. அவை, உடலின் இடது புறமாக அமைந்துள்ள இடா (ida), வலது புறம் உள்ள பிங்கலா (pinkala) மற்றும் தண்டுவட மத்தியில் உள்ள சுஷும்னா (sushumna) ஆகியனவாகும். (இடா -க்ருஷ்ண நாடி எனவும், பிங்கலா – ருத்ர நாடி எனவும், சுஷும்னா – ப்ரம்ம நாடி எனவும் சிறப்பிக்கப்பெறும்). இம் மூன்றுமே குண்டலினி யோகத்தில் முக்கிய பங்கு வகிப்பவையென்றாலும் குண்டலினிப் பாதையாக உள்ள சுஷும்ணாவே மிக உயர்வானதாக யோகியர்களால் போற்றப்படுகிறது. எனினும் அதன் தூண்டலுக்கும், குண்டலினி எழுச்சிக்கும் காரணமாக உள்ள இடா மற்றும் பிங்கலா நாடிகளே பெரிதும் பேசப்படுபவையாக உள்ளன.

மூளையோடு நேரடித் தொடர்புள்ள தண்டுவடத்தில், இந்த முதன்மை நாடிகளின் வழியே அமைந்துள்ள சக்தி மையங்களே சக்கரங்கள் (chakras) எனப்படுகின்றன. இவை உடலில் உள்ள உறுப்புகள் அல்ல எனவும், கண்களால் காணவியலாத சூட்சும உடலில் அமைந்துள்ள சக்தித் தேக்க மையங்களே எனவும் சில யோக நூல்கள் கூறுகின்றன. எனினும், யோக விளக்க நூல்கள் பலவற்றிலும், சித்த மருத்துவம் மற்றும் நுண்ணழுத்த (acu-pressure) நூல்களிலும் இச் சக்கரங்கள் உடல் மற்றும் மூளை இயக்கத்தோடு தொடர்புடைய நரம்பு மண்டலங்கள் (plexus) மற்றும் சுரப்பிகளே (gland) என்பது பற்றிய விளக்கங்கள் கிடைக்கின்றன. யோக சாஸ்த்திரங்களின்படி உடலில் ஆறும், உடலுக்கு வெளியே ஒன்றுமாக மொத்தம் ஏழு சக்கரங்கள் உள்ளன. இவை கவித்துவச் சிறப்பிப்பில் தாமரைகள் எனவும் வர்ணிக்கப்பெறும்.

ஒவ்வொரு சக்கரங்கள் அல்லது தாமரைகளுக்கும் எவ்வளவு இதழ்கள், அவை மேல் நோக்கியவையா கீழ் நோக்கியவையா, அவற்றின் நிறம். ஒலி, உரித்தான கடவுள் / கடவுளிகள் உள்ளிட்ட விஸ்தாரமான விளக்கங்கள் யோக நூல்களில் உள்ளன. போலவே, நாடிகள் மற்றும் வாயுக்கள் பற்றியதும். அவற்றை விவரிக்க இது இடமல்ல. கூடுதல் விபரம் அறிய விரும்புபவர்கள் யோக நூல்களையோ, மின் நூல்களையோ பார்க்கவும். இங்கே நம் பேசு பொருளுக்குத் தேவையான அளவில் சக்கரங்களின் அமைவிடப் பட்டியல் மட்டும் தரப்படுகிரது.

குண்டலினிச் சக்கரங்களும், அமைவிடங்களும்:

1. மூலாதார் – தண்டுவடத்தின் அடிப் பகுதி

2. ஸ்வாதிஸ்தான் – பிறப்புறுப்பு

3. மணிப்பூரஹம் – தொப்புள்

4. அனாஹதம் – இருதயம்

5. விஷுத்தம் – கழுத்து

6. ஆக்ஞா – புருவ மத்தி

7. சஹஸ்ரார் – உச்சந்தலைக்கு ஓரங்குலம் மேலே. (இது உச்சந்தலையில் உள்ள மூளைப் பகுதி எனவும் குறிக்கப்பெறும்).

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்

குண்டலினி சக்தியானது ப்ரபஞ்ச ஆற்றலின் (cosmic power) வடிவே. அண்டத்தில் (macrocosm) உள்ளதே பிண்டத்திலும் (microcosm) உள்ளது என்பது பற்றியும், பஞ்ச பூதங்களின் பல்வேறு வகையான சேர்மானங்களால் உருவானதே இந்த பூமியில் தோன்றிய அனைத்து உயிர்களும், ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜடப் பொருள்களும் என்பது பற்றியும் தந்த்ர சாஸ்த்திரங்கள் விரிவாக விளக்குகின்றன. இந்த ஜடப் பொருட்களிலும், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் முதல் தாவர – விலங்கு – மற்றும் மனித உயிர்கள் ஈறாக உள்ள அனைத்து உயிர்களிலும், இவை நீங்கலாக உள்ள வெற்றிடமான வெளி(space)யிலும் சக்தி நிறைந்துள்ளது. அவ்வாறு ப்ரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஆற்றல் (power) அல்லது சக்தி(energy)யே ப்ரபஞ்ச சக்தி எனப்படுகிறது. அந்தப் பேரண்ட ஆற்றலுடன் மனிதர்கள் தம்மை இணைத்துக்கொண்டு, பேரின்பமும், பேராற்றலும், ப்ரபஞ்சப் பேருணர்வும், இறைநிலையும் பெறுவதற்கான யோக அறிவியலே குண்டலினி யோகம்.

ஆண் – பெண் இரு பாலரிலுமே. உடலின் இடது புறம் பெண் சக்திக்கும், வலது புறம் ஆண் சக்திக்கும் உரியது. உடலில் உள்ள ஆண் – பெண் சக்திகள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம், உள்மறை ஆற்றலான குண்டலினி எழுப்பப்பட்டு பேரின்பம் (ecstasy) அடையப்படுகிறது. முன்பே கூறியபடி யோகப் பயிற்சியினாலோ அல்லது தந்த்ரா முறைப் பாலுறவினாலோ குண்டலினி எழுப்புதல் நிகழ்த்தப்படலாம். இந்து தந்த்ரா மரபில் சிவ வழிபாட்டைக் கொண்டதும், வலது மார்க்கம் எனப்படுவதுமான தட்சிணா மார்க்கம் யோகப் பயிற்சி வாயிலாக குண்டலினி எழுப்புதலை மேற்கொண்டு, பேரின்பத்தையும் இறைநிலையையும் அடைவதை இலக்காகக் கொண்டு இயங்குவது.. ஷக்தி வழிபாட்டைக் கொண்டதும், இடது மார்க்கம் எனப்படுவதுமான வாமாச்சார மார்க்கம் தந்த்ரா முறைப் பாலியல் சடங்கு மூலம் குண்டலினியை எழுப்பி பேரின்பம் அடைவதை நோக்கமாகக் கொள்கிறது.

*******

அடிக் குறிப்புகள்:

* சித்திகள் (siddhis): குண்டலினி யோகப் பயிற்சிகளின் படிநிலை(process)களில் குண்டலினி மேலெழும்புவதும், இறுதியில் சஹஸ்ராரத்தை அடைந்து பேரின்பம் அடையப் பெறுவதும் மட்டுமன்றி, உபரியாக சித்திகள் எனப்படும் அதீத / அமானுஷ்ய சக்திகள் பலவும் வாய்க்கப் பெறும். சாதகர்களான யோகி அல்லது யோகினிகள் இதில் மயங்கி, தேங்கிவிடக் கூடாது; மோட்சம் எனப்படுகிற இறைநிலையை அடைவதையே இலக்காகக் கொண்டு, யோகப் பயிற்சிகளைத் தொடர வேண்டும்; அவ்வாறன்றி சித்திகளில் தேங்கிவிடுகிறவர்கள், மோட்சத்தை அடைய மாட்டார்கள் என தந்த்ரா நூல்கள் கூறும்.

சித்திகள் எண்ணற்றவை. அவற்றில் மிக முக்கியமானவை அஷ்டமா சித்திகள் (ashtama siddhis) எனப்படும் எட்டு சித்திகளாகும். அவையாவன:

1. அனிமா (anima): குறு வடிவு கொள்ளுதல்

2. மஹிமா (mahima): பேருரு / விஸ்வரூபம் எடுத்தல்

3. லஹிமா (lahima): உடலை எடையற்றதாக ஆக்கிக்கொள்ளுதல்

4, கரிமா (karima): உடலை எடை மிகுந்ததாக ஆக்கிக் கொள்தல்

5. ப்ரகாம்யம் (prakamyam): இடம், பொருள் (matter), காலம் ஆகியவற்றைக் கடந்து செல்லும் ஆற்றல்

6. காமவசாயிதா (kamavasayitha): விரும்பியதை அடைதல்

7. வஷித்வா (vashidhva): பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல்

8. ஈஷித்வா (eshidhva): இறைத் தன்மை அல்லது பொருள்களையும் உயிர்களையும் படைக்கும் ஆற்றல்

(அடுத்த இதழில் மேலும் அறிவோம்)

Series Navigationஇந்து மதத்தில் தந்த்ரா நெறிகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.