Femino 16

“நம் அழுகையை அவர்கள் எப்படி எழுதிச் செல்கிறார்கள். திறந்த யன்னலின் கம்பிகளில் நம்மைப் படியவைத்து ரேகைகளுடன் காணாமல் போவது யார். யார் மீதும் இந்த வாழ்க்கையை ஒப்புக் கொடுக்காதீர்கள். அவர்கள் யாரும் உங்கள் மீது கரிசனையெடுத்துக் கொள்ள அவ்வளவு சிரத்தையெடுப்பவர்களாக தன்னை விடவும் உங்களை முற்படுத்துவதை ஆதரிப்பவர்களாக இத்தனை நாட்களாக அன்பென்ற பெயரில் பிரியமென்ற பேரில் நீங்கள் கொட்டியதையெல்லாம் கணக்கெடுத்துக் கொள்பவர்களாக அவர்களை நீங்கள் இதயசுத்தியாக நம்பி விடாதீர்கள். உறவின் கோடுகள் மெலிதானவை மட்டுமல்ல, எப்போது வேண்டுமானாலும் வளைதகவுடையன. அந்த எச்சரிக்கையின்றி கடந்து போகிற முட்டாள்தனம் அவமானகரமானது. நம்மை ஒடுக்கித் தேயவிடுவது. திரும்பவும் அதே கேள்வி தான். நம் அழுகையை அவர்கள் எப்படி எழுதிச்செல்கிறார்கள்.”

ஃபெமினொ பதினாறு கிளப்பின் ஒன்றுகூடலுக்காக அந்த சாலிஹா வளாகத்தில் பேசிக்கொண்டிருந்ததில் ஓய்ந்து விட்ட காற்றில் காயா இலைகள் சிதறிப் பரவியிருந்ததை கவனித்தபடியேயிருந்தாள். ஏதோ இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பெய்து விட்ட கமஞ்சூல் போல விடுதலாவதை ஏதோ ஒரு ஆறுதலை மழைக்குப் பிறகு வரும் வெய்யிலுக்காய் பதட்டமடையும் குடும்பப் பெண்ணைப் போல அவசர அவசரமாக உணர்ந்தபடியிருந்தாள். முட்காட்டைச் சுற்றி மூண்ட தீயின் உஷ்ணம் பரவப் பரவ சிறகைச் சிலிர்த்தும் பறவையின் நம்பிக்கை அது பறக்க முடிந்த உயரத்திலிருப்பதைப் போல சத்தியத்தின் மீது மனதைக் கட்டுண்ட ஊழ்கத்தின் மீது பற்றுறுதியாயிருந்தாள். இந்தக் கிளப் அறிவிப்போடு அவளைச் சுற்றிய வனம் முட்காடாகி சிறிது சிறுதாய் எழும் தீயில் முட்கூடு முறிவது தெரிந்ததவளுக்கு.

கருங்கொடித் தீவு பதினாறு (KT 16) பிரிவிலுள்ள பெண்களைக் கொண்டு மிக முக்கியமான பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதென்று இந்தக் கிளப்பைத் துவங்கியிருந்தனர். முதல் அடியே பெரும்பரபரப்பை ஏற்படுத்துவது போல் துண்டுபிரசுரங்கள் பதற்றவுணர்வால் ஒவ்வொரு ஆண்களையும் பெண்களையும் உசுப்பிவிட்டிருந்தன. அவள் சிறுபராயத்திற்குச் செல்வது போல கண்பார்வையைச் சுழற்றி வகுப்பறைகளைச் சுற்றியிருந்த அந்திமந்தாரச் செடிகளை, மூன்றாம் மாடியின் ஆறு ஏ வகுப்பின் ஓட்டுப் புறாக்களை, அவற்றின் பஞ்சு போன்ற இறகுகளை, கோழிச்சாயமிட்டு அச்சுப்பதியமிட்ட நொக்ஸ் மர இலைகளை, விளையாட்டுத்திடலின் இரும்புக் குதிரையை, முதல் பரிசு வாங்கிய கொங்குறீட்டுத் திடலை, சயன்ஸ் லேப் முன்னால் பரத்தியிருந்த பரல்கற்கள் நடுவே மூண்டிருந்த கற்றாழைப்பற்றையைப் பார்த்தபடியிருந்தாள். அவளைப் போலவே முன்னாலமர்ந்திருந்த பெண்களும் அசூயையற்று நேர்குத்திய பார்வையில் வெறித்திருந்தனர். அஃப்ரின் எல்லாவற்றையும் சரிசெய்துவிடுவாளென்ற நம்பிக்கை கரைய ஆரம்பிப்பது போல் பேச்சின் தொனி மெலிதாக இறங்கத்துவங்கிய வாட்டம் முகங்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது. இதற்குப் பிறகு இந்த வளாக வாசலில் க்ளப் கூட்டங்களுக்கு அனுமதி கிடைக்காதென்றும் எல்லாத் திசைகளிலிருந்தும் நெருக்கடிகள் தீவனத்திற்குத் திறந்து விட்ட கோழிகளைப்போல வருமென்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. 

“ என் விலாவிற்குப் பக்கத்தில் என்னைப் போல குமுறும் என் சகோதரியே, அதிகாலையில் நின்ற நிலையில் அழுதபடி நீ உன் இறைவனிடம் முறையிடுவதை இந்த ஆண்களிடம் சொல்லுவோமா..? நம்மைச்சுற்றி சாட்சிகளாகவுள்ள மரங்களையும் பூனைகளையும் நாம் சோறுவைத்த கருணையின் மேல் வாலாட்டும் நாய்களையும் கழுத்துகளைத் திருப்பாமல் வாசறபடியில் பார்த்தபடியிருக்கும் குருவிகளையும் துணைக்கழைத்துக் கொள்வோமா? உங்களின் ஆண்கள் உங்களில் நாட்டமில்லாமலிருப்பதை நீங்கள் தூங்கிய பின்னர் இளம் ஆண்களை அழைத்து வந்து மறைவாக சல்லாபமிருப்பதை கூர்மையான உங்கள் செவிகள் அறியாததா? உங்கள் உறவினர்கள் வீட்டுக்கோ நண்பர்கள் வீட்டுக்கோ உங்களைச் செல்ல அனுமதியாதிருப்பதை உங்கள் ஒன்றுவிட்ட சகோதரர்களோடு மச்சான்களோடு வயது முதிந்த பெரியப்பா, மாமாவென்று எதிர்ப்படும் எல்லா ஆண்களோடும் உங்களைச் சேர்த்து இட்டுக்கட்டி நோகடிக்கிற நெஞ்சுரத்தை நீங்கள் கேள்வி கேட்க வேண்டாமா? உங்கள் தங்கைகளின் மீது கைகளை நீட்டுகிற அருவருப்பான ஸ்பரசத்திற்காக அலைகிற உங்கள் கணவன்களை உறைத்துக் கூன வைக்க முடியாதா உங்களால்?

மானமுள்ள பெண்களே! உங்கள் கைகளில் ஏந்தப் போகும் ஒவ்வொரு மெழுகுவர்த்திச் சுடரும் சிறிது சிறிதாய் பெருகி இவ்வூரின் அப்பழுக்கை இவ்வாண்களின் முடைநெடியை வெளிச்சமாக்கட்டும். 

பலயீனமானவர்களல்ல நாம், ஆனாலும் நமக்கு வலிமை கிட்டட்டும். “ 

எழுபது ஜீஎஸ்எம், மென்சிவப்புத் தாளில் கொட்டை எழுத்துகளில் ஃபெமினொ பதினாறின் முதல் துண்டுப் பிரசுரம் அவள் கண்முன்னே விரிந்ததும் ஆயிரம் பெண்களின் ஏக்கமும் நம்பிக்கையும் வேட்கையும் அதன் மேல் சுடராய் எரிவதை ஆயிரம் ஆண்கள் சபித்தபடி வசவுகளால் அச்சுடரை கைகளை வீசியணைப்பது போலவிருந்தது அவளுக்கு. கேடீ பதினாறில் ஒரு விசிறியும் ஒரு எதிரியும் வீட்டுக்கு வீடு தெருவுக்குத் தெரு ஒரு செவ்வரத்தையும் நந்தியாவட்டையும் அருகருகே பூப்பதைப் போல முளைத்திருப்பார்களென்று அனுமானித்தாள். இந்த ஐந்து நாட்களில் அத்தனை வசைகளையும் வாங்கியிருந்தாள். உலகத்தில் பேசப்பட்ட எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் ஒரு ஓதல் போல கேட்டுவிட்டாள். 

“ அஃப்ரின், அடியே உம்மாக்கோத்தவண்ட வேசமவளே..”.

“ நீ என்ன நோட்டீஸ் அடிக்குற, உண்ட வண்டவாளமெலாம் போட்டு நாங்க அடிக்குறம் நோட்டீஸ்.”.

பேசி முடித்து அஃப்ரின் இறங்கியதும் எல்லோரும் தமக்குள்ளாகவே பேசத்துவங்கியிருந்தனர். அவை பெரும்பாலும் அதிர்வலைகள் பற்றியதாயிருந்தது, காலங்காலமாக ஒன்றியிருந்த குளத்தில் ஃபெமினோ பதினாறு எறிந்த பெருங்கல்லின் சலம்பல் பற்றியதாயிருந்தது. அஃப்ரின் பாரம்பரியமாக நிலவிவந்த சமூக அமைப்பின் மீது குடிவழிமுறையான குடும்பப் பிணக்குகளைத் தீர்க்கும் பொறிமுறையின் மீது கேள்வி எழுப்பியிருந்தாள். ஆண்கள் ஆண்டாண்டுகாலமாக தங்கள் வசதிக்காகவே இந்த அமைப்புகளை நிறுவியிருப்பதாக எச்சரிக்கத் துவங்கினாள். எங்கள் விருப்பமின்றி யாருக்கும் எங்களது கால்களை விரிப்பதாயில்லையென ஒவ்வொரு ஆணினதும் தூக்கத்தைக் கெடுப்பது போல அவளது சூழுரைகளிருந்தன. 

“ ராத்தா இந்த ஆம்புளயள திருத்தலாமெண்டு நினைக்கேளா? நாள் வர வரப் பயமாக்கெடக்கு.”. 

“ நான் கிளப் ல இருக்கிறது எண்ட புருசனுக்கு அவமானமாம், வெளில தலைகாட்டவொண்ணாதாம்..”. 

“ நேத்தொருவன் கோல் எடுத்து, அஃப்ரின் ட என்ன க்ளப், நான் வெச்சிருக்கன் க்ளப் ஒண்டு, நைட்ல தான் மீட்டிங். நீங்க வருவேளா எண்டு கேக்கான்..”. 

~oOo~

வீடு திரும்பும் வழியில் அப்பெண்களினழுகையும் அவள் கைகளைப்பற்றிய அச்சத்தின் கெழுதகையும் அவளைக் குரல்களாகத் துரத்துவது போலும் தரையில் இழுகி வரும் ஆடையை சட்டென்று யாரோ மிதிப்பது போலும் முன்னால் திரும்பவிருக்கிற நாட்சந்தியில் கமுகு மர நிழலில் வீதிப் பெயர் பலகைக்குப் பின்னால் தடித்த ஆளொன்று கழுத்தைத் திருகக் காத்திருப்பது போலும் இருந்ததவளுக்கு. இருண்ட வீட்டின் விளக்குகளைப் போட்டதும் நேற்றிரவு மூடிவைத்த உணவின் துர்மணம் மழைக்குக் காயாத ஈர ஆடைக்குவியலின் அவிந்தமணமெல்லாம் சேர்ந்து குமட்டியது. உம்மா இருந்தபோது இந்த வீடு அவ்வளவு பிரகாசமாகவும் ஒவ்வொரு பொருளும் அதனதன் அர்த்த ப்ரகிருதியோடு பீடத்தில் வீற்றிருந்ததும் பிரத்தியேகமான நறுமணத்தோடு கமழ்ந்து கிடந்ததும் ஞாபகம் வந்தது.  வாப்பா போனதும் அவளது வாழ்வில் துயரம் ஆற்றொழுக்காய் ஓடியது. வெவ்வேறு அளவு கண்களுள்ள தட்டுகளால் பீச்சிய இடியப்பங்களை ஒரே தட்டில் போட்டதைப் போல. திண்ணையில் கிடத்திய வாப்பாவை அதே நாளில் கொண்டு போனார்கள். மண்ணை முக்கோண மேலரியமாய்க் கூட்டிய படத்தைக் காட்டி வாப்பா அங்குதான் தூங்குவதாகச் சொன்னார்கள். அன்று திண்ணையில் தங்கிவிட்ட பன்னீர்வாசம் நாசியிலிருந்து மறைவதற்குள் உம்மாவையும் ஆண்கள் பார்க்க முடியாதபடி கிடத்தினார்கள். அதே இரவில் புளியமரத்தடியில் அவளும் தூங்கப் போனாள். திண்ணையிலிருந்து பொருட்களும் கதைகளும் பீடங்களிலிருந்த அர்த்தங்களும் மறைந்துவிட்டன. அதில் உம்மாவுக்குச் சீதனமாக வந்த மர ட்ரெஸிங்க் டேபிளும் உள்ளடக்கம்.  அதைச் சீலையால் முற்றாக மூடியிருந்தாள். பழஞ்சீலையது. இருள், பழைய ஆடைகளிலிருந்து கிளம்பும் நப்தலீன் மணம் போல கொஞ்சம் கொஞ்சமாக குடிகொள்ளத்துவங்கியது. அஃப்ரின் ஆடைகளைக் களைந்து குளியலறையைத் தாளிட்டதும் மின்னொளி பட்டு கருப்புப் பல்லிகள் மறைவிடம் தேடி ஒளிந்து கொண்டன. கண்ணாடியில் ஒருக்களித்துப் பார்க்கவும் கழுத்தில் இறங்கியிருந்த சதைக்கொழுப்பு தோலில் கோடு போல வெண்ணிழையாகப் படிந்திருக்கவும் உரசித் தேயவிட்டு நீர் மொண்டு அதைக் கழுவினாள். பூத்தாரையாகக் குழாயைத் திறந்து தலையை நீட்டிக் குளிரை வாங்கிக் கொண்டாள். தலையை நிறைத்து முகம் வழியாக மார்பிற்கும் இறங்கும் நீர்த் தாரையைப் பார்த்தபடியிருந்தாள். வசவுகளைக் கழுவட்டும், ஆண்கள் உமிழும் எண்ணெய் உள்ளெரியும் பந்த நெருப்பைத்திரித்து பஸ்பமின்றி கூட்டட்டும். அவளுக்குள் திமிரும் அச்ச மிருகத்தை அவ்வெழுநா பொசுக்கட்டும். ஆண்கள் ஆங்காங்கே கூட்டம் போடுவது தெரிந்திருந்தது அவளுக்கு. அவர்களைப் பொருத்தமட்டிலும் பெண்கள் பேசாமடந்தைகள். ஒருத்தி பேசத்துவங்கினால் காதுகொடுக்கத்துவங்கி விடுவார்கள். இருவர் மூவரென கேள்வி கேட்க ஆரம்பித்தாலே எல்லாப் பெண்களும் விழித்துக் கொள்வார்கள். அவர்கள் கையிலிருக்கும் கயிற்றின் பிடிக்கு பெண்கள் இழுபட வேண்டுமென்று நினைக்கிறவர்களுக்கு, ஃபெமினொ பதினாறு தலையிடியாயிருந்தது. இரண்டு மூன்று இரவுகளாக சப்தமான உறுமல்களோடு மோட்டார் சைக்கிள்கள் அவள் வீட்டை வலம் வந்தன. தொலைபேசி எக்கச்சக்கமான அசிங்கங்களோடு அலறிக்கிடந்தது. ஆனாலும் ஆங்காங்கே பெண்கள் பேசிக்கொள்வது ஆறுதலாயிருந்தது. 

“ இவியளுக்குச் செய்யத்தான் வேணும்.”.

“ பொன் புடிக்கிறத்துக்கு பொம்புளயல்ற ஃபோட்டோக்கள எடுத்துக்கு வந்து பொண்டாட்டிக்கிட்டயே குடுத்து செலக்ட் பண்ணச் செல்லுற ஹராமில பொறந்த நசலுகளுக்குச் செய்யத்தான் வேணும்.”. 

அவர்களின் வானில் நம்பிக்கையின் புதிய கோள்கள் பொட்டுப்போல தோன்றத் துவங்கின. இன்னும் சில ஆண்கள் நடுநிலை வேடமணிந்து ஆட்டுமந்தையை நோக்கி ஆதரவாகக் கைகளை நீட்டுவதும் தெரிந்தது. இந் நியோ பழமைவாதிகளின் தடவல்கள் ஆண்களைத் தடவிக் காப்பாற்றுவது போலவிருப்பவையென நரித்தனமிக்கவையென நன்குணர்ந்திருந்தாள். முழுமையாக குடிவழிமுறையை மரைக்காயர்களை ஒழிப்பதில் அவர்கள் உடன்படாமல் அதை சீர்திருத்தலாமே என யோசனை சொல்லிக் கொண்டிருந்தனர். கணவன் மனைவியரின் பிரச்சினைகளைத் தீர்க்க வருகிற மத்தியஸ்தர் சம்பந்தப்பட்ட பெண்ணின் வார்த்தையும் அபிப்பிராயத்தையும் கேட்டுவிடுவதெனச் செய்துவிடலாமென்றனர். ஊர்ப்பிரச்சினையை பொதுவெளியில் பேசாமல் மூடிய சமூக வலைதளக் குழுக்களில் பேசலாமே என முஸ்தீபுகளைச் சொன்னர். குளத்தினாழத்தில் குளிர்ந்த நீரில் இரையைக் காணும் மீன்கள் உள்ளிருக்கும் தூண்டிலைக் காண்பதில்லை என்று உள்ளூர எண்ணிக் கொண்டாள். மரைக்காயர் என்ற இக்குடிகளின் பிரதிநிதிகள் ஆண்களாகவிருந்தனர். அவர்களைத் தெரிவு செய்பவர்களும் ஆண்களாக இருப்பர். பெண்களின் பிரசன்னமற்ற இந்த முறையின் குற்றவாளிகளிடமே அபயம் வேண்டி கைநீட்டுவதை கேவலமாகக் கருதினாள். நடுநிலை நரிகளைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்தாள். தூண்டிலின் மேல் பகுதியை மட்டும் மென்று கொண்டியில் சிக்காமல் ஏமாற்றிக் கள்ளப் படும் மீனென அவளை உருவேற்றினாள். தூண்டில் காரர் கைவலி மிகுந்து கம்பைக் கைவிடும் நாளொன்று வருமெனக் காத்திருந்தாள். அதுவரை தூண்டில் கவராமல் நோன்பிருந்தாள்.

~oOo~

விடிந்த பொழுதில் காய்ந்த இறைச்சி விற்கும் கிழவி வருவாளோவென படலைப் பூட்டைத் திறந்து உட்பக்கமாக கொண்டியோடு கொழுவி  மாட்டியிருந்தாள். படலையோடு சேர்ந்த சுவற்றில் மேல்பக்கமிருக்கும் சிறிய தகட்டை இரு படலைகளின் நடுவால் விட்டு உள்ளிட்ட கொண்டியைத் திறக்கலாமென்று கிழவிக்குத் தெரியும். ஃப்ரீஜில் ஒரு துண்டு கோவா கிடந்தது. காய்ந்த இறைச்சியோ கூனிக்கருவாடோ இருந்தால் வதக்கிச் சுண்டிவிடலாமென்றிருந்தாள். காரத்திற்குச் சின்னக் கொச்சிக்காய்கள் வாசலில் செடியில் பழுத்துத் தெரிந்தன. மழைக்கு அவிந்துவிடுமென்பதால் அதையும் கிள்ளிப் போட்டுவிடலாமென்றிருந்தாள். உடைத்த நாட்டரிசிச் சோற்றுக்கு காரமிருந்தால் தான் இழுக்குமென்று வாப்பா சொல்லுவார். வெளியே வந்த வெயிலை எப்போது வேண்டுமென்றாலும் மழை மேகம் முழுங்கிவிடுமென்று கயிற்றில் கிடந்த கிளிப்புகளில் ஈர ஆடைகளைத் திரும்பக் கொழுவி விட்டாள். பக்கத்துவீட்டுக்கு பள்ளியாட்கள் வந்திருந்தனர். வழக்கமான நன்கொடை சமாச்சாரம் தானென்று விட்டு விட்டாள். ஆட்கள் தன் படலையருகில் வரவும் முந்தானையைச் சரிசெய்து தலை மூடிக் கொண்டாள். 

“ இஞ்ச, இந்த ஊடு தேவல்ல “.

“ இவள்ற ஊட்டுக்காச பள்ளிக்கு எடுக்கிறா? “.

வெளியில் நின்று பேசியபடி ஆட்கள் அடுத்த வீட்டுக்குப் போயிருந்தனர். அவள் வாப்பா இருந்தபோது பள்ளியாட்கள் உள்ளே வந்து சாய்மனை கதிரைகளில் சுற்றியமர்ந்து பேசிவிட்டுத் தான் போவது வழக்கம். விறாந்தையில் அந்தச் சாய்மனை இழந்த அர்த்த ப்ரகிருதிக்குப் பெயர் கௌரவமாக இருக்கலாமென நினைத்தாள். வெய்யில் போவதும் வருவதுமாக வெளியேயும் உள்ளேயும் கறுப்புப் பல்லிகள் ஓடித்திரிந்தன. இரண்டாவது துண்டுப் பிரசுரத்தை எழுதுவதில் ஒரு ஊசலாட்டமிருந்ததவளுக்கு. முதல் தடவையை விடவும் பெரியதான கல்லை குளத்தின் நடுவே போட்டு ஓடியொளியும் ஆண் பல்லிகளைத் துன்புறுத்த வேண்டும் போலிருந்தது. தொலைபேசியில் குறுந்தகவலொன்று வந்திருந்தது. மேனேஜர் குரல்வடிவில் அனுப்பியிருந்தார். அவர் தழுதழுப்பதில் அவரிருக்கிருந்த சங்கடத்தை அவள் புரிந்து கொள்ள வேண்டுமென்ற போலியான மெனக்கெடலிருப்பது போல் தோன்றியதவளுக்கு. பள்ளிவாயலிலிருந்து அவள் வேலை செய்கிற வங்கி மேலாளருக்குக் கடிதமெழுதியிருக்கிறார்களாம். பாரம்பரியமான ஊர்விடயங்களில் தேவையில்லாமல் குழப்பமேற்படுத்துவது, பதற்றமான மோசடியான அவதூறுகளை இவ்வூரின் கௌரவமான ஆண்கள் மீதும் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மீதும் தொடர்ச்சியாக பரப்புவதென்று அனைத்துப் பள்ளிவாயல்களுமிணைந்து கையொப்பமிட்டு முறைப்பாடு செய்திருக்கிறார்களாம். கட்டாய இடமாற்றத்திற்குரிய முஸ்தீபுகள் நடக்கிறதாமென பாசாங்கான அக்கறையோடு மேலாளர் பேசியிருந்தார். இந்த கிளை வங்கியின் இசுலாமியப் பிரிவு துவங்கிய நாளிலிருந்து அவள் வேலை செய்கிறாள். ஒவ்வொருவாக இருத்தி இசுலாமிய கடன், வட்டியின்றிய நிலையான வைப்பு, அடகு என எல்லா சேவைகளையும் விளக்கி வங்கிக்கு ஆள் சேர்ப்பதில் அஃப்ரின் சாமர்த்தியமானவள். ஒரு மரப் பொந்திலிருந்து கிளம்பும் விட்டில் பூச்சிகளைப் போல் ஆயிரக்கணக்கில் அடகு நகைளோடு வரிசையாக பெண்கள் நின்றதை ஊரே வேடிக்கை பார்த்த நாட்கள் நினைவுக்கு வந்தன. இப்போது ஓரிரு நாட்களில் நாத்தாண்டியா போகவேண்டும். அவளுக்கும் ஒரு மாறுதல் தேவைப் பட்டிருந்தது. அவளுக்கு வேண்டியதெல்லாம் தென்னம் பாளையின் மீது புகைவரத் தேவையான அளவு சிறு பொறி தான். இப்போது ஒரு சுடராக வளர்ந்திருந்த பெருமிதத்தோடே ஆயத்தங்களைச் செய்தாள். அவளுக்கென்றால் தென்னை மரச்சோலைகளின் நடுவே பழங்குடிலில் ஆளுயரப் படுத்திருக்கும் பரத்திப் பன்றியில் பாலுண்ணும் பல குட்டிகளைப் பார்த்த படி கொஞ்ச நாள் கால் நீட்டி காலத்தை அதன் துர்வொழுங்கை நீவிச் சுரண்டி விட வேண்டும் போல.  கரி மண்டிய ரொட்டிக் கல்லில் வேகும் தட்டு ரொட்டிக்காக கொஞ்ச நேரம் காட்டு வழியாக நடக்கிற காலாறல் தேவைப்பட்டது போல. 

“ அறையில் ஒருவரை ஒருவர் முகங்கொள்ள முடியாத படி ஏழு பெண்கள் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள். முகங்களில் அவ்வளவு ராகத்தில்லை. அவர்களின் கணவன்களின் சூது எளிமையாகவிருந்தது. கார்ச் சாவிகளை ஒரு டப்பாவினுள் அடைத்துக் குலுக்கிவிட்டுச் சீட்டிழுப்பாக மனைவியரை எழுமாற்றாகப் பகிர்ந்து கொள்வார்கள் என்று தெரிந்தே அறையில் நடுங்கியபடி. இறைவனை அழைக்கிறார்கள். இப்படிப்பல கொடுங்கோன்மைகளாலே சூழ்ந்த இவ்வூரிலிருந்து என்னை வெளியேற்றலாம், நான்கு ‘பொட்டைகள்’ பேசியதற்காகத் தொடை நடுங்கி அலறித் திரியலாம். ஆனாலும் அவர்கள் பொறியைப் பற்றிக் கொண்டார்கள். என்றாவது ஒரு நாள், உடுத்த உடுப்போடு படுத்த பாயோடு உங்களை அடித்து விரட்டி நடு வீதியில் அசிங்கப் படுத்துவார்கள். நீங்கள் நயமாகக் களவாண்ட வெளிச்சத்தைப்பிடுங்கி விடுவார்கள். மோசமான ஆண்களே, கடினமான இருள் உங்களுக்காகக் காத்திருக்கிறது. “

பூட்டை வெளியால் பூட்டிவிட்டு மாமாவிடம் சாவியை நீட்டினாள். மாமா முகத்தைச் சரிவரப் பார்க்காமலே ஆட்டோகாரனிடம் புத்தளம் பஸ்ஸுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தார். சரிவர முகச்சவரம் செய்யாத மாமாவுக்கு யோசனை இருப்பது தெரிந்தவளுக்கு. மாமாவிடம் அவளிழந்த அர்த்த ப்ரகிருதிக்குத்தான் சொல் பிடிபடவில்லை. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.