மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா?

The difference between a disordered, amorphous solid (glass, left) and an ordered, crystalline/lattice-like solid (quartz, right). Note that even made from the same materials with the same bond structure, one of these materials offers more complexity, and more possible configurations, than the other. (Credit: Jdrewitt/Wikipedia, public domain)

பொதுவில் ஒன்றை நாம் அவரவரது வாழ்க்கையில் எதிர் கொண்டிருப்போம்- அதுதான் பலப் பரிமாணங்களுள்ள சிக்கலான விஷயங்களுக்கு நமக்குத் தரப்படும் ஒற்றைத் தீர்வு உபதேசங்கள். அவ்வளவு எளியது என்றால், அது அவரவருக்கே தோன்றாதா என்று நாம் கருதுவதில்லை.

என்னைப் போன்ற சாதாரணர்களின் இயல்பு இது.  நாங்கள் மேற்சொன்ன விதத்தில் செயல்படலாம். ஆனால், இயற்பியலாளர்கள் கூட இந்த இரகம் தான் என்பதில் ஒரு குரூர திருப்தி! அந்தத்துறையில் மிகப் பழமையான நகைச்சுவை ஒன்று உண்டு- ‘ நாம் பசு மாட்டை கோளமாக (Sphere) உருவகித்துக் கொள்வோம்.’ மன்னிக்கவும், இது ஜோக் தான். இதன் பொருள், ஒரு கோளத்தின் செயலை புரிந்து கொள்வது, அதன் வடிவத்தால் எளிதாகிறது; எனவே தொடக்க அனுமானமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆராயப்படும் பொருளின் சில குணாதியசங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லாத நிலைகளில், சில எளிய கருதுகோள்களைக் கொண்டு நாம் அகிலத்தை அறிந்து கொள்ளத் தொடங்குகிறோம். பின்னர் அந்த எளிமையின் மீது சிக்கலான கேள்விகள் அல்லது அமைப்புகளின் மூலம் ஒரளவிற்குப் பொருந்தும் பதில்களைப் பெறுகிறோம். தனிப்பட்ட ஒற்றைத்துகளிலிருந்து சிக்கலான, பெருங்குழப்பமான, (Chaos & Complexities) தன்னுள்ளே வினைபுரியும் செயற்பாடுகளை அறிய இந்த எளிமையாக்குதலோ, அதில் சில சிக்கலை மட்டும் சேர்ப்பதோ/ காண்பதோ போதாது அல்லவா? பலதரப்பட்ட முக்கியச் செயற்பாடுகளைப் புரிந்து கொள்ள குழப்பம் அவசியமோ? ‘தெளிவு குருவின் திருமேனி காணுதல்’ என்று தெளிவைப் பற்றி பேசலாம், எழுதலாம்- அந்தத் திருமேனியைக் காண்பது எவ்வாறு என்பது குழப்பச் சிக்கலிலிருந்து பெறப்படும் விடையாக இருக்கக்கூடும்.

  • அமைப்பின் எல்லைகள் வரை நீளும் பலத்துகள்களின் இடையே நடைபெறும் உட்செயற்பாடுகள், குழப்பமாக இருக்கும்.
  • ஒரு அமைப்பு உருவாகி வருவதால் ஏற்படும் பின்னூட்டங்கள், அந்த அமைப்பை பாதிப்பது பற்றியும் அறிய வேண்டும்.
  • தன்னியல்பாகவே ஓரிடத்தில் நிலைக்காமல் பரவிக் கிடக்கும் குவாண்டத்தின் குணாதிசயங்களும் அறியப்பட வேண்டியவையே.

அக்டோபர் 2021-ல் நோபல் இயற்பியல் மற்றும் தட்பவெப்பச் சூழியலுக்கான பரிசு ஷூகுரோ மெனாபா, (Syukuro Manabe) க்ளாஸ் ஹாஸால்மென், (Klaus Hasselmann) ஜியோர்ஜியோ பாரிசி (Giorgio Parisi) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதில் ஒரு முக்கியச் செய்தி உள்ளது- அது ‘சிக்கல் குடையின் (Complex Umbrella) கீழ் ‘இயற்பியல், கால நிலையியல்’களுக்கு (Physics and Climate Science) மட்டுமல்ல, இன்னும் பல துறைகளுக்கும் நிழல் இருக்கும் என்பதே. நோபல் பரிசின் முதல் பாதி இரு தட்பவெப்ப ஆய்வாளர்களுக்கும், இரண்டாம் பாதி ‘அமுக்கப்பட்ட/ சுருக்கிய பொருட்களுக்கான (Condensed Matter) கோட்பாட்டு இயற்பியலாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ‘சிக்கல் அமைப்பு ஆய்வு’களில் இது ஒரு முக்கிய திருப்பு முனை. ஏன் என்று பார்ப்போமா?

எளிய எடுத்துக்காட்டுடன் தொடங்குவோம்.

ஒரு துகள், ஒரு வட்டத்தில் சுற்றி வருகிறது. அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

  • அது ஒரு இசைத்தட்டின் துகளைப் போல அந்த வட்டின் பகுதியாக இருக்கிறது.
  • கோள்கள் சூரியனைச் சுற்றி வருவது போல, சுற்றி வரும் போதே அது மையத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறது.
  • அல்லது, அது வட்ட சுற்றுப்பாதையில் மட்டுமே வலம் வர வேண்டும்; மற்ற பாதைகள் அதற்கு விதிக்கப்படவில்லை.

இப்படியான ஒரு ஒற்றைத் துகள் சுற்றும் வட்டப் பாதையை நீங்கள் பதிவெடுத்து இணைக்கும் போது என்ன நிகழும்? அது மறுபதிப்புகளாகத் தென்படும். ஆனால், அப்படித்தான் நிகழவேண்டுமென்பதில்லை. ஒன்றோடொன்று உள்வினை புரியும்/ அல்லது சூழலோடு வினை புரியும்; இதன் சாத்தியக் கூறுகளைச் சொல்வது அசாத்தியம்.

இப்படியான பல்சேர்க்கை அமைப்புகள் மூன்று முக்கிய விதங்களில் வெளிப்படுத்தும் சிக்கலான நடத்தைகளை, தனி அமைப்பினால் காட்ட முடியாது. 2021 ம் ஆண்டின்  இயற்பியல் நோபல் எதற்காக வழங்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள மூன்று விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  • சிறிய, எளிதான அமைப்புகளினிடையே நடக்கும் உட் செயற்பாடுகளைக் கொண்டுதான் சிக்கல் அமைப்புகள் ஒட்டு மொத்தமான நடத்தைகளை வெளிப்படுத்தும். மேலே சொன்ன ஒற்றைத்துகள் வட்டப் பாதையை எடுத்துக் கொள்வோம். அவற்றை இணைப்பதன் மூலம், அந்த ஒற்றைத் துகள் வட்டம் காட்டாத, சிக்கலான நடத்தைகளை இதில் பார்க்கலாம். ஒவ்வொரு துகளும் சுற்றும் வட்டப் பாதை நிலையான, அசையாத ஒன்றாக இருப்பதாகக் கொண்டாலும், ஒவ்வொரு கூற்றுப் பகுதியின் கூட்டு நடவடிக்கைகள், இணைத்துப் பார்க்கப்படும் போது வியப்பிற்குரிய ஒன்றாக உருவெடுக்கும்.
  • உண்மையில் பொருள் அமைப்புகள் சில நிரந்தர குணங்களைக் கொண்டிருக்கும். சில குணாதியசங்கள் மாறுபடவில்லை என்றால், அந்த அமைப்பு என்றென்றும்  நிரந்தரம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தப் பொருளின் குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் குணாதிசய மாற்றம், அந்தப் பொருளில் முழுதாகவோ, அல்லது அதன் வேறு பகுதிகளிலோ வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வரும். நம் ‘மாதிரி’யை மிகவும் எளிதாக்காமல், பல, தோராயமான எளிய கருத்துக்கள் கொண்டு அமைத்துக் கொள்வது நல்ல வழி. எந்த நடத்தையை/ செயல்பாட்டினை அறிய விழைகிறோமோ, அதை சிதைக்காமல் செய்ய முற்பட வேண்டும். சொல்வது எளிது, செய்வது கடினம். நம் தமிழகத்தில் புள்ளிகள் வைத்து வெவ்வேறு வடிவங்களில் கோலம் போடுவதை இத் தருணத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை. சிக்கலான அமைப்புகளின் குணங்களை இப்படி அறிந்து கொள்ள முடியும்.
  • ஒரு அமைப்பின் நிலைகளில் தொடக்கத்திலோ அல்லது காலப் போக்கிலோ ஏற்படும் சிறு மாறுதல்கள், அந்த அமைப்பை இறுதியில் வெகுவாக மாறுபடும் நிலைக்கு இட்டுச் செல்லும். நீங்கள் உருட்டும் தாயக் கட்டைகளின் வேகம், நீங்கள் வீசும் பந்துகள் சமதரையில் ஒரு வேகத்துடனும், சிறு கற்கள் உள்ள சரிவுகளில் மாறுபாடுள்ள வேகத்திலும் பயணிப்பதை அறிந்திருக்கிறீர்கள். அந்த அமைப்பின் மிகமிகச் சிறிதான நிலை மாறுபாடுகள், வேக மாறுபாடுகள், முற்றிலும் தவறான முடிவினைக் காட்டக்கூடும். ஒரு புள்ளி வரை நீங்கள் உங்கள் அமைப்பைப் பற்றி தன்னம்பிக்கையுடன் கணிக்க முடியும்; அந்தப் புள்ளியைத் தாண்டும் போது? நாம் கணக்கில் கொள்வது மிக மிகச் சிறிதான வேறுபாடுகளைத் தான். ஒரு குவாண்டத்துகளின் சுழற்சியை தலைகீழாக்குவது, தொலைவிலுள்ள வண்ணத்துப் பூச்சி சிறகின் படபடப்பு, (ஓ, பட்டர்ஃப்ளை, பட்டர்ஃப்ளை, ஏன் விரித்தாய் சிறகை?) இதைப் போன்றவை அணுப்பிணைப்பு அறுந்துவிட்டதா இல்லையா போன்ற மாற்றங்களை அறிவிக்கும். இந்தச் செய்தி அருகிலுள்ள மற்ற அணுக்களுக்குப் பரப்பப்படும்; லா ச ரா சொல்லும் அந்தத் தருணம் – நீங்கள் கோடீஸ்வரராகும் சூதாட்டத்தில் வெல்கிறீர்களா அல்லது உள்ளதை இழக்கிறீர்களா, அணை அப்படியே இருக்குமா அல்லது சிதைந்து விழுமா போன்ற எதற்கும் இந்தச் சிந்தனையை நீட்டிக்கலாம்.

குழப்ப அமைப்புகளை துல்லியமாகக் கணிக்க முடியாதென்றாலும், பொருள் பொதிந்த கூட்டு நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியும். இந்தப் பண்புதான், குழப்பமான, சிக்கலான அமைப்புகளை அறிந்து கொள்வதற்கு முக்கியமான ஒன்றாகும். நிலையாமைப் பண்புகள், உள்வினையாற்றும் சாத்தியங்கள் என்பவை அயர்வினைத் தந்தாலும், கணிக்கக் கூடிய சாத்தியங்களை நம்மால் கணக்கில் கொண்டு வரமுடியும். உள்ளார்ந்த மாறுபாடுகள், சிக்கல்கள் இருந்தாலும் பொதுப் பண்பு கூறுகளை நாம் அதிலிருந்து பெற சாத்தியங்கள் இருக்கின்றன.

இந்த மூன்றையும் நினைவில் நிறுத்தினால், நாம் 2021 நோபல் இயற்பியல், சூழலியல் பரிசைப் புரிந்து கொள்ளலாம்.

  • சிக்கலான அமைப்பு என்பது பல சிறிய கூறுகள் இணைந்து செயல்படும் ஒன்று.
  • அதன் முதல் நிலை, வளர்ச்சி, அமைப்பின் எல்லைகள் போன்றவை அதைப் பாதிக்கும் விதத்தில்   நுண்ணியவைகளாக இருக்கிறது.
  • இத்தனைக் குழப்பங்களுக்குமிடையே நம்மால், பொதுவான, முக்கியமான கணிப்புகளைச் செய்ய முடியும்.

பூமியின் தட்பவெப்பம் நாம் எதிர்கொள்ளும் மிகச் சிக்கலான அமைப்பு. சூரியனின் கதிரியக்கம், வளிமண்டலத்தில் நுழைகையில், சில ஒளி பிரதிபலிக்கும், சில கடத்தப்படும், சில உறிஞ்சப்படும், பிறகு, சக்தியும், துகளும் பயணிக்கும், வான்வெளிக்கே கதிரியக்கம் திரும்பும். பூமி, கடல், வளிமண்டலம், உள்வரும் – வெளிச் செல்லும் வரவு செலவு சக்தி பட்டியல், உலக உயிரியக்கங்கள் அனைத்திற்கும் இடையே உள்விளையாட்டு நடை பெறுகிறது (அலகிலா விளையாட்டுடையான்) இத்தனை சிக்கல்கள் இருக்கையில்  வினை- விளைவு  கணிப்புகளைச் செய்வது எத்தனை கடினம். ஆனால், ஷூகுரோதான், இன்றைய மனிதர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரும் ஆபத்தான, புவிவெப்பமயமாவதைக் கணிப்பதற்கான மாதிரிகளை அமைத்தவர்.

1967ல் அவர் ரிச்சர்ட் வெதர்ரால்டுடன் (ரிச்சர்ட்க்கு நோபல் கிடைக்காததற்குக் காரணம், அவர் இந்தப் பரிசு அறிவிக்கப்படுகையில் உயிருடன் இல்லை) இணைந்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், உள்வரும் கதிரியக்கம், வெளிச்செல்லும் வெப்பக் கதிரியக்கம் இவற்றை பூமியின் வளிமண்டலம் மற்றும் பரப்புடன் மட்டுமே இணைத்துப் பார்க்காமல், கடல், நீராவி, மேகக் கவசம், பல்வகை வாயுக்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். (நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே!) இந்தக் கூறுகளை அவர்கள் வெறும் மாதிரிகளாகக் கொள்ளவில்லை- அவற்றின் பின்னூட்டங்கள், உள் உறவுகள் போன்றவை எப்படி பூமியின் பொதுவான தட்ப வெப்பத்தைப் பாதிக்கின்றன என்று காட்டினார்கள். வளிமண்டலத்தின் உள்ளடக்கம் மாறும் போது, அறுதியான, சார்பான, ஈரப்பதம் மாறுகிறது; இது பூமியின் மொத்த மேகக்கவசத்தை மாற்றுகிறது, அது நீராவியின் உள்ளடக்கத்தை மாற்றி வளி மண்டலத்தில் கால மாறுதல்களையும் வெப்பச்சலனத்தையும் ஏற்படுத்துகிறது.

தொடக்கத்தில் நிலையான ஒரு மாதிரியைத் தேர்வு செய்தார்கள்- அதாவது, இயந்திரப் புரட்சி காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய கரியமில வாயு ஒரு கூறு; பிறகு பூமியில் அதன் பாதிப்பைப் பற்றிய  தொடர்ச்சி; ஷூகுரோவின் முதல் காலநிலை மாதிரி, பூமியின் தட்ப வெப்பம், கரியமில வாயுவைச் சார்ந்து கால அளவு மாறுதல்களாலும், கரியமில வாயுவின் பரிமாணத்தாலும் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை வெற்றிகரமாக நிரூபித்தது. இந்தக் கணிப்பு அரை நூற்றாண்டுகளாக நிலை பெற்று விட்டது. இன்றைய கால நிலை மாதிரிகள் இவரின் ‘மாடலை’க் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன.

1970களின் இறுதியில் ஹாஸால்மென், மாறுபடும் தட்பவெப்பச் சூழல் நிலைகளை, குழப்பமான, சிக்கலான வானிலையுடன் இணைத்தார். கால நிலை மாதிரிகள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல என்று சிக்கலான வானிலை வகைகளை எடுத்துக்காட்டி வாதிட்டவர்கள் ஹாஸால்மெனின் இந்த இணைப்புத் தேற்றத்திற்குப் பிறகு அதை ஒத்துக்கொண்டார்கள். இவரது பங்களிப்பால், மாதிரிகள் சீரமைக்கப்பட்டன,  நம்பகத்தன்மை அதிகரித்தது, கணிக்கும் முறை மேம்பட்டது.

இயற்கைச் செயல்பாடுகளும், மனிதர்களின் செயற்பாடுகளும் காலநிலை ஏட்டில் பதிக்கும் விரல் ரேகைகள் ஹாஸால்மெனின் முக்கியக் கோணம். மனித நடவடிக்கைகளால் வெளியாகும் கரியமிலவாயு, புவியின் வளிமண்டலத்தில் சமீப காலங்களில் வெப்பத்தை அதிகரித்துள்ளதை அவர் தன் மாதிரிகளின் மூலம் விளக்கினார். புவி வெப்பமயமாவதற்கும், காலநிலையில் ஏற்படும் அதிக மாற்றத்திற்கும், மனித நடவடிக்கைகள் எப்படிக் காரணமாக அமைகின்றன என்பதி ஷூகுரோவும், ஹாஸால்மென்னும் காட்டியுள்ளனர்.

ஜார்ஜியோ பாரிசியின் இயற்பியல் ஆய்வு சிக்கலான அமைப்புக்களைப் பற்றியது. ஒழுங்கற்ற, பெரும் சிக்கலான அமைப்புக்களை அவர் ஆய்வு செய்தார். இயற்பியலின் பல பிரிவுகளில் அவர் சிறந்த பங்களிப்பைச் செய்தவர். ஆயினும், ஒழுங்கற்ற, சிக்கலான பொருட்களில் மறைந்துள்ள வகை மாதிரிகளைக் கண்டுபிடித்தது அவருக்கு நோபலைப் பெற்றுத் தந்தது.

A series of particles moving along circular paths can appear to create a macroscopic illusion of waves. Similarly, individual water molecules that move in a particular pattern can produce macroscopic water waves, and the gravitational waves we see are likely made out of individual quantum particles that compose them: gravitons. (Credit: Dave Whyte/Bees & Bombs)

பொதுவாக, தனித்த கூறுகளால் அமைந்த, ஒழுங்கில் உள்ள பொருட்களிலிருந்து அவற்றின் நடத்தையைத் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, படிகக்கல்லில் உள்ள அழுத்தங்கள், பின்னல் கூற்றுப் பொருட்களில் உள்ள சுருக்கப்பட்ட அலைகள், நிலைத்த ஃபெர்ரோ காந்தத்தில் இருக்கும் தனித்தனியான காந்த இரு முனைகள், இவைகளின் குணாதிசயங்களை அறிவது எளிதாக இருக்கும். ஆனால், சீரற்ற முறையிலுள்ள இரு துருவ முனைகள், ஒழுங்கற்ற உருவமில்லாத திடப் பொருட்கள் ஆகியவற்றின் கதையே வேறு. அவற்றின் நினைவுகளில், நீங்கள் செய்தது எல்லாம் வெகு காலம் நிலைத்திருக்கும்! இந்த ஒழுங்கற்றப் பொருட்களில் இருக்கும் இந்தக் குணத்தை நாம் சாதரணமாக அறிவதில்லை.

ஒப்பு நோக்க, நாம் மீண்டும் துகள்கள் சுற்றும் வட்டங்களை நினைவில் கொண்டு வருவோம். ஒவ்வொரு துகளின் நிலையும் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது என கற்பனை செய்யுங்கள். ஆனால், அவை எந்த திக்கில் சுழல வேண்டும் என்று அவைகளே தேர்ந்தெடுக்கலாம் என வைத்துக் கொள்வோம். தன் அருகிருக்கும் துகளின் சுழற்சித் திக்குடன், ஒரு துகள் ஒத்தும் போகலாம்,  நேர்மாறான ஒன்றையும் தேர்ந்தெடுக்கலாம். அது எப்படி தீர்மானிக்கிறது? எந்தச் சுழற்சியில் சக்தி குறைவாகத் தேவைப்படுமோ, அதை ஒத்து அந்தந்தத் துகள்கள் செயலாற்றுகின்றன.

Even with down-to-the-atom initial precisions, three dropped Plinko chips with the same initial conditions (red, green, blue) will lead to vastly different outcomes by the end, so long as the variations are large enough, the number of steps to your Plinko board is great enough, and the number of possible outcomes is sufficiently large. With those conditions, chaotic outcomes are inevitable. (Credit: E. Siegel)

ஆனால், ஒரு சமகோண முக்கோணத்தை எடுத்துக் கொள்வோம்; அதில் துகளின் சுழற்சி மேலே அல்லது கீழே என்றுதான் அதன் அமைப்பினால் கிடைக்கும். இதில் குறைந்த சக்தியை தேர்வு செய்யும் வாய்ப்புகள் துகள்களுக்கு இல்லை. அது விரக்தி அடைந்து உள்ளதில் எது குறை சக்தி கோருகிறதோ, அதைத் தேர்வு செய்யும். ஒழுங்கு முறைகளைப் பின்பற்றாத துகள்கள், நாம் சரியாக அணுகாதபோது தொல்லைகளைத் தரும். குறை சக்தி நிலையில் நீங்கள் இந்த அமைப்பினைத் தொடங்காவிடில், சமநிலைக்கு வராமலேயே, தன்னை மிக மெதுவாக, ஆற்றலற்ற முறையில் மறு கட்டமைப்பு செய்யும். இந்த நிலையை ஸ்டீவ் தாம்சன் என்ற இயற்பியலாளர் ‘விருப்பப் பக்கவாதம்’ (Option Paralysis) என்று சொல்கிறார். இதனால், இந்தப் பொருட்களைக் கண்காணிப்பதும், எந்தக் கட்டமைப்பில் அவைகள் முடிவுறும் என்பதையும், அந்த இடத்தை எப்படித்தான் அடையும் என்பதையும் கணிப்பது மிகச் சிக்கலான விஷயம்.

Manabe, who constructed the first-ever climate model that could predict the amount of warming from the changes in CO2 concentrations, just won a share of the Nobel Prize for his work on complex systems. He coauthored what’s generally regarded as the most important paper in climate science history. (Credit: Nobel Media/Royal Swedish Academy of Science)

ஹாஸால்மென், மெனாபே எவ்வாறு தட்ப வெப்ப மாதிரிகளின் மூலம் இந்தப் புரிதலுக்கு நம்மைக் கொண்டு வந்தார்களோ, அவ்வாறே, பாரிசி நம்மை இந்த நூதனத்தைக் காணச் செய்கிறார். ‘ஸ்பின் க்ளாஸ்’ (spin Glass) போன்ற குறிப்பிட்ட வகைகளுக்காக மட்டுமல்ல, கணித ரீதியான பல்வகை சிக்கல் கேள்விகளுக்கும் இந்தக் குணாதிசயங்கள் மூலம் விடை காணலாம். 1979ல் இந்த ‘சுழல் கண்ணாடி’க்கான, இப்போது, பரவலானத் தீர்வாக உள்ள ‘பிரதி முறை’யை (Replica Method) முதலில் அமைத்தவர் அவரே. இன்று இந்தப் பிரதிமுறை, கணினி அறிவியலில், நரம்பு வலைப்பின்னல்களில், பொருளாதார இயற்பியல் (Econophysics) போன்ற பல்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

Using a variety of methods, scientists can now extrapolate back the atmospheric concentration of CO2 for hundreds of thousands of years. The current levels are unprecedented in Earth’s recent history. (Credit: NASA/NOAA)

பெருஞ்சிக்கலான அமைப்புகள் இருக்கின்றன. இயற்பியலின் விதிகளை ஒவ்வொரு துகளிற்குமாகப் பொருத்திப் பார்த்து சரியாகக் கணிப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது- ஏனெனில் துகளின் குணாதிசயங்கள் அப்படித்தானிருக்கின்றன. ஆனாலும், மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி, துகளின் நடத்தை மாதிரிகளை அமைத்தோம் எனில், அந்த அமைப்பு எந்த விதத்தில் செயல்படும் என்பதை கணிக்க முடியும். அது மட்டுமல்ல, ஒரு அலகின் நிலையை மாற்றுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஒரு பொதுக் கணிப்பு செய்யவும் முடியும்.

“பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் இன்னே மேல்வரும் மூப்புமாகி
நாளும் நாம்சாகின்றோமால்; நமக்குநாம் அழாத தென்னே?”
– குண்டலகேசி

உசாவி: https://medium.com/starts-with-a-bang/why-chaos-and-complex-systems-absolutely-deserves-2021s-nobel-prize-in-physics-a6488cab496a Oct 13,2021. by  Ethan Siegel

2 Replies to “மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா?”

Leave a Reply to Arunachalam RamananCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.