பாபிலோனின் மாபெரும் பணக்காரர்

ஜ்யார்ஜ் எஸ். க்ளாஸனின் ‘த ரிச்சஸ்ட் மான் இன் பாபிலோன்’ நூல் அறிமுகம்:

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247

சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு, நதிக்கரை ஓரம் அமைந்த ஒரு பண்டைய நகரம், அதை சுற்றிலும் வறண்ட பள்ளத்தாக்கு, விவசாயம் செய்ய போதுமான மழை இல்லை,  வெளி வர்த்தகத்துக்கு தேவையான வணிக பாதைகள் இயற்கையாக அமையப் பெறவில்லை, கனிம வள சுரங்கங்கள் இல்லை, அண்மையில் காடுகள் இல்லை, கட்டுமானத்திற்கு தேவையான கற்கள் கூட இல்லை. 

இப்படி எல்லா பின்னடைவுகளும் கொண்டிருந்தும், வெறும் மனித மதியால், மதியால் உந்திய உடல் ஆற்றலால், அணைகளை எழுப்பி, நதி நீர் பாசனத்தை கண்டடைந்து, செல்வ செழிப்பில் முதன்மை பெரும் நகரமாக உருப்பெற்று , எகிப்தின் பிரமிடுகளுக்கு நிகராக கருதப்பட்டு,  ஏழு அதிசயங்களில் இடம்பெற்ற பிரம்மாண்டமான தொங்கும் தோட்டங்களை ஒருக்கி, உலகத்திற்கே முன் மாதிரியாக திகழ்ந்த நகரம் பாபிலோன். 

பாபிலோனியர்கள் நிதி மேலாண்மையில் (Financial Management) கொண்டிருந்த திறனும் ஒழுக்கமுமே இதற்கு முதன்மை காரணம். 

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த களிமண் பலகைகளில் (Clay Tablets) உள்ள குறிப்புகளை கண்டடைந்து,  அன்று புழக்கத்திலிருந்த நிதி கோட்பாடுகளை ஆராய்ந்து, அது எக்காலத்திற்கும் பொருந்தும் என்று உய்த்துணர்ந்து, எல்லோரும் பயன் பெற வேண்டி, சாலை வரைபட(Road Map) தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த திரு.ஜார்ஜ் சாமுவேல் கிளாசான், 1920களில் தன் செலவில் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து விநியோகித்தார். அமெரிக்க வங்கிகளும், காப்பிடு நிறுவனக்கும் இதன் முக்கியத்துவம் அறிந்து இதை ஊக்குவிக்கும் பொருட்டு பெருமளவில் அவர்களும் அச்சடித்து விநியோகித்தனர். உலகில் தலைசிறந்த நிதி ஆலோசகர்களின் பரிந்துரை பட்டியலில் இடம் பெறும் ஒரு பிரதான புத்தகம்.

புத்தக சாரம்

மனிதன் கண்டடைந்த ஆக சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கதை. தான் உணர்ந்த ஒன்றை, அடைந்த ஞானத்தை, தோன்றுகிற கருத்தை பிறரிடம் கடத்த சிறந்த ஊடகம் கதைகள். கதைகளும் அதன் உச்சமான புராணங்களும், இதிகாசங்களும் அதை பாடும் பாணர்களும், சூதர்களும், விறலிகளும் இல்லையேல், மனித இன்னும் காடுகளில் வாழ்ந்திருப்பான்.

அந்த கூற்றுக்கு ஏற்ப, எளிய மக்களுக்கும் நிதி மேலாண்மை புரிய வேண்டும் என்பதற்காக நீதிக்கதை(Parable)  போல் ஜார்ஜ் சாமுவேல் கிளாசன் இந்த புத்தகத்தை அமைத்துள்ளார். 

பாபிலோனின் அரசர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நகரத்தின் முதன்மை செல்வந்தரான அர்காட்(Arkad), ஒழுங்கு செய்யப்பட்ட சான்றோர் அவையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு பேருக்கு, ஏழு நாட்களில், ஒவ்வொரு நாளும் ஒரு விதியாக, பணத்தை கையாள்வதற்கான ஏழு விதிகளை புகட்டும் புனைவே இந்த புத்தகத்தின் மையக் கரு. அந்த ஏழு விதிகளின் சாரம் –

முதல் விதி சுயசம்பளத்தை முதன்மைபடுத்து 

வியாபாரியாக நாம் ஈட்டும் செல்வமோ அல்லது ஊழியராக நாம் பெறும் ஊதியமோ எதுவாயினும், நாம் வருமானத்தில், முதல் காரியமாக 10% பணத்தை நமக்கு நாமே தரும் சம்பளமாக எடுத்து நமது சேமிப்பு கணக்கில் சேர்ப்பதே தலையாய மற்றும் முக்கிய விதி. இதுவே பணத்தை பெருக்குவதற்கான  மூல சூத்திரம் (Formula).

இரண்டாம் விதி தேவை விருப்பம் பிரித்துணர்  

மீதம் 90% செலவழிக்கும் முன், நமது தேவை என்ன, விருப்பம் அல்லது ஆசை என்ன என்று முதலில் பிரித்து உய்த்துணர வேண்டும். அதற்கு ஒரு உதாரணமாக அர்காட் கூறுவது, பாலைவனத்தை கழுதை மீதேறி கடக்க,பொதியில் கட்ட வேண்டியது தண்ணீரும், வைக்கோளும் மட்டுமே. தங்கமோ, பட்டுக் கம்பளமோ கொண்டு செல்ல ஆசைப்பட்டால், அதில் எந்த பயனுமில்லை. ஆசைப்படாமல் மனிதனால் இருக்க முடியாது. ஆசைப்படலாம், ஆனால் அது தேவைகள் போக, மீதம் உள்ள பணத்தில் போகிக்கலாம். எக்காரணத்திக்கொண்டும் கடனும் படக்கூடாது, சேமிப்பையும் தொடக்கூடாது. 

மூன்றாம் விதி சேமிப்பு தங்க நதியென அறிமுதல்

விதிப்படி, நமது வருமானத்தில் 10% சேமித்த பணம், தங்க அடிமைகளால் பேணப்பட்டு தொடர்ந்து ஓடும் தங்க நதியோடை போன்றது. அது நாம் தூங்கும் போதும் நமக்கு வேலை செய்து வருமானம் ஈட்டும் படியாக முதலீடு செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பிரபலமாகி வரும் செயலற்ற வருமானம் (Passive Income) என்னும் உத்தி போன்றது.

நான்காம் விதி திறனோர் சொல் கேள் 

மூன்றாம் விதியில் பரிந்துரைத்தப்படி முதலீடு செய்யும் போது, எவ்விதத்திலும் மூலத்தனத்திற்கு சேதமும் பங்கமும் வரமால் திட்டமிடவேண்டும். சொந்த அனுபவமோ ஞனமோ இல்லாவிடில், திறமையாலும் அனுபத்தினாலும் முதலீட்டில் லாபத்தை ஈட்டியவர்களை கண்டடைந்து, ஆலோசித்து அவர்களுடைய அறிவுரையை பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.

ஐந்தாம் விதி செலவையும் சேமிப்பாக்க பழகு 

நம் கை விட்டு செல்லக்கூடிய ஒவ்வொரு காசும், செலவாக இல்லாமல் சேமிப்பாக்க பழகவேண்டும். இதற்கு அர்காட் சொல்லும் பிரதான உதாரணம் – கடனில் வீடு கட்டினாலும், கடன் அடைக்கும் போது வீடு நமக்கு சொந்தம். வாடகை பணம் எனில், போனது போனது தான். மற்றோரு உதாரணம் – துணி துவைக்க ஆற்றுக்கு செல்வது செலவு எனில், திரும்பி வரும் போது, தோள்பை அளவாவது நீர் கொண்டுவருவது சேமிப்பென்றாகும்.

ஆறாம் விதி நிலையாமை கணக்கில் கொள்

நன்றோ தீதோ, மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் மாறாதது. நமது இறப்போ, இயலாமையோ, வயோதிகமோ நமது குடும்பத்தை பாதிக்காமல் இருக்க, நமது முதலீடு காப்பீடாக இருக்க வேண்டும். இதற்கு ஆர்காட் பெரிதும் முதலீடென பரிந்துரைப்பது அசையா சொத்துக்களான வீடு, நிலம் போன்றன. 

ஏழாம் விதி ஆற்றல் பெருக்கு

ஆற்றல் செல்வத்திற்கு நேரிடையான விகிதாசாரமாகும் (Directly proportional). அது அறிவாற்றலாகவும் இருக்கலாம், உடல் ஆற்றலாகவும் இருக்கலாம். உன்னில் ஒரு துளி ஆற்றல் மேம்பட்டு பெருக, செல்வமும் பெருகும்.

பரிந்துரை

மனித குல வரலாற்றில், வர்த்தக பரிவர்த்தனையில், பொருளுக்கு பொருள் என்ற பண்டமாற்று வணிகமாக தொடங்கி, வாங்கும் பொருளுக்கு ஏற்ப நாணயங்களால், உலோகங்களால், காகித கட்டுகளால், கடன் அட்டைகளால் பணம் செலுத்துவது என வளர்ந்து, இன்று தொடர்பற்ற கட்டணம்(Contactless) வரை தொழில்நுட்பம் பரிணாமம் அடைந்தாலும், ஆதியில் இருந்த பணத்தை  கையாளும் சராசரி மனிதனின் மனநுட்பமோ மதிநுட்பமோ எந்த விதத்திலும் முன்னேறவில்லை. 

முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி விலங்கு நிலைக்கு செல்கின்றன என்பது மிகையல்ல. குறிப்பாக தற்சூழலில் பெரும் கலாச்சார மாற்றமான கொண்டாட்ட மனநிலையும், நுகர்வு வெறியும், எந்த வித எதிர்கால திட்டமில்லாமலும், அன்றன்றைக்கு தேவையான உணவை ஊனை வேட்டையாடி அன்றன்றைக்கு உண்ணும் விலங்கு மனநிலை போன்றது.

புத்தகத்தில் இரண்டாவது விதிப்படி தேவை எது, விருப்பு எது என்று தெளிவு புத்தக வாசிப்பிற்கும் பொருந்தும். சில புத்தகங்கள் வெறும் விருப்பத்திற்காக படிக்கலாம். அது பொழுதுபோக்கு வகையறா.

அறிவின் தேவைக்காகப் படிப்பது சிலவே. அறிவு திட்டமிடும் ஆற்றலை வளர்க்க உதவும். இது நிதி மேலாண்மையை திட்டமிடும் ஒவ்வொரு மனிதரும் படிக்க வேண்டிய புத்தகம். 

இல்லையேல் “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவர் வாக்கு.

2 Replies to “பாபிலோனின் மாபெரும் பணக்காரர்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.