எத்தகையப் படங்களுக்கு வரவேற்பு அதிகம் ?

சென்ற பகுதியில் வண்ணப்பட ஏஜன்சிகளின் வேலை அணுகுமுறை மற்றும் சட்ட திட்டங்கள் பற்றி ஒரு அறிமுகம் பார்த்தோம். இந்தத் தொழில் இன்னும் இந்தியாவில் அதிகம் வேறூன்றவில்லை. இதற்கு, காப்பிரைட் சட்டங்கள் நேர்த்தியாக பின்பற்றாததே காரணம். ஒரு வண்ணப்படக் கலைஞரின் விற்பனை பற்றிய விஷயங்களைப் பார்க்கும் முன்பு, மூன்று முக்கிய விஷயங்களை இங்கே சொல்ல வேண்டும்:

 1. கலைஞர் தன்னுடைய வண்ணப்படத்தை ஏஜன்சிக்கு விற்று விட்டாலும், அதன் முழு உரிமையாளரும் அவரே. அது ஏஜன்சிக்குச் சொந்தமாகாது. இது ஒரு விற்பனை அமைப்பு – அவ்வளவுதான். பங்களிப்பாளர் (இந்தத் தொழிலில் கலைஞர்கள் contributors அல்லது content contributors என்று அழைகப்படுகின்றனர்), எப்பொழுது வேண்டுமானாலும், தன்னுடைய படைப்பை ஏஜன்சியின் இணையதளத்திலிருந்து நீக்கி விடலாம்
 2. ஏஜன்சி ஒரு வண்ணப்படத்தை விற்கும் பட்சத்தில், அதை யாருக்கு விற்கிறோம், எதற்காக விற்கிறோம், எத்தனைக்கு விற்றோம் என்ற விவரங்களை பங்களிப்பாளருக்குக் கொடுக்க வேண்டியதில்லை. இதனால், இன்றுவரை, என் வண்ணப்படங்களை யார் பயன்படுத்துகின்றார்கள் என்று எனக்குத் தெரியாது. அத்துடன், ஏஜன்சி, அவர்கள் இயங்கும் எந்த நாட்டில் வேண்டுமானாலும், வண்ணப்படங்களை விற்கலாம்
 3. சில ஏஜன்சிகளைத் தவிர மற்றவை, ஏஜன்சி மற்றும் இறுதிப் பயனாளருக்குள் என்ன வியாபார அமைப்பு என்று சொல்லுவதில்லை. கெட்டி நிறுவனம், முழுவதும் ஒரு பட்டியலாகவே அனுப்புகிறார்கள். மற்ற ஏஜன்சிகள், உங்களது பங்களிப்புக்கு இத்தனை டாலர் என்பதை மட்டுமே சொல்லுவார்கள்

வண்ணப்படங்களை விற்பதற்குப் பல தந்திரங்களை இணையம் முழுவதும் காணலாம். இந்தக் கலை மிகவும் பரந்த ஒன்று. ஒருவருக்குப் பொருந்தும் அறிவுரை இன்னொருவருக்குப் பொருந்தாது. ஏனென்றால், ஒவ்வொரு கலைஞரின் பாணியும் வேறுபடும். இதனால், இங்கு அந்தத் தந்திரங்கள் எதையும், இங்கு சொல்லப் போவதில்லை.

ஒரு விஷயம், என்னுடைய ஆரம்ப நாட்களில் என்னைத் தவறாக சிந்திக்க வைத்தது – இதை எந்தக் கலைஞரும் தவிர்க்க முடியாது. என்னுடைய ஓரிரு படங்கள் விற்றவுடன், தோன்றும் ஒரு அசாத்திய நம்பிக்கை மிகவும் அபாயமானது. அடுத்த வாரம்/ மாதத்தில் அந்த நம்பிக்கை தவிடு பொடியாகிவிடும்! ஒரு வண்ணப்படம் கூட விற்பனை ஆகாமல், பங்களிப்பாளரின் நம்பிக்கை குலைந்து விடும், அபாயம், முற்றிலும் உண்மை.

சில மாதம் வெறும் 2 அல்லது 3 டாலர்கள் மட்டுமே வருமானம் கிடைக்கும். இது, மேலும் நம் உழைப்பை துச்சப்படுத்துவதைப் போலத் தோன்றும். எத்தனை ஆயிரம் டாலர்கள் கொடுத்து வாங்கிய காமிரா, பயிற்சி, நேரம் மற்றும் பிரயாணச் செலவுக்கு மரியாதை இவ்வளவுதானா என்று பல முறை தோன்றியதுண்டு. இந்தத் தொழிலே வேண்டாம் என்று தோன்றும் அளவிற்கு வெறுப்பு தோன்ற வாய்புண்டு. உங்களிடம் அவசியம் ஒரு இளையராஜாத்தனம் இருக்க வேண்டும், இத்தொழிலில் தாக்கு பிடிக்க!

இங்கு ஏன் இளையராஜாவை கொண்டு வந்துள்ளேன்? அவருடைய ஆரம்ப நாளில், அவர் சந்திக்காத சவால் இல்லை. சினிமாவிற்கு தேவையான இசை என்பதை முற்றிலும் கற்க வேண்டும்; சும்மா தன்னிடம் இருந்த நாட்டார் இசை மட்டும் உதவாது என்று அவர் செவ்விசையில் மூழ்கி, இன்று உலகம் போற்றும் இசை மேதையானார். அத்துடன், வெற்றி/ தோல்வி பற்றிய கவலையைத் தாண்டி செயல்படவும் செய்கிறார். இவை எல்லாம் இந்தத் தொழிலிலும் தேவை. அவரைப் போலவே, தொடர்ந்து வண்ணப்படங்களை, தடைகளைத் தாண்டி, வெற்றிகரமாக விற்பனைக்கு முன் வைக்க வேண்டும். ராஜாவின் ஆரம்ப கால தோல்விகளைப் போல (ராசி இல்லாத ராஜா) இந்தத் தொழிலில் அவசியம் கடந்து செல்லத்தான் வேண்டும். விமர்சனம் மற்றும் தோல்வி உங்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும் பட்சத்தில், தயவு செய்து, ஒளிப்படக் கலையில் தேர்ந்தவராக இருந்தாலும், இந்தத் துறையை தவிர்த்தல் உத்தமம்.

இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய கேள்வி, எந்தப் படம் விற்கும்?’ இது ஏறக்குறைய சினிமா போன்ற விஷயம். ஆனால், இந்திய சினிமாவே தேவலாம் (உலகின் மிகப் பெரிய சினிமா தொழில்) என்று தோன்றும் அளவிற்கு பல மில்லியன் படங்கள், சில மில்லியன் பங்களிப்பாளர்கள், கடும் போட்டியிடுகிறார்கள். இங்கு, சினிமாவைப் போல, சில அருமையான கற்பனை விலை போகிறது. மற்றபடி, உங்களது படத்தில் வாங்குவோருக்கு ஏதாவது ஒரு முக்கிய அம்சம் இருந்தால்தான், காசு கொடுத்து வாங்குவார். சில உதாரணங்கள் இந்தப் பிரச்சினையை விளக்க உதவும்:

நயகரா வீழ்ச்சியைப் படம் பிடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு முன், இந்த வீழ்ச்சிக்கு பல கோடி மனிதர்கள் போயிருப்பார்கள். அதில், சில மில்லியன் படங்கள் எடுக்கப்பட்டிருக்கும். குறைந்தது, ஒரு 10,000 திறமையான வண்ணப்படக் கலைஞர்கள் (உலகின் மிக அதிகம் படம் பிடிக்கப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று) படம் பிடித்திருப்பார்கள். இதில், ஒரு 1,000 பங்களிப்பாளர்கள், பல இணைய விற்பனைத் தளங்களில் தங்களுடைய படைப்புகளை மேலேற்றியிருப்பார்கள். நீங்கள் நேற்று எடுத்த நயகரா வண்ணப்படம் எப்படி இத்தனை போட்டியில் தனித்து நிற்கும்? எதற்காக உங்கள் படத்தை, மற்ற படங்களைத் தவிர்த்து, ஒருவர் வாங்க வேண்டும்?

கடற்கரைக்குச் செல்லுகையில், அங்கு சூரியன் மறையும் தருவாயில், சிவப்பு மற்றும் தங்க நிற அலைகள் உங்களைப் படம் பிடிக்கத் தூண்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். இது நயகரா வீழ்ச்சியே பரவாயில்லை என்று தோன்றும் அளவிற்கு படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சி. அத்துடன், உலகில் பலகோடி கடற்கரைகள் இருக்கின்றன. மற்ற விஷயங்கள் முன்னே சொன்ன நயகரா உதாரணம் போலப் பொருந்தும். உங்களது கடற்கரை வண்ணப்படம் கவனிக்கப்படும் சாத்தியம், நயகரா வீழ்ச்சி படத்தை விட மில்லியனில் ஒரு பங்கு என்று தாராளமாகச் சொல்லலாம். உங்களைச் சுற்றி கவனியுங்கள் – அந்தச் சூரியன் மறைகையில் எத்தனை திறன்பேசிகள் க்ளிக்கப்படுகின்றன!

நீங்கள் மலைப்பகுதியில் ஒரு விடுமுறைகாக செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்குள்ள அமைதியான சூழல், இயற்கையின் அழகு எல்லாம் உங்களை படமெடுக்கத் தூண்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும், இந்த வகைப் படங்கள், சில முகநூல் பங்கீடுகளோடு தூங்கும் படங்கள். சில படங்கள் உங்களை இணையதளத்தில் மேலேற்றி விற்கும் அளவிற்கு அருமையாக வந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம். மலைப்பகுதி என்றவுடன், பெரும்பாலும், அது அஸ்ஸாமில் அல்லது, கர்நாடகாவில், அல்லது இங்கிலாந்தில், எங்கு எடுத்தாலும், வேறுபாடு சொல்வது கடினம். இவ்வகைப் படங்கள், ஒரு தனிக்கதையை சொல்வதாயின் விற்கும். இல்லையேல் இணையத்தில் தூங்கும். கடற்கரை படத்தைவிட சற்று விற்க வாய்ப்புண்டு. அவ்வளவுதான். இவ்வகை படங்கள் விற்பதற்குள் நம் ஆயுள் முடிந்துவிடும்!

எந்த மாதிரி வண்ணப்படங்கள் விற்கும்? இதற்காக உலகப்பயணம் செய்து வண்ணப்படங்களை எடுக்க வேண்டுமா? எப்படி வாங்குவோரின் கவனத்தைக் கவர்வது? இது போன்ற கேள்விகளுக்கு எளிமையான பதில்கள் கிடையாது. இருந்தால், இன்று வண்ணப்பட வியாபாரத்தில் பலரும் கோடீசுவரர்களாகியிருக்க வேண்டும்.

அடிப்படையில் ஒரு நல்ல வண்ணப்படம், அதை வாங்குவோரின் ஏதோ ஒரு தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வளவுதான். ஆனால், அந்த தேவை என்ன என்பதை, ஏஜன்சிகளே ஒரு குத்து மதிப்பாகத்தான் சொல்கின்றன. சில ஏஜன்சிகள், தங்களுக்குத் தேவை என்று சமீபத்தில் (2022) கேட்கும் வண்ணப்பட வகைகள்:

 • மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிப்பவர்களின் நிலையை விளக்கும் படங்கள்
 • பங்குச்சந்தையில் மேலும் கீழும் போகும் பங்கு விலையை சித்தரிக்கும் படங்கள்
 • கோவிட் கால ஷாப்பிங் விளக்கப் படங்கள்
 • ஒரு நகரத்தின் இரவும் பகலும் சித்தரிக்கும் வண்ணப்படம்
 • வீட்டிலிருந்து இயங்கும் வியாபாரம்/ அலுவலகம் பற்றிய வண்ணப்படங்கள்
 • செல்லப் பிராணிகளைக் கொஞ்சும் படங்கள்
 • சேவையைப் பாராட்டும் படங்கள்
 • புதிய வகை வயதானவர்களின் வண்ணப்படங்கள் (உதாரணம், 87 வயதில் மலையேறும் மனிதர்)
 • சூழல் பாதுகாப்பு பற்றிய வண்ணப்படங்கள்

இப்படி ஒரு டஜன் பட வகைகளை ஏஜன்சிகள் அடுக்குவது வழக்கம். இதை எப்படி புரிந்து கொண்டு படம் பிடிப்பது? இவற்றில் நமக்கு எது சாத்தியம்? ஏஜன்சிகள் முன் வைக்கும் வகைகளில், அவசியம் குறைகள் உண்டு:

 • பெரும்பாலும், இந்த வகைகள் அடுத்த 6 மாத ஏஜன்சித் தேவைகள். இதை நம்பி, படமெடுத்தால், ஃபாஷன் போல மாறிவிடும் இந்த உலகில், உங்களது உழைப்பு வீணாகிவிடும்
 • கோவிட் காலப் படங்கள், இன்னும் சில ஆண்டுகளில், மறக்கப்படும் .
 • காலத்தைத் தாண்டி பயன்தரும் வண்ணப்படங்களே பங்ளிப்பாளருக்கு நல்லது. உதாரணத்திற்கு, ஒரு பங்களிப்பாளர், பிறந்த குழந்தையின் பிஞ்சுக் கால்கள் இரண்டை மட்டும் படமெடுத்து மேலேற்றினார். உலகில் மனிதர்கள் இருக்கும் வரை குழந்தைகள் பிறக்கும். அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஒரு வாழ்த்துச் சொல்ல, படம் தேவை!
 • அலுவலகத்தை விட்டு ஓய்வு பெரும் ஊழியர் ஒருவரை படமெடுப்பதற்கு பதில், அங்குள்ள, ஓய்வு வாழ்த்து அலங்காரத்தை படம் எடுப்பது உத்தமம். அழகான இந்தப் படம், ஒரு ஆண் அல்லது பெண் ஓய்வு பெறும் தருணத்தில், வாழ்த்து அனுப்ப தோதாக இருக்கும்!
 • அழகான பூனை மற்றும் நாய்க்குட்டி படங்கள் எப்பொழுதும் வரவேற்பைப் பெறும்
 • வாழ்த்து அட்டைக்கு மிகவும் பயனாக இருக்கும் என்று நீங்கள் ஒரு அழகிய வைன் பாட்டிலைப் படமெடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களது படம் முழுவதும் வைன் பாட்டிலே இருக்கக் கூடாது. அதை வாங்கும் பயனாளரின் பார்வையிலிருந்து நீங்கள் யோசிக்க வேண்டும். பயனாளர், தன் வாழ்த்துச் செய்தியை எழுத இடம் நீங்கள் கொடுத்திருக்கும் பட்சத்தில், மற்ற வைன் பாட்டில் படத்தைத் தவிர்த்து, உங்களது படத்தை வாங்க அதிக வாய்ப்புண்டு.

சில கற்பனைதிறம் வாய்ந்த படங்கள் சிலரது அறிக்கை/ விளக்க உதவிக்காட்சிகளுக்குப் பயன்படும்:

 • மாலை சூரியன் மறையும் வேளையில், மலையின் விளிம்பில் ஏறும் மனிதனின் நிழல், ஒரு தனிமனித துணிவை விளக்கும் படம்
 • ஒரு காட்டில், பல மனிதர்கள் ஒரு மிகப் பெரிய பாறையை அகற்ற சேர்ந்து உழைக்கும் படம், teamwork -ஐ சித்தரிக்கும் படம்
 • ஏணியின் மீதேறி, கூரையை வண்ணம் பூசும் ஒரு வண்ணப்படம், சுய உழைப்பை சித்தரிக்கும் படம்
 • மலையின் உச்சியிலிருந்து, இன்னொருவருக்கு மேலே வர கை கொடுப்பது போல எடுத்த படம், உதவும் மனப்பான்மையைச் சித்தரிக்கும் படம்
 • சிறுவன்/சிறுமி ஒருவன்/ஒருத்திக்கு நீச்சல் குளத்தின் கரையிலிருந்து விசில் ஊதி நேரம் பார்ப்பது, பயிற்சியைச் சித்தரிக்கும் படம்
 • காலை நேர சூரியனில், சலனம் ஏதுமில்லாமல், மஞ்சள் ஒளியில் அழகாக பிரதிபலிக்கும் ஏரி நீர், சுற்றிலும், ஆடாது அசங்காது இருக்கும் மரங்கள், அமைதியை சித்தரிக்கும் படம்

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். சில கற்பனைகள் சிலருக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் அதிஷ்டசாலியாக இருந்தால், உங்களது கற்பனை, விற்பனையாகும்! இவை யாவும் சற்று பொதுவான இத்துறை சார்ந்த விஷயங்கள். அடுத்த பகுதியில், என்னுடைய சொந்த அனுபவம் எப்படி என்று பார்ப்போம்.

Series Navigation<< சந்தாதாரரின் ஒரு முறை பயன்பாடுவித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாது >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.