இரு கவிதைகள்

1.
ஓர் இசைக் குறிப்பின்
இடைவெளியில் ஜனித்த
மௌனத்துடன் பெயரற்ற நதியில்
தனக்காகக் காத்திருக்கும் படகில் பயணிக்கத்
துவங்குகிறான் சித்தார்த்தன்
படகின்
ஒரு புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்களை
அதிகாலைப் பனியின்
உதடுகள் உரசி துய்க்கின்றன
அவன் தன்னிலை மறந்து
தனக்கென்று
இல்லாத காதலிகளை நினைத்துக் கொள்கிறான்
பிறகு
துடுப்புகளிலிருந்து
படகை விடுவித்து
ஆற்றினுள்
ஒரு மீனாக
அதை நீந்திச்செல்ல அனுமதிக்கிறான்
புத்தனாக
இசைக் குறிப்புகளிலிருந்து
விடுபட்ட
மௌனத்தைப் போல


2.
அறையைவிட்டு வேகமாக வெளியேறும் நண்பனை
இங்கேயே தங்கும்படி செய்துவிட்டது
மழை

வெகு நாட்களுக்குப் பிறகு
நாங்கள்
மழையை ஒன்றாகப் பார்க்கிறோம்
இருவரின் இறுக்கத்தை நெகிழ்த்தி
அவ்விடத்தில்
சொற்களைப் பாசியாக்கிப்
படர விடுகிறது
மழை

பிறகு ஒன்றாக
உணவருந்துகிறோம்
அவரவர் தட்டுகளில்
இடப்பட்ட உணவுகளில்
கடந்தகாலக் கசப்புகளைக்
கலக்காமல்

எங்களுக்கிடையே
அடையாளமற்றுப் போன
பழைய பாதையில்
கோடிட்டு வழிந்து ஓடி
வழி செய்தபடி
இரவு முழுக்க
வழுத்து பெய்கிறது
மழை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.