மிஸல்டோ – முத்தச் சிறுகிளை

ஜெர்மனியின் ஆபென்பெர்க் பல்கலைக்கழகம் அந்நகரின் முதியவர்கள் நலனுக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடன் பல்கலைக்கழகம்  இந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் அங்கு பட்ட மேற்படிப்பின் பொருட்டு  சென்றிருக்கும் மகன் சரணும்   கலந்து கொண்டான்.

கொண்டாட்டம் நடைபெற்ற அரங்கு நுழைவாயிலில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த வெண்ணிற கனிகளுடன் கூடிய  ஒரு சிறு பசுங்கிளையை கடப்பவர்கள், அதனடியில் நிற்பவர்கள் அனைவரும், அவனுட்பட தொடர்ந்து முத்தமிடப்பட்டார்கள் என்பதை மெல்லிய வெட்கத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டான் 

பொதுவெளியில் பாராட்டுவது, அன்பை தெரிவிப்பது ஆகியவற்றிற்கு அவ்வளவாக பழக்கப்பட்டிருக்காத தென்னிந்திய சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு நிச்சயம் இது வெட்கத்தை உண்டாக்கும்  நிகழ்வுதான்.

அந்த குறுங்கிளை மிஸல்டோ (Mistletoe) என்னும் ஒரு மர ஒட்டுண்ணிச்செடியின் பகுதி. இந்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இச்செடியின் கிளைகள் அலங்காரத்துக்கான பயன்பாட்டில் இருக்கின்றன எனினும் அதனடியில் முத்தமிட்டுக் கொள்ளும் வழக்கம் இந்தியாவில் இல்லை.

மிஸல்டோ என்னும் இச்செடி அதனடியில் செல்பவர்கள் முத்தமிடப்பட வேண்டும் என்னுமளவில் மட்டுமே அறியப்பட்டிருக்கிறது. மிக நெடிய வரலாறும் தொன்ம தொடர்புகளும் கொண்டது இந்த மிஸல்டோ முத்தமிடல்.

மிஸல்டோ தொன்மம்

மிஸல்டோ வளமை, குழந்தைப்பிறப்பு மற்றும் காதலின் குறியீடாக ரோமானியர்கள் மற்றும் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும், நடுக்காலத்திலும் வாழ்ந்த பழங்குடிச் சமுதாயங்களை உள்ளடக்கிய செல்ட்டியர் (Celts) இன-மொழிக் குழுவினரால் கருதி வணங்கப்பட்டது. வேர்களற்ற பசுமைமாறா இலைகளை கொண்டிருக்கும் கடும்பனிக்காலத்தில்,  மரங்கள் இலைகளை முற்றாக உதிர்த்திருக்கையிலும் அவற்றின் மீது செழித்து வளரும் இவை  நீள்வாழ்வு மற்றும், இறவாமையின் அடையாளமாக  பல பண்டைய நாகரீகங்களால் வணங்கப்பட்டது. இச்செடி அமைதி மற்றும் புனிதத்தின் குறியீடாகவும் ரோமானியர்களால் கருதப்பட்டது.

ரோமானியர்களின் குளிர்காலk கொண்டாட்டம், விதைத்தல், விதை மற்றும் விவசாயத்தின் கடவுளான சனியை வழிபடும் நாளாகக் கருதப்பட்ட சாடர்னேலியா (Saturnalia) கொண்டாட்டங்களின் போது, வீடுகளைத் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க வீட்டின் முன்னால் மிஸல்டோ கிளைகளைk கட்டித் தொங்கவிடும் சடங்குகள் இருந்தன. ஒவ்வொரு டிசம்பர் 17 அன்று தொடங்கும் இந்த விழா அடுத்த 7 நாட்களும் பொது விருந்து, மது, சூதாட்டம், விளையாட்டுப் போட்டிகள் என்று கோலாகலமாக டிசம்பர் 23 அன்று முடியும். சீசரின் காலத்தில் விமரிசையாக இருந்த இவ்விழா பின்னர் படிப்படியாக குறைந்து மூன்று நாள் கொண்டாட்டமாகியது. 

நார்ஸ் தொல்குடியினர் போர் முடிவை அறிவிக்க ஆயுதங்களை மிஸல்டோ வளர்ந்திருக்கும் மரத்தினடியில் குவித்து வைத்தனர். பண்டைய செல்ட் கலாச்சாரத்தில்  ட்ரூயிட் (Druids) எனப்பட்ட சமூகச் சான்றோர்களைக் (ஆசிரியர்கள், நீதிபதிகள், மதத்தலைவர்கள் போன்றவர்களை) குறித்த சொல்,  மிஸல்டோ ஒட்டுண்ணி மரத்துடன் சேர்ந்து இருப்பதால் கூட்டுறவு என்பதின் புனித அடையாளமாகவும் இதனை கருதினார்கள்.

பொது கால வரிசையில், முதல் நூற்றாண்டில் ட்ரூயிடுகள் கடும் பனிப்பொழிவால்  மொட்டையான மரங்கள் மீது பச்சை பசேலென்று வளர்ந்திருக்கும் இவற்றை மரணச் சூழலில் காணப்படும் உயிர்நிறைந்த தாவரங்களாக,  அசாதாரண சக்திகளும் மந்திர பண்புகளும் கொண்ட தாவரங்களாக கருதினார்கள். இவற்றின் குறுங்கிளைகள் கால்நடைகளை அடைத்து வைத்திருக்கும் இடங்களிலும் வீட்டின் முன்பாகவும் தீய சக்திகள் அண்டாதிருக்கவும், சந்ததி விருத்திக்கும் கட்டிவிடப்பட்டன.

அக்காலங்களில் வாய்ச்சண்டை முற்றினால் சண்டையிட்டுக் கொள்பவர்கள் மிஸல்டோ வளர்ந்திருக்கும் மரங்களினடியில் நின்று சமாதானம் பேசிக் கொள்ளும் வழக்கம் முதலில் இருந்திருக்கிறது. மிஸல்டோ பல வகையான மரங்களில் ஒட்டுண்ணியாக வளர்ந்தாலும்   ஓக் அவர்களின் புனித மரமாதலால் அதன்மீது வளர்ந்திருந்த மிஸல்டோ மிகப்புனிதமானதாக  வழிபடப்பட்டது . குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் இந்த மிஸல்டோ வளர்ந்த ஓக் மரங்களினடியில் நிகழ்ந்தன.

நார்ஸ் தொன்மங்களில்  போர் மற்றும் இறப்பின் கடவுளான ஓடினுக்கும் (Odin), அவரது  மனைவியும் கர்ப்பத்திற்கும் தாய்மைக்குமான கடவுளான  ஃப்ரிக்கிற்கும்(Frigg ) பிறந்த மகன் பால்டர் (Balder).   ஃபிரிக் தன் மகனுக்கு நெருப்பு ,நோய், நீர், தாவரங்கள் என விண்ணிலும் மண்ணிலும் இருக்கும் எவற்றாலும் உயிராபத்து வரக்கூடாது என ஒவ்வொரு உயிரினங்களிடமும் சென்று வேண்டி வரம் பெற்றுக் கொண்டாள்.   தன் பாலினத்தையும் உருவத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் தொந்தரவின் கடவுளான லோகி (Loki) நிலத்திலும் வானிலுமல்லாது ஒட்டுண்ணியாக மரங்களில் வளரும் மிஸல்டோவின் கிளைகளினால் அம்பு செய்து பால்டரைக் கொன்றான்.

அதுவரையிலும் கனிகளற்று இருந்த மிஸல்டோவில் தன் மகனுக்காக ஃபிரிக் அழுத கண்ணீர் முத்துக்களே கனிகளாகின, என்றும் தன் மகனைக் கொன்ற மிஸல்டோவை யாரும் வெறுக்காமல் அதன் மீதும் அன்பு செலுத்தி, அதனடியில் எப்போது யார் சென்றாலும் முத்தமிட்டு கொள்ள வேண்டும் என்று அவள் கேட்டுக்கொண்டதாகவும்  சொல்லப்படுகின்றது.

பால்டரின் அன்னை வரம் கேட்க மறந்துவிட்ட மிஸல்டோவை இனி யாரும் மறக்க கூடாது என்பதற்காகவே அதன் குறுங்கிளைகள் பிறகெப்போதும் வீடுகளின் முன்பாக கட்டி தொங்க விடப்படுகிறது என்றும் அந்த தொன்மத்தின் பொருட்டே அதனடியில் முத்தமிட்டு கொள்வதும் வழக்கமாகியது என்றும் பரவலாகச் சொல்லப்படும் ஒரு தொன்மம் சார்ந்த கதை.

பிரபல ஆங்கில நாவலாசிரியர் வின்ஸ்டன் க்ரஹாம் (Winston Graham) மிஸல்டோ முன்பு மரமாக இருந்ததாகவும் அதன் கட்டையிலிருந்தே ஏசு கிறிஸ்துவின் சிலுவை உண்டாக்கப்பட்டதாகவும், அதனால் அம்மரம் சபிக்கப்பட்டு ஓட்டுண்ணியானதாகவும் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலோ-சாக்ஸன்கள் (Anglo-Saxons) பிரிட்டானியாவின், தெற்கையும், கிழக்கையும் கிபி 5ம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவிய பகுதிகளில் இருந்து ஆக்கிரமித்த ஜெர்மானிய குழுக்கள். இம்மக்களே இங்கிலாந்து நாட்டை அமைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியே ஆங்கிலத்தின் மூல மொழி. அவர்களின் ஆங்கிலோ-சாக்ஸன் மொழியில்தான் ’’கிளையில் இருக்கும் சாணம்’’  என்று பொருள்படும் Mistletoe என்னும் பெயர் இந்த ஒட்டுண்ணிச்செடிகளுக்கு அவை பறவைகளின் எச்சங்களால் வளர்வதை குறிக்குமாறு பெயரிடப்பட்டது.

மிஸல்டோ வரலாறு

மிஸல்டோவின் கீழ் மனிதர்கள் ஏன் முத்தமிட முனைகிறார்கள் என்பதற்கு கடவுள்கள், இறப்பு, காதல், காமம் ஆகியவற்றின் தொன்மம் சார்ந்த விளக்கங்கள் இருந்தாலும், இந்த தாவரம் புனித தன்மையிலிருந்து கலாச்சார குறியீடாக பரிணாம வளர்ச்சி அடைந்தது பல நூற்றாண்டுகால வரலாற்றை கொண்டது. 

பொது ஆண்டுக்கு முந்தைய ’30-19’ல் ரோமானிய கவிஞர் வர்ஜிலால்  (virgil) எழுதப்பட்ட  முற்றுப்பெறாத கவிதைத் தொகுப்பில் //தூய ஆன்மாக்களின் உலகத்தில் நுழைய மிஸல்டோ பந்துகள் தேவைப்படுகின்றன// என்னும் வரிகள் உள்ளன.

விவிலியம் குறிப்பிடும் எரியும் புதர், இலைகளற்ற செங்கனிகளும் மஞ்சள் மலர்களும் நிறைந்த மிஸல்டோவின் தோற்றம்தான் என்றும் சொல்லப்படுகின்றது.

பண்டைய பாபிலோனிய- அஸிரிய சாம்ராஜ்யத்தில் காதல் கடவுளின் ஆலயத்தின் முன்பு  மிஸல்டோ வளர்ந்திருக்கும்  மரங்களினடியில் நிற்கும் இளம்பெண்களை முதன்முதலில் காணும் ஆண் அவளை மணம் புரிந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது அப்போது அவர்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்க வில்லை.

மிஸல்டோவும் அதன் கொண்டாட்டங்களின் போதான பயன்பாடுகளும் கிறிஸ்துவத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்தது. தீராப்பயணி பிளைனி, தியோபிராஸ்டஸ் ஆகியோர் 2000 வருடங்களுக்கு முன்பே மிஸல்டோவை குறிப்பிட்டிருக்கின்றனர். பிளைனி இதை சொர்க்கத்திலிருந்து விழுந்த  ஒரு துளி என்கிறார்.

பிளைனி ரோமானியர்களின் மிஸல்டோ அறுவடைச் சடங்கை விவரித்திருக்கிறார். மிஸல்டோ  வளர்ந்திருக்கும் ஓக் மரத்தின் மீதேறி பொன் அரிவாளொன்றினால் மிஸல்டோவை வெட்டி எடுக்கும் சடங்கின் போது அம்மரத்தின் முன்பாக இரண்டு வெள்ளெருதுகள் பலியிடப்பட்டன. மிஸல்டோ நிலத்துக்கும் வானுக்குமான இடைப்பட்ட உலகில் இருக்கும் தாவரமாக வணங்கப்படுவதால், வெட்டியெடுக்கப்படும் மிஸல்டோ ஒருபோதும் நிலத்தில் விழாதவாறு மரத்தடியில் ஒரு வெண்ணிறத் துணி விரிக்கப்பட்டு அதில் சேகரிக்கப்படுகிறது, 

பின்னர் மிஸல்டோவிலிருந்து விஷமுறிவு போன்ற உயிர்காக்கும் மருந்துகள் அம்மக்களுக்கென அப்புனித நாளில் தயாரிக்கப்பட்டது.  ரோமானியர்களுக்கு முன்பு செல்ட்டுகள் இச்சடங்கில் மனிதர்களை பலியிட்டிருக்கலாம் என்றும் அதை ரோமானியர்கள் தடை செய்து எருதைப் பலியிட்டிருக்கலாம் என்றும் வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது.

கிறிஸ்தவ  மதம் பரவிய காலங்களில் குளிர்கால கொண்டாட்டங்களில் அலங்காரங்களில் இடம் பெற்ற மிஸல்டோ தீய ஆவிகளை விரட்ட கதவுகளில் தொங்கவிடப்பட்டது.  இதன் அலங்கார உபயோகம் பரவலாகிக் கொண்டிருந்தாலும் தேவலாயங்கள் இவ்வழக்கம் பாகன் பழங்குடியினரின் வழக்கமென்பதால் அதன்மீது விலக்கம் கொண்டிருந்தன. பல தேவாலயங்களில் அச்சமயத்தில் மிஸல்டோ கொண்டாட்டங்களில் பயன்படுத்தத் தடை விதித்திருந்தன. ஆனால் வீடுகளில் இதன் உபயோகம்  தொடர்ந்து இருந்தது.

தாவர வகைப்பாட்டு இயலின் தந்தை லின்னேயசும், டார்வினும் மிஸல்டோவை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.  

3ம் நூற்றாண்டில் கிருஸ்துவமதம் பரவியபோது அம்மதத்துடன் மிஸல்டோவின் தொன்மங்களும் இணைந்தது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) ஆய்வாளர்கள்  20000 வருடங்களுக்கு முன்பான  குட்டை மிஸல்டோவின் எச்சங்களை அகழ்வாய்வில்  கண்டுபிடித்திருக்கிறார்கள். ஐரோப்பிய தொன்மங்களில் மிஸல்டோ ஆண்மையின் சாரமாக குறியீடாக கருதப்படுகிறது.

1500 களில் ஐரோப்பாவில் மிஸல்டோவின் கத்தரிக்கப்பட்ட குறுங்கிளைகள், மலர்கள் மற்றும் கனிகளைக்கொண்டு ஒரு பந்துபோல உருவாக்கி வண்ண ரிப்பன்களையும் இணைத்து, அதை வீட்டு முன்பாக தொங்கவிடும் வழக்கமும் குளிர்கால கொண்டாட்டங்களின் ஒரு  பகுதியாக இருந்திருக்கிறது அவற்றை முத்தப் பந்துகள் என அழைத்தார்கள். அதனடியில் நிற்கும் கன்னி பெண்ணுக்கு முத்தமிடப்பட்டால் அவளுக்கு அடுத்து வரும் புத்தாண்டில் திருமணம் நடக்கும் என்றும் மிஸல்டோவின் கனிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முத்தத்தின் போதும் எடுத்துக்கொண்டு கனிகள் தீர்ந்துபோகையில் முத்தமிடுதலும் நின்றுபோவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. பல பல வரலாற்றாய்வாளர்களும் இதை குறிபிடுகிறார்கள் 

1719 மற்றும் 1720களில் மிஸல்டோவை குறித்த விரிவான ஆய்வு நூல்கள்  மருந்தாளுனரும் மருத்துவருமான ஜான் கோல்பேட்சினால்(John Colbatch,) வெளியிடப்பட்டது. அதில் பல பக்கங்களில் மிஸல்டோவை குறித்த தொன்மையான நம்பிக்கைகளும், சடங்குகளுடன் மிஸல்டோவுக்கிருந்த தொடர்புகளும் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அந்நூல்களில் எங்குமே மிஸல்டோ முத்தத்தை அவர் குறிப்பிடவில்லை .

பிரபல வரலாற்றாய்வாளர் மார்க் ஃபோர்சைத் (Mark Forsyth) முத்தமிடுதல் குறித்த இந்தத் தொன்மக் கதைகளில் உண்மையில்லை என்கிறார். அவரது  A Christmas Cornucopia: The Hidden Stories Behind Our Yuletide Traditions என்னும் நூலில் பால்டாவின் மரணம் மிஸல்டோவினால் உண்டாகி இருக்கும் என்னும் தொன்மத்தில் நம்பகத்தன்மை இருக்கலாம் எனினும் மிஸல்டோவின் அடியில் முத்தமிட்டு கொள்ளும் கலாச்சாரத்துக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும்  அந்த தொன்மத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் டைம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலொன்றில்.

ஏதேனும் ஒரு புத்திசாலிப் பையன் அல்லது சாமார்த்தியசாலியான ஒரு பெண்ணால் இவ்வழக்கம் உருவாகி இருக்கலாம் என்று ஃபோர்சைத் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அப்படியான ஒரு வழக்கம்  எப்படி எப்போது துவங்கி இருக்கும் என்பதை யூகிப்பது  மிகவும் கடினம் என்பதைக் குறிப்பிட்டு, ’’எனினும் விவாகரத்து மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான எந்த சாயலும் இல்லாத 18 ஆம் நூற்றாண்டில், காதல் அறவே இல்லாத திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் பெண்களின் கவலைகள் மற்றும் தீமைகளின் பட்டியலில்  இந்த கட்டாய மிஸல்டோ முத்தம் என்பது மிக, மிக மிக குறைவான தொந்தரவாகவே இருந்திருக்கும்’’ என்கிறார் அவர்.

1784ல் வெளியான ஒரு பாடலில் முதல் முறையாக மிஸல்டோ முத்தம் குறிப்பிடப்பட்டிருப்பதையும்  ஃபோர்சைத் சுட்டிக்காட்டுகிறார் 

” ஜெம், ஜான், ஜோ, உள்ளிட்ட ஆண்கள்

எங்களுக்கு என்ன அதிர்ஷ்டம் அனுப்பப்பட்டது?’என்று 

கூச்சலிட்டபடியே முத்தமிட்டார்கள்’’,

மிஸெல்டோவுக்கடியில்  

 20 வயது கூட ஆகியிருக்காத இளம் பெண்களுக்கு “

மேலும் பல வரலாற்றாய்வாளர்கள் இந்த பாடலை குறிப்பிட்டு அந்த காலத்தில்தான் மிஸல்டோ முத்தங்கள் பிரபலமாயிருக்கும் என்று யூகிக்கிறார்கள். இங்கிலாந்தில் 1700களின் இறுதியில் துவங்கிய இந்த வழக்கம் 1800களில் உலகெங்கிலும் அறியபட்ட ஒன்றாக இருந்தது  

இப்பாடலுக்கு பின்னர் 18 ம் நூற்றாண்டின் பல பிரபல இலக்கிய படைப்புக்களில் இவ்வழக்கம் இடம்பெற்றிருந்தது.1794 ம் ஆண்டின் சித்திரமொன்றில் ஒரு உணவு கூடத்தில் சமையலறை பணிப்பெண்கள் மிஸல்டோவின அடியில் வலுக்கட்டாயமாக முத்தமிடப்படுகிறார்கள் 

விக்டோரிய காலத்தின் துவக்கத்தில் ஆங்கிலேய பணியாளர்கள் மத்தியில் பிரபலமான இவ்வழக்கம் பின்னர் நடுத்தர குடும்பங்களுக்கும், உயர்குடியினருக்கும் பரவி புகழ்பெற்றது. முத்தமிடுவதை மறுக்கும் பெண்களுக்கு துரதிர்ஷ்டம் நேரும் என்றும் நம்பப்பட்டது  .

மிஸல்டோவின் காதல் குறியீட்டு உபயோகம் 18ம் நூற்றாண்டில் மிக பரவலாகியது அச்சமயத்தில் மிஸல்டோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக மாறிவிட்டிருந்தது

அலங்கார பொருளாக இருந்து புனிதமான தாவரமாக உயர்ந்து காதலின் குறியீடாக மாறிவிட்டிருந்தது மிஸல்டோ

1843ல் சார்ல்ஸ் டிக்கென்ஸ் வெளியிட்ட  ‘A Christmas Carol’ என்னும் நூலில் மிஸல்டோவினடியில் முத்தமிட்டுக்கொளும் சித்திரங்கள் இடம் பெற்றிருந்தன.அதில்தான் மிஸல்டோவின் கனிகள் தீரும்வரையே முத்தமிடுதல் என்னும் தகவலும் இருந்தது. 

டிக்கென்ஸ் அவரது The Pickwick Papers  என்னும் நூலில் மிஸல்டோவினருகில் முத்தமிட்டுக்கொள்வதை சொல்லுகிறார்.

வாஷிங்டன் இர்விங் 1819 மற்றும் 1820ல் தொடர்ந்து வெளியிட்ட,  ‘The Sketch Book of Geoffrey Crayon’ நூலிலும், ‘Christmas Eve’ என்னும் 1855-1859 களில் வெளியான நூலிலும் மிஸல்டோவினடியில் முத்தமிட்டுக் கொள்வதை விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ‘’அந்த அரங்கில் இளம்பெண்கள் கூச்சலிட்டபடி முத்தமிட வரும் ஆண்களிடமிருந்து தப்பிக்க மூலைகளுக்கு ஓடுகிறார்கள் கடைசியில் வேறு வழியில்லாமல் அவர்களது முத்தங்களை ஏற்று கொள்கிறார்கள்.’’ என்று விவரிக்கிறார்.

இர்விங்கின் அந்த நூல் 19ம் நூற்றாண்டில் அப்போது சிறு கொண்டாட்டமாக இருந்த கிறிஸ்துமஸ் தினங்களை, மிஸல்டோ முத்தங்களால் வளர்ந்த பெரும் கொண்டாட்டமாக மாற  வழிவகுத்தது.  இந்நூலின் அமெரிக்க வாசகர்கள் மிஸ்ல்டோ முத்தத்தை பின்னர் பரவலாகினர். ஃபிரெஞ்ச் மக்களும் அப்போது மிஸல்டோவை பரிசாக அளிப்பதை பண்டிகை மற்றும்  புத்தாண்டு கால வழக்கமாக கொண்டிருந்தனர்.

குளிர்கால மற்றும் கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்களின் அங்கமாகிவிட்டிருக்கும் மிஸல்டோ ஹாரிபாட்டர் வரைக்கும் பிரபல கலாச்சாரங்களிலும் இடம் பெற்றுள்ளது. ஹாரிபாட்டரும் தன் முதல் முத்தத்தை சோ-சாங்கிற்கு மிஸல்டோவினருகில்தான் அளிக்கிறான்.

18 ம் நூற்றாண்டில் மிஸல்டோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் சாதரணமாகவே காணப்பட்டது. மிஸல்டோ நிலத்தில் படக்கூடாது என்னும் மரபின் படி அது எப்போதும் கயிற்றில் அல்லது சிவப்பு ரிப்பனில் கட்டி தொங்கவிடப்பட்டது. வருடம் முழுவதும் இப்படி தொங்கும் மிஸல்டோ கிளைகள் கிறிஸ்துமஸ் சமயத்தில் புதிதாக மாற்றப்படுகிறது

ஜெர்மனியில் இதனருகில் செல்லும் யாராகிலும் முத்தமிடப்படுகையில் அவர்கள் அன்புக்குரியவர்களாகவும் தொடரும் ஆண்டில் அதிர்ஷ்டக்காரர்களாகவும் இருப்பார்கள் என்னும் நம்பிக்கை உள்ளது

கிறிஸ்தவத்தில் முத்தமிடல்

கிறிஸ்தவ மதத்தில் முத்தமிடுவது மரியாதையின், மன்னிப்பின் பொருட்டாக வழக்கத்தில் இருக்குமொன்று. சிலுவை வடிவங்கள், ஏசுவின் சித்திரங்கள் ஆகியவற்றை வணங்குவதும்,  மண்டியிட்டு வணங்குவோரின் புறங்கையில் முத்தமிடுவதுமாக கிறிஸ்துவத்தில் முத்தம் வழிபாட்டின் ஒரு அங்கமாக  இருக்கிறது

 பண்டைய கிறிஸ்தவம் “greet each other with a holy kiss” என்னும் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கன்னங்களில் முத்தமிட்டுக்கொள்வதை வலியுறுத்தியது, ஏசு கிறிஸ்து சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார் என்பதால் பாதங்களில் முத்தமிட்டு வணங்குவதும் கிறிஸ்தவத்தில் ஒரு வழக்கமாக உள்ளது.

மீனவர்களின் கை விரல் மோதிரத்தை முத்தமிடுவதென்பது பண்டைய ரோமானிய சடங்குகளில் ஒன்று.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புனிததந்தை, அவரது பெயரும் படகில் அமர்ந்திருக்கும் புனிதர் பீட்டர் உருவமும் பொறிக்கப்பட்ட பொன் மோதிரத்தை அணிவார். அந்த மோதிரத்தை முத்தமிடும் வழக்கம் இன்றளவும் உள்ளது

 30 வெள்ளிக்காசுகளுக்காக யூதாஸ் கிறிஸ்துவை காட்டிக்கொடுத்ததும் முத்தமிட்டுத்தான் என்கிறது விவிலியம்.

எனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது மிஸல்டோவினடியில் அன்பை பரிமாறிக்கொள்ள முத்தமிடுவதை கிறிஸ்துவம் சார்ந்த ஒரு சடங்காகவும் நினைத்துக்கொள்ளலாம்

தாவரவியல் தகவல்கள்

உலகெங்கிலும் சுமார் 1500  வகை மிஸல்டோக்கள் உள்ளன அனைத்துமே மரங்களின் மீது ஒட்டுண்ணிகளாய் செழித்து புதர் போல் வளர்பவை

அனைத்து மிஸல்டோக்களும் விஸ்கேசி (Viscaceae) மற்றும் லொராந்தேசி (Loranthaceae) குடும்பங்களை சேர்ந்தவை. லொராந்தேசி மிஸல்டோ தாவரங்கள் வண்ணமயமானவை. நவீன தாவர வகைப்பாட்டியல் விஸ்கேசியை சந்தன மரங்களின் குடும்பமான சாண்டலேசியின் துணைக்குடும்பமாக அங்கீகரிக்கிறது. ஐரோப்பாவில் இருக்கும் மிஸல்டோ விஸ்கம் ஆல்பம்(Viscum album) என்னும் அறிவியல் பெயர் கொண்டது. மிஸல்டோவுக்கு  birdlime, all-heal, golden bough, drudenfuss, iscador மற்றும் devil’s fuge, என்றும் பெயர்கள் உண்டு

ஐரோப்பாவிற்கு வெளியே மிஸல்டோவின் பலவேறு சிற்றினங்களும் வகைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. 

வட் அமெரிக்காவில் பல மிஸல்டோ வகைகள் உள்ளன. முக்கியமாக  Phoradendon  leucarpum சிற்றினம் இங்கு அதிகம் பயன்பாட்டில் உள்ளது. அறிவியல் பெயரான Phoradendron, என்பது மர திருடன் என்று பொருள்படுகிறது. 

அதைக்காட்டிலும் சிறிய செடியான Arceuthobium சிற்றினமும் அங்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது இவை குட்டை மிஸல்டோ என அழைக்கப்படுகின்றன இவை செதில்களை போன்ற சிற்றிலைகளுடன் காணப்படுபவை.

மிஸல்டோ ஒட்டுண்ணியென்பதால் அது சார்ந்திருக்கும் மரங்களிலிருந்து  நூல் போன்ற உறிஞ்சும் வேர்களால் நீரும் சத்துக்களும் எடுத்துக்கொண்டு எப்போதும் பசுமை மாறா தாவரமாக இருக்கும்.

அமெரிக்க மிஸல்டோ கனிகள் வெடித்து சிதறி சுமார் 50 அடி தொலைவுக்கு அதன் விதைகளை பரப்பும்

மிஸல்டோ கனிகள் மனிதர்களுக்கு நஞ்சல்ல எனினும் செல்லப்பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்துண்டாக்கும் எனவே கவனம் தேவை

அடர்ந்து வளரும் இவற்றின் கனிகளை பல வகை பறவைகளும் அணில்களும் விலங்குகளும் உணவாக எடுத்துக் கொள்கின்றன  மிகப்பெரிய புதராக வளரும் இவற்றில் பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன

விஸ்கம் ஆல்பம்  கிளைத்திருக்கும் தண்டுகளும், பசுமைமாறா ஜோடி இலைகளும் வெளிர் மஞ்சள் மலர்களும் வெண் கனிகளும் கொண்டவை.  சொரசொரப்பான கடினமான இலைகள் எதிரடுக்கில் அமைந்திருக்கும் 

இவற்றின் உறிஞ்சும் வேர்கள் மரங்களின் தண்டுக்குள் சென்று உணவையும் நீரையும் உறிஞ்சிக்கொள்ளும் இவை  5 வருடங்கள் கழித்தே மலர்க்காம்பற்ற மிகச்சிறிய  மலர்களை உருவாக்கும்.   ஆண் பெண் மலர்கள் தனித்தனியே காணப்படும் ஜூனிபர், பைன், ஓக் மற்றும் பலவகை மரங்களில் இவை வளரும். 

இதன் கனிகளில் ஒற்றை விதை பசை போன்ற viscin என்னும் சதையால் சூழப்பட்டிருக்கும். விசினின் ஒட்டும் தன்மையால் விதைகள் முளைக்கும் வரை காற்றாலும் மழையாலும் அவ்விடத்திலிருந்து நீங்காமல் பாதுகாக்கப்படுகின்றன

மிஸல்டோ ஒரு பகுதி ஒட்டுண்ணி அதாவது அவை வளரும் மரங்களிலிருந்தும் உணவை நீரை எடுத்துக் கொள்வதோடு இலைகளின் பச்சையம் கொண்டு பிற தாவரங்களைப்போல ஒளிச்சேர்க்கையின் மூலமாகவும் உணவு தயாரிக்கின்றது

இவை செழித்து வளர்ந்து ஒரு மூட்டைபோல் மரங்களின் கிளைகளில் காணப்படுவதால் சூனியக்காரியின் துடைப்பம், மரம் மேல் கூடை போன்ற வழங்கு பெயர்களும் உள்ளன 

மிஸல்டோ ஆப்பிள் மரங்களில் மிக அதிகமாக வளரும். வெளிச்சம் குறைவான காட்டில் வளரும் மரங்களை காட்டிலும் , அதிக வெளிச்சம் கொண்ட தனித்தனியான மரங்களில் இவை நன்கு செழித்து வளரும்

பிசிபிசுப்பான ஒட்டும் தன்மை கொண்ட இதன் கனிகள்  பறவைகளின் இறகுகளில் ஒட்டிக்கொண்டு பல இடங்களுக்கு பரவும் சுவையான கனிச் சதையை உண்ணும் விலங்குகளும் இவற்றை பரப்பும். மரங்களின் மீது விழும் விதைகள் அம்மரத்தின் ஒட்டுண்ணியாக வளர தொடங்கும். மரங்களின் மீது விழும் மிஸல்டோ விதைகள் 6 வாரங்களில் முளைக்கின்றன. மிஸல்டோ கனிகளில்  phoratoxin என்னும் நஞ்சு இருக்கிறது. 

 பல்லாண்டு தாவரங்களான இவை தான் வளர்ந்திருக்கும் மரங்களை கொல்லுவதில்லை மாறாக உணவுக்கும் நீருக்கும் மட்டுமே அவற்றை சார்ந்திருக்கின்றன. பொதுவாக மிஸல்டோக்களின் வளர்ச்சி அவை சார்ந்திருக்கும் பெருமரங்களை பாதிப்பதில்லை. எனினும் ஒரே மரத்தில் பல மிஸல்டோ தொகுதிகள் வளருகையில் மரத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகிறது

இவற்றை கட்டுப்படுத்த செய்யப்படும் அனைத்து முயற்சிகளும் மிஸல்டோ சார்ந்திருக்கும் மரங்களின் வளர்ச்சியையும் சேதப்படுத்துமென்பதால் கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இல்லை

 இவற்றின் வேறுபாடுகளும் வகைகளும்

  • Viscum album subsp. abietis வெண்ணிற கனி, இலைகள் 8 செமீ.மத்திய ஐரோப்பாவில் காணப்படும். Viscumin என்னும் கடும் நஞ்சு கொண்டது. கனிகள் உயிராபத்து உண்டாக்கும்
  • Viscum album subsp. album. ஐரோப்பா, தென்மேற்கு ஆசியாவிலிருந்து நேபாளம் வரை காணப்படுவது. கனி வெண்ணிறம்,இலைகள் 3-5 செ மீ. ஆப்பிள் போப்புலஸ் மற்றும் டீலியா மரங்களில் வளரும்.
  • Viscum album subsp. austriacum -கனி மஞ்சள் நிறம், இலைகள் 2-4 செமீ மத்திய ஐரோப்பாவில் காணப்படுபவை பைனஸ் லாரிக்ஸ் மற்றும் பிசியா மரங்களில் வளரும்.
  • Viscum album subsp. meridianum தென்கிழக்காசியாவில் காணப்படும்.கனி மஞ்சள் நிறம், இலைகள் 3-5 செ மீ மேப்பிள், ப்ரூனஸ் மற்றும் சோர்பஸ் மரங்களில் வளரும்.
  • Viscum album subsp. creticum  சமீபத்தில் கிழக்கு கிரீட்டில்(Crete) கண்டறியப்பட்டது. கனி வெண்ணிறம், இலைகள் மிகமிக சிறியவை பைனஸ்  மரங்களில் வளரும்
  • Viscum album subsp. coloratum  – சீன மிஸல்டோ, சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
  • American mistletoe (Phoradendron leucarpum)  வடஅமெரிக்காவில் காணப்படுவது.
  • European mistletoe (Viscum album) ஐரோப்பா மற்றும் ஆசியாவில் காணப்படுவது.
  • P. tomentosum ssp. macrophyllum-Big leaf mistletoe, தென்மேற்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவிலிருந்து டெக்ஸாஸ் வரை காணப்படுவது. 
  • Arceuthobium spp-Dwarf mistletoe வட அமெரிக்காவிற்கு அறிமுகமான அயல் தாவரம் . குட்டையானது
  • Viscum articulatum- இந்தியாவில் ஜகரண்டா மரங்களில் காணப்படுகின்றன-இலைகளற்றவை. சதைப்பற்றான தட்டையான பசுந்தண்டுகளை  கொண்டவை.  சமஸ்கிருதத்தில் இவை காமினி எனப்படுகின்றன.
  • Viscum triflorum-கிழக்கு ஆப்பிரிக்க மிஸல்டோ, சிறிய வட்ட இலைகளை கொண்டது. 
  • Viscum minimum- மிகச்சிறிய தாவரம், சதைப்பற்றான தாவரங்களின் தண்டுகளில் வளருபவை
  • Loranthus longiflorus (Honeysuckle Mistletoe) – இந்திய மிஸல்டோ-வேம்பு , வாகை, புங்கை போன்ற மரங்களில் வளரும்.
  • Loranthus acacia, Agelanthus sansibarensis-ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் காணப்படும்  இவையிரண்டும்  அலையாத்தி மரங்களின் மீது வளர்பவை
  • Helicanthes elastica- the mango tree Mistletoe- இந்திய மாமர மிஸல்டோ-தடித்த பளபளப்பான காம்பற்ற இலைகளை கொண்டது 

மிஸல்டோவின் சூழல் முக்கியத்துவம்

மிஸல்டோக்கள் வெறும் காதலின் சின்னங்கள் மட்டுமல்ல, காடுகளில் சூழல்முக்கியத்துவம் கொண்ட மிக முக்கியமான தாவரமாகவும் இருந்து வருகிறது. ஒட்டுண்ணி என்னும் பெயர் இருப்பினும் மிஸல்டோ உணவு உறைவிடம் ஆகியவற்றை பிற உயிரினங்களுக்கும் அளிக்கும் தாவரமாகவே இருக்கிறது. விலங்குகள் பறவைகள் மட்டுமல்லாது வண்ணத்து பூச்சிகளுக்கும் இவை உணவளிக்கின்றன. மேலும் தான் பெற்ற சத்துக்களை  மரங்களிலிருந்து விழுந்த பின்னர் நிலத்துக்கே மீண்டும் அளிக்கிறது

பாலைமரங்களிலும் இவை வளர்ந்து அங்கிருக்கும் உயிரினங்களுக்கு வேறெதுவும் கிடைக்காதபோது உணவளிக்கின்றன. மிஸல்டோ குளிர்காலத்தில் தேனீக்களுக்கு மகரந்தங்களையும் மலரமுதினையும் அளிக்கிறது.   

செழிப்பான வனப்பாதுகாப்பு சூழலுக்கு இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பங்காற்றி வருகின்றன.

மான்களின் விருப்ப உணவாக மிஸல்டோ இருப்பதால் அமெரிக்க பழங்குடியினர் மிஸல்டொவை இரையாக  வைத்து மான்களை பிடிப்பது உண்டு

மருத்துவ பயன்கள்

 பண்டைய கிரேக்கர்கள் மிஸல்டோவை மாதவிலக்கு வலியிலிருந்து கல்லீரல் கோளாறுகள் வரை சிகிச்சையளிக்க பயன்படுத்தினர். இது சாவா மூவா மருந்து என்னும் நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது

மனித இன அறிவியலான Anthroposophy’யை தோற்றுவித்தவரான ருடால்ப் ஸ்டெய்னர் மிஸல்டோவை புற்றுநோய்கெதிரான சிகிச்சையில் பயன்படுத்தலாமென்பதை தெரிவித்தார். மிஸல்டோவிவிலிருந்து அமெரிக்க மருத்துவர்கள் பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கின்றனர். மிஸல்டோவின் சாறு கீமோ சிகிச்சையைக் காட்டிலும் மிககுறைந்த பக்கவிளைவுகளை அளிக்கிறது

மிஸல்டோ இலைகளையும், இளம் தண்டுகளையும் அரைத்து சாறெடுத்து பல சிகிச்சைகளில் ஐரோபியர்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக சுவாச கோளாறுகளுக்கு,

பிற பயன்கள்

மிஸல்டோ கனிச்சாறை கொண்டு உருவாக்கப்படும் பசையை மரக்கிளைகளில் தடவி பறவைகளையும் அணில் போன்ற சிறு விலங்குகளையும் பிடிக்க வேட்டைக்காரர்கள்  பயன்படுத்துகின்றனர்.

மிஸல்டோவின் இலைகள் பாலுணர்வை தூண்டும் இயல்பை கொண்டிருக்கிண்றன.(aphrodisiac). ஆஸ்திரியாவில் புதுமண தம்பதிகளின் மண இரவில்  கட்டிலில்  மிஸல்டோவை வைக்கும் வழக்கம்  தொன்று தொட்டு இருக்கிறது. ஜப்பானிய தொல்குடிகளான ஐனுக்கள் (Ainu) வயல்களில் நடவுக்கு முன்னர் நறுக்கிய மிஸல்டோவை வைத்து வணங்கி நல்ல மகசூல் கிடைக்க வழிபாடு நடத்துகின்றனர்

இஸ்டிரியாவில் (Istria)பிஸ்கா (Biska) என்னும்  மிஸல்டோ  சாறு கலந்த பிராந்தி தயாரிக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் ஹெர்ஃபெட்ஷியா நகரின் மலராக மிஸல்டோ மலர் 2002ல் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பெயினில் குளிர்கால கொண்டாட்டங்களின் போது மிஸல்டோவை அம்பு செலுத்தி மரங்களினின்றும் விடுவித்து அவற்றை நிலத்தில் விழாமல் வலது கையில் பிடிப்பது ஒரு சடங்காக செய்யப்படுகிறது

கிறிஸ்துமஸ் காலங்களில் இவற்றை சேகரித்து சந்தைப்படுத்தும் தொழிலில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சில குடும்பங்கள் மட்டும் பல தலைமுறைகளாக  ஈடுபட்டுவருகின்றனர்.

மிஸல்டோ நறுமணம் கொண்ட மிட்டாய்களும் இனிப்புக்களும்  கிறிஸ்துமஸ் சமயங்களில் கிடைக்குமென்றாலும் மிஸல்டோவில் எந்த நறுமணமும் இல்லை.

தாவரகுருடு

தாவரகுருடு என்று சொல்லப்படும்  தாவரங்களை சரியாக அடையாளம் காணமுடியத சிக்கல் இந்த மிஸல்டோ விஷயத்திலும் இருக்கிறது

பலர் அசல் மிஸல்டோவை அடையாளம் காணமுடியாமல் சிவந்த கனிகளை கொண்டிருக்கும் ஹோலி எனப்படும் (Ilex aquifolium) மற்றொரு தாவரத்தையும் மிஸல்டொவாக பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகள் முட்கள்,போல குத்தும் மடிப்புக்கள் உடையது.இவற்றின் கனிகள் ரத்த சிவப்பில் இருக்கும். இவை ஒட்டுண்ணிகள் அல்ல, மிஸல்டோக்களும் அல்ல. நிலத்தில் வேரூன்றி வளரும் தாவரங்கள். பண்பாட்டுடன் இணைந்துள்ள தாவரங்களை இனங்கண்டு அவற்றை முறையாக பயன்படுத்துவது  மிக அவசியமானது. 

 கிறிஸ்துமஸ் தாவரவியல் மற்றும் விழாக்கால சூழியல் என்று தனி கிளை துறைகள் இருக்கின்றன. தாவரங்களின் விழாக்கால பயன்பாடுகளையும் அவை சார்ந்த தொன்மங்களையும் இத்துறை கற்பிக்கிறது(.Christmas Botany & Festive Ecology) 

தாவரங்களின் கலாச்சார முக்கியத்துவம்

மனித வாழ்வாதாரம் தாவர உலகத்துடன் உணவு, உடை இருப்பிடம் மருந்து, கேளிக்கை என பல தேவைகளின் பொருட்டு மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. பல கலாச்சாரங்களில், குறிப்பிட்ட சில தாவர இனங்கள் அதற்கு அப்பாலும் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன என்பதற்கு மிஸல்டோவும், கிறிஸ்துமஸ் மரங்களும் சிறந்த உதாரணங்கள்

சார்ந்திருக்கும் சமூக வாழ்விற்கான குறியீடாக, பிறருக்கு பலனளிக்கும் ஒர் உயிரினமாக, அசாதாரண சூழலிலும் தானும் வழ்ந்து பிறரையும் வாழவைக்கும் ஒன்றாக பல வகைகளில் இந்த மிஸல்டோவை நாம் பொருள் கொள்ளலாம்

அக்காலத்தில் மிஸல்டோவினடியில்  முத்தமிடப்படுவது திருமணத்திற்கான உத்தரவாதம் என கருதப்பட்டது. பாலியல் சுதந்திரம் கட்டற்று இருக்கும் இக்காலத்தில் மிஸல்டோ முத்தம் அன்பை பரிமாறிக் கொள்ளும் பொருளை மட்டும் தான் கொண்டிருக்க முடியும். எனவேதான் மிஸல்டோவை கடக்கும், அதனடியில் நிற்கும் யாரும் யாராலும் முத்தமிடப்படுகிறார்கள் 

எத்தனை கனிகளோ அத்தனை முத்தங்கள், என்பதையும் நாம் வாழ்வில் சக மனிதர்களிடம் எத்தனை முறை அன்பை செலுத்துகிறோம் என்பதன் கணக்கீடாகவும் எடுத்துக்கொள்ளலாம்

நார்ஸ், கிரேக்க ரோமானிய தொன்மங்களில் இடம் பெற்றிருக்கும் இந்த மிஸல்டோ குறுங்கிளைகளினடியில் முத்தமிடும், முத்தமிடப்படும் வாய்ப்பு  கிடைக்கையில் தவிர்க்க வேண்டாம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது பரிசுப் பொருட்களும் அன்பும் அவற்றுடன் முத்தங்களும் பரிமாறப்படட்டும்

இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு நகரமே தயாராகிக் கொண்டிருக்கிறது. மாலை வேளைகளில் சிறுவர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு முன் வந்து சிறிது நேரம் நின்றுபாடல்கலை பாடிச்செல்கிறார் .

நேற்றிரவின்  பாடல் 

“ஒரு வான்கோழி மற்றும் சில மிஸல்டோக்கள் இந்த கொண்டாட்ட காலத்தை பிரகாசமாக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.” என்றது.

****

உதவிய ஆதாரங்களும் கட்டுரைகளும்:

  1. மிஸல்டோவை குறித்தும் அதன் பழங்குடி உபயோகம், வரலாறு குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவும் மிஸல்டோ இணையதளம்:https://mistletoe.org.uk/mp/.
  2. https://wonderopolis.org/wonder/why-do-people-kiss-under-mistletoe/
  3. https://wonderopolis.org/wonder/why-do-people-kiss-under-mistletoe/
  4. https://insider.si.edu/2011/12/mistletoe-facts-from-a-smithsonian-botanist/
  5. காணொளி- https://youtu.be/QtJqBiF6EF0

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.