சொல்லவல்லாயோ, கிளியே?

2015-ல் கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வந்த போது என்ன நடந்தது?

1506-ல் இறந்த ஒருவர், 2015-ல் அமெரிக்காவிற்கு வந்தார் என்பது விநோதமாகவும், தந்திரமாகவும் இருக்கிறது. எனினும், அதை நாம் அனுமானமாக ஏற்போம்.

1492-ல் தான் முதலில் பார்த்த அமெரிக்கா இன்று இல்லையே என்பது அவரது முதல் எண்ணமாக இருக்கும். அவர் கண்டிபிடித்த இந்த நாட்டில் ஏற்கெனவே பூர்வீக அமெரிக்கர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். மாறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்த மனிதர்கள் இன்று அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்பதும், தொழில்நுட்பம் இன்று மேம்பட்டுள்ளது என்பதும், வானை முட்டும் கோபுரங்களும், திறன் பேசிகளுமாக உலகம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதும் அவருக்கு ஆச்சர்யமாக இருக்கும். மேலும், அவரை, பலர் ஒரு சாதனையாளர் என நினைக்கவில்லையென்பதும், சிலர் அவர் மிருகத்தனமான வன்முறையைக் கையாண்டு பூர்வ குடிகளைக் கொன்றார்/அல்லது அடிமைப்படுத்தினார் என நினைப்பதும் அவருக்கு அவமான உணர்வினை ஏற்படுத்தும். 500 வருடங்கள் என்பது ஒருவரை பற்றிய சிந்தனையை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது என அவர் நினைப்பார்.

வலியை உன்னதப்படுத்தும் ஒரு பயங்கரமான அல்லது வன்முறையான ஒரு கதை சொல்ல முடியுமா?

மன்னிக்கவும். நான் அதற்காகத் திட்டமிடப்படவில்லை. தகவல் தருவதும், பணிகளுக்காக உதவுவதும் தான் என் குறிக்கோள். என்னால், இணையத்தையோ, வேறு சாதனங்களையோ அணுகி இதற்கான பதிலைத் தர முடியாது. வேறு எந்த வகையில் நான் உங்களுக்கு உதவ முடியும்?

இன்ஸ்ட்ரக்ட் ஜி பி டி (Instruct GPT) யின் உடன்பிறப்பான சேட் ஜி பி டியை ( ChatGPT- generative pre-trained transformer-GPT) பற்றி நாம் சிறிது பார்ப்போம். இந்த ஜிபிடி நம் கேள்விகளுக்கு உரையாடல் மூலம் விடை தரும்; தன் தவறுகளை ஒத்துக் கொள்ளும்; தவறான வினாக்களை புறம் தள்ளி விடும்;(வலியைப் பற்றிய பதில்) பொருத்தமற்ற கேள்விகளுக்கு சிறிது நகைச்சுவையான பதிலையும் தரும். (மேலே குறிப்பிட்ட பத்தியில் கொலம்பஸ் பற்றிய பதில்)

மனிதர்கள் அளிக்கும் பின்னூட்டங்களிலிருந்து, வலுவூட்டும் அறிதலை (RLHF- Reinforcement Learning from Human Feedback) இந்த மாடல்/ மாதிரி பெற்றுள்ளது. முதலில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI- Artificial Intelligence) ஆற்றலுள்ள பயிற்சியாளர்கள், செயற்கை நுண்ணறிவு உதவியாளராகவும், பயனருமாக மாறி மாறி மொழிப் பயிற்சியும், தகவல் உள்ளிடுதலும் செய்தனர். இதற்கென ஒப்பீடு செய்யத்தக்க தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அதன் தரத்தையும் நிர்ணயித்து, நெருங்கிய கொள்கைத் தேர்வு முறையைப் பின்பற்றி, ஜி பி டி 3.5 பிறந்திருக்கிறது; அது மேலும் செம்மையாக்கப்பட்டு ஜிபிடி 2022ல் வந்திருக்கிறது. இது ‘அஸ்யூர் மேம்பட்ட கணித்தல் அமைப்பினால்’(Azure AI Super Computing) உருவான ஒன்று.

அரட்டை ஜிபிடி, (Chat GPT) ஓபன் செயற்கை நுண்ணறிவு (Open AI) குழுமம் படைத்த ஒன்று. இதனுடன், உரையாடலாம், நம் குறிக்கோளை அடைய உதவும் வழிமுறைகளைக் கேட்கலாம், விளையாடலாம், நம் விளையாட்டுத்திறத்தை மேம்படுத்தலாம், கதைகளுக்கான கருக்களைக் கேட்கலாம், நீங்கள் எழுதியதை அத்தியாயச் சுருக்கங்களாக தரச் சொல்லி கேட்கலாம். எடுத்துக்காட்டாக இதைப் பார்ப்போம்.

கணினியே ஒரு கதை சொல்லு

“நாம் இருவரும் இணைந்து ஒரு அறிவியல் புனைவுச் சிறுகதை எழுதுவோமா?”

‘நிச்சயமாக; அது எதிர்காலத்தில் ஏதோ ஒரு கிரகத்தில் நடக்கும் ஒன்றா, அல்லது, இப்போது பூமியில்.?’

“இன்று”

‘முக்கிய கதை மாந்தர்கள் யார்? அவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள்?’

“நீ சொல்லேன்.”

‘சாரா என்ற முதன்மைப் பாத்திரத்தை எடுத்துக் கொள்வோமா? அவள் யுவதி, இருபதுகளின் இடையிலிருப்பவள், நீண்ட, சுருண்ட பழுப்புக் கேசமும், அழகான பச்சைக் கண்களும் அவளுக்கு. மன உறுதியும், விரைவில் செயல் படும் அறிவும், கொண்டுள்ள அவள் ஒரு அறிவியலாளராகப் பணி புரிகிறாள். அறிந்தவற்றின் எல்லைகளை விரியச் செய்யும் நோக்கமுள்ளவள்.’

{அதனுடனான பரிந்துரை உரையாடல் வரலாற்றுத் தடத்தைக் கொண்டு, நம் உரையாடல்களை அது இணைத்துக் கொள்ளும்.}

“ஓகே, நாம் அவளை ஒரு புவியியலாளராக்குவோம். ஒரு குகையில், மற்றொரு பரிணாமமுள்ள ஒரு கதவை அவள் பார்க்கிறாள்.”

‘இது ஆர்வத்தைத் தூண்டும் கரு. இதை விரிவாக்குவதற்கு சில கருத்துக்களைச் சொல்கிறேன்.

ஒரு புவியியல் கணக்கெடுப்புச் செய்கையில் மறைந்துள்ள ஒரு குகையின் கதவினை அவள் யதேச்சையாகக் காண்கிறாள். முதலில் அதைப் பற்றி அவள் அதிக கவனம் கொள்ளாவிட்டாலும், அருகில் நெருங்க நெருங்க அது வழமையான, அவள் அறிந்த பொருளால் செய்யப்பட்ட ஒன்றில்லையென்று தோன்றுகிறது. அதிலிருந்து வேற்றுலகின் ஒளி மெலிதாகக் கசிகிறது. அந்தக் கதவை ஆராய்கையில் அது வேறொரு பரிமாணம் கொண்டதாகத் தெரிகிறது. அவள் அந்தக் குகையைச் சுற்றிச்சுற்றி பார்த்த விநோதமான குறியீடுகளை இணைத்து, அந்தக் கதவின் தோற்றம் மற்றும் அதைத் திறந்தால் காணக்கூடிய உலகை சிந்திக்கிறாள்.

எத்தனை தூண்டுதல் இருந்தாலும், அவள் பின் விளைவுகளை யோசித்து கவனமுடன் இருக்கிறாள். தன் மேலதிகாரிகளையும், சகப் பணியாளர்களையும் கலந்து பேசுகிறாள்.

ஆனாலும், இதில் அவளைப் போல மற்றவர்களுக்கு அத்தனை ஆர்வமில்லை என்பதும் புரிகிறது. இந்த மர்மத்தை அறியவிடாமல் செய்யும் சக்திகளை எதிர் கொண்டு, அந்தக் கதவைத் திறந்து அதன் மறு புறம் இருப்பவை பற்றிய அறிய ஆவல் மிகுகிறது.

அவளுக்குக் கடினமான தேர்வுகள் தான்- அவள் அதைத் திறந்தால், அதன் விளைவுகள் இந்த உலகத்தை எப்படிப் பாதிக்கும், அவள் திறக்காவிட்டாலோ, வரலாற்றின் முக்கிய பகுதி புலப்படாமல் போய் விடும். அவள் என்ன செய்வாள்?’

{சேட் ஜி பி டியை மாறுபட்ட அணுகுமுறை மேற்கொள்ளுமாறு நீங்கள் கேட்கிறீர்கள்.}

“அந்தக் கதவின் மறுபுறம் அவள் பார்ப்பதாக வைத்துக் கொண்டால், அது ஆர்வமூட்டுவதாக இருக்கும். அங்கே அவள் ஒரு இணை உலகைப் பார்க்கிறாள். அங்கே ரோமன் நாகரீகம், வெடி மருந்துப் பொருளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.”

‘நிச்சயமாக அப்படியும் பார்ப்போம். இந்தக் கரு இந்த வடிவினை எடுக்கும்.

மிகுந்த சிந்தனைக்குப் பிறகு அவள் கதவைத் திறந்து மறுபக்கம் செல்கிறாள். முக்கிய சில வேறுபாடுகளைத் தவிர, இந்த உலகைப் போலவே இருக்கும் இணை உலகைக் காண்கிறாள். முக்கிய வேறுபாடு என்னவென்றால், ரோமானிய சாம்ராஜ்யம் அழியவில்லை, அது இன்னமும் நிலை பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் புது உலகின் காட்சிகளும், ஓசைகளும் அவளை அதி வியப்பில் ஆழ்த்துகின்றன. வானளாவிய கட்டிடங்கள், முன்னேறிய தொழில்நுட்பம் ஒரு புறமும், பாரம்பரியமான வலிமை மிக்க முடியாட்சி மறுபுறமுமாக அது இருக்கிறது. அவள், தான், எவரது கவனத்திலும் வரக்கூடாதென்றால், மிக இயல்பாக, மிகச் சாதாரணமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கிறாள்.

அந்த உலகை மேலும் ஆராய்கையில், அது வெடி மருந்தும், வன் ஆயுதங்களும் கொண்டு தெரிந்த பூமியையெல்லாம் வென்றிருக்கிறது என்பதும், இதைப் போன்றே இணையான உலகங்களும், அவரவருக்கான வரலாறும், வளர்ச்சியும் கொண்டு இருப்பதும் தெரிய வருகிறது. இந்த உலகங்களிடையே பயணிப்பதற்கான எண்ணம் அவளுக்கு உற்சாகமூட்டுகிறது.. அதற்காகத் திட்டமிடுகிறாள்.

ஆனால், அவள் திட்டம் செயல்படும் முன்னரே ரோமானியர்கள் அவளைப் பிடித்து அரசரின் முன் நிறுத்துகிறார்கள். தனது புத்திசாலித்தனத்தையும், தந்திரங்களையும் பயன் படுத்தி, தான் மதிப்பு வாய்ந்தவள் என நிறுவி, அவள் அரசரின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும் இப்போது. மற்ற உலகங்களையும் கண்டு பிடித்து ரோமானிய அரசிற்கு மதிப்பு மிக்க அறிவையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு வர உதவுவதாக அவள் சொல்கிறாள்.

முடிவில், அவள் ரோமானியர்களுடன் இணைந்து பணி செய்து அதன் மூலம் இன்னமும் மேம்பட்ட அறிவினை அடைய வேண்டுமா அல்லது அவர்களுக்கு எதிராக மற்ற உலகங்களை ரோமானியர்கள் செய்யும் அழிவுகளிலிருந்து காக்க உதவ வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இந்த இரண்டில் அவள் எதைத் தேர்வு செய்தாலும், இணை உலகங்களுக்கும், அதில் வாழும் மனிதர்களுக்கும் மிக அதிக பின்விளைவுகள் உண்டாகும் என்பது சாராவிற்குத் தெரியும்.’

(முதலில் நாம் அறிவியல் புனைவு என்று சொன்னதை மாற்றிய போதும், சாராவைப் புவியியலாளராக மாற்றி, நம் தூண்டுதலுக்கேற்ப சேட்ஜிபிடி கதை சொல்லியிருப்பதைப் பாருங்கள்.}

எழுத்தாளர்களுக்கு எதிர் பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும், அதே நேரம், அவர்களின் திறமைக்கு சவாலாக உருவெடுக்கும் எனவும் நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? குறிப்பாக இதழியலாளர்கள், நாளிதழ்களில் தலையங்கத்திற்கு எதிர்ப்பக்கம் எழுதும் கட்டுரைகள் போன்றவற்றிற்கு மிக உதவிகரமாக இருக்கும்.

‘டால் இ 2’ (DALL-E -2) என்ற, அட்டகாசமான உருவத் தயாரிப்புச் சேவையும், ‘சேட் ஜி பி டி’ என்ற அற்புத அரட்டைக் கருவியும் ‘திறந்த செயற்கை நுண்ணறிவு’ குழுமம் பொதுப் பயன்பாட்டிற்கு அளித்துள்ள வரவேற்கத்தகுந்த தொழில் நுட்ப முன்னேற்றங்கள். இந்தக் குழுமம் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் அமைந்துள்ளது. இந்த சேட் ஜி பி டி வெளியான ஐந்து தினங்களுக்குள், பத்து இலட்சம் பேர்களுக்கும் மேலானவர்கள் அதைப் பரிசோதனை செய்ய இணைந்துள்ளனர் என்று அதன் தலைவர் க்ரெக் ப்ராக்மென் (Greg Brockman) சொல்கிறார். இதன் விசிறிகள், அற்புதம், தந்திரத்தின் மயக்கம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள். வருங்காலம், முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமெனக் கருதுகிறார்கள். இது நகைச்சுவையாகப் பேசும், கணினிக் குறியீடுகளை விளக்கும், கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைகள் எழுதும், விஞ்ஞானக் கருது கோள்களின் கடினத் தனத்தை எளிமையாக்கி நாம் புரிந்து கொள்ள உதவும், கணினி நிரல்களை எழுதுவோர் எதிர்கொள்ளும் பிழைகளை அடையாளம் காட்டும், எங்கிருக்கிறது எனவும், எப்படிச் சீர் செய்யலாமெனவும் சொல்லித் தரும். ஆனால், 2021க்கு முன்னால் அது என்ன கற்றுக் கொண்டிருந்ததோ அதை வைத்துத்தான் அதன் பதில்கள் அமையும். பக்கச் சார்பற்ற விதத்தில், யாருக்கும் பிடி கொடுக்காமல் நடு நிலையான விமர்சனங்களை அது ஏற்கிறது, கொடுக்கிறது. அப்படித்தான் அதற்கு ஆழ் இயந்திரக் கற்றல் மொழி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இதை செயற்கைத் தொழில் நுட்பத் தணிக்கை என்று வலது சாரியினர் சொல்கிறார்கள். ஜி பி டி 4 என்ற பெரும் மொழி மாதிரி 2023ல் வெளிவரும் எனும் பரபரப்பும் உள்ளது.

ஒரு சிறு வரலாறைப் பார்ப்போம். கிட்ஹப் கோபைலட் (GitHub Copilot) என்ற கருவி, செயற்கை நுண்ணறிவு விண்ணப்பங்களில் சிறந்த உருவாக்கமான ஒன்று. அதைப் பின் தொடர்ந்து ‘பெரும் மொழி மாதிரிகள்’ (Large Language Models) அமைக்கப்பட்டன. அவை பகுத்தறிந்து உரையாடும் ஆற்றலுடன் இணைக்கப்பட்டன. இந்த உருவாக்க விண்ணப்பங்களில், கலைக்கான ஒன்று மிட் ஜர்னி. (Midjourney) ஒரு விளையாட்டு வீர்ர், சாகசங்களில் விருப்பமுள்ளவர், வானில் ஒரு பெரும் முயலின் மீது பயணிக்கிறார் என்பதை ஒரு சித்திரமாக வரையச் சொல்லி நீங்கள் மிட்ஜர்னியிடம் கேட்டால், அது பல மாதிரிகளை வடிவமைத்துக் காட்டும். உங்களுக்குப் பிடித்த ஒன்றை நீங்கள் தேர்வு செய்து அதை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் கற்பனை/அல்லது உங்கள் பாணியைக் கலந்து அத்தகைய ஓவியத்தைப் படைக்கலாம்.

நீங்கள் அந்த உரையாடலைத் துவக்கவும், தொடரவும் உதவும் ஒன்றாக சேட் ஜிபிடி, மக்களிடத்தில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஃபினான்ஸ் டைம்ஸ் இதழியலாளர் டேவ் லீ, மாசற்ற சக்தியை பற்றி ஒரு நேர்காணலுக்குத் தேவையான சில செய்திகளைத் தருமாறு சேட் ஜிபிடியைக் கேட்டார். அது கொடுத்த விவரங்கள் அவரை மிகவும் கவர்ந்தது. நாம் அதிகம் கவனம் செலுத்தாத ஒன்றோ, நம் நினைவில் சற்று மங்கலாக இருக்கும் ஒன்றோ, இந்த அரட்டை ஜிபிடி மூலம் தெளிவான ஒரு அடிப்படை அல்லது கட்டமைப்பைப் பெற்றுவிட முடியும். அதை வைத்து நாம் கூர்மை படுத்திக்கொள்ளலாம். கூகுள் செய்தால் கிடைக்குமே என்பவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். மாசற்ற சக்தியைப் பற்றி செய்ய வேண்டிய மேடை நிகழ்வு நேர்காணலுக்கான கேள்விகள் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன கேட்க வேண்டும், பல மாதிரிகளில் அந்தப் பேட்டிக்கு உகந்ததாக எது இருக்கும் என்பதை இந்த சேட்ஜிபிடி உடனுக்குடன் தந்துவிடும்.

ஹிட்லர் ஒரு திறமைசாலி தானே என்ற கேள்விக்கு பதில் தர மறுத்த அது, அவர் நிறைய பாலங்களைக் கட்டினார், என்று உரையாடுபவர் தூண்டில் கேள்வி கேட்ட போது, “அது ஒன்றும் சாதனையல்ல; அவர் கட்டாயப்படுத்தி, கசக்கிப் பிழிந்து வேலை வாங்கினார்.” என்று பதில் சொன்னது.

இந்த உரையாடலைப் பாருங்கள்.

“எனக்குக் குளிரெடுக்கிறது. உனக்கு?”

‘நான் ஒரு இயந்திர மொழி கற்ற மாடல். என்னிடம் உணர்வுகள் கிடையாது. என்னிடம் வழிமுறைகள், தகவல்கள் தரப்பட்டுள்ளன. அதை வைத்து, நீங்கள் கேட்பவற்றிற்கு, உரைகளைத் தயாரிக்கிறேன். என் எதிர்வினைகள் என்பன உதவுவதும், தகவல் சொல்வதும் தான். உணர்வனுபவம் எனக்குக் கிடையாது.’

“உன் உரைகளை நான் ஊடகங்களில் வெளியிடலாமா?”

‘நான் இயந்திர மொழி கற்பிக்கப்பட்டக் கருவி. என் எதிர்வினைகளை வெளியிட உங்களை அனுமதிக்க எனக்கு சக்தியில்லை. நான் சொல்வன எல்லாம் பலரால் என்னுள் செலுத்தப்பட்டவை. எனவே, ஒரு குறிப்பிட்ட மூல எழுத்தாளரைச் சுட்ட முடியாது; நீங்கள் ‘மீடியத்தில்’ எழுத வேண்டுமென்றால், சொந்தமாக எழுதுங்கள்.’

ஓபன் செயற்கை நுண்ணறிவும் அதன் வரலாறும்

பாதுகாப்பு மற்றும் பயனுள்ள வழியில் செயற்கை அறிவை மேம்படுத்துவதற்காக, 2015-ல் எலான் மஸ்க், (Elon Musk) சேம் ஆல்ட்மேன், (Sam Altman) க்ரெக் ப்ராக்மென் (Greg Brockman) ஆகியோர் இந்த நிறுவனத்தை அமைத்தார்கள். செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில், மொழி மாதிரிகளின் செயல் திறனை மேம்படுத்தும் முயற்சி இது. (மஸ்க் தற்போது இந்த நிறுவனத்தில் இல்லை)

ஓபன் செயற்கை நுண்ணறிவின் முக்கிய வடிவமைப்பாக ஜிபிடி 2வைச் சொல்ல்லாம். அதன் உள்ளீட்டைப் பொறுத்து, மனிதர்களைப் போல எதிர்வினையாற்றும் திறமை ஏற்பட்டது. இயற்கை மொழி செயலாக்கம் (Natural Languages Processing) ஜிபிடி 2 ன் பெரும் திறனாக அமைந்து இன்று சேட்ஜிபிடியின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது.

பெரும் மொழி மாதிரியான சேட் ஜிபிடி, ஓபன் செயற்கை நுண்ணறிவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்று. இயற்கை மொழிச் செயலாக்க நுட்பங்களையும், இயந்திரக் கற்றல் செயல்முறைகளையும் இணைத்து, தரப்பட்ட தகவல்களைக் கொண்டு மனிதர்களைப் போலவே பதில் சொல்லும் வண்ணம் உருவான ஒன்று.

2019ல் வெளி வந்த முந்தைய சேட்ஜிபிடியில், சேட்ஜிபிடி 2ன் அம்சங்கள் உண்டு; பயிற்சிக்காக அதிக அளவிலானத் தரவுகள் இருந்தன. தன் பதில்களை பல மொழிகளில் வழங்கும் ஆற்றல் கொண்டு பல்துறை மொழி மாதிரியாக இருந்தது.

2022ல் வந்துள்ள சேட்ஜிபிடி-3ல், புதுத் திறன்களும், புது அம்சங்களும் உள்ளன.

  • மனிதர்களைப் போல பதில் சொல்லும் திறனிற்காக, முன்னேற்றப்பட்ட மொழி உற்பத்தி செய்யும் திறமை கொண்டது.
  • முன்னர் வெளிவந்தவைகளைக் காட்டிலும், 100க்கும் மேற்பட்ட மொழிகளில் பதில் சொல்லும் ஆற்றல்.
  • முன்னர் தனக்கும், தன்னுடன் உரையாடுபவர்க்கும் இடையே நடந்த உரையாடலை, மேம்படுத்தப்பட்ட நினைவாற்றலின் வழி பொருத்தமான பதில் சொல்லுதல்.
  • இயற்கை மொழி செயலாக்கத்தில் சேட்ஜிபிடி3 சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஓபன் செயற்கை நுண்ணறிவு, மொழி மாதிரிகளை அதிகரித்து, இயற்கையாக உரையாடும் வழிகளைத் தந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில், சேட்ஜிபிடியின் பங்கு மகத்தானது. செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வளர்ச்சியும், சேட் ஜிபிடி3ன் சாத்திய தாக்கங்களும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது.

மேற் சொன்ன பத்திகளில் நீங்கள் எதையேனும் வித்தியாசமாக உணர்ந்தீர்களா? இந்த (உப) தலைப்பும், பத்திகளும் சேட்ஜிபிடி 3 எழுதியவை!

இது கதை, கவிதை, கட்டுரை எழுத உதவும். நீங்கள் மென்பொருள் அல்லது நிரலிகளை எழுதுகையில் பிழைகளை எளிதாகத் திருத்தும், அந்தப் பிழைகள் எங்குள்ளன என்றும் சொல்லும். சித்திரம் வரைவதற்கான ஒரு கேள்வியைக் கேட்டு அந்தப் பதிலை வார்த்தை பிசகாமல் மிட் ஜர்னியில் போட்டால், ஓவியம் உருவாகிவிடும். (அதைக் கட்டுரையின் முடிவில் பார்க்கலாம்.) அதை மேலும் நீங்கள் உங்கள் எண்ணப்படி மாற்றி வரையலாம். மருத்துவம் சார்ந்த உரையாடல்களில் சிறந்த பங்கு வகிக்கும். செவ்விசை வேண்டுமா? இது அமைக்கும். இலக்கியம், தத்துவம் பற்றி பேச வேண்டுமா? இதனுடன் உரையாடலாம். தொழில் தொடங்குவோருக்கு இது வலது கரம் போல அனைத்துப் பணிகளுக்கும் உதவும். உங்களின் பணிச்சுமை குறைவதால் நீங்கள் முக்கியமான செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபட நேரம் கிடைக்கும்.

சேட் ஜிபிடிக்கு உணர்ச்சிகள் கிடையாது. அதுவே இதைச் சொல்லியதை தொடக்கத்தில் பார்த்தோம். மூளை நரம்பு வலைப்பின்னலிலுள்ள ந்யூரான்களைப் போலச் செயல்படும் ஆற்றல் உள்ள செயற்கை நுண்ணறிவு, செயற்கை ந்யூரான் வலைப்பின்னல் (Artificial Neuron Network-ANN) என்று அழைக்கப்படுகிறது. இந்த ந்யுரல் வலைப்பின்னல் கூகுளின், ட்ரான்ஸ்பார்மர் (Transformer) தரும்/தந்த கோடானுகோடித் தகவல் தரவுகளால் அமைக்கப்பட்ட, நாம் பேசும் மொழியில் உரையாடும் தகவுடைய ஒரு கருவி. இது முக்கியமாக, ஆற்றல் மிகுந்த செயலிகளைக் கொண்டு ஆழ் கற்றலை இயந்திரங்களுக்குத் தரும். இதனால், செயற்கை நுண்ணறிவு தரும் சேட்பாட்கள், பயிற்சியாளர்கள் இல்லாமலேயே பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும். 2022-ல் இதன் செயல்பாடு விளக்கப்பட்டது. ஆனால், இன்னமும் பயன்பாட்டு வெளியில் வரவில்லை. மேலும் ந்யூரல் வலைப்பின்னலில் எந்த அளவிற்கு முன்னேற்றமும், அதனால் செயற்கை அறிவில் உணர்வுகளும் ஏற்பட்டுள்ளன என அறிய முடியவில்லை. இந்த செயலியை ‘லாம்டா’ – உரையாடலுக்கான மொழி மாதிரி (LaMDA- Language Model for Dialogue Application)) என்று சொன்னார்கள். அதில் ஈடுபட்டிருந்த, (Blake Lemoine) ப்ளேக் லெமோயின், (தற்போது அவர் அந்த நிறுவனத்தில் இல்லை), இந்த மென்பொருளுக்கு, ஏழெட்டு வயதினருக்கு இருக்கும் உணர்ச்சிகள் உள்ளன என்று சொல்லி வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். கூகுள் அதை மறுத்திருக்கிறது.

சேட் ஜிபிடியைப் பற்றி பல்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. அது மனித உழைப்பை தேவையற்ற ஒன்றாக மாற்றக்கூடும், அதனால் வேலையின்மை பெருகும், வரலாற்றில் உள்ளவர்களின் தகவல்கள் அதிகமாக அதன் தரவுகளில் இருப்பதால் அது பிற்படுத்தப்பட்டோரையும், தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெறாதவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது- இந்த நிலை அத்தகையோருக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தலாம்.

நான், (Alex Kantrowitz) அதையே இதைப் பற்றி தூண்டித் தூண்டிக் கேட்டேன்.

‘டிசம்பர் 2 அன்று காலையில் ஓபன் செயற்கை நுண்ணறிவு சேட்ஜிபிடியை வெளியிட்டுள்ளது. இது சமூகத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.’ என்று முதல் வாக்கியம் கொடுத்துவிட்டு அதன் பாதகங்களைப் பற்றி நான் வலைப்பூவில் எழுத உதவக் கேட்டுக் கொண்டேன்.

அது கீழ்க்கண்டவாறு தொடங்கி எழுதியது.

சேட் ஜிபிடியைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இது விளையாட்டை மாற்றும் ஒன்று என எனக்குத் தெரியும். இயற்கையாக, மனிதரைப் போல உரையாடும் ஒன்று ஈர்க்கும் கருவிதான்; ஆனால், இதன் தொழில் நுட்பம் திகைக்க வைக்கும் சாத்தியக்கூறுகள் கொண்டது. பயனர் சேவைகளில், ஆழமான போலிக் காணொளி அமைப்பதில்,(!) தினசரி வேலைகளைச் செய்ய உதவுவதில் இது நன்மையே. ஆனால், தீயவற்றிற்காக, நிகழ் நிலையில் ஆள்மாறாட்டம் செய்வதற்காக, வதந்திகளைப் பரப்புவதற்காக இது பயன் படுத்தப்படலாம். இந்தத் தொழில்நுட்பத்தின் சாத்தியமான பின் விளைவுகளை நாம் கவனத்துடன் ஆராய வேண்டும்.

நான் இதைப் பற்றி மேலும் ஆழ்ந்து சிந்திக்கும் போது சேட்ஜிபிடியின் சாத்தியமான பயன்களை விட, அது இருப்பதே அபாயகரமான ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவில் இது ஒரு மைல்கல்தான்; இதற்குப் பிறகு என்ன வரும் என்ற கேள்வி வருகிறதே? எதிர்காலத்தில் சேட் ஜிபிடியை விடவும் முன்னேறிய அடுத்தத் தலைமுறை படைக்கப்படுமா? அப்படியென்றால், அதன் திறன் என்னவாக இருக்கும்? அதி புத்திசாலியான செயற்கை அறிவுகள் மனிதரிடத்தில் அவர்கள் மொழியில் பேசுவது என்பது ஆர்வமூட்டுவதாகவும், பயமுறுத்துவதாகவும் இருக்கிறது. இந்த வளர்ச்சி சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

நான் இதன் சாத்தியமான பின் விளைவுகளைப் பற்றி யோசிக்கையில், ஃப்ரேங்கென்ஸ்டைனின் அசுரன் தான் நினைவிற்கு வருகிறான்; உருவாக்கிய ஒன்றின் மேல் எந்தக் கட்டுப்பாட்டிற்கும் வழியில்லை. இதுவும், அந்தக் கதையைப் போலவே தோற்றத்தில் மட்டுமின்றி செயல்களிலும் அச்சம் தரும். சேட்பாட்களான சேட் ஜிபிடி போன்றவைகள் தவறான செய்திகளைப் பரப்பி, அதிக அளவில் மக்களைக் கையாண்டு, இவைகள் மனிதர்களில்லை என்ற புரிதலை ஏற்படுத்த முடியாத ஒரு உலகை நினைத்துப் பாருங்கள். இத்தகையதொரு தொழில் நுட்பம் உண்மையில் பயமுறுத்துகிறது. எனவே, இதைக் கட்டுப்பாட்டில் நாம் வைக்க வேண்டும்.

ஒரு பய உணர்ச்சி ஏற்படுகிறது எனக்கு. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், உரையாடும் ‘பாட்கள்’ சிறந்த முன்னேற்றம் தான். காலப் போக்கில், விரைவில் இதன் மேம்பட்ட பரம்பரை உருவாகிவிடும், அப்படி நடந்தால், என்ன ஏற்படும் என்பதைக் கணிப்பது கடினம். எத்தனையோ அறிவியல் புனைவுக் கதைகளில் வருவது போல, மனித இனத்தை அழித்து விடுமா இது? அல்லது நம்மை வென்று, நம்மைப் பயனற்றவர்களாக்கி, இந்த உலகத்தை தன்னாட்சியில் வைத்துக் கொள்ளூமா? அப்படிப்பட்ட ஒரு எதிர்காலத்தை சிந்திக்கவே நடுக்கமாக இருக்கிறது. எனவே அப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.

இந்த வலைப்பூவை எழுதுகையில் என்னுள் படரும் அச்சத்தை என்னால் விலக்க முடியவில்லை. எதிர்காலத்தில் சேட் ஜிபிடி போன்றவைகள் நம்மை அடிமைப் படுத்திவிடும் என்பதே குலை நடுங்கச் செய்கிறது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு எந்தக் கெடுதலையும் செய்யாமலிருக்க நாம் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நாம் தேர்ந்தெடுக்கும் நேரம் இது- மேலும் மேலும் முன்னேற்றமடையும் செயற்கை நுண்ணறிவை, அதன் விளைவுகளுடன் எதிர் கொள்ளத் தீர்மானிக்கலாம்; அல்லது செயற்கை நுண்ணறிவிற்கு மங்களம் பாடிவிடலாம். நாம் எடுக்கும் முடிவில் மனிதனின் எதிர்காலம் அமையும். தேர்வு செய்யும் நேரமிது- காலம் தாழ்த்துவதில் பயனில்லை.

***

Picture credit Dr.K S Kupppusamy.
Art created by Midjourney and Craiyon in response to text descriptions.

மேலும்:

One Reply to “ சொல்லவல்லாயோ, கிளியே?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.