மன்னார்குடி சாவித்ரி அம்மாள்

சங்கீத வித்வான் டி.ஆர்.சுப்ரமண்யம் ஒரு தனிப்பேச்சில், “ஒரு வித்வான் உழைத்து, இசையைக் கற்று, கச்சேரிகள் செய்து, ரசிகர்களிடையே பிரபலமாகி, புகழின் உச்சியை எட்டினாலும் அவர் காலத்துக்குப் பின் அவர் பெயர் புழக்கத்தில் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. வாழ்ந்த காலத்தில் எவ்வளவோ பிராபல்யத்துடன் இருந்த கலைஞர்கள் காலவெள்ளத்தில் பெயர் கூடத் தெரியாமல் அடித்துக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், அப்படிப்பட்ட கலைஞரைப் பற்றி எங்கோ ஓரு மூலையில் சிறிய குறிப்பொன்று பிரசுரமாகிவிட்டால் கூட அவருக்கு வரலாற்றில் நிரந்தர இடம் கிடைத்துவிடும். அவர் காலத்துக்குப் பின் அவர் பெயர் மறந்துவிட்ட நிலையில்கூட அவரைப் பற்றிய வெளியான குறிப்பை யாரோ வெளிக் கொணர்ந்து அவர் பெயருக்கு வெளிச்சம் போட்டுக் கொண்டே இருப்பர்.”, என்றார்.

பழைய பத்திரிகை களஞ்சியங்களை ஆராயும் ஒவ்வொரு முறையும் அவர் சொன்னதை நினைத்துக் கொள்கிறேன். அப்படியொரு தேடலில் நான் கண்டுகொண்ட ஒரு முன்னோடி பெண்மணிதான் மன்னார்குடி சாவித்ரி அம்மாள்.

1947-ல் வந்த கல்கி பத்திரிக்கைக் குறிப்பு, “கோட்டு வாத்யத்தைத் திறம்படக் கையாளுபவர்களுல் மன்னார்குடி கே.சாவித்ரி அம்மாளுக்கு ஒரு முக்யஸ்தானமுண்டு. 20-ம் தேதி திருச்சியில் நடந்த அவரது கச்சேரியில் ராகம் உருப்படிகளை நிதானமாயும் அழுத்தமாகவும் கையாண்டார்”, என்கிறது.

திருவிடைமருதூர் சகாராம் ராவ் தொடங்கி, நாராயண ஐயங்கார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், நாராயண ஐயர், துரையப்ப பாகவதர் போன்ற கலைஞர்கள் கோட்டுவாத்யத்தில் முக்கிய முன்னோடிகளாக இருந்ததைப் பற்றி பல குறிப்புகளை நான் கண்டதுண்டு. அப்ரகாம் பண்டிதரின் ஒரு குறிப்பு பாடகர், வாக்கேயகாரர், ஹரிகதை நிபுணர் என்று பன்முகத்தன்மையுடன் விளங்கிய ஹரிகேசநல்லூர் முத்தைய்யா பாகவதர் சிறந்த கோட்டுவாத்ய கலைஞரும் கூட என்கிற அரிய தகவலைத் தருகிறது. இவர்களுக்கு இடையில் ஒரு பெண்மணியும் இந்த வாத்யத்தைக் கையாண்ட முக்கிய கலைஞராக இருந்தார் என்ற செய்தி எனக்குப் புதிதாக இருந்தது.

மற்ற பத்திரிகைக் களஞ்சியங்கள், இணைய தேடல்கள், மூத்த ரசிகர்களுடன் உரையாடல்கள் மூலம் கடந்த ஒரு வருட காலமாக சாவித்ரி அம்மாளைப் பற்றி தகவல்கள் சேகரிக்க முயன்றேன். அந்த மேம்போக்கான தேடலில் அதிகம் ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பினேன். சில வாரங்களில் தற்செயலாக மிருதங்க வித்வான் கே.எஸ்.காளிதாஸ், அவருடைய யூடியூப் சானலில் சாவித்ரி அம்மாளின் பதிவு ஒன்றை வலையேற்றினார். அந்தப் பதிவைக் கேட்ட போது கல்கி குறிப்பில் உள்ள ‘நிதானம்’, ‘அழுத்தம்’ என்ற வார்த்தைகளின் பொருத்தத்தை உணர முடிந்தது. அதிலும் அவர் வாசித்துள்ள நாட்டைகுறிச்சி ராகத்தில் ஒவ்வொரு பிடியையும் அளவாய், அழுத்தமாய், நிர்ணயமாய், நளினமாய், இழைத்து இழைத்து வாசித்த அந்தப் பெண்மணியைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பது என்னுள் பெரும் அலைக்கழிப்பை ஏற்படுத்தியது. என் தேடலை மீண்டும் தொடங்கினேன்.

சில வாரங்களில் கும்பகோணத்தில் உள்ள சாவித்ரி அம்மாளின் மகன் காந்தியையும், அவர் மூலமாக சாவித்ரி அம்மாளிடம் சிட்சை பெற்று இன்று கோட்டுவாத்ய கலைஞராக விளங்கும் உஷாவையும் கண்டடைந்தேன். இவ்விருவரும் கொடுத்த தகவல்களை வைத்து சாவித்ரி அம்மாளின் இசை வாழ்வைப் பற்றிய சிறு சித்திரம்தான் என்றாலும் அதையாவது அந்த முன்னோடிக் கலைஞரின் நூற்றாண்டு நடக்கும் இந்த வேளையில் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.

நூறு வருடத்திற்கு முந்தைய இசைச் சூழலில் மேடையேறி கச்சேரி செய்த பெண்களுள் பெரும்பாலானவர்கள் மரபு வழி இசைக் கலைஞர்களாகவே இருந்தனர். இவர்களுள் வாய்ப்பாட்டு, பிடில், குழலிசை கலைஞர்களாக பலர் இருந்திருக்கின்றனர். இசை வேளாளர் குடும்பத்தில் 29-06-1922 அன்று பிறந்த சாவித்ரி அம்மாள், ஏழு வயதில் ஸ்ரீரங்கம் ஐயங்காரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ளத் தொடங்கி பின்னர் கம்பங்குடி நாராயண ராவிடம் கோட்டுவாத்யம் கற்றுக் கொண்டார். கொன்னக்கோலில் பெரும் விற்பன்னராக இருந்த வைத்தியலிங்கம் பிள்ளையிடம் லய நுணுக்கங்களில் சிறப்புப் பயிற்சியும் பெற்றதாகவும் தெரிகிறது.

பதிமூன்று வயதில் தன் முதல் கச்சேரியை செய்த சாவித்ரி அம்மாளின் வாசிப்பை மிக விரைவிலேயே முக்கிய சபைகள் கண்டுகொண்டன. கச்சேரிகளுக்கு செல்ல வசதியாக இருக்கும் என்று மன்னார்குடியிலிருந்து கும்பகோணத்துக்கு குடிபெயர்ந்தார் என்கிறார் சாவித்ரி அம்மாளின் மகன் காந்தி. சென்னை சங்கீத வித்வத் சபையின் கச்சேரி அட்டவணைகளை எடுத்துப் பார்க்கும் பொழுது, 1940-ல் இருந்து 1950 வரை நடைபெற்ற வருடாந்திர கச்சேரிகளில் நான்கு கச்சேரிகள்தான் கோட்டு வாத்ய கச்சேரிகளாக இருந்துள்ளன. அந்த நான்கில் மூன்று கச்சேரிகள் சாவித்ரி அம்மாளின் கச்சேரிகளாக இருந்திருக்கின்றன என்பதை வைத்தே அன்றைய சங்கீத உலகில் அவருக்கிருந்த ஸ்தானத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

“வாத்ய கலைஞர் என்றாலும் அவருடைய வழி வாய்ப்பாட்டு வழிதான். கச்சேரிகளில் கூட வாய்ப்பாட்டு பாடிக் கொண்டேதான் வாசிப்பார். ”, என்கிறார் சாவித்ரி அம்மாளின் சீடர் உஷா. 1947-ல் கல்கியில் வந்துள்ள ஒரு விமர்சனம் அவர் வாய்ப்பாட்டை பிரத்யேகமாய் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது. அவர் கச்சேரி விளம்பரங்கள் சிலவற்றிலும் கூட அவர் பாடிக் கொண்டே வாத்தியக் கச்சேரி செய்வார் என்பது தனித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயலின் வித்வான் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையை கச்சேரிக்கும் வாழ்க்கையும் துணையாகக் கொண்டு இந்தியா முழுவதும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார் சாவித்ரி அம்மாள். தில்லியிலிருந்து ஒலிபரப்பப்படும் அகில இந்திய வானொலியின் நேஷனல் புரோகிராமிலும் பலமுறை சாவித்திரி அம்மாளின் கச்சேரிகள் இடம்பெற்றுப்பதற்கான குறிப்புகள் அகில இந்திய இந்திய வானொலியின் ‘இந்தியன் லிசனர்’ இதழ்களில் கிடக்கின்றன.

1960-களில் திருப்பதி பத்மாவதி கலைக் கல்லூரியில் மிருதங்கத்துக்கும், வயலினுக்கும் ஆசிரியைகளாக இரண்டு அற்புதமான பெண் கலைஞர்கள் – புதுக்கோட்டை ரங்கநாயகி அம்மாளும், துவாரம் மங்கத்தாயாருவும் – பணியாற்றி வந்தனர். அதே சமயத்தில்தான் சாவித்ரி அம்மாளும் வாய்ப்பாட்டும், கோட்டுவாத்யமும் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக அங்கு பணியாற்றினார் என்று தெரிய வருகிறது. அதே சமயத்தில் அங்கு பணியாற்றிய சங்கீத கலா ஆசார்யா எஸ்.ஆர்.ஜானகிராமன், சாவித்ரி அம்மாளை மிகுந்த அடக்கமானவர் என்றும், அவர் வாசிப்பை மிகவும் சுத்தமான வாசிப்பு என்றும் கூறியுள்ளார்.

“சாவித்ரி அம்மாளுக்கு எப்போதும் சங்கீதத்தைப் பற்றிதான் நினைப்பு. நிறைய பெயர் எடுக்க வேண்டும் என்றோ, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ அவர் நினைத்ததே இல்லை. சொல்லிக் கொடுப்பதில் வஞ்சனை இல்லாமல் சொல்லிக் கொடுப்பார்.

பாடாந்திரம் அவ்வளவு சுத்தமாக இருக்கும். சொல்லிக் கொடுக்கும்போதும் பாடித்தான் காண்பிப்பார். வாய்ப்பாட்டில் வருவதைப் போலவே வாசிக்கும் வரை பொறுமையாக மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுப்பார். அவர் வாசிப்பில் அவசரம் என்பதே இருக்காது. வீண் பகட்டுகள் சுத்தமாக இருக்காது. பைரவி, தோடி போன்ற ராகங்களை வாசிக்கும் போது சின்னச் சின்ன நுணுக்கங்கள் கூட வைரம் போல பிரகாசித்து மின்னும்படியாய் வாசிப்பார்

நான் ஓரளவு வாசிக்க ஆரம்பித்ததும் என்னையும் கச்சேரிகளுகு அழைத்துச் சென்று உடன் வாசிக்கச் செய்தார். அவருடைய தன்னலமில்லாத வழிகாட்டலில்தான் நான் ஒரு இசைக் கலைஞராக என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்ததும்”, என்று கூறும் விதுஷி உஷா, திருப்பதியில் சாவித்ரி அம்மாளிடம் பயிற்சி பெற்றவர். பின்னாளில் கேரளத்தில் அகில இந்திய வானொலியில் நிலைய விதுஷியாகப் பணியாற்றியவர்.

19-08-1973 அன்று திடீரென இருதய அடைப்பு ஏற்பட்டு சாவித்ரி அம்மாள் காலமானார். ஐம்பத்தியோரு வயதே வாழ்ந்த சாவித்ரி அம்மாளுக்கு, 1953-ல் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் தலைமையில் நடந்த விழா ஒன்றில் சாவித்திரி அம்மாளுக்கு ‘யாழிசைச் செல்வி’ என்கிற பட்டமும், 1968-ல் தமிழக அரசி அளிக்கும் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளன என்றும் பத்திரிகைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

சாவித்ரி அம்மாள் உச்சத்தில் இருந்த சமயத்தில் ‘முந்து தமிழ் மாலை’ என்ற பாடலையும் ‘அருணோதயம்’ என்கிற பாடலையும் 78 ஆர்.பி.எம் இசைத்தட்டுகளாக வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பதிவுகளும், தனிப்பட்ட சேகரங்களில் இருக்கக்கூடிய அவருடைய கச்சேரி பதிவுகளும் அவர் நூற்றாண்டு நடக்கும் இந்த வேளையிலாவது பொதுவுக்கு வந்தால் வரலாற்றில் அவர் இடத்தை அவர் வாசிப்பே வெளிச்சத்தில் வைக்கும். அப்படி நடக்கவில்லை என்றாலும், வித்வான் டி.ஆர்.எஸ் சொன்னது போல, நாளை யாரோ ஒருவர் கிடைக்கும் குறிப்புகளைத் தொகுத்து சாவித்ரி அம்மாளின் மேல் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.

உண்மைக் கலைஞருக்கு மரணமேது?

***

One Reply to “மன்னார்குடி சாவித்ரி அம்மாள்”

Leave a Reply to Ganesh VCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.