தேர்வு

வெறுங் காலைத் தரையிலே வச்சா என்னமோ கீழே காவேரி ஓடற மாதிரின்னா ஜிலீர்ங்கறது” என்று ஹாலுக்குள் வந்த பத்மா அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கால்களைச் சம்மணம் போட்டுக் கொண்டாள்.

“ஆமா. உங்க ஊர்லே உடம்பு மேலே தீயை வச்சுப் பொசுக்கறாப்பிலே ஒரு வெய்யில். அதுக்கு இது ஜிலீர்தான்” என்று அவளைப் பார்த்துச் சிரித்தாள் பங்கஜம்.

பத்மா அன்று காலையில் சென்னையிலிருந்து பெங்களூரில் உள்ள அவள் பெண் வசந்தாவின் வீட்டுக்கு வந்திருந்தாள். பங்கஜம் வசந்தாவின் மாமியார். 

“சீதர் எத்தனை மணிக்கு ஊபர் புக் பணறேன்னான்?” என்று பங்கஜம் கேட்டாள்.

“பத்தரை மணி ஏ.சி. பஸ்லே மாப்பிள்ளை டிக்கட் வாங்கியிருக்கார். பத்து மணிக்குக் கார் வரும்னு வசந்தா சொன்னாள். இங்கேர்ந்து பஸ் ஸ்டேஷன் போக பத்து நிமிஷந்தானே? இப்ப மணி ஒம்பதரை ஆறது. ஆனா மானம் என்னமோ புடவையைப் போத்திண்டாப்பிலே ஊரே இருட்டிக் கிடக்கே!” என்று மறுபடியும் பெங்களூரைப் பார்த்துச் சிணுங்கினாள்  பத்மா. 

“வசந்தா கூட கல்யாணமான புதுசுலே இங்கே வந்தப்போ உங்களை மாதிரியே தான்  மெட்றாசையும்  பெங்களூரையும்  கம்பேர் பண்ணித் திட்டிண்டே இருப்பா. ஆனா அதெல்லாம் ஒரு வருஷம்தான். அதுக்கப்புறம் கல்யாணம் கார்த்தின்னு மெட்றாஸ் போகணும்னாக் கூட  அப்படி அலுத்துக்கறவளா மாறிட்டா. அவளைக் கட்டாயப்படுத்தின்னா தலைப் பிரசவத்துக்கு உங்க கிட்டே அனுப்ப வேண்டியதாயிடுத்து” என்று சிரித்தாள் பங்கஜம்.

பத்மா பங்கஜத்தைப் பார்த்தாள். பொன் மினுங்கும் மஞ்சள் நிறம். அவளும் இந்தப் பெங்களூர்க் குளிரில் குளித்த பழுத்த  முலாம் பழம் போலத்தான் தளதளவென்று இருக்கிறாள். வெய்யிலில் கறுத்து உருகும் தோலைப் புறந்தள்ளும் தோற்றம்.    

பங்கஜம் சொல்வது நிஜம்தான் என்று பத்மா நினைத்தாள். திருமணத்துக்கு முன் ஒரு முறை தில்லியிலும் இன்னொரு தடவை பம்பாயிலும் நல்ல வேலை கிடைத்த போது சென்னையை விட்டு யார் போவா என்று வசந்தா மறுத்து விட்டாள். ‘இந்த ஊர் பீச்சையும் டிசம்பர் கச்சேரியையும் விட்டுட்டு யார் போவா? அதுவும் எங்கே? டிராமோ லோகல் டிரெயினோ நடைபாதையோ எங்கே கால் வச்சாலும் கூட்டமான கூட்டம்ன்னு மென்னியை முறிக்கற  பம்பாய்க்கா ? இல்லே வெய்யில்னா சூரியன் என்னமோ பூமியிலிருந்தே கிளம்பி வர்ற  தீப்பந்தமாட்டம். சரிதான் அது போகட்டும்னா எஸ்கிமோவே பதைத்துச் செத்துடற மாதிரி நடுக்கும் பனிப்பாறைக் கடலா இருக்கற டில்லிக்கா? ஆளை விடு” என்று சண்டை போடுவாள்.

ஆனால் கடைசியில் பெண் பார்க்க வந்த ஸ்ரீதரிடம் மயங்கி விட்டாள். பீச்சும் கச்சேரியும் ஒதுங்கி வழி விட்டு விட்டன. அதே போலப் புக்ககத்துக்கு வந்த பின் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொண்டு விட்டாள். 

“ஆமாமா, கல்யாணம் ஆகி இங்க வந்தப்பறம் அவ பழக்க வழக்கம் எல்லாமே மாறிப் போயிடுத்தே!” என்றாள் பத்மா.

அவள் வார்த்தைகளுக்குள் ஏதேனும் உள்ளர்த்தம் இருக்கிறதோ என்று பங்கஜம் பத்மாவை உற்று நோக்கினாள். ஆனால் பொல்லாத்தனத்துக்கும் தனக்கும் வெகு தூரம் என்று அறிவித்த பத்மாவின் முகத்தைப் பார்த்ததும் பங்கஜம் ஒரு வினாடி தனக்குள் குறுகினாள். 

“எதுக்கு அப்படிச் சொல்றேள்?” என்று பங்கஜம் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“ஆமா. எங்காத்துலே இருந்த வரைக்கும் டிகாக்ஷன் காப்பிதான். அவசரத்துக்கு ஒரு நாள் நெஸ்கபே, இல்லாட்டா ப்ரூ குடிடீன்னா மாட்டேன்னுடுவா. பெங்களூருக்குக் குடித்தனம் போட்டதுக்கு அப்புறம் மெட்றாசுக்கு வந்தா டீயைத் தவிர வேறே எதையும் பக்கத்திலே கொண்டு வராதேங்கறா. என்னடி இதுன்னா, காப்பியை விட டீதான் உடம்புக்கு நல்லதுன்னு லெக்சர் கொடுக்கறா” என்று பத்மாவும் சிரித்தாள். 

“ஆமா. இங்க நாங்க எல்லாரும் காலம்பற எழுந்ததும் ஒரு டீ , டிபனுக்கு அப்பறம் ஒண்ணு, சாயங்காலம் ஒன்ணுன்னு.. மூணு நாலு தடவையாவது ஒரு நாளைக்குக் குடிச்சிடுவோம்.  சீதர் கூட ஒரு நாள் கேலி பண்ணினான், என்னதிது ஏதோ போதை மருந்தாட்டம் இந்த ஆத்திலே எல்லாரும் டீயைக் குடிச்சுத் தள்ளறோம்னு.” 

பத்மா அதைக் கேட்டுப் புன்னகை பூத்தபடி “அதே மாதிரி அங்கே கார்த்தாலே  சாப்பாடும் மத்தியானம் டிபனும் சாப்டுண்டு இருந்தவ, இங்கே வந்தப்புறம்  மாப்பிள்ளை கூடச் சேர்ந்துஅந்தப் பழக்கத்தையும் மாத்திண்டுட்டா.”

“உங்க பொண்ணு, இல்லேல்லே, என் மாட்டுப் பொண்ணு ரொம்ப அட்ஜஸ்டிங் டைப்பு ” என்று பங்கஜம் பெருமை தொனிக்கும் குரலில் கூறினாள். “ஆனா நீங்க பாத்துப் பாத்து சரியா வளர்த்திருக்கேளே. அதைன்னா சொல்லணும்.” 

பத்மா வெட்கத்துடன் சிரித்தாள். தனக்கும் இந்த மாதிரி முகமன் எல்லாம் வேண்டியிருக்கிறது.

“ஓசூர்லே நாலஞ்சு நாள் இருப்பேளா?” என்று பங்கஜம் கேட்டாள். “எனக்கும் உங்களோட வரணும் போல ஆசையா இருக்கு. ஆனா இந்தப் பாழாப் போன ஆர்த்ரிட்டிஸ்ன்னு முழங்கால் வலியை வச்சுண்டு பஸ்ஸிலே ஒரு மணி ஒன்றரை மணி நேரமெல்லாம் உக்கார முடியறதில்லையே. எனக்கும் மாதுரி புதுக்குடித்தனம் பண்றதைப் பாக்கணும் போல இருக்கு.”….  

மூன்று மாதத்துக்கு முன்னால்தான் பத்மாவின் இரண்டாவது பெண் மாதுரிக்குக் கல்யாணம் ஆயிற்று. அவளும் திருமணத்துக்கு முன் பெங்களூரில்தான் பிக் ஃபோர் ஒன்றில் நல்ல வேலையில் இருந்தாள். கை நிறையச் சம்பளம். “அம்மா! இவ்வளவு பணத்தையும் ஒரு மாசத்துக் குள்ளே எப்படிச் செலவழிக்கறது?” என்று ஒன்றுமே தெரியாத ஒரு குழந்தை முகத்தை வைத்துக் கொண்டு பத்மாவைப் பார்த்துக் கேலியுடன் சிரிப்பாள். 

ஆனால் அப்படி சொல்லிக் கொண்டே ஒரு கார் வாங்கினாள். அதை எடுத்துக் கொண்டு மாதம் ஒரு முறை சென்னைக்கு வந்து விடுவாள். 

“என்னடி இப்படி பயமே இல்லாம தனியா இவ்வளவு தூரம் காரை எடுத்துண்டு வரே? திரும்பப் போறப்பவும்  ராத்திரி பதினோரு மணிக்கு கிளம்பறே. கொஞ்சம் கூடப் பயமே இல்லாம. எப்பப் பாத்தாலும் என் வயத்திலே புளியைக் கரைச்சிண்டு” என்று பத்மா கோபமாகச் சொல்லுவாள்.

“ஏம்மா எப்பப் பாத்தாலும் இப்பிடி பயந்துண்டே இருக்கே? உன்னோட பெரிய பொண்ணாட்டம். அவதான் சைக்கிள் கத்துக்கறதுக்குக் கூட அப்பிடி நடுங்கினா” என்று சிரிப்பாள் மாதுரி.   

“அதானே!” என்பார் ஹாலில் உட்கார்ந்து மூழ்கியிருக்கும் பேப்பரிலிருந்து அவள் அப்பா சூரி தலையை நிமிர்த்தி.

“எல்லாம் நீங்க கொடுக்கற இடம்.” என்று சீறும் இடத்தைப் பத்மா மாற்றிக் கொள்வாள். “எங்கேர்ந்தோ ஆம்பிளையாப் பொறக்க வேண்டியதை என் வயத்திலே பொண் ஜன்மமா கொண்டு வந்து கட்டிட்டான்.”    

ஆனால் மாதுரி சொன்னது நிஜம்தான். வசந்தா சைக்கிள் கற்றுக் கொண்ட அன்று பாவாடை சக்கரத்தில் சிக்கிக் கொள்ள அவள் கீழே விழுந்து விட்டாள். அன்றோடு தனக்கும் சைக்கிளுக்கும்  ஸ்நானப் பிராப்தி கூடக் கிடையாது என்று விட்டாள்…

பத்மா பங்கஜத்தைப் பார்த்து “ஆமா. இந்தக் கால்வலியை வச்சுண்டு அவ்வளோ தூரம் அதுவும் பஸ்ஸிலே போறது கஷ்டம்தான்.  மாதுரி எனக்கு சனிக்கிழமை லீவுதானே, காரை எடுத்துண்டு வரட்டுமான்னு கேட்டா . நான்தான் அங்கேர்ந்து இங்க அவ வரச்சே மாப்பிள்ளையும் வசந்தாவும் ஆத்திலே இருக்க மாட்டா. ஆபீசுக்குப் போயிடுவா. இங்க வந்து ரெண்டு பேரையும் பாக்கக் கூட முடியாதேன்னேன்.  பஸ்ஸுன்னா ஒரு வழி செலவுதான்.  எதுக்கு காசைக் கரியாக்கணும், வேண்டாம்னுட்டேன். நீங்க வரதா இருந்தேள்ன்னா அவளை வான்னு சொல்லியிருப்பேனே” என்றாள்.

“அதுக்கென்ன, இன்னொரு தடவை போனா ஆச்சு” என்று சிரித்தாள் பங்கஜம். “நீங்க முதல் தடவையா மாதுரி ஆத்துக்குப் போறேள். பொண்ணும் மாப்பிள்ளையும் எப்படிப் புதுக் குடித்தனம் அதுவும் தனிக்குடித்தனம் பண்றான்னு பாக்கத்தானே போறேள் ! நான் உங்க கூட அடுத்த தடவை வரேன்.” 

பஸ்ஸில் செல்லும் போது பத்மாவின் மனம் மாதுரியைப் பற்றி நினைத்தது. அவள் வசந்தாவை விட ஐந்து வயது சிறியவள். வசந்தாவின் பொறுமைக்கும், மற்றவர்களிடம் அனுசரித்துப் போகும் குணத்துக்கும் மாதுரி நேர் எதிர். எதிராளியை முகத்திற்கு நேரே அடிப்பதில் கொஞ்சம் கூட சங்கோஜம் காண்பிக்க மாட்டாள். அதே போல் உயிரை விட்டுப் பழகுவாள். எப்போதும் சிநேகிதங்கள், அலுவலக நண்பர்கள் என்று அவளைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். தான் நினைப்பதை நடத்தாமல் விடமாட்டாள்.

அதே மாதிரி வசந்தா எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுக் கொண்டு அம்மாவுக்கு உதவியாக வீட்டில் உதவுவாள். ஆனால் மாதுரியிடமிருந்து வேலை வாங்குவது என்பது நடக்காத காரியம். ஒரு தடவை சூரியின் அக்கா கிராமத்திலிருந்து வந்த போது பத்மா மாதுரியிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதையும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மாதுரி கிண்டிலில் படித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தாள்.

“ஏது, இவள்ட்டேர்ந்து வேலை வாங்கறதுக்கு காளை மாடு கிட்டேர்ந்து பால் கறந்துடலாம் போலிருக்கே!” என்றாள் அத்தை. அதைக் கேட்டு எல்லாரும் சிரித்தார்கள். மாதுரியும் “செம ஜோக் அத்தே!” என்று வாய் விட்டுச் சிரித்தாள். ஆனால் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. அதே மாதிரி அவள் வேலைகளையும் மற்றவர்களிடம் கெஞ்சியோ மிஞ்சியோ செய்யச் சொல்லி விடுவாள். ‘உடம்பெல்லாம் ரத்தத்துக்குப் பதிலா சோம்பேறித்தனம் ஓடறது இந்த சனியனுக்கு” என்று பத்மா திட்டுவதைக் காதிலேயே வாங்க மாட்டாள். லீவு நாள் என்றால் பகல் அவளுக்குப் பதினொன்று,பனிரெண்டு மணிக்குத்தான் விடியும். அதற்குக் காரணம் ராத்திரி லாப்டாப்பில் சினிமாவோ, கிண்டிலில் நாவலோ ஏதோ ஒன்றில் ஆழ்ந்து மூழ்கி இரவு ஒரு மணி ரெண்டு மணிக்குத்தான் படுக்கப் போவாள்.   

அவள் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்ததும் மேலே எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்றாள். 

பத்மா சூரியிடம் “இவ படிக்கறதுக்கு செலவழிக்கறது ஒண்ணும் பெரிசில்லே. ஆனா நாளைக்கு மாப்பிள்ளை பாக்கறச்சே இவளை விடப் படிச்சவனா இருக்கணும். அதுக்கேத்த மாதிரி வரதட்சணை கேப்பா..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த மாதுரி “வரதட்சணை கேக்கற எவனையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றாள்.

பத்மா அவளை ஆத்திரத்துடன் பார்த்தாள். “அப்போ ஏதாவது குமாஸ்தாதான் கிடைப்பான்.” 

“‘இப்ப படிப்பைப் பத்திதானே பேசிண்டு இருக்கோம். அது முடிய ரெண்டு வருஷம் ஆகும். அப்புறம் ரெண்டு மூணு வருஷமாவது வேலை பாக்கணும். அதுக்குள்ளே இப்ப எதுக்குக் கல்யாணப் பேச்சு?” என்று கேட்டாள் மாதுரி.

“இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சா?” என்று திடுக்கிட்டாள் பத்மா.

“ஆமா. சந்தையிலே மாடு பிடிக்கற மாதிரியெல்லாம் வந்து என்னை யாரும் பாக்கக் கூடாது. ஐ கான்’ட்  லீவ் ரெஸ்ட் ஆஃப் மை லைஃப் வித் எ ஸ்ட்ரேஞ்சர். நான் ஆளைப் பாத்துப் பேசிப் பழகினத்துக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” 

“சரி, சரி. இப்ப எதுக்கு வீணான பேச்செல்லாம். கல்யாணம், கார்த்தி எல்லாம் வேளை வந்தா யார் தடுத்தாலும் நிக்காது” என்று சூரி கோபத்துடன் இருவரையும் பார்த்தார்.

“எல்லா விஷயத்திலேயும் கெட்டிக்காரியா இருக்கிறது இப்பிடித் தத்துப்பித்துன்னு ஏதோ உளறிண்டு இருக்கேன்னு எனக்குதான் மனசு அடிச்சுக்கிறது” என்று பத்மாவும் கோபத்துடன் அங்கிருந்து நகன்றாள்.

மாதுரிக்கு பெங்களூரில் ஐ.ஐ.எம்.மில் இடம் கிடைத்தது. படிப்பு முடிக்கும் சமயம் கேம்பஸ் செலக்ஷனில் பெங்களூரிலேயே வேலையும் கிடைத்து விட்டது. இரண்டு வருஷம் போயிருக்கும். ஒரு நாள் சென்னைக்கு வந்தவள், இரவு மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் “அம்மா, அப்பா, நான் ஒண்ணு சொல்லணும் உங்ககிட்டே” என்றாள். 

“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு?” என்று சூரி மனைவியைப் பார்த்தார்.

“வேறென்ன, பணம் வேணும்பா, இல்லாட்டா ஃபாரின் போறேம்பா” என்றாள் பத்மா.

“ரெண்டும் இல்லே. சுத்தி வளைக்காம சொல்லிடறேன். முராரின்னு பேர். எனக்கு அவனை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒரு வருஷமா பழகிண்டு வரோம்.” 

“அடிப்பாவி!” என்று கத்தி விட்டாள் பத்மா. அதிர்ச்சியில் அவள் ஒரு நிமிடம் உறைந்து விட்டாள். கணவனைப் பார்த்தாள்.

“என்னம்மா இது இப்பிடி குண்டைத் தூக்கிப் போடறே? இதான் நீ எங்களுக்குக் கொடுக்கிற மரியாதையா?” என்று இறுகிய குரலில் கேட்டார் சூரி.

“அப்பா, நான் ஒளிவு மறைவு எதுவும் இல்லாம உங்ககிட்டே இப்ப சொன்னேன். உங்க ரெண்டு பேருக்கும் இது ஷாக்கா இருக்கும். ஆனா ஒண்ணு சொல்லிடறேன். நீங்க ரெண்டு பேரும் ஒத்துண்டாதான் இந்தக் கல்யாணம். நீங்க வேண்டாம்னு சொன்னா நானும் அவன் கிட்டே வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆனா அதுக்கப்புறம் நீங்க ஜாதகக் கட்டையெல்லாம் தூக்கிண்டு அலையக் கூடாது. நான் தனியா இருந்து என்னைப் பாத்துப்பேன்” என்றாள்  மாதுரி. 

அவள் குரலில் தென்பட்ட உறுதி அவர்களைக் கலக்கிற்று. 

அப்போது மாதுரியின் கைபேசி ஒலித்தது. அதைப் பார்த்து விட்டு முகமலர்ச்சியுடன் “முராரி கிட்டேருந்துதான். நான் ரெண்டு நிமிஷத்திலே வரேன்” என்று தன் அறைக்குச் சென்றாள்.

“எனக்குத் தெரியும் இவ இந்த மாதிரி ஏதாவது இடியைத் தூக்கி நம்ம தலைமேலே போடுவான்னு” என்றாள் பத்மா துக்கத்துடன். 

“கல்யாணம்னா எவ்வளவு சந்தோஷமான சமாச்சாரம்! அதை எப்படி மாத்திக் கொண்டு வந்து நிக்கறா பாருங்களேன்.”

“பத்மா, நீ ரொம்ப எமோஷனலா ஆயிடாதே. அவ என்ன சொன்னா கேட்டியோ? இந்தப் பையனோட இல்லாட்டா, நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்றா. பிடிவாதக்காரி. சொன்னதை செஞ்சும் காட்டிடுவா” என்றார் சூரி. 

பத்மா பயத்துடன் அவரைப் பார்த்தாள். 

“ஒரு வருஷமா பழகிண்டு வரேன்னு சொல்றா. அப்படி ஒட்டிண்டுண்டு இருக்கறதை வெட்டி விடறது சந்தேகம்தான்.. நம்ம சொந்தக்காரள்ளேயும் பாதிக்கு மேலே ஜாதி விட்டு, மதம் விட்டு, பாஷை விட்டுக் கல்யாணம் பண்ணிண்டு இருக்கறதைத்தான் நாம பாக்கறமே! இப்ப இவளே தாலி கட்டிண்டாச்சு, இல்லே ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிண்டேன்னு அந்தப் பையனோட  இங்கே வந்து நின்னிருந்தா? இவ  கெட்டிக்காரி, படிச்சவ, நம்ம மேலே மரியாதை வச்சிண்டிருக்கரவங்கறதைத்தானே இது காட்டறது? மத்த விஷயமெல்லாம் விஜாரிச்சு அவள் கிட்டே இருந்து தெரிஞ்சுண்டத்துக்கு அப்புறமா நாம என்ன செய்யணும்னு யோசிக்கலாம்” என்றார் சூரி.

அவருடைய நிதானம் பத்மாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. பொதுவாகவே அவருக்கு உறவுக்காரர்கள் கூட்டத்தில் எதையும் யோசித்து சரியான ஆலோசனை சொல்பவர் என்ற பெயர் இருந்தது. ஆனால் அவர் இவ்வளவு சொல்லியும் இன்னும் தன் அடி வயிறு  கலங்குவது போல் இருந்ததை அவள் உணர்ந்தாள். .

மாதுரி அவளது கைப்பையுடன் அறையிலிருந்து திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டாள். “முராரிதான். என்ன ஆயிண்டிருக்குன்னு கவலையாக் கேட்டான்” என்று சிரித்தாள் மாதுரி.

“முராரின்னா? வடக்குத்தியா?” 

“குஜராத்திம்மா” என்றாள் மாதுரி.

‘என்ன ஜாதி?’ என்று கேட்க பத்மா துடித்தாள். ஆனால் பயம். பதில் சொல்லாமல் மட்டுமல்ல,இந்தப் பெண் எழுந்து கூடப் போய் விடுவாள்.

“அவாளும் நம்ம மாதிரிதான்” என்றாள் மாதுரி.

“அப்படீன்னா?”

“சுத்த வெஜிடேரியன்.”

பத்மாவுக்கு அதைக் கேட்க நிம்மதியாய் இருந்தது.

“முராரி என்ன படிச்சிருக்கான்? என்ன வேலை பாக்கறான்?” என்று சூரி கேட்டார்.

மாதுரி உற்சாகத்துடன் “அவன் எம், ஏ. லிட்ரேச்சர்” என்றாள்.

“என்னடி இது?  நீ எம்.பி.ஏ. அவன் வெறும் எம்.ஏ.தானா?” என்று பத்மா ‘பட்’டென்று கேட்டாள். அவளுக்கு வர இருக்கும் மாப்பிள்ளை ஒரு எம்.பி.ஏ., அல்லது சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், அல்லது டாக்டராக இருப்பான் என்று கற்பனை பண்ணிக் கொண்டிருந்த அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “இந்தப் படிப்பு விஷயம் ரொம்ப முக்கியமாச்சேடி. நாளைக்கு ஏதாவது காம்ப்லெக்ஸ் அது இதுன்னு….”

“எங்கே வேலை பாக்கறான்?”என்று சூரி மறுபடியும் கேட்டார்.

மாதுரி சிரித்துக் கொண்டே “அவன் வேலைக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லப்பா. ஆக்சிஸ் பேங்க்லே ஆபீஸரா இருக்கான்” என்றாள் .

“அப்போ அவன் சம்பளம் உன்னை விடக் குறைச்சலா இருக்குமே” என்றாள் பத்மா. மாதுரி ஆறு இலக்கத்தில சம்பாதிக்கும் போது வரவிருக்கும் மாப்பிள்ளையும் அதை விட சம்பாதிப்பான் என்ற அவள் கனவில் இப்படி மண்ணைப் போடுகிறாளே.  “படிப்பு, சம்பாத்தியம் எல்லாமே தலைகீழான்னாடி இருக்கு. ஏண்டி நாளைக்கு நம்ம உறவு ஜனம், உன்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் உன்னைக் கேலியாப்  பாத்தா என்னடி செய்வே?”

“அம்மா நீ சொல்ற இவா யாருகிட்டேயும் நானோ முராரியோ போய் நிக்கப் போறதில்லே. எங்க ரெண்டு பேர் சம்பளத்தையும் வச்சுண்டு எப்படிச் செலவழிக்கறதுன்னுதான் நாங்க முழிச்சிண்டு இருப்போம்” என்றாள்

பிறகு “அம்மா! எனக்குப் பிடிச்ச பையனோடதானே நான் வாழணும்னு நீ நினைப்பே?” என்று மாதுரி கேட்டாள். 

பத்மாவால் மறுத்து இந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை.    

“சரி, முராரி பாக்கறதுக்கு எப்படி இருக்கான்? போட்டோ கீட்டோ ஏதானும் வச்சிருக்கியா?” என்று சூரி கேட்டார். 

மாதுரி அவள் அவளுடைய கைப்பையைத் திறந்து போட்டோவை எடுத்து சூரியிடம் கொடுத்தாள்.

சூரி பார்த்த போது பத்மாவும் அவர் அருகே சென்று எட்டிப் பார்த்தாள். 

“ஒல்லியா மீசை வச்சுண்டு நன்னா இருக்கானேடி!” என்றாள் பத்மா.

“அம்மா, நீ பாராட்டறியா, குத்தம் சொல்றியான்னு கண்டு பிடிக்க முடியாம எப்படி இப்படி ஒரு குரலை வச்சுண்டு கேக்கறே?” என்று மாதுரி சிரித்தாள்.

“உன்னை விட சேப்பு இல்லே” என்றாள் பத்மா.

“ஸ்மார்ட்டா இருக்கான்” என்ற சூரி அவனுடைய பெற்றோர்களைப் பற்றி (அவன் அப்பா நவ்சாரியில் ரயில்வேயில் இருக்கிறார்) வீடு வாசல் பற்றி (ஒன்றும் இல்லை) அவனுக்குக் கூடப் பிறந்தவர்கள் பற்றி  (ஒரு அக்கா. அவளை நாக்பூரில் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள். அவள் கணவன் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறான்)   எல்லாம் கேட்டார்கள்.

பத்மாவுக்கு திருப்தியாகவே இல்லை. ஆனால் சூரி தாங்களாகவே இதை ஒப்புக் கொள்ளா விட்டால் மாதுரி எப்படியும் பிரிந்து போய் விடுவாள்; அதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறி பத்மாவை சமாதானப்படுத்தினார்.   

அடுத்த மூன்று மாதங்கழித்து சென்னையில் மாதுரியின் கல்யாணம் நடந்தது.  

பஸ்  சரியான நேரத்துக்கு ஓசூரை அடைந்து விட்டது. வண்டியை விட்டுக் கீழே இறங்கிய பத்மாவின் கண்கள் கூட்டத்தில் மாதுரியைத் தேடின. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். பஸ் ஸ்டாண்டு களேபரமாய்க் காட்சியளித்தது. அவ்வப்போது கிளம்பிய பஸ்கள் கறுப்புப் புகையை ஜனங்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருந்தன. சிகாகோவில் பிறந்து வளர்ந்த பெண்ணைப் போல் ஒரு யுவதி அரை நிஜாரும் பிரா அணியாத சட்டையும் போட்டுக் கொண்டு நடந்து சென்றதைப் பார்த்து பத்மா முகம் சுளித்தாள். ஆனால் முகம் சுளிக்காது பல கண்கள் அவளைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன. ஸ்டான்டில் நின்றிருந்த ஒவ்வொரு பஸ்ஸின் முன்பும் பழக்கூடைகளையும் ஈக்களையும் தோளில் வைத்துக் கொண்டு ஆணும் பெண்ணுமாய் கன்னடமும் தமிழும் முட்டிக் கொள்கிற மாதிரியான தொனிகளில் இரைச்சலுடன் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். . பாண்ட் டீஷர்ட்டுகளுக்கிடையே வேஷ்டிகளும் கதர் சட்டைகளும் கண்ணில் பட்டன. இந்த ஓசூரைப் பாத்தா என்னவோ பெங்களூருக்கும் மெட்ராசுக்கும் பொறந்த குழந்தை மாதிரின்னா  இருக்கு என்று பத்மா நினைத்தாள். அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது..

பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெய்யிலில் மின்னின. அவற்றில் ஒன்றில்தான் மாதுரி வந்திருக்க வேண்டும். 

அப்போது “அம்மா! அம்மா! வெல்கம் டு ஹோசூர்!” என்று அவள் அருகில் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். முராரி. அவளைப் பார்த்துச் சிரித்தபடி அவள் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டான். வெளியே நின்றிருந்த கார் வரிசையை நோக்கி நடந்தான். பத்மா அவன் கூட  நடந்தாள். குறுக்கும் நெடுக்கும் வந்த மனிதர்கள் மீது மோதிக் கொள்ளாமல் நடக்க சர்க்கஸ் செய்ய வேண்டியிருந்தது.

காரில் ஏறிக் கொண்டதும் புறப்பட்டார்கள்.

“நீ எப்படி இருக்கே? சௌக்யமா? அந்தத் தடிச்சி வரலையா? நேத்திக்கு அவதானே போன் பண்ணி ஸ்டேஷனுக்கு வந்து கூட்டிண்டு போறேன்னு சொன்னா” என்று கேள்விகளை மடமடவென்று கொட்டினாள் பத்மா.

“இன்னிக்கி சனிக்கிழமை இல்லே?” என்றான் முராரி.

“அதனாலே?’

“பன்னெண்டு மணிக்குதானே மாதுரிக்கு முழிப்பு வரும்!”

“அந்த நல்ல பழக்கத்தை இன்னும் விடலையா அது?” என்று எரிச்சலுடன் கேட்டாள் பத்மா. 

முராரி அதைக் கேட்டுச் சிரித்தான். ஆள் முன்பை விட சற்றுச் சதை போட்டிருந்தான். பொண்டாட்டி கைவண்ணத்தில் சாப்பாடு இறங்கியதன் விளைவா என்று தனக்குள் சிரித்துக் கொண்டாள் பத்மா.

வண்டி தளி ரோடு வழியாக ஊருக்குள் சென்றது. நடுவே வயல்களில் பச்சைக் கதிர்கள் ஆடிக் கொண்டு பத்மாவை வரவேற்றன.  வீடு வந்ததும் அவர்கள் இருவரும் உள்ளே சென்றார்கள். ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்த மாதுரி “அம்மா!” என்று அவளை நோக்கி வந்தாள்.  

பத்மா சுற்றும் முற்றும் பார்த்தாள். வீடு பளிச்சென்று இருந்தது. கண்டான் முண்டான்கள் எதுவுமற்றுக் குறைந்த அளவில் பர்னிச்சர்கள் இடத்தை அழகுபடுத்தியிருந்தன. மாதுரிக்கு எப்போதுமே ஒரு சென்ஸ் ஆஃப் பியூட்டி உண்டு என்று வசந்தா அடிக்கடி சொல்லுவாள். டிரஸ்ஸிலிருந்து  மேக்கப் சாமான்களிலிருந்து ரொம்பவும் கவனமாகத் தேர்ந்தெடுப்பாள். இப்போது தன் வீடு என்றதும் அழகுபடுத்தும் காரியங்களில் எல்லாம் எப்படி ஈடுபட்டிருக்கிறாள் பார் என்று பத்மா  நினைத்தாள். சென்னையில் அவள் இருந்த அறைக்குள் போய்ப் பார்த்தால் அது   இன்று பஸ் ஸ்டாண்ட்டில் பார்த்த கலவரத்தையெல்லாம் தூக்கிச்  சாப்பிட்டு விடும்.  

“என்னம்மா, அப்படியே மலைச்சு நின்னுட்டே?” 

“ரொம்ப அழகா வீட்டை வச்சிண்டிருக்கியேன்னுதான்.”

“வச்சிண்டிருக்கியேடான்னு சொல்லு!” என்று மாதுரி கணவனைப் பார்த்துச் சிரித்தாள்.

மத்தியானம் சாப்பாட்டுக்குப் பிறகு அம்மாவும் பெண்ணும் மாதுரியின் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார்கள். முராரிதனக்கு  வேலை இருக்கிறது அவனுடைய அறைக்குச் சென்றான்.

“மாதுரி, உனக்கு சனிக் கிழமையும் ஆபீஸ் கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா ஏன் முராரி பேங்குக்குப் போகலை? அவன் இன்னிக்கு லீவா?” என்று பத்மா கேட்டாள்.

“இன்னிக்கின்னு இல்லே. அவனுக்கு வருஷம் பூரா லீவுதான்” என்றாள் மாதுரி.

“என்னது?”

“ஆமா. அவன் படிச்சதுக்கும் பாக்கற வேலைக்கும் சம்பந்தேமே இல்லேன்னு சொல்லிண்டு இருந்தான். அப்ப  பேங்க் வேலையை விட்டுடுன்னேன். இப்போ ஃபுல் டைம் ரைட்டரா  ஆயிட்டான். இங்கிலீஷ்லே எழுதறான். முன்னாலேயே அவனோட கதை, ஆர்டிக்கில்ஸ்லாம் காரவன், இண்டியா  டுடே, வீக் சண்டே ஹெரால்டுலே எல்லாம் வந்திருக்கு. இப்ப மறுபடியும் அங்கெல்லாம் அனுப்பிச்சிண்டு இருக்கான்.”

பத்மா எதுவும் சொல்லத் தோன்றாது அமர்ந்திருந்தாள்.

“எங்களுக்கு வேண்டிய பணத்துக்கு என் வேலை இருக்கு. அவனும் சந்தோஷத்தைத் தர்ற காரியத்தைப் பண்ணறான். இதுக்கு மேலே என்னம்மா வேணும்?”

மாதுரி மேலும் சொன்னாள்: “எல்லாத்தையும் விடம்மா. எனக்கு அனுசரணையா எப்படி இருக்கான்?  உங்களோட இருந்ததுக்கும் இப்ப இருக்கறதுக்கும் நான் ஒரு வித்தியாசத்தையும் பாக்கலே. இதை விட வேறே என்னம்மா வேணும்?”

மாதுரி ஏன் முராரியைத் தேர்வு செய்தாள் என்று இப்போது தனக்குத் தெரிவது போல பத்மா உணர்ந்தாள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.