தமிழில்: ராமலஷ்மி

பகடையை உருட்டு
நீங்கள் முயற்சி செய்வதாயின்
முழுமையாக முயன்றிடுங்கள்.
அல்லது, தொடங்கவே தொடங்காதீர்கள்.
நீங்கள் முயற்சி செய்வதாயின்
முழுமையாக முயன்றிடுங்கள்.
இதனால் நீங்கள் இழக்க நேரலாம் தோழிகளை,
மனைவியரை, உறவினரை, பணிகளை ஏன்
உங்கள் புத்தியையும் கூட.
முழுமையாக முயன்றிடுங்கள்.
அதன் அர்த்தம் நாலைந்து நாட்கள் சாப்பிடாதிருக்க நேரலாம்
அதன் அர்த்தம் பூங்கா இருக்கையொன்றில்
உறைந்து போக நேரலாம்.
அதன் அர்த்தம் சிறையாக இருக்கலாம்,
அதன் அர்த்தம் ஏளனத்தை
பரிகாசத்தை எதிர் கொள்வதாக இருக்கலாம்
தனிமைப் படுத்தப் படுவதாக இருக்கலாம்.
தனிமை ஒரு பேறு,
மற்றன யாவும்
உங்கள் சகிப்புத்தன்மைக்கு,
உண்மையில் நீங்கள் எந்த அளவுக்கு
செய்ய விரும்புகிறீர்கள் என சோதிக்க
ஒரு பரீட்சை.
நீங்கள் செய்வீர்கள்
நிராகரிப்பு மற்றும் மோசமான மனவேறுபாடுகளுக்கு மத்தியிலும்.
அது நீங்கள் கற்பனை செய்யும் எதனை விடவும்
நன்றாகவே இருக்கும்.
நீங்கள் முயற்சி செய்வதாயின்
முழுமையாக முயன்றிடுங்கள்.
அதற்கு ஈடான உணர்வு
வேறெதுவும் இல்லை.
நீங்கள் தெய்வங்களுடன் தனித்திருப்பீர்கள்
இரவுகள் நெருப்பின் சுடரில் ஒளிர்ந்திடும்.
முயன்றிடுங்கள், முயன்றிடுங்கள், முயன்றிடுங்கள்.
முயன்றிடுங்கள்.
முழுமையாக
முழுமையாக.
நீங்கள் பூரண சிரிப்புக்குள்
நேராக வாழ்க்கையைச் செலுத்திடுவீர்கள்,
அது ஒன்றே நல்ல போராட்டம்
அங்கு.
*
மூலம்:
“roll the dice” By Charles Bukowski
திரை
நெடுநாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றின்
கடைசித் திரை, சில மனிதர்கள் அதை
ஒருநூறு முறைகளுக்கும் மேலாகப் பார்த்துவிட்டதாகச்
சொல்லிக் கொள்கிறார்கள்.
தொலைக்காட்சி செய்திகளில் நான் அதைப் பார்த்தேன், அந்தக் கடைசித் திரையை:
பூக்கள், ஆரவாரம், கண்ணீர், இடியோசையை ஒத்த ஆர்ப்பரிப்பு.
நான் இந்தத் தனிப்பட்ட இசை நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை
ஆனால் எனக்குத் தெரியும், ஒருவேளை நான் அதைப் பார்த்திருந்தால்
என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடிந்திருக்காது, அது என்னை
வெறுப்படையச் செய்திருக்கும்.
இந்த விஷயத்தில் என்னை நம்புங்கள், இந்த உலகம் அதன் மக்கள் மற்றும்
அதன் கலைநயமிக்க கேளிக்கைகள்
எனக்கு மிகச் சிறியதையே செய்துள்ளன, எனக்கு மட்டும்.
இருப்பினும், அவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ந்திருக்கட்டும்,
அது என் கதவிலிருந்து அவர்களைத் தள்ளி வைத்திருக்கும்,
அதற்காக, இடியோசையை ஒத்த என் தரப்பு
ஆர்ப்பரிப்பு.
*
மூலம்:
“curtain” By Charles Bukowski
எழுத்து
அநேகமாக
இது ஒன்று மட்டுமே
உள்ளது
உனக்கும்
சாத்தியமற்றவைக்கும்
இடையினில்.
மதுவோ
மங்கையின் அன்போ
செல்வமோ
அதற்கு
ஈடாகாது.
எழுத்தை
தவிர்த்து
எதுவும்
உன்னைக் காப்பாற்றாது.
சுற்றுச் சுவர்கள்
தகர்ந்திடாமல்
தொடரும் கூட்டம்
தொலைந்திடாமல்
காக்கிறது.
இருட்டை
வெடித்துச்
சிதறடிக்கிறது.
எழுத்து
முடிவானதொரு
உளநோய் மருத்துவர்,
அனைத்து தெய்வங்களிலும்
கருணைமிரு
தெய்வம்.
எழுத்து
மரணத்தைத்
துரத்தும்.
அதற்கு
விட்டுப் போகத்
தெரியாது.
வலிமிகும் வேளையில்
எழுத்து
தனக்குத் தானே
சிரித்துக் கொள்ளும்.
அது ஒரு
கடைசி எதிர்பார்ப்பு,
கடைசி விளக்கம்.
இதுதான்
எழுத்து.
*
மூலம்:
“writing” By Charles Bukowski