அணுவிற்கணுவாய்

ஔவைப் பிராட்டி தன் விநாயகர் அகவலில் சொல்கிறார்: “அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய், கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி.”

யாமறிந்த புலவரிலே பூமிதனில் யாங்கணுமே பிறந்திராத கம்பர் பாடல் இது.

‘சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றிலும் உளன்; இந்நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்..’


அணுவின் ஓர் தன்மையைச் சொல்லி, அதை 100 பகுதியாகப் பிரிக்க முடியும் என்ற கம்பன், அதற்குக் ‘கோண்’ என்றும் பெயர் சூட்டுகிறான்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் பாரதத்தில் அணுவியல், அணுத்தன்மை, புவியீர்ப்பு, இயக்க விதிகள், அணுவின் அமைப்பு என்பதைப் பற்றிய சூத்திரங்கள் இருந்திருக்கின்றன என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ‘வைசேஷிகம்’ என்பது அணுவைப் பற்றி மகரிஷி கனாதா (Kannada) எழுதிய சூத்திரங்கள் அடங்கிய நூல். சூத்திரங்கள் என்பவை புரிவதற்குக் கடினமாக இருக்கும் விஷயங்களை, சுருக்கமாக, நினைவில் நிற்பதற்கு ஏற்ற வழியில், அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் சொல்வதாகும். நம் திருக்குறளை நினைவில் கொள்ளுங்கள்.

நமது சனாதன தர்மத்தில், வேதத்தில் நம்பிக்கை கொண்டு இயங்கிய ஆஸ்தீகர்களும் உண்டு; தனியே தத்துவம் சொன்ன நாஸ்திகரும் உண்டு. வியப்பு என்னவென்றால் வேதத்தின் சான்றாண்மை கொண்டு செயல்பட்ட ஆஸ்தீகர்களிலும் இரு பிரிவுகள்- இறை நம்பிக்கையாளர்கள், இறைமை நம்பிக்கையாளர்கள்; இந்த இரண்டாம் பிரிவினர் இறை எதிர்ப்பாளர்களில்லை- இவர்கள் Athiests. வேறெந்த மதத்திலும் இருமைகளை-அதாவது ஆன்மீகம், நாத்திகம் என்ற பிரிவுகளைப் பார்க்கலாம். நமது தர்மம், எத்தனை அழகாக முப்புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. கீழே ஒரு அட்டவணை தருகிறேன்.

வேதங்கள் >>ஆன்மீக வாதிகள்; நாத்திகர்கள்

ஆன்மீகர்கள் >> இறை ஏற்பாளர்கள்; இறை எனும் கோட்பாட்டை அசைப்பவர்கள்; இயற்பியல் சார்ந்த பிரபஞ்ச நோக்கு கொண்டவர்கள்.

நாத்திகர்கள் >>> பௌத்தர்கள், சமணர்கள், சார்வாகனர்கள்.

இறை ஏற்பாளர்கள் >>> யோகிகள், மீமாம்சகர்கள், வேதாந்திகள்.

இறை எனும் கோட்பாட்டை அசைப்பவர்கள் >>> சம்க்யா, (இருமை) ந்யாயா, (தர்க்கம்) வைசேஷிகம் (ப்ரபஞ்ச உருவாக்கம்)

வைசேஷிகம் இந்த அகிலத்தை, அதன் கட்டமைப்பினை, அது ஆறாக, மலையாக நெருப்பாக, வெளியாக, காற்றாக, நீங்களாக, இருப்பதைப் பற்றி, வெவ்வேறு பொருள், வெவ்வேறு வடிவம் அணுவின் கூட்டமைப்பால் பெறுவதைப் பற்றிப் பேசுகிறது.

வைசேஷிகத்தில் 10 பிரிவுகளில் 373 சூத்திரங்கள் சொல்லப்படுகின்றன. முதல் பிரிவில் 48 சூத்திரங்கள் உள்ளன. பொதுவாக, பொருட்கள் (திரவியங்கள்), அணுத் தன்மை, அவற்றின் குணங்கள், அவற்றால் இயலும் வினைகள், போன்றவை வருகின்றன. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், திரவியங்களில் (த்ரவ்யா- பொருட்கள்-வஸ்து -பதார்த்தங்கள்) வழக்கமான நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று, இவற்றுடன் காலம், வெளி, மனது, ஆன்மா போன்றவற்றின் தன்மைகளும் பேசப்படுவதுதான். இதில் ‘திக்’ (dik) எனும் வரையறை திசைகளை மட்டும் குறிப்பிடுவதில்லை. ‘इत् इदम् इतियत:तत् दिश्यम् लिन्हम्- எது அறிவாற்றலைத் தருகிறதோ அது இவ் வெளியிலிருந்து வருகிறது. வெளியும் ‘திக்’ எனும் பொருளிலும் சொல்லப்படுகிறது.

पृिथयापःतेजो वायुराकाशं कालो दगामा मन इित िया-ण ॥1.1.5

முதல் நான்கும் புலன்களால் உணரப்படும் தன்மையுள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று என்பன; வெளி, மனம், காலம், ஆன்மா நாம் உணராதது. இந்தப் பின்நான்கும் இருக்கிறது என்பதறிவோம்; ஆனால் பௌதீக இருப்பாகச் சுட்டுவதும், உணர்வதும் கடினம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று இவைகள் அணுக்கூட்டுக்களாகப் பரிணமித்து மனம் என்ற ஓர் அணுவுடனும் சேர்ந்து பௌதீக உலகைக் காட்டுகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் இயங்கும் தன்மையுள்ள மேற்குறிப்பிட்ட ஐந்தும் பிரபஞ்சக் கட்டமைப்புகள். எந்தப் பொருட்களை உணரமுடியுமோ, எவற்றில் இயங்கும் தன்மை உள்ளதோ அதுவே உலகமாகத் தென்படுகிறது. இக்கருத்தை நடராஜ நடனத்தில் நாம் உணரலாம். இதை விடவும் ஆழமான அர்த்தம் அந்த நடேச உருவத்திற்கு இருக்கிறது. ஃபீல்ட் தியரியைப் பற்றிப் பேசும்போது அது குறித்துப் பார்ப்போம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று என்பவை நித்தியமானவை அல்ல; மனம் நித்தியமானது.

பிரபஞ்சச் சுழற்சியின் இறுதி நிலையில், மகரிஷியின் கூற்றுப்படி பதார்த்தங்கள் நிர்மூலமாவதில்லை; ஆனால், தொகுப்பு இயங்காமல் அமைதியாகிவிடுகிறது. இயக்கம் இல்லையேல் காட்சியில்லை. இதன் அடிப்படையில், நேரம், வெளி என உணரப்படுவதே அணுக்களின் உட்செயல்பாடுகளால் என்று சொல்கிறது வைசேஷிகம்.

அப்படியென்றால், நேற்று, இன்று, நாளை என்பதே என்ன? நேரம் என்பதே செயல்படுதலால் விளையும் ஒன்று என்றும், இந்தப் பாகுபாடு இயற்கையின் தோற்ற மாறுதல்களால் உணரப்படும் ஒன்றேயன்றி வேறொன்றில்லை என்றும் அவர் சொல்கிறார். உதாரணமாக, கதிரவன் உதிக்கும் பொழுது பகலெனவும், அவன் மறைவதை இரவெனவும், நாழிகையால் தினத்தைப் பகுத்தும், அனைத்தும் நடைபெறுகின்றன. எனவே மகரிஷி நேரத்தை ‘க்ரியா விசேஷன்’- இயங்குதலின் விசேட அம்சம் என்று சொல்கிறார். நம் இந்திய அண்டவியல் மாதிரிகளில், பிரபஞ்ச உருவாக்கத்திற்கும், அதன் ஒடுக்கத்திற்குமான ஓய்வு வேளையில் நேரம் செயல்படாது.

அணு என்பது நிரந்தரமானது; அதைக் காரணத்திற்கு உட்படுத்தமுடியாது. அது இருப்பது என்பதற்கான காரணங்கள் தேவையற்றது. அணுவே இந்த வாதத்திற்கு எடுத்துக்காட்டு. வேதத்தில் இதற்கான ஆதாரம் இருக்கிறது என மகரிஷி சொல்கிறார். இந்த வகையில் அணுவை வரையறை செய்யும் சூத்திரம் இது.(4.1.1 &2)

सदकारणावन्नित्यम् तस्य कार्य लिन्गम्

இரண்டாவது பகுதியில் 67 சூத்திரங்களில் திரவியங்களின் குணங்கள் சொல்லப்படுகின்றன. புலன் உணர்ச்சிகள், நித்யம், அநித்யம், வெளி, நேரம், மனது இவைகளுக்குள் இருக்கும் அணுவின் குணங்கள் வெளியாகின்றன. உதாரணமாக பாலின் சுவைக்கும், நீரின் சுவைக்கும் இருக்கும் வேறுபாடு. அணுக்கூட்டமைப்பினால் திரவியங்களின் குணங்கள் கொள்ளும் மாறுதல்களை இதில் மகரிஷி சொல்கிறார்.

41 சூத்திரங்கள் மூன்றாம் பகுதியில்; மனிதனுக்கு எழ வேண்டிய கேள்விகளைப் பற்றிச் சொல்கிறார். அறியும் வேட்கை, அறிதல், அறிந்ததை தீவிரமாகப் பரிசீலித்தல், ஆன்மாவை உணர்தல் ஆகியவை முக்கியமாக இடம் பெறுகின்றன. இதற்கும் அணு அறிவியலுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கலாம். பொருளின் தன்மை, குணம், இவற்றைப் பயில்வதே அணு அறிவியல். மேலும் எந்தப் பிரிவினைச் சார்ந்த வேத உடன்பாட்டாளர்களும், அதன் மறுப்பாளர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒன்று உண்டு. அது தர்ம வழியில் செயல் புரிந்து பொருளீட்டி அதனால் களிப்புற்று, பின்னர் விடுபடலை நோக்கியப் பயணமாக வாழ்வை வகுத்ததுதான்.

நான்காவது பகுதியில் 25 கோட்பாடுகள் வாயிலாக சத்யம் மற்றும் நித்யத்தைப் பேசுகிறார் அவர். அணு என்ற கோட்பாடு, பரிமாணம், நம் அறிவாற்றல், யோனிஜா ( உதாரணம் : இராமன் பிறப்பு), அயோனிஜா (சீதையின் பிறப்பு) இவைகள் இடம் பெறுகின்றன.

ஐந்தாம் பகுதி மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. 44 கோட்பாடுகள் உள்ளன. இதில் செயல், இயக்கம், வேகம், புவியீர்ப்பு சக்தி, மற்றும் புலனாகாத சக்தியைப் பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இவர் பேசியிருக்கிறார். ‘கர்மா’ என்பது ஐந்து செயல் வகைகளைக் குறிக்கிறது: ‘உத்ஷேபனா’ என்பது உயர எறிதல், அதன் கிரியை, இயக்கம், வேகம் ஆகியவற்றைச் சொல்கிறது. ‘அவக்க்ஷேபனா’ கீழே வீசுதலைச் சொல்கிறது. சுருங்குவதை ‘அகுஞ்சனா’வும், விரிவடைவதை ‘ப்ரசாரனா’வும், ‘கமனா’ இயக்கத்தையும் சொல்கின்றன.

‘த்ரவ்யா’ எப்படி அணு அறிவியலைச் சொல்கிறதோ அவ்வாறே ‘குருதா’ பதத்தின் மூலம் ‘க்ரேவிடி’ (மூலப் பதம் புரிகிறதல்லவா?) சொல்லப்பட்டுள்ளது. தன் நிறையால் ஒரு பொருள் பிரிந்து விழுகிறது. (ஆப்பிள் விழுந்ததா?-இக்கட்டுரையின் நோக்கம் நாம் அனைத்தையும் தெளிவாக அறிந்திருந்தோம் என்று சொல்வதல்ல. இயற்பியலையும், பிரபஞ்சக் கட்டமைப்பையும் சிந்தித்து தெளிவு பெறும் எண்ணத்தைக் கொண்டிருந்தோம் என்பதைக் காட்டுவதுதான்)

सयोगाभावे गुरुथ्वाम्…. (5.1.7)

இயக்க விதிகளில், நேல் நோக்கி உந்தும் சக்தியையும், கீழே இழுக்கும் விசையையும் சொல்கிறார்.

33 சூத்திரங்களில், பகுதி ஆறு, புலனாகா சக்திகளைப் பற்றிப் பேசுகிறது- ‘அதிர்ஷ்டம்’- எங்கோ அடர் மழை பெய்கிறது- இங்கே குளிர்ச்சியாக இருக்கிறது. ஒரு குட்டிக் கதை பார்க்கலாமா? வயதான ஒரு தம்பதியர் மாலை நடைக்குச் செல்கையில் தாங்கள் படித்த பள்ளி வரை சென்று வரலாமெனப் போகிறார்கள். வழியில் கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் கிடக்கின்றன. ‘கண்டெடுத்தவருக்கே சொந்தம் என்று மனைவியும், காவல் நிலையத்தில் ஒப்படைப்பது தான் சரி என்று கணவரும் சண்டையை ஆரம்பிக்கிறார்கள். அவ்வழியே வந்த ஊர்க்காவலரிடம் மனைவி ‘இவருக்கு மறதி அதிகமாகிவிட்டது. எங்கள் பணத்தையே யாருடையதோ எனச் சொல்லி காவல் நிலையத்தில் தர வேண்டுமென்கிறார்’. காவலருக்கு சந்தேகம்; “நீங்கள் சொல்லுங்கள், சார்” என்றதும் முதியவர் ‘நானும், இவளும் ஸ்கூலுக்குப் போனோமா’ என்று ஆரம்பிக்கிறார். காவலர் அந்தப் பெண்ணிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு ‘இந்த வயதில் ஸ்கூலா? பாவம், கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

ஈவதையும், அதற்கான நன்றியாகச் செயல்படுவதையும் இந்தப் பகுதி சொல்கிறது. (குட்டிக் கதையை மறந்து விடுங்கள்.) இயற்கை நமக்குத் தருவதை நாம் சரியான வழியில் திருப்பித் தர வேண்டும். எங்கோ நாம் போடும் விதைப் பந்துகள் நாளை ஒரு வனமாகலாமல்லவா? செயல் புரிவது, செயலாற்றாமல் இருப்பது ஆகியவற்றின் நன்மை, தீமைகளையும் இது எடுத்துச் சொல்கிறது.

53 சூத்திரங்கள் உள்ள ஏழாம் பகுதி நிலையாக இருப்பவைகளைப் பற்றியும், நிலையற்றவைகளைப் பற்றியும் சொல்கிறது. அணு என்பது நித்யமானது; அது கோள வடிவத்திலுள்ளது ‘निथ्य परिमणड्लम्’. இதில் ‘ ‘பரிமண்டலம்’, என்ற சொல்லின் சரியான மொழி பெயர்ப்பு ‘ஒரே ஒரு கோளத்தைக்’ குறிப்பிடுவதில்லை, அது அவர் உணர்த்திய வடிவில் இன்று நம்மால் பொருள் கொள்ள முடியவில்லை’ என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

எட்டாம் பகுதியில் 17 கோட்பாடுகள், தன்னை அறியும் அறிவாற்றலைச் சொல்கின்றன. புலன் உணர்வு, ஞானம், எத்தனை விதமான குணங்கள், ஞானங்கள் என்று சொல்லி ‘சிந்தித்து, கேள்வி கேட்டு, பரிசோதித்து, அறிந்து கொள்’ என்று அழகாகச் சொல்கிறது.

ஒன்பதாம் பகுதியிலும் 17 சூத்திரங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இல்லாதிருப்பவை (Non existence) பற்றி அற்புதமாகப் பேசுகிறது. ஒரு கருத்துருவாக இதை எடுத்துக் கொள்கிறது. ‘வெற்றிடம்’ என்பதையும் பொருளாகக் கொள்கிறது. பொருள் என்று கொண்டால் புலனுக்குப் புலப்படுவதும் உள்ளது; புலப்படாத மனதும் உண்டு. ஆனால், இத்தகைய குணங்கள் இல்லாததாலேயே ‘வெற்றிடம்’ பொருட்தன்மை கொண்டதாகிறது. “இது காற்றல்ல- நகர்வு இல்லாமையால்; இது நீரல்ல-குளிர்ச்சி இல்லாததால்; இது நெருப்பல்ல- பிரகாசம் இல்லாததால்; இது பூமியல்ல- தொட முடியாததால். ரூப, ரஸ, கந்த ஸ்பரிச என்ற எந்தக் குணங்களும் இல்லாவிடிலும், வெற்றிடம் இருக்கிறது. ஒளியின் பிரதிபலிப்பினால் வஸ்துக்களை அறிகிறோம். ஒளியேதும் இல்லாதிருப்பது வெற்றிடம். ஒளிக்கான ஆதாரம் இல்லாமலிருப்பது வெற்றிடம் இல்லை; மனதால் சிந்திக்கக்கூடிய நுணுக்க நிலையிலும் கூட ஒளியற்று இருப்பது வெற்றிடம்.” இதை प्रौढकाशकतेजःसामायाभावः என்று சொல்கிறார் மகரிஷி. அதாவது, வெற்றிடத்தின் மிகச் சிறிய துகளிலும் கூட ஒளித்துகள் இல்லை. எளிதான ஒரு எடுத்துக்காட்டாக பாதி நீர் உள்ள கலத்தை எடுத்துக் கொள்வோம். நம் கவனம் நீர் இல்லாத அந்தப் பகுதியில் இல்லை; நீரில் தான் இருக்கிறது; ஆனால், காலியான பகுதி இருக்கிறதல்லவா?

பத்தாவது பகுதியில் 16 சூத்திரங்கள். சுகம், துக்கம், ஆழ்ந்த ஆய்வு முறைகள், மாயையையும், உண்மையையும் பிரித்தறிதல், தானே பரிசோதித்தல், கண்டடைதல், அதை மறுபரிசீலனைக்கு உட்படுத்துதல் என்று ஒரு அறிவியல் ஆய்வு வழிகாட்டி போலிருக்கிறது. நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மானுடவியலும், அறிவியலும் வைசேஷிகத்தில் இணைந்தே வருகின்றன.

கீழ்க்காணும் அட்டவணை எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும்.

பொருட்களும், குணங்களும்

மேற்கூறியவை அனைத்தையும் ‘பாவ’ எனும் கோட்பாட்டில் சொன்னவர், ‘அபாவத்தில்’ வெற்றிடம் பற்றிச் சொல்கிறார். அதற்கென விருப்பம், விசை, தாக்கம், ஈர்ப்பு, திரவத் தன்மை, சக்தி இல்லாத தன்மையால், அறியும் ஒன்றாக அது இருக்கிறது.

இப்படித் தொகுக்கலாம்.

 • நிரந்தரமாக உள்ளவை அணு மற்றும் மஹத் (பரமாணு)
 • வஸ்துக்களை 9 வகைகளாகக் கொள்ளலாம்.
 • அவற்றிற்கு 17 பண்புகளிருக்கின்றன- நிறம், சுவை, வாசனை, தொடு உணர்ச்சி, இணைதல், துண்டித்தல், தனிப்பட்ட குணம், முதன்மை, முதன்மையற்றது, புத்தி, சுகம், துக்கம், இச்சை, துவேஷம்
 • செயல்களும் அவற்றின் இயக்க விதிகளும்.
 • சாமான்ய தன்மைகள், விசேஷத் தன்மைகள், உள்ளார்ந்த தன்மைகள் பொருட்களுக்கு இருக்கிறது.
 • இரு விதமான பொருட்கள் உள்ளன. நிரந்தரமானவை, அவ்வாறு இல்லாதவை. அணு, காலம், வெளி இவை மூன்றும் தங்கள் இயல்பினாலேயே நிரந்தரமாக உள்ளன.
 • பார்ப்பவர், பார்க்கப்படுபவை, என்பதை கவனிக்கப்படும் பொருள் அணு என்றும், பரிசோதனையாளருக்கு பிரபஞ்சம் அப்படித் தென்படுவது பார்வையாளர் அறிந்த விஷயங்களால் உருவாகிறது என்றும் சொல்கிறார்.
 • நிரந்தரத்தின் அடிப்படை அணுத்தன்மை
 • அதன் பரிமாணம், அணுவைப் பற்றிய பார்வையில் தென்படுகிறது.
 • அறிவு பூர்வமாக சிந்தியுங்கள், சோதித்துப் பாருங்கள், மீள் பரிசோதனை செய்யுங்கள், கேள்வி கேளுங்கள், முக்தி பெறுங்கள் என்று 600 முன் பொது யுகத்தில் ஒருவர் சொல்லியிருக்கிறார்.
 • இந்த நூல் ஒன்றுதான் உலகளவில் அணு அறிவியலைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல்.

உசாவிகள்:

சிவோகம் காணொலி, சில உரைகள்

https://arxiv.org/ftp/physics/papers/0702/0702012.pdf

https://www.ece.lsu.edu/kak/roopa51.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.