எரியும் காடுகள்-3

This entry is part 3 of 4 in the series எரியும் காடுகள்

8

எனக்கு நினைவு திரும்பியபோது என் குடிலில் ஒரு நாற்காலியில் இருந்தேன். கணப்பில் நெருப்பு எரிந்தது. என் மீது தடித்த போர்வை இருந்தது. என் மொத்த தோல்பரப்பும் முள்ளாகக் குத்தியது. சூழ்ந்திருந்த எல்லாம் மெலிதாக மின்னின.

நான் மெதுவாகக் கண்ணைக் கொட்டினேன். தலையைத் திருப்பினால், அது இரண்டாக வெடிப்பது போல இருந்தது. இன்னொரு நாற்காலியில் ரால்ஃப் இருந்தார். கையில் ஒரு பியர் புட்டி வைத்திருந்தார். எங்களிடையே இருந்த சிறு மேஜையில் இன்னொன்று இருந்தது. ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்து இரு காலி புட்டிகள் இருந்தன.

‘அதைக் குடிக்கிறது முழு முட்டாள்தனமாக இருக்கும்,’ அவர் சொன்னார். ‘ஆனால் இன்னக்கி வெளில போனது முதல்ல செஞ்ச படு முட்டாள்தனமான வேலை.’

என் கையைப் போர்வைக்கு வெளியே எடுக்க முடிவதற்கு எனக்கு நிறைய நேரம் பிடித்தது. புட்டியை எடுத்தால், கையில் இருபது பௌண்டுகள் கனம் இருப்பதாகத் தோன்றியது. என் வாய்க்குச் சேருமுன், அது கிட்டத்தட்ட கீழே நழுவி விழ இருந்தது. பேச முயலும் முன், பாதியை மெல்லக் குடித்தேன்.

‘சிகரெட்.’

என் நாற்காலியின் கைப்பிடியை நோக்கி ரால்ஃப் தலையசைத்தார். அவை அங்கே இருந்தன என்பதை நான் கவனிக்கக் கூட இல்லை. வீங்கிப் போய், செத்து விட்டதாகத் தோன்றிய விரல்களால் ஒரு வழியாக ஒரு சிகரெட்டைக் கொளுத்தினேன். ’நான் எப்டி இங்க வந்து சேர்ந்தேன்?’

‘கரையிலேர்ந்து தூக்கிக்கிட்டு வந்தேன். அட, இழுத்துகிட்டு வந்தேன். காயாக்கை பத்தடி தூரம் வரை நீங்களே கொண்டுட்டு வந்தீங்க, அப்றம் வெளில இறங்கப் பார்த்தீங்க. நீங்க கீழெ விழறத்துக்கு முன்னெ நான் வந்து பிடிச்சுக்கிட்டேன்.’

‘நன்றி. எனக்காகக் கரைக்கு வந்து பார்த்துக்கிட்டிருந்தீங்களே, அதுக்கும் சேர்த்து.’

அவர் பதிலொன்றும் சொல்லவில்லை. குடிலில் இருப்பது கனவு போல, விசித்திரமாக இருந்தது. அதெல்லாம் முடிந்து போனது, என்னில் ஒரு பகுதி அதை ஏற்றுக் கொண்டது. நான் திரும்பி வந்து சேர்வேன் என்பது எனக்கு நிச்சயமாக இருந்திருக்கவில்லை. நான் மிகவும் பயந்திருந்தேன். எங்காவது விடாமல் பனி கொட்டாது, கதகதப்பாக இருக்கும் இடத்தில், நான் எங்கே இருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்த இடத்தில் இருப்பதென்பது… நாம் சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சில விஷயங்கள் நமக்குத் திரும்பக் கிட்டும்போது மாயாஜாலம் போலத் தெரிகின்றன. அதனால் எளிதில் நொறுங்கக் கூடியவையாக, நம்பி இருக்க முடியாதவையாகவும் தெரிகின்றன.

’இன்னும் கொட்டறதா வெளிலெ?’

‘ஆமா.’

‘கடவுளே.’

‘இது பெரிசுல்ல. நீங்க ஏன் அத்தனை நேரம் ஏரீல தங்கினீங்க?’

‘நான் தொலைஞ்சு போயிட்டேன்ல. ரொம்ப தூரம் தள்ளிப் போயிட்டிருந்தேன், சுத்தி எதுவும் தெரியல்லை எங்கே இருக்கேன்னு கண்டு பிடிக்கவும் முடியல்ல. ஒண்ணையுமே பார்க்க முடியல்லை.’

‘நீங்க திரும்ப வந்து சேர்ந்தது அதிருஷ்டம்தான்.’

‘அப்டித்தான் தோணுது.’

‘ஏரில ஒர்த்தர் காணாமப் போறது இருக்கே – அது நல்லதில்லெ.’

‘முன்னாடி ஆயிருக்கா அப்டி?’

அவர் ஏதோ கவனமாக இருந்தார், அவருக்கு வேறேதோ மனதில் இருந்தாற்போலத் தெரிந்தது. ‘இல்லியா பின்னே.’

‘எவ்ளோ தடவை?’

‘ரெண்டு மூணு தடவை. அதாகி நாளாச்சு.’

‘சேர்ந்து போனாங்களா?’

‘தனித் தனியா.’ அவர் அந்தக் கேள்வி அறிவற்றது என்றார்போலப் பதில் சொன்னார்.

‘என்ன ஆச்சு?’

‘உங்களெப் போலத்தான். போயிருக்கக் கூடாத போது போனாங்க.’

‘யாராவது அவங்க இல்லைன்னு தேடினாங்களா?’

அவர் தலையசைத்து மறுத்தார்.

‘நான் தொலைஞ்சு போய்ட்டேன்னு யாராவது தேடி இருப்பாங்களா?’

அவர் என் கண்களுக்குள் பார்த்தபடி சொன்னார், ‘அப்டி இருக்காதுன்னு நான் நெனைக்கறேன்.’

எனக்குக் குழப்பமாக இருந்தாலும், ரால்ஃப் அன்று வேறு விதமாக இருப்பதாக உணர்ந்தேன். என் நிலைமை மீது அக்கறையாலோ, அல்லது என்னைப் பற்றிக் கவலைப்பட்டு நேரம் செலவழித்ததாலோ இருக்கலாம். அல்லது அதெல்லாம் காரணமில்லாமலும் இருக்கலாம். ‘நமக்குள்ளெ இப்ப எல்லாம் சரியா இருக்கா?’

‘உங்களுக்கு இன்னொரு பியர் வேணுமா?’

‘ஏற்கும்.’

மௌனமாகக் கொஞ்ச நேரம் குடித்தோம்.

‘சொல்லுங்க என்ன நடந்தது? அங்கே என்ன ஆச்சு?’

நான் கொஞ்சம் மயக்கமாக இருந்தேன். என் தோல் அத்தனை வலிக்கவில்லை, மரத்துப் போன இடத்திற்கு உணர்ச்சி திரும்பும்போது குத்துகிற உணர்வு போல மந்தமான வலியாக மாறி இருந்தது. காது வலியும் குறைந்து வந்தது, ஆனால் யாரோ தொலைவில் பாடுகிற மாதிரி இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது.

‘பனி பலமாக விழ ஆரம்பித்தது, எனக்குப் பார்வையே கிட்டாமப் போச்சு. திரும்பி வர முயற்சி பண்ணினேன், நான் சரியாத் திரும்பி வரா மாதிரி தோணிச்சு, ஆனா அது தப்பாயிருந்தது.’

‘நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியல்லைன்னா, தப்புன்னு எப்படித் தெரிஞ்சது?’

‘நான் அங்கே முன்னாடி பார்க்காத ஒண்ணைப் பார்த்தேன்.’

அவர் நெருப்புக்குள் பார்த்தபடி இருந்தார், என் கண்களைத் தவிர்த்ததாகத் தோன்றியது. ‘நீங்க என்ன பார்த்ததா நினைக்கிறீங்க?’

‘ஒரு தீவு.’

‘அங்கே நிறைய அதெல்லாம் இருக்கே.’

‘இதைப் போல இல்லை. இது பெரிஸ்சா இருந்தது, அதுல ஒரு வீடும் இருந்துது.’

அவர் தலையசைத்து மறுத்தார். ‘அங்கே எதுலயும் குடியிருக்கறவங்க கிடையாது.’

‘இதுல இருந்தது.’

‘முன்னெ ஒரு காலத்துல இருந்திருக்கலாம்.’

‘இல்லை. அதுல ஒரு மரத்தளம் இருந்தது. அதுல ஒருத்தர் நிக்கறதைப் பார்த்தேன்.’

‘நீங்க யாரைப் பார்த்ததா நினைக்கிறீங்க?’

‘ஒரு பொண்ணு. பிராயம் முப்பதுகளோட முடிவில இருக்கும், இல்லெ நாற்பதுகள்லெ துவக்கத்தில இருப்பாங்க. நடுத்தரமா நீண்ட முடி, சுருட்டை. ரொம்பத் தெளிவாப் பார்க்க முடியல்லெ.’

‘நீங்க எதையுமே பார்க்கல்லை.’

‘மன்னியுங்க, என்னது?’

‘அங்கே யாருமே வாழல்லை. வீடு இருக்கிற ஒரு தீவும் அங்கே இல்லை. நீங்க அதைப் பார்க்கல்லை. பார்த்ததா நினைக்கிறீங்க.’

‘உளறல்.’

‘அதான் உண்மை.’

‘நீங்க சொல்றது புரியல்லை. நீங்க இதை ஏன் சொல்றீங்கன்னும் எனக்குத் தெரியல்லை.’

‘ஏன்னா, அதான் உண்மை.’

‘நான் என்ன பார்த்தேன்னு உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லெ.’

‘ஆமாம், எனக்குத் தெரியும். நீங்க எதையும் பார்க்கல்லை.’

நாங்கள் மௌனமாகக் குடித்து முடித்தோம். பிறகு ரால்ஃப் எழுந்து நின்றார்.

‘இந்த வாரம் முடியற வரைக்கும் இங்கே நீங்க இருக்கலாம்,’ ரால்ஃப் சொன்னார். ’அதுக்கப்புறம், நம்ம வேலை முடிஞ்சதுன்னு நெனைக்கறேன்.’

9

அடுத்த நாள் காலை விழித்தபோது, நான் இன்னும் அதே நாற்காலியில், அதே இடத்தில் இருந்தேன். ஜன்னலுக்கு வெளியே இருந்த உலகம் வெண்மையாக இருந்தது. நெருப்பு அணைந்து சில கங்குகள் ஒளிர்ந்தன, என் மூக்கு நுனி குளிர்ந்திருந்தது. போர்வையை இழுத்து முகத்தை மூட முயற்சித்தேன், ஆனால் என் உடல் பூராவும் வலித்தது. கைகள், தோள்கள். மிக மோசமாக வலித்தது  முதுகுப் புறத்தில்தான். வயிறும் வலித்தது, ஆனால் என் உடலில் மோசமாகப் பயன்படுத்தப்பட்டதாக, அளவு மீறி இழுக்கப்பட்டு நசுக்கப்பட்டதாக, பாரமாக உணராத பாகமே இல்லை. கொஞ்சம் தெம்பு வரும் வரை அந்த நாற்காலியிலேயே இருந்தேன், பிறகு தடுமாற்றத்தோடு மெதுவாக அதிலிருந்து எழுந்திருந்தேன். நெருப்பில் சில கட்டைகளைப் போடும் வேலை அத்தனை துன்பமாக இருந்தது, ஒரு கோப்பை காஃபி தயாரித்தேன், அதை எடுத்துக் கொண்டு குடிலின் ஆகச் சிறு குளியலறைக்குப் போனேன். என் உடல் மீது கதகதப்பான நீரை ஓட விட்டேன், என் உடல் என்னுடையது என்ற உணர்வு திரும்பும்வரை அப்படியே நின்றேன்.

காலைப் பொழுது பூரா நாற்காலியிலேயே கழித்தேன், தொடர்ந்து சூடான நீரைக் கோப்பை கோப்பையாகக் குடித்தபடி, சற்று தேறியதாக உணர்வதற்காகக் காத்திருந்தேன்.  மாலை வருவதற்குள், ஜன்னலருகே இருந்த ஒரு பெஞ்சுக்கு நகர்ந்திருந்தேன். இன்னும் பனி பெய்து கொண்டிருந்தது, ஆனால் பலமாக விழவில்லை.

நேற்று நடந்தது ஒரு வருடம் முன்பு நடந்தது போல இருந்தது. தொலைந்து போய், திண்டாடிச் செலவழித்த பல மணிகள், அந்த நேரம் தீவிரமாக உண்மையாக இருந்த போதும், இப்போது ஒன்றுமில்லாததாகத் தோன்றின. ஏதோ குறிப்பிட்ட சில பகுதிகளும், வேறுபட்டதாகத் தோன்றியதும் மட்டும் உருப்பெருக்கித் தெரிய ஆரம்பித்தன, வெண்பனி மூட்டத்தில் தெரிந்த தீவுகள் போலவிருந்தன.

நிச்சயமாக அவற்றில் முக்கியமானது, அந்த வீடுதான். பிறகு அந்த மரத்தளம், அதன் மீது நின்ற நபர். என் கண்களை மூடினால் அவளை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது, அதாவது அந்த நேரத்தில் எத்தனை என்னால் பார்க்க முடிந்ததோ அத்தனை. ரால்ஃபுக்கு நான் கொடுத்த விவரணை அவ்வளவு கூர்மையாக இல்லை, ஆனால் அது போதுமானதாக இருந்திருக்கும். அந்தப் பகுதியில் முழு நேரம் குடியிருப்பவர்கள் அத்தனை இருக்க வாய்ப்பில்லை. அந்தப் பெண் கடைகளுக்கு வர வேண்டி இருக்கும், மதுக்கடைக்குக் கூட வந்திருப்பாள். ரால்ஃப் இங்கே தன் வாழ்நாள் பூராவும் இருந்திருக்கிறார். அவள் யார் என்று அவருக்குத் தெரிய நிறைய வாய்ப்பு உண்டு. பின் அவர் ஏன் அதை மறுத்தார், அவள் அங்கே இருக்க முடியாது என்று ஏன் சாதித்தார்?

கொஞ்சம் யோசித்தால், நான் அவளைப் பற்றிச் சொல்வதற்கு முன்பே அவர் தன் மறுப்புக்கு அடித்தளம் போட்டிருந்தார் என்று தோன்றியது- நான் அந்த ஏரியில் என்ன பார்த்ததாக நினைத்தேன் என்று கேட்டார், என்ன பார்த்தேன் என்று இல்லை. அந்த உரையாடல் பற்றிய என் நினைவு கூர்மையாக இல்லை, ஆனால் அந்த நினைவு சரி என்று தோன்றியது.

நான் என் வழியைப் பார்த்துக் கிளம்பிப் போக வேண்டும் என்று (அவர்) சொன்னதை எவ்வளவு தூரம் எடுத்துக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏதும் தவறாகச் செய்யவில்லை, ஏரியில் தொலைந்து போய் கிட்டத்தட்ட சாகும் நிலைக்கு வந்ததால் அவரைத் தவிப்புக்கு ஆளாக்கியதைத் தவிர. ஆமாம், இந்த ஸ்தலம் குளிர்காலத்துக்கு மூடப்பட்டு விட்டது, அதாகி இரண்டு மூன்று வாரங்களாகி விட்டன என்பது உண்மை. என்னைப் போகச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு. ஆனால் நேற்று இரவு வரை நான் அங்கே இருப்பதில் அவருக்கு நிறைவாகத்தான் இருந்தது என்று தோன்றியது.

இதைப் பற்றி யோசித்து அசை போட்டுக் கொண்டிருக்கையில், ஏரிப் பக்கம் ஏதோ அசைவது தெரிந்தது. ரால்ஃபின் குடில் கதவு திறந்தது, அவர் வெளியே வந்தார். அவர் மேலங்கி அணிந்திருந்தார், எங்கேயோ வெளியே போகிறார் என்று தெரிந்தது.

என் குடிலை நோக்கிப் பார்த்தார், என்னை வந்து சோதிக்க வேண்டும் என நினைத்தாற்போல இருந்தது. ஆனால் பனியில் காலை அழுந்தப் பதித்து நடந்து மறுபுறமாக, அவரது பிக் அப் ட்ரக்கை நிறுத்திய இடம் நோக்கிப் போனார்.

சில நிமிடங்களில் அவரது ட்ரக் கிளம்பியது கேட்டது, அவர் ஓட்டிப் போய் விட்டார்.

நெருப்பின் முன் இருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தேன், அங்கே சிறிது நேரம் உறங்கினேன். விழித்தபோது சற்று மேலாக உணர்ந்தேன். அதனால், காஃபியையும், சிகரெட்டுகளையும் எடுத்துக் கொண்டு முன்புறத் தளத்துக்குப் போனேன். பனி இலேசாக விழுந்தது. மங்கிய ஒளி ஊடே விழுந்த துகள்கள் மின்னின.

நான் உறங்கிய போது ரால்ஃபின் நடத்தை மாறியது பற்றிய கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்திருக்க வேண்டும், ஏனெனில் நான் இப்போது எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டதால் அது என் தலைக்குள் முதலாவதாகவும் மையத்திலும் இருந்தது. அந்த மாறுதலுக்கும் நான் ஏரிக்குள் போனதற்கும் தொடர்பு இல்லை என்றே கூட இப்போது எனக்குத் தோன்றியது.

நான் உள்ளே போனேன். அவர் என்னை குடிலுக்குள் கொண்டு வந்த பிறகு நாற்காலியில் எத்தனை நேரம் நான் மயங்கிக் கிடந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது அரை மணிக்கு மேல் இருந்திருக்கும். மேஜையில் இரண்டு காலி புட்டிகள் இருந்தன.

குட்டிச் சமையலறைக்கு நடந்தேன், அலமாரியைத் திறந்தேன். கொஞ்சமாக இருந்த என் சாப்பாட்டுப் பொருட்கள் இருந்தன, சில டப்பாக்களும் பாட்டில்களும் இருந்தன. ஆனால் அவற்றின் பின்னே ஒரு சிறு காகிதப் பை முன்பு இருந்தது.

அது போய் விட்டிருந்தது.

10

கொஞ்ச நேரம் அதைப் பற்றி கொதிப்பாக இருந்தேன். உடனடியாக நான் செய்யக் கூடியது வேறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அப்படி ஒன்று இருப்பது சாத்தியமில்லை என்று தோன்றினாலும், ஒருகால் ஏதேனும் விதிமுறை இருக்கிறதோ. வேட்டையாடுவது அனுமதிக்கப்படும் காலங்களில், வேட்டையாடப் போவதற்கென இங்கே ஒரு கூட்டம் ஜனங்கள் வருவார்களாயிருக்கும், வருபவர்கள் தயாராகத்தான் வருவார்கள். அவர்களின் துப்பாக்கி ரவைகளை ரால்ஃப் அவருடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்ளத் தயாராக இருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை.

எப்படி ஆனாலும், அவர் அப்படிச் செய்வதற்கு முன்னால் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும், அவர் முதலில் என் பொருட்களைக் குடைந்து பார்த்திருக்கக் கூடாது.  ஒருவர் நினைவில்லாமல் இருக்கையில் அவர் பொருட்களைக் குடைவதும், அவருடைய துப்பாக்கி ரவைகளை எடுத்துப் போவதும், சரியான செயல்கள் அல்ல.

சிறிது நேரத்தில் பனிப்பொழிவு மறுபடி வலுத்தது.

காத்திருந்து எனக்குக் களைத்துப் போயிற்று.

அவருடைய ட்ரக் திரும்பி வந்த ஒலி எனக்குக் கேட்டிருக்கவில்லை, அதனால் அவர் திரும்பவில்லை என்றாகாது. பனி ஒலிகளில் தந்திரங்கள் செய்யும். அவர் வீட்டில் இல்லையென்றால் நான் ஒரு துண்டுகாகிகத்தில் குறிப்பு எழுதி கதவடியில் நுழைக்கலாம். அதைச் சுருக்கமாகவும், மரியாதையுடனும் எழுதினேன், என் துப்பாக்கி ரவைகளை நான் திரும்பப் பெற விரும்புகிறேன் என்று. என் குடிலிலிருந்து அவரதுக்குப் போகையில், உடனடியாகவே, என் கை விரல்களும், கால் விரல்களும் புகார் சொல்லத் தொடங்கின. முந்தைய தினம் அவை தப்பித்தது பெரும்பாடாக இருந்தது, மறுபடியும் அவற்றின் நலனுக்கு நான் உலை வைப்பதை அவை விரும்பவில்லை.

ரால்ஃபின் ட்ரக் அங்கே இருக்கவில்லை. அவரது கதவு வரை அடிமேல் அடிவைத்து நடந்து போனேன், குனிந்து கதவடியில் என் குறிப்பை நுழைக்கவிருந்தேன், அப்போது எனக்கு ஏதோ தோன்றியது. கதவுப் பிடியை எட்டி அதைத் திருப்பினேன். நினைத்த மாதிரியே, கதவு பூட்டப்படவில்லை.

இன்னொரு வழியில் இதைக் கையாளலாம், அவர் அப்படிச் செய்ததால் நான் எத்தனை எரிச்சலுற்றிருந்தேன் என்பதை, அந்த எண்ணம் எவ்வளவு துரிதமாக எனக்குத் தோன்றியது காட்டியது. அந்தக் குறிப்பை அங்கே நுழைப்பதற்குப் பதிலாக, நான் உள்ளே போகலாம். சுற்றித் தேடலாம். அந்த இடத்தை அலங்கோலமாக்கவோ, அலமாரிகளையும், இழுப்பறைகளையும் தோண்டித் துருவுவதையோ செய்ய மாட்டேன், ஆனால் அவர் நேற்றிரவு தன் வீட்டுக்குத் திரும்பியதும் அந்தப் பையை மேஜை மீது வைத்திருந்தால், அதை நான் திரும்ப எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்.  என் மீது கோபப்படுவது என்பது, அவர் செய்தது என்ன என்பதை முதலில் பரிசீலிக்க வேண்டிய நிலைக்கு அவரைத் தள்ளும்.

இதில் சரியான நெறிமுறை எது என்பதை அறிவது கடினம், எனக்குத் தெரியும்- அவர் இந்த இடத்தின் சொந்தக்காரர், என்ன விதிகளை வேண்டுமானாலும் அவர் விதிக்கலாம், அவர் என் குடிலுக்குள் நுழையக் காரணம் என்னை அவர் மோசமான நிலையிலிருந்து காப்பாற்ற அப்படிச் செய்தார் என்பதெல்லாம் வாதங்களாக வைக்கப்பட முடியும் – ஆனால் நான் அதை எப்படியும் செய்யப் போகிறேன், அதனால் அதைச் செய்வதைச் சீக்கிரம் செய்வது நல்லது.

குடில் வெளியை விடச் சூடாக இருந்தது, ஆனால் அவ்வளவு அதிகம் இல்லை – அவர் நெருப்பை மூட்டி இருக்கவில்லை, நேற்றிலிருந்து வந்த புகை வாடை மிக மெல்லியதாகவும் வலுவற்றும் இருந்தது. அந்தக் குடிலின் அமைப்பு என்னுடையதைப் போலத்தான் இருந்தது, கொஞ்சம் பெரியதாக இருந்தது, நிஜமான சமையலறையும், ஒரு சிறிய இரண்டாவது படுக்கையறையும் இருந்தன. தனியாக வாழும் மனிதர்கள் தம் இருப்பிடம் எப்படித் தோற்றமளிக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றோ அதற்கு நேர் எதிர்மாறாகவோ இருக்கத் தீர்மானம் செய்வார்கள் போலிருக்கிறது. அவர் அந்த நேர்மாறான வழியில் போயிருந்தார். எல்லாம் சீராகவும் எங்கும் ஒழுங்காகவும் இருந்தன. அது ஒரு சிறிய காகிதப் பையைத் தேடுவதைச் சுலபமாக்கியது.

அதை அவருடைய சமையலறையில், மேடை மீது பார்த்தேன்.

அமரும் அறை வழியே திரும்பினேன், என்னுடைய பொருளைத் திரும்பப் பெற்றதில் குழந்தைத்தனமான, மந்தமான, சிறு வெற்றியுணர்வு கிட்டியிருந்தது. எனக்குப் பதினோரு வயதிருக்கையில், பள்ளிக் கூடத்தில் இன்னொரு பையன், என்னுடைய கோலிக் குண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு விட்டான், எனக்கு அது பிடித்தமான கோலிக் குண்டு. அதை ஒரு வழியாகத் திரும்ப வாங்கி விட்டேன், அப்போது நான் உணர்ந்த மாதிரிதான் இப்போதும் எனக்கிருந்தது என்று நினைத்தேன். இந்த நினைவு என் ‘சாதனை’ உணர்வைக் கொஞ்சம் மட்டுப்படுத்தியது, நான் ஏற்கனவே அதைச் சிறியதாகத்தான் நினைத்திருந்தேன், இப்போது அது மேலும் குறைக்கப்பட்டிருந்தது.

இவ்வளவுதான் அங்கே இருந்ததா? நாற்பது வருட வாழ்க்கை எங்கேயும் என்னை அழைத்துப் போகவில்லை, மாறாக ’என்னுடைய பொருள் இது, திரும்பிக் கொடு’ என்று கேட்பதற்குத்தான் கொண்டு விட்டிருக்கிறதா? என் துப்பாக்கி ரவைகளை நான் திரும்ப அடைந்து விட்டேன். என்ன பெரிய சாதனை இது? என்னிடம் துப்பாக்கி கூட இல்லை.

கதவருகே நான் போக சில எட்டுகள் இருந்தன, அப்போது ஏதோ ஒன்று என் கண்களில் தென்பட்டது. அது கணப்பிடத்தின் மேலே இருந்த மேல் மூடியின் மீதிருந்தது. அந்த கணப்படுப்பிலிருந்து நேற்றைய சாம்பல்கள் சுத்தமாக அகற்றப்பட்டிருந்தன.

நான் அதை உற்றுப் பார்த்தேன், அப்படியானால், ரால்ஃபின் நடத்தை நேற்று திடீரென்று மாறியதற்கும், அந்தத் துப்பாக்கி ரவைகளிருந்த பைக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை.

11

எட்டு மணிக்குச் சற்று முன்பு என் கதவு தட்டப்பட்டது. அவர் திரும்பி வந்திருந்தார் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. பின் மாலையில் என் ஜன்னல் வழியே நான் கவனித்திருந்தேன், நடந்தவற்றைப் பற்றி யோசித்திருந்தேன், அவரது ட்ரக் திரும்பியதைப் பார்த்தேன். அவர் என் குடிலைப் பார்க்காமல் தன் குடிலுக்குள் போனார். கொஞ்ச நேரம் கழித்து அவரது புகை போக்கி வழியே புகை சுருண்டு மேலே போனது தெரிந்தது.

நான் கதவைத் திறந்த போது அவர் கையில் ஆறு புட்டிகள் கொண்ட பியர் தூக்கு ஒன்றோடு நின்றதைப் பார்த்தேன். ஆண்களிடையே அதை விட மேலான விதத்தில் மோதல் வந்திருப்பவரின் நோக்கமல்ல என்பதைச் சுட்டும் வழிகள் அதிகம் இல்லை, குறைந்தது உடனடியாகத் தெரிவிப்பது ஏதுமில்லை.

‘எங்கே போனீங்க?’ நான் கேட்டேன், நெருப்பின் முன் நாங்கள் அமர்ந்தபோது.

‘ஒரு சாவுச் சடங்குக்கு.’

‘யார்?’

‘டான். அந்த மதுபானக் கடை தெருக் கோடியில் இருக்கே அதன் சொந்தக்காரர்.’

‘அவருக்கு என்ன ஆச்சு?’

‘செத்துப் போய் விட்டார்.’

‘அப்ப அந்தக் கடை என்ன ஆகும்?’

’இன்று அதை மூடி வைப்பாங்க.’

‘அப்புறம்?’

‘மறுபடி திறக்கப்படும்.’

‘யார் நடத்துவாங்க?’

அவர் என்னைப் பார்த்தார், நான் வாதத்திற்காக அந்தக் கேள்வியைக் கேட்கிறேனா என்று தீர்மானிப்பது போல இருந்தது அது. அது இல்லை, ஆனால் ஒரு மங்கலான புரிதல் அங்கு உருவாவது போலத் தெரிந்தது. அவர் தன் தலையை ஆட்டினார். அந்தக் கேள்விக்குப் பதிலை நானேதான் கொடுத்துக் கொள்ள வேண்டும் போலத் தெரிந்தது.

‘நான் அந்த ரவைகளைத் தேடி வருவேன்னு உங்களுக்குத் தெரியுமில்லையா?’

அவர் தலையசைத்தார்.

‘அப்ப நான் என்ன பார்த்தேனோ அதைப் பார்ப்பேன் என்பதும்.’

மறுபடி தலையசைத்து ஆமோதித்தார்.

‘என்னிடம் நீங்களே சொல்லி இருக்கலாமே, இல்லையா?’

‘நீங்க நம்பியிருக்க மாட்டீங்க. நம்ம கிட்டே மத்தவங்க சொல்றது எல்லாம் இருக்கே, அதுல நிறைய ஒரு பொருட்டாகவே இருக்காது. ஜனங்க தாமே பார்த்தாத்தான் பலதையும் புரிஞ்சுக்குவாங்க. அது உங்களுக்கு ஏற்கனவே தெரியாதா?’

‘இதனாலெ நான் பார்த்தது எனக்குப் புரிஞ்சிருக்குன்னு அர்த்தமில்லே.’

‘நான் உங்க கிட்டே பலதைச் சொல்லி இருக்கேன். நீங்க கேட்டிருக்கீங்க, ஆனா பதிலுக்கு அதிகம் சொன்னதில்லே. எனக்கு உங்களைப் பத்தி எதுவுமே தெரியாது.’

‘நான் யார்கிட்டேயும் அதிகம் சொல்றதில்லே.’

‘அது எனக்குப் புரியுது. அதனாலெதான் அந்தத் தீவைப் பத்தி நான் முதல்லெயே சொன்னேன்.’

‘அப்புறம் அதை விட்டுட்டீங்க,’ என்றேன், ரால்ஃப் என்னைக் கையாண்ட விதம் நான் அவருடைய திறமை என்று நினைத்ததை விட அதிகமான நுட்பம் கொண்டது என்பதைப் புரிந்து கொண்டேன்.

‘அது சரி.’

‘அது எனக்குள்ளெ வேலை செய்யட்டும்னு விட்டீங்க.’

‘அது செஞ்சுதே.’

‘நேத்திக்கி நான் வெளியில புறப்பட்ட போது என்னைத் தடுக்க நீங்க ஒரு முயற்சியும் செய்யல்லை, இல்லியா, இதை நான் இப்பத்தான் யோசிச்சேன்.’

‘அது எப்படியும் நடக்கப் போறது. என்ன நடந்ததோ அது உங்களோட முடிவு. நான் உங்களோட பாதையில நிற்கப் போறதில்லே.’

‘நான் என்ன பார்ப்பேன்னு தெரிஞ்சுக்க விரும்பினீங்க.’

‘ஆமாம்.’

‘ஏன்னா நான் உங்க கிட்டே சொல்லாத எதையோ அது காட்டி விடும்.’

‘புத்திசாலிதான் நீங்க, அப்டித்தானே?’

‘புத்திசாலி, ஆனால் ரொம்ப மெது.’

‘மெதுவாவும் போற இடத்துக்குப் போயிடலாம். வேகமாப் போறதை விட, மெதுவாப் போனா போய் அடையறதை நீங்க புரிஞ்சுக்க வாய்ப்பு கூடுதல்.’

‘அப்ப நான் அங்கே என்ன பார்த்தேன்?’

‘எனக்கு நீங்கதான் சொல்லணும்.’

‘உங்களோட மனைவி,’ நான் சொன்னேன். ‘அந்தத் தீவில் இருந்தது உங்கள் மனைவி.’

‘அப்படித்தான் தோணுது.’

‘அப்டித்தான்னு எனக்குத் தெரியும். உங்களோட குடில்ல அந்தப் படத்தை நான் பார்த்தேன். அந்த மரத்தளத்தில பனியில நின்ன பெண் உங்களோட மனைவிதான்.’

‘சரி.’

‘ஆனா அவங்க செத்துப் போயிட்டதா நீங்க சொன்னீங்க இல்லியா?’

அவர் நெருப்புக்குள் நோக்கியபடி இருந்தார். ‘அவ செத்தாச்சு.’

நாங்கள் கொஞ்ச நேரம் குடித்தோம். அடுத்ததாகப் பேசப் போவது நான் தான் என்று தெளிவாகத் தெரிந்தது.

‘அவங்க மட்டும்தான் அந்தத் தீவுல பார்க்க இருக்கிற ஒரே விஷயமா?’

‘இல்லை.’

‘வேறென்னல்லாம் இருக்க முடியும்?’

‘எனக்குத் தெரிந்திருக்கவில்லை,’ அவர் சொன்னார். ‘அதனாலெதான் அது நடந்த விதத்துல நடக்க வேண்டியதாப் போச்சு. எனக்கு ஏற்கனவே அது நிச்சயமாத் தெரிஞ்சிருந்தது. நான் உங்களோட குடிலுக்குள்ளே இதுக்கு முன்னாடி வந்திருந்தேன், ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னே, நீங்க நடையில போயிருந்தப்பவே.’

‘ஏன்?’

‘நான் என்ன கண்டு பிடிக்க முடியும்னு பார்க்கத்தான்.’

‘என்ன கண்டு பிடிச்சீங்க?’

‘துப்பாக்கி ரவைகள், ஆனால் துப்பாக்கி ஏதும் இல்லை.’

‘அதெப்படி உங்களுக்குத் தெரியும்? நான் ஒரு துப்பாக்கியை காட்டுக்குள்ளே எங்கெயாவது ஒளிச்சு வச்சிருக்கலாமில்லையா?’

‘ஏன்னா நீங்க அப்படிச் செய்யல்லை.’

‘அதெப்படி உங்களுக்குத் தெரியும்?’

‘துப்பாக்கிங்களோட இனிமே உங்களுக்கு ஒரு வேலையும் இல்லை.’

‘நீங்க அதைப் பத்தி ஏன் அக்கறை எடுக்கணும்?’

‘எனக்கு செய்ய வேற ஒண்ணும் அதிகமா இல்லை. உங்க கிட்டே துப்பாக்கி இங்கே இருந்திருந்தா, அது எல்லாத்தையும் கொஞ்சம் மாத்தி இருக்கும்.’

‘என் கிட்டே இல்லை.’

‘அதை நான் நம்பினேன். அந்தத் தீவு எனக்கு அதை உறுதி செய்தது.’

‘என்ன ஆச்சு? அவங்க ஏன் அங்கே இருக்காங்க?’

அவர் நிறைய நேரம் பேசவே இல்லை.

நான் ஃப்ரிட்ஜிலிருந்து மேலும் பியர்களை எடுத்து வந்தேன். சிகரெட் ஒன்றைப் புகைக்க வெளியே சென்றேன். முன்புறத் தளத்தில் புகைபிடித்தேன், பனி கொட்டுவதைப் பார்த்து நின்றேன், அது கருமையான கடல் பின்னே இருக்க முன்னே சிறு ஆவிகள் மிதந்து போவதைப் போல இருந்தது.

நான் உள்ளே சென்று மறுபடி அமர்கையில் அவர் சொன்னார்,’ஒருத்தர் சாவறதைப் பார்க்கிறது ரொம்பக் கஷ்டமான விஷயம்.’

‘அது அப்படி இருக்கும்னு என்னால கற்பனை செய்ய முடியறது.’

‘என் அப்பாவோட அப்படி நான் இருந்தேன். தாத்தா கிட்டேயும் கொஞ்சம் அப்டி ஆச்சு. அப்ப ஆனா நான் நிறைய தள்ளி இருந்தேன். என் அப்பா சாக ரொம்ப நாள் எடுத்துக்கிட்டார். நான் முன்னாடி சொன்னாப்ல, அதெல்லாம் நீளமா, மெதுவா நகர்ந்த பிற்பகல் நேரங்கள். வாழ்க்கைல எந்த கட்டமானாலும் அது ரொம்ப அதிகமான காத்திருப்பு. அது எனக்குத் தெரிஞ்சிருந்தது. ஆனா அதெல்லாம் எங்கேயும் நம்மை அழைச்சுப் போகாது. புதுசாவோ, மேலானதுக்கோ காத்திருக்கறதுங்கறது அத்தனை மோசமானதில்லே. நீங்க ஒரு பொண்ணு உங்களைப் பார்க்கணுனு காத்திருப்பீங்க. வேலை கொஞ்சம் சுலபமாகறத்துக்கு காத்திருப்பிங்க. வசந்த காலம் வரதுக்குக் காத்திருப்பீங்க. சோகம் கரையறதுக்கும் காத்திருப்பீங்க.’

‘சாகறதுங்கறது வேற.’

அவர் தலையசைத்து ஆமோதித்தார். ‘சாகறது வேற விஷயம். அது எங்கேயும் போகற வேலை இல்லே. அது காலம்ங்கற ஒண்ணே சாகறது, ஒவ்வொரு நிமிஷமா, ஒவ்வொரு மணியா. என் அப்பா அதை அத்தனை பெரிசா எடுத்துக்கல்லை. அவர் எப்பவுமே மெதுவான அலையேற்றம் போல இருக்கற ஆள். நான் சொல்றதைத் தப்பாப் புரிஞ்சுக்காதீங்க- அவர் நிறைய வேலை செய்தார். நிறையவே செய்தார். அவரை மாதிரி கடுமையாவும், நிறைய நேரமும் உழைக்கற ஆளை நான் பார்த்ததில்லே. ஆனால் அவருக்குன்னு ஒரு கதி இருந்துது, அது நேரத்தோட இருக்கும், நேர்த்தியா, அமைதியோட இருக்கும், எதுவும் நடக்க நேரம் பிடிக்கற விஷயங்களுக்குத்தான் அவர் பழகி இருந்தார். அவள் அப்படி இல்லே.’

‘உங்களோட மனைவி?’

‘எப்பவும் ஓடிக்கிட்டே இருப்பா. இதைச் செய்யறது, அதைச் செய்யறது, இங்கே அங்கே போகிறது, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கறது. ஆனா அதெல்லாம் அவளுக்குக் காணாமப் போயிடுத்து, அங்கே அவ படுத்துக் கிடந்தா, ஒவ்வொரு நாளா, செய்ய ஏதுமில்லாம, எதையும் நகத்தறத்துக்கு இல்லாம படுத்திருந்தா. அங்கே அடுத்து வேறெ எதுவும் இருக்கல்லை. இருக்கவும் போறதில்லெ. அவளுக்கு அது தெரிஞ்சிருந்தது.’

அவர் என்ன சொல்கிறார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. அதை நான் பார்த்திருந்தேன். அந்தக் கண்ணாடியில் பார்த்தேன், வாரக் கணக்காக, மாதங்களாக, வருடங்களாக.

‘எப்டி அதைப் பண்ணினீங்க?’

‘ஒரு தலையணை. அவள் அப்ப தெம்பில்லாம இருந்தா, ஆனா நான் நினைச்ச அளவு வலுவில்லாம போகல்லை. அவ முழிச்சுகிட்டா.’

‘அவங்க எதிர்த்துச் சண்டை போட்டாங்களா?’

அவர் தோளசைத்து மறுத்தார். ‘இல்லைன்னு நினைக்கறேன். ஆனால் நான் நினைச்சதை விட நிறைய நேரம் ஆச்சு.’ அவர் மிகவும் அலந்தவராயிருந்தார். ‘அவள் தூங்கப் போறதுக்கு முன்னால நாங்க பேசினோம். நல்ல விஷயங்களைப் பேசினோம். அவள் தேறிடுவான்னு அவ கிட்டெ சொல்றதை நான் நிறுத்தி இருந்தேன், அது நிலமையைக் கொஞ்சம் மேலாக ஆக்கித்து, அது அவளுக்கு ஏற்கனவே தெரிஞ்சுமிருந்தது, ஒருத்தர் கிட்டே தினந்தினம் உட்கார்ந்து பொய் சொல்ல நாம விரும்பறதில்லை, அப்படிப் பொய்யிங்களைக் கேட்கறத்துக்கும் நாம விரும்ப மாட்டோம். நாம் நேசிச்சிருந்தோம்னா, நம்மை யாராவது நிறைய நாள் நேசிச்சிருந்தாங்கன்னா, நமக்குள்ளே இருக்கற கடைசி நாட்கள் முழுசா பொய்ங்களாலெயே- அதெல்லாம் எத்தனை கனிவானவையா இருந்தாலும்- நிறைஞ்சிருக்கறதை நாம விரும்பப் போறதில்லே. நான் அவ கிட்டே நான் அவளை நேசிச்சதைச் சொன்னேன், அவ தூக்கத்துக்குள்ளெ கரைஞ்சு போகறத்துக்கு முன்னாலெ சொன்னேன், தூங்கினப்புறமும் சொன்னேன். பல முறைகள் சொன்னேன். அதனாலெ அது சரியா இருக்கும்னு நெனச்சேன். அதை நான் எந்தக் கெட்ட நோக்கத்தோடவும் செய்யல்லை. அவ போகிறதை நான் விரும்பவுமில்லெ. நாங்க ரெண்டு பேரும் காத்துகிட்டே இருக்கறத்தை நான் விரும்பல்லெ. அதுவும் அவ அப்டி இருக்கணுங்கறதை நான் விரும்பல்லெ. அவ பொறுமையான மனுஷி இல்லெ. காத்திருக்கறதுங்கறது புத்து நோயை விட மோசமா அவளைக் கொன்னுகிட்டு இருந்தது. நாங்க பேசிக்கிட்டாச்சு, அது எப்பவோ நடக்கறதை விட இப்பவே நடக்கிறது மேல்னு எனக்குப் பட்டது. அதுதான் ரொம்ப நல்லது. ரெண்டு பேருக்குமே கனிவானது. அதுதான் அந்தக் காரியத்தைச் சரின்னு தோண வச்சுது.’

அவர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார், அதை முழுதும் புகைத்து விட்டுப் பிறகு பேசினார்.

‘அந்தக் குளிர்காலத்தில நான் ஏரியில போயிருந்தேன். இன்னும் பனி வலுவாப் பெய்திருக்கல்லை, அதனால குளிர் கடுமையா இருந்தது. அப்போ பனிக்கட்டி போல தூறலும் போட ஆரம்பிச்சுது. மண்ணால அடிச்சுத் துளைக்கற மாதிரி இருந்தது.’

‘அப்ப ஏன் வெளியில போனீங்க?’

‘என்னை நானே அடிச்சுகிட்டு இருந்தேன். அதை நான் விளக்கணுமா என்ன?’

அவர் விளக்க வேண்டியிருக்கவில்லை.

‘சில மணி நேரம் கழிச்சு நான் அங்கே வழி தொலைஞ்சு போயிருந்தேன், நீங்க செஞ்ச மாதிரி, கொஞ்ச நேரம் கழிச்சு நான் அந்தத் தீவையும் பார்த்தேன்.’

‘அதே தீவையா?’

‘எனக்குத் தெரியாது. அதுல ஒரு வீடு இருக்கல்லை. ஆனா பக்கங்களெல்லாம் செங்குத்தா இருந்தது, நீங்க சொன்ன மாதிரியேதான். ஒரு பக்கம் தண்ணி மேலெ நீட்டிகிட்டு இருந்தது, அது பார்க்க படகுத்துறை மாதிரி இருந்தது, அதனாலெ எனக்குத் தெரியல்ல. இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.’

‘நீங்க அவங்களைப் பார்த்தீங்களா?’

அவர் தலையசைத்தார்.

‘நீங்க என்ன செய்தீங்க?’

‘அவ கிட்டே போக முயற்சி செய்தேன், வேறென்ன. தீவைச் சுத்திப் போனேன், ரெண்டு தடவை போனேன், அந்த நேரத்துல என் கையெல்லாம் இத்துப் போயிருந்தது. இறங்கறத்துக்கு ஒரு இடமும் தெரியல்லை. எங்கேயாவது படகைக் கட்டலாம்னு பார்த்தேன், பாறைகள்லேர்ந்து கயிறு நழுவி விழுந்துகிட்டே இருந்தது. பாறை மேலெ எம்பி விழுந்து பார்த்தேன், பிடி கிடைச்சா எப்படியாவது ஏறலாம்னு யோசிச்சேன். அது நடக்கல்லெ, அதுவும் நல்லதுக்குத்தான், இல்லே படகு மிதந்து போயிருந்திருக்கும், என்னோட எலும்புங்க அந்தத் தீவுலெ கெடந்திருக்கும் இந்நேரம்.’

‘கெடந்திருக்குமா?’

‘நான் என்ன சொல்றேன்னு உங்களுக்குத் தெரியும். கடேசில நான் அதைக் கைவிட்டேன், துடுப்பு வலிச்சு இன்னொரு முனைக்குப் போனேன், அவ அங்கெதான் இன்னமும் இருந்தா, வெளீல பார்த்துகிட்டு இருந்தா, என்னை இல்லே. அதுனாலெ நான் வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.’

‘நீங்க மறுபடி போனீங்களா?’

‘எதுவும் மாறி இருக்காது.’

‘மத்தவங்களைப் பத்திச் சொன்னீங்களே. அங்கே ஏரியில காணாமப் போனாங்கன்னு.’

‘அவங்க அவளைப் பார்த்திருக்க மாட்டாங்க,’ அவர் சொன்னார். ‘எனக்கு அது நிச்சயமாத் தெரியாது, ஏன்னா அவங்களை நான் கேட்க வாய்ப்பு கிடைக்கல்லெ, ஆனா எனக்குத் தெரியும் அவங்க பார்க்கல்லைன்னு. அவங்க அவங்களோட ஜனங்களைப் பார்த்திருப்பாங்க. அதேதான் நேத்திக்கி உங்களுக்கும் நடக்கும்னு நான் எதிர்பார்த்தேன்- உங்களைப் பத்தி என்னோட ஊகம் தப்பா இருந்தா. ஆனா நான் நினைச்சது சரி. நீங்க யாரையும் கொன்னதில்லே.’

நான் மௌனமாக இருந்தேன். அவர் சொன்னது சரி, ஆனா அவர் நியாயமில்லை. அவருக்குச் சிலதெல்லாம் தெரிந்தது, ஆனால் அவர் புரிந்து கொள்ளவில்லை.

அல்லது அவர் புரிந்து கொண்டிருக்கலாம், ஏனெனில் அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார், வருத்தத்தோடு சிரித்தார். ‘ஆனா, நீங்க இங்கே இருக்கீங்க.’


***

மூலக் கதையாசிரியர்: மைக்கெல் பிஷப் ஸ்மித் / தமிழாக்கம்: மைத்ரேயன் –(ஜனவரி 2022)

இக்கதை ‘த பெஸ்ட் ஆஃப் மைக்கெல் பிஷப் ஸ்மித்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. மூலக்கதையின் தலைப்பு, ‘த பர்னிங் உட்ஸ்’.

இந்தத் தொகுப்பைப் பிரசுரித்த நிறுவனம்: ஸப்டெரேனியன் ப்ரெஸ். 

புத்தகம் பிரசுரமான வருடம்: 2020

இதில் பிரசுரமான கதைகள் 1990 இலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை எழுதப்பட்டவை. பல பத்திரிகைகளில் பிரசுரமானவை.

இவருடைய இன்னொரு கதை சொல்வனம் 263 ஆம் இதழில் பிரசுரமாகியது. அதற்கான சுட்டி:

Series Navigation<< எரியும் காடுகள் – 2எரியும் காடுகள் – 4 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.