பெருங்காயம்

1892 இல்  ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற காபூலி வாலா ( কাবুলিওয়ালা ) என்னும் வங்காள மொழிச் சிறுகதை வெளியானது. அஃப்கானிஸ்தானிலிருந்து  கல்கத்தாவிற்கு வருடா வருடம் பழங்கள் விற்பனை செய்ய வரும் ரஹ்மத் எனும் வியாபாரிக்கும்,  அவரது மகளை நினைவூட்டும் ஐந்து வயது  மினி என்னும் சிறுமிக்கும், மினியின் தந்தைக்கும் மினிக்குமான அன்பை சொல்லும் கதை இது.  காபூலில் இருந்து வந்த வியாபாரி ஆதலால் கதையின் தலைப்பு காபூலி வாலா என்று இருந்தது. இக்கதையை தழுவி திரைப்படங்களும்  உருவாயின.[1]

உண்மையில் இந்தியாவில் அதேபோன்றதொரு காபூலிவாலா கதை  மும்பையில் நடந்தது.

1890 ல் செருப்புக் கூட இல்லாத  கால்களுடன் ஒரு வியாபாரி உலர் பழங்கள், கட்டிப் பெருங்காயம் மற்றும் பேரீச்சைகளை மும்பையில் விற்பனை செய்ய  அஃப்கானிஸ்தானின் காபூலில் இருந்து குதிரையில்  வந்திருந்தார். அவரிடம் பெருங்காயத்தை வாங்கியவர் லால்ஜி  கோது (Laljee Godhoo) என்னும் ஒரு சிறு வியாபாரி. லால்ஜி அப்போது கிராம்பையும் கற்பூரத்தையும் சிறிய அளவில் விற்பனை செய்து கொண்டிருந்தார். பெருங்காயத்தின் நெடியை கவனித்த அவர்  மசாலா பொருளாக அதன் எதிர்கால விற்பனைக்கான சாத்தியங்களையும் மிகச் சரியாகக் கணித்தார். அதைக் கொண்டு வந்த காபூலிக்காரரிடம் அஃப்கானிஸ்தானில் பெருங்காயத்தின் பயன்பாட்டையும் கேட்டறிந்து கொண்டு அந்த வியாபாரத்தை இரண்டு வருடங்களில் சிறிய அளவில் துவங்கினார்.

அந்த பெருங்காயப் பிசின் நிறுவனம்தான் இன்று ஐந்துதலைமுறைகளாக இந்தியாவில் பெருங்காய விற்பனையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் L G  கூட்டுப் பெருங்காய நிறுவனம்

1894 ல்  லால்ஜியின் தெற்கு  மும்பை வீட்டில் ஒரு காலி அறையில்  தொடங்கப்பட்டு, பெருங்காய பிசினை கைகளால் உடைத்துத் தூளாக்கி மாவுடன் கலந்து விற்பனை செய்த எல் ஜி (LG) நிறுவனம் இப்போது  இந்தியாவில் 70  சதவீத விற்பனை பங்குகள் கொண்டிருக்கும் முன்னணி பிரபல பெருங்காய நிறுவனமாக இருக்கிறது.

அஃப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருங்காய பிசினுடன் கருவேலம் பிசின், கோதுமை மாவு ஆகியவற்றை கலந்து மதிப்புகூட்டி, நெடியை குறைத்து கூட்டுப்பெருங்காயமாக விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் நாகப்பட்டினக் கிளையை லால்ஜியின் மகன்  கிம்ஜி 1920 ல் துவங்கினார். [2] 

இப்போது  ஐந்தாவது தலைமுறையாக நிறுவனத்தின் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் லால்ஜியின் கொள்ளுப்பேரன் பிமல்  நிறுவனத்தை துவங்கிய  கொள்ளுப்பாட்டன் லால்ஜியின் புகைப்படம் கூட  தங்களிடமில்லை என்று வருந்துகிறார்.

1970 லிலும் 1980 லிலும் சென்னை, கும்பகோணம், மும்பை மற்றும் நாசிக்கில் LG  கிளைகள் விரிவடைந்தன. பிமலின் தந்தையான அஜித்  கிம்ஜி நிறுவனங்களை இயந்திரமயமாக்கினார் அப்போது நாளொன்றுக்கு 150  கிலோ பிசின் பிற பொருட்களுடன் கலக்கப்பட்டு மதிப்பு கூட்டப்பட்டது ’90களில் பிமல் நிறுவனத்தின் பொறுப்புகளை எடுத்துக் கொண்ட பிறகு 40 நிமிடங்களில், 1000 கிலோ  கூட்டுப்பெருங்காயம் தயராகிறது  

ஒவ்வொரு மாதமும்  பிமல் கஜகஸ்தானின்  மிகப்பெரிய நகரான அல்மாட்டிக்குச்  சென்று அறுவடையாகும் பிசினை நேரடியாகப் பார்வையிட்டுப் பிறகு கொள்முதல் செய்கிறார். சூடானிலிருந்து நேரடியாக கருவேலம் பிசினையும் இறக்குமதி செய்யும் பிமல்  தற்போது LG கூட்டுப் பெருங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூபாய் நான்கு ஆயிரத்திலிருந்து, எட்டு ஆயிரம் வரை என்கிறார்.

எல் ஜி நிறுவனத்தின் பிரத்யேக வெள்ளை டப்பாக்களில் கிடைக்கும் இந்த  கூட்டு பெருங்காயம் இந்தியாவில் மிகப் புகழ்பெற்றது. விற்பனைப் போட்டியில் அத்துமீறல்களையும் போலிகளையும் சமாளிக்க இந்த நிறுவனம் அவர்களின் வெள்ளை டப்பாக்களில் கியூ.ஆர். பட்டைக் குறியீடு கொண்டிருக்கிறது.

 நான் சிறுமியாக இருக்கையில் மஞ்சள் நிற செவ்வக அட்டைப்பெட்டியில் வரும்  மந்தாரை இலையில் சுற்றப்பட்ட பெருங்காயத்தை பாட்டி அம்மிக்கல்லில் உடைத்து சிறு துண்டுகளாக்கி சேமித்து வைப்பதை பார்த்திருக்கிறேன். என் அம்மா காலத்தில் மந்தார இலை மெல்லிய பிளாஸ்டிக் உறையானது இப்போது நான் கட்டிப் பெருங்காயத்தையும் தூளாக்கப்பட்ட பெருங்காயத்தையும் உபயோகிக்கிறேன்

 சைவம் அசைவம் என்னும் பாகுபாடில்லாது அனைத்துவித உணவுகளிலும் இந்தியாவில் சேர்க்கப்படும், உணவுக்கு வெங்காயம் மற்றும் பூண்டின் எரிமணத்தை அளிக்கும் இந்த பெருங்காயம் இந்தியாவில் விளைவதில்லை என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.  உலகப் பெருங்காய உற்பத்தியில் 40 சதவீதம் இந்தியாவில் மட்டும் உபயோகிக்கப்பட்டாலும் இந்தியா ஆஃப்கானிஸ்தான் மற்றும் இரானிலிருந்தே இத்தனை வருடங்களாக பெருங்காயத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வருடா வருடம்  ₹942 கோடிக்கு  1200 டன் பெருங்காயம் இறக்குமதியாகிறது,.

உலக மசாலாக்களில் பெருங்காயம்  இடம்பெற்ற கதையும் பெருங்காயத்தின் சுவையைப்போலவே  வித்யாசமும் சுவாரஸ்யமுமானது. மனிதர்கள் நாவால் உணரும் உவர்ப்பு,  இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படை சுவைகளுடன் கூடுதலாக  ஐந்தாவதாக  உமாமி என்னும் சுவையை அறிவியல் உலகில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பெருங்காயத்தின் வேதிச்சேர்மானங்கள் வெங்காயம் மற்றும் பூண்டில் இருக்கும் சல்ஃபர் பொருட்களுக்கு இணையானவை என்பதால் வித்தியாசமான் நெடியுடன் கூடிய எரியும் அதன் சுவை உமாமி சுவை எனப்படுகின்றது

அலெக்சாண்டரின் படைகள் இமயமலையின் உப மலைத்தொடரான, வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு அஃப்கானிஸ்தானுக்கும் இடையில்  இருக்கும் இந்துகுஷ் மலைத் தொடருக்கு 4ஆம் நூற்றாண்டில் வந்த போது அங்கு இயற்கையாக வளர்ந்திருந்த பெருங்காய மரங்களையும் அதிலிருந்து கிடைத்த பெருங்காயத்தையும் கண்டார்கள்.

பெருங்காயத்தை அவர்கள் சில்ஃபியம் என்னும் (silphium) தாவரத்துக்கிணையானதாக கருதினார்கள். சமைக்கப்படும் இறைச்சியை மிருதுவாக்கிய சில்ஃபியம்,  மருத்துவ உபயோகங்களும் கொண்டிருந்தது. மிக அதிகமான பயன்பாட்டினால் அப்போது அழியும் நிலையில் இருந்த  அந்த அரிய தாவரத்துக்கு  இணையாக நெடியுடன் கூடிய பிசினை அளித்த  பெருங்காய மரத்தின் நாற்றுகளை தங்களுடன் அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் எடுத்துச்சென்றர்கள் என்கிறது வரலாறு. 

சில்ஃபியம் பண்டைய கிரேக்கத்திலும் ரோமிலும் பாலுணர்வு ஊக்கியாக, கருத்தடை மாத்திரையாக, இறைச்சியை மிருதுவாக்க, நறுமணப் பொருளாக என்று பலதரப்பட்ட பயன்பாடுகளை கொண்டிருந்தது. கிரேக்கப் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பெற்றிருக்குமளவுக்கு சில்ஃபியத்தின் புழக்கம் இருந்தது. பண்டைய கிரேக்க நாணயங்களில் சில்ஃபியத்தின் தண்டுகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. எகிப்தில் சில்ஃபியம் செடிகளைக் குறிக்கவென்றே பிரத்யேக சித்திர எழுத்து இருந்தது. ரோமில் இவை கடவுளின் பரிசாகக் கருதப்பட்டன. இவற்றைக் குறித்த கவிதைகளும் பாடல்களும் அப்போது புழக்கத்தில் இருந்தன. 

இதன் தோற்றத்தை  தியோஃப்ராஸ்டஸ் ‘கொழுத்த கருப்புத் தோலால் மூடப்பட்டிருக்கும் வேர்களையும் பொன்னிற இலைகளையும் சோம்பின் செடியினைப் போல வெற்றிடம் கொண்ட தண்டுகளையும்’ கொண்டிருந்ததாக விவரித்திருக்கிறார்

குறிப்பிட்ட மண் வகைகளில் மட்டுமே பயிரான சில்ஃபியம் அதன் தேவை அதிகமானபோது அதீத பயன்பட்டினால் அழியத்துவங்கியதென்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்

கிரேக்க ரோமானிய உணவுகளில் சில்ஃபியம் உபயோகப்படுத்தப்பட்டிருந்ததை முதல் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட  ரோமானிய சமையல்கலை நூலான  Apicius குறிப்பிடுகிறது

சில்ஃபியத்துக்கு இணையான பயன்பாடுகளைக் கொண்டிருந்ததால் அலெக்ஸாண்டரால் அறிமுகமான பெருங்காயம் யூரோப்பில் வெகுவிரைவாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

சீனாவில் Awei என்னும் பெயரில் பெருங்காயம் சுயி வம்சா ஆட்சியில் அறிமுகமானது (Sui dynasty 581-618). அறிமுகமான உடனேயே மருந்துப் பொருளாக உடனடிப் புழக்கத்துக்கு வந்த பெருங்காயம் சீனாவின் முதல் மருந்துப் பொருட்களுக்கான நூலில் (xinxiu bencao) இடம்பெற்றது. அதுவே பெருங்காயம் குறித்த முதல் எழுத்துக் குறிப்பு. சீனாவின் இயல்தாவரமான பைஸி என்றழைக்கப்பட்ட  (baizhi)  Angelica dahurica வைப் போலவே தோற்றமளிக்கும் இத்தாவரத்தின் வேர்களிலிருந்து கிடைக்கும் மிகுந்த நெடியுடைய மருந்து  மற்றும் மசாலாப்பொருள் என்று இது குறிப்பிடப்பட்டது. தீய சக்திகளிடமிருந்து பெருங்காயம் விடுவிக்கும் எனும் நம்பிக்கை அப்போது சீனாவில் பரவலாக இருந்தது. பெருங்காய வில்லைகள் பேய் பிடித்திருப்பதாக நம்பப்படும் நபரின் அருகில்  அவர் புகையைச் சுவாசிக்கும்படி நெருப்பிலிடப்பட்டன.

சீன மருத்துவர்களும் சவங்களிலிருந்து வெளியாகும் qi எனப்படும் தீய சக்தி பிடிக்காமல் இருக்க பெருங்காய  மாத்திரைகளை விழுங்கும்படி பரிந்துரைத்தார்கள்.

சன் சிமயா (sun simiao) என்னும் புகழ்பெற்ற சீன மருத்துவர் 581-682ல் முதன்முதலாக வயிற்றிலிருக்கும் சிறு சிறு கட்டிகளைக் கரைக்க பெருங்காயத்தைப் பயன்படுத்தினார். அவரது மருத்துவக் குறிப்புக்களில் பெருங்காயம் இந்தியாவைச் சேர்ந்தது என குறிப்பிட்டிருக்கிறார்.

கிபி 752ல் வாங் டோ (Wang tao) வின் மருத்துவக் குறிப்புக்களின் திரட்டு நூலான ’’இன்றியமையாதவைகளின் ரகசியங்கள்’’  என்னும் நூலிலும் பெருங்காயத்தின் தீய சக்திக்கெதிரான குணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 அழகிய தோற்றத்தில் உருமாறி வந்து இளம் பெண்களை மயக்கி உறவு கொள்ளும் விலங்குகளின் ஆவிகளைப் பெருங்காயம் விரட்டும் எனவும் பண்டைய சீனாவில் நம்பப்பட்டது

பின்னர் xing que/ xingu எனவும் சீன மொழியில் அழைக்கப்பட்டு மருந்தாகவும், மசாலா பொருளாகவும் பிரபலமாகியிருந்த பெருங்காயப்பிசின் ஒரு புத்தத் துறவி பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாமென்னும் 5 பிசின்களில் ஒன்றாக புத்தமத கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டது.

சீன பௌத்தத் துறவிகள் பயணங்களின் போது பெருங்காயம் குறித்த பல புதிய தகவல்களைச் சேகரித்து கொண்டிருந்தனர். சீன பௌத்த மடாலயங்களில் பெருங்காயம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் 1 லியாங் அளவுள்ள பெருங்காயம் (1 லியாங் =91.3 அவுன்ஸ்) 7செம்புக்காசுகளுக்கு விற்பனையானது.

8 மற்றும் 9 ம் நூற்றாண்டுகளில் குடற்புழு நீக்கும் மருந்தாக பெருங்காயம் சீனா முழுவதும் அறியப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளுக்கு இணையாக  நோயை உருவாக்குவதாக நம்பப்பட்ட பேய் பிசாசு பில்லி சூனியம் ஆகியவற்றை விரட்டவும்,  இவை தொடர்பான சடங்குகளிலும் பெருங்காயம் அதிகம் பயன்பட்டது.  

கிமு எட்டாம் நூற்றாண்டில்  பாபிலோனிய மன்னர் மர்டுக்-அப்லா-இடினா II  பட்டியலிட்டிருந்த தோட்டங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களில்  பெருங்காயமும் இருந்தது. .  அசீரிய மன்னர் அஷூர்பானிபாலின் நூலகத்தில் உள்ள மருத்துவத் தாவரங்களின் பட்டியலிலும் பெருங்காயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 மற்றும் 8 ம் நூற்றாண்டுகளில் உலகச் சந்தைகளில் பெருங்காயம்  வெகுவாக புழங்கியது. 

9 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு பட்டுப்பாதை வழியே இந்தியா மற்றும் அஃப்கானிஸ்தானிலிருந்து பெருங்காயமும்  அதனைக் குறித்த தகவல்களும் உலகின்  பல நாடுகளுக்கு சென்றன. பெருங்காயம் awei /xing que/ xingu என்று சீனாவிலும்  agi  என்று  ஜப்பானிலும்  awi என்று  கொரியாவிலும் a ngui என்று வியட்னாமிலும் அழைக்கப்பட்டது. பெருங்காயத்தைக் குறித்து எழுதிய யாரும் அந்த மரத்தை பார்த்திருக்கவில்லை செவிவழிச் செய்திகளின் பேரிலேயே பெருங்காய மரத்தையும், அதிலிருந்து எடுக்கப்படும் பிசினை குறித்தும் எழுதினார்கள்

கோவில்களிலும் சந்தைகளிலும் சேமித்து வைக்கப்பட்ட,. மருந்துப்பொருளாகவும், உணவுக்கு சுவை சேர்க்கும் மசாலாவாகவும் புகழ்பெற்றிருந்த பெருங்காயத்தின் தேவை அதிகரித்து அதன் விலை பல மடங்கு அதிகரித்தது. சோங் வம்சத்தில் ஒரு பெரிய கட்டி பெருங்காயமும்,  சீனப்பச்சைக்கல்லும் சீனப்பேரசருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. பெருங்காயத்தின் கள்ளச்சந்தை வணிகமும் பெருகியது 

10லிருந்து 12 நூற்றாண்டுகளில் அதிக அளவில் பெருங்காயம் சீனாவில் இறக்குமதியானது

மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அறிமுகமான பெருங்காயம் அங்கு xingu என அழைக்கப்பட்டது. வினய என்னும்  பௌத்தத் துறவியின் ’’பத்துப் பாராயணங்கள்’’ என்னும் நூலில் இந்த சொல் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது 

ஒரு நூற்றாண்டு கழித்து தென்னிந்தியாவின் சோழர்கள் காலத்தில் சீன அரசருக்குப் பரிசாக, மிருதுவான துணி, காண்டாமிருகத்தின் பற்கள், கிராம்பு, பன்னீர் மற்றும் பெருங்காயம் அளிக்கப்பட்டன.

16 ஆம் நூற்றாண்டில் பெருங்காயத்தின் பரவல் வேகம் பிடித்தது. அப்போது சீனாவில் Li Shizhen (!518-1593) எழுதிய மருந்துப் பொருட்கள் குறித்த நூலான பென்சோ காங்மு (Bencao gangmu) வில் பெருங்காயம் குறித்த விளக்கமான குறிப்புகள் இருந்தன. இந்நூல் பல உலக மொழிகளில் மொழி மாற்றப்பட்டது.

 போர்த்துக்கீசிய மருத்துவரும் மருந்து மற்றும் மசாலாப்பொருட்களில் நிபுணருமாகிய  கார்சியா (garcia da orta) கோவாவில் மருத்துவம் பயின்றார். அவரது இந்திய அனுபவங்களை நூலாக்கியபோது இவரே முதன் முதலாக பெருங்காயத்தின் அரபி, இந்தியப் பெயர்கள் உள்ளிட்ட பழமொழி வழங்கு பெயர்களை குறிப்பிட்டிருந்தார். பெருங்காயம் ஒரு மரத்தில் உண்டாக்கப்படும் வெட்டுக் காயத்திலிருந்து வடியும் பிசின் என்றும், தான் அந்த மரத்தை பார்த்ததில்லை எனவும் நேர்மையாக அதில் எழுதியிருந்தார். 

உலகெங்கும் பரவிக்கொண்டிருந்த பெருங்காயத்தின் புகழை கேள்விப்பட்ட ஜெர்மானிய மருத்துவர் எங்கல்ஃபெர்ட் கெம்ஃபர் (Englbert Kaempfer 1651-1716)  பெருங்காயப் பிசின் அறுவடை செய்யப்படுவதை நேரில் காண பெர்சியாவுக்கு சென்றார். அங்கிருந்து இந்தியா, ரஷ்யா, சயாம் மற்றும் ஜப்பானுக்கும் பயணித்த அவர் தனது பயண அனுபவங்களைத் தொகுத்து 1712ல் நூலாக்கியபோது (Amoenitatum exoticarum) 17 பக்கங்களை பெருங்காயத்துக்கென ஒதுக்கி இருந்தார். அவற்றில் பெருங்காய மரத்தின் சித்திரமும் பிசின் அறுவடை குறித்த விளக்கமும் இருந்தது.

அவரைத் தொடர்ந்து பல யூரோப்பிய இயற்கையாளர்கள் பெருங்காயத்தைக் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களால் கொண்டு வரப்பட்ட பெருங்காய விதைகள் யூரோப்பிய தோட்டங்களில் விதைக்கப்பட்டன. 

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தாவரவியலாளர் ஜான் பால்ஃபோர் (john balfour 1808-1884) முழுத் தாவரத்தின் பூண்டு நெடி, மலர்களின் இனிப்பு நெடி, கனிகளின் பெருங்காய நெடி, இளம் தளிர்களின் குறைந்த நெடி, வேரின் கசப்பு நெடி ஆகியவற்றை தனித்தனியாக விவரித்துக் கட்டுரைகள் எழுதினார்

இந்த கட்டுரை பல மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு பல அறிஞர்களின் கவனத்திற்குச் சென்றது. ஜப்பானின் புகழ்பெற்ற தாவரவியலாளர்களும் மருத்துவர்களும் யூரோப்பிய பெருங்காயக் கட்டுரைகளைத் தேடிச் சேகரித்து, ஜப்பானிய மொழியில் மாற்றிப் பிரசுரித்தார்கள்.1815 ல் ’’டச்சு தாவரவியல் அறிதல்களின் சாராம்சம்’’ எனும் நூலில் மரம் உயிரோடு இருக்கையிலேயே தொடர்ந்து பிசின் எடுக்கப்பட்டது, பிசினின் நெடி தாள முடியாத அளவுக்கு இருந்தது ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. கடும் நெடியினால் இது சாத்தானின் உணவு, சாத்தானின் சாணம் எனப் பல நாடுகளில் அழைக்கப்பட்டது.

பெருங்காயத்தின் புகழ் பரவிக் கொண்டிருக்கையிலேயே அதுகுறித்த பல வதந்திகளும் உருவாகின. பெருங்காய மரம் நச்சுத்தன்மை கொண்டது, அதனருகில் செல்லும் விலங்குகளும் நஞ்சூட்டப்படுகின்றன என்பது அதிலொன்று.

பலர் பெருங்காய மரத்தின் நெடியினால் நஞ்சூட்டப்பட்ட ஆடுகளின் இறைச்சியும் நஞ்சானதை எழுதினார்கள். அதே சமயத்தில் சந்தைகளில் கலப்படப் பெருங்காயம் விற்பனையாகிக் கொண்டிருந்தது தரமான அசல் பெருங்காயத்தைக் கலப்படப் பெருங்காயத்தில் இருந்து பிரித்துக் காண்பது குறித்தும் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருந்தன

இந்தியாவில் பரவலான உபயோகத்திலிருக்கும் பெருங்காயம் இந்தியாவில் விளைவதில்லை என்பதை 1670 ல் கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவரான ஜான் பிரியர் முதன்முதலில்  குறிப்பிட்டார்

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பலவகையான பெருங்காய மரங்களின்  வகைகள், பிசினின் வேறுபாடுகள் ஆகியவை தெளிவாக வரையறுக்கப்பட்டு,  கட்டுரைகள் வெளியாகின. 19 நூற்றாண்டில் ஜின்’னிற்கு  சுவையூட்டவும், சில நறுமண  திரவியங்களிலும் கூட பெருங்காயம் சேர்க்கப்பட்டது.

இந்தியாவில் முகலாய மன்னர்களின் காலத்தில் அறிமுகமான பல மசாலா பொருட்களில் பெருங்காயமும் ஒன்று. முகலாய அரசவைப் பாடகர்கள்  குரல் வளத்தின் பொருட்டு,  நெய் கலந்த பெருங்காயத்தை மென்றுவிட்டு நதி நீரில் நின்று சாதகம் செய்திருக்கின்றனர்.

பெருங்காயம் தோன்றிய நாட்டை விடவும், இந்தியாவில் இந்த நாட்டின் சொந்த மசாலாப் பொருளாகவே கருதப்படுகிறது.’Hing’ என்று பொதுவாக அழைக்கப்படும் பெருங்காயம் அஃப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஈரானை சேர்ந்த ஃஃபெருலா அசாஃபோடிடா  (Ferula assa-foetida ) என்னும் மரத்தின்  நெடியுடன் கூடிய வேர் பிசினின் மதிப்பு கூட்டப்பட்ட மசாலாவாகும்.

’Ferula’ என்றால் கொண்டிருக்கும் என்றும் ’asa’ அன்றால் பிசின் என்றும் ’foetida’ என்றால் நாற்றமடிக்கும் என்றும் லத்தீன்  மற்றும் அரபிமொழிகளில் பொருள். ஃஃபெருலா பேரினத்தின் 60 சிற்றினங்களும் மத்தியா ஆசியா , ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் இயற்கையாக விளைகின்றன 

ஃபெருலா பேரினத்தில், அஸஃபோடிடாவுடன் இன்னும் சில முக்கிய வேரிலிருந்து பிசினை அளிக்கும்.  Ferula asafoetida;  Ferula alliacea, Ferula rubricaulis, Ferula narthex மற்றும்  Ferula foetida. ஆகிய சிற்றினங்கள் இருக்கின்றன Ferula fukanensis மற்றும் Ferula sinkiangensis  ஆகியவை சீனாவில் மட்டுமே இருக்கும் பெருங்காய தாவரங்கள் .இவை அனைத்தும் ஒரே மாதிரியான வாழிடங்களில் தான் வளர்கின்றன.  

கேரட் குடும்பமான ஏபியேசியை சேர்ந்த பெருங்காய மரங்கள் 3 லிருந்து 5 அடி உயரம் வரைசிறிய மரம் போல வளரும். இதன் தண்டுகள் மென்மையாக இருக்கும். ஆண் பெண் மலர்கள் தனித்தனியே மலர் மஞ்சரிகளில் காணப்படும் இவை பல்லாண்டுத்தாவரங்கள்.பசுமஞ்சள் குடைகளாக காணப்படும் மலர்களை கொண்டிருக்கும் மலர்த் தண்டுகளிலும் பிசின் இருக்கும். முட்டை வடிவ சிவந்த தட்டையான கனிகளிலும் பால் வடியும். பருத்த சதைப்பற்றான வேர்களில் பிசின் அதிகம் இருக்கும் தாவரத்தின் அனைத்து பாகங்களும் கடும் நெடி கொண்டிருக்கும். அஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பெருங்காயம் விளையும் பிரதேசங்களில் இதன் இலைகளும் இளம் தண்டுகளும் உணவாக பயன்படுகின்றன. மலர்ஞ்சரிகளும், பிசின் வடிந்தபின்னர் வேர்கள் அரைக்கப்பட்ட மாவும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன

4-5 வருடங்களான பெருங்காய மரத்தின் 12-லிருந்து 15 செ.மீ விட்டம் கொண்ட வேர்கள் மார்ச்-ஏப்ரல் மாதத்தில்  மலர்வதற்குச் சற்று முன்னர் மண்ணிலிருந்து வெளியே தெரியும்படி மண்ணைத் தோண்டி எடுத்து, தண்டுடன் ஒட்டியிருக்கும் வேரின் தலைப்பகுதி லேசாக சீவி விடப்படும். சீவிய காயத்தில் இருந்து பால் போன்ற திரவம் கசியத் துவங்குகையில் வெட்டிய காயம் குச்சிகள் மற்றும் மண்ணைக்கொண்டு மூடப்படும்.

சிலநாட்கள் கழித்து  வடிந்து உலர்ந்திருக்கும் பிசின் சுரண்டி எடுக்கப்பட்ட பின்னர் புதிதாக வேரில் காயம் உண்டாக்கப்பட்டு மீண்டும் மூடப்படும். சில சமயங்களில் வெட்டிய வேர்ச்சீவலும் பிசினுடன் சேர்த்து எடுத்து சேமிக்கப்படும். மீண்டும் மீண்டும் பிசின் வடிந்து 3 மாதங்களில் அரை கிலோவிலிருந்து 1 கிலோ வரை பிசின் வடிந்து தீரும் வரை வெட்டுக்கள் உண்டாக்கப்பட்டு, பிசின் தொடர்ந்து சேகரிக்கப்படும். இவ்வாறு காயங்கள் ஆழமாக உண்டாக்கப்பட்டு பிசின் சேகரிக்கப்படுவதால்தான் தமிழில் இது பெருங்காயம் எனப்படுகின்றது.

காயமான வேரிலிருந்து சாம்பல் வெள்ளை நிறத்தில் வடியும் பிசின் உலருகையில் மஞ்சளாகிப் பின்னர் சிவப்பிலும்,  இறுதியில் மண் நிறத்திலும் இருக்கும். உலர்ந்த வேர்ச்சீவல்களும் மலிவுவிலைப் பெருங்காயமாக விற்பனை செய்யப்படும்.

மரத்தின் வேரைக் காயப்படுத்தாமல் இயற்கையாகவே வடியும் பெருங்காயமே மிக அரியதும், தூயதும், முதல் தரமுமான பெருங்காயம் எனக் கருதப்படுகிறது இது நீர்த்துளி பெருங்காயம் எனப்படுகிறது இவ்வகை நாம் சாதாரணமாக புழங்கும் வகையை விட மிக மிருதுவாக இருக்கும்.

வடியும் வேர்ப்பிசின் வியாபாரிகள் மற்றும் அறுவடை செய்பவர்களால் கண்ணீர் என குறிப்பிடப்படும், முதல் கண்ணீர் துளிகள் இரண்டாம் கண்ணீர்துளிகள் என இவை குறிப்பிடப்பட்டு சேமிக்கப்படும். ’kokh’ எனப்படும் முதல் கண்ணீர் துளி மிக குறைந்த அளவே கிடைக்கும். மிக அதிக நெடி கொண்டிருக்கும்.  இவையே பிறவற்றை காட்டிலும் அதிக விலையும் கொண்டிருக்கும். 

பெருங்காயத்தில் 40–64% பிசினும், 25% பசையும், 10–17% எண்ணையும், and 1.5–10%சாம்பலும் உள்ளன, அசரேனினோடேன்னல்கள் ‘A’ மற்றும் ‘B’, பெருலிக் அமிலம், அம்பெல்லிஃபெரோன் மற்றும் நான்கு வரையறுக்கப்படாத சேர்மங்களை  பெருங்காயப் பிசின் கொண்டுள்ளது

30 சதவீத பிசினுடன் வட இந்தியாவில் கோதுமை மாவு/தென்னிந்தியாவில் அரிசி மாவு/ மைதா மாவு மற்றும் கருவேலம் பிசின் ஆகியவை கலக்கபட்ட கூட்டுப்பெருங்காயமே நமக்கு சந்தைகளில் கிடைக்கிறது

அஃப்கானிஸ்தானில் காந்தாரி பெருங்காயம் முதல் தரமானது, ஹெராட் வகை இரண்டாம் தரம். இந்தியாவில் வெள்ளை காபூலி வகைக் காயமே மிகப்பிரபலம்.

தில்லியில் வருடத்துக்கு 630,000 கிலோ பெருங்காயம் விற்பனை செய்யும், பெருங்காயத்திலேயே பிறந்து வளர்ந்தவரென்று தன்னை சொல்லிக்கொள்ளும் மூன்றாம் தலைமுறை விற்பனையாளரான  அஞ்சய் பாட்டியா ’காபூலி ராஜா’ பெருங்காய  வகையே இங்கு சுடச்சுட விற்பனையாகும் பிசின் என்கிறார். மிக குறைவான விலையில் கிடைப்பது இனிப்புச் சுவையும் ஆரஞ்சின் மணமும்  கொண்டிருக்கும் ஹதா வகை

இந்தியாவில் பெருங்காயம் உற்பத்தி ஆவதில்லை என்றாலும் கடும் நெடி உடைய பெருங்காயத்தை சமையலுக்கு தகுந்தவாறு தயாராக்குவது இந்தியாவில்தான் நடைபெறுகிறது குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின்  ஹத்ராஸ்(Hathras) நகர் இதில் மிகவும் பிரசித்தி பெற்றது.

பெருங்காயக் கலப்படத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம் அசல் பெருங்காயம் நெருப்பில் கற்பூரம் போல பற்றி எரியும். போலிப் பெருங்காயம் எரியாது. அசல் பெருங்காயம் நீரில் கலந்து பால் போல நீர் மாறும். போலிப் பெருங்காயம் நீரின் அடியில் தங்கும்.

உணவுப் பயன்பாட்டுக்கிணையாக இப்பிசின் மருந்தாகவும் உலகெங்கிலும் பயன்படுகிறது. அஃப்கானிஸ்தானில் மனநோய்களுக்கும், இருமலுக்கும், ரத்தக்கொதிப்பிற்கும் பெருங்காயம் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

எகிப்தில் வலி நிவாரணியாகவும், குடற்புழு நீக்கவும், பெருங்காயம் பயன்படுகிறது. சவுதி அரேபியாவில் ஆஸ்துமாவிற்கும், பிரேஸிலில் பாலுணர்வை தூண்டவும் பெருங்காயத்தை பயன்படுத்துகின்றனர். மலேசியாவில் மாதவிலக்குப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பெருங்காயத்தை பயன்படுத்துகின்றனர்.

ஆயுர்வேத மற்றும்  பல பாரம்பரிய மருத்துவ முறைகள் பெருங்காயத்தை  வயிற்று உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்துகின்றனர். ஓபியத்தின் போதையை முறிக்கவும் பெருங்காயம் அளிக்கப்படும்.

 ஜமைக்காவில், ஆவிகள்  குழந்தையின் உச்சிப்பொட்டு வாயிலாக நுழைவதிலிருந்து தடுக்கும் பொருட்டு, குழந்தையின் முன்புறத் தலைப்பகுதியில் பெருங்காயப் பிசின் துண்டு,  துணியில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். ஆப்பிரிக்காவ்ல் வூடூ வித்தைகளில் சாபமிடவும், சாபங்களிலிருந்தும், பேய் பிசாசு போன்றவைகளின் பிடியிலிருந்தும் விடுபடவும் பெருங்காயம் உபயோகிக்கப்படுகிறது. 

உலகில் வேறெங்கும் பெருங்காயம் பயிராவதில்லை. இயற்கையாக வறண்ட மலைப்பிரதேசங்களில் விளையும் இவற்றை  முதன் முதலில் பயிராக்கும் முயற்சியில் பெருங்காய இறக்குமதிக்கு மிக அதிக செலவு செய்து கொண்டிருக்கும் இந்தியாதான் ஈடுபட்டது. 

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்  (ICAR) மற்றும் தேசிய தாவர மரபியல் வளப்பேழையகம் (NBPGR) 1963 மற்றும் 1989 ல்  ஈரானிலிருந்து பெருங்காய விதைகளை தருவித்து இந்திய மலைப்பகுதிகளில் அவற்றை பயிராக்க செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.  இந்திய காலநிலை பெருங்காய மரங்கள் வளர ஏதுவானதாக  இல்லை ..

இமயமலையின், உயிர்வளத் தொழில்நுட்ப நிறுவனம் (HIBT- Himalayan institute of bioresource technology) மீண்டும் CSIR உடன் இணைந்து  2017 அக்டோபரில் இருந்து பெருங்காயத்தை சாகுபடி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

இமாசலப் பிரதேசத்தில் குவாரிங் கிராமத்தில் லாஹால் பள்ளத்தாக்கின் ( Kwaring village in Lahaul valley, Himachal Pradesh) வறண்ட குளிர்ப்பாலைகளில் பெருங்காய வளர்ச்சிக்கு ஏற்ற கால நிலை  நிலவுவதால் அங்கு இந்த சோதனை முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான ICAR ன் எல்லா ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டு 6 தொகுதிகளாக விதைகள் ஈரானிலிருந்து தருவிக்கப்பட்டன.  (EC966538 with Import Permit-318/2018 and EC968466-70 with Import Permit-409/2018)  இவற்றைச் சாகுபடி செய்வதில் இருந்த மிகப்பெரிய சவாலென்பது விதைகளின் உறக்கநிலைதான்  பெருங்காய விதைகள் புதிய சூழலில் முளைக்கும் சாத்தியம் என்பது வெறும் ஒரு சதவீதம் தான் 

எனவே இந்த உறக்க நிலையில் இருந்து விதைகளை விடுவிக்க சில  முயற்சிகளை 2 மாதங்கள் செய்தபின்னரே அவை ஆய்வகங்களில் முளைக்கச் செய்யபட்டன

முளைவிட்ட முதல் பெருங்காய நாற்று IHBT’யின் இயக்குநர் திரு சஞ்சய் குமாரால்  லஹால் பள்ளத்தாக்கில்   அக்டோபர் 15, 2020 அன்று நடப்பட்டது..  இந்த பள்ளத்தாக்கில் 7 விவசாயிகளுக்கு சொந்தமான  4 நிலங்களில் இந்த பெருங்காய சாகுபடி இப்போது செய்யப்பட்டிருக்கிறது 

 இவை வளர்ந்து பலன் கொடுக்கும் வரை வருடத்திற்கு ஒரு ஹெக்டருக்கு 3 லட்சம் செலவாகும் என்றும் ஐந்தாம் வருடத்திலிருந்து பத்துலட்சம் லாபம் வருமென்றும் யூகிக்கப்படுகிறது.  

பெருங்காயத்துடன் பாதாம், உலர் திராட்சை, அத்திப்பழம் மற்றும் பிஸ்தா பருப்பு ஆகியவையும் அஃப்கானிஸ்தானிலிருந்துதான் நமக்கு இறக்குமதியாகிறது. தாலிபான்களின் கட்டுக்குள் அஃப்கானிஸ்தான் வந்தபிறகு இவை அனைத்தின் சந்தை விலையும் அதிகமாகி  இருக்கிறது. முன்பு 1400 ரூபாய் களாக இருந்த அஃப்கான் பெருங்காயம் இப்போது 2000 ரூபாய்களாகி இருக்கிறது கொல்கத்தாவின் மொத்த வியாபாரச் சந்தையான பாரா பஜார் வணிகர்கள் இது தொடக்கம்தான், விலை இன்னும் அதிகமாகும் என யூகிக்கின்றனர். 

எனவே இந்தியாவில் பெருங்காய உற்பத்தி இமாசல் பிரதேசத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாறுதலை அளிக்கும் என ஆவலுடன்  எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் இனிப் பெருங்காயம் உற்பத்தியாகும் என பலர் கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் 22 பெருங்காய இறக்குமதி நிறுவனங்களில் ஒன்றான சேட்டன் தாஸ் லக்‌ஷ்மண் தாஸ் நிறுவனத்தின் சஞ்சய் பாட்டியா, அப்படிக் கொண்டாடும் அளவுக்கு ஒன்றுமில்லை என்கிறார். ’’இன்னும் சில வருடங்கள் கழித்தே வேரில் பிசின் தேவையான அளவுக்கு கிடைக்குமா என்று தெரியும், அப்படியே கிடைத்தாலும் வருடந்துக்கு ஒரு மரத்திலிருந்து 1கிலோ பிசினாவது கிடைக்கவில்லை எனில் அது இந்தியாவில் வளர்ந்தும் பிரயோஜனமில்லை, ஐந்து வருடங்கள் கழித்து கந்தஹாரின் தங்கத்தரம் வாய்ந்த காந்தாரி பெருங்காயத்தின் தரத்தில் இங்கும் கிடைத்தால் அப்போது கொண்டாடிக் கொள்ளலாம்’’ என்கிறார் இவர்.

உலகச் சந்தையில் தரமான பெருங்காயத்தை இந்தியா அளிக்குமா அல்லது ’’இந்தியக் காயமே அது பொய்யடா’’ என்று ஆகிவிடுமா வென்று   இன்னும் சில வருடங்கள்  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

***

[1] காபூலிவாலா கதை திரைப்படமாக இந்தியிலும் வங்க மொழியிலும் வெளியாகி இருப்பதாகத் தெரிகிறது. வங்க மொழிப் படத்துக்கு இங்கிலிஷில் மொழிபெயர்த்த படக் குறிப்புகளுடன் திரைப்படத்தைப் பார்க்க முடியும். அதற்கான முகவரி: https://www.youtube.com/watch?v=9b5HQXgHgR4

[2] இந்த முகவரியில் உள்ள ஒரு படத்தைப் பார்க்கலாம். இது தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட கடை: https://www.laljeegodhoo.com/company-profile/

One Reply to “பெருங்காயம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.