சரியான வெகுமதி

நான் முதலில் லக்ஸ் தொழிற்சாலைக்கு வந்தாரா என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். அப்படி வரவில்லை என்றால், சில நாட்களுக்கு தொழிற்சாலைக்கு வராதவாறு செய்யவேண்டும்.

“என்ன இந்த நேரம் அழைக்கிறாய்?” என்று தான் துவங்கினார் லக்ஸ் நான் அவரை அழைத்தபோது.

“இந்த முறை வந்த கழிவுகளில் ரசாயனக் கழிவுகள் அதிகம். மேலோட்டமாக சோதித்ததில், வெடிமருந்து போல் தெரிகிறது. நான் கவனமாகக் கையாண்டு கொண்டிருக்கிறேன். இந்த வாரம் வேலை சவாலாக இருக்கும். நீங்கள் தொழிற்சாலை பக்கம் வரவேண்டாம். என்னால் என் பாதுகாப்பை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்தமுடியும். மற்றவர் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும் சூழலில் நான் இல்லை. இந்த சூழலில் என் உற்பத்தித் திறன் பாதியாகக் குறைந்திருக்கிறது. ஏனெனில், இந்தக் கோளாறைச் சரி செய்ய பாதி நேரம் செலவாகிறது. ” என்றேன் நான்.

“உதவிக்கு யாரையும் கொணர இயலாது. வேண்டுமானால், உனக்கான காரட், இனிப்பு உருளைகள் மற்றும் இரும்புச்சக்தி, ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி12 மாத்திரைகள் இருமடங்காக அதிகரித்து அனுப்புகிறேன். சமாளித்துக்கொள்” என்றார் லக்ஸ்.

அந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை என்றபோதிலும் நான், “சரி” என்றேன்.

மறுமுனையிலிருந்து மெளனம்.

பிறகு,

“சரி. புரிகிறது. கவனமாக இரு. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமென்று இருந்தேன். இப்போது விட்டால் நான் மறந்துவிடலாம்.”

நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தேன்.

“உன் ஒருவனால், ஒரு வாரத்திற்கு சுமார் 80 மணி நேர உற்பத்தித்திறன் கிடைக்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட நீ விடுமுறையில் சென்றதில்லை. ஆனாலும், செவ்வாயில் பணியாளர்கள் கிடைப்பதில்லை. குடியேற்றம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பூமியில் பல பிரச்சனைகள். நஷ்டத்திற்கு யார் பொறுப்பாவது? நீ உன் பணி நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.” என்றார் லக்ஸ்.

“மன்னிக்கவேண்டும். நான் மனதளவில் சற்று பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் குடும்பம் இன்னமும் பூமியில் தான் இருக்கிறது. அங்கே காற்று சுத்திகரிப்பானுக்கு அதிகமாக செலவாகிறது. ஊட்டச்சத்து மாத்திரை விலைகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கின்றன. என் வீட்டில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதில் விளையும் சோளத்தில் தான் என் குடும்பம் பிழைக்கிறது. ஆனால், மண் வளம் இன்றிருப்பது போல் இனி என்றும் இருக்குமென்று சொல்வதற்கில்லை. என் குடும்பத்தை செவ்வாய்க்கு கொண்டு வர திட்டம் இருக்கிறது. அதற்கு எனக்கு க்ரெடிட்ஸ் தேவைப்படுகிறது” என்றேன் நான்.

“உன் இடத்திற்கு வர, எத்தனையோ படித்தவர்கள், சான்றிதழ்கள் பெற்றவர்கள் இருக்கிறார்கள். உன்னிடம் கல்வித்தகுதியோ, சான்றிதழ்களோ இல்லை. இருந்தும், இங்கே வேலை செய்ய உனக்குத்தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொள். உன் அதிர்ஷ்டம் செவ்வாய் கிரகத்தில் கூடுதலாக உழைக்க நாள் ஒன்றுக்கு நாற்பது நிமிடங்கள் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு கணக்கிட்டால் கிட்டத்தட்ட இருபது மணி நேரம் அதிகம். அதை நீ பொறுப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், நீ 16 மணி நேரம் தான் உழைக்கிறாய். இப்படி இருந்தால் எப்படி க்ரெடிட்ஸ் சேகரிப்பாய்?” என்றார் லக்ஸ்.

லக்ஸ் குடும்பம் பரம்பரையாக பணக்காரர்களாக உள்ள குடும்பம். உண்மையில் அவர் பொய் சொல்கிறார். பன்னிரண்டு ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு கிரகம் கண்டுபிடித்து, லெய்டன் என்று பெயர் வைத்து 2017ல் அதற்கு சிக்னல் அனுப்பப்பட்டிருக்கிறது. இப்போது அதிலிருந்து பதிலும் கிடைத்துவிட்டது. ஆனால், அது சங்கேத மொழியில் இருக்கிறது. அதை மொழிபெயர்க்கும் பணி நடக்கிறது. அது முடிந்தால், அங்கே செல்ல வாய்ப்பாகும். அங்கே தொழில் துவங்குவது இன்னும் லாபகரமானதாக இருக்கலாம். ஆதலால், லக்ஸ் செவ்வாயில் அதிகம் முதலீடு செய்ய விரும்பவில்லை. தன் முதலீட்டைத் தேக்குகிறார். இன்னும் சொல்லப்போனால் செவ்வாயில் தன் முதலீட்டைக் குறைக்கிறார். அவர் லெய்டன் செல்லும் பட்சத்தில், நிச்சயமாக எனக்கு வேலை இல்லாமல் போகப்போவது உறுதி. அவர் அங்கு என்னை அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஏனெனில், என்னிடம் சான்றிதழ்களோ, கல்வித்தகுதியோ இல்லை. செவ்வாய்க்கு என்னை தொழிலாளர்களுக்காக விசாவில் தான் அழைத்து வந்திருக்கிறார். லெய்ட்டனில் படித்த, சான்றிதழ் பெற்ற பணியாளர்கள் கிடைப்பது எளிது என்கிற ஊகம் காரணமாக இருக்கலாம்.

லக்ஸின் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட கழிவுகளை பூமியிலிருந்து வாங்குகிறது. இதற்கென ஒரு விண்வெளிக் கப்பல் செவ்வாய் வந்து செல்லும். எல்லா விதமான கழிவுகளும் பூமியிலிருந்து வரும். குறிப்பாக, மின்சாதனப் பொருட்கள். அவற்றிலிருந்து கொஞ்சம் மெனக்கெட்டால், வேலை செய்யக்கூடிய உதிரி பாகங்களைப் பிரித்தெடுக்கமுடியும். பிரித்தெடுத்ததை வகை பிரித்து, பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும். இதுதான் என் வேலை. அந்த நிறுவனங்கள் அந்த உதிரி பாகங்களை வைத்து முழுமையான எந்திரங்களை உருவாக்கும். அவை விலை குறைவாக சந்தையில் விற்கப்படும்.

இப்போது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நான் பார்க்கும் வேலைக்கு உண்மையில் கல்வித்தகுதிகள், சான்றிதழ்கள் தேவை. ஆனால், கல்வித்தகுதி மற்றும் சான்றிதழ்கள் உள்ள ஒரு பணியாளருக்கு லக்ஸ் அதிகம் ஊதியம் தர வேண்டும். என் போன்ற கல்வித்தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் அற்ற ஒருவருக்கு அடிப்படை ஊதியம் தந்தால் போதும். அங்கே தான் அவருக்கான லாபம் இருக்கிறது. இது செவ்வாயில் அமையப்பெற்ற அரசாங்கத்தை அவர் ஏமாற்றும் விதம்.

ஆனால், அவரை நான் ஏமாற்றும் விதம் ஒன்றும் இருக்கிறது. என்னிடம் கல்வித்தகுதிகள், சான்றிதழ்கள் தான் இல்லை. சிறுவயதில் பூமியில் ஒரு புத்தகக்கடையில் வேலை செய்திருக்கிறேன். அது ஒரு சுமாரான புத்தகக் கடை. அதிகம் ஆட்கள் வரமாட்டார்கள். என் அப்போதைய முதலாளி கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற அந்தப் புத்தகக் கடையை நடத்தி வந்தான். விற்பனை பற்றி கவலையே இல்லை. பெயருக்கு ஒரு கடை. இது போன்ற நாலாம் தர கடைகளில் நேரம் மிக மிக மெதுவாகக் கடக்கும். அங்கே இருக்கும் புத்தகங்களைப் படிப்பது தான் பொழுது போக்க இருக்கும் ஒரே வழி.. இயற்பியல், கணிதம், கணக்கு, கணிப்பொறி, வானியல் இப்படி நிறைய. பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் படித்தால் தான் படிப்பா என்ன? அறிவு கிடைத்துவிடுகிறபோது சான்றிதழ் என்கிற வெற்றுக் காகிதம் எதற்காகிறது?

என் கணக்கு எளிமையானது. கல்வித்தகுதிகள், சான்றிதழ்கள் இல்லாதபட்சத்தில் அனுபவம் தான் க்ரெடிட்ஸ். அதைப் பெறவே செவ்வாய் கிரகம் வந்தேன். .

லக்ஸ் நினைப்பது போல், நான் ஒன்றும் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை செய்பவனில்லை. 8 மணி நேரம் தான் வேலை செய்கிறேன். இங்கு பணியில் சேர்ந்ததுமே, வந்த கழிவுகளிலிருந்து கணிசமான கழிவுகளை வைத்து ரோபாட்டுகள் உருவாக்கினேன். எதற்கு? குறைந்த க்ரெடிட்ஸுக்கு கள்ளச் சந்தையில் விற்பதே நோக்கம்.இதற்கெல்லாம் லக்ஸ் அனுமதி தேவையில்லை. உருவாக்கியதைச் சோதிக்க வேண்டுமல்லவா? அதனால், அவற்றுக்கு என் பணிகளையே தந்து மேற்பார்வை பார்த்து சோதிக்கிறேன். அவைகள் தாம் எஞ்சிய 8 மணி நேர வேலையை செய்து முடிக்கின்றன. நன்றாக வேலை செய்யும் ரோபாட்டுகளை கள்ளச் சந்தையில் விற்கிறேன். அதில் க்ரெடிட்ஸ் கிடைக்கிறது. இப்போது கைவசம் 10 ரோபாட்டுகள் உள்ளன.

பாதி வேலையை ரோபாட்டுகள் செய்வதால் எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல. மின் கழிவுகள் என்ற பெயரில் நிறைய பதிவு வட்டுகள் கிடைக்கும். அவற்றிலிருந்து விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த அதி நவீன கணிணி விளையாட்டுக்களும் அடக்கம். அதிலுள்ள தகவல்களை வைத்து, நிஜமாகவே விண்வெளி சென்று திரும்பலாம். விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது, விண்வெளியிலேயே திசை திருப்பும் மேனூவர்கள், உந்துவான்கள் உருவாக்குவது, செயல்படுத்துவது, கிரகத்தையோ அல்லது கருந்துளைகளையோ ஸ்லிங்ஷாட் அடிப்பது என எல்லாத் தகவல்களும் கிடைக்கும். அது எல்லாவற்றையும் பீராய்ந்ததில் விண்வெளி குறித்து எனக்கும் ஓரளவு தெரிய வந்தது. அந்தத் தகவல்களை வைத்து விண் ஏகுவது குறித்து யாரை வேண்டுமானாலும் வழி நடத்த இயலும் என்கிற அளவிலான தன்னம்பிக்கையைப் பெற்றிருந்தேன்.

இந்த உண்மை அவருக்குத் தெரியாது. தொழிற்சாலையை நவீனமாக்குவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், தொழிற்சாலையில் நடக்கும் தகிடுதத்தங்களை மறைக்க முடியாதல்லவா? ஆதலால் தொழிற்சாலையில் ஒரு காமிரா கூட இல்லை. அதை நான் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன்.

“ஆனால் உனக்கு நான் இன்னுமொன்றைச் சொல்ல விரும்புகிறேன்” என்றார் லக்ஸ்.

“கேட்கிறேன்” என்றேன் நான்.

“எனக்கு பூமியின் நூற்றுக்கணக்கான உறவுகள் உள்ளன. ஆனால், நான் என் மனைவி, மற்றும் பிள்ளைகளை மட்டுமே என்னுடன் செவ்வாய் அழைத்து வந்திருக்கிறேன். இப்போது, இவர்களைக் கூட கண்டிப்பாக அழைத்து வந்திருக்க வேண்டுமா என்று யோசிக்கிறேன். ஏனெனில், இவர்கள் யாருக்கும் உழைக்கும் எண்ணமே இல்லை. என் குடும்பத்திற்கு இப்புதிய கிரகத்தில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அது இவர்களின் மூளையை மழுங்கடிக்கிறது. சோம்பலைத் தருகிறது. இவர்கள் சோம்பலுக்கு பழகிவிட்டார்கள். இப்போது இவர்களுக்கும் சேர்த்து நான் தான் உழைக்க வேண்டி இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் இவர்கள் தங்களின் சோம்பலின் நிமித்தம் என்னையும் இந்த கிரகத்திற்கு இடம்பெயற வைத்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. இங்கிருந்து வேறெங்காவது செல்ல வேண்டி வந்தால் இவர்களை நான் உடன் அழைத்துச் செல்வதாய் இல்லை. பிழைத்தலின் நிமித்தம் உழைப்பவர்கள் மேலானவர்கள். எனக்கு நடந்தது உனக்கும் நடக்கலாம். எதற்கு வீண் வேலை? விட்டு விடேன். உனக்கு இங்கே குடியேற்ற அனுமதி கிடைத்திருக்கிறது. ஏனெனில் நீ உழைத்தாய். இந்த கிரகத்தில் உன் வாழ்க்கைக்காக நீ தகுதியாய் இருந்தாய். அவர்கள் அவ்விதம் தகுதி இல்லையே. அவர்களைக் காட்டிலும், பிழைத்தலின் நிமித்தம் நீ மேலானவன்.பிழைத்தலின் நிமித்தம், உன்னைக் காட்டிலும், அவர்கள் பின் தங்கியவர்கள். பிறகு ஏன் அவர்களைக் கொணர நினைக்கிறாய்?” என்றார் லக்ஸ்.

நான் உடனடியாக பதிலளிக்கவில்லை. சற்று யோசித்தேன். பின்,

“நீங்கள் சொல்வதும் சரிதான், லக்ஸ். எனது நலனுக்காகத்தான் சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன். நீங்கள் சொல்வதை நான் யோசித்துப் பார்க்கிறேன்” என்று மட்டும் சொன்னேன்.

“சரி. தொழிற்சாலைக்கு நான் வரப்போவதில்லை. எப்போது தொழிற்சாலையில் பாதுகாவல் மிக்க சூழல் திரும்புகிறதோ, அப்போது சொல். நான் வந்து பார்க்கிறேன்” என்றார் அழைப்பைத் துண்டிக்கும்முன்.

பூமியில் குடியேற்ற நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதற்கு காரணம், பூமியை நோக்கி ஒரு விண்கல் குரு கிரகத்தின் ஈர்ப்பு விசையால் உந்தித் தள்ளப்பட்டிருக்கிறது. அதனால் பூமியில் சற்று பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. விண்கல் மீது ஒரு அணுஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தி, விண்கல்லை பூமியின் பாதையிலிருந்து திசைதிருப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தத் திட்டம் வேலை செய்யுமென்று நம்புகிறார்கள். அது அவர்களின் நம்பிக்கை. ஆனால், நான் கற்றது என்னை வேறு விதமாக யோசிக்க வைத்தது.

செவ்வாயில் வாழ்க்கை என்பது குடியேறியவன் ஒருவனுக்கு என்னவாக இருக்குமென்றால், வெறும் இரண்டும் கெட்டானாக, பணம் பண்ணும் இயந்திரமாக மாத்திரமே இருக்கக் கூடும். செவ்வாயில் மரபணுப் பிறழ்வு, பூமியைக்காட்டிலும் ஐந்து மடங்கு துரிதமாக நடக்கும். சரி. அதனாலென்ன என்கிறீர்களா? செவ்வாய்க்கு இடம்பெயர்ந்து முதல் ஒன்றிரண்டு தலைமுறைகளிலேயே செவ்வாயில் பிறந்தவர்களுக்கும், பூமி மனிதர்களுக்கும் மரபணு ரீதியில், பிறழ்வுகள் வாயிலாக மாபெரும் வித்தியாசங்கள் உருவாகும். இதன் நீட்சியாக செவ்வாய் மனிதர்கள் ஒரு புதிய இனமாவார்கள்.

இதனால், பெண், செவ்வாயில் குடியேறியவளாக இல்லாவிட்டால் அரசாங்கங்கள் செவ்வாயில் குடியேறியவனை செவ்வாய்ப் பெண்ணுடன் உடல் ரீதியில் கலவி கொண்டு கூட அனுமதிப்பதில்லை. ஏனெனில் பிறக்கும் குழந்தைகள் இரண்டு வெவ்வேறு மரபணுக்களின் கலவையை ஏற்க மாட்டாமல் இறந்து போகவோ அல்லது பிறவி நோய்களுடன் பிறக்க வேண்டி வரும். இதை எனக்குத் தெரிவிக்காமலே கூட்டி வந்துவிட்டார்கள். ஏஜென்ட் செய்த வேலை. இப்போது கேட்டால், ‘கோப்பில் இதை நீ வாசிக்கவில்லையா?’ என்று புன்னகையுடன் கேட்கிறான் ஏஜென்ட். 500 பக்க கோப்பில் எல்லாவற்றையும் தீர வாசிக்க, யாருக்கு நேரம் இருக்கும்? இது புரிந்த பிறகுதான் லக்ஸ் ஏன் தன்னுடன் தன் மனைவி, பிள்ளைகளை அழைத்து வந்தார் என்பது புரிந்தது.

ஆக, என் சந்ததி செவ்வாயிலேயே முடிந்துவிடலாம். வீணாகப் போகும் உயிரை ஏன் ஒரு உயரிய நோக்கத்திற்காய் பணயம் வைக்கக்கூடாது?

விண்கல் வளையத்திலிருந்து , குரு கிரகத்தின் காந்த விசையால் பூமியை நோக்கி உந்தித் தள்ளப்படும் விண்கல்லை, அதே விண்கல் வளையத்திலிருக்கும் இன்னொரு கல்லால் தகர்ப்பதுதான் என் யோசனை. விண்கற்களை, விண்கல் வளையத்திலிருந்து நகர்த்த உந்துவான்கள் தேவை. அவற்றை விண்வெளிக்குக் கொண்டு சென்று விண்கல் வளையத்தின் அருகாமையில் நிறுத்தவேண்டும். எந்த விண்கல்லேனும் வளையத்திலிருந்து உந்தப்பட்டு பூமியை நோக்கிச் சென்றால், அந்த விண்கல்லின் எடையைத் தகர்க்கக்கூடும் இன்னுமொரு விண்கல்லை விண்கல் வளையத்திலிருந்து தெரிவு செய்து அதை விண்கல்லை நோக்கி விரட்ட வேண்டும். முடிவில் இரண்டும் மோதி பூமி பாதுகாக்கப்படும். இந்த என் யோசனையைச் செயல்படுத்த முதல் தேவை உந்துவான்கள் விண்வெளியில் இருக்க வேண்டும். அவற்றை சரியாகச் செலுத்த நானும் விண்வெளியில் இருக்க வேண்டும். அதற்கு ஒரு ராக்கேட் தேவைப்படும். கேள்வி இதுதான். இவையெல்லாம் ஒரு கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ஒரு தொழிற்சாலையில் மாத ஊதியத்தில் வேலை பார்க்கும் எனக்கு எப்படி கிடைக்கும்? மேலோட்டமாகப் பார்த்தால் சாத்தியம் இல்லை தான்.

ஆனால், தீவிரமாக யோசித்ததில் எனக்கு வேறொரு உபாயம் தோன்றியது.

செவ்வாய் கிரகத்தை ஆராய மனிதர்கள் அனுப்பிய பல விண்வெளி ஆய்வுக் கலன்களில் உபகரணங்கள் செயல் இழந்து பல செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்தபடி முடங்கித்தான் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் பல உந்துவான்கள் இருந்தன. ஆய்வுக்களன் பழுதாகிவிட்டதால், அந்த உந்துவான்கள் பயனற்று இருந்தன. அவைகளை நான் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், இதற்கு முதலில் நான் விண்வெளியில் இருக்க வேண்டும். அதற்கும் நான் விரைவிலேயே ஒரு வழி கண்டுபிடித்தேன்.

செவ்வாய் கிரகத்தை ஆராய நிறைய கலன்கள் அனுப்பப்பட்டன. அவைகள் ஒவ்வொன்றும் காலனிக்கு சுமார் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் மைல் தொலைவில் அமைந்திருந்தன. செவ்வாயில் மனிதர்கள் வாழும் காலனிக்கு வெகு தொலைவில், பயன்படுத்த ஆளின்றி அவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தொலைதூரத்தில் இருந்ததால், கவனிப்பார் அற்றும் இருந்தன. அவற்றை நான் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரே சிக்கல், என்னவென்றால், காலனியை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும். அதற்கும் நான் ஒரு வழி கண்டுபிடித்தேன்.

கழிவுகளிலிருந்து ஒரு பாதுகாப்பான கலன் ஒன்றைச் செய்தேன். பிராண வாயு வசதியுடன் ஒரு நாள் பிரயாணத்தைத் தாங்கும் அளவிற்கு அதை உருவாக்கினேன். பின் என்னிடமிருந்த பத்து எந்திர மனிதர்களின் கரங்களை ஒரு விசிறி ஆக்கி, அவைகளை ஒருங்கிணைத்து ஒரு குட்டி ட்ரோன் போல் ஆக்கினேன். செவ்வாயில் அழுத்தம் குறைவு என்பதால், ட்ரோனின் விசிறிகள் பன்மடங்கு வேகமாகச் சுற்ற வேண்டும். அவ்வளவுதான். இந்த ட்ரோன் மூலம் நான்காயிரம் மைல் கடந்து ராக்கெட்டை அடைந்தேன். பின் ராக்கெட்டில் பத்து எந்திர மனிதர்களுடன் ஏறி விண்வெளிக்கு பயணமானேன். விண்வெளி குறித்தும், ஒரு ராக்கெட்டை எப்படி செலுத்துவது என்பது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அது குறித்து என்னிடமிருந்த நினைவுத்தட்டுக்களின் மூலம் எந்திர மனிதர்களைக் கற்றுக்கொள்ள வைத்தேன். என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் நான் சொல்லச் சொல்ல அவர்கள் செயல்படுத்தினார்கள். அவர்களை வைத்து விண்வெளி ஏகியது எளிமையாக இருந்தது.

லக்ஸ் என்னைப் படிக்காதவன் என்று நினைத்திருந்தார். அந்த நினைப்பை நான் மாற்றிட முனையவில்லை. என் மேல் சந்தேகம் வராமல் இருக்க அதுவே ஒரு காரணமாக இருக்கப் போகிறது. அதை ஏன் நான் வலிந்து கெடுப்பானேன். பூமியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விண்கல் அப்போதுதான் செவ்வாய் கிரகத்தை கடந்து போய்க்கொண்டிருந்தது.

களனில் இருந்தபடி அந்த விண்கல்லின் பரிமாணத்தை அளவிட்டேன். பின் அதற்குப் பொருத்தமான, எதிர்கொள்ள, பூமியை நோக்கிய பாதையை விட்டு விலக்கித்தள்ளும் சக்தியை அளிக்கும் ஒரு விண்கல்லை, அந்த விண்கற்கள் வளையத்திலிருந்து பெற வேண்டும். தொலை நோக்கிகள் மூலம் கணினிகளுக்கு ஆணைகள் எந்திர மனிதன் மூலம் பிறப்பிக்கச் செய்தேன். பின் அந்த வளையத்திலிருந்து ஒரு விண்கல்லைத் தெரிவு செய்து அதை பூமியை நோக்கிச்செல்லும் விண்கல் மீது மோதுமாறு செய்ய வேண்டும்.

ஆனால், கழிவிலிருந்து உருவாக்கப்பட்டவைகளாக இருந்ததினாலோ என்னவோ, நான் அனுப்பிய இரண்டு எந்திர மனிதர்கள் சென்ற இடத்தில் ஒரு விண்கல் மீது மோதி விபத்தாகி செயல் இழந்து போனார்கள். இப்போது 8 எந்திர மனிதர்களும் ஒரு கலனும், பூமியை நோக்கிச் செல்லும் ஒரு விண்கல்லைத் தடுத்து நிறுத்த வேண்டும். மீண்டும் விண்கற்கள் வளையத்திலிருந்து விண்கல் ஒன்றைத் தெரிவு செய்ய எந்திர மனிதர்களை இருவரையும், அவர்களுடன் எஞ்சியிருந்த உந்துவான்களையும் அனுப்பினேன். இந்த முறை, அவர்கள் பொருத்தமான ஒரு விண்கல்லைத் தெரிவு செய்து கொணர்ந்தார்கள். அதை நான் பூமியை நோக்கிச் செல்லும் விண்கல்லின் மீது மோதச்செய்யுமாறு பணித்தேன். அதற்கு தேவைப்படும் விசையை அடைய வேண்டும். ஆனால், உந்துவான்களில் அத்தனை சக்தி இல்லை என்பது விரைவிலேயே புரிந்தது.

வேறு வழியின்றி நான் இருந்த விண்வெளிக் கலனையே கொண்டு அந்த உந்துவானைப் இறுகப்பற்றி தேவைப்பட்ட விசையை அளித்தேன். அந்த விண்கல், தேவைப்பட்ட விசைக்கு வந்தபிறகு என் கலனை அந்த விண்கல்லிடமிருந்து விடுவித்துக்கொண்டேன். பிறகு என் கலனின் வேகத்தை நான் குறைக்க, மிகுவிக்கப்பட்ட வேகத்துடன் சென்ற அந்த விண்கல், பூமி மீது மோதச் சென்ற விண்கல் மீது மோதி அதனை பாதை விலக வைத்தது. நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

பூமிக்கு நேர இருந்த பெரும் ஆபத்து நீங்கியது குறித்து பூமிக்கும், செவ்வாய்க்கும் தகவல் அனுப்பலாமா என்று தோன்றியது. அப்படிச் செய்தால் என்னவாகும்? என்னையும், என் முயற்சிகளையும் முதலில் கண்டுபிடிப்பார்கள். பின் அங்கீகரிப்பார்கள். பூமிக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தலாம். சான்றிதழ் அளிக்கலாம். அந்த சான்றிதழை வைத்து நான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விடவும் பன்மடங்கு கெளரவம் கூடிய, அதிக ஊதியம் பெறக்கூடிய வேலை ஒன்றை நான் பெறலாம்.

ஆனால்…?

அறிவு என்பது, அது தரும் தன்னம்பிக்கைக்கும், ஊக்கத்திற்கும் இன்னபிற சொல்லில் அடங்காத சாதகங்களுக்கும் சில ஆயிரம் க்ரெடிட்டுகளும், ஒரு காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட சான்றிதழும் ஈடாகிவிடுமா என்ன? அறிவை, அது தரும் தன்னம்பிக்கையை, தைரியத்தை, துணிச்சலை, ஆளுமையை, ஞானத்தை வெறும் அச்சடித்த சான்றிதழிலும், க்ரெடிட்டுகளிலும் அடக்கி விட முடியுமா என்ன? நான் சுயமாகச் சேர்த்த அறிவை, கழிவுகளிலிருந்து ஒரு முழு எந்திரம் உருவாக்கம் செய்து கள்ள சந்தையில் விற்கும் சாகசத்தால் அன்றி வேறு எதனால் ஈடு செய்துவிடமுடியும் என்பதே என் அவதானமாக இருந்தது.

பலவாறாக யோசித்துவிட்டு இறுதியில் அமைதியாக செவ்வாய் கிரகம் திரும்புமாறு எந்திர மனிதர்களுக்குக் கட்டளையிட்டேன் நான்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.