நித்தியமானவன் – கவிதைகள்

நித்தியமானவன்

இருக்கிறான் என்பதைத் தவிர
அவனைக் காணமுடியவில்லை
அவனை ஒரு சொல் கொண்டு
வேகமாக உச்சரிக்க முடியாது
அவனை ஒரு எழுத்தால்
எழுதிவிட முடியாது
நம்மிடையே அவன் இன்னும் என்றும்
இருந்துகொண்டு தான் இருக்கிறான்
நம் நினைவாக நம் உணர்வாக
ஒரு பொருளாக ஒரு வஸ்துவாக
அவன் இன்னும் நம்மிடையே
இருந்து கொண்டுதான் இருக்கிறான்
யாரோ ஒருவனாக அவன் இருக்கிறான்
ஆண் ஆன பட்ட அவன்
முன்பே சொல்லப்பட்ட
மனிதனாக இருக்கிறான்
அவன் யார் அவன்
தேடப்படும் மனிதன்
அப்படியானால் நிச்சயமாக இருக்கிறான்
அதுவரை அவன் நித்தியமானவன்

***

சரண்

என் விருப்பத்திற்கும் நிகழ்விற்கும்
அல்லாடுகிறது என் மனம்
ஏதோ ஒரு சண்டை
ஒரு போராட்டம்
நடந்துகொண்டேயிருக்கிறது
அது ஒரு மெல்லிய இழைபோல் ஆரம்பித்து
மிகப் பெரிதாக வளர்கிறது
நான் அதன் நடுவில் இளைப்பாறுவது போல்
இருந்துகொண்டு இருக்கிறேன்
நான் சொல்வது எதுவும் முற்றும்
முழுமையானது அல்ல
புதியதை நோக்கிப் போகிறது
அது என்னவென்று தெரியாதது
நான் பயப்படுவது
காலம் தாழ்த்துவது
நடந்தே தீருவது
காரணத்தைக் காட்டுவது
பிரதியின் உண்மையில் உயிருள்ள தண்டனை
வேறு வழியில்லை சரணடைகிறேன்
நான் இருப்பது எப்போதும் போலத்தான்

***

இரவு

நிலவு பூனை போல் நகர்ந்து
மேகத்தின் இடுக்குகளில்
அதன் ஒளியைக் கரைத்துக் கொண்டிருந்தது
அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன
பெரிய பெரிய யுத்தங்களின்
சாட்சியாகக் குதிரைகளின்
குளம்பொலிகள் கேட்டன
நான் இதுகாறும் பெற்ற அனைத்தையும்
தொலைத்து விட்டு பிச்சைக்காரனாய்
அந்த வானத்தின் கீழ் நின்றேன்
அன்று பூத்த மலரை
என் பழுதடைந்த கண்களால்
நெருக்கமாகப் பார்த்தேன்
கனவுகளை இறைத்த தோட்டத்தில்
நான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன்
தினம் தினம் காவல் காக்க
என் வீட்டின் மேல் விளக்கு போல்
எரிந்து கொண்டிருந்தது
வரலாற்றை வரைந்தவனுக்கு
அது இரவு நேரப் பார்வையாளன்

– புஷ்பால ஜெயக்குமார்/ ஃபிப்ரவரி 2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.