நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா?

ஏதாவது ஒரு நூலின் வரிகள் திரித்துக் கூறப்படுவது வரலாற்றில் தொடர்ந்து நிகழ்கிறது. இதற்கு நவீன அறிவுத்துறை நூல்களும் தப்புவதில்லை எனும்போது இலக்கியம் விதிவிலக்கில்லை. இலக்கியப் படைப்புகள் இயல்பாகவே ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் கொள்ளலுக்கு இடம் கொடுக்கிறது. குறிப்பாக சுருக்கமான படைப்புகள், செய்யுள் வடிவில் எழுதப்பட்டவை அல்லது கவித்துவமான மொழிநடையைக் கொண்டவை. மேலும் சில பழமையான நூல்களை நாம் வாசிப்பது குறைந்திருந்தாலும் சமூகத்தின் ஆழ்மனதை அதன் பகுதிகள் எப்போதும் பாதிப்பதால் திரிபுவாதிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.

அப்படியான திரிபுச் செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டு செய்யப்படுவதால் காலந்தோறும் தேவைப்படும் மறுவாசிப்புகளில் இருந்து வேறுபடுகிறது. ஒரு திரிபு கவனிக்கப்படாவிட்டால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அளவில்லை.

அப்படியான திரிபு ஒன்றே நந்தனார் கதையைச் சுற்றியும் இன்று தோண்டப்பட்டிருக்கும் அரசியல் அகழிகள் உருவாகக் காரணம். அதைப் பார்த்து மருண்டே என் போன்ற பிராம்மணரல்லாதவர்கள் பக்தியையும் சொந்த மரபையும் அஞ்சியும் வெறுத்தும் ஒதுங்கிப்போகத் தொடங்கினோம். அவ்வளவு குரூரமானவையாக நம் சமயங்களை இந்த அகழிகள் காட்டுகின்றனவே அன்றி, உண்மை என்ன என்பதை நாம் நந்தன் கதையின் பின்னணியில் ஆய்வு செய்வோம்.

திரிபுகளின் ஒழுக்கு

தொடர்ந்து பலரும் முயன்றாலும் ஒரு நூலின் பொருளைத் திரிப்பது எளிய செயல் அல்ல. பெரும்பாலும் மூலநூலின் மொழி பயன்பாட்டில் அருகிவிடும்போது இது சாத்தியமாகிறது (ஹீப்ரு, வடமொழி நூல்கள் உதாரணம்).

அம்மொழியின் சொற்பொருளை மாற்றிக் கூறுவது, அந்நூலின் சம்பவங்களையும் செய்திகளையும் அதன் சூழலில் இருந்து வெளியே கொண்டுவந்து விளக்குவது ஆகியவை பழைய பாணித் திரிபுகள். ஆனால் ஒரு மொழிக்கு முறையான ஆய்வுப் புலம், அகராதிகள் ஆகியவை இருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் இருக்குமானால் இது கடினம்.

அப்படியான திரிபுகளிலிருந்து மாறுபட்ட சிக்கல் ஒரு பண்பாட்டுடன் தொடர்பில்லாமல் அல்லது அதைப் பற்றிய முன்முடிவுகளுடன் வாசித்துப் பொருள் கொள்ளும் ஆய்வாளர்களால் ஏற்படுவது. இந்தியவியல் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கடந்த நூற்றாண்டுகளில் பெரும்பாலான மேற்கத்திய ஆய்வாளர்கள் செயல்பட்ட விதம் என்பது, பண்பாட்டிலிருந்து பண்பட்டவர்களைப் பிரிப்பது.

அதாவது, ஒரு பண்பாட்டின் உள்ளடுக்குகளையும் நுட்பங்களையும் கற்றறிந்து அதை அவ்வாறே ஆய்வுகளில் பிரதிபலிப்பது என்பது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் அதற்கான உழைப்பு பெரியது. அதனால் மொத்தமாக ஒரு பண்பாட்டை நாமாகவே பிரதிபலித்துவிடலாம் என்கிற முடிவுக்கு வரும் ஆய்வாளர்கள், எல்லாவற்றையும் ஆராய்ந்தும் பொறுமையாகக் கேட்டும் இறுதியில் தங்களுக்குப் புரிவதை மட்டும் எழுதிச் செல்கிறார்கள்.

அதாவது ஹிந்திப் படங்கள் காட்டும் தென்னிந்தியா என்றாலே இட்லி, சாம்பார், ஐயர், ரஜினிகாந்த் என்பதைப் போல. வெளியாட்கள் விவரம் தெரியாமல் செய்யக்கூடிய இப்படியான தவறைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், அதையே உள்ளூர்காரர் செய்தால்? அதுவும் ஆய்வு என்கிற பெயரில்?

உள்நாட்டுச் சிக்கல்

ஆய்வு என்ற பெயரிலும் நேரடித் திரிபுகளுமாக பன்னாட்டளவில் இப்படி நடக்கும்போது உள்நாட்டிலோ நாம் வேறுவிதமான சிக்கல் ஒன்றையும் சந்திக்கிறோம். அது, ஒரு நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒற்றை நிகழ்வை மட்டும் ஏற்றுக் கொண்டு ஆயிரக்கணக்கான பிற நிகழ்வுகளை கற்பனை என்பது. எந்த ஒரு நிகழ்வு தனக்கு இருக்கிற முன்முடிவை பொது வெளியில் வைத்து உணர்ச்சிகரமாகப் பேச உதவுமோ அதை மட்டுமே குறிப்பிட்டு அந்தப் பண்பாட்டை குற்றம் சுமத்துவது.

ஒரு ஆக்கத்தில் உள்ள அனைத்தும் கற்பனை என்று சொல்லும் ஒருவர், எப்படி ஒன்றிரண்டு சம்பவங்களை மட்டும் உண்மை என்று சொல்லலாம்? அப்படிச் செய்வதற்கு ஆய்வு முறைமைகள் பல இருக்கின்றன. அடிப்படையாக வேண்டியது ஆதாரங்களும் அவற்றை முறையாக விளக்க இயல்வதும். ஆய்வுகளில் யாருடைய கற்பனைக்கும் தாவல்களுக்கும் இடம் கிடையாது.

ஆனால் எதை வேண்டுமானாலும் வெளியிடும் நுண்ணறிவற்ற இதழ்கள் இருக்கவே இருக்கின்றன. அவை காரணமாகவே நாம் ஒரு ஆய்வு எதற்கு, ஏன் என்றும் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி வெளியாகக்கூடிய கட்டுரை ஒன்று பின்னர் பல்வேறு ஆய்வுகளுக்கு ஆதாரமாகக் அமையும். அப்போது தொடர்புடைய மக்கள் என்ன கூச்சல் போட்டாலும் ஒரு நிறுவப்பட்ட ‘ஆய்வு முடிவும்’ அந்த ‘ஆய்வாளர் சமூகமும்’ வளைந்து கொடுக்காது.

இன்று நந்தனார் விஷயத்தில் நாம் எதிர்கொள்வது அப்படியான கடைநிலை ஆய்வுகளையும் அல்ல. வெளிப்படையாக தன் காழ்ப்புகளை மட்டுமே முன் வைக்கும் கருத்துக்கள். அதற்கேற்ப பொருள் கொள்ளக்கூடிய வரிகளையும் சம்பவங்களையும் மட்டும் ஆதாரமாகக் குறிப்பிடும் போக்கு. ஆனால் இவர்களே தாங்கள் மேற்கோள் காட்டும் நூல்களை புனைவு வகைக்குள் சேர்ப்பார்கள் என்பதோடு அப்படைப்புகளில் இருக்கும் பிற சம்பவங்களை தங்களின் தரப்புக்கு ஏற்ப திரிக்க இயலாத காரணத்தால் கற்பனை என்பர்.

நாமே நந்தனார்

அவ்வப்போது சமூக ஊடகங்களில் சிலரால் தொடர்ந்து விவாதிக்கப்படும் விஷயம் நந்தனார் எரி புகுந்தது. அதைக் கவனித்தால் எழுதும் ஒவ்வொருவரும் தன்னை நந்தனாராக உணர்வதாக நமக்குத் தோன்றுகிறது. அந்த கொதிப்பை விவாதங்களில் வெளிப்படுத்துகிறார்கள். இன்றுவரை சாதியக் கொடுமைகள் செய்திகளாகவும் கொடுமைக்கு உள்ளானவர்கள் கைவிடப்படுவதும் நடக்கும் நாட்டிலா இப்படி என்று நாம் கேட்க வேண்டும். அனைவரும் தவறாமல் தங்களது கருத்தை முடிக்கிற விதம் ஒரே போலிருக்கும். நந்தனார் தொடங்கி நேற்றைக்கு செய்தியில் வந்த கொடுமைவரை நடப்பதற்கு சைவர்களே காரணம் என்பதே அது.

ஏன் நந்தனாரை சாதிக் கொடுமைக்கு ஆளானவர் என்கிறார்கள்? ஏன் தன்னை நந்தனாரோடு இணைத்து உணர்ச்சிவசப்படுகிறார்கள்?

அ) ஒருவகையில் அது பக்தி இலக்கியத்தின் வெற்றி. தமிழ் மனம் நனவிலியில் பக்தி மரபுடன் இன்றும் பிணைந்திருப்பதால்.

ஆ) இங்கே நம் மதங்களுக்கும், பண்பாட்டுக் கல்விக்கும் எதிரான தொடர் பிரச்சாரங்கள் முன்வைக்கிற வாதங்கள் நம்மை தொந்தரவு செய்கிறது.

இ) இந்திய மதங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் ஏன் சொல்லப்பட்டன என்று நமக்குப் புரியாததால்.

ஈ) எனக்கு உவப்பான விஷயத்தை மட்டுமே ஏற்றுக் கொள்வேன் எனும் நிலைப்பாடு.

அரசியல்வாதிகள் இச்சூழலை பயன்படுத்துவதில் கரைகண்டிருந்தாலும் இனியே தீவிரமான சிக்கல்களை நாம் சந்திக்கவிருக்கிறோம். இதை நாம் மதப் பிரிவுகளின் சார்பாக மட்டும் நின்று யோசிக்க வேண்டியதில்லை. இந்த பண்பாட்டின் பன்முகத் தன்மையின் பக்கம் நின்றும் பேச முடியும்.

நந்தனார் வரலாற்றின் மூலம்

முதல்நூல் வழிநூல் என்று படைப்பை வகைப்படுத்திப் பார்ப்பது நம் வழக்கம். இங்கு முதல் நூல் எனப்படும் மூலநூல் முக்கியமானது. ஒரு படைப்பு சமூகத்தில் பாதிப்பைச் செலுத்துவதாலேயே அதற்கு வழிநூல்கள் தோன்றுகின்றன. அப்படியான மூலநூலின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு விரிவாக்கிச் செல்வது சார்பு நூல். மூலநூல் ஒன்றுக்கு மாற்றுக் கருத்தை முன்வைப்பது புடை நூல். அப்படியான புடைநூல்களும் தமிழில் தொடர்ந்து இயற்றப்பட்டிருக்கின்றன. நந்தனார் வரலாற்றுக்கு சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத்தொகை எனும் பத்துப் பாடல்களே முதல்நூல் [1].

சுந்தரமூர்த்தி நாயனார் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆதிசைவக் குடியில் பிறந்த அந்தணர். அவர் வாழ்வும் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட நிகழ்வுகளும் விரிவாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவர் திருவாரூர் வன்மீகநாதர் கோவிலில் சுவாமியாலேயே எடுத்துக் கொடுக்கப்பட்ட முதலடியான

‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’

என்பதைக் கொண்டு பாடியதே திருத்தொண்டர்த் தொகை பாடல்கள்.

அதில் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த, பல்வேறு சிவ மதங்களைச் சேர்ந்த பக்தர்களை குறிப்பிடுகிறார். அவர்களின் பக்திச் சிறப்புகளை நினைத்து ஊக்கம் கொள்வதற்கான நூல். அந்தச் சிறுநூல் அடியார்களின் பெயரை ஊர் அல்லது குடிக் குறிப்புகளோடு தெளிவுபடக் கூறிவிடுகிறது.

பொதுவாக தமிழ்நாட்டில் சைவர்கள் எந்த பிரிவினராக இருந்தாலும் கோயில் என்று பெருங்காதலோடு குறிப்பிடுவது தில்லை எனும் சிதம்பரத்தின் சபாநாயகர் கோவிலை. இப்பிரிவுகள் ஒன்றை ஒன்று மறுத்து வாதம் செய்யக்கூடிய தத்துவ வேறுபாடுகள் கொண்டவை என்பதை நாம் மறக்கக்கூடாது. மேலும் மூவாயிரவர் எனப்படும் தில்லைக் கோவில் அந்தணர்கள் ஆதிசைவர்களும் அல்ல, சைவச் சித்தாந்திகளும் அல்ல. எண்ணிக்கையில் இன்று முன்னூற்றிச் சொச்சமே இருக்கும் வைதிக அந்தணர். சைவப் பிரிவினரின் ஒருமித்த கருத்து என்பது ஒருபுறம். அவர்களின் சிறப்பை சிவபெருமானே அனைவருக்கும் உணர்த்தும் இடங்களில் ஒன்று மேற்கூறிய நிகழ்வு என்கிறது சைவ சமய வரலாறு.

மேலும் அந்நூலில் வேடர், பரதவர், இடையர், சாலியர், குயவர், பாணர் என பல ஜாதிகளைச் சேர்ந்த நாயன்மார்களின் வரலாறு கூறப்பட்டிருக்கிறது. வேளாளர் குடிகளைச் சேர்ந்தவர்கள் பலர். அரசர்களும் அந்தணர்களும் சிலர். அவர்களும் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள். இந்த வரிசையில் நந்தனார் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள். இந்த விஷயங்களில் நூற்றாண்டுகளாக தமிழ் மொழி கண்டிருக்கும் அறிஞர் பெருமக்களுக்கும் முறையான சைவர்களுக்கும் எந்த எதிர்கருத்தும் இருந்ததில்லை. இருந்தவை புடைநூலாக எழுதப்பட்டிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அது மட்டுமல்லாமல் அந்த நாயன்மார்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாகவே சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர்.

திருத்தொண்டர் தொகையின் வழிநூல்கள் நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியும் [2] பின்னர் சேக்கிழார் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு காப்பியமாக விரித்து எழுதிய பெரிய புராணமும் (திருத்தொண்டர் புராணம்) [3]. இருவரில் நம்பியாண்டார் நம்பி பத்தாம் நூற்றாண்டில் சிதம்பரத்திலிருந்து திருமுறை தொகுத்தவர். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக, அதிகாரமும் அறிவும் ஒருங்கே கொண்டவராக இருந்தார்.

சுந்தரர் – நம்பியாண்டார் – சேக்கிழார் ஆகியோரின் கால இடைவெளி மட்டுமல்லாது, நாயன்மார் வரிசையில் பலர் சுந்தரர் பாடிய காலத்துக்கும் நூற்றாண்டுகள் முற்பட்டவர்கள். எனவே அப்பணி எளிமையானதாக இருந்திருக்காது. குறிப்பாக சேக்கிழாருக்கு. ஆனால் அப்பணி முறையாக செய்யப்பட்டிருப்பது நூற் தொடர்ச்சியிலேயே தெரிகிறது. தில்லை அந்தணர்களின் நூற் தொகுப்புகளும் அவர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. மேலும் அக்காலத்திய வரலாற்றுப் பதிவு முறைகள் இன்று நாம் உறுதிபடக் கூறிவிடமுடியாதவை. அன்று நம் பண்பாடு உடைந்து சிதறாமல் இருந்தது என்பதோடு கோயில்களும் கொள்ளை போயிருக்கவில்லை என்பதை நாம் உணர்ந்தால் போதும்.

அப்படியாக அந்த படைப்புகள் முறையாக ஏற்றுக்கொள்ளப் பட்டவை. தில்லையின் ஆயிரங்கால் மண்டபத்தில் சேக்கிழார் பாடல்களை அரங்கேற்றியபோது அங்கிருக்கும் இறைவனே ‘உலகெலாம்’ என்ற பாயிரத்தின் முதல் வார்தையை எடுத்துக் கொடுத்ததும் அதன் அடையாளமே.

இதை தென்னாட்டுச் சைவ மரபினர் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏற்காத சைவ மரபினருக்கும் எதிர்க் கருத்தொன்றும் இருபதாம் நூற்றாண்டு வரை இருந்ததில்லை. நன்னோக்கம் கொண்ட ஆய்வாக இல்லாத பட்சத்தில், சைவ மரபுகளைச் சேராதவர்களின் கருத்துக்களை நாம் ஏன் கவனிக்க வேண்டும்? இனி, நாம் மூலத்தில் உள்ள நந்தனார் கதையை வாசிப்போம்.

மூலத்தில் நந்தனார்

ஆதனூர் கொள்ளிடத்தின் தெற்கே கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. அது வயல் வளம் (நன்செய்), துடவை வளம் (புன்செய்), துடைவைகளில் ஊடு பயிரால் கிடைக்கிற ‘ இடை வருவளம்’ கொண்டிருந்த ஊர். அந்த ஊர் உயர்ந்த மாட வீடுகள் மட்டும் கொண்டிருக்கவில்லை,

‘மலிவுடைத்தாய் அயலிடைவே றடிநெருங்கக் குடிநெருங்கி யுளதவ்வூர்’

சின்னஞ்சிறு மலிவான வீடுகள் நெருக்கிக் கட்டப்பட்டிக்கும் மக்கள் தொகை மிகுந்த ஊர் (high population density).

அந்த ஊரின் புறம்பணையில் (வயல்களையொட்டி) இருந்தது தம் சுற்றம்கூடி வாழ்வதை விரும்பும் உழவுத் தொழில் செய்த பறையர் குடிச் சேரி. கோழி மற்றும் நாய் வளர்ப்பு, கையில் காப்பும் இடையில் மணிகளும் அணிந்த கறுத்த மேனியுடைய சிறுவர்களின் விளையாட்டு, தோல் வார்களை விரித்துக் காய வைக்கிற முற்றங்கள், வன்சிறு தோலில் கட்டிய தொட்டிலில் குழந்தைகளை உறங்க வைக்கும் பெண்கள், நெல் குற்றும் பெண்களின் பாடல்கள், பறை இசைக்கருவிகள் என அந்த வாழ்கை முறையை நூல் விரிவாகச் காட்சிப்படுத்துகிறது.

அப்படி ‘பறைத் துடவையாக’ புன்செய் நிலத்தில் உரிமை கொண்டு உழவும் உபதொழில்களும் செய்து வருமானம் கொண்டிருந்த பறையர் குடியில் பிறந்தார் நந்தனார். அவர் பிறந்தபோதே

‘மெய்ப்பரிவு சிவன்கழற்கே விளைத்த உணர்வொடும் வந்

என்கிறது மரபு. அந்த சிவ பக்தர் அவ்வப்போது தன்னால் இயன்ற பொருட்களை கோவில்களுக்கு தருவதையும் வழக்கமாக வைத்திருந்தார். அவர் தந்தவற்றில் தோல் பொருட்கள், இசைக்கருவிகளுக்கான தந்திகள் மற்றும் கோரோசனை போன்றவை அடங்கும். அவருக்கு அது கட்டாயமில்லை. மேலும் கோயில் வாசலில் நின்று வணங்கும் பொழுதுகளில் பக்தி மிகுதியில் ஆடுவதும் பாடுவதும் அவர் இயல்பு.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது வழக்கில் இருந்துவரும் சொல்லாட்சி. அது வெறுமனே எவரும் முனைந்து பரப்பியது அல்ல என்பது சற்றேனும் கோயில்களில் புழங்கிய பக்தர்களுக்குத் தெரியும். கோபுரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் தெய்வங்களின் உப தேவதைகளின் இருப்பு உண்டு என்பதும், கருவரை அளவுக்கே புனிதமானது கோபுரமும் ஸ்தல விருட்சமும் என்பதும் தெளிவு.

ஆனாலும் நந்தனாருக்காக திருப்புன்கூர் சிவாலயத்தில் நந்தியை விலக்கி காட்சி தந்தார் மூலவர் என்கிறது நூல் (நந்தனாராக நாம் நம்மைக் கருதிப் பொருமுவதற்கு முன்னர் இப்படி எவையேனும் அருளப்படுகிறதா, அதற்கேற்ப பக்தியும் தகுதியும் இருக்கிறதா என்று கேட்டுக்கொள்வோம்).

மேலும் பெரிதாகப் பேசப்படாத ஒரு விஷயம் உண்டு. திருப்புன்கூர் திருவாயில் முன் நின்று சுவாமியை வணங்கி முதுகில் தொங்கும் வார் கட்டு அலையும்படி உற்சாகத்தோடு நடப்பவர் ஒரு இடத்தில் குளம் தோண்டுவதற்கு சாத்தியமாக இருக்கவே

‘ ஆதரித்துக் குளம் தொட்டார்’.

அதாவது, குளம் வெட்டி மண் சுமந்தது அடிமைப் பணியாக அல்ல. பொதுவாக கட்டாயப்படுத்தி பெறப்படும் உழைப்பு முறையான ஊதியம்கூடப் பெறாது என்பதை நாம் அறிவோம். எனில், ஏன் இன்னும் நந்தனாரின் பெயரால் அது நினைத்துப் பார்க்கப்படுகிறது? மேலும் கோயில் வாசலில் நின்று வழிபடும் அவரையும் அவரை ஒத்தவர்களையும் எவரும் துன்புறுத்தியதாகவோ அருவெறுத்ததாகவோ காணாமல் நாம் அவர்களின் பக்தியின் சிறப்பு பாடப்படுவதையே காண்கிறோம். இது ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படியாக அவர் அருகில் இருந்த கோயில்கள் அத்தனையும் சென்று வணங்குகிறார். தொடர்ந்து சிவத்தலங்களில் சிறந்ததான தில்லைக்கு சென்று வரவும் ஆசை வந்தது. ஆனால் பயண தூரம் மட்டுமில்லாமல் வேறொன்றும் அவர் சென்று வருவதை தடை செய்கிறது. எல்லா கோவில்களிலும் மூலவர் லிங்க வடிவில் இருக்க அங்கோ சபாநாயகராக இருப்பவர் நடராஜர். அவரை கண்கொண்டு காணாமல் எப்படி கருத்தொன்றி வழிபடுவது? கற்பனையில் உருப்பெறும் நடராஜரை உண்மையில் காண்பதற்கு தூண்டுதல் ஏற்படாதா?

அக்காலத்தில் இன்றிருப்பது போல எல்லா கோவில்களிலும் நடராஜர் இடம் பெற்றிருக்க மாட்டார். அப்படியே சிற்பங்கள் இருந்திருந்தாலும் புறப்பாட்டில் உற்சவராக வெளியே வந்திருப்பாரா தெரியாது. சிதம்பரத்தில் இருப்பதே மூலச் சிற்பம். ஓவியங்களும் அதிகம் புழங்கியிருக்காது.

எனவே அவர் வாசலில் நின்று என்ன பயன் என்று தயங்கியிருக்கலாம். அத்தனை தூரம் சென்று காணாது திரும்புவோமே என்கிற ஏக்கம் ஒரு தூய பக்தனுடையது. அப்படியே வேறு இடத்தில் காண்பதற்கு கிடைத்தாலும் இங்கே நமக்கு ஆர்வம் சிற்பத்தை காண்பதில் அல்ல, அந்த சிற்பத்தில் உறையும் தெய்வத்தில் இருப்பைக் கண்டு உணர்வது. எல்லா கோவில்களும் தெய்வங்களின் இருப்பு அந்தந்த கோயில்களின் தன்மைக்கேற்ப இருந்தாலும் அது அன்று போலவே இன்றும் தில்லையில் தான் சிறப்பாக இருக்கிறது. அன்று நந்தனார் விரும்பியது அப்படியான தரிசனத்தையே.

இறுதியாகக் கிளம்பும்போது திருப்புன்கூரிலும் பிற கோயில்களிலும் ஈசன் காட்டியது போன்றே அங்கும் ஒரு வழியைக் காட்டாமல் போக மாட்டார் என்று கிளம்பிப் போகிறார். ஆனாலும் ஊருக்குள் நூழையவே அவருக்கு தயக்கம். கோயில் வாசல் சென்று வழிபட அவருக்குத் தடை இல்லையே? பாணர் பழங்குடியைச் சேர்ந்த நீலகண்ட யாழ்ப்பாணர் போன்றோரும் தில்லை கோவிலின் முன் சென்று பாடியிருக்கிறார்களே? இல்லாவிட்டாலும் ஸ்வாமி உற்சவ காலங்களில் வெளியே வராமலா போய்விடுவார்? இருந்தும் நந்தனாருக்கு ஏன் தயக்கம்? அதை நூல் தெளிவாகவே கூறுகிறது.

அந்நகருக்கு வெளியே நிறைந்திருந்த பாடசாலைகளும் அங்கிருந்து எழும் வேள்விப் புகை கண்டுயும் நாளும் வேதங்கள் ஓதப்படும் அத்தெருக்களில் தான் நடக்கலாமா என்று மறுகுகிறார். அதைக் கடந்து நகர மதிலுக்குள் நுழைந்தால்

‘வேதிகைகள் ஒன்றிய ஆகுதிகள்’

உடன் வாழும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரின் மாளிகைகள் என்று அவர் கேள்விப் பட்டதுண்டு. அவற்றைக் கடந்து கோவிலை எப்படி அடைவது என்று அஞ்சி ஆராத பெருங்காதலுடன் வணங்கியவாறே நந்தனார் அந்த நகரத்தையே வலம் வரத் தொடங்கினார். இந்த மருட்சியும் பயபக்தியும் நந்தனார் மட்டும் வெளிப்படுத்தியது அல்ல, ஞானசம்பந்தர் உட்பட பிற நாயன்மாரும் அப்படியான உணர்வுடன் தில்லைக் கோவிலின்

‘மா தவங்கள் நல்கும் திரு வீதி நான்கும் தொழுது’

நின்றிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவு. கோயிலுக்குள்ளே, கோபுரங்கள், அதன் மாட வீதிகள் மட்டுமல்லாமல் கோவில் இருக்கிற ஊரும் நமக்குப் புனிதமானது.

அப்படி இரவு பகல் பாராது தில்லை நகரை வலம் வந்தவர் தளர்ந்து தூங்குகிறார். அவர் கனவில் தோன்றிய இறைவன்,

‘இப்பிறவி போய் நீங்கும்படி தீயினிடத்து நீ முழுகிப் பூணூலணிந்த மார்பினையுடைய வேதியர்களுடனே முன் அணைவாயாக’

என்று அருள்கிறார். அங்கே தில்லைவாழ் அந்தணர் கனவிலும் தோன்றி எரியமைக்கச் சொல்கிறார். அந்த ஆணையை நிறைவேற்ற நின்றாலும் அவர்களுக்கு ஊர் என்ன சொல்லும் என்ற பயம் இருந்தது என்கிறது நூல். இது சபாநாயகருக்கும் சபை நின்ற அந்தணருக்கும் நாயனாருக்கும் இடையேயான அந்தரங்கமான விஷயம். சைவர்களுக்கும் பொதுவே பக்தர்களுக்கும் புரியக்கூடியது. தீக்‌ஷிதர்களின் பயம் நியாயமானது என்பதற்கு இன்று நாம் சாட்சியாகிறோம்.

ஐயா என்றழைத்து நந்தனாரை வணங்கி வரவேற்று எரி எழுப்பியதைச் சொன்னார்கள். அவரும் வணங்கி வலம் வந்து திருக்கூத்தனை மனதில் நிறுத்தி இறங்கி உடல் நீத்து வெளிவந்தார். அப்போது அவர் சடைமுடி திகழும் ஒரு முனிவராக – இரு பிறப்பாளராக எழுந்தார் என்கின்றனர் சைவர். இங்கே இருபிறப்பு என்பதைவிடவும் முக்கியம் அவர் ஒரு அருந் தவத்தவராக வெளிப்பட்டார் என்பதே. அதுவே நந்தனாரின் சுயமாக இருந்ததால் இது சாத்தியப்பட்டதே தவிர அனைவரும் எரி புகலாம் அல்லது புக இயலும் என்பதல்ல நூலின் வாதம். அந்தணர் வளர்த்த தீயும் வேள்வித் தீயே தவிர நாம் சூடுபட்டு மட்டுமே அறிந்த தீயல்ல.

திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கைதொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்துமனங் களிபயின்றார்
அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாராம் மறைமுனிவர்

– என்கிறது நூல்.

அப்படியாக தனக்கேற்ற உருப்பெற்ற திருநாளைப் போவார் உள்ளே சென்று தரிசனம் பெற்றதும் நடராஜரிடம் ஒடுங்குகிறார் [4].

எரி புகுந்த பிறர்?

இப்படியாக நந்தனார் எரிக்கப்பட்டார் என்று குற்றம் சாட்டுவோர், அதே நூலில் வரும் பிறர் எரி புகுந்த நிகழ்வுகளையும் ஏற்கிறார்களா?

உதாரணத்துக்கு திருஞான சம்பந்தருடன் வேறு பலரும் எரி புகும் நிகழ்வு [5, 6]. சம்பந்தருக்கு இருக்கும் வரலாற்றுப் பதிவுகள் மட்டுமல்லாது அவருடைய சொந்த ஆக்கங்களும் தொடர்புடைய இடங்களும் எண்ணிக்கையில் அதிகம். அதாவது சம்பந்தர் இருப்பை மறுக்க வேண்டிய தேவை இருப்பவர்களும் கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு பேச முடியுமே ஒழிய எங்கும் அது நிற்காது.

ஆதிசைவ பிராமணர் குடியில் சீர்காழியில் பிறந்த திருஞான சம்பந்தர் தன் விரிவான பயணங்களும் செயல்களும் பெரிய புராணத்திலும் பிறவற்றிலும் உள்ளதோடு அவர் பாடல்களிலும் உண்டு. அவர் மணம் செய்த கையோடு தம் மனைவியுடனும் கூடியிருந்த நூற்றுக் கணக்கானவர்களுடனும் எரி புகுந்தபோது வயது பதினாறு.

அந்த நிகழ்வில் அந்தணர்களான திருநீலநக்க நாயனார், முருக நாயனார், சிவபாதவிருதயர், நம்பாண்டார் நம்பி போன்றோர் தம் மனைவியரோடு எரிபுகுந்தனர். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் தம் விறலியார் மதங்கசூளாமணியுடன் எரிபுகுந்தார். அதாவது அந்தணர் அல்லாதவரும் நந்தனாரைப் போன்றே ஒரு தொல் தமிழ்க் குடியைச் சேர்ந்த ஒருவர்.

அவர்கள் மட்டுமல்லாமல் சம்பந்தரின் பல்லக்குத் தூக்கிகளும் குடைபிடித்தோரும், திருமணத்தில் மங்கலத் தாலங்கள் சுமந்த பெண்கள், பிற பணியாளர்கள் உட்பட பல்வேறு குலங்களைச் சேர்ந்த திருமணத்தில் பங்கெடுத்த மக்கள். அதில் வைதிக சைவர்கள், சைவ சித்தாந்திகள் மட்டுமல்லாமல் பிற ஆறு சைவச் சமயங்களைச் சேர்ந்த ‘அருந்தவத்தவரும் அடியவரும்’ உண்டு. மேலும் ‘முனிவர்களும் கும்பிட வந்தணைந்தாரும்’ மட்டுமல்லாமல் ‘திருவருளினால் வீடுபெற வந்தோர்’ என அங்கே அந்நேரம் தற்செயலாக வந்து சேர்ந்தவர்களும் இருந்தனர்.

எரி புகுவதும் அடிபடுவதும் பிராமணர் என்றால் தமிழ் மனம் கண்டு கொள்ளாதா? அப்படியே நாம் வைத்துக் கொண்டாலும், இங்கே பிற ஜாதியினரும் – வேளாளர் உட்பட எரி புகுந்தார்கள் என்று உள்ளதே? அது சிவலோகத்துக்கான பாதை இல்லை நெருப்பில் வெந்து சாவது என்று சொல்பவர்கள் இதை ஏன் குறிப்பிடுவதில்லை?

அ) பாணர் இனத்தவர் தமிழ் நிலத்தில் அடையாளம் இழந்து கேட்பாரற்றுப் போனது,

ஆ) இப்போதும் வேளாளர் பிரிவுகளில் பலர் சைவ சமயத்தவர், எனவே அவர்களுக்கு அது சிவனருள் என்கிற தெளிவு இருப்பது.

இ) எரிபுகுந்த பிற குடியினர் குறித்துத் தெளிவில்லாமை.

ஈ) இந்த நிகழ்வால் அரசியல் ஆதாயம் இன்மை – உள்நோக்கம் கொண்ட எளிமைப்படுத்தல் எதற்கும் இடம் கொடுக்கவில்லை.

இவை போன்ற காரணங்களால் இந்நிகழ்வு பொது வெளியில் பேசப்படுவதில்லை.

எந்தச் சிதம்பரத்தில் தமிழ்மூவரில் ஒருவரான இசைவேளாளர் குடிபிறந்த முத்துத்தாண்டவர் உயிர் உருக்கிப் பாடி இறைவனில் கலந்தாரோ [7], அதே சிதம்பரத்தில் அனைவரும் பார்க்க சபாபதியிடம் சேர்ந்தார் அந்தணரும் பாண்டியனுக்கு அமைச்சருமான மாணிக்கவாசகர். அவர்களும் நந்தனார் போலவே கொல்லப்பட்டனர் இல்லையா? இல்லாவிட்டால், இவர்கள் முக்தியடைந்தனர் ஆனால் நந்தனார் மட்டும் கொல்லப்பட்டாரா?

ஏன் இவையும் இது போன்ற பிற சம்பவங்களும் நூல் திரிபுக்கு வசதியாக அமையவில்லை? ஏனெனில் நந்தனார் விஷயத்திலும் சரி, பிறவற்றிலும் சரி முதல் நூலையோ வழிநூல்களையோ ஆராய்வதில் எவரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஏன் வாசிப்பதும் இல்லை. அறிவுப் பயிற்சி சற்றேனும் இல்லாதவர்களுக்கு கூச்சல் தவிர வேறொன்றும் கைவருவதில்லை.

சைவர்கள் எப்போதும் போல முறைப்படி இந்நூல்களை கற்கிறார்கள். ஏற்கெனவே நாம் கண்டது போல, எவரும் சைவர்களின் விளக்கத்தை ஏற்பதில்லை. சைவர்களுக்கோ வெளியே கூச்சலிடுபவர்களுக்கும் உள்நோக்கம் கொண்டவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு மதப்பிரச்சாரத்திலும் ஆட்சேர்ப்பிலும் ஆர்வம் கிடையாது. ஒரு பண்பாட்டுச் சிக்கல் ஏற்படுமானால் பாதிக்கப்படுவது தன் பண்பாடு என்று அவர்கள் அறிவார்கள்.

நந்தனார் கதையும் திரிபு வடிவமும்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மேடை நாடகங்கள் தொடங்கி இன்றைய வரை வணிகத் திரைப்படங்கள் வரை தமிழ்நாட்டில் காட்சிப்படுத்தல் கலை கொண்டிருக்கும் வீச்சு அளப்பரியது. இலக்கிய ஆக்கத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் கதையின் சட்டகத்தை மட்டும் உருவி எடுத்து திருப்பங்களையும் கவர்சிகரமான அம்சங்களையும் சேர்த்தே அப்படியான நாடகங்களும் திரைப்படங்களும் உருவாகின்றன.

இரண்டு மையக் கதாபாத்திரங்களையாவது மோத விடுவதே வணிக வெற்றிக்கு வழிவகுக்கிறது. நல்லவன் கெட்டவன் என்கிற பிரிவினை எளியது. மேலும் காட்சிகள் உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் பொது புத்திக்கு எட்டுவதாகவும் அமைய வேண்டியது கட்டாயம்.

அதன் தொடர்ச்சியாகவே தமிழ்ச்சூழலில் வரலாற்று நிகழ்வுகளும், உண்மைச் சம்பவங்களுமே இப்படியான மாற்றங்களுக்கு உட்படுகிறது.

அ) ஊக்கமாகக் கொள்ளும் நிகழ்வுகளின் உண்மைத் தன்மை,

ஆ) தொடர்புடைய தனிமனிதர்களின் அடையாளங்கள், மனநிலை மற்றும் நியாயங்கள்

இ) இப்படியான விஷயங்களை அணுக வேண்டிய அடிப்படை மானுட விழுமியங்கள்

ஆகியவற்றுக்கு பெரிய இடம் இல்லை. அவற்றை வணிகப் படைப்புகள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளும். ஒருவேளை சம்பந்தப்பட்டவர்களுக்கு (அப்படியான படைப்பால் பாதிக்கப்படுபவர்களுக்கு) பின்புலமும் அரசியல் செல்வாக்கோ, எண்ணிக்கை பலமோ இல்லாவிட்டால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

இந்நிலையில் புராணக் கதைகளை மீண்டும் எழுதியவர்களை (மேடை நாடகம், நாவல்கள்), திரைப்படம் எடுத்தவர்களை கேட்க வேண்டுமா? ஏனெனில் தமிழ்ச் சூழலில் அதிகமும் விரும்பப்பட்டதும் மக்களின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதுமான புராணக் கதைகளை விட்டால் கச்சாப்பொருட்கள் குறைவு. இங்கே ஆரம்ப காலத் திரைப்படங்கள் பெரும்பாலும் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. வெகு சிலவே மாற்றுப் பின்புலம் கொண்ட கதைகள்.

ஆனால் எல்லா புராணக்கதையையும் திரைப்படமாக எடுக்க முடியாது. அது மக்களால் விரும்பப்பட வேண்டும். அப்போதைய தொழில்நுட்பத்தில் எடுப்பதற்குச் சாத்தியமானதும் பொருட்செலவு கட்டுக்குள் நிற்பதுமாக இருக்க வேண்டும். இங்கே புராணங்களை அடிப்படையாகக் கொண்டாலும், திரைப்படம் என்பது வணிகம் சார்ந்ததே என்பதால் எப்போதும் வெற்றி பெறும் தலைவன் தலைவி உறவை மையப்படுத்திய திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

அதாவது அனைவரையும் திரையரங்குக்கு வரவழைப்பதற்காக, வருவதற்கு இருக்கும் தயக்கத்தை உடைப்பதற்காக பக்திப் படம் என்று சாயம் பூசப்பட்ட காதல் படங்கள். சீதா கல்யாணம் (1934), பாமா விஜயம் (1934), ஸ்ரீநிவாச கல்யாணம் (1934), ராதா கல்யாணம் (1935) என்பது போன்ற பெயர்களிலேயே பத்திற்கும் மேற்பட்ட படங்கள் அந்த காலகட்டத்தில் மட்டும் வந்திருக்கின்றன [8].

அவை மட்டுமில்லாமல் சற்றே விரிவான கதைகளை எடுத்துக் கொண்டாலும் முக்கியச் சம்பவங்களையும் பெயர்களையும் மட்டும் வைத்துக் கொண்டு அவற்றில் என்னவெல்லாம் மாற்ற முடியுமோ அதைச் செவ்வனே செய்தார்கள். எப்படி ஒரே கதையை மீண்டும் மீண்டும் எடுக்க முடியும்?

இங்கே படைப்பூக்கத்திற்கு இடமில்லையா? புராணங்களை புதிய கண்ணோட்டத்தில் அணுகுவது தவறா? அதன் புனிதத்தை காப்போம் என்று பேசுவது அடிப்படை வாதம் இல்லையா? வீழ்ந்தவர்கள் மீண்டு தம் வரலாற்றை மாற்றி எழுதுவது தவறா? போல இன்னும் பல பத்துக் கேள்விகளை நாம் அடுக்கலாம்.

ஆனால் அடிப்படையான கேள்வியை மீண்டும் முன்வைப்போம். மாற்றுபவருக்கு என்ன நோக்கம் இருக்கிறது? அவர் தொடர்புடைய பண்பாட்டைச் சேர்ந்தவரா? ஒரு சைவ மதப்பிரிவுகளைச் சேராதவர், சைவ சமயத்தவர்களுக்கான நூலைப் பற்றி ஏன் கவலை கொள்கிறார் – எதற்காக கைவைக்கிறார்? இங்கே புராணங்களை நாடகம்/திரைப்படம் ஆக்க வேண்டும் என்று எவர் கேட்டது, எவருக்காக அவை ஆக்கப்பெற்றன? அதாவது, சைவர்களின் புராணம் சைவர்கள் அல்லாத அனைவரையும் சென்றடையும்படி ஏன் எடுக்கப்பட வேண்டும்? வணிகம் மட்டுமே நோக்கம் என்பது தெளிவு.

இப்படித்தான் நந்தனார் கதையும் திரைத்துறையினர் விரும்பும் கருப்பொருளானது. ஏற்கெனவே அக்கதை பிரபலமாகவும் விரும்பப்படுவதாகவும் நீண்ட காலமாக நிலை நின்றிருந்தது. நந்தனார் என்றும் பக்த நந்தனார் என்றும் 1933, 1935, 1942 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து வெளியாகின்றன படங்கள்.

நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஆனால், நந்தனார் வரலாற்றைப் பொறுத்தவரை மூலத்தில் இருக்கும் கதையை மாற்றிய பெருமை திருநாளைப்போவார் சரித்திரக் கீர்த்தனை இயற்றிய கோபாலகிருஷ்ண பாரதியைச் (1811–1896) சேரும்.

அதை 1861 இல் அச்சிட்டு வெளியிட்டவர் பிரெஞ்சு கலெக்டரான ஸிஸே துரை [9]. அது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்த உதவுகிறது, அதாவது சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுக்கும் விதமான காட்சிகளைக் கொண்டிருக்கிறது – மேடை நாடகங்களுக்கு பயன்படுகிறது. வெளியில் இருந்து பார்த்தால் புராணக் கதை மட்டுமே. ஏன் ஸிஸே துரை இதில் சம்மந்தப்பட வேண்டும் என்பதற்கான காரணம் வெளிப்படை.

கோபாலகிருஷ்ண பாரதியை முற்போக்காளராக கட்டமைக்கச் செய்யப்பட்ட தோல்வியடைந்த முயற்சிகளை – எழுத்துக்களைத் தவிர்த்துப் பார்த்தால், அவர் தில்லைச் சிவபெருமானிடம் பக்தி கொண்டவராகவே வாழ்ந்து வந்திருக்கிறார். ஒரு வடமா அந்தணர், சைவர் கிடையாது. எந்த சைவ மரபையும் சாராதவர் என்பதால் சைவ நூல்களை முறைப்படி பாடம் கேட்டிருக்க வாய்ப்பு குறைவு. வேறு ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தவர். கைவந்த சங்கீதத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தார். அதற்கேற்ப பலரும் கேட்டுக் கொண்டதினாலேயே அக்காலச் சூழலில் எடுபடும்படியான மாற்றங்களுடன் நந்தனார் சரித்திரம் என்கிற பெயரில் கீர்த்தனைகள் இயற்றினார்.

அந்நூல் பொதுப்புத்தியில் இருந்தவற்றை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறது [10]:

ஆதனூரிலொரு வேதியர்க்குள்ளே அடிமைக்காரப் பறையன்
சூதுவாதுமொன்றுந் தெரியாதவன்பரி சுத்தமான பத்தன்

சேரியிடையில் குடி-யிருப்பதும் பதறுகள்
சிதறத் தூற்றிநெல்-லளப்பதும் பார்ப்பதும்
ஊரை வளைந்து தமுக்-கடிப்பதும் மதுக்குடம்
உண்டு களித்துநா-முறங்குவ தன்றியில் (சுவாமி)
ஆண்டை மார்களிடும்-பணிவிடை செய்வதும்
அருகில் நின்றுகும்-பிடுவதும் நடுவதுந்
தாண்டி நடந்துகோல்-பிடிப்பது மளப்பதும்
தனித்துச் சுடலைதினங்-காப்பது மன்றியில். (சுவாமி)

பறையாநீசிதம் பரமென்றுசொல்லப்
படுமோடாபோகப்படுமோடா-அடா (பறையா)
அறியாத்தனமினிசொன்னாலினிமே
லடிப்பேன்கூலியைப்பிடிப்பேன்பாவிப் (பறையா)
சிதம்பரமென்பதை விடு-கொல்லைச்
சேரடியிலேவந்து படு-நாத்தைப்
பதத்திற்பிடுங்கினதை நடு-கறுப்
பண்ணனுக்கேபலி கொடுத்திடு-அடா. (பறையா)
எப்போதுமொருதடி பிடி-கையி
லெடுத்துக்கொண்டேதமுக் கடி-உள்ளங்
கற்பனையாய்ப்பள்ளு படி-உன்தன்
கால்நோகாமலேகாடியைக்குடி-யடா. (பறையா)

ஈனசாதியிற்பிறந்தோ னுனக்கவ்விடத்தி
லென்னஅலுவ லுண்டு-அல்லவென்று
போனபோதிலும்மூவா யிரவரிருக்கும்வீதி
புகுந்துநீகடந்து கொண்டு
மானுமழுவுஞ்சிர மாலையணிந்த வுரு
மாற்றலர்திரிபுர மதனையெரித்த பெரு
மானுக்கியலுந்திரு மஞ்சனோற்சவந் திரு
வாதிரைப்பலன்பெற மாட்டாய்சொற்படி யிரு. (அடடா)

உ.வே.சாமிநாதையர் (1855–1942) தனிப்பட்ட முறையில் கோபாலகிருஷ்ண பாரதியை அறிந்ததிருந்த காரணத்தால் அவரின் வரலாற்றை நினைவிலிருந்து எழுதியிருக்கிறார். உண்மைக் கதையில் இருந்து நந்தனார் சரித்திரக் கீர்த்தனை முற்றிலும் விலகிச் செய்வது காரணமாக உ.வே.சாவின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815–1876) கீர்த்தனைக்கு சிறப்புப் பாயிரம் மறுப்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. ஆனால் பாரதியின் விடாமுயற்சி காரணமாகவும் இசைத் திறமைக்கு இரங்கியும் மட்டுமே பாயிரம் அளிக்கப் படுகிறது என்பதை உ.வே.சா உறுதிப்படுத்துகிறார் [11].

கோபாலகிருஷ்ணையரின் நூல் தனியே எந்த இலக்கியத் தகுதியையும் பெறுவதில்லை. ஏற்கெனவே நந்தனாருடன் மக்களுக்கு இருக்கிற உணர்வுப் பூர்வமான பிணைப்பை தன் வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்கிறது. அது தமிழில் இருப்பதாலும் கச்சேரிகளில் விரும்பப்படுவதாலுமே இன்று இருக்கிற இடத்தை அடைகிறது. ஆனால் சமய நோக்கில் பார்க்கும்போது அதற்கு எந்த இடமும் இல்லை. அதாவது, அது ஒரு வணிகப் படைப்பு போலத்தான். உண்மையோடு எந்த தொடர்பும் அற்றது.

மூலக் கதையை மாற்றியதற்காக வரலாற்றில் இதை விமர்சித்துப் பேசிய மற்றொருவர் காஞ்சி சங்கராச்சாரியாரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி (1894-1994) [12].

“உங்களில் நந்தனார் கதை தெரிந்த எல்லாரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத ப்ராம்மணப் பண்ணையாரிடம் படாத பாடு பட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது.

அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. தம் தம் குலாசாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாஸனம் செய்யப்பட்டிருக்கும்.

கொடுங்கோல் ப்ராமணனை ஸ்ருஷ்டி பண்ணியதும் ஒரு ப்ராம்மணர்தான் – போன நூற்றாண்டில் இருந்த கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பெரியவர்.

அவர் நாளில் அந்தச் சீமையில் மிராஸ் பண்ணும் ப்ராம்மணர்களில் ஒருத்தர் இரண்டு பேர் உழவு செய்யும் ஆள்காரர்களை ரொம்பவும் கொடுமைப் படுத்தியதையும், அப்படியும் அந்த எளிய ஜனங்கள் எதிர்த்துச் சண்டை போடாமல், ‘இப்படித்தான் நம் ஜன்மா’ என்று ஸஹித்துக்கொண்டு இருந்து வந்ததையும் அவர் பார்த்தார்.

ஏற்கெனவே அவருக்கு எந்த ஜாதியாரானாலும் பக்திச் செல்வத்தைக் குறைவறப் பெற்று ஈச்வரனுடனேயே இரண்டறக் கலக்கும் உன்னத நிலைவரை போய்விட முடியும் என்று காட்டும் ‘திருநாளைப்போவார்’ சரித்ரத்தில் தனியான ஈடுபாடு இருந்திருக்கிறது. அந்த நினைப்பும் அவர் நேரில் கண்ட நிலவரமும் அவருடைய நாடகத் திறமையில் ஒன்றாகச் சேர்ந்து வேதியர் பாத்திரத்தை ஸ்ருஷ்டிக்கப் பண்ணிவிட்டது.

‘பறைத் துடவை’ பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளாக ஆக்கி அவரிடம் கொடுமைப்படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே ஸீன்களைக் கற்பனைப் பண்ணி ‘நந்தன் சரித்ரக் கீர்த்தனை’ யாகப் பாட வைத்து விட்டது.

அப்புறம் கதாகாலக்ஷேபக்காரர்கள், காந்தீய தேசாபிமானிகள் எல்லாரும் அதை விசேஷமாக ப்ராபல்யப் படுத்தியத்தில் மூலமான பெரிய புராணத்துத் திருநாளைப்போவார் கதையே எடுபட்டுப்போய் இதுதான் நந்தனார் கதை என்றே ஆகியிருக்கிறது.

இது “பார்ப்பான் கொடுங்கோல்” என்று வசைமாரி பாடுகிறவர்கள், “இதோ பாருங்கள், ஒரு ஐயரே கொடுக்கும் ப்ரூஃப்” எனறு காட்டுவதில் கொண்டு விட்டிருக்கிறது!”

சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு மரபைக் காப்பது என்பது இப்படியான வரலாற்றுப் போலிகளை கண்டனம் செய்வதும் சேர்ந்துதான் என்பது தெரிந்திருந்தது. அதே நேரம் அவர் நடுநிலையோடு விமர்சனம் செய்திருப்பதையும் எவரும் மறுக்க முடியாது. இந்த ஆய்வாளர்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் (பறையர்) அடிமைகளை அடிமைகளாகவே வைத்திருக்கப் போராடியவர் காஞ்சி பெரியவர் என்றல்லவா நாம் நினைப்போம்? ஆனால் அவரோ நந்தனார் அடிமையல்ல என்று மறுக்கிறாரே? இதை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் சைவர்கள் தங்கள் எதிர்ப்பை எப்படிப் பதிவு செய்தனர் என்பது வெறொரு ஆய்வுக்குரியது.

பொய்க்கதைகளின் வெற்றி

அக்காலகட்டத்திலேயே நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடல்கள் இசைக் கச்சேரிகளில் இடத்தைப் பிடித்தன. கேட்போர் விரும்புபவையாக அமைகின்றன. மேடை நாடகங்கள் ஆக்கப்படுகின்றன. சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாக நாடகங்கள் பயன்பட, நவீன நந்தனாரும் பயன்படுகிறார். இவை போலப் பலவும் சங்கீதக் கச்சேரிகள் மற்றும் மேடை நாடகங்களில் இருந்து திரைப்படங்களுக்குப் போகிறது.

ஏனெனில் இசைப்பாடகர்களுக்கு ஆரம்ப கால தமிழ் சினிமாவில் இருந்த இடம் அப்படிப்பட்டது. ஒரு திரைப்படத்தில் இருபது முப்பது பாடல்களும் பின்னணி இசையும் என கிட்டத்தட்ட இசை நாடகங்களாக அமைந்தன திரைப்படங்கள். அவற்றுக்காக பாடல்கள் எழுதப்படுவது ஒருபக்கம் நடந்தாலும் புராணக்கதைகளை ஒட்டி படம் எடுக்கும்போது இப்படியான கீர்த்தனைகளே விரும்பப்பட்டன, ஏனெனில் ஏற்கெனவே அவை அக்கதையோடு பிணைந்திருப்பவை.

இப்படியாக நாம் காதால் கேட்டு வளர்ந்த, உணர்ச்சிவசப்பட்டு எதிர் வினையாற்றக்கூடிய நந்தனாரின் கதையானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு சமூகக் காரணங்களுக்காக பொதுப்புத்திக்குப் புரியும் வகையில் மாற்றி எழுதப்பட்டு வெற்றியடைந்தத ஒன்று. அதாவது பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்றி நூற்றாண்டுகள் ஆன பிறகு. திரைப்படங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மனதில் பதிய வைக்கவும் பட்டிருக்கிறது.

இந்திரா பார்த்தசாரதி (1930-) எழுதிய நந்தன் கதை எனும் நவீன நாடகம் முற்றிலும் புதிய தாவல்கள் செய்து நந்தனார் எனும் கதாபாத்திரத்தை உருவாக்குகிறது. மானுட சமத்துவத்திற்கான – சாதிப் போராட்டத்தை முன்னெடுத்தவர் நந்தன் என்கிறது. எப்படி இந்துக்கள் சூழ்ச்சி செய்து நந்தனைக் கொல்கிறார்கள் என்பதே கதை [13]. இந்தியா முழுவதும் இதைக் கொண்டு சென்று அரசியல் ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு மூலக்கதையோடு மட்டுமல்ல, நந்தனார் சரித்திரக் கீர்த்தனையோடும் தொடர்பு கிடையாது. இப்படியான வேறு வரலாற்றுப் புரட்சிகளையும் செய்தவர் அந்த எழுத்தாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு சிறந்த பக்தன், முக்தியடையும் பேறு பெற்றவன் என்றாலும் குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த காரணத்தால் ஒடுக்கப்படுகிறான் என்பது பொதுப் புத்திக்கு இன்று இயல்பாக இருக்கிறது. உண்மையில் பறையர் குடிபிறந்தவர்களுக்கு சொந்தமாகவும் உரிமையுள்ளதாகவும் நிலங்கள் இருந்தன என்பதும் அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள் என்பதும் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் எவருக்கும் பொருட்டாகப் படவில்லை.

நந்தனின் பிள்ளைகள் எனும் பிரபலமான ஆங்கிலப் புத்தகம் ஒன்றும் இந்தப் பின்னனியிலேயே பல்வேறு விஷயங்களை நடுநிலையான தொனியில் வெளிநாட்டு ஆய்வாளர்களிடையும் உள்நாட்டிலும் பரப்புகிறது [14].

1) வைணவர்களைப் போல திருமண் இட்டுக் கொள்வதும் சைவர்களைப் போல பஸ்மம் (விபூதி) தரிப்பதும் பறையர்களைப் பொறுத்தவரை பொருளற்றச் செயல்கள் – முக்கியத்துவம் இல்லாதவை.

2) நிலக்கிழார்கள் பறையர்களை அடித்தார்கள். புகார் செய்யவோ, தப்பிக்கவோ முடியாது. அடிமைகளாக இருந்தார்கள்.

3) தாழ்ந்த ஜாதியினர் (பறையர்) நிலத்தோடு சேர்த்து வாங்கவும் விற்கவும் பட்டார்கள். அவர்களின் மரணம் வரைக்கும் அந்த அடிமைச் சேவையிலிருந்து விடுதலை இல்லை. அவர்களின் குழந்தைகளும் அடிமையாகவே பிறந்தன.

இவற்றைக் கேட்டால் பாரம்பரியமான பறையர் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் சிரிக்கத்தான் செய்வார்கள். அதிலும் விபூதி பற்றிக் குறிப்பிட்டது சாம்பவர்களுக்கு (வள்ளுவர்களுக்கும்) வருத்தத்தைத் தரக்கூடும். ஏனெனில் சாம்பவர் சைவர் மட்டுமல்லாது அவர்களுக்குச் சொந்தமான மடங்கள் இருந்திருக்கின்றன. அப்படியானால் அவர்களுக்கு ஆதிசைவ சிவாச்சாரியார்களிடமிருந்து தீக்‌ஷை வாங்கும் மரபு பலநூறு வருடங்களாக இருந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டில்கூட பல பறையர் குடும்பங்கள் தீக்‌ஷை வாங்குவதை விட்டிருந்தாலும் சைவ உணவுக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். ஏன், இப்போதும் ஸ்ரீவைஷ்ணவர்களாக சில பறையர் குடும்பங்கள் தொடர்கின்றன.

இன்னொன்றையும் நந்தனின் குழந்தைகள் புத்தகம் வால்டர் எலியட் என்பவரின் கட்டுரையிலிருந்து (1869) மழுப்பலாகக் குறிப்பிடுகிறது. அந்த வரி மூலக்கட்டுரையில் இப்படி இருக்கிறது: அவர்கள் (பறையர்), இதர மக்களைக் காட்டிலும் நாகரீகத்துக்கு உறுதியான வழியான கிருஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரான மனநிலையைக் கொண்டிக்கிறார்கள். அப்படி மாற்றப்பட்டால் இப்போதைய நிலைமைகளை (present state of things – ஆங்கிலேயர் ஆட்சியை) திடமாக ஆதரிக்கிறவர்களாக இருப்பார்கள். அப்படியான இனங்களின் உண்மை, நேர்மை, வீரம் ஆகியவை சிறந்த நிர்வாகிகளையும் நம்பிக்கையான வீரர்களையும் (ஆங்கிலேயருக்கு) தரக்கூடும் [15].

அதே புத்தகம் ஆங்கிலேயர்களுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தென்னிந்தியா முழுவதும் இருக்கிற விவசாயப் பணிக்கான ஏற்பாடுகளை (agrarian servitude) புரிந்து கொள்வதில் குழப்பம் இருந்தது என்பதையும் பதிவு செய்கிறது. தர்ம குமார் குறிப்பிடுகிறார், இந்தியாவில் காணப்பட்ட (நிலக்கிழார்-உழவர் உறவு) நிலைமை ஐரோப்பியரின் அனுபவங்களோடு பொருந்தாததால் குழம்பிப் போயினர் என்று [14].

கூடவே பண்ணையாள் (agricultural serf), அடிமை (ascriptus glebae) என்று தென்னிந்திய உழவர்களைக் குறிப்பிடலாமா என்கிற குழப்பம் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இருந்திருக்கிறது. எனெனில் ஐரோப்பாவில் பண்ணையாட்கள் கூலியின்றி கட்டாயமாக வேலை வாங்கப்பட்டது மட்டுமில்லாமல் பண்ணையிலிருந்து வெளியே போய் வரவும், திருமணம் போன்றவற்றுக்கும் நிழக்கிழாரின் அனுமதி வாங்கவும் வேண்டியிருந்தது. பண்ணையில் தங்குவதற்கு இடமும் உணவும் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. வேலை செய்ய முடியாவிட்டால் அதற்கு பதிலாக பண்ணையாள் நிலக்கிழாருக்குப் பணம் வழங்க வேண்டும். அதிலும் அடிமைகள் அந்தந்த பண்ணையின் ஒரு பகுதி. எந்த உரிமையும் அற்றவர்கள். இறப்பது மட்டுமே அவர்களை விடுவிக்கும். அவர்களது குடும்பத்தினருக்கும் வாரீசுகளுக்கும் அதுவே நிலை.

என்னவோ நம்முடைய கெட்ட நேரம். இங்கிருந்து எழுதுவோருக்கு ஆங்கிலேயருக்கு இருந்த தெளிவுகூட இல்லை. இதைத்தான் இவர்கள் நம் அமைப்புகள் மீது பொருத்திப் பார்க்கிறார்கள்.

ஆனால் விஷயம் தெரியாத பறையர்க் குடியினரே இந்தப் பிரச்சாரங்களுக்கு என்ன சொல்வார்கள்? மேலும் இது பறையர்களைப் பற்றி எழுதப்பட்டாலும் பறையர்களுக்காக எழுதப்படவில்லை. எனவே அவர்களே மறுத்தாலும் பறையர்கள் அடிமைகளே. அவர்களை இப்படி ஆக்கியது இந்து மதத்தினர் – குறிப்பாக பிராமணர்கள். அப்படிச் சொன்னால் மட்டுமே சொல்பவர்களுக்கும் இன்று மரியாதை.

எனவே பறையா (pariah) என்ற வார்த்தையை அதிகம் புழங்கி, ஆங்கில மொழி அகராதிகளில் சேர்த்து இன்று உலகம் முழுவதும் எழுத்திலும், காட்சியூடகங்களிலும் பயன்படுத்துவது யார் என்று நாம் யோசிக்கக்கூடாது. கேட்கவும் கூடாது. இதைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று இணையத்தில் கிடைக்கிறது [16].

பறையர் சுதந்திரத்தின் பதிவுகள்

இன்று நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் புத்தகங்களும் அவற்றுக்கு அவற்றையே ஆதாரமாகக் காட்டி பறையர் முதலிய தமிழ்க்குடிகள் கொத்தடிமைகளாக இருந்தனர் என்கின்றன. அவையே பறையர் என்றால் அருவருப்பான வார்த்தை என்றும், அவர்கள் பிராமணர்களாலும் உயர் ஜாதியினராலும் அடிமையாக்கி வைக்கப்பட்டிருந்தார்கள் என்றும் பிரச்சாரம் செய்கின்றன. இது புலியைப் பூனையாக்கியது போன்றது. அப்படியான எழுத்துக்களை இதுவரை மூன்று தலைமுறை மாணவர்கள் கல்லூரிகளில் படித்து வெளிவந்திருக்கின்றனர். ஆனால், பறையர்களுக்கு இதைப்பற்றி சொல்ல என்ன இருந்தது என்பதை நீங்கள் எங்கும் படிக்க முடியாது.

ஆங்கிலேயரின் பதிவுகளில் நமக்குக் கிடைக்கிற சித்திரம்கூட இந்தப் பிரச்சாரங்களிலிருந்து வேறாக இருக்கிறது. தீவிரமான பிரிட்டிஷ் வரிவிதிப்பிலிருந்துமே அச்சமூகத்தவர் விடுபட்டிருந்ததை 1785 இல் ஏற்பட்ட பூந்தமல்லி பறையர் கிளர்ச்சியின் பின்னனியை வாசிக்கும்போது அறிகிறோம் [17].

அக்காலகட்டத்தில் பண்ணையாளாகவும் படியாளாகவும் விவசாயப் பணிகள் செய்தாலும் வருகிற விளைச்சலில் முதலாளியும் அரசாங்கமும் கைவைப்பதற்கு முன்னரே இரண்டு சதவீதம் நெல் அவர்களுக்குப் போகிறது (அரசுக்கு 45-55%). எந்த முதலீடும் செய்யாமல் உடல் உழைப்பு தருவதன் மூலமாக மட்டும். இதை நாம் தாதுவருடப் பஞ்சம் போன்றவற்றின் பின்னணியில் வைத்து யோசிக்கும்போது, என்ன விளைச்சல் கிடைத்தாலும் அவர்களுக்கும் பங்கிருப்பது கூலி அல்ல அதிகாரம் என்பதைப் புரிந்து கொள்ளளாம். ஏனெனில் பணம் வாங்கியிருந்தால் பஞ்ச காலத்தின் விலை வீக்கத்தில் அது ஒன்றுக்கும் பயன்பட்டிருக்காது.

அந்த காரணத்தினாலேயே வரிவிகிதம் அதிகமாவதையும் மிராசு அதிகாரம் இழப்பதையும் தாங்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள். ஏனெனில் அடுத்ததாக தங்கள் பங்கிலேயே ஆங்கிலேயர் கையை வைப்பார்கள் என்கிற தெளிவு அவர்களிடம் இருந்தது. அதுவும் படியாள் என்று குறிக்கப்படும் குடும்பங்கள் குறிப்பிட்ட நிலத்தில் வேலை செய்வோரும் அந்த நிழக்கிழாருடன் பாரம்பரியமாக சம்பந்தப்பட்டிருப்போரும் ஆவர். அவர்களுக்கு மழை பொய்த்து விளைச்சல் இல்லாவிட்டாலும் அந்த நிலக்கிழார் கடமைப்பட்டிருக்கிறார். இது ஐரோப்பியரின் ஆண்டான்-அடிமை உறவல்ல. இந்த ஏற்பாடு இன்று இருந்த சுவடுகூடத் தெரியாமல் போனதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆங்கிலேயர் ஆட்சியிலும் பறையர் குடியினர் அமைப்பாக ஒன்று திரண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களின் பதிவிலிருந்தே அறியலாம். அவர்களின் கிளர்ச்சியை அடக்க ஆங்கிலேயர் பல வருடங்கள் சிரமப்பட வேண்டியிருந்தது. அதற்குப் பிறகும் 1796 இல் தங்கள் பங்கு தானியங்களை அதிகரிக்காவிட்டால் அறுடை செய்ய மாட்டோம் என்றும் ஊரைவிட்டுப் போவோம் என்றும் ஆங்கிலேயரை நேரடியாக எதிர்த்திருக்கிறார்கள். அதன் மூளையாகச் செயல்பட்ட பலரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அவர்கள் நிலக்கிழார்கள் உதவியுடனே போராடுவதாக கம்பெனியார் நினைத்தார்கள். ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத திட்டமாக அது இருந்திருக்கிறது [17].

மேலும் கம்பெனி/ஆங்கிலேயர் ஆட்சியில் நிலக்கிழார்கள் அதிகாரம் இழந்தவர்கள். நாட்டாண்மை, மிராசு என்பது பரம்பரை சொத்துரிமை என்பது போய் வெறும் பதவியாக ஆகியிருந்தது. ஆங்கிலேயர் நினைத்தால் எவரை வேண்டுமானாலும் மிராசாக்க முடியும், துரத்தியடிக்கவும் முடியும். அதாவது நிலக்கிழாருக்கே நிலம் சொந்தமில்லை [17].

ஆங்கிலேயரின் கையையும் காலையும் பிடித்தால் பிழைத்துப் போகலாம். அதற்கு பரம்பரையாக சொத்துரிமை கொண்டிருந்த நாட்டாண்மைகளும் நிலக்கிழார்களும் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்குக் கீழிருந்த குடிமக்களும் அப்படி பழக்கப்படவில்லை. இப்படியான சூழலில் எழுந்த வீரியமான எதிர்ப்புகளில் ஒன்றே பறையர் கிளர்ச்சி. இந்த எதிர்ப்புகளைச் சமாளித்துப் பறையர்களை அடக்கிய பிறகே வரி வருவாயை உயர்த்திக்கொள்ள முடிந்தது. அதற்காக பறையரோடு தொடர்பில்லாத நிலக்கிழார்களை கொண்டுவந்து ஊக்குவிக்கிறார்கள். புதிதாக வந்தவர்கள் விளைச்சலை உயர்த்துவது, கேட்கும் வரியைக் கட்டுவது, பதவியை காத்துக் கொள்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

அதற்கும் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் (1767) துளஜாஜி போன்சலே ஆட்சியில் இருந்த தஞ்சாவூரில் இடங்கை வலங்கைப் பூசலில் கொடுமை தாங்க முடியாமல் இடங்கை ஜாதியினர் நகரிலிருந்து வெளியேற, அரசரே சமாதானப்படுத்தித் திரும்ப அழைக்கிறார். வருவோரின் பாதுகாப்புக்காக நூற்றைம்பது வீரர்களையும் அனுப்புகிறார். ஆனால் அவர்கள் ஊருக்குள் திரும்புவதில் விருப்பமில்லாத வலங்கை சாதியினரான பறையர் தஞ்சாவூர் கோட்டைக்கு வெளியே வைத்து நுழைபவர்கள் மீது ஈட்டி ஏந்தித் தாக்குதல் நடத்துகிறார்கள். உடனிருந்த காலாட்படையினர் நூறுபேரும் பறையரின் சக வலங்கை ஜாதியினர் என்பதால் தடுக்கவில்லை. குதிரைப்படையினர் இஸ்லாமியர் என்பதால் தயங்கி நின்றுவிடுகிறார்கள். அன்றைக்கு கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் இடங்கைச் சாதியினர் எழுபது பேர். அகழியில் முதலைகளுக்கு இரையாகவும் அவர்கள் வீசப்பட்டனர்.

இதை அரசர் அறிந்ததுமே கடமை தவறிய நூறு படைவீரர்களும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். தொடர்புடைய பறையர் குடியினர் தலைமறைவாகிறார்கள். அப்போதைய தஞ்சாவூர் படையின் தளபதிகளில் ஒருவரான ராய நாயக்கனும் பறையர் குடியைச் சேர்ந்தவர். இந்த நிகழ்வில் தொடர்பு இல்லாவிட்டாலும் ராய நாயக்கன் நாஞ்சிக்கோட்டை கள்ளர்களிடம் தஞ்சமடைகிறார். அரசர் வரச்சொல்லி உத்தரவிட்டு நேரில் பேசி, ஒரு நாளுக்கு பத்து தங்கப்பணமும் பறையர் குடித் தலைவர் பட்டமும் தருவதாகக்கூறியும் அவற்றை மறுத்த ராயநாயக்கன் தரங்கம்பாடிக்குச் சென்று வாழத்தொடங்குகிறார். அதாவது, அரசரே பறையர் குடியினரை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அரசரை மறுப்பதற்கும் அவர்களால் முடிந்தருக்கிறது [18, 19].

இதை வைத்துப் பார்த்தால் விவசாயிகளும், போர்களில் ஈடுபாடு உள்ளவர்களுமான பறையர்குடியினர் தொடர்ந்து நாம் சந்தித்த போர்களைக் கடந்தும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அந்நியர் ஆட்சியிலும் போராடி பதினெட்டாம் நூற்றாண்டுவரை வெற்றிகரமாக வாழ்ந்திருந்தார்கள் என்பது தெளிவு. ஆனால் அவர்களின் வாழ்கைச்சூழல் நலிவடைந்த காலகட்டம் மட்டுமே விரும்பி ஆராயப்படுகிறது.

இன்னும் நாம் பின்னோக்கிப் போனால் நந்தனார் காலத்துக்கும் அதற்கும் முன்னரே பறையர் உள்ளிட்ட இன்று “தாழ்தப்பட்டோர்” என்று அடையாளப் படுத்தப்படும் குடியினர் எப்படி வாழ்ந்திருந்தனர் என்று புரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு நிகழ்ந்தது என்ன என்பதற்கும் தெளிவான பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அதற்கு நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. அவர்களின் வீழ்ச்சிக்கான காரணம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் எவையெல்லாம் என்பதில் முதலில் தெளிவு எட்டப்பட வேண்டும். இனியும் ஆயிரம் வருடத்திற்கு முன்னர் இந்துக்கள்… என்று கதைகள் சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை.

இன்று பொது வெளியில் சொல்லப்படாத பறையர் வரலாறும் இந்திய வரலாறும் இப்படியான நிகழ்வுகள் பலவற்றால் ஆனதாகவும் நூற்றுக்கணக்கானவர் செய்யும் பரப்புரைகளை கேலிக்குள்ளாக்கும் வகையிலும் இருக்கிறது. ஆதாயம் கருதும் அரசியல்வாதிகளின் தேவை இப்படியான விஷயங்களை இருட்டில் வைத்திருப்பதே. இதற்கு முன்முடிவுகளற்ற ஆய்வாளர்கள் அன்றி வேறெவரும் தீர்வுகளை கொடுக்க முடியாது. என்றேனும் அது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.

சைவமும் பிற இந்திய மதங்களும் பலியாவது

அதே போல சைவ சமயத்துக்கும் இந்திய மரபுக்கும் இப்படியான போலி வரலாற்றுக் கருத்தாக்கங்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. எவரேனும் பறையரானதால் நந்தனார் கொடுமைக்கு ஆளானார் என்று சொன்னால், அப்படி இல்லை என்று சொல்ல நூற்றுக் கணக்கான ஆதாரங்கள் உண்டு. அதே போல அவர் வணங்கப்படும் நாயன்மார் என்பதற்கு ஆயிரக்கணக்கில் ஆதாரங்கள் உண்டு. இன்று உணர்ச்சிவசப்பட்டு சைவ சமயத்தைக் கேள்விக்குட்படுத்தும் பலர், அதை முறையான வழியில் கற்று அறிந்தவர்களா? இந்திய மதங்களோடு தொடர்புடையவர்களா, தீக்‌ஷை பெற்றவர்களா?

ஏனெனில், நந்தனார் விஷயம் முதல் வேறு எத்தனையோ விஷயங்கள் பொதுமக்கள் பார்த்து உணர்ச்சி வசப்படக்கூடியவற்றை ‘உருவாக்கிய’ பொறுப்பு காட்சி ஊடகங்களையும், போலி ஆய்வாளர்களையும், தற்கால அரசியல் சூழலையுமே சேரும்.

அந்த நிழல் உருவங்களையும், ஆய்வாளர்களையும், அரசியல் வாதிகளையும் பார்த்து நாம் கேட்க வேண்டிய கேள்விகளையே நிஜங்களைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கேள்விகளும் பொருட்படுத்தத் தக்கதாய் இல்லாமல் உள்ளீடற்று இருக்கின்றன. இதனால் பதிக்கப்படுவது எஞ்சியிருக்கிற நம் பண்பாட்டுத் தொடர்ச்சியல்லாமல் வேறு எது, எவர்? இனி நாம் என்ன செய்வதாக இருக்கிறோம்?

இவர்கள் நந்தனாரை – நாயன்மாரை, ஆழ்வார்களைத் வணங்குகிறோம் என்று சொல்கிறார்கள் எனவே நம்மையும் வணங்க வேண்டும் என்றால் பதில் இதுதான். இந்திய மரபு காட்டும் வழியில் வாழும் எவருமே வணங்கத் தக்கவர்கள். அவர்களைத் தொழுவதற்கு எழும் கைகள் முதலில் ஒழுக்கத்தோடு வாழும் அந்தணருடையதாகவே இருக்கும்.

அதற்கு வழியை நந்தனாரும் காட்டியிருக்கிறார். அது நெருப்பில் இறங்குது அல்ல. குலத்தொழில் செய்வது அல்ல. அடிமையாக இருப்பதும் அல்ல. தெய்வத்தின் மீதும் மதத்தின் மீதும் நம்பிக்கை. பக்தி. அந்த மதத்தின் பழக்க வழக்கங்களைப் காப்பதும் அனுசரிப்பதும்.

ஆனால் சாதிய ஒடுக்குமுறையை, ஒரு பழங்குடியின் வீழ்ச்சியை என்ன செய்ய என்று கேட்டால் அதற்கான உண்மையான காரணங்களையே நாம் இந்தக் கட்டுரையில் பார்க்க முயன்றோம். அவற்றை முறையாக ஆராய்ந்து தீர்க்கப் பார்க்கலாம். அதைச் செய்யாமல் அவசியம் இல்லாமல் மதத்தை அந்த அரசியலுக்குள் கொண்டு போக வேண்டாம்.

இந்திய மதங்கள் இன்று நேற்று முளைத்தவை அல்ல. ஆயிரக்கணக்கில் அரசர்களையும் அதன் மடங்குகளில் அரசியல் சூழல்களையும் போர்களையும் கொடுங் கொலைகளையும் தாண்டி நின்றிருப்பவை. அவற்றை காரணமின்றிக் குற்றம் சாட்டுவதும் கேலி செய்வதும் அற்பத்தனம் அன்றி வேறல்ல. இந்த மதங்கள் நம்பிக்கை கொண்ட ஒன்றிரண்டு பேர் மிச்சமிருந்தாலும் நீடித்திருக்கும், மீளும் என்பதை பலமுறை காட்டியிருக்கிறது. எனவே அதன் வழி நிற்போர், நிற்கட்டும் என்பதே நாம் இறுதியாக நாம் சொல்லக்கூடியது.

*

[1] சுந்தரமூர்த்தி சுவாமிகள். ஏழாம் திருமுறை, தேவாரம். Project Madurai. ஒன்றாம் பாகம், பாடல்கள் 393-403, pages 69-71.

[2] நம்பியாண்டார் நம்பி. பதினோராம் திருமுறை, நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள். Project Madurai. இரண்டாம் பாகம், பாடல்கள் 1126 – 1215, pages 93-94.

[3] சேக்கிழார். திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம். Project Madurai.

[4] சேக்கிழார். திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம். Project Madurai. காண்டம் 1, சருக்கம் 4, பாடல்கள் 1046 -1082, pages 10-14.

[5] ஆறுமுக நாவலர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம். shaivam.org

[6] சேக்கிழார். திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம். Project Madurai. காண்டம் 2, சருக்கம் 6, முதல் மற்றும் இரண்டாம் பாகம், பாடல்கள் 1899- 3154.

[7] சுத்தானந்த பாரதியார். முத்துத் தாண்டவர் (வராலாறும் உபதேச மணிகளும்). அன்பு நிலையம். 1945.

[8] அரவிந்த் சுவாமிநாதன். விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள். ValamOnline.in

[9] கோபாலகிருஷ்ணையர். திருநாளைப்போவார் சரித்திரக்கீர்த்தனை. Cisse / கல்வி விளக்கு அச்சுக்கூடம். 1861.

[10] கோபால கிருஷ்ண பாரதியார். திருநாளைப்போவார் என்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை. TamilVU.org, pages 19, 46, 74, 100.

[11] உ.வே.சாமிநாதையர். கோபாலகிருஷ்ண பாரதியார். கேசரி அச்சுக்கூடம். 1936.

[12] சந்திரசேகரேந்திர சரஸ்வதி. தெய்வத்தின் குரல், ஆறாம் பகுதி. நந்தனார் : உண்மையை வென்ற கற்பனை. kamakoti.org

[13] Indira Parthasarathy. The Legend of Nandan: Nandan Kathai, translated from the Tamil by C.T. Indra. Oxford University Press. 2003.

[14] Raj Sekhar Basu. Nandanar’s Children – The Paraiyans’ Tryst with Destiny, Tamil Nadu 1850 – 1956. Google Play Books. Chapter 01, Elusive Freedom. Pages 53-61.

[15] Walter Elliot. On the Characteristics of the Population of Central and Southern India. The Journal of the Ethnological Society of London (1869-1870), Vol. 1, No. 2 (1869), Pages 94-128.

[16] க சுபகுணம். “பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை. BBC.com

[17] Eugene F. Irschick. Dialogue and History – Constructing South India, 1795-1895. University of California Press. 1994.

[18] அனிஷ் கிருஷ்ணன் நாயர். சொல்லப்படாத பறையர் வரலாறு. TamiHindu.com

[19] S Jayaseela Stephen. Subaltern Lives – Tamil History and Society from Medieval to Early Modern Age. Kalpaz Publications. 2019. Pages 51-52.

2 Replies to “நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா?”

  1. திருஞானசம்பந்தர் போன்ற பிராமணர்களும் பிராமணரல்லாத பிறரும் எரி புகுந்ததும் திரு நாளைப் போவார் எரி புகுந்ததும் ஒரே மாதிரியான ஒரே பின்னணி கொண்ட நிகழ்வுகள் தானா? சம்பந்தரும் பிறரும் கோவிலுக்குள் சென்றே இறைவனை வழிபட்டிருப்பார்கள். அவர்கள் கதைகளில் நந்தி விலகி வழி விட்டதாக கதைகள் இல்லை அல்லவா? மேலும் எரி புகுந்து பூணூலுடன் வர வேண்டிய அவசியமும் இல்லை. மேற்படி நிபந்தனைகள் எல்லாம் திரு நாளைப் போவாருக்குதான். இவர்களும் எரி புகுந்தார்கள் அவர்களும் எரி புகுந்தார்கள் என்பது பொதுப்படையான கூற்று. பின்னணியும் காரணங்களுமே நோக்கப்பட வேண்டியது.

    1. நிதானமான ,ஆழமான பாராட்டத்தக்க ஆய்வு முயற்சி.ஒரே ஒரு மாற்றுக் கருத்து : நந்தனார் பெற்றிருந்த நிலம் பறைக்காணித் துடவை என்று சேக்கிழாரால் குறிப்பிடப்படுவது உண்மையே.ஆனால் நந்தனாரின் சாதி புலையர் சாதியே தவிரப் பறையர் சாதியன்று.புலையர், புரோகிதர் என்றும் அழைக்கப்பட்டமைக்குச் சீவக சிந்தாமணி பா2984க்கான நச்சினார்க்கினியர் உரையில் ஆதாரம் உள்ளது.தோல்வினைஞரான புலையர்கள் (சர்மக்காரர் – சாமர்) செம்மார் என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் பூர்வ மீமாம்சக (யக்ஞம் புரிகிற) பிராமணர்களின் உதவியாளர்களாக இருந்தமை இவர்களின் பூர்வ வரலாறு ஆகும்.பூர்வ மீமாம்சகராக இருந்து கோயில் பூசகராக மாற்றமடைந்த தில்லை வாழ் அந்தணர்களோடு தொன்மையான வரலாற்றுப் பூர்வ உறவுடையவர் நந்தனார் என்பதே எனது புரிதல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.