அறியமுடியாமையின் பெயர் ராமன்

(இம்பர்வாரி வாசகர் வட்டத்தில் கம்பராமாயணம் பால காண்டம் நிறைவையொட்டி வாசிக்கப்பட்ட கட்டுரை)

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உறப் பயந்தனள் – திறம் கொள் கோசலை.

ஒரு காவியத்தின் தலைவனாக விளங்கும் ராமன் அதைத் தாண்டி கம்பராமாயணத்தில் ஒரு தெய்வம் என, பரம் பொருளென பெருந்தோற்றம் கொண்டு வெளிப்படும் இடங்களைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். அதற்கு முன் ஒரு கேள்வியை கேட்பதன் மூலம் தொடங்கலாம் என நினைக்கிறேன். ஒரு காவியத் தலைவனாக மிக கச்சிதமாக எழுந்து வரும் ராமனை அதைத்தாண்டியும் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன ? அறத்தை அறிபவனாக, அதன் பால் உறுதியாக நிற்கும் அற மூர்த்தியாக, வெல்லற்கரிய தாடகையை வெல்பவனாக, எடுத்த பாணம் பிழைக்காத கூர்மையும் வீரமும் நிறைந்த சமர்த்தனாக, வேள்வி காக்கிற ஒரு க்ஷத்ரியனாக, சீதையை கண்டு உருகும் காதலனாக, எவராலும் தீண்ட முடியாத சிவதனுஷை எடுத்து இற்று விழச் செய்யும் பராக்கிரம சாலியாக, 21 தலைமுறைச் சத்திரியர்களை கருவறுத்த பரசுராமனை வென்று புதிய யுகம் ஒன்றை படைக்க போகிற யுக புருஷனாக, என அவன் முழு ஆகிருதியோடு ஒரு பெரும் காவியத்தலைவனாக எழுந்து வருகிறான் பால காண்டம் முழுவதும். இவைகளே போதும் என்று இருக்கும் போது, இவற்றையும் தாண்டி உலத்துக்கே ஆதாரமானவனாக, உலகளந்தவனாக, மூவருள் முதல்வனாக ராமனை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

கம்பன் பக்தி இலக்கிய காலகட்டத்திற்கு பின்னால் வந்த கவி. பக்திச்சுவை தான் அவன் நோக்கம் என்றால், அவன் இன்னும் ஒரு 10000 பாசுரங்களையோ, பதிகங்களையோ எழுதி குவித்திருக்க முடியும். பல படியாக அதற்கு முன்னான பக்தி இலக்கியங்களையே தாண்டி நிலைப்பவற்றை கூட படைத்திருக்க முடியும். இருந்த போதும் அவன் தேர்ந்து எடுப்பது ராமகாதையை. அறம் பொருள் இன்பம் வீடுபேறு என்னும் நான்கும் ஒரு காவியத்தில் பயின்று வர வேண்டும் என்பது காவிய லக்ஷணங்களில் ஒன்று. அதில் நான்காவதான வீடுபேற்றை உள்ளடக்கியே மெய்யியலும், அது சார்ந்த தத்துவங்களும் கை கொள்ளப்பட்டிருக்கிறது கம்பராமாயணத்தில் எனலாமா? ஆம், அதுவும் ஒரு பதில் தான். ஆனால் அது மட்டுமே அல்ல. அதனால், கேள்வியை, இப்படி மாற்றி கேட்கிறேன், மெய்யியலும், தத்துவமும் ஏன் காவிய லக்ஷணங்களில் ஒன்றாக அமைகிறது? கம்பனை போன்றவர்கள் மகா கவிகள். அவர்களிடம், ஒரு 100 காவிய லக்ஷணங்களை பட்டியலிட்டு கொடுத்தால், அந்த 100 ஐயும் உள்ளடக்கி ஒரு காவியத்தை எழுதி முடிக்கையில் இன்னும் ஒரு புதிய லக்ஷணத்தை உண்டாக்கியிருப்பார்கள்.

என்றால், பதில்தான் என்ன? தேவி பாகவதத்தில் இப்படி ஒரு இடம் வருகிறது: சிருஷ்டிக்கு முன் எங்கும் இருளும் நீரும் மட்டும் நிறைந்திருந்த ஒரு பிரளய காலத்தில், மஹாவிஷ்ணு இந்த உலகனைத்தையும் விதையென தன் வயிற்றில் அடக்கி கொண்டு, நீரில் தனது கால் கட்டை விரலைச் சுவைத்தபடி ஒரு ஆல் இலையில் சிறு குழந்தையாக மிதக்கிறார். அந்த குழந்தை சுற்றி இருக்கிற நீரையும், இருளையும் பார்த்து திகைக்கிறது. இவையெல்லாம் என்ன? என்று அதன் மனதில் முதன் முதலாக ஒரு கேள்வி எண்ணமாக எழுகிறது.

மஹாவிஷ்ணுவாகிய குழந்தை மட்டுமல்ல, அறியமுடியாமையை நோக்கிய இந்த கேள்வியை நாம் அனைவரும் எதோ ஒரு கட்டத்தில் எதோ விதத்தில் சந்திக்கிறோம். என்னை போன்ற சாமான்யர்கள் அதை எளிதில் கடக்கவும் கூடும். ஆனால், இதே கேள்வி ஒரு படைப்பாளியின் முன் தொடை தட்டி குதித்து கோதாவில் இறங்கி அறைகூவி துவந்தத்திற்கு அழைக்கின்றது. இந்த அறைகூவலை சந்திக்காத படைப்பாளிகளே இல்லை எனலாம். மஹாவிஷ்ணு அந்தக் கேள்வியைச் சந்தித்த அந்தக் கணத்தில் இருந்து தான் மீண்டும் ஸ்ருஷ்டி துவங்குகிறது. அனைத்துக்கும் ஊற்றும் முகம் அந்த கேள்வி தான். இந்தக் கேள்விக்கான எதிர்வினையே பேரிலக்கியங்களாக, காவியமாக, கலைகளாக மலர்கின்றன ஒருவகையில். இலக்கியத்தின் வழியாக, கலைகளின் வழியாக அந்த கேள்விக்கான விடைகளை கண்டடைவார்களா? கண்டடைய முடியுமா என்பது வேறு ஒரு விவாதம், அதற்குள் நான் செல்லவில்லை. ஆனால், நம்மோடு ஒப்பிடுகையில் அறிய முடியாமையின் மூச்சு காற்று முகம் உரசும் அருகாமையில் அவர்கள் சென்றுவிடுகிறார்களோ என்று கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெண்முரசு போன்ற ஒரு மகா காவியத்தின் பகுதியாக சொல்வளர்க்காட்டையும், கிராதத்தையும், நீலத்தையும், பன்னிரு படைக்களத்தையும், இந்திர நீலத்தையும் எதனால் எழுதி பார்க்கிறார்களோ அதே காரணம் தான் கம்பனுக்கும். மனித ஆழ்மனங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக சேகரித்து வைத்த படிமங்களை தத்துவத்தைக்கொண்டு உடைத்து பார்க்கிறார்கள். சில நேரம் இந்த படிமங்களை கொண்டு தத்துவங்களை பொன்னைக் கல்லில் உரசுவது போல உரசிப்பார்க்கிறார்கள்.அந்த அறியமுடியாமைக்கு தான் ராமன் எனப்பெயரிட்டு அழைக்கிறான் கம்பன். அதோடு கொஞ்சி விளையாடி, ஊடி, சண்டையிட்டு, துவேஷித்து, வெறுத்து அத்தனை விதமாகவும் காய் நகர்த்தி ஆடி பார்க்கிறான். அதனால் தான் காவிய நாயகனான இராமன் முதன் முதலாக கதைக்குள் தோன்றும் போதே இப்படிச் சொல்லித்தான் அவன் வரவை அறிவிக்கிறான் கம்பன்.

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உறப் பயந்தனள் – திறம் கொள் கோசலை.

அருமறைகளாலும் அறிய முடியாதவனை, அண்டம் அத்தனையையும் ஒரு விதையென தன் வயிற்றில் சுமந்தவனை கோசலை சுமந்து பெற்றாள் என்கிறான். (சுவாமித்துவம்)

கரா மலை தளர் கைக் கரி எய்த்தே
‘அராவணையில் துயில்வோய்!’ என அந்நாள்
விராவி. அளித்தருள் மெய்பொருளுக்கே
‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனன் அன்றே.

முதலையின் வாயில் கால் அகப்பட்டுக்கொண்ட ஒரு யானை அழைத்த போது, விரைந்து வந்து அதைக் காத்தவனுக்கு, அந்த மெய்பொருளுக்கு இராமன் என்ற பெயரை வசிட்டன் ஈந்தான் என்கிறான். அறியமுடியாதது, உலகையே வயிற்றில் அடக்கியது, என்று எல்லாம் சொல்லிவிட்டு, பெயரை ஈந்தான் என்பது ஒரு முரண் தானல்லவா? அத்தனை பெரியது இவன் ஈவதை எப்படி பெற்றுக்கொள்ளும்? அறிய முடியாதது எப்படி இராமன் என்று ஆகும்? ஆகும், ஏனெனில் வள்ளலார் சொன்னபடி அது “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை”. (வாத்சல்யம்).

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரோளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே!

அரியது பெரியது அனைத்தையும் உடையது அன்பினில் அகப்படுவது எனில் அது எளியதாயும் வரும். .

பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலேன் – புவனம்
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே


அனைத்தையும் ஆக்கியும், பின் பிரளயத்தில் அவை அனைத்தையும் தன் மணிவயிற்றில் அடக்கியும் காத்தவன் எளியனாய் வந்து என் வேள்வியும் காத்தது தன் நல்வினையே என்கிறார் விஸ்வாமித்திரர். (சௌலப்யம்)
இதே ‘வயிற்றில் உலகடக்கிய’ படிமம் மீண்டும் வருகிறது.

வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனின் பெரியார் இனி யாவரே?


ஆய்ந்து கடந்து ஞானம் முற்றிய விஸ்வாமித்ரன் போன்ற பிரம்ம ரிஷி கூறிய அதே கூற்றை பேதைமையும், பித்தும், காதலும் நிறைந்த ஒரு எளிய பெண் சொல்கிறாள் உலாவியற் படலத்தில். சங்ககாலத்தில் அகத்துரை பாடல்கள் தலைவனுக்கு தலைவிக்கும் இடையே ஆனதாகவே இருந்தது. அதிலிருந்து பக்தி காலகட்டத்தில் தான் காரைக்காலம்மை போன்ற நாயன்மார்களும், ஆழ்வார்களும் நாயகி பாவத்தில் முதன் முதலில் இறைவனை நாயகனாக்கி பார்க்கிறார்கள். இந்த உலாவியற் படலம் மொத்தத்தையும் ராமனை புருஷோத்தமனாகவும் மற்ற அனைவரையும் ஸ்திரீ குலமாகவும் கொண்டு நாயக நாயகி பாவக் கவிதைகளாகவே வாசிக்கலாம். அதற்கான குறிப்பையம் கம்பன் வெளிப்படையாவே தான் விட்டு வைக்கிறான்.

தையல் சிற்றிடையாள் ஒரு தாழ்குழல்.
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான்-
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய ஐயனின் பெரியார் இனி யாவரே?

வையம் முற்றும் வயிற்றில் அடக்கியவன் அவள் பொருட்டு அவள் உள்ளத்திலும் வந்து அவள் உய்வதற்காக ஒடுங்குகினான் என்கிறாள் (சௌசீல்யம்). இன்னார் பொருட்டென்று இல்லாமல் எவர் பொருட்டும் எளியதாக இறங்கி வரும் இனியது.

கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கிறோம் ; இப்
பெண்ணின் நீர்மையால் எய்தும் பயன் இன்று பெருதும் என்பார்;
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து
உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக் குலம் பலவும் ஒத்தார்.

பெண்மையின் அடிப்படை இயல்பை நீர்மை என்று உருவகப்படுத்துகிறான் கம்பன். இந்த படலம் முழுதும் பெண்கள், முற்றும் ஒழிந்து ராமனை நோக்கி ஒழுகி ஓடி அவனைச் சூழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். அது நீரின் இயல்பு. அது மட்டுமே பாக்கி இல்லாமல் முழுவதுமாக ஒழுகி ஓடக்கூடியது. கோணத்திற்கு ஒன்றாக வேறு வேறு உருவங்களைக் காட்டும் சித்திரத்தைப் போல, இந்த பாடல்கள் ஒரே நேரத்தில் இன்பத்தை பேசும் அகத்துறை பாடல்களாகவும், ஆன்மீக தேட்டத்தை, தவிப்பை பேசுவதாகவும் இருக்கின்றன. ராமனை ஒரு தலைவனாக கொண்டால் இன்பத்தை பேசுபவையாகவும், அவனையே பரமபுருஷனாக கொள்ளும் போது, அதுவே வீடு பேற்றை குறிப்பவையாகவும் மாறிவிடுகிறது. இந்த பாடல்களின் அழகே இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கமாக சென்று சரியாக அமைவது தான். பந்தமும் விடுதலையும் ஒரே நாணயத்தின் இருபுறங்கள். அத்தனை பந்தங்களின் வழியாகவும் அடைகின்ற ஒன்றையே அவற்றை துறந்தும் அடைகிறோமோ? கம்பராமாயணம் இன்பத்தை மட்டும் பேசுகின்றன அகத்துறை கவிதை நூல் அல்ல. அதே நேரம் மோக்ஷத்தையே பிரதானமாகக் கொண்ட பக்தி இலக்கியுமோ, ஞான நூலோ அல்ல. கம்பராமாயணம் ஒரு காவியம். காவிய லக்ஷணங்களில் ஒன்றாக அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்கிற நான்கும் பேசப்பட வேண்டும், அதே நேரத்தில் அவை நான்கும் ஒன்றே போல் சமமாக கையாளப்பட்டிருக்கவும் வேண்டும், ஒன்று மற்றொன்றை விஞ்சித் தோன்றக் கூடாது என்பதும் சேர்ந்தே அது இலக்கணமாகிறது. ஒட்டு மொத்தமாக பாலகாண்டத்தை திரும்பி பார்த்தால் தெரியும், கம்பன் அந்த சமநிலையையும் சரியாகவே பேணியிருக்கிறான் என்பது.

சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தளத்தில் படித்த கவிஞர் சதீஷ்குமார் ஸ்ரீனிவாசனின் கவிதைகளில் ஒன்றை இங்கு சுட்டலாம் என நினைக்கிறேன்.
இலை நடுங்கும் பனி

மோசமான ஞாபகம் மாதிரி
பனி இறங்குகிறது
இலைகளும் வீடற்ற உடல்களும்
குளிரால் துடித்தன
சகலத்திற்கும் தீர்வுண்டு என
அறிவித்தார்கள்
ஞானிகள்
அறிவுஜீவிகள்
கூடவே
எல்லாம் திரும்ப நிகழ்பவை
என்பதும் வாதத்தில் சேர்க்கப்பட்டது
முன்னர் நிகழ்ந்தவற்றிற்கே
ஒரு நியாயமும் இதுவரை இல்லை
என்றது இன்னொரு தரப்பு
புலப்படா சுழலில்
யாருக்கும் புரியாத மொழியில்
நாங்கள் விடுதலையின்
முடிச்சுகளை அவிழ்த்து அவிழ்த்து தோற்றோம்
இலைகளும் உடல்களும்
பனியில் நடுங்கியடி இருந்தன

அறியா முடியாமையின் அதே கேள்வியோடு இன்னுமொரு நவீன கவிஞன் கோதாவில் குதிக்கிறான் இங்கு. முற்றிலும் வேறொரு இடத்தில், வேறொரு காலத்தில், வேறொரு சூழலில், வேறொரு கோணத்தில், வேறொரு வெளிச்சத்தில் ஒரே பொருள் மீண்டும் மீண்டும் படம் பிடிக்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் இதே கேள்வி நம்மையும் அலைக்கழிப்பதால், போதும் என்று அமர முடியாததால் தான் நாமும் இங்கு கூடி கம்பனோடு தலை மோதிக்கொள்கிறோம். ஆகவே, கம்பனை ஆசானாக முன்னிட்டுக்கொண்டு, இராமன் என அவன் பெயர் ஈந்த, அறியமுடியாத அந்த சுத்த தனிப் பரம்பொருளை, இப்படி வேண்டிக்கொள்கிறேன். என்றுமுள்ள அந்த கேள்வி நம்மையும் ஆழமாக துளைக்கட்டும், நம் ஒவ்வொருவருடைய போராட்டமும் தொடங்கட்டும், இன்னும் அறை கூவப்படாதவர்கள் அறைகூவப்படட்டும்.


One Reply to “அறியமுடியாமையின் பெயர் ராமன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.