நீலகண்டப் பறவையைத் தேடி

‘நீலகண்ட பஹீர் கோஜே ‘ என்ற பெயரில் திரு. அதீன் பந்த்யோபாத்யாயே அவர்களால் வங்க மொழியில் எழுதப்பட்ட நாவல் தமிழில் நீலகண்டப் பறவையைத் தேடி என்ற பெயரில் திரு சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக 1982 ல் வெளிவந்துள்ளது. மூல நாவலானது 1961மற்றும் 1971 இடையேயான பத்தாண்டுகளில் எழுதப்பட்டது. பதினெட்டு சிறுகதைளாக வெளியாகிப் பின் நாவலாக புனையப் பட்டுள்ளது. நாவலாசிரியர் அதீந்திரசேகர் பந்த்யோபாத்யாயே 1934ல் கிழக்கு வங்காளத்தில் (இன்றைய பங்களாதேஷ்) ராயீ குலின் பிராம்மணக் குடும்பத்தில் சம்மண்டி கிராமம், பிக்ராம்பூர், டாக்காவில் பிறந்தவர். தேசப்பிரிவினையை அடுத்து மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்திற்கு குடிபெயர்ந்து அதன் பின் கல்கத்தாவில் வாழ்ந்து 2019ல் மறைந்தார்.

இந்நாவலானது கிராமிய வயலும், வயல் சார்ந்த மருத நில வாழ்க்கையைப் பேசுவது. நாவல் நிகழும் களமானது இன்றைய கிழக்கு வங்காளத்தின் நாராயண்கஞ்ச் மாவட்டத்தின் ஒரு ஜில்லா அளவிலான நிலப்பகுதி மட்டுமே. கங்கையின் கழிமுகமான அன்றைய சோனாலி பாலி நதியை ஒட்டி அமைந்த தோடர் பாக் கிராமத்தை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி அமைந்த கிராமங்களையும், வயல்களையும், வாய்க்கால்களையும், ஏரிகளையும், நதிகளையும் அதை நம்பி வாழும் அனைத்து உயிரினங்களின் (மனிதர்கள் உட்பட) பாடுகளையும் பேசும் ஒரு செவ்வியல் நாவல். இது ஒரு கற்பனாவாத மாய யதார்த்த வரலாற்று நாவல். நவீனத்துவ யதார்த்த வாதம் உச்சத்திலிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட பின்நவீனத்துவ நாவல் என இதைக் கூறலாம். நாவல் நிகழும் களமானது சோனாலி பாலி நதி, நதிப்படுகை கிராமங்கள், வயல்கள், பவுசா ஏரி, ஹாஜர்தி ஏரி, மேக்னா நதி, சீதாலக்ஷா நதி அதன் கரையில் அமைந்த முடாபாடா கிராமம், ஜமீன்தார் மாளிகை முதலியன.

அப்பகுதி மக்கள், மற்ற உயிரினங்களின் வாழ்வானது நதியையும், ஏரியையும் நம்பி மட்டுமே. மக்கள், விலங்குகள், பொருட்களின் போக்குவரத்து கூட படகுகளின் வழியாகத்தான். மோட்டாரும், ரயிலும் கல்கத்தாவிலும், டாக்காவிலும் மட்டுமே. மாடுகள் கூட உழவுக்கு மட்டுமே பயன்படுத்தபட்டன. பல விதப் படகுகளும், ஸ்டீமர்களுமே போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. விவசாய விளைபொருட்கள் (சணல் முக்கியமானது), பிராணிகள், பிரயாணிகள் ஆகியன நீர்வழிப் போக்குவரத்தையே உபயோகித்தன. நீரற்ற காலங்களில் நடை தான் ஒரே வழி. சரியான பாதைகள் இல்லாமல் வயல்களை நடையிலும், வாய்க்கால்களை நீந்தியும், ஏரிகளைப் படகுகளில் கடந்தும் பிரயாணம் மேற்கொள்ளப்பட்டது. தகரங்களாலும், மரங்களாலும், நாணல்களாலுமே வீடுகள் அமைக்கப்பட்டன. இவ்வீடுகள் நதியின் படுகைகளில் அமைக்கப்பட்டன. வீட்டின் முன்புறம் உள்ள சிறு தோட்டத்தையும், வயல்களையும் தாண்டினால் நதியின் துறைகள். ஒவ்வொரு துறையிலும் படகுகள் கட்டப்பட்டிருந்தன. நதியை ஒட்டிய சிறு புதர்களைக் கடந்தால் ஏழைகளுக்கான நாணற் குடிசைகள். நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே அமைந்த பகுதி. தோடர் பாக் கிராமத்தில் ஒரே ஒரு வீடு மட்டுமே சிமெண்டால் கட்டப்பட்டது.

இக்கிராமத்தில் பெரும்பாலான இந்துக்கள் நடுத்தர வருமானமுடைய நில உடைமையாளர்களாகவும், ஓரிருவர் தவிர பெரும்பாலான முஸ்லீம்கள் ஏழைகளாகவும் இருந்தனர். ஏழை முஸ்லீம்கள் நில உடைமையாளர்களான இந்துக்களை அண்டியும், ஏரி, நதிகளில் விளையும் கிழங்குகளையும், மீன்களையும் உண்டும் தங்கள் வாழ்க்கையை நடத்தினார்கள். நாவல் நிகழும் காலமானது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. 1925க்கும் 1945க்கும் இடையிலான பிரிட்டீஷ் ஆட்சி காலகட்டம். பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் பிரிவினைக்கான விதைகள் தோன்றும் சூழலில் நாவல் ஆரம்பிக்கிறது. நாவலாசிரியர் பக்க சார்பில்லாமல் சம்பவங்களை எழுதி பிரிவினைச் சூழலை வாசகர்களின் கற்பனைக்கும், அகத்திற்கும் விட்டு விடுகிறார். நாவலின் கதாபாத்திரங்கள் அரசியல் பேசுகிறதே ஒழிய ஆசிரியரின் கூற்றோ, கருத்தோ எங்கும் வெளிப்படாததால் பிரிவினை அரசியல் பிரச்சாரமாக்கப் படாமல் அது கலையாக பரிணமித்துள்ளது.

இந்நாவலானது கிராமத்தையும் அதை ஒட்டி அமைந்த வயல்கள்,நதிகள், ஏரிகளில் நடக்கும் பல்வேறு சம்பவங்களைக் கூறுகிறது. இச்சம்பவங்கள் கால வரிசையில் தொகுக்கப்பட்டு நாவலாக்கப்பட்டிருக்கி்னறன. பல்வேறு உதிரிப்பூக்களை ஒரு சரடில் கோர்த்து ஒரு அழகான மாலையாகக் கட்டுவது போல் கட்டமைக்கப்பட்ட நாவல். ஒவ்வொரு உதிரிப்பூவும் தன்னைவில் ஒரு மாலையே. அவை ஒன்றை ஒன்று தொடர்ந்து பெரு மாலையாகிறது. தனிநபர், குடும்பம், கிராமம், நகர்ப்புற அலுவலகம் அதைச் சார்ந்த மனிதர்களின் உலகையும், சிக்கல்களையும் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நிலப்பகுதியின் அனைத்து உயிர்களையும், தாவரங்கள், நீர், நிலம் என எல்லாப் பருப்பொருட்களையும் ஒன்றிணைத்து ஒரு ஒற்றைச் சித்திரமாக கட்டமைத்துள்ளார் கதாசிரியர். உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனால் ஊராரால் விரட்டப்பட்டு நதியில் எறியப்பட்டு மணீந்திரநாத் டாகூரின் படகில் தஞ்சமடையும் ஒரு தெரு நாய் அதன் பிறகு அவரின் குடும்பத்தின் அங்கமாகவே மாறுகிறது. அதை யாரும் தனிப்பட்ட முறையில் கவனிப்பதில்லை. குடும்பத்தினரின் மிச்சில் உணவு உண்டு குழந்தைகளுடன் தானும் வளர்கிறது. இந்நாய் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நாயை நீக்கி விட்டுப் பார்த்தால் சித்திரமும், காட்சியும் முழுமை அடைவதில்லை. இப்படியாக கோரைப்புற்கள் முதற்கொண்டு அவர் காட்டும் ஒவ்வொரு பொருளும் கதைக்குப் பங்களிக்கின்றன.

இக்கதையானது பல்வேறு கதாபாத்திரங்களை கொண்டது. முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் பார்ப்போம், பார்வையற்ற முதியவரான மகேந்திரநாத் டாகூர், அவரது மனைவி சசிபாலா. இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். மணீந்திரநாத், பூபேந்திரநாத், சந்திரநாத் மற்றும் சசீந்திரநாத். மணீந்திரநாத்தின் மனைவி பெரிய மாமி அவரின் மகன் பால்ட்டு. பெரிய மாமியின் தம்பி ரஞசன் சந்திரநாத்தின் மனைவி தனமாமி அவர்களுக்கு இரு பிள்ளைகள் லால்ட்டு மற்றும் சோனா. இவர்களின் தர்மூஜ் (தர்பூசணி) வயலில் வேலை செய்யும் ஈசம் ஷேக் அவரின் நொண்டி மனைவி. அலிமத்தி என்றொரு வேலையாள். பிள்ளைகளின் ஆசிரியரான சசிபூஷன். இவர்களின் அண்டை வீட்டாரான நரேன் தாஸ், மனைவி ஆபாராணி, தாஸின் தங்கையும் இளம் விதவையுமான மாலதி. குழந்தைகள் ஆபு மற்றும் சோபா. அவர்களிடம் தறி நெசவு செய்யும் அமுல்யன். மாலதியின் இளவயது தோழனான சம்சுதின் அவர் மகள் சிறுமி பாத்திமா. கௌரவ் சந்தா குடும்பத்தினர் அவர்களிடம் கொய்னா (பிரயாணிகள்) படகோட்டும் ஆபேத் அலி, மனைவி ஜலாலி, மகன் ஜாப்பார். அலியின் தமக்கை ஜோட்டன் அவரது நான்காவது கணவரான பக்கிரி சாயபு. இஸ்மத்தலியின் மகன் மன்சூர், ஹாஜி சாயபு அவரது மூன்று பீபிக்கள், மூன்று பிள்ளைகள் (ஆகாலுதீன் மற்றும் இருவர்). சடுகுடு வீரனும், முரடனுமான பேலு ஷேக் அவன் பீபி ஆன். முடn பாடா ஜமீன்தாரர். அவரது இளைய மகன் புல்லாங் குழல் இசை விற்பன்னர். அவரின் இரு மகள்கள் அமலா, கமலா. அவரது குரு காலேக் மற்றும் ஜமீன் வேலையாள் ராம்சுந்தர் இவையல்லாமல் மேலும் பல சிறு பாத்திரங்கள்.

இவர்களில் கௌரவ் சந்தாவின் வீடு மட்டும் சிமெண்ட் கொண்டு கட்டடப்பட்டது. மற்ற இந்துக்களின் வீடுகள் தகரம், மரங்களால் அமைக்கப்பட்டவை. ஏழை முஸ்லீம்கள் நாணல் கொண்டு குடிசைகள் அமைத்திருந்தனர். சம்சுதீன் மற்றும் ஹாஜி சாயபு இருவருக்கும் சொந்த நிலமும், நல்ல வீடும் உண்டு.

தோடர் பாக் கிராமத்தின் தைரியசாலியான ஈசம் ஷேக் தர்மூஜ் வயலை ஒட்டி அமைந்த சோனாலி பாலி நதியின் துறையில் கட்டப்பட்டிருந்த படகின் மேல் தட்டில் அமர்ந்து ஹூக்கா பிடித்தபடி அக்ராண் (கார்த்திகை) மாதத்தின் மாலை மயங்கும் நேரத்தில் சந்தைக்குப் போய்த் திரும்பும் மக்களிடமிருந்து தனமாமிக்கு இரண்டாவது பிள்ளை பிறந்ததை அறிவதுடன் நாவல் தொடங்குகிறது.

பிள்ளையின் தந்தைக்கு செய்தி சொல்லப் புறப்படும் ஈசம் பார்வையில் அப்பகுதியின் நில, நீர் காட்சிகளும், பறவைகளும், விலங்குகளும், பூச்சிகளும், மீன்களும், பயிர்களும், மரங்களும், மனிதர்களும் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் நாவலாசிரியர் நாவல் முழுக்க மனிதர்களையும், அவர்களின் உணர்வுகளையும், விலங்குகளையும், இயற்கையையும் மிக அழகாக காட்சிப் படுத்துகிறார். மஞ்சள் பூ பூத்திருக்கும் சிறு கடுகுச் செடி முதல் பேராலமரம் வரை நிலத் தாவரங்களும், நதிப்படுகையின் கோரைப்புல் முதல், ஏரியின் ஆழத்தில் உள்ள கிழங்குக் கொடிகள், நாணல் வரையான நீர்த்தாவரங்களும் கதைக்குப் பங்களிக்கின்றன. அது போன்றே எலி, தவளை முதலான சிறு விலங்குகளிலிருந்து யானை போன்ற பெருவிலங்கு வரை பல்வேறு விலங்குகளும் நாவலெங்கும் இடம் பெற்று கதையோட்டத்திற்கு உதவுகின்றன. சிறு மின்மினிப்பூச்சிகள், வயல் நீரில் வட்டமிடும் சிறு நீர்ப்பூச்சிகள், குளிர், பனி இரவுகளில் ஒலியெழுப்பும் ஜிஞ்ஜி போன்ற பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், பறவையை விழுங்கும் பானசப்பாம்பு போன்றவை கதை நெடுக நடமாடுகின்றன. சிறு நீர்ப்பறவைகள், கொக்குகள், நாரைகள், மீன் கொத்திகள், மரங்கொத்திகள், ஹட்கிலாப் பறவை, நீலகண்டப் பறவை, விருந்தினர் வரவைச் சொல்லும் இஷ்டி குடும் பறவை, கிரெளஞ்ச சக்கர வாஹப் பறவைகள், சாத்-பாயி-சம்பப் பறவைகள், ஹீராமன் பட்சி, தர்கா சப்தபர்ணி மரத்தின் நுனிக்கொம்பின் உச்சியில் கூடு கட்டும் பெருங்கழுகுகள் போன்ற எண்ணற்ற பறவைகளும் நாவல் நெடுக இடம்பெறுகின்றன. குட்டி மாலினி மீன் முதல் , சாந்தா, சேலா, டர்கீனா, புட்கா, போயால், பூன்ட்டி, இலிஷ், பொய்ச்சா, கல்தா சிங்கிடி மீன்கள் மற்றும் மனிதர்களைத் தாக்கும் கஜார் பெருமீன் வரை நம் பகுதிகளில் அறியப்படாத எண்ணற்ற மீனினங்கள் நாவலெங்கும் விரவிச் செல்கின்றன.

டாகூர் குடும்பத்தின் மூத்த பிள்ளையான மணீந்திரநாத் மனப்பிறழ்வு உடையவர். வீட்டிலும், வயல்களிலும், ஏரிகளிலும், மரங்களிலும், புதர்களிலும், நதிகளிலும், படகுகளிலும் நேரம், காலமில்லமால் நடமாடிக்கொண்டே இருப்பவர். டாகூர் வீட்டிலிருந்து சந்திரநாத்திற்கு குழந்தை பிறந்த செய்தி சொல்லப் புறப்படும் ஈசம் மணீந்திரநாத் வீட்டிலில்லை என்பதால் பெரிய மாமி கவலையுடன் இருப்பதைப் பார்த்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அனுப்புவதாகக் கூறிவிட்டு அவர் வழக்கமாக உலவும் இடங்களில் தேடிப் பார்த்து விட்டு முடா படாவிற்கு கிளம்பும் ஈசம் பவுசா மைதானத்தை அடுத்த வயலில் பேயச்சம் காரணமாக மயங்கி விழ அதே சமயம் முடா பாடாவிலிருந்து வீடு திரும்பும் சந்திரநாத் வழியில் கிடக்கும் ஈசமை எழுப்பி அவனது பயம் நீக்கி வீடு திரும்புவார். அப்போதும் ஈசம் மணீந்திரநாத்தை தேடிக்கொண்டே வருவான்.

அப்படி வரும் போது வயலில் இருளில் ஆமையின் மீதமர்ந்து இருக்கும் அவரை எழுப்பி வீடு நோக்கி அழைத்து வரும்போது சந்திரநாத்துக்கும், மணிக்கும் கண்களின் வழியாக நடக்கும் உரையாடல் மிக அழகாகப் புனையப் பட்டிருக்கும். மணி அவர் எப்போதும் பேசும் ஒற்றை வார்த்தையான ‘காத் சோரத் சாலா” மட்டும் வெளிப்படுத்துவார். அப்போது அவ்விரவில் வானத்தை நோக்கி கைகளைத் தட்டுவார். அந்நிகழ்வானது நிர்ஜனமான அவ்விரவு நேரத்தில் தான் வளர்க்கும் ஆயிரக்கணக்கான நீலகண்டப் பறவைகளை அழைப்பதாகத் தோன்றும். அவர் தேடும் பறவை நீலக்கண்களும், பொன்நிறக் கூந்தலுமுடைய பாலின் எனும் மிலேச்சப் பெண். அவள் வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நகரில் வில்லோ மரங்கள் சூழ்ந்த வீட்டில் வாழ்பவள். அவளைத் தேடியே காடுகளிலும், வயல்களிலும், நதிகளிலும், ஏரிகளிலும் காலமில்லாமல் அலைகிறார் அவர்.

நாவல் ஆரம்பிக்கும் காலத்தில் இந்து, முஸ்லீம்களின் இடையேயான விரிசல் வேர் விடத் தொடங்குவதை கொய்னா படகோட்டி விட்டு வீடு திரும்பும் ஆபேத் அலி புயல் மழையில் இடுகாட்டு அரச மரத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு ஊஞ்சலாடி தாவரங்களைப் போல் மழையில் திளைக்கும் மணீந்திர நாத் பற்றிய செய்தியை அவரது மகன் ஜாபரிடம் டாகூர் குடும்பத்திடம் தெரிவிக்கச் சொல்லும் போது இருவருக்கும் நடக்கும் உரையாடல் வழியாக கோடி காட்டுகிறார் ஆசிரியர். அடுத்த சில வருடங்களில் அவ்விரிசல் மரமாக வளர்வதை ஆபேத் அலியின் மனைவி ஜலாலி பவுசா ஏரியில் பசி நீக்க அல்லிக் கிழங்கு அழந்தெடுக்கச் சென்று கஜார் மீனினால் தாக்கப்பட்டு உயிரிழந்து சடலமாகத் தூக்கிச் செல்லப்படும் போது அதைக் காணும் ரஞ்சன் அவனது பால்ய நண்பன் சம்சுதீனிடம் துக்கம் விசாரிக்கத் தயங்குவதன் மூலம் பல்வேறு நிகழ்வுகளின் பின்புலத்தில் அன்றைய சமூகச் சூழலை காட்சிகளின் வழியாகக் கட்டமைத்து காட்டுகிறார்.

சம்சுதீன், மாலதி, ரஞ்சன் பால்ய நண்பர்கள். இவர்களில் சம்சுதீன் ஊரில் முக்கிய முஸ்லீம் லீக் பிரமுகனாக மாற, மாலதி மதக்கலவரத்தில் தனது கணவனை இழந்து விரகத்துடன் பற்றுக் கோல் தேடி தனது அண்ணன் நரேன் தாஸுடன் வாழ்கிறாள். தாய், தந்தையற்ற ரஞ்சன் இள வயதில் ஊர் விட்டுச் சென்று தேச சேவை புரியும் மகானாக தனது தமக்கை பெரிய மாமியின் டாகூர் வீட்டிற்கு தலைமறைவு வாழ்க்கைக்காக திரும்பியிருந்தான்.

ஆபேத் அலியின் தமக்கை ஜோட்டன் நாற்பது வயதிற்குள் பதிமூன்று குழந்தைகளுக்குத் தாயாகி மூன்று முறை தலாக் பெற்று வறுமையில் தனது தம்பி அமைத்துக் கொடுத்த குடிசையில் வாழும் தனக்கே உரித்தான தனி வாழ்வியல் நெறி கொண்டவள். அவள் வாழ்வில் பிறழ் உறவும், பிறன் பொருளைக் கவர்தலும் உண்டு ஆனால் மனிதாபிமானம் மிக்கவள். கைம்பெண் நோன்பிருக்கும் மாலதியின் விரகம் உணர்ந்தவள். பிள்ளை பெறுவதை கடவுளுக்கு செலுத்தும் வரியாகவும் தனது உடலை நிலமாகவும் நினைக்கும் அவள் நான்காவது முறையாக முஸ்கிலாசான் பக்கிரி சாயபுவை மணந்து மயானத்தில் வாழ்ந்து வந்தாள்.

பசியினால் ஜலாலி மாலதியின் பற்றுக் கோலான ஆண் வாத்தை திருடும் சூழலில் ஓநாயைப் போலிருக்கும் அவள் முகம் வாத்தை சமைத்து உண்ட பிறகு சாந்தமாக மாறி ஒரு பீரின் முகத்தை ஒத்திருப்பதை முஸ்லீம் மக்களின் பசி நீக்கப் பாடுபடும் சாமுவின் பார்வையில் அழகாக சொல்லப் பட்டிருக்கும்.

பருவந்தோறும் மாறும் நில, நீர்க் காட்சிகளையும், அவை மானிடரின் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கதையின் போக்கில் வாசகனுக்குக் காட்டுகிறார். சைத்ர (பங்குனி) வெயில் சுட்டெரிக்க நாணல் குடிசைகள் எரியும் நிகழ்வு அதைத் தடுக்க மத வேறுபாடுகளைக் களைந்து செயலாற்றும் மனிதர்களின் போராட்டம் தோல்வியில் முடிய முஸ்லீம் மக்கள் புதிய குடிசைகள் கட்ட இந்துக்கள் பொருட்கள் கடன் கொடுத்து உதவுவது அடுத்த பைசாகி (சித்திரை) மாதத்தில் கோடை மழை பெய்ய பசுமை பூக்க இனி பசி நீங்க அல்லிக் கிழங்குகளும், மீன்களும் கிடைக்கும் என ஏழைகள் மகிழ்வது என்று பருவக் காட்சிகளையும் கதையோடு இணைத்துக் காட்டுகிறார்.

இதற்குப் பின்வரும் அத்தியாயங்கள் குழந்தை சோனா மற்றும் மணீந்திரநாத்தின் பார்வையில் கூறப்பட்டிருக்கும், கவித்துவ காட்சிகளும், மிக அழகிய தருணங்களும் குழந்தையின் பார்வையில் மிக இனிமையான குழந்தைக் கதை போலவும், மாயா ஜாலக் கதைகள் போன்றும் வாசிக்க இனிமையானது. ஜெயமோகனின் சமீபத்திய பாரதி பாஸ்கர், ராஜா பேட்டியில் கூறியதைப் போல குழந்தைமையை எழுவதுதில் நாவலாசிரியரின் திறன் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.

மாய யதார்த்தம் பாணியில் வாஸ்து பூஜையில் பலியிடப்பட்ட எருமைத் தலைக்கும் மணீந்திர நாத்திற்கும் இடையேயான தத்துவார்த்த விவாதங்கள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் உள்ள விழுமியங்களின் முரண், வாழ்க்கைப் பாடுகள், சூழல் மாற்றம், இருப்பு குறித்த விரிவான கேள்விகளை உடையது.

சோனா முதன் முதலில் காணும் தர்மூஜ் வயல், மாலினி மீன், தானே அமைக்கும் குளம், மீனின் மரணம், சிறுமி பாத்திமாவின் சேலையில் முடிந்து அனுப்பும் வண்ணத்துப் பூச்சியின் சாவு என வாழ்வின் ஒளியையும், இருளையும் தனது அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்வது சிறப்பான காட்சி சித்திரங்கள்.

திருவிழாவிற்கு செல்லும் வழிக் காட்சிகள் சோனாவின் பார்வையில் அழகியலுடனும், அவ்விழாவில் உண்டாகும் கலவரம் பற்றிய காட்சிகள் ஈசம் மற்றும் ரஞ்சன் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கும். கலவரத்தில் இறக்கும் ஏதுமறியா சின்னஞ் சிறு சிறுவனின் மரணம் வாசிப்பவரின் கண்ணீரை வரவழைக்கக் கூடியது.

பூபேந்திரநாத் உடன் கிராமத்தினர் நடத்தும் உரையாடல் வழியாக அன்றைய வரலாற்று சித்திரம் மற்றும் பிரிட்டிஷாரின் சூழ்ச்சியும், நுண்ணரசியல் முதலியன கூறப்பட்டிருக்கும். முதிய மகேந்திர நாத் டாகூரின் குற்றவுணர்வு, சுய பச்சாதாபம் முதலிய உணர்வுகள் சிறப்பான சம்பவ சித்திரிப்புகளுடன் விளக்கப்பட்டிருக்கும்.

திருவிழா சென்று கலவரத்தில் மீண்டு திரும்பிய மாலதியை கரீம் ஷேக் எனும் தீயவன் ஜாபர் உதவியுடன் மேக்னா நதியை ஒட்டி அமைந்த கோரைக் காட்டில் ஹாஸான் பீரின் தர்காவின் அருகில் மானபங்கபடுத்தி விட்டுச் செல்ல, துர்கா பூஜை சமயத்தில் மயக்கமடைந்து ரத்தம் தோய்ந்த மாலதியின் கால்களை துர்கையின் பாதங்களாக காணும் ஜோட்டன் அவளைக் காப்பாற்றி பக்கிரி சாயபு உதவியுடன் நரேன் தாஸிடம் சேர்ப்பிக்கிறாள்.

இதே சமயத்தில் சோனாவும், அவனது தமையன்களும், மணீந்திரநாத்தும் முடா பாடாவில் தனது தந்தையும், பெரியப்பாவும் உத்தியோகம் பார்க்கும் ஜமீன் மாளிகையில் நடக்கும் துர்கா பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டு திரும்புகிறார்கள்.அமலா, கமலா ஆகியோருடன் அறிமுகமாகிறான் சோனா. அவனுக்கு உண்டாகும் கிளர்ச்சியும், மென் பாலியல் உணர்வுகளும் அதனால் உருவாகும் குற்ற உணர்வும் நுட்பமாக புனையப் பட்டிருக்கும்.

மாலதியை மீட்டு தாஸிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பும் பக்கிரி சாயபு வாந்தி, பேதியில் உயிரிழந்து ஒரு தொன்மமாகிறார்.

தான் களங்கப்பட்டதால் மாசடைந்ததாக எண்ணி மாலதி எப்போதும் நீரில் மூழ்கி நீர்ப் பூனையைப் போல சுத்தப்படுத்திக் கொள்ள முனைந்தும் குற்றவுணர்வும், வெறுமையும் நீங்காததால் தற்கொலைக்கு முயல அவள் சசி பூஷன் மற்றும் சசீந்திர நாத்தால் காப்பாற்றப்பட்டு தனிக் குடிசையில் வாழ்கிறாள்.

தனது பால்யத் தோழி மாலதிக்கு தன் கட்சிப் பிரமுகன் ஜாபர் செய்த தீங்கால் மனம் வெறுத்த சாமு குற்றவுணர்ச்சியில் மாலதியை சந்திக்க முடியாமல் தனது மகள் பாத்திமா உடன் ஊர் விட்டு சென்றான்.

மாலதி களங்கப்பட்ட போது டாக்கா சென்று திரும்பிய ரஞ்சன் மாலதியை ஆறுதல் படுத்துகிறான். அவன் தேச சேவையின் பொருட்டு செய்த ஒரு வெள்ளைக்கார துரையின் கொலைக்காக பொலீஸால் தேடப்படுகிறான்.

பொலீஸ் நெருங்கிய போது அவன் மாலதிக்கு உதவத் தீர்மானித்து அவளைத் தன்னுடன் அழைத்து செல்ல விரும்புகிறான்.

தன் வீட்டிலிருந்து விடைபெற்றுக் கிளம்பி மாலதியின் குடிசையை அடையும் வரை டாகூர் வீட்டு நாய் உடன் வந்து அவனை வழி அனுப்பும். அவர்கள் ஆற்றின் படுகையில் நடக்கையில் போலீஸ் ஊரைச் சுற்றி வளைக்க ஆற்றில் குதித்து நீந்தி மறுகரையின் சால மரக் காட்டில் நுழைந்து இரவைக் கழிப்பார்கள். மாலதி வாந்தி எடுக்க அவள் தான் கருவுற்றிருப்பதை உணர்ந்து தான் சீரழிக்கப்பட்டதை ரஞ்சனுக்குச் சொல்லி தன்னை ஜோட்டனிடம் விட்டுச் செல்லுமாறு அவனிடம் கூற, அவள் வேண்டுவதை நிறைவேற்ற அவன் முடிவெடுப்பதுடன் நாவல் நிறைவு பெறும். ஜோட்டனுக்கும் மாலதிக்கும் உள்ளூர ஒரு உணர்வு பூர்மான தொடர்பு நாவலெங்கும் இழையோடும். இரு அபலைகள் இணைந்து வாழ்வென்னும் போரைச் சந்திக்க நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்க ரஞ்சன் டாகூர் விடைபெறுகிறான்.

மணீந்திரநாத்தின் வழியாக கீட்ஸின் கவிதைகள் நாவலெங்கும் இடம் பெறும். இந்நாவலின் முடிவும் எனக்குப் பள்ளியில் படித்த போது வாசித்த கீட்ஸின் இரு வரிகளை நினைவூட்டியது.

Heard melodies are sweet
But those unheard are sweeter

அக் கேட்கப்படாத பாடலின் இனிமையைப் போன்று நாவல் பேசாத பகுதிகளை நாம் நம் கற்பனையில் வளர்த்தெடுக்கலாம். “A thing of beauty is a joy forever’ எனபதைப் போல இவ்வழகிய நாவலானது வாசிப்பவருக்கு என்றென்றும் மகிழ்ச்சியை அளிப்பதாகும்.

நோபல் பரிசு பெற்ற கேப்ரியல் கார்சியா மார்க்கஸின் நூற்றாண்டுத் தனிமை அறிமுகமாகும் முன்பே நமது இந்திய மொழியில் சிறப்பாக மாய யதார்த்த வாதம் எருமைத் தலை மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜோர்பா தி கிரீக்கின் ஜோர்பாவை விட சிறப்பாக மணீந்திர நாத் டாகூரின் கதாபாத்திரமும், மனப் பிறழ்வு கொண்ட அவரது உணர்வுகளும் மிகையில்லமால் காட்டப்பட்டுள்ளது.

தமிழ் நாவல்களில் மோகமுள், கடலோர கிராமத்தின் கதை போன்றவை ஒரு குறிப்பிட்ட பகுதியின் முழுக் காட்சியையும் காட்டினாலும் அவற்றில் பல விடுபடல்களை நாம் காணலாம். ஆனால் இந்நாவல் காட்சியமைப்பில் மனிதர்கள், அவர்களின் உணர்வுகள், நீர், நில வாழ் விலங்குகள், தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட முழுமைச் சித்திரம் கொண்டது. நாம சூதர், எளிய முஸ்லீம்கள், குடியானவப் பெண்கள் முதல் ஜமின்தார் வரை பல்வேறு படிநிலைகளில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களது ஆதி உணர்வுகள், நவீன சமூக விழுமியங்கள், கீழ்மைகள் என அனைத்து அக, புற வாழ்வையும் முழுமையாகப் பேசுகிறது இந்நாவல். பல்வேறு கருத்து நிலைகளிலும், சம்பவ சித்திரிப்புகளிலும் இது ஒரு முன்னோடி நாவலாகும்.

One Reply to “நீலகண்டப் பறவையைத் தேடி”

  1. நான் படித்த நாவல்களில் சில அற்புதமான வை அதில் நீலகண்ட பறவையும் ஒன்று
    திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மொழி பெயர்ப்பும் அருமையான மொழியும் நடையும் பிரமிப்பானது நிற்க.

    நான்கு காலங்களில் ஏற்படும் மழை, ஆற்றுநீரின் போக்கு அப்போது விளையும் காய்கறிகள், பூக்கள், தோன்றும் பறவைகள் பற்றிய ஆசிரியரின் பதிவுகள் , அக்காலகட்டத்தில் செய்யப்படும் திருவிழாக்கள் , கொண்டாட்டம் பற்றிய வர்னனைகள் அருமையானதும் நமது மரபை நமக்கு உணர்த்துவதும் ஆகும்

    அக்காலகட்டத்தில் இந்து இஸ்லாமிய பிரச்சனைகள் அது தோன்றிய விதம் வளர்ந்த விதம் அதனால் விளைந்த சேதம், மக்களின் மனோபாவம் போன்றவையும் தவிர்க முடியாத பதிவுகள் இலக்கிய அன்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புனைவு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.