பெருந்தொற்றின் பாடுகள்

(1)
முன்பு போல்
விடியாத ஓர் விடியலில்-
நானும் அவளும்
நோவில்
உடல்களாகிப் போனதாய்
உணர்ந்தோம்.
தனித் தனி
உடல்கள் வசித்த
தனித் தனி அறைகளில்
வசித்தது
ஒரே வீடு.
தனித் தனி
உடல்களுக்கு
தனித் தனி
ஜன்னல்களில்
தெரிந்தது
தனிமையின்
ஒரே நிலவு.
தனித் தனி
உடல்கள் கழித்த
தனித் தனி
இராப் பகல்களில்
நகர்ந்தது
நத்தையாய்
ஒரே காலம்.
நோவு போய்
இன்னொரு விடியலில்
முன்பு போல் உதித்தது
சூரியன்.
மறுபடியும்
அவளுடலில் அவள் மனைவியாகி
என்னுடலில் நான் கணவனாகிப்
போனதாய் உணர்ந்தோம்.
ஆனால்
இன்னும் தொடும் முன்னே,
முதலில் அவளும் நானும் உடல்களென்று
சற்று யோசிக்காமல் இல்லை.
(2)
பிணக் கிடங்கில்
அவன்
அதுவாகி,
இனி
உடலாய்-
உடலால், தன் திறந்த விழிகளைக் கூட
மூட முடியவில்லை.
ஆனால், விழி மூடிக் கொண்டு விட்டது
உலகம் அதற்கு.
சுடுகாட்டுக்குச்
செல்ல வேண்டும் அது.
சுடுகாட்டில் இடம்
இருக்கிறதா?
வரிசையில்
அதன் இடம் என்ன?
கிடைக்க வேண்டிய
அனுமதிகள்
கிடைத்து விட்டனவா?
எதுவும் தெரியாது
அதற்கு?
அலைய முடியாது
இறந்து அது.
அதற்கு காத்திருப்பது கூடத் தெரியாது,
காத்திருக்கத் தான் முடியும்.
காலங் கழிக்க
கனவு காணக் கூட முடியாது.
சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும்
அது.
உடல்
அவசரப்பட முடியாது.
தன் அவமரியாதைக்கு
ஆத்திரப்பட முடியாது.
எப்படியும் சுடுகாட்டில் தகனமாகாமல்
இருக்கப் போவதில்லை அது.
உடல் சமாதானப்படுவதைத் தவிர
வேறு வழியில்லை.
ஒரு வேளை தகனமாகும் போது
ஒரு கணம் உடல் எழும்பியடங்கலாம்.
எழும்பியடங்கிய அதன் ஆத்திரமாய்
அனலின் விழிகளுக்கு மட்டுமே
அது தெரியலாம்.
(3)
அறை
குறைந்தபட்ச
வீடு.
அது
போதும்.
அறைக்குள்
தனி
நான்.
ஆனால்
நெரிசலில்லாமல் இல்லை.
எனக்கு நானே
நெரிசல்.
அறைக்குள்
நடந்து நடந்து தெரியும் எனக்கு—
அறைக்குள் தொலைவு
வெகு தொலைவு.
அறை வாசல் தாண்டி
அயற் பிரதேசம்.
அறை ஜன்னல் வெளியே தெரியும்
ஒற்றைத் தென்னை
நான் நேசிக்கும்
காடு.
அறைக் கதவிடுக்கில் சிக்கி
துண்டிக்கப்பட்ட
பல்லி வால்
என்
தனிமை.
காலம்
இராவும் பகலுமாய் ஊரும்
குருட்டு நத்தை.
அதில்
நொடிக்கு நொடி
நீளும் நிழலாய்
நகரும்
என் பொழுது.
குறைந்தபட்சமாய் வாழ்வதில்
உடற் சுமையைத் தவிர
கூடுதல் சுமையில்லை.
(குறிப்பு: நேரிலும், நெருக்கத்திலும் நேர்ந்த பெருந்தொற்றின் பாடுகளின் அனுபவத்தில் எழுதப்பட்டவை.)
சென்ற இதழில் (260), மீசை அலுங்காமல் மியாவ் கூறும் பூனையை அருமையாக அலசி ஆராய்ந்தீர்கள். இந்த இதழில் பெருந்தொற்று கவிதையில் morbid என்று கூறப்படக் கூடிய விடயங்களை லாவகமாக் கையாண்டுள்ளீர்கள். நிறைய எழுதுங்கள், சொல்வனத்தில் உங்கள் பெயரிட்ட கவிதைப் பக்கம் உருவாகட்டும்.
ஊக்கப்படுத்திய இனிய நண்பருக்கு நன்றி.