கிறுக்கு

மணிதாத்தா படுக்கையில் கிடக்கும் போதும் அந்த கதையை சரிந்த முகத்தின் எதிரிலிருந்த கதவிற்கும், ஓட்டின் இடையில் குளவியில்லாத பழுப்பு நிற மண் கூட்டிற்கும்  சொல்லிக்கொண்டிருந்தார். பாதி திறந்த கதவு வழி அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆச்சி அங்கிருந்த மூலையில் அண்டி ஆபீசிலிருந்து எடுத்து வந்திருந்த காய்களை அடித்து உடைத்து தின்னும் பதத்துடன் பாத்திரத்தில் சேர்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு காது கேட்பது நின்ற சமயம் அவளுக்கு எட்டாவதும் கடைசியுமான குழந்தை பிறந்திருந்தது. காது கேட்காமல் போனதால் என்னமோ வாயும் அதிகம் பேசாமல் ஆகிவிட்டாள் . 

நான் அவர்களுடைய கடைசி பிள்ளையான ஆபிரகாமின் மகன். என்னுடைய பையனின் ஞானஸ்தானத்திற்கு என் சித்தி சித்தப்பா அத்தை மாமா என கூடியிருந்த கூட்டத்தின் பேச்சுகள் படாத  இடித்து கட்டப்பட்ட வீட்டிற்கு வெளியிலிருந்த பழைய ஒற்றையறை வீட்டில் எந்த உயிரும் சீண்டாதபடி தனித்து பலாமரக்கட்டிலில் சட்டையின்றி பாயில் இடது காதோரம் அலைகளின் பேச்சுக்களுடன் தாத்தா படுத்திருந்தார். முழு நிலவு அவர் முகத்தில் விழும் நாட்களில் கண்களை மூடியபடி விழிகள் உள்ளெ உருள முகம் பிரகாசிக்கும். அன்றிரவு நிலா முழுவுரு கொள்வதற்கு இன்னும் அதிக நேரமில்லை. 

வீட்டின் புறவாசலிலிர்ந்து சில்வியாயின் குரல் ஓர் கிசுகிசுப்பை போல ஒலித்தது “தாமஸ் இவ்விட வரணும். அவர எழுப்பி பெகளம் உண்டாக்காண்டாம்” என்று என்னருகில் வந்தாள்.

பாதி திறந்த கதவை சாத்தியபடி “உனக்கு இப்போ என்னதான் வேணும்? அந்த ஆள கொண்டுபோயி குழில இறக்கிட்டா சந்தோசமா” என்று அவளைத்தாண்டி வீட்டின் வாசலுக்கு சென்றேன். அவளும் பின்னால் வந்தபடி “எனக்க மோனுக்க விசேசம் ஒழுங்கா நடக்கணும். எல்லாரும் கூடியிருக்க நேரம் இவரு நாயிகணக்கா ஊளையிட்டா…பொறவு…” என்று நிறுத்தினாள். நான் அவள் கண்களை உற்றுப்பார்த்தேன். அதில் என்னிடம் அனுமதி கேட்கும் பாவனையில்லை என்பது தெரிந்ததும் “உன்னால என்ன நொட்ட முடியுமோ நொட்டு…” என்று அவளைத்தாண்டி படியேறி வீட்டிற்குள் செல்லும் போது வாய் “சவம்…சவம்” என்று காரணமில்லாமல் முனங்கியது. சில்வியா தொடர்ந்து என் முதுகுக்கு பின்னால் வரவில்லை. 

“எங்கடே போறா உனக்க பெட்ட போற வேகத்த பாத்தா பெணக்கு போலல்லா தெரியி,” என்று சில்வியா வெளி வாசலைத்தாண்டி செல்வதை பார்த்து அந்தோணி சித்தாப்பா கேட்டார்

“கடல்ல விழுந்து சாகப்போறா,” என்று ஹாலிலிருந்த குஷன் சோபாவில் விழுவது போல அமர்ந்தேன். 

நான் சொன்னதை பகடியாக எடுத்துக்கொண்டால் ஒழிய அந்த சந்தர்ப்பம் சரியாக அமையாது என்றுணர்ந்த அவர் பற்கள் எல்லாம் தெரிய ஓர் குரங்கைப்போல சிரித்தபடி “நளி வேண்டாம் பிள்ளே…காரியம் எல்லாம் செரியா முடிஞ்சுதா ? வல்ல பணியிருந்தா சொல்லு , வண்டியிருக்கு , போயிட்டு வந்துரலாம்,” என்று சோபாவில் சொகுசாக அமர்ந்து அதன் விலையை உத்தேசிக்கும் பாவனையில் திரும்பி திரும்பி அமர்ந்தார். 

“எல்லாம் செரியா நடக்கும்.”

“தாத்தா என்ன சொல்லுகாறு?”

“உங்ககிட்ட சொல்லியதுக்கு ஒண்ணுமில்லெயே.”

இருவரும் அமைதியாக இருக்கவும் அவரே “எல்லாம் மார்த்தாண்டம் போயிருக்குவ , வாரதுக்கு ராத்திரி ஆயிரும் போலயே.”

“நீங்களும் போறீங்களா?”

“அதுக்கில்ல , சும்மா இங்கையே இருந்தா மடி புடிக்கும். அதான் பாத்தேன்.”

“நீங்க செய்யது கணக்கா இங்க ஒண்ணும் பெரிய வேலயில்ல. கெளம்புங்க.”

“செரிடே , சித்தி வந்ததும் வீட்டுக்கு வரச்சொல்லு. காலைல சர்ச்சுல பாப்போம்,” என்று எழுந்து பின் அமர்ந்தபடி அவனருகில் வந்து நமட்டுச்சிரிப்புடன் “அவர அங்க வராம பாத்துக்கிடும்” என காதில் ரகசியம் போல சொல்லி தோளில் தட்டிவிட்டு சென்றுவிட்டார். 

அந்த பெரிய பொருட்கள் குவிந்துகிடந்த ஹாலில் தனியாக அமர்த்திருந்தேன். எதிர்ச்சுவரில் மணிதாத்தா கால்மேல் காலிட்டு கருப்பு கோட்டும் சூட்டும் அணிந்த அமர்ந்திருந்த பழைய கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று மூலைகளில் பழுப்பேறி தொங்கியது. அப்பா அதனை அங்கிருந்து அகற்ற முயன்ற போது நான் தடுத்திருக்காவிட்டால் எந்த குப்பையில் நாய் மூத்திரம் குடித்து கிடக்கும் என்பது நம்மால் ஊகிக்க முடியாதது. மணிதாத்தா  கட்டிய வீட்டின் பெயரை ‘மணி இல்லம்’ என்பதிலிருந்து ‘ஆபிரகாம் இல்லம்’ என்று அப்பா பெயர் மாற்றம் செய்த போது நான் அதை தவறாக நினைக்காத அளவிற்கு வளர்ந்திருந்தேன். அப்பாவின் உடன்பிறந்தவர்கள் அவர்கள் பங்கிற்கு மற்ற சொத்துக்களைப் பங்கிட்டு ஊரிலும் வெளியிலும் போய் தங்கிவிட்டனர். ஆச்சி பூர்வீக வீட்டிலிருந்து வரமறுத்துவிட்டாள் அதனால் மணிதாத்தாவும் அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம். வீட்டையும் மற்ற சொத்துக்களையும் பங்கு வைக்க ஆரம்பித்த சமயத்தில் ஒரு நாள் தாத்தாவின் உடல் அவர் பேச்சை கேட்காமல் படுத்துவிட்டது. கட்டிலில் ஓரம் மூத்திரப்பையும் அறையின் மூலையில் பீ அள்ளும் பேசனும் பின்னால் வந்து சேர்ந்தன.

முன்பு அவருடைய டையரிக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு அப்பா கடைசியாக விற்றுத் தீர்த்த ஐம்பது ஏக்கர் பால்மோர் டீ எஸ்டேட்டில் சந்தித்த கேசவனிடம் என்னை அறிமுகப்படுத்தி, பின் தாத்தாவைப்பற்றி கேட்டேன் “உன்ன பாத்தவொடன ரேக தெரியல்ல. அவரு ஆளு எலும்பெடுத்து பொணமாட்டு இருந்தாலும் மொகம் கல்லு மாரி இறுகில்லா இருக்கும். கண்ண பாத்து பேசுனா எரிச்சி போடுவாரோனு பயம். மண்ண பாத்து நிண்ணு சொன்னத கேட்டு செஞ்சிர்றது. இல்லன்னா மணிக்கு கீழ பணியெடுக்க முடியுமா பிள்ளே. பொறவு மண்ட களந்து திரியதா கேள்விப்பட்டேன். பாக்க வந்தா அடிச்சி போடுவாறொன்னு நினைச்சு வரல்ல. நான் விசாரிச்சேன்னு சொல்லணும்,” என்றார். தொங்கிய சுருக்கங்கள் விழுந்த முகத்தில் அப்போதும் அந்த பயம் தெரிந்தது. 

“இந்த பூ மாதிரி இருக்கிங்க வேட்டி சட்டைல,” என்று ஒரு தேயிலை புதருக்கடியில் விழுந்திருந்த பூவை காட்டினேன்.

“இது தேயில செடிக்குள்ள பூவுல்லா,” என்று அதனை கையில் வாங்கியபடி சிரித்தார்.

“அப்புடியென்ன அவருக்கிட்ட பயம்.”

“பேசுத மனுசக்கிட்ட நமக்கென்ன பயம். உள்ள என்ன இருக்குன்னு வெளில தெரியாத மனுசன் மொகமே ஒரு பிசாசு மாதிரி ஆகிரும்லா. இங்க வேலை பாத்த எல்லாருக்கும் உங்க தாத்தாக்கு வாதை புடிச்சிருக்கோன்னு பயமுண்டு. ஆனா எனக்குத்தான் தெரியும் அந்த ஆளே ஒரு வாதைன்னு.”

“அப்புடியிருந்தும் இருவது வரியமாட்டு அவருக்கீழ எஸ்டேட்டு கணக்கெளுதி வேல பாத்திருக்கது ஆச்சரியந்தான்.”

“அப்புடி சொல்லியதுக்கில்ல , வேலைக்குள்ள வந்துட்டா நமக்கு நம்பரத்தவுர வேற தெரியாத மாரி கண்ணவஞ்சி போயிப்போடும். பின்ன எங்க உங்க தாத்தாவ பாக்கது. மத்தவனுகளுக்கு , அவரு டீ ஃபாக்ரிக்குள்ள இருந்தாலே இங்க ஒதறலெடுக்கும். அவரு மாதிரி இல்லன்னா இங்க வேலை நடக்கதும் கஷ்டந்தான். இல்லன்னா எல்லாத்தையும் கமுத்திட்டு போயிருவானுவ,” என்று சிரித்தார். 

அவர் அந்த எஸ்டேட்டின் அமைப்பைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். இருவரும் தேயிலைத் தோட்டப்புதர்களின் வழி சில்வர் ஓக் மரத்தின் உதிர்ந்த நீள் இலைகளை மிதித்த படி ஈரம் சொதசொதக்கும் பாதையில் நடந்துகொண்டிருந்தோம் “இதொரு எட்டுக்கால் பூச்சிக்க வல மாதிரியாக்கும். உள்ள போயி வழி தப்பி நான்லாம் மழைல ஜன்னி வந்து இழுத்து அப்புடியே கெடந்துருக்கேன். ஆளுக தூக்கி போகும்ப அவங்களுக்கு மழைல வழி தப்பிருக்கு. ஒத்தையான பாதைல தனியா நின்னுருக்கு. அதுக்கு பொறத்தாலையே போயி வெளீல வர முடிஞ்சிருக்கு. இப்பொ நம்ம போற வழில தடம் வச்சிருக்கோம் இல்லன்னா சோலி முடிஞ்சிரும்” என்று புன்னகைத்தபடி அவர் விழுந்து கிடந்த இடத்தை காட்டினார். அந்த தேயிலைப்பரப்பு குன்றின் உச்சியில் ஏறி மறுபக்கம் தெரிந்தவற்றை பார்த்தோம். தூரத்தில் ஒற்றை மரம் பெரிதாக சடைபிடித்த மயிருடைய சாமியாடியைப்போல நின்றது. 

“அதென்ன மரம்?”

“அதும் தேயிலதான்!”

“இவ்வளவு பெருசா மொளச்சிருக்கு!”

“அது வளரும் யானதண்டிக்கு. இதொண்ண மட்டும் உங்க தாத்த வெட்ட விடல. மத்தத எல்லாம் வெட்டி வெட்டி செரியான ஒசரத்துல வச்சிருப்போம் பொதரு மாதிரி. இதொண்ணு மட்டும் அம்பது அடிக்கு வளந்து நிக்குது. கெளம்பி போக நேரத்துல அத இந்த மேட்டுலருந்து நிண்ணு கண்ணடைக்காம அவரு பாக்கத நான் பாத்துருக்கேன். கடைசியா உனக்க அப்பாக்கிட்ட எஸ்டேட்ட கொடுத்துட்டு போகும்போ அத மட்டும் எதும் செய்யக்கூடாதுண்ணு சத்தம் போட்டாரு. அவரும் எதும் சொல்லல. எங்களுக்கும் அது இருக்கது ஓர்மையில்லாம போச்சு.”

மழைமேகங்கள் நாங்கள் நின்ற இடத்தில் இறங்கி மென் தூறலால் அந்த வெளியை நிறைத்து மறைத்தது.

நான் எதும் கேட்காமல் அவராகவே “மெஷினு, தள்ளி நிண்ணு பாத்தா சட்ட பேண்டு போட்டுவிட்ட மெஷினேதான். அவரு சிரிச்சோ அழுதோ கோவத்துல சத்தம்போட்டு கூட பாத்ததில்ல. செரியா ஒருவருசம் இந்த எஸ்டேட்ட திரித்தி முடிக்கது வர அவருக்கூட இருந்தேன். எனக்கூட பத்து வார்த்தைக்குள்ளதான் பேசிருப்பாரு. அவரு கட்டினவ வந்த புதுசுல எப்புடி இருந்துருப்பான்னு தெரியல. நான் பாக்கும்போ அவளும் மெஷினாயிட்டா. எஸ்டேட்டுல இருக்க ஃபாக்ட்ரி மெஷினிக்கு கூட அவரு பேருதான் வச்சோம். நல்ல ருவா பாத்தாரு. அத பாக்கும்போ கூட மொகத்துல சிரிப்பில்ல. இங்கருந்து போகதுக்கு முந்தின வாரம் எனக்க ரூமுக்கு வந்து ஒரு சம்பவத்த சொல்ல ஆரம்பிச்சாரு. சந்தோசமோ நிம்மதின்னோ சொல்லத்தெரியல. ஆனா அவரு மொகத்துல உயிர் இருந்துச்சி. குழில இருந்து எழும்பிவந்த பொணத்தோட ஆனந்தம். உனக்கு லாசரசு கத தெரியுமில்லா” என்று அந்த நாளை ஞாபகப்படுத்தி பார்ப்பதுபோல கண்களை மூடினார்.

“சாதாரணமா சொன்னாரா. இப்போ அவர அடச்சி போட்டுருக்கோம். சல்லியம் கூடிப்போச்சி. எல்லார் கிட்டையும் கதைய சொல்ல ஆரம்பிச்சவரு இப்பொ அவரே ஆளில்லாம சொல்ல ஆரம்பிச்சுட்டாரு பாத்துக்கிடுங்க.”

“எனக்கிட்ட சாதரணமாத்தான், ஒரு கத சொல்லது கணக்கா.”

“ஆனா மண்ட கழந்தாச்சுன்னு அப்பொவே ரேக தெரிஞ்சிச்சி,” என்று நிறுத்தி பின் “கிறுக்கு” என சிரித்தபடி முனங்கினார்.

மேகம் கலையாத மழைத்தூறலால் மறைக்கப்பட்ட அந்த பெரும் மரத்தை ஒருமுறை முழுதாகப் பார்த்து திரும்பும் போது தாத்தா அவரைப்பார்க்க வரும் அனைவரிடமும் தவறாமல் பிதற்றும் கதை நினைவிற்கு வந்ததைத் தடுக்க முடியவில்லை. 

இருட்டியது தெரியாமல் நான் தூங்கியிருந்தேன். மார்த்தாண்டம் சென்றவர்கள் யாரும் திரும்பியிருக்கவில்லை. சில்வியா பதற்றமாக புறவாசலுக்கும் ஹாலுக்கும் நடந்துகொண்டிருந்தாள். 

“என்னாச்சு?”

“உனக்க தாத்தா மீண்டும் தொடங்கி. எல்லாரும் வந்துருவாங்க இப்பொ. போயி கொஞ்சம் சமாதானப்படுத்து,” என்றதும் நான் நடக்க அவள் பின்னால் தொடர்ந்து வந்தாள். யாரிடமோ சத்தமாக பேசும் பாடும் தாத்தாவின் குரல் அடைத்த கதவு வழி சன்னமாக கேட்டது. 

அவள் “கிறுக்குக் கூட்டம்” என வாய்க்குள் முணுமுணுத்தாள்.

அச்சமயம் அவளை அறைந்திருக்க வேண்டுமாயிருந்தது. கத்த ஆரம்பித்தாள். காம்பவுண்ட் சுவரைத்தாண்டி சில தலைகள் எட்டிப்பார்த்தன. தலைக்குள் மீண்டும் எதோவொன்று ஊர மீண்டும் அவளை அறைந்தேன். விசும்பியபடி அமைதியாக வீட்டிற்குள் சென்றாள் “கிறுக்கு…கிறுக்கு” என கத்தியபடி குழந்தை இருந்த அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள்.

தாத்தாவின் குரலைக் கேட்டபடி வாசற்படியில் தலையை தாங்கி அமர்ந்தேன். அவர் குரல் ஏற்ற இறக்கமாக உணர்ச்சிகளை வெளிக்காட்டி கேட்டுக்கொண்டிருந்தது. ஆச்சி மூலையில் இருளில் அமர்ந்திருக்கவேண்டும் என்பதை உணர முடிந்தது. கொசுக்கள் காதுகளில் ரீங்கரித்தன. மேகமற்ற வானில் நிலா முழுமையாக தெரிந்தது. நான் எழுந்து ஜன்னல் வழி தாத்தாவை பார்க்க முயன்றேன். அவர் முகம் நோய்மை நீங்கி உயிர்த்தன்மை கொண்டு அத்தனை தசைகளும் துடித்தன. கண்களில் நீர் பொங்கி வழிந்தது. என்னை பார்க்கவில்லை. நான் ஏற்கனவே கேட்ட கதைதான். வினோதமான நம்ப முடியாத சில இடங்களில் புரிந்துகொள்ள முடியாத கதை. 

கார் வளைந்து திரும்பும் ஒளி தெரிந்தது. அவர்கள் முன்களத்தில் வண்டியை நிறுத்தி வீட்டிற்குள் வந்திருக்க வேண்டும். மீண்டும் அந்த வாசலில் அமர்ந்துகொண்டு அவர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். மற்ற அரவங்களற்ற இரவில் பெரியவர்கள் குழந்தைகளின் குரல் பெரிய சிறிய பூதங்களின் கனத்த ஒலி போலிருந்தது. 

“கிறுக்கு தாத்தா…கிறுக்கு தாத்தா” என கூடி நின்ற குழந்தைகள் கத்தின.

“அப்பா சத்தம் கேக்குவு….அடங்கு பிள்ளைகளா…”

“ஆட்கள் நெறைய வந்து போகும். உள்ள மடத்துலையோ ஆசுத்துரிலயோ சேக்கலாம்னா இவன் வீம்புல்லா புடிக்கான்.”

“ஆமா அண்ணெ , இவரு கிறுக்கு புடிச்சு திரிஞ்சா நம்மளும் கூட சேந்து பைத்தியார ஆசுத்திரிக்கு போவணுமா.”

“இருந்தாலும் சொத்து அவரு சேத்தது. அதுக்காவது அவர வச்சி பாக்காண்டாம?”

“நீ கொழப்பாத நெல்சனே , உனக்க தாத்தா சேத்தாரு. இல்லன்னு யாரு சொன்னாவ. அதுக்குண்ணு , நானும் கெடந்து வாரவன் போறவண்ட கதை சொல்லி ஊள போடவா. அவ்வளவு பாசமிருந்தா நீ வச்சி பாக்க வேண்டியதான. வாயு மட்டும் பேசாத. இவன் வீம்புக்கு நானும் ஆபிரகாமும் கஷ்டப்படுகோம்.”

“அப்பாக்கு நம்ம அம்மா இருக்காள்ள, பொறவு துணைக்கி என்ன வேணும்?”

“ஆமா , அவங்க குடும்பத்த அவங்க தான பாத்துக்கிடணும்.”

“தாமஸ் எங்க , அவன் வந்தாத்தான் அந்தாளு அடங்குவாரு.”

“இல்லன்னா ஊசிய போட்டு ஒறக்காட்ட வேண்டியதான்.”

“தாமஸ் பொறவாசல்லதான் இருக்கான். ஆனா உள்ள போகல்ல,” என்றபடி சில்வியா அறைக்குள்ளிருந்து கையில் குழந்தையுடன் வெளியே வந்தாள்.

வந்தவர்கள் கைகளிலிருந்த பைகளை வைத்துவிட்டு சில்வியாவுடன் புறவாசலுக்கு சென்றனர். கதவு திறந்து கிடந்த அறையில், கட்டிலில் ஓரமாய் அமர்ந்திருந்தபடி தாமஸ் மணி தாத்தாவின் கதையை கேட்டுக்கொண்டிருந்தான். ஆச்சி அந்த இருட்டினுள்ளும் அண்டி விதையை அடித்து உரித்து உடையாமல் முந்திரியை எந்திரம் போல எடுத்துக்கொண்டிருந்தாள். அங்கிருந்த சூழல் அவளை எதும் செய்யமுடியவில்லை. அவர் அச்சமயம் மூன்றாவது முறையாக தொடக்கத்திலிருந்து கதையை சொல்ல ஆரம்பித்தார். தாத்தாவின் குரல் காட்டு கந்தவர்வனின் குரல் போல இனிமையாக இருந்தது. ஒர் பறவையை போல வாயை குவிந்து விரிந்தது. இடைக்கிடை அது பாடல் போலவுமிருந்தது. 

“கட்டுக்கோப்பில்லாத காட்டு பாதையில, நடந்தோம் நடந்தோம் கால் தேய நடந்தோம். வானம் கனிஞ்சி மழையா பெய்யும்போ

ஊ…ஊ…ஆ…ஆ

காதடச்சி கெடந்தேனே , கண்மூடி கெடந்தேனே.

இருகொள்ளி கண்ணோடு வந்துச்சி ஓரு இருட்டு

அடிமேல் அடிவச்சி  சருகுதெறிக்க

சிலுர்த்த கருமயிர் தேகத்தோட வந்துச்சி ஒரு இருட்டு

இறச்சி ஒழுக சோர ஒழுக 

வெள்ளப்பல் வாயி பொளந்து நிக்க

நெஞ்சில கால்விரல் கடிக்க

விரிஞ்ச மூக்கு சுருங்கி உறும

ஊ…ஊ…

இருட்டே இருட்டே

கொல்லாம போனதெதுக்கு

தின்னாம போனதெதுக்கு

மரமேறி படுத்து கண்டும் காணாம போனதென்ன

நிலவு வந்துச்சி  , பின்ன நீ மறைக்க நெலவும் போச்சி

குழில இறக்கது வர ஓர்மையிருக்கும்  

உமக்கு ஓர்மையிருக்கா என்ன

உமக்கு ஓர்மையிருக்கா என்ன

இருட்டே…இருட்டே”

மனிதனால் தாங்க முடியாத பிரேமை அவர் முகத்தில் தெரிய கண்கள் விரிந்து வெளிவந்துவிடும் போலிருந்தது. ஜன்னல் வழி தெரிந்த நிலவை கருமேகமொன்று மறைத்தது. அதன் உருவம் காதுகள் விடைத்தெழுந்து நின்ற புலியொன்றின் தலை போலிருந்ததை பார்த்தபடி அவர் முகம் மேலும் விகாரமடைந்து இழுத்துக்கொண்டது. நான் குத்திய ஊசியின் வீரியம் அடுத்த நாள் இரவு வரை தாங்கியது. அவர் உறக்கத்திலிருந்து எழும்பவில்லை. ஞானஸ்நானம் யாருக்கும் தொந்தரவின்றி நல்லபடியாக முடிந்தது.

ஆறு வருடங்களுக்கு பின் அவர் இறந்தபின் ஆச்சி அந்த கதையை அவரின் குரலில் திரும்பத்திரும்ப இறக்கும்வரை சொல்லிக்கொண்டிருந்தாள். அனுபவிக்காத, ஒருவேளை அவரை விட அதிகமாக அனுபவித்த கதையை.

அவர் சொன்ன கதை ஒரு கருஞ்சிறுத்தை முழுநிலவை மறைக்க நெடுக வளர்ந்த தேயிலை மரத்தின் கிளையொன்றில் படுத்தபடி காட்டை பார்த்திருந்தது என சாதாரணமாக மற்றவர்களுக்குச்சொல்ல என்னால் முடியவில்லை. 

***

One Reply to “கிறுக்கு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.