நீலி

வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் தாத்தா வீட்டில் இருக்கையில், அதாவது சுமார் 40 வருடங்களுக்கு முன்னர்,  ஒவ்வொரு வாரமும் வீட்டின் மண் தரையை பாட்டி  பசுஞ்சாணமிட்டு மெழுகுவார். முந்தின நாளே பறித்து வந்து, நீரில் ஊறிக் கொண்டிருக்கும்  நீலி அல்லது அவுரி எனப்படும் சிறுசெடியை அம்மியில் மைபோல அரைத்து, மெல்லிய துணியில் அந்த விழுதை வைத்து கட்டி பசுஞ்சாணமிட்ட தரையின் ஓரங்களில் அதை பிழிந்து கரையிடுவார் . பிழிகையில் கருப்பாக இருக்கும் சாறு பின்னர் வெயிலேற ஏற அடர் ஊதா நிறத்தில் மிளிரும். பல வாரங்களுக்கு அந்த நீலக்கரை அப்படியே இருக்கும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ரசாயன உரங்களின் ஆதிக்கம் வந்திருக்காத, அந்த கிராமத்தில் அவுரிச்செடிகளை நிலத்திலிட்டு பசுந்தாள் உரமாக உழுவதையும் கவனித்திருக்கிறேன் அவுரிச்செடி நிலத்தில் இருக்கும் நஞ்சை நீக்கும் என்பதால் நிலவள மேம்பாட்டிலும் பெரிதும் பயன்பட்டது.

அப்போது கிராமங்களில்  கைகளால் நெய்யப்பட்டு  அவுரியின் நீலச் சாயமிடப்பட்ட பருத்தி துணி ஆடைகளே,.மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. . நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கு வந்ததாகவும் கிராமங்களில் இன்றைக்கும் சொல்லப்படுவதுண்டு.

  ஜீன்ஸ் என்றாலே நினைவுக்கு வரும் நீலநிறமும், தலைமுடிக்கு வீட்டிலேயே இப்போது நாம் தயாரித்துக் கொள்ள முடியும் ஆபத்தான வேதி சேர்மானங்களில்லாத இயற்கை சாயமும் கொடுப்பது அதே அவுரி என்கிற இண்டிகோ சாயத்தை அளிக்கும் Indigofera tinctoria செடிகள்தான் 

மூன்று முதன்மை நிறங்களான மஞ்சள், சிவப்பு மற்றும் நீலத்தில் மற்ற இரண்டு நிறங்களும் இயற்கையில் தாவர விலங்குகளிலிருந்து எளிதில் தயாரிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கையில், நீலநிறம் இண்டிகோவிலிருந்து மட்டுமே கிடைக்கின்றது.

 நீலி குறுஞ்செடி இந்தியாவின் தென்பகுதியிலும், வங்காளத்திலும் அதிகம் பயிராகிறது. இதற்கு வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. 

நீலியின் இண்டிகோ சாயம் மிக பழமையானது இந்த  நீலச்சாயம் கிருஸ்துவுக்கு  மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஜெர்மானிய இண்டிகோவான Isatis tinctoria என்னும் செடியிலிருந்து எடுக்கப்படும் வோட் (woad) எனப்படும். நீலச்சாயத்துக்கு  முன்னரே புழக்கத்தில் இருந்திருக்கிறது. அதைக்காட்டிலும் மிகுந்த அடர்த்தி கொண்ட நீலியின்  சாயமே அசல் இண்டிகோ சாயம் எனப்படுகின்றது.. உயர்ந்த  தரமும் நீடித்திருக்கும் தன்மையினாலும் நீலியின் சாயம் நீலத்தங்கமென்றும், சாயங்களின் அரசன் என்றும் உலகெங்கிலும் குறிப்பிடப்படுகிறது

 கடுகு குடும்பத்தை சேர்ந்த ஜெர்மானிய இண்டிகோதான் நீலிக்கு முன்னரே புழக்கத்தில் இருந்தது என்று வாதிடுவோர் உண்டு. இதற்கு ஆதாரமாக எகிப்தின் மம்மிகளை இறுக்கமாக சுற்றியிருக்கும் லினென் துணிகளில் நீலச்சாயத்தில் கரையிட்டிருப்பது சொல்லப்படுகின்றது. இந்த துணிகள் 2400 BC யை சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டிருக்கின்றன.

எகிப்தும் மெஸ்படோமியாவும் துருக்கிக்கு மிக அருகிலிருப்பவை, ஜெர்மானிய இண்டிகோ செடியின் பல சிற்றினங்கள்  துருக்கியை சேர்ந்தவை எனவே மம்மிகளின்  லினன் துணிகள் ஜெர்மானிய நீலத்தைதான் கொண்டிருக்கின்றன என்ற கருத்தும் வலுவாக  முன் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டு நீலச்சாயங்களும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாதவை என்பதால் இவ்விஷயம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே  இருக்கிறது.

 நீலியின் இண்டிகோ சாயத்தின் பயன்பாடு  வெண்கல காலத்தில், மிகப்பண்டையதும் 5 மில்லியன் மக்களை கொண்டதாகவும் இருந்த  சிந்து சமவெளி நாகரிகத்திலேயே  (கிமு 3300-1300) இருந்திருக்கிறது, அகழ்வாய்வில் கிடைத்த அவுரியின் விதைகளும், நீலச்சாயமிடப்பட்ட துணிகளும் 2500 -1700 BC சேர்ந்தவைகள் என கணக்கிடப்பட்டது.

 கிரேக்கர்கள் இந்த நீலச்சாயத்தை’’ இந்தியாவிலிருந்து வந்தது என்னும்’’ பொருளில் இண்டிக்கான் ‘indikon’, என்று குறிப்பிட்டார்கள். அந்தச் சொல் பின்னர் ஆங்கிலத்தில் ’இண்டிகோ’வானது (indigo). இச்செடியின் மற்றொரு பெயரான நீலி என்பது சமஸ்கிருதத்தில் அடர்நீலமென்பதை குறிக்கும் சொல்லாகும். இதிலிருந்தே அரபி மொழியின் நீல நிறத்தை குறிக்கும் அல்-நீல் என்னும் சொல்  உருவானது (al-nil). அரபி அல்- நீல் ஸ்பானிஷ் மொழியில் அநீல் ஆனது  (anil).  இவை அனைத்தும் குறிப்பது நீலி என்னும் இண்டிகோவின் நீலச்சாயத்தைத்தான்  ஸ்பானிஷ் அநில் என்பதிலிருந்துதான் செயற்கை சாயங்களை குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான அனிலின் (aniline) வந்தது.

 சிலுவை போர்களின் போது,கிழக்காசியாவில் இருந்து தருவிக்கப்பட்ட இண்டிகோ மத்திய கிழக்கு நாடுகளின்  சந்தைகளில் தாராளமாக புழங்கியதை இத்தாலிய வணிகர்கள்  முதன்முதலாக கவனித்தனர்

ஜெர்மனி உள்ளிட பல நாடுகள் இண்டிகோ ஒரு கனிமத்தாது என நினைத்து சுரங்கங்கள் தோண்டி இண்டிகோவை எடுக்கும் முயற்சிகளையும் துவங்கவிருந்தனர்.  1200’களில் ஆசியாவிலிருந்து திரும்பிய மார்க்கோபோலோ இண்டிகோ நீலச்சாயம் கனிமத்தாதுவிலிருந்தல்ல, ஒரு தாவரத்திலிருந்து  பெறப்படுகிறது என்பதை விவரித்தார்

 12’ம் நூற்றாண்டின் தீராப்பயணி பிளைனியும் இந்தியாவின் நீலச்சாயமான இண்டிகோ  தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது என்று அவரது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஐரோப்பாவில் அப்போது அவுரி விளையவில்லை . தொலைவு மற்றும் அதிக  விலை காரணமாக மிக குறைந்த அளவிலேயே அவுரியை  இறக்குமதி செய்ய முடிந்தால் ஐரோப்பாவில் விளைந்த வோட்’டில் இருந்த ஜெர்மானிய நீலமே அதிகம் பயன்பாட்டில் இருந்தது.

  1498 வில் இண்டிகோவை கடல்வழி பெறுவது எளிதென கண்டுபிடிக்கப்பட்ட போது இத்தாலியர்கள் பெருமளவில் இண்டிகோ பயிரை  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய துவங்கினர். அதற்கு முன்பு வரை அங்கு பயன்பாட்டிலிருந்த ஜெர்மனி நீலச்சாயமான வோட்’டை விட இந்திய இண்டிகோ சாயம் மிக உயர்தரமானதாயிருந்தது. இதனால் ஜெர்மனிய இண்டிகோ தயாரிப்பாளர்கள் தங்கள் தொழில் பாதிப்படைந்ததில் திகிலடைந்து இந்திய இண்டிகோ’வை ’’சாத்தானின் சாயம்’’ என்று குறிப்பிட துவங்கினர்.

15 ஆம் நூற்றாண்டில் வாஸ்கொடகாமா சீனாவிற்கு கடல்வழியை கண்டறிந்த பின்னர் இண்டிகோ நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டது. 1600’களில் மிக அதிக அளவில் இந்தியாவில் இண்டிகோ பயிர்கள் சாகுபடி செய்யபட்டபோதுதான் ஐரோப்பாவுக்கு நீலி ஏற்றுமதி வெகுவாக அதிகரித்தது. ஐரோப்பாவின் இண்டிகோ தேவைகளின் பொருட்டு இந்தியா, தென்னமரிக்கா, மற்றும் ஜமைக்காவில் அதிக அளவில் அவுரி  சாகுபடி செய்யப்பட்டது.

இண்டிகோவின் நீலக்கறை இந்திய வரலாற்றிலும் அழுத்தமாக படிந்திருக்கிறது.

பிரிட்டிஷார் இந்தியாவில் கால்பதித்த போது முதன்முதலாக அவர்கள் விலைமதிப்பு மிக்க இந்தியப்பொருளாக கவனித்தது  இண்டிகோ பயிரான நீலியைத்தான். அப்போது முதல்தரமான நீலி வடகிழக்கு ஆக்ராவில் விளைந்தது

இண்டிகோ நீலச்சாயம் ராணுவ சீருடைகளிலிருந்து அரசியின் படுக்கை விரிப்புக்கள் வரை அனைத்துரக துணிகளையும் சாயமேற்றியது .ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகள் காலம் காலமாக பயிரிட்டுக்கொண்டிருந்த  உணவுப்பயிர் வகைகளை பயிரிட அனுமதி மறுத்து, தங்கள் சுயலாபத்திற்காக கட்டாயப்படுத்தி பயிரிடச் செய்த பயிர்வகைகளில் அவுரியும் ஒன்று

 வங்காளத்தில், ஆங்கிலேயர்கள் ஜமீன்தார்கள் மூலம் அவுரி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகள் அனைவரையும் வற்புறுத்தினார்கள். மிகப்பெரிய சுரண்டலுக்கு ஆளான வங்காள விவசாயிகளால் அவுரி ஏராளமாக பயிரடப்பட்டு,  19 ஆம் நூற்றாண்டில், வங்காளம் உலகிலேயே மிகப்பெரிய இண்டிகோ உற்பத்தியாளர் என்று பெயர் பெற்றது. ஆனால் உலக சந்தையின் இண்டிகோ லாபத்தில் வங்காள விவசாயிகளுக்கு வெறும் 2.5 சதவீதம்தான் கொடுக்கப்பட்டது. மேலும் சாயத்தொழிற்சாலை முதலாளிகளும், அரசாங்க அதிகாரிகளும் கூடுதல் உழைப்பிற்காக விவசாயிகளை துன்புறுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது

 1848’ல் வங்காளத்தில் ஃபரித்பூரின் நீதிபதியான ஆங்கிலேயர் இ.டி.லதூர்,   “இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வொரு இண்டிகோ சாயப்பெட்டியின் மேலும், மனித இரத்தக் கறை படிந்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார்..

. 1858-59’ ல் அவுரி சாகுபடி செய்யச் சொல்லி பிரிட்டிஷாரால் கட்டாயப்படுத்தப்படும் இந்திய விவசாயிகளின் கண்ணீரை சொல்லுவதாக அமைந்த ’’நீலக்கண்ணாடி’’ என்று பொருள்படும் ’’நீல்தர்பன்’’ என்னும் பெயரிலான புகழ்பெற்ற வங்காள  நாடகாசிரியர்  தினபந்து மித்ரா’வின் நாடகம் வங்காளத்தில் பெரும்புகழும், அதற்கிணையான எதிர்ப்பையும் பெற்றது. பிரிட்டிஷ் அரசால் இந்த நாடகம், இதே பெயரிலான நூல்,  அதன் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. கிறித்துவ போதகரான டாக்டர் லாங் இந்த நாடகத்தை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தற்காக  சிறைத்தண்டனை பெற்றார்.

 பிரபல வங்காள நாடகாசிரியரும், எழுத்தாளரும், நடிகரும், இயக்குநருமான கிரீஷ் சந்திர போஸ் தனது  நேஷனல் தியேட்டர் என்னும் நாடக நிறுவனத்தின் மூலம் நீலக்கண்ணாடியை வங்காளத்தின் மூலை முடுக்குகளிலும் டெல்லி மற்றும் லக்னோவிலும்  காட்டினார்.  

விவசாயிகளின் .நிலைமை மிகவும் மோசமானபோது 1859-60 ல் இண்டிகோ புரட்சி 1 எனப்படும் பெரும் புரட்சி வெடித்தது . அப்புரட்சியை பிரிடிஷ் அரசு மிக கொடூரமாக அடக்க முயன்றது. 49 கொலைகள், கால்நடைகளும் மனிதர்களும் கடத்தப்பட்டது, பிற பயிர்கள் எரியூட்டப்பட்டது என பல கொடுமைகளுக்கும், வறுமை, அடக்குமுறை ,வன்முறை போன்ற பல இன்னல்களுக்கும் இடையில் போராட்டம் தொடர்ந்து நடந்தது. 

பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் விவசாயிகளுக்கு முழுஆதரவளித்தார்கள். 

 அரசு தலையிட்டு இந்த புரட்சிக்கு காரணமானவற்றிற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.  விசாரணைக்குழு இறுதி அறிக்கையில் பல அநீதிகள் விவசாயிகளுக்கு இண்டிகோ பயிரிடுவதில் நடந்திருப்பதை உறுதி செய்தது..

  போராட்டம் வெற்றி பெற்று,   விவசாயிகளை அவுரி பயிரிட கட்டாயப்படுத்தக்கூடாது என்னும் தீர்ப்பும் அறிவிக்கபட்டது. இண்டிகோ சாயத்தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 1860 களுக்கு பிறகு அவுரிசாகுபடி வெகுவாக வங்காளத்தில் குறைந்தது. இந்த  போராட்டத்துக்கு நீலக்கண்ணாடி நாடகம் அடித்தளமாக இருந்தது 

பல வருடங்களுக்கு பிறகு இதே இண்டிகோ சாகுபடி பிரச்சனை பீகாரிலும் உருவானது.

 1813’லிருந்து பீஹாரில் இண்டிகோ தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன.  1850’லிருந்து பிற உணவுப்பயிர்கள் ஏதும் பயிரிடமுடியாமல், நிலமற்ற ஏழை விவசாயிகளும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் காலனிய அரசின் கட்டாயத்தின் பேரில் அவுரியை பயிரிட்டு வந்தனர்.   

 அறுவடை செய்த அவுரிச்செடியினை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணையார்களுக்கு விற்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். 1910’களில் இம்மாவட்டத்தில் பஞ்சம் எற்படும் நிலை உருவானபோதும் விவசாயிகளில் துன்பங்களைப் பொருட்படுத்தாத காலனிய அரசு அவர்கள் விற்கும் அவுரி மீது ஒரு புதிய வரிகளை விதித்தும், அடிக்கடி அவ்வரி விகிதத்தை அதிகரித்தும் வந்தது.

 இதனால் 1910’ல்  அரசுக்கு எதிராக கலகங்கள்  துவங்கின. தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915’ல் இந்தியா திரும்பியிருந்த காந்தியின் கவனத்துக்கு 1917’ல் பீகாரின்  சம்பரண் கிராமத்து விவசாயிகளின் நிலை கொண்டு செல்லப்பட்டது. நேரடியாக சம்பரண் வந்த காந்தி அங்கு ஆசிரமம் ஒன்றை நிறுவி அப்பகுதி மக்களின் குறைகளை விரிவாகக் கேட்டறிந்தார். 

சம்பரண் மக்களை  ஒன்றிணைத்து அரசுக்கு வரி கொடாமல் அறவழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுமாறு காந்தி ஊக்குவித்தார். போராட்டம் வலுவடைந்தது. அறவழி போராட்டத்தை காந்தி  தொடர்ந்து நடத்தியதால், போராட்டக்காரர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட பண்ணையார்கள் இறங்கி வந்து விவசாயிகளுடன் பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூலும், வரி விகித உயர்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக உடன்படிக்கை செய்து கொண்டனர். அவுரி பயிரிடுவோருக்கு அதிக விலை கொடுப்பதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தின் போதுதான் காந்தி முதன்முதலில் “பாபூ” என்றும் “மகாத்மா” என்றும் அழைக்கப்பட்டார்.

 ஒரு நூற்றாண்டு தொடர்ந்த இந்த சுரண்டலை மகாத்மா காந்தி அறவழியிலேயே முற்றிலும் ஒழித்தார்..தனது சுயசரிதையில் இந்த வெற்றி குறித்து ’”இண்டிகோவின் நீலக்கறையை போக்கவே முடியாதென்னும் மூடநம்பிக்கையை இவ்வாறாக முற்றிலும் பொய்யாகி கறையை அழித்தோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.2  

மிக அதிகவிலை கொண்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட இண்டிகோவிலிருந்து நீலச்சாய்மேற்றப்பட்ட உடைகள் துவக்க காலத்தில் அரச குடும்பத்தினர்களுக்கும்  செல்வந்தர்களுக்கும் மட்டுமேயாயிருந்தது. அப்போதுதான் இதற்கு மாற்றாக அதே போலிருக்கும் மலிவான நீலச்சாயமளிக்கும் ஜெர்மானிய இண்டிகோ சாகுபடி ஐரோப்பாவில்  உருவாகியது. ஐரோப்பிய காலநிலை ஜெர்மானிய இண்டிகோ விளைச்சலுக்கு ஏற்றதாகவும் இருந்தது.

நிறத்தில் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லாவிட்டாலும் ஜெர்மனிய இண்டிகோ சாயம் அப்போது போலி இண்டிகோ என்றும்  அழைக்கப்பட்டது .இந்த .செடியிலிருந்து சாயமுண்டாக்குதல் அசல் இண்டிகோவுக்கு நிகரான நேரத்தையும் உழைப்பையும் பொருட்செலவும் கொண்டிருந்தாலும் கிடைத்த சாயத்தின் அளவு  இதில் மிக குறைவாகவே இருந்தது அசல் இண்டிகோவிற்கு இணையான தாவரங்களின் தேடுதல் அப்போது பல நாடுகளில் மும்முரமாக நடந்தது. 

போலி என்றறியப்பட்டாலும் ஜெர்மானிய இண்டிகோவின் சந்தையும் மிகபிரபலமாயிருந்தது. இண்டிகோ நீலச்சாயமிட்ட துணிகளின் தேவை உலகளவில் வெகு அதிகமாந்தானதாகவே இருந்ததால் இந்த பயிரின் சாகுபடியும் அசல் இண்டிகோ பயிருக்கு இணையாகவே இருந்து வந்தது

17ம் நூற்றாண்டு வரை நீலியுடன் வோட்’டும் புழக்கத்தில் இருந்து வந்தது. நீலி இண்டிகோவின் விலை மிகவும் குறைந்த போது தான். ஜெர்மானிய இண்டிகோவின் பயன்பாடு முற்றிலுமாக நின்று போனது. நீலியின் சாயம் பல நேரடி மற்றும் மறைமுக வணிக போர்களுக்கும் காரணமாயிருந்தது. பல பேரரசுகளை நீலி வளமாக்கியும் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட இண்டிகோ செடி சாகுபடி செய்யப்பட்ட பல  நாடுகளில்  இதன் நீலக்கறை  மிக அழுத்தமாக  படிந்து இருக்கிறது.

அமெரிக்காவில் 1744ல் எலிஸா லூகாஸ் எனும் பெண் அவரது சொந்த பண்ணையில் இண்டிகோ பயிரை  முதன்முதலில் சாகுபடி செய்தார். 3

இத்தாலியின் பெரிய நகரங்களில் ஒன்றான ஜெனோவா (Genoa)   இந்த நீல துணிகளுக்கான மிகப்பெரிய சந்தையை கொண்டிருந்தது. இந்நகரின் விற்பனையாளர்கள் ஐரோப்பாவின் அனைத்து இண்டிகோ சாயதொழிற்சாலைகளுடனும் வர்த்தக தொடர்பில் இருந்தார்கள் அக்காலகட்டத்தில்  மீனவர்கள், சுரங்க மற்றும் துறைமுக தொழிலாளிகளின் வசதிக்கும், பிரியத்துக்குமுரிய உடையாக  அதிகம் துவைக்க வேண்டியிருக்காத,  நீண்ட நாள் உழைக்கும் இண்டிகோ நீலச்சாயமிட்ட முரட்டுத் துணிகளில் தைக்கப்பட்ட உடைகள் இருந்தன.

 அங்கு ஃப்ரெஞ்ச் மொழியும் பரவலாக பேசப்பட்டு கொண்டிருந்ததால் இந்த முரட்டு துணியாலான  நீல உடைகள் அனைவராலும் Bleu de Gênes  -ஜெனோவாவின் நீல உடை என்றழைக்கப்பட்டது, அதுவே  ஆங்கிலத்தில்  ஜீன்ஸ் ஆனது. 

இந்த நீல துணி ஃப்ரெஞ்ச் நகரின் மிக பிரபலமான  நெசவாளர்களின் நகரமான  நிம்ஸ்’க்கு வந்து சேர்ந்தது (Nîmes).  அத்துணியை சாயமேற்றுவதில் பல கட்ட சோதனை முயற்சிகளுக்கு பின்னர் நிம்ஸ் நெசவாளர்கள் கம்பளி மற்றும் பட்டின் இழைகளை இணைத்து இரண்டு தனித்துவமான பரப்புகளைக் கொண்ட ஒரு துணியை உருவாக்கினர். இருவிதமான இழைகளின் இணைப்பில் உருவான அவ்வுடையின் நெடுக்கில் இருக்கும் இழைகள் இண்டிகோவின்  நீலத்திலும். குறுக்கு இழைகள் வெள்ளையாகவும் சாயமேற்றப்பட்டன. இத்துணிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஜீன்ஸ்கள் பிரத்யேகமாக வெளிப்புறம் நீலத்திலும்,  வெள்ளை அல்லது மங்கிய    நீலம் உட்புறமாகவும் இருந்தது. வெகு விரைவில் பிரபலமான இந்த ஜீன்ஸ்களின் ஃப்ரெஞ்ச் மொழியில் அந்நகரின் பெயரில்  de Nîmes என்றழைக்கபட்டது. அதுவே ஆங்கிலத்தில்  டெனிம்- denim எனப்பட்டது.

 டெனிம் ஜீன்ஸ்களின் வரவுக்கு பிறகு இண்டிகோ சாயமிட்ட உடைகள் சமூகத்தின் உயரடுக்கை சேர்ந்தவர்களுக்கு மட்டுமேயானவை என்பதிலிருந்து உழைக்கும் மக்களின் உடையாகவும் ஆனது .தோராயமாக ஒரு டெனிம் ஜீன்ஸ் தயாரிக்க 3 கிராமிலிருந்து 12 கிராம் வரை இண்டிகோ சாயம் தேவைப்பட்டது. 

 ஐரோப்பாவின் தொழில்புரட்சியும் அமெரிக்காவின்  செல்வச்செழிப்பு மாக  உழைக்கும் வர்க்கத்தினருக்கான தேவை மிக அதிகரித்து,  இயற்கை சாய உற்பத்தியின் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டதால்  விலை மலிவான, செயற்கை நீலச்சாயங்களுக்கான முன்னெடுப்புக்கள் பல நாடுகளில் வேகமாக துவங்கப்பட்டன 

1870’ல் ஜெர்மனியின் வேதியியலாளர் அடோல்ப் வான் பேயர் செயற்கை இண்டிகோ சாயத்தை  ஐசட்டின் (isatin) என்னும் ஒரு கரிமப்பொருளில் இருந்து உருவாக்கினார் .எட்டு வருடங்கள் தொடர்ந்த ஆராய்ச்சிக்கு பிறகு அவரே பினைல் அசிட்டிக் அமிலத்திலிருந்தும் பின்னர்  சின்னமிக் அமிலத்திலிருந்தும் செயற்கை இண்டிகோவை வெற்றிகரமாக உருவாக்கி, தயாரிப்பின் சூத்திரங்களை ஜெர்மன் நிறுவனமான  BASF ற்கு 1897ல் விற்றார்

 1902 ற்குள் மெல்ல மெல்ல இயற்கை இண்டிகோவின் இடத்தை செயற்கை இண்டிகோ பிடித்துக் கொண்டது.செயற்கை நீலச்சாயம் கிலோ 400 ரூபாய்களுக்கு சந்தைப்படுத்தப்பட்டபோது 3000 ரூபாய்களுக்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்த இயற்கைச்சாயம் அதனோடு போட்டிபோட முடியாமல் பின்வாங்கியது,. மேலும் இயற்கை, செயற்கை சாய்ங்களுக்கான வேறுபாடென்பதும் பயனாளிகளால் கண்டறிய முடியாதபோது இயற்கை சாயத்துக்கான தேவை முற்றிலுமாக  இல்லாமலானது.அடுத்த இருபது ஆண்டுகளில் இந்திய இயற்கை இண்டிகோ தொழில்துறை பெரும்பாலும்  அழிந்தது.

 இப்போது இயற்கை இண்டிகோ சாய்த்தொழிலில் அரிதாக சில நாடுகளே ஈடுபட்டிருக்கின்றன. பிரேசில், இந்தோனேசியா மற்றும் இந்தியாவில்  குடும்ப தொழிலாக வெகுசிலரே இந்த சாய முறையில் துணிகளுக்கு சாயமேற்றுகிறார்கள். அனைத்து டெனிம் ஜீன்ஸ்களும் செயற்கை நீலச்சாயமிட்டே தயாரிக்கப்படுகின்றன.  

பட்டாணிக்குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த இன்டிகோஃபெரா டிங்டோரியா குறுஞ்செடியானது முட்டை வடிவ அடர் பச்சை நிற  கூட்டிலைகளையும் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களை கொத்துக்கொத்தாகவும்  கொண்டிருக்கும். இதன் பச்சை இலைகளில் இருந்து தான் நாற்றமடிக்கும், நொதித்தல் அல்லது புளித்தல்   என்னும் விரிவான செயல்பாட்டுக்கு பிறகு நீலச்சாயம் பெறப்படுகின்றது. இன்டிகோபெரா பேரினத்தின் 50 வகைகள் இந்தியாவில் வளர்கின்றன.

அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமாகவும், காய்கள் முதிர்ச்சி அடையும் போது கருப்பு நிறமாகவும் இருக்கும்    இச்செடி எங்கிருந்து தோன்றியது என்பதில் தாவரவியலாளர்களுக்கே குழப்பம் நீடிக்கின்றது  எனினும் இது ஆப்பிரிகாவை அல்லது இந்தியாவை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அறிவியல் பெயரான Indigofera tinctoria விற்கான   இணைப்பெயர்  Indigofera  sumatrana. இதன் பேரினப்பெயரான Indigo fera என்பது ’’இண்டிகோவை கொண்டிருக்கும்’’ என்றும் டிங்டோரியா என்றால் ’’சாயம்’’ என்றும் பொருள். தாவர அறிவியல் பெயர்களில்  fera என்பது அளிக்கும், கொடுக்கும், வைத்திருக்கும், கொண்டிருக்கும் என்னும் பொருளிலும் tinctoria என்பது சாயத்தையும் (Dye) குறிக்கும். பல சாயத்தாவரங்கள்  டிங்டோரியா என்னும் சிற்றினப் பெயரை கொண்டிருக்கும்,  திராட்சைக்கொடி, மாமரம் போன்ற பலவற்றின் அறிவியல் பெயர்களைப்போல பெரா என்று முடியும் சிற்றின பெயர்களையும் ஏராளமாக காணலாம்.(Mangifera indica, Vitis vinifera).

18’ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  இண்டிகோ செடிகளை நொதிக்க வைக்கும் வழிமுறைகள் குறித்த விரிவான பல பதிவுகள் கிடைத்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக அடிப்படையில் எந்த மாற்றமுமின்றி  இயற்கைசாயம் உருவாக்கும் நாடுகளில் இந்த நொதித்தல் முறை தான் இன்றும் பின்பற்றப்படுகின்றது.  

அவுரி செடிகள் மலர்வதற்கு சற்று முன்பாக, செடி சுமார் 10 செமி உயரம் இருக்கையில் அறுவடை செய்யப்பட வேண்டும், அப்போதுதான் சாயத்தின் அளவு கூடுதலாக இருக்கும் அறுவடை செய்யப்பட்ட செடிகள் மூன்று மணி நேரத்துக்குள் நொதித்தல் நடைபெறும் பெரிய   தொட்டிகளுக்கு வந்து சேர வேண்டும்.

 பின்னர் செடிகளின் இலைகள் தொட்டி நீரில் அமிழ்த்தப்படுகின்றன. செடி நீரில் மிதக்காமல் இருக்க, மரத்துடுப்புகளால் மீண்டும் மீண்டும்  அவை அழுத்தப்படும்.   .

1 மணி நேரத்தில் இலைகள் அகற்றப்பட்டு கரைசல் மட்டும் இரண்டாம் தொட்டிக்கு மாற்றப்படுகின்றது. இலைகளில் இருக்கும் நீல நிறமி குளுகோஸிலிருந்து பிரிந்து வரும் வரை நீரில் இலைகள் ஊறி நொதிக்க வேண்டும்.  21 மணி நேர புளித்தல் அல்லது  நொதித்தலுக்கு பிறகு நாற்றமடிக்கும் கரைசல் வடிகட்டப்பட்டு மேலும் தெளிவாக்கப்பட்டு மற்றொரு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. இப்படி புளிக்க/நொதிக்க  வைப்பதால் அதில் உள்ள கிளைகோசைட் இண்டிகான் (glycoside indican) என்னும் பொருள் இண்டிகோட்டின் (indigotin) என்னும் நீலச்சாயமாக மாறுகின்றது.  

இந்த மூன்றாவது தொட்டியில் சேமிக்கப்படும் நீரிலிருந்து நீல நிறமிகள் தொட்டியின் அடியில் படிகின்றது. படிந்திருக்கும் நீலக்குழம்பும், தெளிந்த நீரும் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.  நீலக்குழம்பு செங்கல் சூளைகளில்  கொதிக்க வைக்கப்பட்டு,  களிமண்ணை போல தொட்டியின் அடியில் படிந்திருக்கும் குழம்பு வெயிலில் உலர்ந்தபின்னர் கட்டிகளாக்கப்படும்.. இதுவே இண்டிகோ நீலச்சாயம்.

இண்டிகோ நீலமானது பிற சாயங்களிலிருந்து நீரில் கரையாத தன்மையால் வேறுபடுகிறது. எனவே  முதலில் ஒடுக்க வினைகளால் (Reduction) கரைக்கும் தன்மைக்கு   கரைசலை கொண்டு வந்து,  பின்னர்  ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டு நீல நிறம் கொண்டு வரப்படுகின்றது.   காற்று, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் இலைகளில் இருக்கும் இண்டிகோ நிறமியின் அளவு இவையனைத்தும் சரியாக அமைகையில் இந்த  நிறமாற்றம் நிகழ்கிறது.

 இலைகள் அகற்றப்பட்ட  மரகதப்பச்சை கரைசல் காற்றுடன் வினை புரிகையில், மாயம் போல அழகிய அடர்  நீல நிறம் உண்டாகிறது  200 கிலோ நீலி இலைகளிலிருந்து 1 கிலோ சாயம் கிடைக்கும். இண்டிகோவின் மற்றொரு பிரெத்யேக இயல்பு, அது சாயமிடப்படும் துணியின் மேற்பரப்பில் மட்டும் தங்குகிறது என்பதுதான்.

 அசல் இண்டிகோவின் நீலச்சாயத்தில் சாயமேற்ற வேண்டிய துணியை மீண்டும் மீண்டும் பலமுறை அமிழ்த்தியும் உலரவும் செய்த பின்னர்தான்  தேவையான அளவில் துணியில் இண்டிகோவின் பிரத்யேக  நீலச்சாயம் ஏற்றப்படுகின்றது.  

இண்டிகோ நொதித்தலானது கவனமுடன் செய்யப்படாவிட்டால் எளிதில் பிழையாகும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல இடங்களிலும், இந்தோனேசியாவிலும் இண்டிகோ சாயமுண்டாக்குதலென்பது புனிதமானதாக கருதப்பட்டு, பல சடங்குகளுக்கு பின்னர் நடைபெறுகிறது. 

இந்திய கிராமங்களில் சாயத்தொட்டிகளில் செடிகளை போடும் முன்பு  வழிபாடுகள்  நடக்கும். ஆண்களை விலக்கிவிட்டு பல சாயத்தொழிற்சாலைகளில் பெண்கள் மட்டும் சாயத்தை கையாளுகிறார்கள் நீலச்சாய தொட்டிகளை ஆண்கள் பார்க்க கூடாதென்னும் விதிகள் கூட இருக்கின்றன.

முற்றிலும் மாறாக நீல அம்மன் பெண்களை சாயமுண்டாக்க அனுமதிக்கமாட்டாள் என்னும் நம்பிக்கை இருக்கும் பல பகுதிகளில் சாயத்தொட்டிகளில் ஆண்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.

.இண்டிகோ விவசாயமும் சாய உற்பத்தியும் பிரதானமாக இருக்கும் இந்திய கிராமங்களில் பிறந்த குழந்தையை இண்டிகோ நீலச்சாயமுள்ள துணியில் முதன்முதலில் படுக்க வைப்பது அக்குழந்தையை நோயிலிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் காப்பாற்றுமென்னும் நம்பிக்கையும் உள்ளது. 

 புராதனமான இந்த சாயமேற்றும்  முறை மட்டுமல்லாது ’’நேரடி சாயமேற்றுதல்’’ என்னும் பிறிதொரு  முறையும் ஐரோப்பிய மற்றும் தென் தமிழக பகுதிகளில் புழக்கத்தில் இருக்கிறது. இம்முறையில் அவுரி இலை விழுதுடன் சுண்ணாம்பும், மாவுச்சத்தும் , நிறமிக்கு நீரில் கரையும் தன்மையை உருவாக்கும் ஆர்பிமெண்ட் எனப்படும் (Orpiment) எரிமலைக்குழம்பு அல்லது கொதிநீரூற்றுக்களின் வண்டலிலிருந்து கிடைக்கும் பொன்மஞ்சள் நிறமான  கனிமத்தாதுவையும் கலந்து  பசை போலாக்கி நேரடியாக துணிகளில் பிரஷ்மூலம் தேய்க்கப்பட்டு சாயமேற்றப்படும்..17, 18 ஆம் நூற்றாண்டுகளில் பரவலாக நடைமுறையில் இருந்த இம்முறை  தொட்டிச்சாய முறையை போல (vatting) பிரபலமாகாமல்  அப்படியே வழக்கொழிந்துபோனது. மிகச்சில இடங்களில் இப்போதும் இது புழக்கத்தில் இருக்கிறது

 மிகை சாயமேற்றும் இந்தோனேசிய முறையில் இண்டிகோவுடன் நோனி (Morinda citrifolia) மரவேர்களும் சேர்க்கப்பட்டு ஆழ் நீலசாயமுண்டாக்கபட்டது.  1980 களுக்கு பிறகு நோனி வேர்களுக்கு மாற்றாக நேப்தால் சாயம் சேர்க்கப்பட்டது. செயற்கை சாயங்களின்  காலம் துவங்கியதை இந்த நேப்தால் சேர்ப்பு முன்னறிவித்ததென்று கூட  சொல்லலாம்.  நீல சாயமேற்றும் எந்த நாட்டிலும் நோனி வேர்கள் இப்போது பயன்பாட்டில் இல்லை 

 கிழக்கு ஆசியாவின்  Polygonum tinctorium, மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்காவில் அனீல் என்றழைக்கப்படும் செடியான Indigofera suffruticosa  மற்றும் இந்தியாவின் நடால் இண்டிகோ எனப்படும்  Indigofera arrecta, ஆகியவையும் இயற்கை இண்டிகோ நீலச்சாயத்தைபோலவே சாயங்களை அளிக்கும்.  ஆனால் இவற்றிலிருந்து  அவுரியிலிருந்து கிடைப்பதை போலல்லாது மிக குறைந்த அளவே சாயம் கிடைக்கும்.

 Murex brandaris எனப்படும் கடல் நத்தைகளின் சுரப்பிகளிலிருந்து இயற்கை இண்டிகோவின் அதே நீல நிறத்தில் சாயம் எடுக்கப்படுகின்றது இதற்கு டைரியன் ஊதா என்று பெயர் (Tyrian purple) ,இந்த சாயம் இதுவரை செயற்கையாக தயாரிக்கப்படவில்லை

,ஜப்பான் மற்றும் தாய்வானில்  இண்டிகோவுக்கு  இணையான நீலச்சாயத்தை கனகாம்பர குடும்பத்தை சேர்ந்த Strobilanthes cusia என்னும் செடியிலிருந்து எடுக்கிறார்கள்.  100 வயதிற்கு மேற்பட்ட ஜப்பானியர்கள் அதிகமாக வாழும், மிக பிரத்யேகமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றும் ஒகினாவா தீவின்  உலக பிரசித்தி பெற்ற நீல கைக்குட்டைகள்  இந்த செடியின் இயற்கை நீலத்தில் தான் சாயமிடப்படுகின்றன.4

சமீபகாலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் உத்ரகாண்டில் மீண்டும் நீலி சாகுபடி துவங்கப்பட்டிருக்கிறது உத்ரகாண்டில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீலியை சாகுபடி செய்துகொண்டிருக்கின்றனர்.  இந்தப்குதிகளில் உணவுப்பயிர்களின் சாகுபடியில் எந்த மாற்றமும் இல்லாமல் தரிசுநிலங்களில் மட்டும் நீலி பயிராகின்றது 

 இயற்கை இண்டிகோவின் தேவை வெகுவாக குறைந்துவிட்டிருப்பினும், மருத்துவம், உணவுமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் இயற்கை வழிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் மீண்டும் இயற்கை இண்டிகோ தொழில் மலரும் வாய்ப்பும் இருக்கிறது. நீலிச்சாயமுண்டாக்கும் இந்தியாவின் பாரம்பரிய அறிவு பாதுகாக்கப்பட வேண்டியது மட்டுமல்ல  புதிய தலைமுறைகள் அறிந்துகொள்ள வேண்டியதும் கூட.

  நவீன செயற்கை சாயங்களினால் உருவாகி இருக்கும் சூழல்மாசு மற்றும் அதிகரித்திருக்கும் நோய்களை எண்ணிப்பார்க்கையில்   நமது  சூழலையும், பாரம்பரியத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க நீலி சாகுபடியை அதிகரித்து, இயற்கை நீலச்சாய பயன்பாட்டுக்கு திரும்புவதே உகந்தது.

மேலதிக தகவல்களுக்கு:

  1. Indigo Revolt in Bengal | INDIAN CULTURE
  2. Gandhi’s Satyagraha in Champaran | INDIAN CULTURE 
  3. Eliza Lucas Pinckney | Encyclopedia.com
  4. https://japanobjects.com/features/indigo

One Reply to “நீலி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.