கி ரா : நினைவுகள்

This entry is part 1 of 10 in the series கி.ரா. - அ.ரா.

முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அண்மையில் – 2021 மே, 17 நள்ளிரவில் மரணம் அடைந்தார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். தமிழக அரசின் விருதுகளையும் தனியார் விருதுகளையும் பெற்றதோடு, கோயில்பட்டியைச் சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்து புதிய எழுத்தாளர்கள் உருவாகக் காரணமானவர். அவரது முயற்சியால் தமிழில் கரிசல் இலக்கியம் என்னும் வட்டார எழுத்து முழுமை பெற்றது.

பள்ளிப்படிப்பில் இடைநின்ற – ஏழாம் வகுப்பில் படிப்பை நிறுத்திய கி.ரா.  மக்களையும் அவர்களது மொழியையும் அதில் உருவாக்கப்படும் கதைகளையும் தன்னெழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் கற்று, மக்களுக்கே திரும்பித்தந்தவர்.  அவரது மேதமையைக் கண்டு, புதுவை மையப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புநிலைப் பேராசிரியராக அழைத்துப் பதவியில் அமர்த்தினார்.  அவரது 68 வது வயதில் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் புதுச்சேரிக்குப் போன கரிசல் காட்டு விவசாயியும் எழுத்தாளருமான கி.ரா. தனது வாழ்க்கையின் இறுதி நாள் வரை அங்கேயே தங்கிவிட்டார். நாவல், சிறுகதை என்னும் இருவகைப் புனைகதை வடிவத்திலும் சிறப்பான படைப்புகளைத் தந்த கி.ரா. கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதி ஒன்றைத் தயாரித்து முன்னோடியாகத் திகழ்ந்தார். அதுபோலப் பெண்களின் அந்தரங்கத்தைச் சொல்லும் பெண்மனம் என்னும் தொகுப்பையும் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று நாட்டார் பாலியல் கதைத்தொகுப்பும் அவரது சாதனைகள். அவரது எழுத்துகள் அனைத்தையும் அன்னம் பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்ட து.  

கி.ராஜநாராயணனின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட மாணவரான அ.ராமசாமி, தொடர்ந்து அவரது நண்பரானார். புதுச்சேரியில் அவரது வருகையின்போது அங்கு பணியாற்றிய பேரா அ.ராமசாமி, அவரின் 40 ஆண்டுகால நண்பர். தனது மதிப்பிற்குரிய எழுத்தாளரும் நண்பருமான கி.ரா.வின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாத கரோனா சூழலால், அவரோடு கொண்ட நட்பை நினைவுக்குறிப்புகளாகத் தருகிறார். 

1 .

இரண்டாமாண்டு பட்டப்படிப்பில் சிறுகதை வகுப்பு. பேரா.சுதானந்தா வட்டார இலக்கியம் என்ற வகைமைப்பாட்டை விளக்கிச் சொல்லிவிட்டு “ கதவு” கதையை வகுப்பிலேயே வாசிக்கச் சொன்னார். வகுப்பு முடியும்போது நமது துறை நூலகத்தில் அவரது நூல்கள் உள்ளன. இன்று மாலை திறந்திருக்கும். விரும்புபவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றார். 

மாலை துறைநூலகத்திலிருந்து நான் கோபல்ல கிராமத்தை – வாசகர் வட்டம் வெளியீடு – எடுத்துக்கொண்டேன்.

2

இளங்கலையில் முதல் இடம் பிடித்ததற்காக அந்த ஆண்டு கல்லூரி விழாவில் பரிசு கொடுப்பார்கள். மீனாட்சி புத்தக நிலையம் சென்று 30 ரூபாய்க்குள் நூல்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார் பேரா.கி.இளங்கோ. அதற்கான ஒரு சீட்டும் கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டுபோய் கிராவின் கிடை, பூமணியின் ரீதி, ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் வாங்கிக் கொண்டுவந்தேன். எனக்கேயான புத்தகங்கள் என்று வாங்கிய முதல் மூன்று புத்தகங்கள் அவை

3

கோபல்ல கிராமம் நாவலை வாசித்துவிட்டு இடம்பெயர்ந்து வரும் கூட்டம் ஓரிடத்தில் தங்கி இறந்துபோன தங்கள் குடும்பத்துப் பெண்ணைத் தெய்வமாக வழிபடத்தொடங்கினார்கள் என்ற கதையை வாசித்தபோது, அதே கதையை எனது பெரியம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அந்தப் பெண்ணின் பெயர் மட்டுமே மாறியிருந்தது. அவளைத் தான் அம்மாவின் குடும்பம் குலதெய்வமாக வழிபடுகிறார்கள் என்றும் தெரிய வந்தது. 

பெரியம்மா சொன்ன கதை உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டு ஒரு அஞ்சல் அட்டை எழுதிப்போட்டேன் கி.ரா.வுக்கு. மதுரைக்கு வரும்போது சொல்கிறேன். நேரில் பேசலாம் என்று பதில் எழுதிப் போட்டிருந்தார். அவரது கையெழுத்து அவ்வளவு அழகாக இருந்தது.

4.

அந்தக் கடிதம் கலை இலக்கியப் பெருமன்றத்தின் கூட்டத்திற்கான அழைப்பு. முதுகலை சேர்ந்து ஒருமாதமாகியிருக்கும். அப்போது எம்பில் படிப்பில் இருந்த ந.முருகேசபாண்டியன், எனக்கு வந்த கடிதம் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு விசாரித்தார். நவீன இலக்கியமெல்லாம் வாசிப்பீங்களோ ? இளவல்களைக் கிண்டல் செய்யும் விசாரிப்பு என்று நினைத்துக்கொண்டு பயத்துடன், ‘ஆமாம்’ என்றேன். 

நீங்கள் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது? என்ற கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ”கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் ” என நான் சொன்ன போது எனக்கு வயது 21. நிகழ்கால அரசியல், பொருளாதாரச் சமூகச் சிக்கல்களைப் பேசும் விதமாகப் பாத்திரங்களை உருவாக்கி, அவற்றின் உளவியல் ஆழங்களுக்குள் செல்வதன் மூலம் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்லும் தன்மையிலான எழுத்தே சிறந்த எழுத்து எனவும், நாவல் என்னும் விரிந்த பரப்பில் தான் அதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும், நான் படித்திருந்த இலக்கியத் திறனாய்வு நூல்களும் சொல்லியிருந்தன. அதையே அவரிடம் சொன்னேன். அவர் அதை ஏற்றுக் கொண்டதாகத் தோன்றவில்லை; என்றாலும் நண்பர்கள் ஆனோம். இரண்டு ஆண்டு வயது வித்தியாசம் மறந்துபோனது

5

அன்னம் பதிப்பகத்தின் நூல்களை விற்பனை செய்வதற்கான கடையொன்றை மதுரையில் தொடங்கினார் கவி.மீரா. கடை முதல் மாடியில் இருந்தது. உட்கார்ந்து பேச இடமுண்டு. அங்கு பொறுப்பாளராக இருந்தவர் எங்களின் அமெரிக்கன் கல்லூரி மாணவர். யுவன் சந்திரசேகர் வகுப்புத்தோழர். இருபதில் இருந்த இலக்கியவாசகர்களும் நாற்பதுகளைத் தாண்டிய இலக்கியவாதிகளும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய இடம் அது. மீராவிடம் கி.ரா.வை மதுரைக்கு அழைத்து வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். அப்போது சொன்னார் மீரா. மதுரையில அவரோட மணிவிழாவெக் கொண்டாடிவிடுவோம். கொஞ்சம் பொறுங்க என்றார். 1983 இல் அதற்கான வேலையைத் தொடங்கினார். நானும் அந்தக் குழுவில் ஒருவனாக இருந்தேன்

6

கி.ரா. மணிவிழா மதுரை நியூகாலேஜ் ஹவுஸ் மாடியில் நடந்தது. மணிவிழா மண்டபத்தில் திரும்பிய பக்கமெல்லாம் எழுத்தாளர்கள். நைனா.. நைனா என்று ஒவ்வொருவரும் ஒலித்துக்கொண்டாடினார்கள். நெல்லை எழுத்தாளர்கள், கோவில்பட்டிக்காரர்கள் என ஒவ்வொருவரும் பல ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள். அப்போது வண்ணதாசன் நிலக்கோட்டையில் இருந்தார். அவரை அங்குதான் முதன் முதலில் பார்த்தேன். பலரையும் அங்கு பார்த்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது

கரிசல் எழுத்தாளர்களின் கதைத் தொகுதி ஒன்றை – கரிசல் பரப்பைக் காட்டும் வரைபடத்துடன் கூடிய நூலொன்றைக் கொண்டுவந்தது அன்னம். ஏறத்தாழ 30 பேருக்கும் மேல் கரிசல் எழுத்தாளர்கள் என அடையாளப்படுத்தியிருந்தார் தொகுத்த கி ரா. 

இப்போதுள்ள தூத்துக்குடி மாவட்டமே கரிசல் நிலத்தின் மையம் என்றாலும் அப்போது திருநெல்வேலி மாவட்டம். அதல்லாமல் மேற்கே வத்ராப், கிழக்கே காரியாபட்டி, ராம்நாடு எனக் கடற்கரை வரை நீண்டது, வடக்கே விருதுநகரைத் தொடாமல் தெற்கே கயத்தாறு வரையிலான பரப்பு. வெளிசார் அடையாளங்கள், வாழ்வியல், மொழி என வட்டார இலக்கியத்திற்கான ஒரு வரையறை உருவாக்கிய அந்தத் தொகுதியே அவ்வகையில் தமிழின் முன்னோடித் தொகுதி. 

விழாவிற்கு முந்தியநாளே கி.ரா. மதுரை வந்துவிட்டார். காலேஜ் ஹவுஸ் தரைதளத்தில் தங்கியிருந்தவரைச் சந்தித்துவிட்டு இரவு கடைசிப் பேருந்தில் பல்கலைக்கழகம் சென்று மறுநாள் காலையில் திரும்பினேன். அப்போது நான் முனைவர் பட்ட ஆய்வுப்படிப்பைத் தொடங்கியிருந்தேன்.

7

1983 க்கும் 1989 க்குமிடையில் நேர்ச்சந்திப்புகள் இல்லை. கடிதங்கள் மட்டுமே. வாசித்த கதைகள் குறித்தும் வாசிக்கவேண்டியன குறித்தும் .

1989 மே மாதம் பாண்டிச்சேரிக்குப் போனபோது அங்கு வருகைதரு பேராசிரியராக இருந்த க.நா.சு. ஒப்பந்த காலம் முடிந்து கிளம்பிக்கொண்டிருந்தார். நாடகத்துறைக்குத் தலைவராகத் தில்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து அழைக்கப்பட்ட இந்திரா பார்த்தசாரதி வருகைதரு பேராசிரியராக அழைக்கப்படவில்லை. அங்கு ஓய்வுக்குப் பின் புதிதாகப் பொறுப்பேற்றிருந்தார். க.நா.சு.வின் இடத்தில் இன்னொரு வருகைதரு பேராசிரியராக எழுத்தாளர் ஒருவர் அழைக்கப்படும் வாய்ப்பிருப்பதாகத் தமிழ்த்துறை ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் சொன்னார்கள். 

நெல்லையைச் சேர்ந்த ஒருவரை – திரு மன்னர் மன்னன் -பாரதிதாசனின் மகனார் பல்கலைக்கழகம் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையெல்லாம் இருந்தது. ஆனால் அப்போது துணைவேந்தராக இருந்த முனைவர் கி.வேங்கடசுப்பிரமணியம் யாரும் எதிர்பாராத விதத்தில் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அழைக்கப்படுவதாக அறிவித்தார். அதற்குக் கடும் எதிர்ப்பெல்லாம் இருந்தது. அவர் கண்டுகொள்ளவில்லை. அறிவிப்புக்குப் பின் சில மாதங்கள் கடந்தன. கடிதப்போக்குவரத்துகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. 

கி.ரா. கணவதி அம்மாவோடு வருவாரென்றும் அவருக்கு உதவியாக ஒருவரும் வருவார் என்றும் சொல்லப்பட்டது. ஒருநாள் திடீரென்று துணைவேந்தர் அலுவலகத்திலிருந்து அழைப்பு. அங்கே துணைப் பதிவாளர் பொறுப்பில் இருந்தவர் என்னிடம் பேசினார். வருகை தரு பேராசிரியராக வரும் எழுத்தாளர் கி.ரா. , “துணைவேந்தரை நன்றாகத் தெரியும். கோவில்பட்டியில் கல்வி அதிகாரியாக இருந்தபோது பலதடவை சந்தித்துள்ளேன். அவரை விட்டால் நாடகத்துறையில் இருக்கும் இந்திரா பார்த்தசாரதியையும் அ.ராமசாமியையும் நன்றாகத் தெரியும்” என்று உங்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதனால் பல்கலைக்கழகம் சார்பில் பாண்டிச்சேரி ரயிலடிக்குச் செல்லும் குழுவில் நீங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று சொன்னார். அதன்படி ஒரு மாலை, பொன்னாடையோடு போன மூன்றுபேரில் ஒருவனாக நானும் இருந்தேன். ரயிலிலிருந்து இறங்கியவரைக் கைலாகு கொடுத்து இறக்கிவிட்டோம். அவரைத் தொடர்ந்து கணவதி அம்மாவும் ஓவியர் மாரிஸும் வந்தார்கள். 

தற்காலிகமாகத் தங்குவதற்கு அஜெந்தா கார்டன் விடுதியில் இரண்டு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 8

பாண்டிச்சேரியில் அவர் தங்க வீடுதேடும் படலம் தொடங்கியது. பல்கலைக்கழகம் அவருக்கான வீட்டு வாடகையை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லியிருந்தது. அதையே அவரது அலுவலகமாக அறிவிப்புச் செய்து வாடகையைத் தந்துவிடும். தற்காலிகமாக பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த அஜெந்தா கார்டன் அறைகள் வாடகை அதிகம். வீடு கிடைத்துவிட்டால், இரண்டு அறைகளின் ஒருநாள் வாடகையில் ஒருமாத வாடகை தரமுடியும். 

நான் தங்கியிருந்த அங்காளம்மன் நகரில் மூன்று தெரு தள்ளி ஒரு வீட்டைக் கண்டுபிடித்தோம். முதல் மாடியில் தான் கிடைத்தது. படியேறுவதில் சிரமங்கள் உண்டு. என்றாலும் முதலில் இருப்போம். பிறகு மாறிக்கொள்ளலாம் என்று சொல்லிவிடவே முதல் வீடாக அங்கு குடியேறினார். அவருக்கு உதவத் துறையிலிருந்து ஆய்வாளர்களை அனுப்பினார் துறையின் தலைவர் பேரா.க.ப. அறவாணன். அவர்கள் வந்தபிறகு எனது வேலைகள் குறைந்தன. சந்தித்து உரையாடவும் மாலை நடைக்காகவும் மட்டுமே சந்திப்புகள் நடந்தன.

9

கி.ரா. பாண்டிச்சேரிக்கு ஆறுமாதம் தாண்டியிருக்கும். நக்கீரன் பத்திரிகையிலிருந்து அதன் உதவி ஆசிரியர் ஒருவரும் புதுச்சேரியின் நிருபரும் கி.ரா.வைச்சந்திக்க வந்தனர். ஆனால் வந்தவர்கள் நேராக அவர் வீட்டிற்குப் போகவில்லை. என் வீட்டிற்கே வந்தனர். அப்போது நக்கீரனின் ஆசிரியர் துரை. கோவில்பட்டிக்காரர். நக்கீரனில் எழுத வைக்க விரும்பினார். என்னைப் பார்த்துவிட்டு அவரைப்பார்க்கச் சொன்னதாகச் சொன்னார்கள். 

மூவரும் மூன்று தெரு தள்ளி இருந்த அந்த வீட்டிற்குப் போய் அறிமுகத்திற்குப் பின்னர் வந்த செய்தியைச் சொன்னார்கள். நக்கீரனுக்கு முன்பே அவர் விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடனில் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’ தொடரை எழுதியிருந்தார். அடுத்தடுத்து அவர்களிடம் எழுதவேண்டும் என்று கோரிக்கையும் இருந்தது. விகடன் ஆசிரியர் தன்னை மரியாதையாக நடத்திய விதம்பற்றியெல்லாம் சொல்லிவிட்டு நக்கீரனில் இப்போது எழுதுவது இயலாது என்று மறுத்தார். ஆனால் வந்தவர்கள் அவர்களின் ஆசிரியர் துரையிடம் தொலைபேசியில் பேசினார்கள். அவரும் கி.ரா.விடம் பேசினார்.

கடைசியாக ஒரு முடிவு ஏற்பட்டது. கி.ரா. சொல்வதை எழுதி அனுப்பும் வேலை என்னுடையது. அது கி.ரா: கரிசலிலிருந்து புதுச்சேரிக்கு என்ற தலைப்பில் தொடராக வெளிவரும். அதனை எழுதும் இடத்தில் கி.ரா. பெயர் இருக்காது; கேட்டு எழுதுபவர் என்று தீர்க்கவாசகன் என்றிருக்கும் என்பது அந்த முடிவு. அந்தத்தொடர் பத்துவாரம் வந்தது. அவரது எழுத்தை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு இது உவப்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நிறுத்திக் கொண்டார்கள்.

தீர்க்கவாசகன் என்பது அப்போது நான் வைத்துக்கொண்ட புனைபெயர்.

10

புதுவை, முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகர் வ.உ.சி. தெருவில் கி.ரா. அதிக நாட்கள் இருக்கவில்லை. நான்கைந்து மாதங்களே இருந்தார். ஒவ்வொரு நாளும் ஒருபக்கம் நடப்போம். கடலைநோக்கிப் போகும் சாலைகள் வழியே.. மீனவக்குப்பங்களின் வழியே.. தென்னந்தோப்புகளின் வழியே.. கள்ளுக்கடை ஓரமாக என நடக்கும்போது நின்று பேசிக்கொள்ளும் செய்திகள் .. பேசும்போது அவர் கவனித்துச் சொல்லும் நுட்பங்கள்.. ஒவ்வொன்றையும் முன்சென்று கரிசல் காட்டோடு இணைத்துக் காட்டும் ஒரு கயிறு அவரிடம் இருந்தது. அங்காளம்மன் கோவிலின் மேற்கே அங்காளம்மன் நகர்; கிழக்குப்பக்கம் அங்காளங்குப்பம். மனிதர்களின் அடையாளம் என்னவாக இருக்கிறது என்பதை அவர்களின் வாழ்நிலைதான் தீர்மானிக்கிறது. குப்பமென்றால் அரசு கவனிக்கும் என நினைக்கும்போது குப்பமாகிறது. நகர் என்றால் நாகரிகம் என நினைக்கும்போது நகராகின்றது. சொல்லிக்கொண்டே நடப்பார்.

வைத்திக்குப்பத்திற்குள் இருக்கும் பாரதிதாசன் சமாதியைப் பார்க்கப்போனபோது கடல் மணல் புதைகுழியாக இறங்கி நடக்கவே முடியவில்லை. நின்று நிதானமாகச் செல்லவும் முடியவில்லை. பாதையெங்கும் மனிதக்கழிவுகளால் நிரம்பியிருந்தது. பாரதிதாசனுக்கு ஏன் இப்படி நிகழ்ந்துவிட்டது என்று வருந்தினார். அதைத்தாண்டிப் போனால் கடலோரம் முழுவதும் மீனவர்கள் கடலில் தான் கழிவை இறக்கிவிடுகிறார்கள். அதை நேரடியாகப் பார்த்தால் மீன் சாப்பிடும் ஆசையே போய்விடும். 

அங்காளம்மன் நகரிலிருந்து அவரது வீடும் அலுவலகமும் லாஸ்பேட்டை அரசு கல்லூரிச்சாலையின் முதன்மைத் தெருவிற்கு மாறிப்போனபோது மகிழ்ச்சியாகவே உணர்ந்தார். நான் தான் விலகிப்போய்விட்டார் என்று நினைத்துக்கொண்டேன்

நினைவுகளும் குறிப்புகளும் தொடரும்

Series Navigationகி.ரா – நினைவுக் குறிப்புகள் >>

2 Replies to “கி ரா : நினைவுகள்”

  1. பேரா.அ.ராமசாமியின் கட்டுரையை வாசிக்கும் போது கி.ரா.வின் கடிதங்களை நான் தொகுத்தபோது இராமசாமிக்கு கி.ரா. எழுதிய வரிகள் நினைவின் மேற்பரப்புக்கு வந்து கண்சிமிட்டுகிறது.கி.ரா.நினைவுப்பகிர்வுகள் தொடரட்டும்.வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.