பாஸ்னியக் காப்பி

யூகோஸ்லாவியா என்றால் தென் ஸ்லாவிய மக்கள் கூட்டமைப்பு என்று பொருள். அது இந்தியாவுடன் சிறந்த நட்புப் பாராட்டி வந்த ஒரு கிழக்கு ஐரோப்பிய தேசம். அந்த வாக்கியத்தை இறந்த காலத்தில் எழுதியது எழுத்துப் பிழையோ இலக்கணப் பிழையோ அல்ல. இன்று யூகோஸ்லாவியா என்ற தேசம் இருந்த இடத்தில் – செர்பியா, ஸ்லோவீனியா, குரோவேஷியா, பாஸ்னியா-ஹெர்ஸகோவினா, மாண்டெனீக்ரோ, வடக்கு மஸடோனியா, மற்றும் கொசோவோ – என ஏழு தனித் தேசங்கள் இருக்கின்றன. யூகோஸ்லாவியப் பிரிவினையைக் கடந்த நாற்பது ஆண்டுகளில் நிகழ்ந்த கோர வரலாறு எனலாம்.

1993ஆம் ஆண்டு எனக்குத் திருமதி குஞ்சம்மாள் என்பவர் வரலாற்று ஆசிரியையாக இருந்தார். எப்போதும் உற்சாகமாகப் பொறி பறக்க வகுப்பு எடுப்பார். வரலாற்றுப் பாடங்களைச் சமகால நிகழ்வுகளின் ஊடே முடிச்சுப்போட்டு விளக்குவார். 1960களில் மாபெரும் உலகத் தலைவர்களாக விளங்கிய ஜவஹர்லால் நேரு, கமால் அப்துல் நாசர் மற்றும் மார்ஷல் டிடோ முன்னின்று உருவாக்கிய “கூட்டு சேரா இயக்கம்” (Non-Aligned Movement, NAM) திருமதி குஞ்சம்மாளின் விருப்பப் பாடம். ‘யானைகளின் யுத்தத்தில் அழிவது எறும்புகளே’ என ஒரு சொலவடை உண்டு. அதேபோல அமேரிக்கா – சோவியத் ரஷியா வல்லரசுகளுக்கு இடையேயான பலப்பரீட்சை பெரும்பாலும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட சிறிய நாடுகளின் யுத்தங்கள் வாயிலாக வெளிப்பட்டது. இந்த ‘கோல்டு வார்’ அல்லது மறைமுக பனிப்போரில் சிக்காமல் இந்தியா, எகிப்து, யூகோஸ்லாவியா, கானா மற்றும் இந்தோனேஷியா ஆகிய வளரும் நாடுகள் தங்களுக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் கூட்டமைப்பே “கூட்டு சேரா இயக்கம்”. இந்த ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்ட இடம் அப்போதைய யுகோஸ்லாவிய தலைநகரான பெல்க்ரேட்.

திருமதி குஞ்சம்மாள், எப்போதும் மார்ஷல் டிடோவை இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலுடனே ஒப்பிடுவார். இருவருமே காத்திரமான ஆளுமைகள், ‘ஒரே தேசம்’ என்ற குடையின்கீழ் மக்களை ஒன்று சேர்த்தவர்கள். வட்டார தேசீயத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சகோதரத்துவத்தை வளர்ப்பதிலும் வெற்றி கண்டவர்கள். ஆனால் டிடோ விஷயத்தில் பல்வேறு யூகோஸ்லாவிய மாநிலங்களை இறுக்கிப் பிடித்திருந்த சக்தி அவர் மட்டுமே என்று ஆனது. அவரது மரணத்துக்குப்பின் தேசீய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் கேள்விகள் எழுந்தன. அப்போது நிலவிய பொருளாதார மந்தம் அந்த விரிசல்களைப் பெரிதுபடுத்தியது. அடியாழத்தில் புதைந்திருந்த வேறுபாடுகள் மீண்டும் கிளைத்தன. ஸ்லோவீனியா, குரோவேஷியா போன்ற தன்னிறைவு பெற்ற பிரதேசங்கள் சுதந்திரப் பிரகடனம் செய்தன. யூகோஸ்லாவிய கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்திய செர்பியா அதை ஒப்புக்கொள்ள மறுத்தது. பிரிவினை சக்திகளுக்கு எதிராகப் போர் தொடுத்தது. விரைவில் அது முழு வீச்சில் இனப் போராக மாறிற்று. யூகோஸ்லாவிய யுத்தத்தின் தலைப்புச் செய்திகள் திருமதி குஞ்சம்மாள் மூலமாக தினந்தோறும் எங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். படிப்படியாக அந்தத் தேசம் அழிவதும், குறிப்பாகப் பாஸ்னிய உள்நாட்டு யுத்தத்தின் நுண்விவரங்களும் வகுப்பில் அலசப்படும்.

யூகோஸ்லாவியாவின் பன்முகத் தன்மையும் அதன் விளைவாய் எழுந்த சிக்கல்களும் பாஸ்னியா ஹெர்ஸகோவினாவில்தான் தீவிரமாக வெடித்தன. ஏனெனில் அங்குதான் ஆசாரவாத (ஆர்த்தடாக்ஸ்) கிறித்தவர்களான செர்பியர்கள், ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்களான குரோவாட்டுகள், இஸ்லாமியர்களான பாஸ்னியர்கள் என்று வெவ்வேறு வாழ்வு முறைகளைப் பின்பற்றும் இனங்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். இவர்களில் பாஸ்னியர்கள் நிலை யாரோடும் ஒப்பிடமுடியாத தனித்துவம் வாய்ந்தது. ஐரோப்பாவில் பெரும்பாலும் கிறித்தவர்களே காலம் காலமாக வாழ்பவர்கள். ஆனால் பாஸ்னியாவில் பரவலாக இஸ்லாமியர்களைக் காணலாம். ஐரோப்பியக் கண்டத்தின் உட்பிரதேசங்களில் இஸ்லாமின் இருப்பு இந்த அளவுக்கு வேறெங்கும் இல்லை. இவர்கள் நானூறு ஆண்டுகளாக இந்தப் பகுதியை ஆண்ட துருக்கிய ஒட்டோமான் வம்சாவளியினர். இப்படிப் பல்வகைப்பட்ட மக்கள் வாழும் இடமாக இருந்த பாஸ்னியா ஹெர்ஸகோவினாவில் உள்நாட்டுப் போர் மூண்டபோது, முதலில் குரோவாட்டுக்களும் பாஸ்னியர்களும் கூட்டணி அமைத்துச் செர்பியர்களை எதிர்த்துப் போரிட்டனர். போகப்போக மோஸ்டர் போன்ற இடங்களில் இது மூன்று பிரிவினரும் ஒருவரையொருவர் எதிர்க்கும் மும்முனைப் போராக மூண்டது. சுற்றமாகவும் உறவுகளாகவும் இருந்தவர்கள் திடீரென எதிரிகளாகி ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் அவலம் நேர்ந்தது.

போரின் உச்சத்தில் செர்பியர்கள் பாஸ்னியத் தலைநகர் சரயேவோவை முற்றுகையிட்டனர் ( ; https://en.wikipedia.org/wiki/Siege_of_Sarajevo). அதைத் தொடர்ந்த கோர யுத்தத்தில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள். அதன் வடகிழக்கே ஸ்ரப்ரெனிட்ஸா என்ற ஊரில் நடந்தேறிய போர்க் குற்றங்கள் கொடூரமானவை. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலைகள் இங்குதான் நடந்தன. சரயேவோ முற்றுகை மற்றும் ஸ்ரப்ரெனிட்ஸா இனப்படுகொலை ஆகிய இரு நாச விளைவுகளுக்கும் காரணம் ராட்கோ மிலாடிச் எனும் பாஸ்னிய செர்ப் ராணுவ ஜெனரல் ஆவார். இவர் பிற்காலத்தில் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டார். எனினும் பாஸ்னியாவில் உள்ள செர்பியர்கள் இவரை இன்றும் ஒரு போர் நாயகனான பார்க்கிறார்கள்.

ஸ்ரப்ரெனிட்ஸா இனப்படுகொலை யூகோஸ்லாவியப் போரின் உட்சபட்ச அவலம் (பார்க்க – பின்குறிப்புகள்). ராட்கோ மிலாடிச், பாஸ்னிய முஸ்லிம்களை முற்றுகையிட்டபோது, அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் பொறுப்பு ஐ.நா. அமைதிப் படையின் நெதர்லாந்து பட்டாளத்துக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பகுதியை மிகப் பெரிய செர்பியப் போர்ப் படை சுற்றி வளைத்து ஐ.நா. படையின் பாதுகாப்புக்குத் தங்களால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்று கெடு விதித்தது. அகதிகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறோம் என்று பொய் வாக்குறுதி அளித்து ஐ.நா. படையை வெளியேறச் சொன்னது. நெதர்லாந்து பட்டாளம் வெளியேறியதும், பெண்களும் குழந்தைகளும் பேருந்துகளில் ஏற்றப்பட்டுத் தொலை தூரத்தில் இருந்த அகதி முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். எட்டாயிரத்துக்கும் அதிகமான பாஸ்னிய இஸ்லாமிய ஆண்களும் சிறுவர்களும் தனித்து பிரிக்கப்பட்டு, ஸ்ரப்ரெனிட்ஸாவிலேயே நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஏப்ரல் 2002ல், நான் நெதர்லாந்து வந்த புதிதில், அப்போது பிரதமராக இருந்த விம் கோக் ஸ்ரப்ரெனிட்ஸா படுகொலைக்கு தன் நாட்டு ஐ.நா. அமைதிப்படை காரணமாக அமைந்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலகினார். இன்றுவரை உலகெங்கும் ஸ்ரப்ரெனிட்ஸா வலி நினைவுகளைக் கிளர்த்துவதாக இருந்தாலும், குறிப்பாக பாஸ்னியாவிலும் நெதர்லாந்திலும் அதன் தாக்கம் தீவிரமாக உணரப்படுகிறது.

பாஸ்னியாவின் தெற்கே, குரோவேஷிய எல்லைப் பகுதிக்கு அருகில், மோஸ்டார் என்ற அழகிய சிற்றூரில் நீண்ட வளைவாகக் கட்டப்பட்டுள்ள கற்பாலம் துருக்கியர்களின் கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்று. அங்கிருந்த பாஸ்னிய முஸ்லிம்களையும் மறுகரையில் வசித்த ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்களையும் இணைக்கும் பாலமாக இருந்தது அது. ‘ஸ்டாரி மோஸ்ட்,’ அல்லது பழம்பாலம் என்று அழைக்கப்பட்ட அந்தப் பாலம் எந்தத் தூண்களும் இல்லாமல் இரு பக்கமும் எடையைச் சமன்செயும் வகையில் கட்டப்பட்டது. 600 ஆண்டுகளாக அறிவியல் விதிகளின் எல்லையைப் பரிசோதித்து, தன் எடையைத் தானே தாங்கி கம்பீரமாக நிலைத்து நின்ற அந்த பாலத்தால், 20 ஆம் நூற்றாண்டின் மனித மதப் பித்தைத் தாங்க முடியவில்லை. 1993ஆம் ஆண்டு இந்தப் பாலம் குண்டு வீசித் தகர்க்கப்பட்டபோது ஒரு குறியீட்டைப்போல யூகோஸ்லாவியாவின் உடைப்பும் முழுமையாக நடந்தேறியது https://www.youtube.com/watch?v=_5tTbXAQ4uA.

பல வருடங்களாக ஐரோப்பாவில் வசித்துவரும் நான், இதுவரை முப்பது தேசங்களுக்குப் பயணித்திருக்கிறேன். ஆனால் பாஸ்னியா ஹெர்ஸகோவினாவிற்கு செல்லும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை. என் வாழ்நாளில் நடந்த ஒரு வரலாற்றை நேரில் கண்டு, தொட்டுணர்ந்து பார்க்க வேண்டும் என்கிற ஆவல் மட்டும் அப்படியே இருந்தது. இறுதியாக 2021 ஜூலை, கொரோனா பெருந்தொற்றுப் பயணத் தடைகளைத் தாண்டி, முதலில் க்ரோவேஷியா சென்று, அங்கிருந்து கூடுதல் பிரயத்தனங்கள் செய்து தரை மார்க்கமாகப் பாஸ்னியா சென்றடைந்தேன். பட்ட சிரமம் வீண் போகவில்லை. சமூகத்தில் நிலவும் அமைதியும் நல்லிணக்கமும் எவ்வளவு சீக்கிரம் குலைந்து மறையும் என்பதையும், எப்போதும் இப்படித்தான் இருக்கும் என்று நாம் அலட்சியப்படுத்தும் பல விஷயங்களை மதிக்கவும் இந்தப் பயண அனுபவத்தில் உணர்ந்தேன்.

மோஸ்டார் – மலைகளின் நடுவே ஒரு பள்ளத்தாக்கில் நெரத்வா நதியின் களங்கமற்ற நீல நீரால் இரண்டாய்ப் பிரிந்து குற்றம் குறை சொல்ல முடியாத புகைப்படம்போல் பூரண அழகுடன் மிளிரும் ஒரு சிறு நகரம். மோஸ்டாரின் பாலத்தின்மேல் பாஸ்னிய இளைஞர்கள் கிட்டத்தட்ட 80 அடி உயரத்திலிருந்து நதிக்குள் பாய்ந்து சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். கடை வீதிகளில் பாஸ்னிய கலைப்பொருட்கள் விற்பனைக்குக் குவிந்து கிடந்தன. ஓர் இசைக்கலைஞர் பாரம்பரிய உடை உடுத்தி பக்லாமா எனும் துருக்கிய வாத்தியத்தை இசைத்து கொண்டிருந்தார். நெரத்வா நதியில் விரைவுப் படகு சவாரி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. பெண்களுக்கு தினுசு தினுசாக மருதாணி (ஹென்னா) போட்டுவிடப்படும் என பல ரோட்டோர விளம்பரப் பலகைகள். இன்று மோஸ்டார் இந்த பகுதியில் பிரசித்தி பெற்றுவரும் சுற்றலாத் தலம் என யூகிக்க முடிந்தது. ஆனால் புறப்பரப்பைச் சற்றே கீறிப் பார்த்தால் கடந்த காலப் பேரழிவுச் சின்னங்களைச் சுலபமாகக் காண முடிந்தது. பாலத்துக்குப் போகும் வழியில் ஒரு கல்லறையைக் கடக்க நேரிட்டது. அங்கு அனிச்சையாக நான் கவனித்த விஷயம் – பல சமாதிகளில் “தோற்றம்” – 1960 அல்லது எழுபதுகளில். ஆனால் “மறைவு” – தேதி அனைத்தும் 1993. சற்றே அருகில் தோட்டாக்கள் துளைத்த சுவர்களைப் பல கட்டிடங்களில் காண முடிந்தது. ஒரு பக்கம் நெரத்வா நதியின் மேற்கே ஒரு பெரிய சிலுவை வானில் உயர்ந்து நிற்கிறது. அதன் நேர் எதிரே, கிழக்கில் மசூதி கோபுரங்கள். அதிலிருந்து உரக்க எழும் அதான். அதைக் கேட்டுக்கொண்டே மேலும் நடந்தால் தெரு முனையில் இதயத்தைப் பிசையும் நினைவுச் சின்னம் “93ஐ மறக்க வேண்டாம்”.

மோஸ்ட்டார் பாலத்தின் கோபுரத்தில், சிறிய வளைந்த படிக்கட்டுகளில் ஏறி அங்கிருந்த புராதன கஃபே-வில் நுழையவும், ஒரு கையில் சுருட்டும் மறு கையில் காஃபித் தட்டுமாய் எங்களை வரவேற்றார் ஒரு முதியவர். தன்னை ‘முஸ்தபா’ என அறிமுகம் செய்து கொண்டவருக்கு வயது எழுபதைத் தாண்டி இருக்கலாம். பாஸ்னிய காப்பி கேட்டோம். “இருங்க சார். முதல்ல ஆற அமர உக்காருங்க. பாஸ்னியாவில் காப்பி குடிப்பதென்பது ஒரு சாக்குதான். இதைக் காரணமாக வைத்து ஒருவரோடொடுவர் அரட்டை அடிப்பதுதான் இந்த ஊர்க் கலாசாரம்” என உள்ளே சென்று அழகிய குடுவைகளுடன் காப்பி கொண்டுவந்தார். பார்க்க முதலில் துருக்கிய காப்பி போலிருந்தது. ஆனால் அதை முஸ்தபா “பாஸ்னிய காப்பியைத் துருக்கிக் காப்பி என்றால் அதைவிட அவமானம் வேறேதுமில்லை” என வன்மையாக மறுத்தார். “இரண்டுக்கும் என்ன வேறுபாடு..?” “நிறைய” என்று ஒரு பத்து நிமிடம் வகுப்பெடுத்தார். பாஸ்னிய காப்பியில் நுரை அதிகம் இருக்கும், கொதிக்க வைத்த அதே குடுவையில் பரிமாறப்படுவதால் சூடு அதிகம் இருக்கும், சுவை வீரியமாக இருக்கும், காப்பிக்குப்பின் சாப்பிட தனி வகையான இனிப்பு வழங்கப்படும் போன்ற மேலோட்ட விபரங்கள் மட்டுமே புரிந்தது. ஆனால் அவர் பல நுட்ப வித்தியாசங்களைச் சொல்லிக்கொண்டே போனார். பாஸ்னிய காப்பியை எப்படி எடுத்துக் குடிப்பது என்பதே ஒரு சடங்கு போலிருந்தது. அதைக் கற்றுக் கொடுத்தார். முதலில் கரும்படலம் இட்டிருக்கும் காப்பி நுரைகளைக் கவனமாகத் திரட்டிச் சர்க்கரைக் கட்டிகள்மீது போர்த்த வேண்டும். அதன் சாரம் சர்க்கரையில் ஊறிக் கரையவும், சூடாக இருக்கும் பித்தளைக் குடுவையின் கைப்பிடியைப் பயப்படாமல் பற்றி, வட்டமாய் ஆட்டிக்கொண்டே, காப்பியை உங்கள் கோப்பைக்குள் ஊற்ற வேண்டும்.

இப்படித் தயாரித்துக் குடிக்கும்போது கிடைப்பது மிகவும் சூடான, மிகவும் இனிப்பான கடுங்காப்பி மட்டுமன்று, பழைய நினைவுகளும் இதனுடன் பொங்கிவரும் போல. “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” “இந்தியா,” எனச் சொன்னதுதான் தாமதம், “ஆஹா, இந்தியா எங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்த நட்பு நாடு” என முஸ்தபா யூகோஸ்லாவியாவின் பொற்காலத்துக்குப் போய்விட்டார். “எங்கள் சோஷலிசம் உலகிலேயே மிகச் சிறந்தது” என்றார். “போக வர எல்லாம் இலவசம். எங்கள் வீட்டில் ஒன்பது பிள்ளைகள். அதனால் என் அப்பாவுக்கு வரி விலக்கு. அவர் ஒரு பைசாகூட வரி கட்டியதில்லை”. இந்தியாவில் 14 குழந்தைகள் பெற்ற பெண்மணியை வீரத்தாய் என்று அழைக்கும் பழக்கம் எங்கள் ஊரிலும் இருந்தது என்றேன். “சும்மாவா உங்கள் ஊரில் ஜனத்தொகைப் பிரச்சனை வருகிறது,” என வயோதிக நகையுடன் கண்ணடித்தார். பேச்சை நிறுத்தின பாடில்லை. “உலகில் யூகோஸ்லாவியாவுக்கு என்று ஒரு தனி மதிப்பு இருந்தது. வளரும் நாடுகளில் எது அதிகம் கிடைக்கிறதோ அதை இறக்குமதி செய்து, இங்கு எது அதிகம் உற்பத்தி செய்கிறோமோ அதை ஏற்றுமதி செய்யும் வர்த்தக சாமர்த்தியம் டிடோவுக்கு இருந்தது. இறக்குமதி செய்யப்படுவது எதற்கும் கூடுதல் வரி கிடையாது. ஒற்றுமையாக இருந்த காரணத்தால் எங்கள் நாடு செழிப்பாக இருந்தது. நீங்கள் செர்பியரா, குரோவேஷியரா, இல்லை பாஸ்னியரா என்று யாரும் கவலைப்படவில்லை. எல்லா இனத்தவர்களும் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டோம்.. ஆனால் டிடோ இறந்தபின்…” பேச்சை நிறுத்தி சோகச் சிரிப்புடன் தொடர்ந்தார், “நாங்கள் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டோம்.”

காப்பி தீர்ந்துவிட்டது. ஏற்கெனவே சிறியதான அந்த அறை, அத்தருணம் தந்த இறுக்கத்தால் இன்னும் சிறியதானது போலிருந்தது. “இனிப்பு ஒரு வாய் சாப்பிட்டுப் பாருங்கள்,” என்று அவர் அமைதியைக் கலைத்தார். நிகழ்காலத்திற்குத் திரும்பினோம். பேச்சை மாற்றலாம் என “அதான் பாலத்தைக்கூட திரும்பக் கட்டி விட்டார்களே,” என்றேன். பதிலுக்குச் சிரித்தார், “இது மலைப் பிரேதேசம் சார்”. ஆட்காட்டி விரலால் எங்களைச் சுற்றியிருந்த மலைகளைக் காட்டினார். “இங்கே வாழ்வது அவ்வளவு சுலபமில்லை. இங்கே ஒருத்தருக்கு ஒருத்தர் உதவ வேண்டும், மதிக்க வேண்டும், அனுசரித்துப் போக வேண்டும். காலம் காலமாக அப்படித்தான் வாழ்ந்தோம். இனியும் அப்படியேதான் வாழந்தாக வேண்டும். இன்ஷா அல்லா..”

மேலும்:

One Reply to “பாஸ்னியக் காப்பி”

  1. எப்போதும் இசைக்கட்டுரைகள் எழுதும் விக்கியின் இந்த கட்டுரை அற்புதம். முற்றிலுமாக வரலாற்று உண்மைகளைப் புரிந்து கொள்ள மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். சொல்வனத்தில் வெளிவந்த சிறந்த கட்டுரைகளில் ஒன்று.

    சுகா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.