காலம் உறைந்த வீடு & தவறுகளும் ரகசியங்களும்

காலம் உறைந்த வீடு

மழையில் நனைந்து
வெயிலில் உலர்ந்து
காற்றில் கலைந்து
பருவங்கள் கடந்து
தன்னைத்தானே
தாங்கி நிற்கிறது
ஆண்டாண்டுகளாக
கைவிடப்பட்ட வீடு.

கரையான்கள் சிலந்திகள்
கரப்பான்கள் எலிகள்
மற்றும் பெருச்சாளிகளுடன்
ஒப்பந்தம் செய்து கொண்டு
உறவாட உயிர்கள் இருக்கிற
சிறு ஆறுதலில்
இனிப் பெரிதாக
வருந்தவோ மகிழவோ
காரணங்கள் அற்று
விரக்தியில் நிற்கிறது
பாழடைந்த வீடு.

அதனை விடவும்
அதிக வயதான
முற்றத்து வேப்பமரத்தின்
உச்சாணிக் கிளையில் நின்று
முழுநிலவொளியில்
இரவுப் பறவை
எழுப்பிய பாடலில்
பார்த்துப் பார்த்து
வீட்டைக் கட்டிய
எசமானியின் வேதனை
கலந்தொலிக்கக் கேட்டு
சிலிர்த்து அடங்குகிறது
சிதிலமைந்த வீடு.
*


தவறுகளும் ரகசியங்களும்

தவறுகளை
ரகசியங்களாகவே
புதைப்பதற்காக
மறைக்கப்படுகிற உண்மைகள்
பொய்களாகப் பூத்து நிற்க
சொல்லப்படுகிற பொய்களோ
உண்மை வேடம் பூணத்
திணறி நிற்கின்றன.

தவறுகளை
ரகசியங்களாகவே
காப்பதற்காக
எத்தனைப் பழி அம்புகள்
தைத்தாலும்
முதுகு வளைந்து கொடுக்க
சொட்டும் குருதியை
நெஞ்சின் வீம்பு
சட்டை செய்ய மறுக்கிறது.

தவறுகள்
ரகசியங்களாகவே
நிலைத்திருக்க எடுக்கப்படும்
பிரயத்தனங்களில்
எதிர் கொள்ள நேரும்
நியாயமான கேள்விகள்
பூதங்களாகவும்
தான் மறைக்கும் பதில்கள்
தேவதைகளாகவும்
உலவுகின்றன.

தவறுகளை
ரகசியங்களாகவே
அழித்து விடத் துடிக்கும்
நீள் யுத்தத்தில்
எதிர் நிற்பவரின் வேதனை
தூசுக்குச் சமமாகக்
காற்று வெளியில் அலைகிறது.
எதிர் நிற்பவர் மெளனம்
வெற்றிக் களிப்பைத் தருகிறது.

தவறுகள்
ரகசியங்களாகவே
இருந்து விடலாம்.
எதிர் நிற்பவரை
ஏமாளியாகவேப் பார்க்கலாம்.
அந்த ரகசியங்களுக்கு
நம்பிக்கைத் துரோகமெனும்
அகராதியில் இல்லாத
அர்த்தம் ஒன்றுண்டென்பதை
அறியாத முட்டாளைப் போல்
வாழ்நாளெலாம் நடிக்கலாம்.
**

படங்களும், கவிதைகளும்: ராமலக்ஷ்மி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.