பகடை ஆட்டம்

அவள் எதிரே புல் தரையில் தத்திக்கொண்டிருந்த மைனாவைப் பார்த்துக்கொண்டிருக்கையில் அவள் அருகில் வந்து நின்று இங்கு உட்காரலாமா என்று அவர் கேட்டார். அவள் சிரித்துக்கொண்டே “ப்ளீஸ்! உட்காருங்கள்!” என்றாள்.

தூரத்தில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் குதூகலக் கூச்சல். 

“வசந்த காலத்தில் பறவைகளின் குரலும் குழந்தைகளின் குரலும் ஒன்று போலவே ஒலிக்கின்றன” என்றபடியே அவரைப் பார்த்தாள்.

கொஞ்சம் கூர்ந்து பார்த்துவிட்டு  “ சாரி! உங்கள் முகம் ரொம்ப பழக்கப்பட்டதாக, தெரிந்த முகமாக இருக்கிறது. அதான் பார்த்தேன்” என்றாள்.

அவர் சிரித்தார். நேர்த்தியான நாஸூக்கான உடை, வசீகரமான சிரிப்பு. கொஞ்சம் வயதான கம்பீரமான கனவான்!

அவள் உற்சாகமாகப்  பேச ஆரம்பித்தாள்.

“ஒரே மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என்று சொல்லுவார்கள் அல்லவா?அந்த மாதிரி எனக்குத் தெரிந்த ஏதோ முகத்தை நினைவு படுத்துகிற  ஏழு பேரில் ஒருவரோ என்னவோ நீங்கள்? “ சிரித்துக்கொண்டே சொன்னவள் தொடர்ந்தாள்.

“எனக்கு சில சந்தர்ப்பங்களில் அச்சு அசல் எனக்குத் தெரிந்த அதே முகங்களை வெவ்வேறானவர்களிடத்தில் பார்க்க நேர்ந்திருக்கிறது. உங்களுக்கு அவ்வாறு நேர்ந்திருக்கிறதா?”

அவர் ஆமாம் என்பதாக தலை அசைத்தார். அவள் தொடர்ந்தாள்.

“என்னுடைய ஊர் மதுரை. தென்னிந்தியாவின் தெற்குப் பகுதியில் இருக்கிற ஊர். கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா?அந்த ஊரின் கோவில் தாமரையின் நடுவில் இருக்கிற மொக்கு போலவும், சுற்றி இருக்கிற வீதிகள் தாமரையின் இதழ்கள் போலவும் இருப்பதாக தமிழ் , சமஸ்க்ருத இலக்கியங்களில்  எல்லாம் பேசப்படுகின்ற ஊர் .ம்….. எதற்கு சொல்ல வந்தேன்?”

“ ஒரே மாதிரி ஏழு பேர்….”

“ஹாங்க்! கரெக்ட்!   அந்த ஊருக்கும் தெற்கே இருக்கிற ஒரு வியாபாரத்திற்குப் பெயர் பெற்ற இடத்தில் என் முதல் வேலை கிடைத்தது, கல்லூரி ஆசிரியையாக. வேலையில் சேர்வதற்கான முறைமைகளை முடித்துவிட்டு எனக்குத் தரப்பட்ட விடுதி அறைக்குச் சென்றேன். லேசாக சாத்தியிருந்த கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன் . எனக்கு முதுகைக் காட்டிகொண்டு மேஜையில் எதையோ தேடிக்கொண்டிருந்த பெண் திரும்பினாள். 

அங்கு நின்று கொண்டிருந்தது நூதன்!

நூதன்….. ஹிந்தி நடிகை !!! தெரியுமில்லையா?  அதிர்ந்தேன். அவள் எங்கே இங்கே வந்தாள்?

எனக்குத் தெரிந்து நடிகைகளிலேயே ரொம்ப திருத்தமான முகம் அவளுடையது.  எந்த விதமான மழுங்கல்களோ, மழுப்பல்களோ இல்லாத கோடுகளும், குழைவுகளும் கொண்ட நிச்சயத்தன்மையோடு கூடிய முகம் அது . கண்களில் கோவில் கர்ப்பகிருஹ அகல் விளக்கின் குளுமையும், ஒளியும். சுற்றி இருக்கிற அனைத்தையும் ஒளிர வைக்கிற சிரிப்பு ! அவள் எங்கே இங்கே இந்த தென் தமிழ் நாட்டு கந்தக பூமியில்?

அவள் சிரித்தபடியே  “நீங்கதான் பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட்ல  இங்க புதுசா ஜாய்ன் பண்ணியிருக்கீங்களா? நான் இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட் . கனகா!” 

அச்சு அசல் நூதனேதான்! நான் சமாளித்துக்கொண்டு சிரித்தபடி பேசத்தொடங்கினேன்.

அன்றைக்கு மாலையே கல்லூரி மைதானத்தில் ஹிந்தி நடிகை மும்தாஜைப் பார்த்தேன்! இந்த  சின்ன ஊரில் ஒரே இடத்தில் இரண்டு ஹிந்தி நடிகைகள்!!!  ஆச்சர்யம்தான்!

சம்பிரதாயமான அழகு என்று சொல்ல முடியாத முகம் மும்தாஜுடையது. ஆனாலும்  அந்த முகத்தில் சுலபத்தில்  மறுக்க முடியாத, கண்களை ஈர்க்கின்ற ஏதோ ஒன்று இருந்தது. லேசாக, மிக லேசாக மேல் நோக்கிய மூக்கு இவ்வளவு அழகாக இருக்கும் நினைத்தே இருக்க மாட்டோம். 

கட்டுக்கடங்காத உற்சாகம், எல்லையில்லாத விடுதலை உணர்ச்சி, பார்ப்பவர்களிடம் எளிதில்  தொற்றிக்கொள்ளக்கூடிய  சந்தோஷம்  அவரிடம் இருந்தது.

ஜய ஜய ஷங்கர் ! சிவ சிவ ஷங்கர்  என்று  ராஜேஷ் கன்னாவோடு அவர் ஆடுகிற ஒரு பாடலைப் பார்த்தாலே போதும் . நான் மேற்சொன்ன எல்லா புகழுரைகளும் பொய்யில்லை என்று தெரியும்

மும்தாஜைப் போலவே இருந்த அந்தப் பெண் பிந்து, விலங்கியல் துறையில் விரிவுரையாளராக இருந்தார்.

அது என்னவோ இந்தப் பெண்களின் கணவர்கள் எல்லாரும்  தமிழ் இலக்கியம், வரலாறு என்று படித்துவிட்டு  சரியான வேலை கிடைக்காமல் அந்த ஊரின் தீப்பெட்டித் தொழிற்சாலையிலோ, பட்டாசுத் தொழிற்சாலையிலோ,மேற்பார்வை பார்க்கிறவர்கள் என்று மேலுக்கு கௌரவமாக சொல்லப்படுகிற, மற்றபடி அங்கு வேலை பார்க்கும் கரிய, வறிய, சிறிய குழந்தைகளைப்போல, அவர்களின் பெரிய அச்சுகளான  பெண்களைப்போல பரிதாபமான , அவமானகரமான நிலையில் இருந்தவர்கள்தான். மேலும் படித்தவர்கள் என்று முதலாளிகளால் அடையாளப்படுத்தப்பட்டு அதனாலேயே மேலும் அவமானப்படுத்த வேண்டியவர்களானார்கள்.

அங்கு  கணவர்கள் பெற்ற  மானசீக காயங்களையும்,  பிராண்டல்களையும், அவமானங்களையும், அச்சுறுத்தல்களையும்  வீட்டில் பெறவேண்டியவர்களாக இந்தப் பெண்கள் இருந்தார்கள்.

அதனால் சிரிப்பைத் தொலைத்த நூதனாகவும், மும்தாஜாகவும் அவர்களை நான் பார்க்கநேர்ந்தது துரதிருஷ்டவசம்தான்.” 

அவர் அவள் சொல்வதை அனுதாபத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார்.    

 “ரொம்ப பேசுகிறேனோ?” அவர் இல்லை என்பதாக தலையசைத்தார்.

“நாம் யாரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அந்த பேச்சு பெரும்பாலும் நமக்கு நாமே பேசிக்கொள்வதுதான்  என்று  பலசமயங்களில் எனக்குத் தோன்றும். நமக்கு உள்ளே சதா ஓடிக்கொண்டிருக்கும் பேச்சுத்தான் வெளியேயும் தொடர்கிறது. அதனால்தான் சிலசமயம் பழைய பேச்சுகளை நினைவுகூறும்பொழுது, யாரிடமாவது சொன்னேனா அல்லது எனக்கு நானே பேசிக்கொண்டேனா என்ற சந்தேகம் கூட வருவதுண்டு. சரி அது போகட்டும்! நாம் பேசிக்கொண்டிருந்த விஷயத்திற்கு வருகிறேன். 

 மதுரையில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் கலைப்படங்களைத் திரையிடுகின்ற ஒரு திரைப்படச் சங்கத்தின் உறுப்பினராக இருந்த காரணத்தால் நிறைய நல்ல ஆங்கில, அனைத்திந்திய மொழி கலைப்படங்களைப் பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. பதினெட்டு வயதில் பார்த்த ஒரு படம் ! ஆங்கிலப்படமென்று நினைக்கிறேன், இல்லை…ஏதோ ஓர் ஐரோப்பிய மொழிப்படமோ? பேர் மறந்துவிட்டது.

ஓர் இடைநிலைப் பள்ளியில் சரித்திர ஆசிரியராக இருப்பவரைப் பற்றியது. அவர் சரித்திரத்தில் நிகழ்ந்த ஒரு போரைப்பற்றி தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்கிறார். புத்தகங்களில் எழுதப்பட்டதற்கும், உண்மையில் நிகழ்ந்ததாக அவர் கருதுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என நினைக்கிறார்.  வழக்கம் போலவே அது மாதிரி இருப்பவர்களுக்கு நிகழ்வதே அவருக்கும் நடக்கிறது. மேலே இருப்பவர்களின்  கோபத்திற்கும்,கேலிக்கும் ,கூட இருப்பவர்களின் கிண்டலுக்கும், சீண்டலுக்கும் ஆளாகிறார்.

அப்போது அந்த சரித்திப் பிரசித்தி பெற்ற போரில் கலந்துகொண்ட அரசனே அவர் முன் தோன்றுகிறார். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய அவரை அந்தப் போர் நடந்த காலத்திற்கும், இடத்திற்கும் அழைத்து சென்று காட்டுகிறேன் என்கிறார். இந்த இடத்தில் வரலாற்று ஆசிரியர்களின் தந்தை என்று உலகம் முழுவதும் அறியப்படுகிற ஹெராடாடஸ் பற்றிய பேச்சும் வருகிறது என்று ஞாபகம்! இல்லாவிட்டால் இத்தனை வருஷங்கள் கழித்து அவர் பெயர் எனக்கு நினைவுக்கு வருவானேன்?  அவர்தானே முதல் கிரேக்க சரித்திர நிகழ்ச்சியை பதிவு செய்தவர் என்று சொல்லப்படுகிறது?  

என்ன விஷயம் என்றால் அந்த ஆங்கிலப் படத்தில் சரித்திர ஆசிரியராக வந்தவர் அப்படியே   பழைய தமிழ் நடிகர் சாமிக்கண்ணுவேதான்!,  முள்ளும் மலரும் படத்தில் நடித்தாரே,  அவர்  மாதிரியே இருந்தார்! பொதுவாக டைரக்டர் மகேந்திரனின்  படங்களில் சாமிக்கண்ணு  அதிகம் நடித்திருக்கிறார் என நினைக்கிறேன்.

மன்னிக்கவும் ! உங்களுக்குத் தமிழ்ப் படங்கள் பற்றித் தெரியுமா என்று கேட்காமல் எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்!”

“கவலைப்படாமல் சொல்லுங்கள்! தெரியும்! “ சிரித்துக்கொண்டே சொன்னார்.

“எப்படி?” ஆச்சரியத்தோடு கேட்டாள்.

(”உங்களுக்குத் தெரிந்த மொழிகளும் , விஷயங்களும் உலகிலேயே உங்கள் ஒருவருக்குத்தான் தெரியும் என்று எப்படி நினைத்தீர்கள்?”

“அது சரிதான்! ஆனால் நான் பேசுகிற மொழியைப் பேசாத ஓரிடத்தில் அப்படி ஒருவரை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்று யோசிக்கிறேன்”)

அவர் கைத்தடியைத் தரையில் தட்டிவிட்டு இவளைப் பார்த்துச் சிரித்து “மேலே சொல்லுங்கள்” என்றார்.

“நீங்கள் கூட நினைக்கலாம், நான் ஏன் சினிமா நடிகர்களை மட்டுமே உதாரணம் காட்டுகிறேன் என்று. ஒரே மாதிரி இருந்த இருவரில் ஒருவராவது கேட்பவருக்குத் தெரிந்தவராக இருந்தால்தானே கொஞ்சமாவது சொல்லுகிற விஷயத்தோடு ஒன்ற முடியும்?

எனக்கு மார்கன் ஃப்ரீமன் சில படங்களில் கடவுளாக வந்திருப்பது ரொம்ப பிடிக்கும். அதிலுள்ள அரசியல் சரிகளுக்கு அப்பாற்பட்டு அவர் கடவுள் வேஷத்திற்குப் பொருத்தமானவர் என்று தோன்றும். அவரிடம் தோளில் கைபோடுகிற தோழமையும் இருக்கும்; அதே சமயம் தப்பு செய்தால் தண்டிப்பேன் என்ற கண்டிப்பும் இருக்கும் . தவிர அவர் கண்களிலும் ,சிரிப்பிலும் ஒரு சின்ன மர்மம் இருப்பது போல எனக்குத் தோன்றும்.அதனால்  அவர் கடவுளாக நடிக்கப் பொருத்தமானவர்தான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“வாஸ்தவம்தான்” என்றார்.

“அவரைத் திரையில் முதலில் பார்த்தபோது “நம்ம கருத்த அங்கு!!!” எனத்தோன்றியது.அங்கமுத்து எங்கள் நிலத்தைக் குத்தகைக்கு உழுதவர்!.ஓ! சாரி! தப்பாக நினைக்காதீர்கள். ‘கருத்த அங்கு’  என்று அவரை அடையாளம் காணக் குறிப்பிட்டேன். கிராமத்தில் ஜனங்கள் அவரின் நண்பர்கள், உறவினர்கள் அவரை இப்படிக் குறிப்பிட்டுக் குறிப்பிட்டு அது அவர் பெயரின் பகுதியாகவே ஆகிவிட்டது. அதே ஊரில் இன்னொரு’ சிவத்த அங்கு’ ஒருவர் இருந்ததால், அடையாளம் காண இப்படிக் குறிப்பிட்டார்கள். எனக்கு மார்கன்  ஃப்ரீமான் அறிமுகம் ஆவதற்கு பல வருஷங்கள் முன்னரே ‘கருத்த அங்கு’ காலமாகிவிட்டார். அதனால் அவரிடம் மார்கன் ஃப்ரீமானைப் பற்றிச் சொல்ல முடியாமல் போய் விட்டது.அது எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

இன்னொரு படத்தில் மற்றொரு ஆப்பிரிக்க அமெரிக்கர் கடவுளாக நடித்திருந்தார். ஆனால் அவர் இளைஞர் .பெயர் மறந்து விட்டது. படத்தின் கடைசி ஃப்ரேமில் அவர் ஒரு சிறுவனிடம் செஸ் விளையாட உட்காருகிறார். கையில் செஸ் காயினை எடுக்கிறார்.  அத்துடன் படம் முடிகிறது. அவர் அதை  விளையாட ஆரம்பித்தால் உலகமே தலைகீழாக புரண்டு  வேறொன்றாக மாறிவிடும் என்பதாக எனக்குத் தோன்றியதா அல்லது  அதுதான் அந்த படம் உண்மையில் சொல்லவந்த விஷயமா  என்பது மறந்து விட்டது. வயதாகிவிட்டது என்று   தோன்றுகிறது.”

கடைசி வாக்கியத்தைத் தனக்குள்ளாக சொல்லிக்கொண்டாள்

“வயது என்பது என்ன?” என்று கேட்டார்.

“சரியான கேள்வி! வயது , காலம் இவற்றுக்கெல்லாம் நாம் நினைத்திருக்கும் அர்த்தம் மட்டுமே போதுமானதா? சிவனும் பார்வதியும் பகடை உருட்டுகிற சிற்பங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். சிவன் பார்வதியைத் தோற்கடித்துக்கொண்டே இருக்கிறார். பார்வதியின் கோபம் அதிகமாகிக்கொண்டே போகிறது. கோபத்தில்  அதிகரிக்கின்ற அவளின் சௌந்தர்யத்தில் மயங்குகிற சிவன் அவளை இன்னும்  இன்னும் தோற்கடிக்க நினைக்கிறார். இப்படி ஒரு கதை சொல்கிற சிலை.

 தான் தோற்பதை விரும்பாத பார்வதி சின்னதாக ஏமாற்ற நினைக்கிறாள். சிவன் அவள் கள்ளத்தனத்தை அறிந்து பகடையை உருட்ட விடாமல் கையைப் பிடிக்கிறார். இப்படியும் ஒரு சிற்பம் இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது  அவள்பகடையை உருட்டி கீழே விடும் பொழுது பெருவெடிப்பு நிகழ்ந்து இந்த பிரபஞ்சம் பிறக்கிறது. பேரண்டங்கள், கோடிக்கணக்கான அண்டங்கள். கோடானு கோடி கோடானு கோடி  சூரியன்கள்  அவற்றின் பற்பல மடங்கு கிரகங்கள் பிறக்கின்றன  என்கிற கருத்தாக்கம்தான்.

உருட்டி கீழே விடும் பொழுது பெருவெடிப்பு! பிரபஞ்ச ஜனனம் ! கையில் திரும்பி எடுக்கும்பொழுது பெருஞ்சுருக்கம்.! Big crunch! பிரபஞ்ச மரணம்! திருப்பி உருட்டிக் கீழே விடும் பொழுது அடுத்த பெருவெடிப்பு,  மற்றுமொரு புதிய பிரபஞ்சம் அதன் பில்லியன் கணக்கான சூரியன்களோடு!

இப்போதைய இந்த பிரபஞ்சத்தின் காலம் அவளுடைய இரண்டு பகடை உருட்டல்களுக்கு இடைப்பட்ட காலம்!  13.77 பில்லியன் வருடங்கள் என்பது ஒரு உருட்டலுக்கும் மறு  உருட்டலுக்குமான கால இடைவெளி அவ்வளவுதான்.எப்பேர்ப்பட்ட சிந்தனை! இந்த பிரபஞ்சம் முழுக்க விரிந்து பரந்து , நிறைந்த ஒரு மனத்தைத் தவிர வேறு எதனாலும் இதை சிந்தித்திருக்க முடியாது இல்லையா? “

அவர் “நிச்சயமாக!” என்றார்.

இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தனர்.

பறவைகள் கூடுகளை நோக்கிப் பேசிக்கொண்டே பறந்தன.

அவர் அவருடைய அழகிய கைத்தடியை தரையில் தட்டியபடி எழுந்தார்.

“வரட்டுமா! உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி!”என்றார்.

“உங்களுடனான இந்த உரையாடல் நன்றாக இருந்தது” என்றாள்.

அவர் சிரித்தார்.

அவள்” சரி !சரி…… நான் பேசினேன் , நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்! சரிதானே?” என்றாள் சிரித்துக்கொண்டே.

சிமெண்ட் நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார். நூறு அடி தூரத்தில் பாதை வளைந்தது. வளைகிற இடத்தில் பெரிய குல்மோஹர் மரம்  ஆயிரம் செந்நிற விளக்குகளை ஏந்தி நின்றது. அவர் அந்த வளைவில் திரும்பி மரத்துக்குப் பின்னால்  மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள். 

அவள் மடியில் ஒரு சிறிய துண்டு கடுதாசி பறந்து வந்து விழுந்தது. சின்னக் குழந்தையின் பயிற்சி புத்தகத்திலிருந்து கோணல்மாணலாக கிழித்திருந்தது. தூரத்திலிருந்த  குழந்தை கை ஆட்டிச் சிரித்தது. இவளும் பதிலுக்குக் கையாட்டினாள்.

 சின்னக் குழந்தையின் கையெழுத்தில் 

Read correctly the following sentence ‘GODISNOWHERE’ 

என்றிருந்தது. அதை அனிச்சையாகப் படித்துவிட்டு

அவள் அவர் போன திசையைப் பார்த்து “நீங்கள் என்னைப்போலவே இருக்கிறீர்கள் என்றல்லவா சொல்ல நினைத்தேன்!”என்றாள்.

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

5 Replies to “பகடை ஆட்டம்”

  1. different kind of story ; whether experience or imagination , presentation of the incidents excellent . Beautifully linked.

    It is novel and smart idea , giving the YouTube reference , to introduce the characters to the readers, through the well known personalities …

    It appears that Writer has got exposure to good cinema of world movies.

    Nice and interesting explanation on formation of பிரபஞ்சம் by linking the architecture beauty of temples…

    Finally conclusion left to reader ….

    An interesting read , to all , whether atheists or theists….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.