கணக்கு

பனி படர்ந்த காலை நேரத்தில் புத்தகங்களை கைகளில் இடுக்கி விஜி நடந்துவர ஜெயசீலா கூட வந்தாள். இளவெய்யில் முதுகில் மெல்லிய தொடுதலாக இருந்தது. தெரு ஓரத்தில் இருந்த புற்களின் உரசல் மேல்கால்களின் படும்போது அதன் பனி ஈரத்தால் சில்லென்று உச்சந்தலைவரை குளிர்ந்தது.

“அம்மா எதுக்காக என்னைய இப்ப கூட்டிகிட்டு போறீங்க, நான் படிச்சுகிறேன்னு சொல்றேன்ல, அது ஒன்னும் எனக்கு கஷ்டமில்ல”

பள்ளிஆசிரியைக்குரிய கழுத்தை வெட்டும் உடல்மொழியுடன் ஜெயசீலா திரும்பிப் பார்த்து அமைதியாக நடையை தொடர்ந்தாள். அவள் பார்வை நேரே இருந்த கோயில் கோபுரத்தின் மீதிருந்தது. அருகில் வந்ததும் கையை நெற்றி நெஞ்சு உதட்டுக்குமாக மேலும்கீழுமாகவும் அசைத்தாள். வலப்பக்க தெரு சேரும் பெரிய சாலையில் கல்லூரி பேருந்து வரும். ஆனால் அம்மா இடப்பக்கம் தள்ளிக் கொண்டு போனாள். “வா சொல்றேன்” என்றாள். எட்டு மணிக்குள் திரும்பவேண்டும் என்கிற நினைப்பு கவலைதர வேகமாக நடந்தாள் விஜி.

முதல் தெருவை தாண்டி முனையில் இருந்த மடத்திற்கு பக்கத்தில் இட்லி மாவு விற்கும் சேது அம்மாவின் வீட்டை தாண்டி உள்ளடக்கமாக இருந்த வீட்டின் முன் அம்மா நின்றாள். வெளியே நிறைய சைக்கிள்கள் நின்றிருந்தன. பார் இல்லாத பெண்கள் சைக்கிள்கள். பல வண்ணங்களில் முதன்முதலில் பார்ப்பது பரவசமாக இருந்தது.

பழையபாணி நீண்ட வெள்ளைகற்கள் பதித்த குறுகலான படியேறி மேலே வந்தபோது இருண்டு அமைதியாக இருந்தது கூடம். ஸ்கிரின் வைத்து தடுக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஒரு பெண்மணி வந்து “உட்காருங்கமா இப்ப வந்துடுவாங்க” என்றாள். அவள் உள்ளே போய் அமர்ந்ததும் கையில் கடையில் வாங்கிய காய்கறிகளுடன் வாசலிலிருந்து ஒரு பெண்மணி உள்ளே வந்து மையமாக அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு சென்றாள். அமர்ந்ததும் பொறுக்க முடியாத ஜெயசீலா விஜியிடம் காதில் குசுகுசுவென்று ஏதோ சொன்னாள். அவள் சொல்லும் சமிக்ஞைகளை புரிந்துக் கொள்ள முடியாமல் விஜி, “என்னம்மா சொல்ற” என்று சத்தமாக கேட்டாள். சற்று பதறி மெதுவாக, கிசுகிசு குரலில் “இப்ப வந்ததே ஒரு பொண்ணு அது தான் மோதோ தாரம்” என்றாள். இப்போது சாதாரணமாக அம்மாவின் குரலாக ஒலித்தது.

லேசாக அதிர்ந்து “அப்படின்னா”, என்று முகம் சுழித்தாள்.

“வாங்கன்னு முதல்ல கூப்பிட்டுச்சே அது ரெண்டாம் தாரம்” என்றாள்.

அமைதியாக நேரே பார்த்தாள். அவசரமாக திரும்பி, “இப்ப ஏம்மா என்கிட்ட இதெல்லாம் சொல்ற”

“பின்ன தெரிஞ்சுக்க வேண்டாமா, மோதோ தாரத்துக்கு ரெண்டு புள்ளைங்க, ரெண்டாம் தாரத்துக்கு மூணு பிள்ளைங்க”

வேறுபக்கம் திரும்பி அமர்ந்தாள் விஜி. அம்மாவின் கண்கள் அப்போதும் பரபரப்பில் வீட்டை மேலும் கீழும் நோக்கின. அவளது கண்டிப்பும் நெகழ்வும் ஒரே மாதிரியானதுதான் என நினைத்தாள்.

பவுடர் பூசிய வாசனையுடன் அயன் செய்த வெள்ளை சட்டை, கிரே கலரில் பேண்டுடன் திரையை விலக்கி தோன்றினார். அவர் வருவதின் ஓசைகள் கேட்கும்போதே அம்மா தயாராகிவிட்டிருந்தாள். பணியிடத்து செயற்கை பணிவு முகத்தில் தெரிய நெளிந்து எழுந்து நின்றாள் அம்மா.

இரு நாட்களாக அம்மா சொன்ன ஆர்கே எனும் கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர், உயரக் குறைவுடன் வெளியே வந்தார். உண்மையில் முட்டிப் போட்டு நின்றிருந்தார். கால்கள் பின்பக்கமாக மடித்து வைத்தது போன்று இருபக்கமும் விரிந்திருந்து. அந்த கால்களில் தொளதொள வென்று பேண்ட் மூடியிருந்தது. பெரிய உறையில் சிறுகத்திகள் வைக்கப்பட்டதுபோல சூம்பிய கால்கள் உள்ளேயிருந்தன.

முட்டியால் தான் நடந்துவந்தார். அவ்வப்போது கைகளை துணைக்கு ஊன்றி வந்தார். கைகள் இரண்டும் தேய்ந்து தேய்ந்து ஒரு மாதிரி சொறசொறப்பாக அடைந்திருந்தது.

“வணக்கம் சார்” என்றாள் அம்மா.

“வாங்க டிஜே டீச்சர், கொஞ்ச நேரம் பிந்தி வந்திருந்தா பார்த்திருக்க முடியாது. மேலே க்ளாஸ் இருக்கு. ம், சொல்லுங்க, இதான் உங்க பொண்ணா?”

“ஆமா சார், பஸ்ட் இயர் ரெண்டு கணக்கு பேப்பரும் பெயலு, அதான்….”

அம்மா வேண்டுமென்றே அரியரை அழுத்தி சொல்வது போலிருந்தது.

“ஆமா, உங்க சார், மிஸ்டர் கிருஷ்ணன் தேவதாஸ் சொன்னாரு, நாங்க சேர்ந்து ஒர்க் பண்ணும்போது அவர கேடின்னு கூப்பிட்டு கிண்டலடிப்போம், ஹா…ஹா”

மேல் பாக்கெட்டில் இருந்த ஃபோன் ஒலிர்ந்தது. அதை கையில் எடுத்துக் கொண்டு “இருங்க இந்தா வரேன், லெச்சுமி அந்த பேனா, சாக்பீஸ் எல்லாம் எடுத்துக் கொடும்மா” என்றார். லேசாக மிரட்டல் தொனியில்தான் ஒலித்தது. “இந்தோ வரேங்க” என்று உள்ளிருந்து குரல் கேட்டது. உள்ளிருந்து வரும் குரலை உறுதி செய்து கொண்டு ஃபோனை தேய்த்து பேசஆரம்பித்தார். அவர் கல்லூரி சக ஆசிரியரின் ஃபோன்அழைப்பு . பல்வேறு தொழிற்வார்த்தைகள் புழங்கின.

“அம்மா போலாம்மா” என்றாள் விஜி.

அதிர்ந்து திரும்பி “ஏன், இரு பேசிட்டு போலாம்” என்றாள் ஜெயசீலா. கண்கள் பெரிதாக அவளை முறைத்தன.

ஏதோ ஒரு அருவருப்பு அந்த இடம் முழுவதும் பரவி இருப்பது போன்ற உணர்வு. தன் உடல் முழுவதும் அந்த வெறுப்பு அலையாகப் பரவிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள் விஜி. அம்மா அவரைப் பார்த்து சிரிக்கும்போது ஏதோ ஒன்று தன்னுள்ளிலிருந்து விலகியது போலிருந்தது. அவள் தன் உள்ளுக்குள் இருந்த அவளின் பிம்பத்தை இனி மறுஆய்வு செய்ய வேண்டும் என நினைத்தாள்.

“அம்மா நா போறேன்”. என்று திரும்ப ஆரம்பிக்க, “அட இரு” என்று அவள் கையை பிடித்து நிறுத்தினாள். “இப்ப வரியா இல்ல நா போவட்டா” என்றாள் கொஞ்சம் சத்தமாக. “ஒரு ரெண்டு நிமிடம் இரு போவலாம்,” ஜெயசீலா சங்கடத்தில் தத்தளிக்க அவள் கண்கள் கெஞ்ச ஆரம்பித்தன.

ஃபோனை அவசரமாக அணைத்து சின்னதாக கனைத்துவிட்டு “என்ன சொல்றாங்க உங்க பொண்ணு.”

“இல்லசார் அவளே படிச்சிகிறேங்கிறா, எனக்கென்னவோ இங்க படிச்ச நல்லா இருக்கும்னு தோணுது, எங்க சாரும் அதாம் சொன்னாங்க.” அந்த அவசரத்திலும் அவள் சமாளிப்பதைக் கண்டு விஜி முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

“ஒன்னும் கஷ்டமில்ல, ஈசியா படிச்சிடலாம். காலேஜுல போர்ஷன முடிக்கிற அவசரத்துல ஓடுவாங்க, இங்க வரட்டும் பாத்துக்கலாம். உங்க சாரும் ரொம்ப சொன்னாரு, உங்க பொண்ணுக்கும் இங்க படிக்கிறதுல ஆர்வம் இருக்கனும்.”

அவர் நேரடியாக விஜியை பார்த்து, “அப்பா அம்மாகிட்ட பேசிட்டு சொல்லுமா ஒன்னும் அவசரமில்லை” என்று கூறி “சார கேட்டதா சொல்லுங்க, பெரியவன் நல்லா இருக்காரா, சரி சொல்லுங்க,” என்று சொல்லிவிட்டு கைகளை ஊன்றி படிகளில் இறங்கி பக்கத்தில் இருந்த மாடிப்படிகளில் ஏறஆரம்பித்தார்.

வேகமாக வெளியேறி விறுவிறு என நடந்து பஸ் ஏறப் போய்விட்டாள். அம்மா பின்னாடி நடக்க முடியாமல் ஆடிஆடிவந்துக் கொண்டிருந்தாள்.

உண்மையில் பதற்றமாக இருந்தது. பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் உலகம் அசிங்கம் நிறைந்தது. அவற்றிற்கு வெட்கம், சொரணை என எதுவும் கிடையாது. எப்படி வெளிப்படையாக சொல்லிக் கொள்ள முடிகிறது. எதன் பொருட்டு மனிதர்கள் வாழ்கிறார்கள். அம்மணமாக திரியும் மனிதனின் வெக்கம் கெட்ட செய்கைகள். இருமனைவிகள் என்கிற சமூக ஒழுக்கமின்மையை எப்படி ஆதரிக்கிறார்கள்.

சூழலுக்குப் பொருந்தாத ஒன்று எப்போதும் மனித மனதைத் துன்புறுத்தும் என நினைத்தாள். தன் திமிரை, தன் ஆணவத்தை, தன் அகங்காரத்தை பிறருக்கு திறந்து காட்டியபடி இருக்கிறார்கள். அதை எதிர்க்கத் திராணியற்ற மனிதர்கள் அவர் முன்னே மண்டியிட்டு வணங்குகிறார்கள். ஆசிரியர் என்கிற போர்வையில் அவர் பெறும் அங்கீகாரம் அவரின் சொந்த வாழ்க்கையின் கீழ்மையை மூடிமறைக்கிறதா?

அன்று முழுவதும் கல்லூரியில் அதையே நினைத்துக் கொண்டிருந்தாள். நேற்றே அம்மா அவரைப் பற்றி சொல்லியிருந்தாள். சிறந்த ஆசிரியர், டியூஷனுக்கு உடனே சேர்த்துக் கொள்ளமாட்டார், அப்பா கூடப்படித்தவர் என்பதால் அப்பா கேட்டுக் கொண்டதால் இந்த வாய்ப்பு என்பதும் பல்வேறு வார்த்தைகளில் அதை விஜியிடம் புகுத்தியிருந்தாள்.

ஆண்கள் கல்லூரியின் கணித துறைத் தலைவர் அவர். அவள் இருந்த பகுதியில் அவர் முக்கிய அடையாளமாக மாறியிருந்தார். அனைவருக்கும் அவரைப் பற்றி தெரிந்திருந்தது. கூடவே அவரது இருதார மணம் பற்றியும் பேச்சுகள் இருந்தன. அதுவும் ஒரு அடையாளமாக குறிப்பிடப்பட்டது. ரெண்டு பொண்டாட்டி வாத்தியார் என்ற அடைமொழி. அவள் இதுவரை அறியாதது கூட ஒரு குற்றமாகவும் பார்க்கப்பட்டது.

மாலை கல்லூரி முடிந்து ப்யூலாவை பார்க்க போனாள். நீண்ட தலைமுடியைப் பின்னி அழகிய சிறு வெண்தோடு, கழுத்தில் அதற்கு மேட்சாக வெள்ளை முத்துமாலை அணிந்திருந்தாள்.

“என்னப்பா உனக்கு பிரச்சனை,” முதலிலேயே கேட்டுவிட்டாள்..

விஜியின் கோபம் அவளுக்கு கேலியாகத் தோன்றியது அவள் கண்களைக் கொண்டு உணர்ந்தாள். பிற‌கு ப்யூலா சற்று சிரித்தபடியே அவளுக்கு பதிலளித்தாள்.

“இங்கப்பாரு, இத ஒரு விஷயமா பேசிக்கிட்டு இருக்காத, உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம், அவரு உனக்கு சொல்லித் தர்ற வாத்தியார் அவ்வளவுதான். அவரு எதாவது மூணாந்தாரமா உன்னை வரச்சொல்லப் போறாரா என்ன? நீ ஏன் கவலப்படற?”

“சே, என்ன பேசுற, கொஞ்சமாவது சமூகப் பொறுப்புன்னு ஒன்னு இருக்க வேண்டாமா?, எனக்கு இது நேர்மையா படல.”

“பொறுப்பும் கிடையாது, பருப்பும் கிடையாது, நேர்மையும் கிடையாது, அவரால முடியுது அவ்வளவுதான்,”

“சீ பே.”

எழுந்து போய்விட்டாள். அவளது நெருங்கிய சிநேகிதியும் அதை ஏற்றுக் கொண்டு பேசுவது அவளுக்கு வெறுப்பாக இருந்தது. தன் நிலைபாடு சரிதானா என்றும் யோசிக்க ஆரம்பித்தாள். அவர் போலியோ காலால் நடப்பதும், சிறந்த ஆசிரியர் என்கிற பெயரும், இருமனைவிகள் என்கிற அடைமொழியுடன் வந்து சேர்வது ஒருவித அருவருப்பைக் கொடுக்கிறதோ என நினைத்தாள்.

வீட்டிற்கு வந்தபோது அப்பா தயாராக இருந்தார்.

“நீ நாளைலேந்து அவரு கிலாஸுக்கு போற,”

சட்டென கோபம் வர கடுமையாக “நான் போகமுடியாது,” என்றாள்.

“உம்மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிற. உம் அண்ணன் எஞ்ஜினியர முடிச்சு வேலைக்கும் போய்ட்டான். உன் தம்பி டென்த்தல டிஸ்டிரிக் பஸ்ட், நீ இன்னும் கணக்குல பெயிலு, அதுவும் காலேஜுக்கு வந்து, உனக்கு காலேஜுக்கு போக விருப்பமில்லன்னா நின்னுக்கோ.”

அவள் பேசாமல் நின்றிருந்தாள். கீழிருந்து மேல்வரை பார்ப்பதை அவள் புதியதாக உணர்ந்தாள். அவள் அணிந்திருக்கும் ரோஸ் நிற சுடிதார் அவர் கண்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

“உனக்குதான் கணக்கு வரலன்னு பிசிக்ஸ் எடுத்த, அல்லையன்ஸ் கணக்க உன்னால முடிக்க முடியலையா? “

ஒன்று அவர் கோர்ஸை பாதியில் நிறுத்தவேண்டும் அல்லது கணக்கு அரியரை முடிக்க வேண்டும். சுவரைப் பார்த்து தன் மேஜைக்கு முன்னால் அமர்ந்திருந்தாள்.

இருநாட்கள் அவளை யாரும் நிர்பந்திக்கவில்லை. ஒருநாள் காலை டியூசனிலிருந்து ஆள் வந்திருந்தது. “விஜி அக்காவ கிளாஸுக்கு வர சொன்னாங்க சாரு” என்றான் அந்த சிறுவன்.

அப்பாவிற்கு இது தன்மானப் பிரச்சனை. ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை. கல்லூரியை முழுமையாக முடித்தால்தான் வேலைக்கு அல்லது திருமணத்திற்கு அடுத்ததாக செல்லமுடியும். மறுநாள் அவளுக்கே எரிச்சல் தணிந்து டியூசன் போக துணித்தாள்.

காலை டீயை குடித்துக் விட்டு, பிடிக்காத பச்சைவண்ண சுடிதாரை அணிந்துக் கொண்டு சென்றாள். வெளியே பனிபடர்ந்திருந்த காலைநேரம், லேசான தலைவலியாக இருந்தது.

சங்கடத்துடனே படிகளில் ஏற அவரது இரண்டாவது மனைவி, “மேலே போங்க, சார் வருவாங்க.”

முதலில் வெட்ட வெளியும் பிறகு கூரை அமைக்கப்பட்டு தட்டிகளால் மறைக்கப்பட்ட எப்போதும் போன்ற ஒரு சிறு குடில். மிகக் குறைவான நபர்கள். பத்து பன்னிரெண்டு வகுப்புகளில் தெரியும் விளையாட்டுத் தனம் இல்லாமல், முதிர்ந்த பிள்ளைகள் கூடும் கல்லூரி வகுப்புகள் என்கிற அறிவார்ந்த சூழல். கல்லூரியில் கூட இப்படி இருக்க முடியாது. ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் கண்டிப்பு, மிக இயல்பாக மாணவர்களை மரியாதையாக அழைக்கும் விதம், அவர்களைப் பெரிய மனிதர்களாக நடத்தும் விதமும்தான்.

அருகே அமர்ந்திருந்த பெண்ணிடம், புது நண்பரை அறிமுகம் செய்து கொள்ள பிரியப்படும் பாவனை முகத்தில் இருந்தது. சட்டென தயக்கங்களை விட்டு பேச ஆரம்பித்தாள். அவர்கள் மிகுந்த கண்ணியத்துடன் பேசுவது போன்றிருப்பது பாவனைதானா எனச் சந்தேகித்தாள்.

ஆசிரியர் நடந்துவரும் ஒலியே அனைவரையும் எழுந்து நிற்க வைத்தது. கரும்பலகையின் முன் இருந்த சிறுமேடையில் ஏறி நின்றுக் கொண்டார். மற்ற ஆசிரியர்களுக்கும் கணக்கு ஆசிரியர்களுக்கு இருக்கும் வேறுபாட்டை அப்போதுதான் உணர்ந்தாள். எப்படி இவரால் சமாளிக்க முடிகிறது என்கிற ஆச்சரியமும் கூடவே வந்துவிட்டது.

புது மாணவியை அறிமுகம் செய்யும் எதுவும் வழக்கம் இல்லாமல் நேரடியாக வகுப்பை ஆரம்பித்தார். அவர் கையால் சாக்பீஸ் பிடித்திருந்தது புதிய மோஸ்தர் போல் தெரிந்தது. திரும்பும்போது அவரது கண்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் அவ்வப்போது தொட்டு சென்றன. அவர்களின் புரிதலை அதிலேயே புரிந்து கொண்டார் என தெரிந்தது. அவளிடம் வரும்போது மட்டும் அவசரமாக அவர் கண்களை விலகிக் கொண்டார். அதிலிருந்த அவசரம் அவர் வேண்டுமென்றே செய்வதாக தோன்றியது. அவருக்கு நன்கு பழக்கப்பட்ட செயல் என்பது போலவும் இருந்தது.

அவர் நடத்திய பாடத்தில் கவனம் கொள்ளவே முடியவில்லை. எப்படி அரியரை முடிக்க போகிறேன் என்கிற எண்ணமே மனம் முழுவதும் இருந்தது. உண்மையில் அதை முடிக்கும் எண்ணம் இல்லையோ என்றுகூட தோன்றியது.

அவரது உருவமும் தனிப்பட்ட வாழ்வின் மேட்டிமைகளையும் இணைத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கான வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்க வேண்டும் என நினைத்திருப்பதன் தொடர்ச்சிதான் அவர்மீதான வெறுப்பு. கணக்குப் பாடத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் முகத்தில் தெரியும் ஆணவம் அவர் உடலுக்கு பொருத்தமற்று இருந்தது. அதுகூட சரியாக வெளிப்படவில்லை. எப்படியும் சில வாரங்களுக்குப்பின் விலகிவிடவேண்டும் என நினைத்தாள்.

வகுப்பு முடிய ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து மற்றவர்கள் கிளம்பும்போது, அவளின் வார்த்தையை கேட்டதும் நினைவிற்கு வந்தவராக “கொஞ்சம் இருங்க விஜி,” என்றார்..

ஒரமாக அங்கிருந்த வாஷ்பேஷின் முகத்தை கழுவினார். கீழே மாணவர்கள் சைக்கிளை எடுக்கும், விடைபெறும் பேச்சுகளும் கேட்டன. வெளியெ எட்டு மணிக்குரிய சூடும் வெளிச்சமும் திடீரென தோன்றிவிட்டது போன்றிருந்தது.

முகத்தை ஒரு துண்டால் துடைத்துவிட்டு வந்தார். அவர் அணிந்திருந்த கால்சிராய் அதிகம் காற்றில் ஆடியது. அவரைக் கவனிப்பதைத் தவிர்ப்பதே தன் அகங்கார வெளிப்பாட்டின் மற்றொரு வழியாக இருந்தது. அவளை அங்கிருந்த மற்றொரு பெஞ்சில் அமரச்சொல்லிவிட்டு, படிகளைப் பார்த்தபடி ஒரு பெஞ்சில் ஏறி அமர்ந்து கொண்டார். கால்கள் நேர்கோட்டில் இல்லாமல் இருந்தது அவர் சாய்ந்து அமர்ந்திருப்பதை போன்ற தோன்றத்தை உண்டுபண்ணியது.

“இந்த ரெண்டு அரியர் பேப்பரும் ரொம்ப ஈசியான பேப்பர்தான். உங்களுக்கே நல்லா தெரியும் ஆனால் நீங்கதான் அத படிக்காம தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்கீங்க. கொஞ்சம் ஓக்காந்தா நீங்க அத ஒரு மாசத்துல படிச்சு முடிச்சிர முடியும். எல்லாமே நம்ம முயற்சிதான். கணக்குமேல நமக்கு இருக்குற சில வெறுப்புதான் அத செய்யவிடாம தடுக்குது”.

“கணக்குல இருக்குற லாஜிக் நம்மள யோசிக்க விடாம செய்யுது, இதுக்கு இதுதான்ங்குற நேர்வழி இருக்கு பாருங்க அதுதான் நம்ம சிந்தனையை தடுக்குது. அதுக்கு ஏன் வேறு ஒரு விடை இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறோம். மாறாத விடை ஒன்னு இருக்ககூடாதுன்னு நாம நினைக்கிறோம். கணக்க சில சூத்திரங்களா வைச்சிருக்கிற சூட்சமம்தான் நமக்கு எரிச்சலா இருக்கு. காலேஜ்ஜுல படிக்கிற கணக்குக்கு அடிப்படையா இருக்குற பள்ளிக் கணக்க சரியா படிக்காததால வந்த வினை. அதான் காரணம். இந்த ஆரம்ப கட்ட இடைஞ்சல்களத் தாண்டிட்டாலே கணக்கு நமக்கு எளிமையா இருக்கும். சிறுவயசுலேந்து சிலபேர் அப்படி பார்த்து பழக்கிட்டு கணக்கு நம்ம சிந்தனைக்கு தகுந்து மாறனும்னு நினைக்கிறதால சரியா அமைய மாட்டேங்குது”.

அவர் சொல்வதில் இருக்கும் உண்மையை அவள் உணர்ந்திருக்கிறாள். அவர் தன்னை முழுமையாக நம்பும்படி தூண்டுவதில் வெற்றிப் பெற்றுவிட்டார் என தோன்றியது.

“நீங்க சின்னப் பெண்தான் அதனால அந்த முயற்சியைப் பற்றி உங்களுக்குத் தெரியாம இருக்கலாம்”

“நீங்க சொல்றது கரெக்ட்தான் சார். கணக்குன்னா படிக்க கஷ்டமா இருக்கு சார்”

அமர்ந்திருந்த பெஞ்சில் பின்கழுத்தை சொறிந்தபடி வேறு ஏதோ யோசனையில் இருப்பது போல இருந்தார். மீண்டும் அவர் பேச சற்று நேரமெடுத்தது தன் ஆளுமையை காட்டத்தான் என தோன்றியது. அதே வேளையில் நான் பேசும்போது குறுக்கிடக் கூடாது என்பதை உணர்த்தத்தான் எனவும் நினைத்தாள்.

“ஆமா எனக்கும் கணக்கு பிரச்சனையாதான் இருந்தது. அத ஜெயிச்சு காட்ட ரொம்ப கஷ்டப்படவேண்டியிருந்தது. பொதுவாவே பெத்தவங்களுக்கும் மத்தவங்களுக்கும் படிப்புல ஜெயக்கலேன்னா புடிக்காது. அதுகூட எனக்கு வேற பிரச்சனையும் இருந்துச்சு. நொண்டி, வாத்து, அரைமனிதன், இப்படி பல பெயர்வெச்சு கூப்பிட்டாங்க, போதாதுக்கு இங்கிலீஷ் ஹோப்மேனோட பெயரையும் வெச்சிருந்தாங்க. என்ன அர்த்ததுல கிண்டல் பண்ணாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.”

தான் வராமல் இருந்தது அவரை சீண்டிவிட்டது போலாகிவிட்டது. அவர் கண்களில் ஒன்று தெரிந்தது. எப்படியாவது எல்லாவற்றையும் கடத்திவிடவேண்டும் என்கிற வெறி. இவள் தன் மாணவி என்கிற பயமும் கூடவே இருந்தது.

“நீங்க நிரூபிக்க வேண்டியது எது தெரியுமா? உங்களால முடியுங்கிறது தான். ஒன்னுக்கு ரெண்டா நிரூபிச்சு காட்டுறது இன்னும் சிறப்பு நீங்க காபி அடிச்சுகூட பாஸாகலாம், அது அவங்களுக்கு தெரிஞ்சாலும் தப்பா தெரியாது”.

அவருக்குத் தன் மீது இருக்கும் கோபம் இன்னும் போகவில்லை. தான் அங்கு இருக்கும் வரை மற்ற ஆசியர்களைப் போல வெறுப்பேத்திக் கொண்டுதான் இருக்கப்போகிறார். ஒவ்வொரு நாளும் அவருக்கு தன் கோபத்தை விடாமல் இதை செய்யப்போகிறார்.

“உங்களால முடியும்னு நிருபிச்சாலே போதும். நீங்க ஜெயிச்ச மாதிரிதான். இந்த உலகம் நீங்க ஜெயிக்கிறதாதான் பாக்குது, அதுக்கு பின்னாடி இருக்குற கஷ்டத்தயில்ல”.

அவள் அமைதியாக இருந்தாள்.

“சரி நீங்க போயிட்டு வாங்க”

படியிறங்கும்போது கால்கள் தடுக்குவது போலிருந்தது. திரும்பி பார்க்காமல் வேகமாகச் சென்றுவிடவேண்டும் என அவசரமாக இறங்கினாள்.

***

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

3 Replies to “கணக்கு”

  1. ஏதோ ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை நோக்கி நகர்ந்த கதை மிகச்சாதாரணமாக முடிகிறது. அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிறைய உள்ளன. வாசகனின் ஊகத்திற்கு இடம் கொடுக்க வேண்டுமென்றே சில காட்சிகள்.

  2. தங்களுக்கும் எனக்கும் தெரிந்த ஆசிரியரைப் பற்றி எழுதியதாகவே தோன்றுகிறது.
    கதையின் முடிவை மாற்றி இருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது

Leave a Reply to jananesanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.